Monday, May 24, 2010

கொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் !

தனியார் நிறுவனங்களில், கொள்ளை லாபத்துடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை மருத்துவத்துறை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற போர்வையில் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலைகளுக்கு ஈடாக நம் நாட்டிலும் விற்று வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினரே வாங்கிட தடுமாறும் நிலையில்,கடைநிலை மக்களின் நிலைமையை கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் இந்த மருந்து கம்பெனிகள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கு நம் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கொடுமையும் நடந்து வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவும் நோயாளிகள் தலையில் தானே விழும்.

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடும்
மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு Protectionism என்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் துனை போகிறது என்றால் மிகையில்லை தனியார் நிறுவனங்கள் இப்படி தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடிப்பது நமது அரசுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாமல் இத் தனியார் கொள்ளைக்கு அரசும் உடந்தையாக இருந்து வருவது கொடுமையான கொடுமை..

மருந்துகளின் உற்பத்திச் செலவு என்று பார்த்தால் மிகக் குறைவாகவே ஆகிறது.ஆனால் அதற்கு பின் நடக்கும் சந்தைப் படுத்தும் ஆடம்பரங்கள், ஆராய்ச்சிகள், லாப நோக்கு போன்ற காரணிகள் தான் விலையை உச்சானிக் கொம்பில் கொண்டு போய் விடுகிறது. சமீப ஆண்டுகளில் மருந்து கம்பெனிகளின் அதீத வளர்ச்சியும் அவர்கள் எடுக்கும் லாபமும் இதற்கு சான்று.



ஒரு உதாரணத்திற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன் படும் Atenolol என்ற மருந்து, தற்போது ஒரு அட்டை 20 அல்லது 25 ரூபாயில் மருந்து கடைகளில் கிடைக்கும். அதே மருந்தினை உலக சுகாதார மையத்தின் தரக்கட்டுப்பாடுகளின் படி தயாரித்து ரூபாய் 5 க்கு ஒரு நிறுவனம் தன்னால் இயன்ற வரை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது. இது எப்படி சாத்தியம்? யார் அவர்கள்? அவர்களின் பின்புலம் என்ன?, அதைப் பற்றி சொல்லவே இந்த பதிவு.


லோகாஸ்ட் (Low Cost Standard Therapeutics) என்ற அந்த தனியார் டிரஸ்ட் பரோடாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றை, மிக மிக குறைந்த விலையில் தயாரித்து விற்று வருகிறது. மருந்துகள் தயாரிப்பில் சில எளிய முறைகளை பின்பற்றி அதே உலக தரத்துடன் கூடிய மருந்துகளை விற்று வருகிறது.
குஜராத், மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த மருந்துகள் விநியோகிப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இந்த மருந்துகள் போய் சேருகின்றன. குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் டிப்போக்கள் உள்ளன. கேள்விப்படாத கிராமங்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் இந்த மருந்துகள் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் மருந்து கடைகளில் இதை விற்க ஒப்புதல் பெற்று, மருத்துவர்களிடமும் ஏழை நோயாளிகளுக்கு இதையே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர்.
இதை ஒரு தவமாக செய்து வரும் இவர்கள், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் தொழிளார்களுக்கு நல்ல கூலியையும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்க ஒரு அம்சம். எல்லா செலவும் போக இவர்களுக்கு 10% நிகர லாபம் நிற்கிறதாம். அப்படி இருக்கையில் நம் தனியார் நிறுவனங்கள் பார்க்கும் லாபம்?.........ம்ம்ம்ம்

இதைத்தவிர, சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் லோகாயத் மெடிக்கல் சென்டர் என்ற ஒரு ஆலோசனை மையத்தை புனேவில் நிறுவி இருக்கிறார்கள். இந்த மையத்தின் பணியை கேட்டால் இப்படி கூட நம் நாட்டில் நடக்கிறதா என்று ஆச்சிரியப் பட வைக்கிறது. மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரைக்கும் இயங்கும் இந்த மையம், மருந்து பரிந்துரைத் தாளுடன் வரும் நோயாளிகளுக்கு அவர்களின் நோய் பற்றிய ஆலோசனை வழங்கி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பற்றியும், லோகாஸ்ட் மருந்துகள் பற்றிய தகவல்களையும் வழங்கி வருகிறது.
மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும் முன்னர், நோய் பற்றியும், உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மையம்.

மாஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சில இடங்களில் மொபைல் க்ளீனிக்குகள் அமைத்து 5 அல்லது 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி லோகாஸ்ட் மருந்துகளை வழங்கி வருகிறார்கள்.
இந்தியா மீது படை எடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் படிப்பறிவில்லாத பின் தங்கிய ஏழை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சில உயிர்க்காக்கும் அத்தியாவசிய மருந்துகளை தயாரித்து வழங்கி வருவதில் அவர்களுக்கு வாழ்வாதரமாக இருந்து வருகிறதென்றால் மிகையில்லை.

இதைப் படிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனத்தார் இவர்களின் சேவையினை தமிழகத்திலும் விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த பதிவினை இட்டதன் பலனை அடைந்ததாக நினைப்பேன்.
(http://www.locostindia.com )