Tuesday, September 15, 2009

இனி விருட்சங்களை மட்டுமே விதைப்போம்....


மனதை மிகவும் பாதித்த ஒரு சம்பவம், பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு...

ஒரு பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கும் அந்த பெண்மணி என்னை சந்திக்க விரும்பி அழைத்தார். அவரின் நம்பிக்கைக்கு உரித்தான ஒரு பெண் ஊழியருக்கு ஒரு செய்தியை நான் பக்குவமாய் எடுத்துச் சொல்ல உதவ வேண்டுமென கோரினார்.

அந்த பெண் எச்ஐவி வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்...

இருபதுகளின் நடுவில் இருக்கும் அந்த பெண், திருமணமாகி இரண்டே மாதத்தில் கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். சமீபத்தில் அவரின் வயதான மன நலம் குன்றிய தாயாருக்கு மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு எச்.ஐ.வி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவர, அதிர்ச்சியான நிர்வாகம் அவரது தாயாரின் மருத்துவ கோப்புகளை ஆராய்ந்த போது சமீபத்தில் மற்றொரு மருத்துவமனையில் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்திருப்பதும், அப்பொழுது சம்பந்தப்பட்ட பெண் அவர் தாயாருக்கு ரத்தம் கொடுத்திருப்பது தெரியவும், அந்த பெண்ணுக்கும் ரத்தம் பரிசோதிக்கப்பட அவரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தகவல் அவரின் முதலாளிக்குப் போக, மனித நேயம் கொண்ட அந்த பெண் நிர்வாகி எக்காரணம் கொண்டும் தனது நம்பிக்கையான ஊழியர் மனதளவில் பின்னடைந்துவிடக் கூடாது என்கிற அக்கறையினால் அந்த பெண்ணுக்கு விவரம் கூறி உதவ என்னை அழைத்திருக்கிறார். அவரும் நிர்வாகமும் அந்த பெண்ணுக்கு பின்னால் நிற்கிறார்கள் என்பதை நான் அவருக்கு புரியவைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.

இதற்கு முன்னர் இத்தகைய பணிகளை பல முறை செய்திருந்தாலும், ஒருவரின் வாழ்க்கையை நிமிடத்தில் புரட்டிப் போடும் ஒரு செய்தியை சொல்வது சுலபமல்லவே... இம்மாதிரியான சந்தர்ப்பங்களை எதிர் கொள்வது, எத்தனை வருடங்களானாலும் கடினமான ஒன்றே. அன்றைக்கும் அப்படியே....

செய்தியின் அதிர்ச்சியில் நொறுங்கிப் போன அந்த பெண் வாய்விட்டு அழத்துவங்கினாள், அழுது ஓயட்டும் என பொறுமையுடன் காத்திருந்தேன். இரண்டுமாத திருமண பரிசுதான் இந்த பாதிப்புக்கு காரணமெனெ தெரிந்தது. அந்த பையனைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென இவளின் தாயார் ஒற்றைக் காலில் நின்று திருமணம் செய்வித்திருக்கிறார். உறவின் போது கணவனின் ஆணுறுப்பில் சீழ் வடியும் புண்கள் இருந்திருக்கிறது. அவன் விலைமாதர்களிடன் சென்றிருப்பதாகவும் கூறியிறுக்கிறான். உறவுக்கு விருப்பமில்லாவிட்டாலும், தன்னை சந்தேகப் படுவானோ என்கிற தயக்கத்தில் உறவுக்கு சம்மதித்திருக்கிறாள். இதை எப்படி வெளியே சொல்வது என்கிற பயம். இது நம் பெண்கள், படித்தவர்களானாலும் படிக்காதவர்களானாலும், முடிவெடுப்பதில் தயக்கமே காட்டுகிறார்கள். சிறு வயதில் இருந்து நம் பெண்கள் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு மன பக்குவதை இயற்கையாகவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ம்ம்ம்


விருப்பமில்லாத அல்லது பொறுத்தமில்லாத இந்த திருமண உறவு இரண்டே மாதத்தில் அறுந்து போனதில், தவறான முடிவெடுத்துவிட்ட குற்ற உணர்ச்சியில் மனதொடிந்த அந்த பெண்ணின் தாயார் மனநோயாளியானதுதான் மிச்சம். அந்த பெண்ணின் சகோதரர்கள் கடமை முடிந்தால் சரி என ஒதிஙகிக்கொண்டிருக்க வேண்டும். ஒரே ஒரு சகோதரியும் அவளின் கணவர் மட்டுமெ இந்த பெண்ணிற்கு ஆதரவு. இதுதான் தற்போதைய நிலமை.

இயலாமையின் உச்சத்தில் வாய்விட்டு அழும் அந்த பெண்ணிற்கு முன்னால் ஆத்திரம், ஆதங்கம் இத்தோடு இயலாமையுடன், உட்கார்ந்திருந்தேன். வாழ வேண்டிய வயதில் ஒரு பெண்ணின் வாழ்க்கை தகர்க்கப் பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம், தான் நினைத்த பையனை ஒற்றைக் காலில் நின்று திருமணம் செய்வித்த தாயா? , கணவணின் உடலுறுப்பில் நோய் தாக்கியிருப்பது தெரிந்தும் விருப்பமில்லாமல் ஆனால் சமூகத்துக்குப் பயந்து உறவுக்கு ஒத்துக்கொண்ட அந்த பெண்ணின் இயலாமையா? கூடப்பிறந்தவளுக்கு பிரச்சினையென்றதும், அவளை தாங்கும் சுமை தங்கள் தலையில் விழுமென சுதாரித்துக் கொண்டு நழுவிய உடன் பிறந்தாரா ?

அழுது ஓய்ந்த பின்னர், மெதுவாக அவளை தேற்றும் பணியினை ஆரம்பித்தேன், வாழ்க்கை குறித்த பார்வைகள் அல்லது வரையறைகளை நாம்தான் வகுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய மற்றவர்களின் கோணத்தில் வாழ்க்கையை வாழ்வதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதை புரியவைக்க முயற்சித்தேன். இது எல்லாம் சொல்வது சுலபம் என்பதையும் நான் அறிவேன். நேற்று வரை வாழ்க்கை என்பது இது தான் என்ற கண்ணோட்டத்தில் வாழ்ந்து வந்த பெண்ணிடம் இந்த வசனங்களை பேசினால் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்லவே.

அவள் இருக்கும் சூழலில் தனக்கு உகந்த வாழ்க்கை இலக்குகளை வகுத்துக் கொள்வதன் அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் பேசப் பேச சிறிது சிந்திக்க தொடங்கினாள்.

பாதிப்பின் எந்த கட்டத்திலிருக்கிறாள் என்பதை கண்டறிவதும், அதன் தொடர்ச்சியாய் எடுத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளை விளக்கிய பின்னர், அவளின் நிர்வாகியும், நிர்வாகமும் அவளுக்கு துணையாய் நிற்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அவளுக்கு மறு திருமணத்திற்கு அவளது சகோதரி ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகவும், திருமணம் செய்யலாமா எனவும் கேட்டாள். உன் நிலமை அறிந்து உன்னை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் ஒருவனை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என சொன்னேன்...எல்லாம் பேசி ஓரளவிற்கு நிஜங்களை ஜீரணிக்கும் மனபக்குவத்திற்கு வந்த பின் நாங்கள் விடைபெறும் தருணத்தில் அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை......

நான் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா ?

ஆவளுள் புதைந்திருக்கும் தாய்மை உணர்வை புரிந்து கொண்டேன். அதை அவளிடம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, குழந்தை பிறந்தால் வரும் பாதகங்களையும் எடுத்துச் சொன்னேன். அவளே சிந்தித்து முடிவெடுக்கட்டும் என்று விட்டு விட்டேன். ஆலோசனை என்றும் வழிகாட்டுதலாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய அவர்களுக்கு பதில் நாம் முடிவெடுக்க கூடாது. இது எதற்கென்றால் இது மாதிரியான மற்றொரு சந்தர்பத்தில் அவர்கள் முடிவெடுக்க தயங்கக் கூடாது.

பெண் தன் குடும்ப மற்றும் சமுதாயத்திற்காக தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக்கொள்கிறாள். சில நிர்பந்தங்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன. இது போன்ற நிர்பந்தகளுக்கு பணியாமல், மற்றவர்களிடம் கலந்தாலோசித்து பயப்படாமல் ஒரு தீர்வை காணவேண்டும். இந்த மன உறுதியை சிறு வயதிலிருந்தே பெண்களுக்குள் வளர்த்த வேண்டும்.