Friday, April 27, 2007

நான் தாங்க மீனாட்சி பேசறேன்...

கண்ணுக்குள் சிற்றோடையாய் இருந்து
கண்ணத்தில் கன மழையாய் பொழிந்து
நெஞ்சுக்குள் காவிரியாய் புகுந்த ஆனந்தக் கண்ணீருடன் எழுதுகிறேன்..


தமிழ்மண அன்பர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

என்னைப் பற்றிய அக்காவின் (உங்கள் மங்கை) பதிவுகளும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும், உங்களில் சிலரின் பதிவுகளையும் படித்தேன். முக்கியமாக இந்தப் பதிவு. அதில் இருந்த முதல் பத்தியை படித்து விட்டு, என்னுள் எழுந்த உணர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு நிமிடம் நான் யார் என்பதை மறந்துவிட்டேன். அடுத்த பத்தியை படித்த பின்பு தான் என் சுயத்திற்கு வந்தேன். அப்பொழுது எழுந்த உணர்வே மேலே உள்ள கவிதை. படித்துவிட்டு பேசாமல் போக மனமில்லாமல் இந்த பதிவை எழுத ஆசப்பட்டேன்.

நான் யார் என்று தெரிந்து கொள்ள இதை படிக்கவும். இந்த ஊடகத்தின் மூலம் பல அன்பு நெஞ்சங்களை சென்றடைய முயல்கிறேன். கொஞ்சம் பெரிய பதிவு, மன்னிக்கவும். கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் என்னுள் இருக்கும் சில உணர்வுகளையும், எண்ணங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

இன்னும் அழியாமல் இருக்கும் தமிழ் உணர்வை பார்த்து மகிழ்ந்தேன். நாடு விட்டு நாடு சென்றாலும், இந்த அளவிற்கு தமிழ் பற்றுடன், ஒரு குடும்பமாய் இருக்கும் இந்த அன்பு நெஞ்சங்களைப் பார்த்து மனம் நெகிழ்கிறது. கோவை அன்பர்கள் சிலரின் பதிவுகளையும் படித்தேன். இது ஒரு தனி சந்தோஷம்.

நாங்களும் அக்காவும் ஈடு பட்டிருக்கும் ஒரு திட்டத்தின், ஒருங்கினைப்பாளர்களின் சந்திப்பிற்கு இங்கு தில்லி வந்துள்ளோம். இதைப் பற்றிய தகவல்களை சந்திப்பு முடிந்த பின்பு அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

பாதிக்கப்பட்ட நான் இன்று தன்னம்பிக்கையுடன் வலம் வரக் காரணம், என்னை சுற்றி இருக்கும் 'மனித நேயங்கள்', அக்காவைப் போல உறவுகள். ஆனால் இந்த பாக்கியம் பாதிக்கப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் கிடைப்பதில்லை. அதற்காகத்ததான் என்னால் ஆன சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மை நிலை உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை. இன்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குறிப்பாக கணவனை இழந்த இளம் பெண்கள். கணவனை இழந்த பின்னர் இவர்கள் பெற்றோராலும், புகுந்த வீட்டாராலும் நிராகரிக்கப்பட்டு, தனியாளாய், தங்கள் நிலையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு, அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். தனியாக வாழ வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட இவர்களுக்கு நம் சமுதாயம் எந்த வித பாதுகாப்பும் கொடுப்பதில்லை. ஒரு சராசரி பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் கஷ்டங்கள் இவர்களுக்கும் ஏற்படுகிறது.


தற்போது கோவையில் " பாதிக்கப்பட்ட தாய்மார்களின் மேம்பாட்டு கூட்டமைப்பு" (Society for Positive Mothers Development) என்ற அமைப்பின் மூலம்
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சில உதவிகளை (மருத்துவ உதவி, அலோசனை, யோகா, சத்துணவு, கல்வி) செய்து வருகிறோம். கோவை அளவில் இயங்கி வரும் இந்த அமைப்பைப் போல பல அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகிறது. நான், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆலோசகராகவும் பணி புரிந்து வருகிறேன்.

நானும் டாக்டர் மகாதேவனும்

படத்தில் இருக்கும் டாக்டர். மகாதேவன் அவர்களின் ஆதரவுடன் இன்று கோவையில் பாதிக்கப்பட்ட பலர் நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருத்தியாக நானும் வாழ்ந்து கொண்டிருகின்றேன். அவரின் சேவையை ஒரு வரியில் சொல்லி புரிய வைக்க முடியாது. அவரைப் பற்றிய தனிப் பதிவு ஒன்று வரும். என்னை தன் மகளாக தத்தெடுத்துக் கொண்டுள்ளார் என்றால், புரியும் உங்களுக்கு அவருள் இருக்கும் மனித நேயம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உதவி மறுக்கப் படுகிறது. இதனால், தடுத்திருக்கக்கூடிய பல இழப்புகளை பார்த்து விட்டோம். இது மேலும் நடக்காமல் இருக்க எங்கள் அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று ஒரு மருத்தவமனையை நிறுவுவது என்பது எங்கள் லட்சியம். கடவுள் இதற்கு அருள் புரிய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கென மாநில அளவில் ஒரு கூட்டமைப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன். அதற்கான முதற்கட்ட முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தொடங்கப்பட்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தொழில் பயிற்சி வகுப்புகள் (கம்ப்யூட்டர்) தொடங்கலாம் என்று இருக்கிறேன். சென்னையை மையமாக வைத்து தொடங்க இருக்கும் இந்த திட்டம், எல்லாம் சரியாக நடந்தால், விரைவில் செயல் படும்.

மனிதருள் மனிதராய் வாழும் ஒரு கடவுள்-சகோதரி. லயோலா

பாதிக்கப்பட்ட நாங்கள், சாந்தி ஆசிரமம், டாக்டர். மகாதேவன், சகோதரி.லயோலா, மங்கை, தன்னல மற்ற சில தொண்டு நிறுவணங்கள், ஒரு குடும்பமாக, புரிதலுடன், ஒத்த சிந்தனையுடன், மன நிறைவுடன் சேர்ந்து பணி புரிகிறோம். எங்களுக்குள் இருக்கும் பல அனுபவங்கள், உணர்வுகள், சாதிக்க வேண்டும் என்ற உந்துதல், எங்களை ஒன்றாக கட்டிப் போட்டிருக்கிறது. விமானம் ஒன்று வந்தால் ஓடி வந்து அண்ணாந்து பார்த்து கூச்சல் போடும் ஒரு சராசரி கிராமத்துப் ( தொண்டாமுத்தூர், கோவை) பெண்ணாக வாழ்ந்தவள் தான் நான். இன்று அதே விமானத்தில் சாதரணமாய் பறந்து கொண்டிருகின்றேன். இதற்கு காரணம், என் நிலையும், அதை உணர்ந்து எனக்கு உதவி செய்யக் காத்துக் கொண்டிருக்கும் சில மனித நேயங்கள். இந்த நம்பிக்கைக்கு நன்றி என்ற ஒரே வார்த்தையில் சொல்லி என்னை அவர்களிடம் இருந்து வேறு படுத்திக் கொள்ள எனக்கோ அவர்களுக்கோ விருப்பம் இல்லை.

மறுமணம் செய்து கொண்ட எங்கள் தோழியும், பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனும்

உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். பாதிக்கப்பட்ட யாரையாவது பார்க்க நேர்ந்தால், நம்பிக்கை கரம் நீட்டுங்கள். அதைத் தவிர நாங்கள் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கொடுக்கும் நம்பிக்கையை சொல்லும் வண்ணம் உங்கள் பதிவுகளில் 'ரெட் ரிப்பனை' போட்டு உங்கள் ஆதரவை காட்டுங்கள். இது என் அன்பு வேண்டுகோள். ரெட் ரிப்பனில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். அந்த உணர்வைப் பற்றி எங்களுக்குத் தான் தெரியும்.

நீண்ட நாட்களுக்கு பின் சந்திப்பதினால், சந்தோஷம் எனக்கும் அக்காவிற்கும். வந்த இடத்தில் தோழி முத்துலெட்சுமியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. சந்தோஷம். உங்களில் சிலரின் பதிவுகளையும் படித்தேன். சிந்திக்க, சிரிக்க, வியக்க, அழ வைத்த எல்லாமே முத்து முத்தான பதிவுகள். இந்த உலகம் என்னை வியக்க வைக்கிறது. வெளி உலகத்தில் இல்லாத ஒரு புரிதலும், உணர்வையும் இங்கே நான் உணர்கிறேன். அசாதாரணமான ஒரு சக்தி உங்களிடம் இருக்கிறது. இதே போல் நீங்கள் என்றும் ஒற்றுமையுடன், உங்கள் எழுத்தின் மூலம் பல நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். ஆக்கப் பூர்வமான சில காரியங்களும் செய்யலாமே, செய்வீர்கள் என்ற நம்பிக்கையிடன் விடை பெறுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம். எங்களையெல்லாம் பார்த்த சந்தோஷத்தில் இருக்கும் அக்காவிடம் பேச இன்னும் நிறைய இருப்பதினால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

எங்கள் திட்டங்களும், லட்சியமும் நிறைவேற கடவுளின் ஆசியும், உங்கள் வாழ்த்துக்களும் வேண்டி உங்கள் தோழி

மீனாட்சி.

( எங்கள் அமைப்பின் வலைதளம் . இதில் செய்யவேண்டிய சில மாற்றங்கள் பற்றி அக்காவிடம் பேசிக் கொண்டிருக்கின்றேன்.)

பொறுமையாக படித்தமைக்கு நன்றி.

59 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மீனாட்சி , உங்கள் சந்திப்பு இன்று நல்ல படியாக நடக்கவும்...
மேலும் நீங்கள் ஆரம்பிக்க இருக்கும் அமைப்புகளும் வெற்றிகரமாக செயல்பட என் வாழ்த்துக்கள்.

லக்ஷ்மி said...

பதிவை படிச்சு முடிச்சதும் கொஞ்ச நேரத்துக்கு வாயடைச்சு போய்ட்டேன் மங்கை. சில வருடங்களுக்கு முன்பு சு. சமுத்திரம் அவர்கள் எழுதின தொடர்கதை ஒன்னு தினமணிக்கதிர்ல வந்தது. இதே கதைதான் - அந்த கதாநாயகி ஒரு அப்பாவி கிராமத்து பெண். பட்டிணத்து படித்த கணவான் ஒருத்தர் அவளுக்கு வாழ்க்கை கொடுக்கறார்(கல்யாணம் பண்ணிக்கறதை இப்படி சொல்றதுதான் பெரும்பாலனவர்களின் வழக்கம்). வாழ்க்கையோடு சேர்த்து ஹெச்.ஐய்.வியும் தரார். அந்த பெண் துணிச்சலோட வாழ்க்கைல போராடறதும் தன்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்யறதையே தன் வாழ்வின் நோக்கமா கொள்றதும்தான் கதை. ரொம்ப அருமையா, நெகிழ்வா எழுதியிருந்தார் சமுத்திரம் அந்த கதைல. அப்போ நான் நினைச்சேன் இவ்வளவு தன்னம்பிக்கை பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு வரதும் சுத்தியிருக்கறவங்க இவ்வளவு தூரம் அந்த பெண்ணுக்கு ஆதரவு தரதும் கற்பனைலதான் சாத்தியம். நிஜத்தில் இது போல நடக்க பல ஆண்டு காலமாகும்னு நான் அப்போ நினைச்சேன். இல்லைன்னு நிருபிச்சிருக்காங்களே இந்த பொண்ணு.
//பாதிக்கப்பட்ட யாரையாவது பார்க்க நேர்ந்தால், நம்பிக்கை கரம் நீட்டுங்கள். அதைத் தவிர நாங்கள் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை.//
எவ்வளவு தன்னம்பிக்கை மிக்க வரிகள். நிச்சயம் செய்வோம். ரெட் ரிப்பன் போட்டாச்சு.

மங்கை said...

ஆஹா..முதல் வரவே லக்ஷிமிகளின் வரவா இருக்கே..:-))

நன்றி லட்சுமி..

லக்ஷ்மி

//கல்யாணம் பண்ணிக்கறதை இப்படி சொல்றதுதான் பெரும்பாலனவர்களின் வழக்கம்//

:-)) உண்மை...வாழ்க்கை????..ஹ்ம்ம்ம்


கருத்துக்கு நன்றி...


மீனாட்சி

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் மீனாட்சி.. நீங்கள் வரப் போவது குறித்து மங்கை கூறியிருந்தார், ஆனா, உங்க பதிவு எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் :) ரொம்ப மகிழ்ச்சி உங்க பதிவு பார்த்து..

சிகப்பு வளையத்தை சீக்கிரமே எல்லா பதிவுகளிலும் நீங்கள் பார்க்கலாம் :)

ஒரு வலைபதிவு தொடங்கி நீங்களும் ஏன் உங்கள் அனுபவங்களை/நண்பர்களைப் பற்றித் தொடர்ந்து பகிரக் கூடாது?

துளசி கோபால் said...

நல்வரவு மீனாட்சி.

எவ்வளவோ சொல்லணுமுன்னு நெஞ்சு துடிக்குது. ஆனா வார்த்தைகள் வரலைப்பா.

நல்லா இருங்க.

உண்மைத்தமிழன் said...

மீனாட்சி மேடம்.. இப்போதுதான் தங்களைப் பற்றிய விஷயங்களைப் படித்தேன். பழி ஓரிடம்.. பாவம் வேறிடம் என்பது எக்காலத்திலும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். தங்களுக்கு நேர்ந்தது சமூகத்தின் பெயரால் நடத்தப்பட்ட வன்முறை. ஆனால் யாருக்குப் புரியும்? இங்கே தனி மனித உணர்வுகளுக்கு மதிப்பே கிடையாது. அதிலேயும் பெண்களுக்கான உரிமைகளைக் கொடுக்கவே மாட்டோம் என்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் முக்கியக் குறிக்கோள். மறந்து தொலையுங்கள். வேறு வழியில்லை. இனி உங்கள் பாதையில் திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள். தங்களுடைய எழுச்சி மிக்கப் பணிகளைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். தாங்கள் நினைப்பதெல்லாம் நல்லதாகவே நடந்தேற இறைவனை பிரார்த்திக்கிறேன்..

வாழ்த்துகிறேன்.. வணங்குகிறேன்..

மங்கை said...

மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி துளசி....

உண்மைத்தமிழன்

என்ன சார் நீங்களே தமிழர்கள் பத்தி இப்படி சொல்லிடீங்க.. உலகெங்கிலும் இந்த கொடுமை நடந்துட்டு தான இருக்கு... தமிழன் மட்டுமா?...

//தாங்கள் நினைப்பதெல்லாம் நல்லதாகவே நடந்தேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.. ///

மிக்க நன்றி

மீனாட்சி

மங்கை said...

//பொன்ஸ்~~Poorna said...
சிகப்பு வளையத்தை சீக்கிரமே எல்லா பதிவுகளிலும் நீங்கள் பார்க்கலாம் :)
ஒரு வலைபதிவு தொடங்கி நீங்களும் ஏன் உங்கள் அனுபவங்களை/ நண்பர்களைப் பற்றித் தொடர்ந்து பகிரக் கூடாது?

நன்றி பூர்ணா அவர்களே...நானும் எழுத முயற்சிக்கிறேன்.. அக்காவும் சொல்லிகொண்டு தான் இருக்கிறார்கள்

மீனாட்சி

10:53 AM

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சு. சமுத்திரத்தின் கதை தான் எனக்கு நினைவுக்கு வந்தது. பதிவின் தொடக்கத்தில் உள்ள சிரித்த முகமே, பதிவின் நேர்மறைத் தொனியை விளக்கி விட்டது.

மீனாட்சி, உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

பொன்ஸ், இதுக்கும் ஒரு widget செஞ்சு தரப் போறீங்கன்னு நினைக்கிறேன். வெறும் சிகப்பு நாடா பதிவா இல்லா அந்த படத்த ஒரு எய்ட்ஸ் விழிப்புணர்வு / நம்பிக்கையுணர்வுக் கூட்டுப் பதிவுக்கு
இணைக்கலாம்.

மணியன் said...

உங்களைப் பற்றி அறிந்து பெருமிதம் கொண்டேன். உங்களைப் போன்றவர்களின் மன உறுதியும் வாழ்க்கையை நேர்முகமாகப் பார்க்கும் சிந்தனையும் வருங்காலம் வளமாகும் என்ற நம்பிக்கையை வளர்க்கிறது. குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட குறைகளை நீக்குவதில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

மங்கை said...

என்னை மதித்து இந்த பதிவினை படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

நவிசங்கர், மணியன் அவர்களுக்கு நன்றி

மீனாட்சி

பங்காளி... said...

இப்ப நான் எதுவும் சொன்னா அதெல்லாம் போலியா இருக்கும்னு மனசுக்கு தோணுது....

வாழ்த்துக்கள் மீனாட்சி....

தென்றல் said...

மீனாட்சி, வணங்குகிறேன்..!

/எங்கள் திட்டங்களும், லட்சியமும் நிறைவேற கடவுளின் ஆசியும், உங்கள் வாழ்த்துக்களும் வேண்டி ../

வாழ்த்துக்களும்.. பிராத்தனைகளும்..

மங்கை said...

பங்காளி அவர்களே நன்றி...

அடுத்தவர் இப்படி நினக்கக்கூடும் என்று நம் கருத்தை சொல்ல நம்மையே நாம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்குறேன்.. சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு நம்பிக்கையும், ஆதரவையும் கொடுப்பவை.. அவை போலியா, உண்மையா என்ற ஆராய்ச்சியில் ஒரு நாளும் நாங்கள் இறங்குவதில்லை...
அப்படி நினைத்தால் இந்த அளவிற்கு நாங்கள் வந்திருக்க முடியாது..

இருந்தாலும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி...

மங்கை said...

நன்றி தென்றல் அவர்களே
மீனாட்சி

பங்காளி... said...

மங்கை...

திருமதி.மீனாட்சி அவர்களின் வரிகள் ஏற்படுத்திய அழுத்தத்திற்கு எனது வெற்று வார்த்தை அலங்காரங்கள் ஆறுதலாய் இருக்கமுடியாது என தீர்மாணமாக நம்பினேன்...மேலும் அந்த சமயத்தில் நான் உணர்ந்தவைகளை வார்த்தைகளாக சொல்லும் மனநிலையோ/திராணியோ இல்லை.....வெறுமையே மேலோங்கியிருந்தது.

நீங்கள் வேண்டுமானால் ஆராய்ச்சி செய்யாமல் இருக்கலாம்...என்னிடம் இருந்த கொஞ்சூண்டு(!) நேர்மையை காட்ட விழைந்தேன் அவ்வளவே....

மற்றபடி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...இந்த தடவை மங்கைக்கும் சேர்த்து(ஹி...ஹி)

பத்மா அர்விந்த் said...

மங்கை
நான் இதுகுறீத்து தனிப்பட்ட விதமாக செய்வதை உங்களும் தனிமடலில் பகிர்ந்து கொள்கிறேன். மீனாட்சிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

மங்கை said...

பங்காளி அவர்களே

உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.. நான் ஏதும் தவறாக சொல்லி இருந்தால் பொருத்துக் கொள்ளுங்கள்.. இங்கு உங்களை எல்லாம் பார்த்ததில் (ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்) எனக்கு மிக்க மகிழ்ச்சி.. உங்களின் ஒவ்வொருவரின் வார்த்தையும், எனக்கு மேலும் பலத்தை கொடுக்கின்றன...

அக்கா இல்லை, வந்ததும் உங்களின் நன்றியை தெரிவித்து விடுகிறேன்..

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.. நான் எதுவும் தவறாக நினைத்துச் சொல்லவில்லை.. நன்றி

மீனாட்சி

மங்கை said...

நன்றி பத்மா அவர்களே..

மீனாட்சி

பங்காளி... said...

மீனாட்சி....

அதை எழுதினது நீங்கதானா....நான் மங்கை எழுதினதுன்னு நினைச்சேன்...

தப்பா நெனய்க்காதீங்க தாயே...நமக்கும் மங்கைக்கும் அடிக்கடி இப்படியெல்லாம் நடக்கும்

நாளின் இறுதியில் களைத்து ஓய்ந்த மனநிலை...அதான் மனசுல பட்டத எழுதீட்டேன்.......கண்டுக்காதீங்க....மனசுல வச்சிக்காதீங்க....

மத்தபடி...நான் ர்ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க்கோ....ஹி..ஹி..வேணுன்னா சபைல கேட்டுப்பாருங்க அம்மனி..

மங்கை said...

நான் யாரையும் கேக்கலை சகோதரரே..நீங்க சொன்னா சரி தான்..
அதுவும் எங்க ஊரு பாஷையில அம்மனின்னு சொலிட்டீங்க... நன்றி

அப்ப அக்கா கிட்ட இப்படித்தான் சண்டை போட்டுட்டெ இருப்பீங்களா?..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அப்ப அக்கா கிட்ட இப்படித்தான் சண்டை போட்டுட்டெ இருப்பீங்களா?.. //

அது ஒன்னுமில்ல மீனாட்சி...பதிவர்கள் எல்லாம் சேர்ந்து இது ஒரு குடும்பம் மாதிரி ன்னு நீங்க தானே சொன்னீங்க..அதான் அப்ப ப்ப கொஞ்சம் அப்படி இப்படி பேசிக்கறது :)

Radha Sriram said...

மீனாட்சி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

உங்களுக்கு எங்க எல்லாருடைய ஆதரவும் கண்டிப்பா உண்டு ......

தொடருங்கள் உங்கள் பணியை !!

பெருசு said...

நம்ம ஊருலே படிச்ச புள்ளைங்களே
இன்னமும் குமுட்டி அடுப்புக்கு முன்னாலே உக்காந்து ஊதாங்குழலை வெச்சி ஊதிட்டு இருக்கும்போது,
இந்தப்பொண்ணு மீனாட்சி பவுருலே இருக்குறவுங்க செய்ய முடியாத சமாச்சாரத்தையெல்லாம் செஞ்சுட்டு இருக்குது.

நடந்தது நடந்துபோச்சுது,போச்சாது போ
தலைவிதியேன்னு பாக்குத்தோப்புக்கு போயி களை புடிங்கிட்டு வாழ்க்கைய முடிக்காம, ஊரு முக்குலே இருக்குமே சுமதாங்கிகல்லு(இப்பெல்லாம் இருக்குதோ இல்லியோ),
உறுதியா நின்னு காலத்துக்கும் பேசறமாதிரி இருக்கோணும் தாயி.

பங்காளி... said...

ஏனுங்க மீனாட்சி...முத்துலட்சுமி சொல்ற குடும்பத்துல நீங்களும் ஒரு மெம்பராய்டலாம்ல....

நாங்கள்லாம் சண்டை போடவே(?) மாட்டோம்...சண்டைன்னு வந்துருச்சின்னு வச்சிக்கங்க...சந்தி சிரிக்கும்னு கேள்விப்பட்டிருபீகளே....அதையெல்லாம் தாண்டி வீசி நாறிடுவோம்...ஹி..ஹி...ரெண்டு மூனு தலமொற மனசுல காயமிருக்கும்னா பாத்துக்கங்களேன்....

ரொம்ப பயமுறுத்தறேனோ....சமயங்கள்ல மனசை தடவிக்கொடுக்க மயிலிறகும் வேணும் சகோதரி...இங்கே அது நீங்கள் கேட்காமலேயே நிறைய கிடைக்கும்...ம்ம்ம்ம்ம்

மங்கை said...

முத்துலெட்சுமி அவர்களே

நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு
அதிசியமாவும் இருக்கு... இப்படி ஒரு உலகம் இருக்குறது எனக்கு தெரியாது

ஒரு குடும்பம் மாதிரி தான் இருக்கீங்க..
உங்க எல்லார்த்துக்கும் வாழ்த்துக்கள்..

மீனாட்சி

மங்கை said...

ராதா அவர்களே நன்றி

பெருசு அவர்களே...

நீங்க பேசறது பார்த்தா நம்ம ஊர் மாதிரி இருக்கு...சந்தோஷம் சகோதரனே..

மீனாட்சி

மங்கை said...

பங்காளி அவர்களே

மீண்டும் நன்றி...சீக்கிறம் உங்க குடும்பத்தில சேர்ந்துக்குறேன்
அக்கா சொல்லிட்டாங்க வந்தே ஆகனும்னு..

அதுக்கு தான் இந்த பயிற்சி... உங்களை எல்லாம் பார்த்ததில் என்னுள் எழும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..

பங்காளி அவர்களே.. அக்கா கிட்ட இருந்து போன் வந்துச்சு... புகார் சொல்லிட்டேன்..உங்களைப் பத்தி...

பெருசு said...

நானும் கோயந்த்தூருதான் தாயி.

நீங்க வாங்க தாயி,வந்து தோன்றது முச்சூடும் எழுதிப்போடுங்க.

மங்கை said...

நன்றி பெருசு அவர்களே

Syam said...

மீனாட்சி, உங்கள் அமைப்பு மூலம் இன்னும் பலருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள்...ஊருக்கு வரும் போது கண்டிப்பாக உங்கள் அமைப்பாளர்களை சந்தித்து என்னாலான உதவிகளை செய்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

மீனாட்சி,
உங்களைப் பற்றி படித்தேன்.
சென்னையில் டி.வி யில் பார்த்தும் இருக்கிறேன்.
நல்ல நம்பிக்கையுடன் இருங்கள்.
மங்கை மாதிரி நண்பர்களூடன் சேரும்போது நல்லதே நடக்கும்.
எங்கள் மனமார்ந்த அன்பு எப்போதும் உண்டு.

மங்கை said...

சியாம், வல்லி அவர்களே...

வாழ்த்துக்களுக்கு நன்றி..சியாம் நீங்களும் கோவை தானா...கண்டிப்பா வாங்க.. நீங்கள் எங்களையெல்லாம் வந்து பார்ப்பதே, பெரிய உதவி

நன்றி

மீனாட்சி

Syam said...

//சியாம் நீங்களும் கோவை தானா...கண்டிப்பா வாங்க.. நீங்கள் எங்களையெல்லாம் வந்து பார்ப்பதே, பெரிய உதவி//

இதுக்கு பதில் அப்புறமா போடலாம்னு இருந்தேன்...இப்பொ தமிழ்மணத்துல 40 லிமிட்ட தூக்கிட்டாங்க...நானும் கோவை தாங்க...கண்டிப்பா வந்து உங்க எல்லோரயும் பாக்கறேன் அத விட பெரிய ஆத்ம திருப்தி எதுலயும் இல்ல...உங்க மன உறுதி எல்லோருக்கும் வரனும்...உங்களுக்கு உதவும் மங்கை அக்காக்கும் வாழ்த்தும் நன்றியும் தெரிவிச்சுக்கறேன்...

மா சிவகுமார் said...

மீனாட்சி,

நீங்கள் செய்து வரும் பணிகளுக்கு வாழ்த்துக்கள்.

பொன்ஸ் சொன்னது போல நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும், தகவல்களையும் பதிவுகள் மூலம் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

விபரங்கள் தெரிந்து கொள்வதன் மூலம், மேலும் பலரும் தம்மால் முடிந்த அளவுக்கு பணியாற்ற முடியும்.

அன்புடன்,

மா சிவகுமார்

நாகை சிவா said...

மீனாட்சி மற்றும் மங்கை உங்கள் இருவருக்கும் என் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

என்னால் இயன்ற வரை கை கொடுக்க என்று தயாராக உள்ளேன்.

நாகை சிவா said...

//கண்டிப்பா வந்து உங்க எல்லோரயும் பாக்கறேன் அத விட பெரிய ஆத்ம திருப்தி எதுலயும் இல்ல...//

சரியா சொன்ன பங்கு.....

மங்கை said...

முதல் வருகைக்கு நன்றி மா.சிவகுமார்

//விபரங்கள் தெரிந்து கொள்வதன் மூலம், மேலும் பலரும் தம்மால் முடிந்த அளவுக்கு பணியாற்ற முடியும்//

கண்டிப்பாக, விழிப்புணர்வு ஓன்று தான் தீர்வு..

நன்றி..

நாகை சிவா

வாழ்த்துக்களுடன் சேர்ந்து தனி பதிவிட்ட தங்களுக்கு எங்கள் நன்றி

balar said...

மீனாட்சி உங்களை பற்றி இப்பொழுதுதான் படித்தேன்.
உங்களுக்கு எங்களுடைய அன்பும் ஆதரவும் எப்பொழுதும் உண்டு.
தங்களுடைய சமுதாய விழிப்புணர்வு பணி மேலும் வெற்றிகரமாக செயல்பட என் வாழ்த்துக்கள்.

பங்காளி... said...

மங்கை...

நம்ம கையில "வலையுலக மாதாஜீ" ன்னு ஒரு பட்டம் இருக்கு வாங்கிக்கிறீகளா....ஹி..ஹி...

மங்கை said...

நன்றி பாலர்..


பங்காளி..

:-)))

பண முடிப்போட தான குடுக்கறீங்க...

பங்காளி... said...

அப்ப...பட்டத்த கொடுத்தறலாங்கறீங்க....

பஃங்ஷனுக்கு டேட் குடுங்க தாயே!

மங்கை said...

பங்காளி..

ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு...

பூவோட சேர்ந்து இந்த நாரும் மணக்குது..அவ்வளவு தான் நண்பரே...

சிவபாலன் said...

மீனாட்சி அவர்களே,

உங்கள் முயற்சி அனைத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

நல்ல முயற்சி!

இங்கே பகிந்ர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

Unknown said...

மங்கை மேடம்,
என்ன சொல்றதுன்னு தெரியலை, அனுதாபம் தெரிவிப்பதை விட்டு அவங்களுக்கு உதவியா ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னால் எதாவது செய்ய முடியுமான்னு சொல்லுங்க கண்டிப்பா செய்ய முயற்சி செய்கிறேன்.
மீனாட்சி மேடம் ரொம்ப நல்ல விஷயத்தை செய்து வருகிறீர்கள் உங்களுக்கும், டாக்டர் மகாதேவனுக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.

மங்கை said...

நன்றி சிவபாலன், சந்தோஷ்..

செய்யலாம் சந்தோஷ் சார்.. (நீங்க மேடம்னு கூப்டதுனால நானும் மீனாட்சியும் இப்படி கூப்ட வேண்டியதாயிடுச்சு..:-))]

எல்லாரும் சேர்ந்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்...

நன்றி

மங்கை said...

ஆதரவு தெரிவித்த நாகை சிவா, சிந்தாநதி, வேதா, மற்றும் பாஸ்டன் பாலாவிற்கு நன்றி

Syam said...

இது தமிழ்மணம்ல இன்னும் ஒரு நாலு பேர் பாக்கறதுக்காக ஒரு பின்னூட்டம்...

பாரி.அரசு said...

மீனாட்சி அவர்களே,
இருத்தலையே வாழ்க்கையாக கொள்ளாமல்...
இயங்குதலையே வாழ்வாக கொண்டு...
மடிந்தாலும் மண்ணில் மாற்றங்களை
ஏற்படுத்தும் மனம்கொண்டு...
போராடும் உமக்கு வணக்கங்கள்...

Dubukku said...

உங்கள் பணியும் தன்னம்பிக்கையும் பாடமாக இருக்கிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!

இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி

http://www.desipundit.com/2007/04/30/meenakshi/

மங்கை said...

பாரி அரசு, Dubukku

//இயங்குதலையே வாழ்வாக கொண்டு//

மிக்க நன்றி

காட்டாறு said...

மங்கைக்கு,
படிச்சிட்டு, கொஞ்ச நேரத்துக்கு எழுத வரல.... என்னதான் தொலைக்காட்சியிலோ, நாளேடுகளிலோ பார்த்திருந்தாலும், நமக்கு தெரிந்தவர்கள் மூலம் அறிமுகம் ஆகும் போது, நம்மில் ஒருவர் என்று உடனே தோன்றிவிடும். ஆகவே, மீனாட்சிய தமிழ் உலக்குக்கு அறிமுகப் படுத்தியதற்கு மங்கைக்கு முதலில் நன்றி.

மீனாட்சிக்கு,
உங்கள் தன்னம்பிக்கை சிலிர்க்க வைக்கிறது. வெறும் வார்த்தைகள் அல்ல இவை. ஆயிரம் வார்த்தைகள் முட்டி மோதி வெளி வர முடியாமல் தொண்டை குழியில் அமிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து இருக்கின்றன. உங்கள் சேவை (கடமை) தேவை. மேலும் வளர வாழ்த்துகிறேன். உற்சாகம் அளிக்க, உதவ தூண்களாக நாங்கள் இருக்கிறோம்.

தனிப் பதிவு ஆரம்பித்து எழுத ஆரம்பியுங்கள். மறு மொழிகள் வாசிக்க நேரமில்லை. நான் சொன்ன கருத்துக்கள் பலரும் கூறியிருந்தாலும், மனதில் தோன்றியதைக் கூறாமல் செல்வது அழகல்ல. வாருங்கள் தோழி. எதிர்ப்பார்த்து காத்திருப்போம்.

மங்கை said...

வாங்க காட்டாறு

நன்றி..நீங்க சொன்னத மீனாட்சிக்கு கண்டிப்பா கொல்லிடறேன்...

இரண்டு நாட்களுக்கு முன்னால கூப்படப்போ உங்க குடும்பத்தில (தமிழ்மணம்) இருக்கிறவுங்களையெல்லாம் கேட்டதா சொல்லுங்கன்னு சொன்னாங்க..:-))

Unknown said...

அந்த சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

Unknown said...

Sri Lankan Ayurvedic doctor found permanent cure for AIDS!!!
Please see these links....

http://www.lakbimanet.com/lakbimanews/lakbimanews_07_08_26/special/spe9.htm


http://lankaguardian.blogspot.com/2007/09/sri-lankan-ayurvedic-doctor-finds-cure.html

மங்களூர் சிவா said...

சகோதரிக்கு மீனாட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

HATS OFF MEENAKSHI

2009kr said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

சிவாஜி said...

உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது மீனாட்சி.
வேற எதுவும் சொல்லத் தெரியல.
வாழ்த்துக்கள்!

அன்புடன்,
சிவாஜி
http://greenworldindia.org