Saturday, September 23, 2006

எல்லாரும் படிக்கனும்னா,...

ஒரு பள்ளியில் ஆசிரியருக்காக குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
கடந்த சில ஆண்டுகளில் நம் நாடு கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்களை கண்டிறிருக்கிறது. இதில் முக்கியமான முன்னேற்றம் என்று சொன்னால், தொடக்கப் பள்ளியில் சேர்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது தான். 6-14 வயதுடைய சுமார் 200 மில்லியன் குழந்தைகளில் 80% குழந்தைகள் ஏதாவது ஒரு கல்வி முறையில் (விதிமுறையான-formal அல்லது முறைசாரா-non-formal education) சேர்ந்து படித்து வருகிறார்கள்.

அனால் ஒரு முழுமையான கல்வி தொழில்நுட்ப கொள்கை இல்லாத காரணத்தால், இன்று கல்வியின் தரம் வேண்டிய அளவு உயரவும் இல்லை, முழுமையாக கடைநிலை மக்களை போய் சேரவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்த புதிய தொழில் நுட்பங்களின் அவசியத்தையும் நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை. இதன் காரணமாக அரசு மேற்கொள்ளும் பல் வேறு திட்டங்கள் பயனில்லாமல் போகிறது.

குழந்தைகளின் சேர்க்கை தொடக்க கல்வியில் அதிகரித்திருந்தாலும், இவர்களில் 52% பேருக்கு, 8 ஆம் வகுப்பிற்கு பின்னர் படிப்பை ஏதாவது ஒரு காரணத்தினால் தொடரமுடியாமல் போகிறது. மீதம் இருக்கும் 48% குழந்தைகளின் attendance rate சராசரியாக 75% தான். அரசின் கணக்கெடுப்புப்படி 5ஆம் வகுப்பு வரை தேறும் மாணவர்களில் 28% பேர் தான் பாடங்களில் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். மற்றவர்களின் கல்வி தரம் கவலை அளிக்ககூடியதாகவே இருக்கிறது. தொண்டு நிறுவணம் ஒன்று மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் மூலம் 7-14 வயதிற்கு உற்பட்ட மாணவர்களில் 35% பேருக்கு பாடத்தில் ஒரு சாதாரண பத்தியை கூட படிக்க முடிவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இத்தனை நிதி ஒதுக்கீடு செய்து, திடங்கள் வகுத்து, அதில் இத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று மார் தட்டி என்ன பயன்.

நம் கல்வியின் தரம் திருப்தியாய் இல்லாததற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வகுப்பில் அளவுக்கு அதிகமான மாணவர்களும் ஆசிரியர் பற்றாக்குறையும் முக்கியமான காரணங்கள்.நம் நாட்டின் சராசரி ஆசிரியர் மாணவன் விகிதம் 40:1 ஆக இருந்தாலும், பீஹார் போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் 84:1 ஆகவே இருக்கிறது. பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்தாலும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவருகிறது சில பள்ளிகள்.14% தொடக்க பள்ளிகளும் 3% உயர் தொடக்க பள்ளிகளும் ஒரே ஒரு ஆசிரியிராலேயே நிர்வகித்து நடத்தப்பட்டு வருகிறது.சராசரியாக 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமே பல பள்ளிகள் இயங்கி வருகிறது.இதிலிருந்து அங்கு பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்.
இதில் இன்னொரு வேடிக்கை. உலக வங்கியும், ஹார்வர்ட் பல்கலைகழகமும் சேர்ந்து நடத்திய ஒரு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, 3700 ( அரசு மற்றும் தனியார் பள்ளிகள்) பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி சென்று சோதனை செய்த போது, 20ல் இருந்து 25 சதவீத ஆசிரியர்கள்களே பள்ளியில் இருந்திருக்கிறார்கள். அப்படியே பள்ளிக்கு வந்தாலும், வந்தவர்களில் 20% பேர் பாடம் எடுப்பதில்லையாம்.இதை எல்லாம் அதிகாரிகள் கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.

அடிப்படை வசதிகளான குடி தண்ணீர், கழிப்பறைகள் போன்றவை சில பள்ளிகளுக்கு இன்னும் ஒரு கணவாகவே இருந்து வருகிறது. 16% பள்ளிகளில் குடி தண்ணீர் வசதி கூட இல்லாமல் இயங்கி வருகிறது. 51% கழிப்பறைகள் இல்லாமல் இருக்கின்றன. மற்றொரு உண்மை 7% பள்ளிகள் கரும்பலகை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல.

இது போல வசதியின்மை காரணிகளாக இருந்தாலும் போதிய பயிற்சி பெறாத ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் அடிக்க கையில் குச்சியுடன் திரியும் ஆசிரியர்களை நாம் பார்கிறோம்.32% ஆசிரியர்கள் போதிய பயிற்சி இல்லாமலே ஆசிரியர் பணிக்கு வருகிறார்கள். அடிப்படை பயிற்சி இல்லாத இவர்களிடம் தரமான கற்பித்தலை எவ்வாறு நாம் எதிர்பார்க்கமுடியும்?. உண்மையில் நல்ல திறமையும் ஆர்வமும் உள்ள பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரேமாதிரியான, விறுவிறுப்பில்லாத கற்பித்தல் மாணவர்களை படிப்பில் ஆர்வமில்லாமல் செய்துவிடுகிறது.செயற்திறனும் பயனும் உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணலாம்
கல்வித்துறை நிர்வாகத்தில் நிலவும் பொறுபற்ற தன்மை,அலட்சியம் ஆகியவை மாறவேண்டும். தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், தகுதியும் ஆர்வமும் மிக்க இளைஞர்களை கொண்டு திட்டங்கள் வகுத்து செயல்பட்டால் இந்தியாவின் கல்வித்தறம் உலக அளவில் முதன்மை பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Monday, September 18, 2006

தில்லி புத்தக கண்காட்சி-- :((

தலைநகர் புத்தக கண்காட்சின்னு தலைப்பு பார்த்துட்டு எதோ நான் பெருசா புத்தங்கள வாங்கி அத பத்தி எழுதுறேன்னு நினச்சுட்டு படிக்கறவங்க.. மன்னிச்சுடுங்க...நான் எனக்கு நடந்த ஒரு சோகக்கதைய சொல்லனும்.. எல்லாரும் புத்தகத்த வாங்குனா,, நான் வம்ப விலை குடுத்த வாங்கினேன்..

எல்லாரும் தான் புத்தக கண்காட்சிக்கு போறாங்க , நாமளும் போய் பாத்து, அத பத்தி தமிழ்மணத்துல எழுதனும்னு நினச்சுட்டு சனிக்கிழமை தூக்கத்த தியாகம் செஞ்சுட்டு போனேங்க...(புத்தகம் படிக்கிற பழக்கம் எல்லாம் இருக்கான்னு கேக்காதீங்க). .. நான் என் பெண், மற்றும் என் colleague ஒரு பஞ்சாபி பெண் மூனு பேரும் காலை 10 மணிக்கு எல்லாம் பிரகதி மைதானத்துக்கு போய்டோம்.
எங்க கல்லூரியின் புத்தக வெளியீட்டு துறையும் ஒரு ஸ்டால் போட்டிருந்தாங்க, அங்க தாங்க முதல்ல போனேன் .அங்க போனா பாஸ் நின்னுட்டிருந்தார் ..என்னையும் 'May I Help You' card குத்திக்க சொல்லி, கொஞ்ச நேரம் நிக்கவெச்சுட்டார். அது கூட பரவாயில்லைங்க. அவர் போனதும் எஸ்கேப் ஆயிட்டோம்.

அப்ப தாங்க வந்த்துச்சு வம்பு.கூட வேலை செய்யிற சக தோழியோட பெண்ண பார்த்தேன். +2 படிக்கிறா... 'aunty நான் சும்மா வந்தேன். எனக்கு கொஞ்சம் புக்ஸ் பிடிச்சிருக்கு.ஆனா பணம் கொண்டுவரலை.நீங்க குடுங்க aunty, நாளைக்கு அம்மாகிட்ட வாங்கிகோங்களேன்னா. சனிக்கிழமை அவ பிறந்த நாள் வேற . ஆசப்பட்டு கேக்குறான்னு பிறந்தநாள் பரிசா 500 ரூபாய்க்கு புக்ஸ் வாங்கிக்கோனு சொல்லி, ஒரே 1000 ரூபாய் நோட்டா இருந்த்தால, வா நானும் வர்ரேன்னு சொன்னேன். அவ, இல்லை நானே வாங்கிக்குறேன். அது next hall ல இருக்கு.நீங்க இருங்க நான் போய் வாங்கீட்டு வரேன்னு சொலீட்டு பணத்த வாங்கீட்டுபோய்ட்டா. நாங்க பக்கத்துல இருக்கிற சின்மையா மிஷன் ஸ்டால பார்துட்டு, புதுச்சேரியில இருந்து ஒரு நிருவனம் ஸ்டால்ல இருந்தவங்க கூட சந்தோசமா கொஞ்ச நேரம் தமிழ பேசீட்டு, அவளுக்காக காத்துட்டு இருந்தோம். ஒரு மணி நேரம் களிச்சு வந்தாங்க அந்த பொண்ணு.. 800 ரூபாய்க்கு வாங்கிட்டேன் aunty.. sorry னா..பரவாயில்லை... என்ன புக்ஸ் வாங்கினேன்னு கேட்டேன். Creative Writing in English then, வேற கொஞ்சம் புக்ஸ், அது என் பிரென்ட்ஸ் கிட்டே இருக்கு, நாளைக்கு சொல்றேன். லேட்டாயிடுச்சுன்னு சொல்லீட்டு, ஒடியே போய்ட்டா.
கூட இருந்த தோழி 'எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு, இவ என்னமோ பண்ணி இருக்கான்னு' புதுசா ஒரு குண்ட தூக்கி போட்டா. என் பெண் வேற 'அவள பத்தி எனக்கு தான தெரியும்னு' ஒத்து ஊதுனா.பேசாம் இருங்க ரெண்டு பேரும்னு சொல்லி அடக்கி வச்சேன்.

சொன்ன மாதிரி அவ அம்மா கிட்டேயிருந்து போன்.என்ன நீ இப்பிடியெல்லாம் புக்ஸ் வாங்கி குடுத்து இருக்கே, இது தான் நீ குடுக்குற 'Sex education" ஆ ன்னு சொல்லி ஏக வசனம் பேச ஆரம்பிச்சுட்டா... எனக்கு ஒன்னும் புரியலை...அப்புறம் தான் தெறிஞ்சது.. 800 ரூபாய்க்கு ரெண்டு மூனு புக்ஸ் தான் நல்லதா வாங்கி இருக்கா.மத்ததெல்லாம் ஏதோ ரொமான்ஸ் புத்தங்கள வாங்கீட்டு போய்யிருக்கா.. ..ஷிட்னி ஷெல்டன் மட்டும் இல்லாம..அவ வாங்கினதுல ஒரு sample சொல்றேன் பாருங்க.. ' Secret Desires and Fantasies' னு ஒரு புத்தகம். அந்த புத்தகத்த தொடக்கூட எனக்கு கஷ்டமா இருக்குன்னு அழாத குறையா சொன்னா அவங்க அம்மா.மத்ததெல்லாம் பெயர் சொல்லகூட லாயகில்லாத புத்தங்கள். பிறகு நான் சொன்னேன் நான் அவ கூட போகலைன்னு. அந்த பெண் அவ அம்மா கிட்டே 'aunty வாங்கி Birthday present ஆ குடுத்தாங்கன்னு' சொல்லி இருக்கா.
பிறகு என் தோழி எப்படியாவது திருப்பி குடுத்துடுன்னு சொல்ல.. எங்க கல்லூரி ஸ்டால் இருக்கிறதுனால ஏதாவது பண்ணலாம்னு நினச்சுட்டு போனேன். ஆனா அங்க ஆண்கள் தான் இருப்பாங்க. இத போய் அவங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு கஷ்டமா இருந்துச்சு. தைரியத்த வரவச்சிட்டு போனா அங்க மறுபடியும் பாஸ்.. வேற வினையே வேண்டாம்.. பெருசுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.அவர் ரிடையர்ட் மேஜர் ஜெனரல். ஜாடை காமிச்சி ஒருத்தர வெளிய வர சொல்லி எப்படியோ விஷயத்த சொன்னோம். ஒரு மாதிரி சிரிச்சுட்டு சரி நாளைக்கு கொண்டுவாங்க மாத்திக்கலாம்னான். அய்யா ராசா நீ நல்லா இருக்கனும்னு வாழ்த்திட்டு வந்தேன்.

இருந்த காச அவகிட்டே குடுத்துட்டு கடைசியில சில Games CD யும் பெண்ணுக்கு ஏதோ Core Physics புத்தகத்த மட்டும் வாங்கீட்டு வந்த்துட்டோம். என் அலுவலக தோழி இந்த கூத்த மெனக்கெட்டு மத்தவங்களுக்கு போன் பண்ணி சொல்லி.. இப்ப office frends எல்லோரும் aunty எனக்கும் பர்த்டேவருதுன்னு போன் பண்ணீட்டு இருக்காங்க.

இது தேவையாங்க எனக்கு. சனிக்கிழமை கொஞ்ச நேரம் டீவி பார்த்தமா தூங்கினமான்னு இல்லாம.. இது தான் எனக்கும் புத்தகத்துக்கும் ரொம்ப தூஊஊஊஊரம்...

Tuesday, September 12, 2006

தில்லியும் நானும் தமிழும்

தலைநகர் தில்லிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு, என்னத்த சொல்ல நான் இன்னும் இந்த சூழ்நிலைக்கு முழுசா மாறல. இதுல எனக்கு பெருசா வருத்தமில்லை. ரொம்பவே சந்தோசம்னு வேணுன்னா சொல்லிக்கலாம். தனியா ஒரு பெண் இங்கு வந்து குப்பகொட்றது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு தெரிஞ்சும், கிடைச்ச வாய்ப்பை நழுவவிட மனசில்லாம, 'தில்லியில் இல்லாத தமிழர்களா'ன்னு நினைச்சுதான் இங்கன வந்தேன். வந்தப்புறம்தான் தெரிஞ்சது, தலைநகரத் தமிழர்கள் எந்த அளவுக்கு உதவியா(?) இருக்காங்கன்னு.. ஏறத்தாழ ஒரு வருஷம் தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை..

சரி, இப்ப தில்லித் தமிழர்களின் தமிழ்மொழி பற்றை மட்டும் இங்க அலசுவோம்.

பஸ்சுல போறப்போ இறங்க வேண்டிய இடம் தெரியாம, தமிழர்னு தெரிஞ்சு உதவி கேட்டா, பதில் ஒன்னு ஆங்கிலத்துல வரும் இல்லைன்னா இந்தியில சொல்லுவாங்க.... நமக்கு வர்ற ஆத்துரத்துல நல்லா நாலு போடலாமுன்னு தோணும். தாய்மையும் ஊர்பாசம் ஒன்னா தலைதூக்கி தொலையட்டும்னு விட்டுற சொல்லும். ஆனா என் பொண்ணு இப்படியான சந்தர்பங்கள்ள தமிழ்ல எதாவது விவகாரமா திட்னப்புறம் அந்தபக்கம் reaction தமிழ்ல வரும்.

நம்மள மாதிரி புதுசா இறக்குமதி ஆகறவங்கள ஏளனமா பார்க்கிறதும்,முகத்தை திருப்பிக்கறதும் இங்க ரொம்ப சகஜம். நம்மை தெரியாவங்கதான் இப்படின்னா, கல்லூரியில வேலை செய்யிற சகதமிழர்கள் அதைவிட ஒரு படி மேலே, "ஐயோ எதுக்கு இங்க எல்லாம் வந்தீங்க.இங்க adjust பன்றது ரொம்ப கஷ்டம்.. அதுவும் நம்ம ஊர்ல வளர்ந்து பொண்ணுக இந்த cultureக்கு ஒத்து வரமாட்டாங்க."இங்க இருக்குற பொண்ணுக எல்லாம் ரொம்ப modern and stylish. கோயமுத்தூர்ல இருந்துட்டு இங்க எப்படி?...(கோவைய இவங்க பார்த்ததுருக்க கூட வாய்ப்பில்லை)எதுக்கு வீணா ரிஸ்க் எடுக்குறே, வேண்டாம்..... பொண்ண இங்க கூட்டீட்டு வரவேண்டாம்னு" ஒரே brain washing.. இந்த CBSE Syllabus படிக்கிறதும் கஷ்டம்.. பேசாம உங்க ஊரிலேயே எதாவது ஹாஸ்டலில் விட்டுறுன்னு" ஆளாளுக்கு advice வேறு.. எதோ நம்ம மேல ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி..


இதையெல்லாம் என் பெண்ணிடம் சொல்லப்போக அவளும் முதல்ல பயந்துட்டா!.. அனால் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே அவள் சொன்னது எனக்கு வியப்பா இருந்துச்சு.."என்னம்மா எந்த subject லேயும் யாருக்கும் basics கூட தெரியவில்லை.. இதுக்கு போயி நீ அந்த அலட்டு அலட்டுனே".,எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. இத்தனைக்கும் அந்த பள்ளியில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு,நம்ம ஊரின் கல்வித்தரம் பத்தி பெருமயா உணர்ந்த தருணம் அது.

இந்த பதிவ எழுத ஆரம்பிச்ச பின் நடந்த Intresting matter ஒன்ணு.. என் பொண்ணு வகுப்பில ஒரு தமிழ் பெண்... இங்கேயே பிறந்து வளர்ந்த பெண்.. school prayer ல ஒவ்வொரு வாரமும், ஒரு வகுப்பு பிரார்த்தனை பாடல் பாடவேண்டும்.. இந்த 'நலம் விரும்பி' யாருக்கும் தெரியாமல் வகுப்பு ஆசிரியிரிடம் போய் இன்றைக்கு, என் பெண்ணோட பேர் சொல்லி , 'இவ இன்னைக்கு Prayer Song பாடுவான்னு' சொல்ல, அதையும் அறிவிச்சுட்டாங்க. அந்த நலம் விரும்பியும் சக மாணவிகளும் சேர்ந்து இவ முகம் போற போக்க பார்த்து சிரிச்சுட்டு இருந்திருக்காங்க.. இவ உடனே சமாளிச்சுட்டு, நாங்க கோவை நிறுவணத்துல எப்போதும் பாடற பாட்டு நினைவுக்க வர மேடையேறி பாடி முடிசுட்டா.. அந்த பாட்டு இதோ

''அன்பே தெய்வம்
அறிவே தெய்வம்
ஆணந்தமே தெய்வம்
பண்பே தெய்வம்
பரிவே தெய்வம்
பணியே நம் தெய்வம்
நற் பணியே நம் தெய்வம்''

இதுல இரண்டு வரிகள் மறந்துட்டாலும் ஒரு வழியா பாடி முடிச்சுட்டா. இதுல என்னனா, ஒவ்வொறு வரியும் பாடி முடிச்ச பின்.. மாணவர்களையும் ஆசிரியர்களையும் சேர்ந்து பாட சொல்லி இருக்கா..இதற்கு முடிந்த அளவுக்கு ஆங்கில விளக்கமும் கொடுத்துட்டு வந்துட்டா,
நம்ம நலம் விரும்பி மூச்சு விடலை அதுக்கு அப்புறம்..

மற்ற மாநிலத்தை சேர்ந்தவங்க பெரும்பாலும் அவங்க மொழியிலேயே பேசுறாங்க... ஆனா நம்ம தமிழ் மக்கள் தான் பந்தா.. இங்க இருக்கிற "தமிழ்த்தாயெல்லாம்" அவங்க குழந்தைகள் இந்தி சரியா படிக்கலைன்னு தவிக்குற தவிப்பிருக்கே...அவங்களை பார்த்தா ஹிந்தித்தாய் ஆணந்தக்கண்ணீர் விட்டு கேவிகேவி அழுவா. அத்தனை சுவாரசியமான காட்சி அது....அதே குழந்தைகளுக்கு நம்ம தாய்மொழியான தமிழ் ஏழுத படிக்க வரலைன்னு இவங்க வருத்தப்படாதப்போ மனசுக்கு கஷ்டமா இருக்கு.

எங்கு வாழ்ந்தாலும் தாய்மொழிக் கல்வியென்பது அவர்களது வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதுனு உளவியல் வல்லுனர்களினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கு. அனா இங்க தாய் மொழில பேசறதே கஷ்டம்னு நினைக்கறவங்க கிட்டே எங்க போய் தாய் மொழிய படிக்க சொல்றது. இதுல குழந்தைகளை சொல்லி தப்பு இல்லை.. வேறு வழி இல்லை அவர்கள் பள்ளியில் இந்தியில தான் பேசனும்..அனால் குறைந்தபட்சம் வீட்ல தமிழில் பேசினா அவர்களுக்கும் ஒரு மொழிப்பற்று வரும்..தமிழ் திரைப்படங்கள் பார்ப்பது (அல்லது பார்ப்பதாகச் சொல்வது) கூட கேவலம் என்று நினைப்பவர்கள் இக்குழந்தைகள்..

ஓரு முறை எய்ட்ஸ் விழிப்புணர்வில மதத் தலைவர்களை ஈடுபடுத்துற ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொலைபேசினேன்.. அந்தப் பக்கம் இருந்த பெண்.." are you a tamilian?" னு கேட்டா...நான் எப்படி கண்டுகண்டுபடிச்சீங்கன்னு கேட்டதற்கு.."from your pronounciation" என்றார்.. தமிழர்கள் பேசும் ஆங்கிலம் தனியா தெரியுமாம்..அரைகுறை ஆங்கிலம் தெரிந்த அந்தப் பெண் சென்னையை சேர்ந்தவர்.. 10 வருடமாக அங்கு வேலை பார்க்கிறாள்.. நேரில் சென்றபோது தான் விஷயம் தெரிந்தது..அப்ப கூட அவள் தமிழில பேசல..இந்தியில் தான் பேசினா..நான் பிடிவாதமா தமிழில பேச அவளும் பிடிவாதமா இந்தியில பேச.. நல்ல காமெடி... நமக்கு பொறுமை இல்ல அதுக்கு மேல பேச "எனக்கு இந்தி தெரியாது.. உங்க பாஸ பார்க்கனும்.. நீங்க சொல்ல நினச்சத அவர்கிட்டே சொல்லுங்க, நான் அவர்கிட்டே ஆங்கிலத்துல பேசிக்குறேன்" னு சொல்ல..பயந்துட்டா.. அப்புறம் வருது அழகான தமிழ்..

பொதிகை தொலைகாட்சியில் உலக தமிழர்களை பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிகிழமையும் இரவில் ஒளிபரப்பாகிறது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. பல தலை முறைகளாக அங்கு இருக்கும் தமிழர்கள் தமிழை கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வம், நம் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கும் பண்பு, மனம் நெகிழச்செய்கிறது. அவர்கள் நடை, உடை ,வாழ்க்கை முறை வீட்டின் அமைப்பு எதுவும் மாறவில்லை. 3 , 4 தலை முறைகளாக வெளிநாட்டில் இருப்பவர்களா இவர்கள் என வியப்படையச் செய்கிறது அவர்களின் மாறாத பண்பாடு.

வரலக்ஷ்மி விரதம் எல்லாம் போட்டி போட்டுகொண்டு கும்பிடுகிறார்கள்.. அதிலும் innovation எல்லாம் பண்ணி...எல்லாவற்றிலும் ஒருவரை விட ஒருவர் மிஞ்சவேண்டும் என்று நினைக்கிறார்கள்.. ஆனால் அதே போட்டி தாய்மொழி கற்பதிலும் இருந்தால் நன்றாக இருக்கும்..."தாய் எவ்வளவு முக்கியமோ அது போலவே தாய்மொழி மிகவும் அவசியம்" என்பதை புரிய வைத்தால் போதும்...குழந்தைகள் தமிழை பக்தியுடனும் சிரத்தையுடனும் படிக்க ஆரம்பிப்பார்கள்

தமிழைத் தமிழனே புறக்கணிக்கும் அவல நிலை மாறும்...