Friday, March 09, 2007

தலை நகரிலிருந்து தலை நகருக்கு - சுடர்..

தேன்கூடு சாகரனுக்கு அஞ்சலி

என்னடா அம்மிணி ரொம்ப அக்கரையோட காலங்காத்தால கை நல்லா இருக்கா, ஆபீஸ் போறீங்களானு, லீவ் போட்டுட்டு இங்க வரீங்களான்னு கேக்குதுன்னு பார்த்தா.. ம்ம்ம்.. அன்புத் தொல்லை, பாச மழை... விஷயம் வருது மெதுவா..ஹ்ம்ம்ம்

1) பெண்ணாப் பொறந்துட்டோமேன்னு நினைச்சதுண்டா ? இல்லைன்னா ஏன்? ஆமாம் ன்னா ஏன்? எந்தந்த சமயத்தில் அப்படி தோன்றியதுன்னு சொல்லுங்க.

இல்லை...ஒரு போதும் வருத்தப் பட்டது இல்லை. ஒரு பெண்ணாக பிறந்ததுனால நான் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மாறா சில சலுகைகள் தான் அனுபவிச்சுசிறுக்கேன்...:-)).. பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, நான் ராணி தான். என் கணவரை விட அவரின் சொந்தங்களிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். அதே போலத்தான் அவர்களும். அம்மா, அப்பா, அண்ணன், தோழிகள், நன்பர்கள்னு எனக்கு அமைந்த உறவுகள் தான் இதற்கு காரணம். எதிர்பாராத நிகழ்வுகள், ஏற்ற தாழ்வுகள், ஏமாற்றங்கள், தோல்விகள், வருத்தம் னு எல்லாம் பார்த்திருக்கேன். ஆனா அது எல்லாம் நான் பெண்ணா பிறந்ததுனால தான் நடந்துன்னு நினைக்க முடியலை. நான் படிக்கனும்னு ஆசப்பட்ட படிப்பு படிக்க முடிஞ்சது. திருமணத்திற்கு முன், வெளியூர்ல வேலை கிடைச்சப்போ, மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், அப்பா சம்மதம் தெரிவிச்சு அனுப்பி வ்ச்சார். திருமணத்திற்கு பின் இப்ப தில்லியில வேலை கிடைச்சதும் கணவர் சம்மத்தோட இங்க வாழ்கைய ஆரம்பிச்சிருக்கேன். ஆமாம், இது புனர் ஜென்மம் தான். இப்படி நான் ஆசப்பட்டது எல்லாம் நடந்திருப்பதே ஒரு பெண்ணா நான் எடுத்த முயற்சிகளுக்கு கிடைச்ச அங்கீகாரம் தான் அப்படீங்கிறத நான் இங்க வந்த பின் தான் உணர முடிஞ்சது.


2.ஒரு நாள் ப்ரைம் மினிஸ்டர் ஆனா என்ன எல்லாம் திட்டம் கொண்டுவருவீங்க..

அட சாமி....ஹ்ம்ம்ம்..
THINK GLOBALLY AND APPLY/ACT LOCALLY

நாட்டின் முதுகெலும்பாய் இருக்கும் விவசாயம் செழிக்க சிறந்த வல்லுனர்கள் கொண்டு புதிய உத்திகளை/தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கச்செய்வேன்.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வேன். அது இனி நடக்காமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அதை அனைத்தும் செய்ய தயங்கமாட்டேன்.

சில அமைச்சரவைகள் பிரத்தியேகமா பெண்கள் தலைமையில இயங்கச் செய்வேன்.

அரசியல்னா என்ன, ஒரு சிறந்த அரசியல்வாதி தன் செயல்பாட்டினாலும், நோக்கத்தினாலும் எப்படி எல்லாம் சமுதாயத்தில ஒரு மாற்றத்தை உண்டு பண்ண முடியும், அதற்கான தகுதிகள் என்ன- இது எல்லாம் பாடதிட்டத்திலயே சேர்த்து ஆரோக்கியமான விதத்தில இளைஞர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்க வழிவகுப்பேன். ஒரு சிறந்த அரசால் சமுதாயத்தில வேகமான மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தகுதி வாய்ந்த இளைஞர்கள் அரசியலில் நுழைய ஊக்கப்படுத்துவேன். (கொஞ்சம் ஓவரா இருக்கோ...)

3)சமூக முன்னேற்றத்திற்கு நீங்க என்ன எல்லாம் முயற்சி செய்யறீங்க? மத்தவங்க என்ன எல்லாம் செய்யணும் ? எதாச்சும் ஐடியா...

அவ்வளவு பெரிய வேலை எல்லாம் நான் செய்யலைங்க. இப்ப நான் ஈடுபட்டிருப்பது எச்ஐவி எய்ட்ஸ் தடுப்புப் பணியில் மட்டும். நம் நாட்டில எச்ஐவியால பாதிக்கப்பட்டவர்களில் 14ல் இருந்து 45 வயதிக்கு உட்பட்டவங்க தான் அதிகம். இந்த வயசுல உள்ளவங்க பாதிக்கப்பட்டா, நாட்டின் உற்பத்திறன் குறைந்து, பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவுகள் கூடிட்டே போகும். இன்று ஆப்பிரிக்காவில் குழந்தைகளை கவனிப்பதற்கு அவர்களின் பெற்றோர்கள் உயிருடன் இல்லை. தாத்தா பாட்டியிடம் சிலர், சர்ச்களில் சிலர் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கல்விக்கும் மற்ற செலவுகளுக்கும் பணம் இல்லாமல் பெண் குழந்தைகள் தங்கள் உடலை விற்கும் அவலத்திற்கு ஆளாகி, பின், அவர்களும் எச்ஐவியால் பாதிக்கப்படுவது அங்கு சகஜமான ஒரு விஷயம். இந்த நிலை இந்தியாவிற்கு ஏற்படாமல் இருக்க நம் அரசும், தொண்டு நிறுவணங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருகிறேன். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் மேலும் பணியாற்ற விருப்பம்.

சமுதாய முன்னேற்றத்தில் மற்றவர்கள், தங்களால் முடிந்ததை செய்யலாம். சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்காமல் இருப்பதே பெரிய உதவிதான். உங்க வழிவழியாய் பதிவில் சொன்னது போல், ஒரு தாய் தரமான சந்ததியை உருவாக்க முடியும். அதற்கு பெண்கல்வி மிகவும் அவசியம். கல்விக் கடவுளாய் சரஸ்வதிய கும்பிடும் நம்ம நாட்டில தான பெண்கல்வி என்பது இன்றும் ஒரு பலருக்கு எட்டா கனியாவே இருக்குது.

Give a man a fish and he will eat for a day. Teach him how to fish and he will eat for a lifetime. இது நம்ம எல்லாரும் கேள்வி பட்டிருக்கோம். ஒருவருக்கு உதவித்தொகை வழங்குவதோடு மட்டும் நிற்காமல், உதவி வேண்டி வருபவர்கள் தன்மானத்துடன் வாழ வழி செய்யலாம். வெறும் பணம் உதவி மட்டும் செய்யாம, அவங்க எப்படி படிக்கிறாங்கன்னு தொடர்ந்து கவனிச்சுட்டு வரலாம். இதனால அவங்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், உணர்வும் வரும். இது நினைச்ச பார்த்தா கடினமான ஒன்றாத்தான் இருக்கும். ஆனா செயல் படுத்தும் போது அதனால் கிடைக்கும் திருப்தியும், பலனும், மன நிறைவும் செய்து பார்த்தால் தான் தெரியும். வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு செய்தால் கூட போதும். முயன்று பாருங்களேன்.

4. சமையல் கத்துக்கிட்ட அனுபவம் சொல்லுங்க[.நல்ல சிரிப்பான கதை அது}

(லட்சுமி... இருங்க உங்களை அப்புறம் கவனிச்சுக்குறேன். ..)

நீங்களாவது நான் சமையல் 'கத்துட்டேன்னு' சொல்லிர்ரீங்களே.. அதுவே பெரிய விஷயம்.. டேங்ஸ்.. கல்யாணத்திற்கு முன்னால சமையலைறை பக்கம் போனது இல்லை. கணவரின் வீட்டார் யாரும் கோவைல இல்லாததுனால, தனிக்குடித்தனம் தான். தனிக்குடித்தனம் போன முதல் நாள், காலையில் உப்புமா செய்யனும். தெரியாதுனு சொல்றதுக்கு பிரஸ்டிஜ். வெங்காயம் எல்லாம் கட் பண்ணி வச்ச அப்புறம், மெதுவா அம்மாக்கு போன் பண்ணி கேட்டேன். நான் போன் பண்ணுவேனு தெரிஞ்சோ என்னமோ அம்மா ஒரே ரிங்ல போன் எடுத்துட்டாங்க. என்ன என்ன செய்யனும்னு அம்மா சொல்ல நான் குறிச்சு வச்சுட்டேன். ஆனா அம்மா சேமியா அளவு சொல்லையே. அது என் தப்பா என்ன. எங்க வீட்ல நிறைய பேர் இருப்போம். ஒரு பேக்கட் முழுசா போட்டு தான் நான் பார்த்திருக்கேன். ஆனா இங்க ரெண்டு பேருக்கு எத்தன போடனும்னு யோசிக்க எல்லாம் அறிவு இல்லை. அதே ஒரு பேக்கட் போட்டு செஞ்சு, பாத்திரம் நிறஞ்சப்புறம் தான் மண்டைக்கு ஏறுச்சு, நம்ம மடத்தனம். அப்புறம் மதியம் சாம்பார் வைக்கனும். பருப்பை எடுத்தேன். எது துவரம் பருப்பு, எது கடலை பருப்புனு தெரியாது. மறுபடியும் போன். இந்த தடவை போன் போட்டா அம்மா சம்பந்தம் இல்லாம எதோ பேச, அப்புறம் தான் தெரிஞ்சது,ஊர்ல இருந்து வந்த எங்க நாத்தனார் பக்கத்தில உட்கார்ந்திருந்ததுனால என்ன guide பண்ண முடியலை. இது வேலைக்கு ஆவாதுன்னு, எங்க வீட்ல ரொம்ப நாளா வேலைக்கு இருந்த ஒரு அம்மாவ என்னோட 'சீதனமா' அனுப்பி வச்சு, கத்துக் கொடுத்தாங்க. இத்தன கூத்து பண்ணியும் இவர் ஒன்னுமே சொல்லாதது வேற நமக்கு மண்டை குடையுதா, கேட்டேன் இவர் கிட்ட. "அது தான் உங்க அண்ணன் பொண்ணு பார்க்க வந்தன்னைக்கே சொல்லிட்டாரே, என் தங்கச்சி ஒன்னு மட்டும் நல்லா சமைப்பா.....சுடு தண்ணி நல்லா கொதிக்க வைப்பானு, அதனால, நான் எதுக்கும் தயாராதான் இருந்தேன்னு" சொல்லி மேட்டர சப்புனு ஆக்கிட்டார். இது தான் நாம 'நளபாகினி' ஆன கதை.

5) நீங்கள் கல்லூரியில் எடுத்த பாடத்தைப் பற்றியும் அதை ஏன் எடுத்தீர்கள் அதன் அனுபவங்கள் பற்றி....

BA Economics படிச்சுட்டு இருந்த போது கல்லூரியில, NSS, NCC அது இதுனு ஒன்னு விட்டது இல்லை. அப்படி ஒரு முறை மனநலம் குன்றியவர்களுக்கான ஒரு காப்பகத்துக்கு போன போது தான் BA முடிச்ச அப்புறம் மேல முதுநிலை பட்டப்படிப்பா Social Work படிக்கனும்னு தோனுச்சு. அப்ப தமிழ்நாட்டில 5 கல்லூரியில தான் இந்த பாடம் இருந்துச்சு. கோவை, மதுரை மற்றும் சென்னை. கோவைல PSG Arts ல சேர்ந்து படிச்சேன். நான் எடுத்த பாடம் MSW (Medical and Psychiatric Social Work) அருமையான பாடதிட்டங்கள். வாரத்திற்கு மூன்று நாட்கள் களப்பணி. இந்த இரண்டு வருட முதுநிலை படிப்பில நிறைய கத்துட்டேன். படிப்பின் ஒரு பகுதியா பெங்களூர் NIMHANS ல மூனு மாசம் இருந்து வேலை பார்த்தது மறக்க முடியாது. அப்ப அங்க தங்கி வைத்தியம் பார்த்த ஒரு காபரே நடனப் பெண்ணும், மற்றொரு பேராசிரியரும் மறக்க முடியாதவர்கள்.

மக்களுடன் மக்களா வேலை செய்ய முடியுது, கடைநிலை மக்கள் வரை போய் பிரச்சனைகளை அலசி ஆராய முடியுது. விளிம்பு நிலை மக்களின் துயரங்களின் காரணங்களை உணர முடியுது. அதே சமயம் இந்தக் களப்பணி அனுபவத்த வச்சு மேல கொள்கை முடிவுகளிலும் எங்கள் கருத்தை சொல்ல முடியுது. முழுமனதோட, ஆர்வமாதான் இதுல வேலை செய்யறேன்.

நம்ம அண்ணன்மார்கள்/தம்பிமார்கள் எல்லாம் சுடர பெண்களே கொஞ்ச நாளைக்கு வச்சுக்கோங்கன்னு தாராள மனசோட சொன்னதுனால அடுத்து இந்த சுடர நம்ம பொன்ஸ் கிட்ட கொடுக்கிறேன்..

1) உங்க அனுபவத்தில, பணி புரியும் பெண்களுக்கு 'Glass cieling' இருக்கிறத நீங்க உணர்ந்து இருக்கீங்களா?... அப்படி இருந்தா அத தாண்டி வர பெண்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள்.

2) மென்பொருள் நிறுவனங்களில் பணி புரிய பெண்களுக்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஆண்களுக்கே சில சமயம் சவாலா இருக்கும் போது, வேலைப் பளு, மன அளுத்தம், இவற்றை சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

3) சமூக விழிப்புணர்வோட சில நல்ல காரியங்களை செய்துட்டு வரீங்க- வாழ்த்துக்கள்.. அதை இன்னும் நல்லா, அனைவரையும் ஈடுபடுத்தி செய்யறதுக்கு ஏதேனும் திட்டம் வச்சுட்டு இருக்கீங்களா?

4)கணினி தவிர உங்களை ஓரிடத்தில் உட்கார வைக்கும் வேறு விஷயங்கள்

5) வலைப்பதிவு உலகில என்ன புதுமை செய்ய முடியும்...இப்ப நிறைய பேர் புதுசா வர ஆரம்பிச்சு இருக்காங்க... இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினக்குறீங்க..

அப்பாடா....பொன்ஸ் இனி உங்க பாடு....

கேள்விகளும் பதிலும் அரைவேக்காட்டுததனமா இருந்தா பொறுத்துக்குங்க மக்களே...
நன்றி

25 comments:

பங்காளி... said...

இதான் சுடரா....

நான் படிக்கிற முதல் சுடர் தொடர் இதான்....நல்ல முயற்சி.

இருந்தாலும் உங்க வ்வீட்டுக்காரர்...ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கனும்....ம்ம்ம்ம்ம்

துளசி கோபால் said...

எல்லா பதிலும் முழுவேக்காட்டுத்தனமாத்தான் இருக்கு:-))))

அட......நல்லா வ(வெ)ந்திருக்குன்னு சொல்றேங்க:-))))

கானா பிரபா said...

ஒலிம்பிக் சுடர் ரேஞ்சுக்கு இருந்தது, அருமை

சென்ஷி said...

// பங்காளி... said...
இருந்தாலும் உங்க வ்வீட்டுக்காரர்...ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கனும்....ம்ம்ம்ம்ம் //


//துளசி கோபால் said...
எல்லா பதிலும் முழுவேக்காட்டுத்தனமாத்தான் இருக்கு:-))))

அட......நல்லா வ(வெ)ந்திருக்குன்னு சொல்றேங்க:-))))//


இதுக்கு மேல நான் என்ன சொல்றது?

//2.ஒரு நாள் ப்ரைம் மினிஸ்டர் ஆனா என்ன எல்லாம் திட்டம் கொண்டுவருவீங்க..
அட சாமி....ஹ்ம்ம்ம்..THINK GLOBALLY AND APPLY/ACT LOCALLY
நாட்டின் முதுகெலும்பாய் இருக்கும் விவசாயம் செழிக்க சிறந்த வல்லுனர்கள் கொண்டு புதிய உத்திகளை/தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கச்செய்வேன்.
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வேன். அது இனி நடக்காமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அதை அனைத்தும் செய்ய தயங்கமாட்டேன்.
சில அமைச்சரவைகள் பிரத்தியேகமா பெண்கள் தலைமையில இயங்கச் செய்வேன்.
அரசியல்னா என்ன, ஒரு சிறந்த அரசியல்வாதி தன் செயல்பாட்டினாலும், நோக்கத்தினாலும் எப்படி எல்லாம் சமுதாயத்தில ஒரு மாற்றத்தை உண்டு பண்ண முடியும், அதற்கான தகுதிகள் என்ன- இது எல்லாம் பாடதிட்டத்திலயே சேர்த்து ஆரோக்கியமான விதத்தில இளைஞர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்க வழிவகுப்பேன். ஒரு சிறந்த அரசால் சமுதாயத்தில வேகமான மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தகுதி வாய்ந்த இளைஞர்கள் அரசியலில் நுழைய ஊக்கப்படுத்துவேன். (கொஞ்சம் ஓவரா இருக்கோ...)//

கட்சியில எனக்கு ஏதும் பொறுப்பு கிடைக்குமா?

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

[பங்காளி தொடர்ந்த வாசிப்பை ஏன் நிறுத்திவிட்டீர்கள்? அவ்வளவு மோசமாகவே எழுதிவிட்டேன்.]

மங்கை கேள்விகேட்கத்தான் தெரியும் என்பார்களே கேட்பது தான் எனக்கு சிரமமாகத் தெரிந்தது. கடைசி கேள்வி கேட்ட போது மனநிறைவாய் உணர்ந்தேன்...பதிலைபடித்தும் அதே அதே.
சமையல் கதை கேட்டதற்கு காரணம் உங்கள் நகைச்சுவை உணர்வை எல்லாருக்கும் தெரிவிக்க.
ப்ரைம் மினிஸ்டர் ஆக்கினது திட்டங்கள்
சில கிடைக்குமே புதுசா அதுக்காக..
நிறைவாக இருக்கு... பொன்ஸ்க்கு சுடர் கொடுத்த மங்கையே! அருமையான சுடருக்கு நன்றி நன்றி .

பொன்ஸ்~~Poorna said...

அங்க சுத்தி இங்க சுத்தி என் கையில் போட்டுட்டீங்களா?!!

சரி.. வரேன்...ம்ம்ம்.. என்னத்தச் சொல்ல..

உங்க சமையல் அனுபவம் சூப்பர் :) டில்லி வந்தா மறக்காம முத்துலட்சுமி வீட்ல சாப்பிட்ட பின்னாடி தான் உங்க வீட்டுக்கு வரணும் :-D

ஒரு நாள் பிரதம மந்திரி குறித்த உங்களுடைய யோசனைகள் நல்லா இருக்கு.. ஆனால், ஒரே நாளில் இத்தனையும் செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா? நீங்க தொடங்கிவைத்தாலும் அடுத்த நாள் வர்றவங்க இதைத் தொடருவாங்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு நாள் ப்ரைம் மினிஸ்டர் அப்படின்னா முதல்வன் ஸ்டைல் இல்லங்க பொன்ஸ்...என்னைக்காவது ஒருவேளை நீங்க அப்படி ஒரு போஸ்ட்க்கு போனா அப்படின்னு அர்த்தம். 5 வருஷத்துக்கு தான்.
என்னோட தோழி பதவில இருக்காங்க ன்னு பெருமையா சொல்லிக்குவேன்.
அவங்க போன பதிவுல இருக்கறமாதிரி கிராமத்துபெண் முதல்வரானா பட்டணத்துபெண் மங்கை ப்ரைம் மினிஸ்டர் ஆகலாமேன்னு ....

இலவசக்கொத்தனார் said...

மங்கை, உங்க வீட்டுல இன்னைக்கு மங்கையர் தினம் கொண்டாடினா உங்க பிறந்த நாள் கொண்டாட்டத்தை என்னன்னு சொல்லுவாங்க? !!! :)))

சரி, என்ன இப்படி வார்ப்புருவை மாத்திட்டீங்க? அலைன்மெண்ட் எல்லாம் ஜஸ்டிபைடா இருக்கு. நெருப்பு நரியில் ஒண்ணுமே தெரியலை. கொஞ்சம் அதை மாத்தி அருள் புரியுங்கம்மா.

வல்லிசிம்ஹன் said...

முத்துலட்சுமி கொடுத்த சுடரை நல்லாவே ஏத்திவிட்டீங்க மங்கை.
உங்களைப் பத்தி மேலும் புரியவைத்தது இந்தச்சுடர்.
வாழ்த்துக்கள்.

சிவபாலன் said...

மங்கை

கலக்கல் பதிலகள் .. நல்ல கேள்விகள்...

சுவையாக எழுதியிருக்கீங்க..

பொதுவா உங்க பதிவு சாட்டை அடியாக இருக்கும்.. ஆனால் இது சுவாரசியம் + சாட்டை அடி..

சூப்பர்..

மங்கை said...

பங்காளி

அதென்ன..ம்ம்ம்ம்ம்ம் னு ஒரு இழுவை
கவலை படாதீங்க இப்ப நான் தான் சமச்சு தான் அவர் சாப்பிடறார்..:-))

துளசி...

கருகாம இருந்தா சரி...

நன்றி பிரபா...

சென்ஷி உங்களுக்கு இல்லாமையா... நீங்க தான் இளைஞர் அணி தலைவர்...:-))

மங்கை said...

நன்றி லட்சுமி...

கடைசி கேள்வி எனக்கும் பிடிச்சு இருந்தது...

கேள்வி கேக்கதான் தெரியும்னு நினச்சுட்டு இருந்தோம்.. இப்ப தான் தெரியுது அதுவும் தெரியாதுன்னு...

பொன்ஸ் கேட்ட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க.. நன்றி..

மங்கை said...

பொன்ஸ்

பேசாம இருந்தாலாவது விட்டிருப்பேன்.. இனி விட்டா அது எங்க கொங்கு மண்டலத்துக்கே கேவலம்... வாங்க வாங்க உங்கள guinea-pig ஆக்காம விட மாட்டேன்...:-)))..

ஒரு நாள் பிரதம மந்திரி பற்றிய கேள்விக்கு லட்சுமி பதில் சொல்லிட்டாங்க...

நன்றி

மங்கை said...

இலவசகொத்தனார்

நிறைய பேர் இத சொல்லிட்டாங்க.. மாத்தீறேன்...

'மங்கை' பெயர்-தமிழ்மணத்திற்காக மட்டுமே...:-))...

நன்றி வல்லி, சிவபாலன்..

மங்கை said...

செந்தழல் ரவி said..

கேள்விகளும் பதில்களும் நன்று...!!! பொன்ஸிடம் கேட்ட கேள்விகளும் அருமை...!!


நன்றி ரவி

VSK said...

[நிறை]குடத்திலிட்ட விளக்காய் சுடர் மின்னுகிறது!
வாழ்த்துகள்!

எப்போ தேர்தல்ல நிக்கப் போறீங்க, சொல்லுங்க!

பிரச்சாரம் பண்ண வர நான் ரெடி!
:))

யாழினி அத்தன் said...

அவ்வளவு பெரிய வேலை எல்லாம் நான் செய்யலைங்க. இப்ப நான் ஈடுபட்டிருப்பது எச்ஐவி எய்ட்ஸ் தடுப்புப் பணியில் மட்டும்.

மங்கை, உங்க தன்னடக்கத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உங்க கேள்வி பதிலில் எனக்கு ரொம்ப impressive இருந்தது மேற்கண்ட வாக்கியங்கள். ஒரு involvement இல்லாமல் ஆழ்ந்த மனித நேயம் இல்லாமல் இந்த பணிகளை செய்ய முடியாது. எல்லாருமே அவங்க அவங்க பணிகளை பார்த்துக் கொண்டு, selfish ஆக இருந்தால், suffer ஆகும் மக்களை மீது அன்பும், ஆதரவும் யார் காட்டுவார்கள்? நாளைக்கு அந்த நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதனால், என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் செய்யும் பணி மகத்தானது.

தொடர வாழ்துக்கள்!

மங்கை said...

SK

உங்க ஆசீர்வாத்தில நின்னுட்டாப் போச்சு..நம்ம லட்சுமி தான் கொ.ப.செ

NRI ஓட்டெல்லாம் நீங்க பார்த்துகோங்க...

:-))))....

மங்கை said...

/யாழினி அத்தன் said... //

//தொடர வாழ்துக்கள்!//

நன்றி ரமேஷ்...

நாகை சிவா said...

மங்கை,

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. படிச்சேன். என் விரிவான கமெண்ட் நாளைக்கு. மணியாச்சு இங்க எனக்கு.

கோபிநாத் said...

வணக்கம் மங்கை அக்கா...

\\இது எல்லாம் பாடதிட்டத்திலயே சேர்த்து ஆரோக்கியமான விதத்தில இளைஞர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்க வழிவகுப்பேன்\\

ஆஹா.....சூப்பர் பதில்....உண்மையிலேயே அருமையான நம் நாட்டுக்கு தேவையான பதில்.

\\இந்த நிலை இந்தியாவிற்கு ஏற்படாமல் இருக்க நம் அரசும், தொண்டு நிறுவணங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருகிறேன்\\

பாராட்ட வேண்டிய மங்கை தான் நீங்கள். உங்கள் ஈடுபாட்டை எள் அளவும் குறையமால் தொடருங்கள்.

\\ அதனால, நான் எதுக்கும் தயாராதான் இருந்தேன்னு" சொல்லி மேட்டர சப்புனு ஆக்கிட்டார். \\

நகைச்சுவையுடன் சூப்பரா பதில் சொல்லியிருக்கீங்க ;)))
(இன்னும் உங்கள் சீதனம் இருக்கா? இல்லை அம்மாவீட்டுக்கு அனுப்பிவச்சிட்டிங்களா???)

\\அப்படி ஒரு முறை மனநலம் குன்றியவர்களுக்கான ஒரு காப்பகத்துக்கு போன போது தான் BA முடிச்ச அப்புறம் மேல முதுநிலை பட்டப்படிப்பா Social Work படிக்கனும்னு தோனுச்சு.\\

ம்ம்ம்....எப்படி எல்லாம் படிச்சிருக்கீங்க!!!!

எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதில் கூறியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்

மங்கை said...

சிவா,

நன்றி...உங்க விரிவான கமென்ட் குடுங்க

கோபிநாத்..
பொறுமையா படிச்சு பின்னூட்டினதுக்கு நன்றி

கார்த்திக் பிரபு said...

ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும்

பங்காளி... said...

http://apartamentoterapeutico.wordpress.com/2007/02/15/os-melhores-indibloggies-2006/

இதுல யாரோட பேரோ இருக்காம்....தேடி பாருங்கள்...

வாழ்த்துக்கள்.....

மங்கை said...

கார்த்திக் பிரபு, பங்காளி

நன்றி..

இதில முதல் இடத்தை முதல் இடத்தை பிடித்தது 'பினாத்தல் சுரேஷ்'.. நமக்கு 9 ஆவது இடம்...:-))..

இருந்தாலும் லிஸ்டல் நம்ம பிளாக் வந்தது சந்தோஷம் தான்... நன்றி