Monday, March 26, 2007

வியர்ட்(டே) உருவமானவள்.

நடுவுல இருக்கும் புள்ளிய இரண்டு நொடி உத்துபாருங்க.

என்னங்க இது, வித்தியாசமான பழக்கம் ஏதாவது இருந்தா தான அது வியர்டு?.. பார்த்தா நாம எல்லாருமே 'ஒரு(ரே) மாதிரி' இருக்கோம். அப்புறம் எப்படி அது வியர்டு....:-)).

ஹம்ம்ம் சரி.. கவிதா கூப்பிட்டது எனக்கு லேட்டா தான் தெரிய வந்தது. தனி மடல்ல கவிதா சொல்லியும் நாம இவ்வளவு சுறுசுறுப்பு.. இதுலேயே தெரிஞ்சு இருக்குமே, நான் ஒரு மாதிரின்னு...:-))...

நடை-நடக்குறதுன்னா எனக்கும் என் ப்ரெண்ட்ஸ்க்கும் ரொம்ப பிடிக்கும். தேவையில்லாம நாங்க நடந்த நடையை யாரும் நடந்து இருக்க மாட்டாங்க. அதுக்காகவே Youth Hostel Association, NCC, NSS ல சேர்ந்து ட்ரெக்கிங் போவோம். இது போல பல தடவை ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து நடந்து போயிருக்கோம். ஊட்டிக்கு மேல முக்கூர்தி சிகரத்திற்கும் 4 முறை போயிருக்கேன். அது எல்லாம் ஒரு காலம். ஹ்ம்ம்ம்ம்.. நல்லா 37-40 டிகிரி வெய்யில்ல எங்க போறோம் எதுக்கு போறோம்னு தெரியாம நடப்போம், நடப்போம், நடப்போம், நடந்துட்டே இருப்போம்.

கிருக்கல்- புது நோட் புக் பார்த்தா சும்மா என் பேர எழுதி எழுதி பார்த்துப்பேன். எங்காவது ஒரு புது நோட் புக் பார்த்தா என்னை அடக்கறது எனக்கே கஷ்டம். என் பேரு எழுதுவேன், ரெண்டு கண்ணு வரவேன், ஒரு தெண்ண மரமும் வீடும் வரஞ்சாதான் என் கை நடுக்கம் நிற்கும். இது இன்னைக்கு நேத்து பழக்கம் இல்ல..பல காலமா நல்லா உரம் போட்டு இந்த பழக்கத்த வளர்த்துட்டு வரேன்.

நான் அடிச்ச அரை சதம்- இந்த படத்த நான் எத்தன தடவை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. இங்க தில்லி வந்த அப்புறம் கணக்கு வைக்க ஆரம்பிச்சேன். இந்த ரெண்டு வருஷத்தில மட்டும் 51 தடவை பார்த்துடேங்க. என்ன படம்னு பார்க்கரீங்களா. தில்லானா மோனாம்பாள் தான். இன்னும் எத்தனை தடவை வேனா பார்ப்பேன். போனவாரம் சன் டீவில போட்டப்ப 51 ஆவது முறையா பார்த்தேன். முக்கியமா முதல் பாடலும், நலந்தானா பாட்டுல, நாட்டியப் பேரொளி பாடும் இந்த வரிகளுக்கு நடிகர் திலகத்தின் அசத்தல்.......நடிப்புன்னு ஒரே வார்த்தைல சொல்றதுக்கு மனசு வரலை...

''கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் -
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்
''

இது மாதிரி காதலையும் உணர்ச்சிகளையும் வெளிக்கொணர்ந்த காட்சி வேற எந்த படத்திலும் வரலைனு நினைக்குறேன்..நாதஸ்வரம் வாசிச்சுட்டெ கண்களில் நீர் தளும்ப..ம்ம்ம்ம்..ஒவ்வொரு முறையும் என்னுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வரிகள்... யாரும் இல்லாத அமைதியான இடத்துல எனக்கு இந்த படமும், காதலிக்க நேரமில்லை, படமும் இருந்தா போதும்.

சண்டை போடுவது, ஆர்க்யூ பண்றது இது எல்லாம் சுட்டு போட்டாலும் வராதுங்க. ஆனா என்ன மாதிரியே என் கிட்ட பழகறவுங்களும் இருக்கனும் எதிர் பார்க்கும் கெட்ட பழக்கம். மத்தவங்க சண்டை போட்டாலும் நானா போய் பேசீடுவேன். அந்த பக்கம் எப்பவும் அதே மாதிரி இருக்காதில்லையா ?
ஹ்ம்ம்....யாரு என்ன கேட்டாலும் செய்ய மாட்டேனு சொல்ல மனசு வராது. ஒரு சிரிப்பு சிரிச்சா போதும் நான் surrender. எதுக்காக இத்தன பரிவு என்று தெரிஞ்சு இருந்தாலும் முகத்தில அடிக்கிறமாதிரி பேசவோ, முடியாதுன்னு சொல்லவோ தெரியாது. எத்தன பட்டாலும் புத்தி வராது. வரவேண்டாம்னு பார்க்கிறேன். (இது நம்மில் பல பேருக்கு இருக்குறத பார்க்குறேன், ம்ம்ம்..சந்தோஷம்). இது கூட வித்தியாசமான பழக்கம்னு நாமளே நினைக்குற அளவுக்கு ஆயிறுச்சு பார்த்தீங்களா. உண்மையில இதை எழுதின அப்புறம் தான் தோனிச்சு, இது என்ன பெரிய விஷயம், இதை எழுதனுமானு. இப்ப நீங்க தான் சொல்லனும்.

சொந்தங்களுடன் கூட்டுக்குடும்பமாய் இருப்பது.- இது ஆசை. இது எல்லாம் இந்த கால கட்டத்துல சாத்தியமில்லாத ஒன்னு தானுங்களே. அதான் இதுல சேர்துட்டேன். இதுல என்னோட விருப்பம் மட்டும் இருந்து பிரயோஜனம் இல்லை இல்ல. இருந்தாலும் ஒரு காலத்துல நிறைவேறும்னு ஒரு நப்பாசையில இங்க சொல்றேன்.

அவ்வளவு தாங்க....

ஆனா நான் ரொம்ப லேட் போல இருக்கு.....நான் 5 பேருக்கு எங்க போக.. இருந்தாலும் இன்னைக்கு, இந்த பாவம் புண்ணியம் பாக்குற மூட்ல எல்லாம் நான் இல்லை

அதனால நான் கண்டுபிடிச்ச 5 பேரு

1)
பங்காளி- http://pangaali.blogspot.com/ - தப்பிக்க எல்லாம் பாக்காதீக, ஆமா சொல்லிபுட்டேன்.

அடுத்து புதுசா வந்தவங்கள கூப்பிடலாம். வித்தியாசமான ஒரு அறிமுகமா இருக்கட்டும். இதுல ரெண்டு பேர தவிர மத்தவங்களோட பதிவுகளை நான் படிச்சதில்லை. நேத்து முகப்புல இருந்தவுங்க இவங்க எல்லாம்.

2) யாழினி அத்தன் -
http://peelamedu.blogspot.com//
3) சண் ஷிவா - http://aaraamthinai.blogspot.com/
4) காட்டாறு-
http://kaattaaru.blogspot.com/
5) முரளி -
http://adhvaithi.blogspot.com/

Saturday, March 24, 2007

நிதாரி - வெளிவந்த நிஜங்கள்

நிதாரியின் நிஜங்கள் வெளி வந்து விட்டது. இன்னும் வெளிவராத, வெளிவர பிடிக்காத நிஜங்கள் எத்தனை என்று தெரியவில்லை.

நேற்று, CBI இயக்குனர், திரு. அருன்குமார் சொன்ன விளக்கங்கள், ஒரு மனிதன் இந்த அளவிற்கு குரூரமாக நடக்க முடியுமா என்று நினைக்க வைக்கிறது. சினிமாவிலும், க்ரைம் நாவல்களிலும் மட்டுமே இதையெல்லாம் படித்துக் கொண்டிருந்த நாம், இன்று நம்மிடையே நடக்கப் பார்க்கிறோம். திரு.அருன்குமார், கோலி(Kohli) செய்ததாக சொன்ன பல செயல்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

கோலி, ஒரு 'நெக்ரோஃபீலிக் (necrophilic) (பிரேதத்துடன் உடலுறவு கொள்ளபவன்). ஒரு Psychopath. 18 பெண்களை பலாத்காரம் செய்து கொன்று, அதற்கு பின் , அந்த உடலுடன் அவன் செய்த செயல்கள் இங்கே சொல்ல முடியாதவை. மேலும் அவன் cannibalistic tendencies (மனிதனை மனிதன் உன்னும் செயல்) உடையவன் என்றும் உளவியல் நிபுனர்கள் கூறுகின்றனர். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

ஒரு நெக்ரோஃபீலிக்கு இருக்க வேண்டிய அத்தனை குணாதிசியங்களும் இவனுக்கு கச்சிதமாக அமைந்திருக்கிறது. கழுத்து, மற்றும் மார்பக பகுதியை கடிப்பது, ஆசன வாய் பகுதியை சேதப்படுத்துவது, கழுத்தை நெரிப்பது, கொடூரமான முறையில் துன்புருத்தி கொலை செய்வது, கொலை செய்த பின் உடல் பாகங்களை தனி தனியாக வெட்டுவது. இது எல்லாம் இவர்களிடம் பொதுவாக காணப்படும் குணாதிசியங்கள். இவை அனைத்தையும் இவனும் செய்திருகிறான்.

தனிமையில் ஒரு ஆணும் பெண்ணும் எவ்வளவு அன்பாக பேசிக்கொள்வார்களோ, அதே அன்பான வார்த்தைகளை இவர்களும் பிணத்துடன் பேசுவார்கள். இவர்களைப் பொருத்தவரை இவர்கள் என்ன செய்தாலும், பேசினாலும், அதை ரசிக்கும் 'பார்ட்னர்' தான் அந்த பிணம்.

இந்தியாவையே நிலை குலைய வைத்து இருக்கும் இத்தனை பெரிய குற்றம் நடந்தது, அவன் முதலாளியான மொனீந்தர் சிங் பேந்தருக்கு தெரியாது என்று CBI கூறுகிறது. கொலை நடந்த நாட்களில் எல்லாம் மொனீந்தர் ஊரில் இல்லையாம் . இருந்தாலும் தெரிந்த பின் குற்றத்தையும் சாட்சியங்களையும் மறைத்ததற்காக இவனுக்கும் அதே அளவு தண்டனை கிடைக்கலாம் என்கின்றனர். தன் மனைவி இறந்த பின்னர் தன்னை நன்றாக கவனித்துக் கொண்டபடியால், அவனை காப்பாற்ற நினைத்ததாக மொனீந்தர் கூறியிருக்கிறான். மேலும் உலகத்தில் இதுவரை இரண்டு சைக்கோபாத்துகள் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்ததாகவோ, ஒன்றாக ஒரு குற்றத்தை செய்ததாகவோ எங்கும் குறிப்பில்லையாம். அதனால் மொனீந்தருக்கு கொலை குற்றங்களில் நேரடி தொடர்பு இல்லை என்கின்றனர்.

இதற்கிடையே, நான்கு நாட்களுக்கு முன் ஒரு பெண் போலீஸ் அதிகாரி இவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சில சாட்சியங்களை மறைத்ததற்காக கைது செய்யப்படுள்ளார்.

என்ன கண்டு பிடித்து என்ன பயன், இந்த பெண்களையும், குழந்தைகளையும் இழந்தவர்கள் இதை எல்லாம் கேள்விப்பட்டால்..... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கடவுள் தான் அவர்களுக்கு அமைதி அளிக்க வேண்டும்.

Friday, March 09, 2007

தலை நகரிலிருந்து தலை நகருக்கு - சுடர்..

தேன்கூடு சாகரனுக்கு அஞ்சலி

என்னடா அம்மிணி ரொம்ப அக்கரையோட காலங்காத்தால கை நல்லா இருக்கா, ஆபீஸ் போறீங்களானு, லீவ் போட்டுட்டு இங்க வரீங்களான்னு கேக்குதுன்னு பார்த்தா.. ம்ம்ம்.. அன்புத் தொல்லை, பாச மழை... விஷயம் வருது மெதுவா..ஹ்ம்ம்ம்

1) பெண்ணாப் பொறந்துட்டோமேன்னு நினைச்சதுண்டா ? இல்லைன்னா ஏன்? ஆமாம் ன்னா ஏன்? எந்தந்த சமயத்தில் அப்படி தோன்றியதுன்னு சொல்லுங்க.

இல்லை...ஒரு போதும் வருத்தப் பட்டது இல்லை. ஒரு பெண்ணாக பிறந்ததுனால நான் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மாறா சில சலுகைகள் தான் அனுபவிச்சுசிறுக்கேன்...:-)).. பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, நான் ராணி தான். என் கணவரை விட அவரின் சொந்தங்களிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். அதே போலத்தான் அவர்களும். அம்மா, அப்பா, அண்ணன், தோழிகள், நன்பர்கள்னு எனக்கு அமைந்த உறவுகள் தான் இதற்கு காரணம். எதிர்பாராத நிகழ்வுகள், ஏற்ற தாழ்வுகள், ஏமாற்றங்கள், தோல்விகள், வருத்தம் னு எல்லாம் பார்த்திருக்கேன். ஆனா அது எல்லாம் நான் பெண்ணா பிறந்ததுனால தான் நடந்துன்னு நினைக்க முடியலை. நான் படிக்கனும்னு ஆசப்பட்ட படிப்பு படிக்க முடிஞ்சது. திருமணத்திற்கு முன், வெளியூர்ல வேலை கிடைச்சப்போ, மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், அப்பா சம்மதம் தெரிவிச்சு அனுப்பி வ்ச்சார். திருமணத்திற்கு பின் இப்ப தில்லியில வேலை கிடைச்சதும் கணவர் சம்மத்தோட இங்க வாழ்கைய ஆரம்பிச்சிருக்கேன். ஆமாம், இது புனர் ஜென்மம் தான். இப்படி நான் ஆசப்பட்டது எல்லாம் நடந்திருப்பதே ஒரு பெண்ணா நான் எடுத்த முயற்சிகளுக்கு கிடைச்ச அங்கீகாரம் தான் அப்படீங்கிறத நான் இங்க வந்த பின் தான் உணர முடிஞ்சது.


2.ஒரு நாள் ப்ரைம் மினிஸ்டர் ஆனா என்ன எல்லாம் திட்டம் கொண்டுவருவீங்க..

அட சாமி....ஹ்ம்ம்ம்..
THINK GLOBALLY AND APPLY/ACT LOCALLY

நாட்டின் முதுகெலும்பாய் இருக்கும் விவசாயம் செழிக்க சிறந்த வல்லுனர்கள் கொண்டு புதிய உத்திகளை/தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கச்செய்வேன்.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வேன். அது இனி நடக்காமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அதை அனைத்தும் செய்ய தயங்கமாட்டேன்.

சில அமைச்சரவைகள் பிரத்தியேகமா பெண்கள் தலைமையில இயங்கச் செய்வேன்.

அரசியல்னா என்ன, ஒரு சிறந்த அரசியல்வாதி தன் செயல்பாட்டினாலும், நோக்கத்தினாலும் எப்படி எல்லாம் சமுதாயத்தில ஒரு மாற்றத்தை உண்டு பண்ண முடியும், அதற்கான தகுதிகள் என்ன- இது எல்லாம் பாடதிட்டத்திலயே சேர்த்து ஆரோக்கியமான விதத்தில இளைஞர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்க வழிவகுப்பேன். ஒரு சிறந்த அரசால் சமுதாயத்தில வேகமான மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தகுதி வாய்ந்த இளைஞர்கள் அரசியலில் நுழைய ஊக்கப்படுத்துவேன். (கொஞ்சம் ஓவரா இருக்கோ...)

3)சமூக முன்னேற்றத்திற்கு நீங்க என்ன எல்லாம் முயற்சி செய்யறீங்க? மத்தவங்க என்ன எல்லாம் செய்யணும் ? எதாச்சும் ஐடியா...

அவ்வளவு பெரிய வேலை எல்லாம் நான் செய்யலைங்க. இப்ப நான் ஈடுபட்டிருப்பது எச்ஐவி எய்ட்ஸ் தடுப்புப் பணியில் மட்டும். நம் நாட்டில எச்ஐவியால பாதிக்கப்பட்டவர்களில் 14ல் இருந்து 45 வயதிக்கு உட்பட்டவங்க தான் அதிகம். இந்த வயசுல உள்ளவங்க பாதிக்கப்பட்டா, நாட்டின் உற்பத்திறன் குறைந்து, பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவுகள் கூடிட்டே போகும். இன்று ஆப்பிரிக்காவில் குழந்தைகளை கவனிப்பதற்கு அவர்களின் பெற்றோர்கள் உயிருடன் இல்லை. தாத்தா பாட்டியிடம் சிலர், சர்ச்களில் சிலர் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கல்விக்கும் மற்ற செலவுகளுக்கும் பணம் இல்லாமல் பெண் குழந்தைகள் தங்கள் உடலை விற்கும் அவலத்திற்கு ஆளாகி, பின், அவர்களும் எச்ஐவியால் பாதிக்கப்படுவது அங்கு சகஜமான ஒரு விஷயம். இந்த நிலை இந்தியாவிற்கு ஏற்படாமல் இருக்க நம் அரசும், தொண்டு நிறுவணங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருகிறேன். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் மேலும் பணியாற்ற விருப்பம்.

சமுதாய முன்னேற்றத்தில் மற்றவர்கள், தங்களால் முடிந்ததை செய்யலாம். சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்காமல் இருப்பதே பெரிய உதவிதான். உங்க வழிவழியாய் பதிவில் சொன்னது போல், ஒரு தாய் தரமான சந்ததியை உருவாக்க முடியும். அதற்கு பெண்கல்வி மிகவும் அவசியம். கல்விக் கடவுளாய் சரஸ்வதிய கும்பிடும் நம்ம நாட்டில தான பெண்கல்வி என்பது இன்றும் ஒரு பலருக்கு எட்டா கனியாவே இருக்குது.

Give a man a fish and he will eat for a day. Teach him how to fish and he will eat for a lifetime. இது நம்ம எல்லாரும் கேள்வி பட்டிருக்கோம். ஒருவருக்கு உதவித்தொகை வழங்குவதோடு மட்டும் நிற்காமல், உதவி வேண்டி வருபவர்கள் தன்மானத்துடன் வாழ வழி செய்யலாம். வெறும் பணம் உதவி மட்டும் செய்யாம, அவங்க எப்படி படிக்கிறாங்கன்னு தொடர்ந்து கவனிச்சுட்டு வரலாம். இதனால அவங்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், உணர்வும் வரும். இது நினைச்ச பார்த்தா கடினமான ஒன்றாத்தான் இருக்கும். ஆனா செயல் படுத்தும் போது அதனால் கிடைக்கும் திருப்தியும், பலனும், மன நிறைவும் செய்து பார்த்தால் தான் தெரியும். வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு செய்தால் கூட போதும். முயன்று பாருங்களேன்.

4. சமையல் கத்துக்கிட்ட அனுபவம் சொல்லுங்க[.நல்ல சிரிப்பான கதை அது}

(லட்சுமி... இருங்க உங்களை அப்புறம் கவனிச்சுக்குறேன். ..)

நீங்களாவது நான் சமையல் 'கத்துட்டேன்னு' சொல்லிர்ரீங்களே.. அதுவே பெரிய விஷயம்.. டேங்ஸ்.. கல்யாணத்திற்கு முன்னால சமையலைறை பக்கம் போனது இல்லை. கணவரின் வீட்டார் யாரும் கோவைல இல்லாததுனால, தனிக்குடித்தனம் தான். தனிக்குடித்தனம் போன முதல் நாள், காலையில் உப்புமா செய்யனும். தெரியாதுனு சொல்றதுக்கு பிரஸ்டிஜ். வெங்காயம் எல்லாம் கட் பண்ணி வச்ச அப்புறம், மெதுவா அம்மாக்கு போன் பண்ணி கேட்டேன். நான் போன் பண்ணுவேனு தெரிஞ்சோ என்னமோ அம்மா ஒரே ரிங்ல போன் எடுத்துட்டாங்க. என்ன என்ன செய்யனும்னு அம்மா சொல்ல நான் குறிச்சு வச்சுட்டேன். ஆனா அம்மா சேமியா அளவு சொல்லையே. அது என் தப்பா என்ன. எங்க வீட்ல நிறைய பேர் இருப்போம். ஒரு பேக்கட் முழுசா போட்டு தான் நான் பார்த்திருக்கேன். ஆனா இங்க ரெண்டு பேருக்கு எத்தன போடனும்னு யோசிக்க எல்லாம் அறிவு இல்லை. அதே ஒரு பேக்கட் போட்டு செஞ்சு, பாத்திரம் நிறஞ்சப்புறம் தான் மண்டைக்கு ஏறுச்சு, நம்ம மடத்தனம். அப்புறம் மதியம் சாம்பார் வைக்கனும். பருப்பை எடுத்தேன். எது துவரம் பருப்பு, எது கடலை பருப்புனு தெரியாது. மறுபடியும் போன். இந்த தடவை போன் போட்டா அம்மா சம்பந்தம் இல்லாம எதோ பேச, அப்புறம் தான் தெரிஞ்சது,ஊர்ல இருந்து வந்த எங்க நாத்தனார் பக்கத்தில உட்கார்ந்திருந்ததுனால என்ன guide பண்ண முடியலை. இது வேலைக்கு ஆவாதுன்னு, எங்க வீட்ல ரொம்ப நாளா வேலைக்கு இருந்த ஒரு அம்மாவ என்னோட 'சீதனமா' அனுப்பி வச்சு, கத்துக் கொடுத்தாங்க. இத்தன கூத்து பண்ணியும் இவர் ஒன்னுமே சொல்லாதது வேற நமக்கு மண்டை குடையுதா, கேட்டேன் இவர் கிட்ட. "அது தான் உங்க அண்ணன் பொண்ணு பார்க்க வந்தன்னைக்கே சொல்லிட்டாரே, என் தங்கச்சி ஒன்னு மட்டும் நல்லா சமைப்பா.....சுடு தண்ணி நல்லா கொதிக்க வைப்பானு, அதனால, நான் எதுக்கும் தயாராதான் இருந்தேன்னு" சொல்லி மேட்டர சப்புனு ஆக்கிட்டார். இது தான் நாம 'நளபாகினி' ஆன கதை.

5) நீங்கள் கல்லூரியில் எடுத்த பாடத்தைப் பற்றியும் அதை ஏன் எடுத்தீர்கள் அதன் அனுபவங்கள் பற்றி....

BA Economics படிச்சுட்டு இருந்த போது கல்லூரியில, NSS, NCC அது இதுனு ஒன்னு விட்டது இல்லை. அப்படி ஒரு முறை மனநலம் குன்றியவர்களுக்கான ஒரு காப்பகத்துக்கு போன போது தான் BA முடிச்ச அப்புறம் மேல முதுநிலை பட்டப்படிப்பா Social Work படிக்கனும்னு தோனுச்சு. அப்ப தமிழ்நாட்டில 5 கல்லூரியில தான் இந்த பாடம் இருந்துச்சு. கோவை, மதுரை மற்றும் சென்னை. கோவைல PSG Arts ல சேர்ந்து படிச்சேன். நான் எடுத்த பாடம் MSW (Medical and Psychiatric Social Work) அருமையான பாடதிட்டங்கள். வாரத்திற்கு மூன்று நாட்கள் களப்பணி. இந்த இரண்டு வருட முதுநிலை படிப்பில நிறைய கத்துட்டேன். படிப்பின் ஒரு பகுதியா பெங்களூர் NIMHANS ல மூனு மாசம் இருந்து வேலை பார்த்தது மறக்க முடியாது. அப்ப அங்க தங்கி வைத்தியம் பார்த்த ஒரு காபரே நடனப் பெண்ணும், மற்றொரு பேராசிரியரும் மறக்க முடியாதவர்கள்.

மக்களுடன் மக்களா வேலை செய்ய முடியுது, கடைநிலை மக்கள் வரை போய் பிரச்சனைகளை அலசி ஆராய முடியுது. விளிம்பு நிலை மக்களின் துயரங்களின் காரணங்களை உணர முடியுது. அதே சமயம் இந்தக் களப்பணி அனுபவத்த வச்சு மேல கொள்கை முடிவுகளிலும் எங்கள் கருத்தை சொல்ல முடியுது. முழுமனதோட, ஆர்வமாதான் இதுல வேலை செய்யறேன்.

நம்ம அண்ணன்மார்கள்/தம்பிமார்கள் எல்லாம் சுடர பெண்களே கொஞ்ச நாளைக்கு வச்சுக்கோங்கன்னு தாராள மனசோட சொன்னதுனால அடுத்து இந்த சுடர நம்ம பொன்ஸ் கிட்ட கொடுக்கிறேன்..

1) உங்க அனுபவத்தில, பணி புரியும் பெண்களுக்கு 'Glass cieling' இருக்கிறத நீங்க உணர்ந்து இருக்கீங்களா?... அப்படி இருந்தா அத தாண்டி வர பெண்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள்.

2) மென்பொருள் நிறுவனங்களில் பணி புரிய பெண்களுக்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஆண்களுக்கே சில சமயம் சவாலா இருக்கும் போது, வேலைப் பளு, மன அளுத்தம், இவற்றை சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

3) சமூக விழிப்புணர்வோட சில நல்ல காரியங்களை செய்துட்டு வரீங்க- வாழ்த்துக்கள்.. அதை இன்னும் நல்லா, அனைவரையும் ஈடுபடுத்தி செய்யறதுக்கு ஏதேனும் திட்டம் வச்சுட்டு இருக்கீங்களா?

4)கணினி தவிர உங்களை ஓரிடத்தில் உட்கார வைக்கும் வேறு விஷயங்கள்

5) வலைப்பதிவு உலகில என்ன புதுமை செய்ய முடியும்...இப்ப நிறைய பேர் புதுசா வர ஆரம்பிச்சு இருக்காங்க... இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினக்குறீங்க..

அப்பாடா....பொன்ஸ் இனி உங்க பாடு....

கேள்விகளும் பதிலும் அரைவேக்காட்டுததனமா இருந்தா பொறுத்துக்குங்க மக்களே...
நன்றி

Thursday, March 08, 2007

தேவைகள்....ஆசைகள்

பொய் புரட்டு
பகற்கனவுகளை மீறி
உலகம் அழகானதுதான்


அவலங்களை கடைவிரித்து நியாயம் கேட்பதாய், பிச்சைபாத்திர பதிவாய் இதை இட எனக்கு விருப்பமில்லை. படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அலசப்பட்ட ஒரு விஷயம் தான் இது. மனித குலத்தின் சரிபாதி, ஆகக்கூடிய அத்தனை வகையான அடக்குமுறைகளுக்கும் ஆளாகி, அதை நிலைநிறுத்த மேற்கொள்ளும் வன்முறைகளை காலங்காலமாய் அனுபவித்து வருகையில், மனிதகுலம் நாகரீகத்தின் உச்சானிக்கொம்பில் ஆடிக் கொண்டிருப்பதாய் தம்பட்டம் அடிப்பது கேலிக்கூத்து என்பதை என்று தான் உணரப் போகிறோம்?

சமுதாயத்தில் சரி பாதியினர் துன்பங்களுக்கும் வன் முறைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் போது, அச்சமுதாய வளர்ச்சிகான முயற்சிகளில் ஒரு இலக்கை அடைவது சாத்தியமில்லை

இன்றுவரை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்த கொடுமைகள், அதன் சுபாவம், இவை எல்லாம் நேர்மையாக பதியப் பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம். இதைபற்றி எல்லாம் விரிவாக சிந்திக்கவும், காரணகாரியங்களை பற்றி அலசவும் இன்று இரு பாலாறும் தொடர்ந்து செயல்பட்டு வருவது ஆறுதல் அளிக்கும் ஒரு விசயம். இந்த போராட்டங்கள் கூர்மை அடைந்து பல வெற்றிகளை பார்த்து இன்று பெண்களின் நிலையில் மாற்றம் வந்திறுப்பதையும் யாரும் மறுக்க முடியாது. சமீப காலங்களில் இதன் வலியை உணர்ந்தவர்கள், போராடவும், செயல்படவும் ஆரம்பித்திருப்பது காலத்தின் கட்டாயம் மற்றும் தேவை என்றே நினைக்கிறேன்.


இவர்களின் ஒருமுகப்பட்ட உழைப்பின் விளைவும் வெற்றியும் நகர்புற சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கான சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. நகரங்களைத் தாண்டினால் பெண்களின் நிலமை........வேண்டாம் எனக்கு கோவம்தான் வருக்கிறது.

அதற்காக நகரங்களைத் தாண்டி முயற்சிகளோ, அதை செயல்படுத்தும் போராளிகளோ இல்லையென்று அர்த்தமில்லை. சாதிக்கவும் முன்னேறவும் ஆசையும் உத்வேகமும் உள்ள பெண்கள் இல்லை என்று சொல்ல முடியாது படிக்காத பாமர 'சின்ன பிள்ளை' யால் ஒரு களஞ்சியத்தை உருவாக்கிக் காட்ட முடிந்தது. நாட்டு நலனை முன்னிறுத்தி ஒரு 'துர்காபாய்'யால் போர்முனையில் 35 ஆண்டுகளாக மருத்துவராய் பணிசெய்ய முடிந்தது. ஆனால் இவர்கள் மிகச்சொற்பமே, இன்றைய தேவை இவர்களை போன்ற ஆயிரமாயிரம் சரித்திர நாயகிகள்.

ஹரியானா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் நேற்று நடந்த பெண்களுக்கான பயிற்சி முகாமில், தங்களின் எதிர்கால கனவுகளை பகிர்ந்து கொண்டனர் அங்கு வந்த கிராமத்து பெண்கள். அரசு அதிகாரிகளும், கிராம பெரிய தலைகளும் கூடியிருந்த அந்த வளாகத்தில் இரண்டு பெண்கள் எழுந்து, ஒருவர் தான் நாடாளுமன்ற உருப்பினர் ஆக ஆசை படுவதாகவும், மற்றொருவர் தான் முதலமைச்சர் ஆக விரும்புவதாகவும் சொன்னது அனைவரையும் ஆச்சிரியப் படவைத்தது. ஏதோ கேட்டதற்காக அவர்கள் சொன்னதாக தெரியவில்லை. அதிகாரிகள் கேட்ட கேள்விகளை தொடர்ந்து, அவர்கள் கொடுத்த விளக்கத்தையும், ஊர்புரங்களில் நிலவும் பிரச்சனைகள் பற்றிய அவர்களின் புரிதலையும், நாட்டு நடப்பை அவர்கள் கூர்ந்து கவனிப்பதையும் பார்க்கும் போது, வாய்ப்பு கிடை(கொடு)த்தால் அரசியலிலும் இவர்கள் சாதிப்பார்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. பெண் குழந்தை பிறந்தால் உதவித் தொகை என்ற பெயரில் அதற்கு பிச்சை இடும் வேலையை செய்வதுடன் மட்டும் நிற்காமல், அவளின் படிப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் ஏதாவது செய்தால், உண்மையிலேயே பெண் சிசு கொலை அகற்றப்படலாம்.

இலங்கையாய் இருந்தாலும்,ஈராக்காய் இருந்தாலும் உலகலாளவிய அளவில் பெண்கள் மீது ஏவப்படும் எளிமையான அடக்குமுறை, பாலியல் வல்லுறவு. இலங்கையில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், மனித உரிமை அத்து மூறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை நாம் அறிவோம். வீடுகளையும் உறவுகளையும் இழந்து, மற்றவரின் ஆதரவில் வாழும்போது, வயது வித்தியாசமில்லாமல், பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுமைகளை படிக்கிற பொழுதில் துடித்துப்போகிற நாம் பின் அதை ஒரு செய்தியாக ஜீரணித்து மறந்துபோவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்.

இது போல நடக்கும் பாலியல் வன்முறைகளே, பெண்ணை வீட்டோடு முடக்கக் காரணமாக இருந்து வருகிறது. பெண்ணை உடல்சார்ந்து காக்கும் பெரிய பொறுப்பை மனதில் வைத்தே பெற்றோர்கள், (ஆசை இருந்தாலும்), வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க தயங்குகின்றனர். இதை சொல்லி சொல்லி வளர்க்கும் இந்த சமூகம், அவளை, தன்னை தானே காக்க முடியாதவளாய், பிறரை சார்ந்து இருக்கும் ஒரு சூழ்நிலையில் தள்ளிவிடுவது நாம் பார்ப்பது தானே.

இப்பொழுது மருத்துவத் துறைக்கு சவாலாக இருக்கும் ஒரு பிரச்சனை எய்ட்ஸ். இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருப்பது வேதனையான விஷயம். குறிப்பாக ஆப்ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பாதிக்கப்பட்ட பெண்களில், திருமணமாகி தன் கணவனிடம் மட்டுமே உடலுறவு வைத்து இருக்கும் பெண்கள் தான் அதிகம். தன் கணவன் தவறான வழியில் செல்கிறான் என்று தெரிந்திருந்தும், தங்களை பாதுகாத்துக் கொள்ள, இந்தப் பெண்களுக்கு வாய்ப்புகள்/ உரிமை குறைவு. இவர்களும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் கணவனையும் இழந்து, சில சமயங்களில் குழந்தையையும் இழந்து, கணவர் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு வேண்டா விருந்தாளியாக தாய் வீட்டில் உட்கார்ந்திருப்பது கொடுமை. இதையும் தாண்டி எதிர்நீச்சல் போட்டு சிரித்த முகத்துடன் நம்மிடையே வலம் வரும் எண்ணற்ற சகோதரிகளைப் பார்த்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்...ஹ்ம்ம்ம்...

இன்று உலகத்தில், ஒவ்வொறு மூன்று பெண்களுக்கும், ஒரு பெண், தனது நெருங்கிய சொந்தத்தினால் ஏதாவதொரு வன்முறைக்கு ஆளாகிறாள் என்று WHO அறிக்கை ஒன்று கூறுகிறது.

இதை எல்லாம் மனதில் வைத்து, அங்கங்கே நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளின் விளைவுகளை கருத்தில் கொண்டு, எந்தந்த விதத்தில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நினைவில் நிறுத்தி ஒரு புதிய சட்டம், 2005ல் அமுலுக்கு வந்தது.பெண் உரிமைச் சாத்தியப்பாட்டை உறுதிப்படுத்தி, பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக குடும்ப வன்முறை சட்டம்- (Domestic Violence Act) பல ஆண்டுகளின் சர்ச்சைக்கு பின்னர் ஒரு வழியாக அமுலாக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின் தனித்துவம்.

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பல இருந்தாலும், இந்த குறிப்பிட்ட சட்டம் குடும்ப வன்முறையை வெகுவாக குறைக்கவும், வழக்கு நடக்கும் நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடத்தையும் உணவையும் வழங்க வழி செய்கிறது.
  • உடலியல் வன்முறை, பாலியல் வன்முறை மனரீதியிலான கொடுமைகள், சொல் வன்முறை, பொருளாதார வன்முறை ஆகிய அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. (முன்பு அவ்வாறு இல்லை)

  • வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள், நீதி வழங்கப்படும்.

  • பாதிக்கப்பட்ட பெண், தனக்கு எது பாதுப்பான இடம் என்று நினைக்கிறாளோ அங்கு தங்க கோர்ட் அவளுக்கு அனுமதி அளிக்கிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டுள்ள "Protection Ofiicers" ன் பொறுப்பு.

  • வழக்கு முடியும் வரை சம்பத்தப்பட்ட குடும்பத்தாரின் வீட்டில் இருக்கலாம் என்றும், அவளின் உணவு மற்ற செலவுகளை அந்த குடும்பமே எற்றுக் கொள்ளவேண்டும் என்றும் இந்த புதிய சட்டம் கூறுகிறது.
பெண்கள் தங்களின் சுயத்தை இழந்து, வன்முறையின் கொடுமையால் தங்களின் உற்பத்தி திறனை இழந்து,கொள்கை முடிவுகளில் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இந்த சமுதாயத்தில் வாழ்வது அனைவரும் அறிந்த, புரிந்த ஒன்று. அதனை சரி செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வேண்டிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

முயற்சிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், பிரச்சனைகளை எதிர்த்து வாழ நம்முள் திறமையை வளர்த்துக் கொள்வது ஒரு நிலையான தீர்வை கொடுக்கும். நம்மை பலவீனப் படுத்தும் புலம்பல் எந்த விதத்திலும் நமக்கு உதவாது என்பது என் தனிப்பட்ட எண்ணம். நம் உரிமையை உரிய களத்தில், நேர்மையாக, உரிய விதத்தில் தெரிவிக்க நாம் தயங்க வேண்டியது இல்லை.

உறுதி, திறமை, நேர்மையான உழைப்பு, இவைகளுடன் உறவுகளின் அன்பும் ஆதரவும் இருந்தால் சிகரத்தை எட்டுவது எந்தப் பெண்ணுக்கும் கடினமில்லை.