Sunday, August 15, 2010

உறக்கம் கலைவோம்....

சுதந்திரம்   வந்து 63 வருடம் முடிந்து இன்று அறுபத்தி நாலில் அடியெடுத்து   வைக்கிறோம்.  சாதனைகள், உயரங்கள், உற்சாகமாய் வெளிச்சம் போட்டு காட்டி   பெருமித  முகங்கள், வாழ்த்துக்கள், நாளைய கனவுகள் பற்றி உரக்க பேசி  சந்தோஷப்   படுகிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது பார்ப்பதற்கும்,    கேட்பதற்கும்.


இந்த   இடத்தில் ஒரு பழைய சம்பவம். வருடம் 1923, சேரன்மாதேவியில் உள்ள  வா.வே.சு   அய்யர் அவர்களின் ஆசிரமம் அல்லது குருகுலம். இதற்கு பொருளுதவி  செய்து   வந்தது அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் அமைப்பு. தந்தை  பெரியார்   அப்போது அதில் செயலாளர். குருகுலத்தில் ஒரு பழக்கம் தீவிரமாக   கடைபிடிக்கப்  பட்டது. அவர் சார்ந்த சமூகத்தவருக்கு ஒரு பந்தியும்,   மற்றவர்களுக்கு ஒரு  பந்தியுமாய் உணவு வழங்கப் படும். இதை அறிந்த பெரியார்   கொதித்தெழுந்து  எதிர்த்தார். காந்தியடிகளின் காதுக்கும் கூட செய்தி  போனது,  ஒன்றும்  நடக்கவில்லை. வெறுத்துப் போன பெரியார் பதவியை தூக்கி  எறிந்து  விட்டு  வந்தார்.


87 வருடங்கள் ஓடிப் போய்  விட்டது. நமது  சிந்தனைகள் செயல்களில் கூட  பெரிய அளவில் மாற்றம்  வந்திருக்கிறது.அறுபத்தி  மூணு ஆண்டு சுதந்திரம்  நமக்கு தடையில்லாத பேச்சு  மற்றும் எழுத்து  சுதந்திரத்தை கொட்டிக்  கொடுத்திருப்பதனால் புதிய  சிந்தனைகளினால் எல்லா  துறைகளிலும் மிளிர்ந்து  கொண்டிருக்கிறோம்.  இப்படித்தானே எல்லா பக்கமும்  சொல்லிக்  கொண்டிருக்கின்றோம். ஆனால் சமூக நீதி  மற்றும் சாதிய உணர்வுகளில்...?


சமீபத்தில்  உயர்தரக் கல்வியை இலவசமாக வழங்கிவரும் அறக்கட்டளை  ஒன்றின் பள்ளி நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் வாய்ப்பு வந்தது. அந்த பள்ளியில்  சீருடையில் இருந்து,  புத்தகம்,  மதிய உணவு உட்பட  அனைத்தையும்  அறக் கட்டளை இலவசமாய்  வழங்குகிறது. 

பொருளாதார ரீதியில் பின் தங்கிய அந்த பகுதி மக்களுக்கு அதை எத்தனை பெரிய உதவி  என்பதை அறிந்து  மகிழ்ச்சி அடைந்தேன். ஆசிரியர்களும்  ஊழியர்களும்  குழந்தைகளை அக்கறையுடனும் கவனித்துகொண்டு முழுஈடுப்பாட்டுடன்  இருப்பதை  பார்த்து எனக்குள் திருப்தியும், நிம்மதியும் ஆன ஒரு  உணர்வும் ஏற்பட்டது. அந்த சூழலில் என் மனதிற்கு  உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிட்டியது  என்பது உண்மை.


மதியம்   குழந்தைகளோடு நானும் உணவருந்திக் கொண்டிருந்த போது சில குழந்தைகள்    மட்டும் தாங்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்திருந்ததை கவனித்தேன். அத்தருணத்தில் அது எனக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.  ஆனால் அந்த குழந்தைகளில் சிலர் பள்ளியில் தரப்படும் உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்பதையும் கவனித்தேன். இரண்டு நாட்களுக்கு பின்னர் தற்செயலாய் அந்த ஊர்காரர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்த மதிய உணவு பற்றி அவர் கூறியபோதுதான் வீட்டில் இருந்து உணவு கொண்டுவரும் செயலின் பிண்ணனி புரிந்தது.


ஒடுக்கப்பட்ட   சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும், மேல் ஜாதி என தங்களை  நினைத்துக்   கொள்வோரின் குழந்தைகளுக்கும் ஒரே தட்டில் உணவு  பரிமாறப்படுவதால், மேல்ஜாதி   பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான உணவினை  தனியே கொடுத்தனுப்புகின்றனர்   என்றார் அவர்.


 தீண்டாமை!, சொல்வதற்கே வெட்கமாய்த்தான்   இருக்கிறது. அறுபத்தி நாலு ஆண்டு  சுதந்திரத்திற்குப் பின்னரும் நகர்புறம்   தாண்டிய அந்த பகுதி மக்களின்  எண்ணங்களும் பார்வையும் என்னவோ இன்னமும்   அபப்டியே தான் இருக்கின்றன. எத்தனை  பெரியார்கள் வந்தென்ன?, போயென்ன?


 எட்டாக்கனியாக   இருக்கும் கல்வியை எளிதாக்க யாரோ ஒரு நற்சிந்தனையாளர்  தேவையின்   அடிப்படையில் மகத்தான சேவையினை செய்து வந்தால் அதிலும் நம் சாதிய  ஒடுக்கு முறை புத்தியை காட்டி பிரிவினையை உண்டு பண்ணும் நம் சமூகத்தை என்ன  வென்று   சொல்வது. சீரான சமூக பழக்கவழக்கங்களை  இலக்காக்கி மனிதனை மனிதனாக   மதிக்கும்  நாகரீகத்தை வளர்க்கும் ஒரே இடம் பள்ளி தான்.  மதிப்பீடுகளில்   சாதியும்  மதமும் வரக்கூடாது என்பதை வலியுறுத்தவும்  ஒழுக்கத்தையும்   சகிப்புத்தன்மையும் வளர்க்கவும் வகுப்பறையே ஏதுவான இடம். 


அக்குழந்தைகள்   கண்டிப்பாக தங்கள் பெற்றோர்களை காரணம் கேட்டிருப்பார்கள் எதற்காக  தாங்கள்   மட்டும் பள்ளியில் சாப்பிடக்கூடாது என கேட்காமல்  இருக்கப்போவதில்லை.   அப்பெற்றோர்களும் உண்மையான காரணத்தை பெருமிதத்துடன்  சொல்லாமல்   இருக்கப்போவதில்லை. இது எந்த வகையான ஒரு தாக்கத்தை, எண் ஓட்டத்தை அந்த  பிஞ்சின்   மனதில் ஏற்படுத்தும்?


குழந்தைகளுக்குள் எந்தவித   வேறுபாடுகளும் இல்லை. பள்ளியில் சாப்பிடும்  தட்டில் கூட தீண்டாமையை   கடைபிடிக்கும் இப்பெற்றோகளுக்கு அல்லவா கல்வி  தேவைப்படுகிறது. ஒருவரின்   இருப்பை கேவலப்படுத்தி சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கி என்னோடு சரிசமமாக உட்கார்ந்து   உணவருந்தும் தகுதி உணக்கில்லை என்பதை  முகத்தில் அறைந்து சொல்வது   அவனுக்குள் எப்பேர்பட்ட காயத்தை ஏற்படுத்தும்.  அந்த இடத்தில் நம்மை வைத்து   மனசாட்சியோடு சிந்தனை செய்தால் மட்டுமே அந்த வலி  புரியும். நிராகரிப்பின் வலியை   அனுபவித்தால் ஒழிய புரியாது.ம்ம்ம்ம்


மாணவர்கள் வீட்டில்   இருந்து கொண்டுவரும் உணவை சகமாணவர்களுடன் பகிர்ந்து ஒன்றாக  உண்ண   வேண்டும் என வலியுறுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.ஐந்தில் வளையாத உடல் மட்டும் அல்ல எண்ணங்களும் ஐம்பதில் வளையாது. விதை ஒன்று    போட்டால் செடி ஒன்று முளைக்காது. விதைகளை அனைத்துச்செல்லும் விருட்சங்களாக    வளர்ப்பது நம் கையில் தானிருக்கிறது.


1924 ல் குருகுலத்தில்   நடந்த அந்த பிரிவினைச் சார்ந்த செயலானது ஒரு குறிப்பிட்ட உயர்  சமூகத்தார் மற்ற    சமூகத்தார் அனைவரின் மீதும் ஏவிய ஒடுக்குமுறை. இன்றைக்கு பெரியார் மாதிரியான சமூக புரட்சியாளர்கள் மீட்டுத் தந்த சமூக நீதியின் நீட்சியாக மேலே வந்த பிற சமூகத்தினர் தனக்கும் கீழான சமூகத்தவன் என மற்ற சமூகத்தினர் மீது அதே வன்முறையினை  நிகழ்த்துகின்றனர். குப்பனும் சுப்பனுமாக வீரம் இழந்து மானம் இழந்து அடிமைப்பட்டு கிடந்தவர்கள் கொஞ்சம் வசதியும், வாய்ப்பும்  வந்தவுடன்  கடந்த காலத்தை மறந்து, சாதீய போதையில் சக மனிதனை மனிதனாக மதிக்க மறுக்கின்றனர்.
  
ஆளப்பிறந்தவர்கள்    என்று கூறிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து  நமக்கு பெரியார்  விடுதலை   வாங்கிக் கொடுத்துவிட்டார். இருப்பினும் அதே ஒடுக்குமுறை உணர்வு  அரசியல்,   கல்வி, பொருளாதாரத்தில் தங்களின் ஆட்சியே இருக்கவேண்டும் என்ற  சுயநல  உணர்வு அடுத்த தட்டு மக்களின் மனத்தில் ஆழமாகப்  பதிந்து விட்டது. 87  வருடங்களுக்கு   பின்னரும் நாம் இதே குறுகிய எண்ண வட்டத்தில் தான்  சுழன்றுகொண்டிருக்கிறோம். இதெல்லாம் பெரியார் மாதிரியான மகாத்மாவிற்கு நாம் இழைக்கும் துரோகம், இதற்காக அனைவருமே வெட்கப் பட வேண்டும்.

சாதீய  கட்டமைப்புகள்,பேதங்கள்,  தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என   சாதியத்தின் பெயரால்  மக்களைப்  பிரித்து ஒதுக்கும் கொடுமையை இன்னும்  எத்தனை நாட்களுக்கு சகித்துக்   கொண்டிருக்கப்போகிறோம்.விடுதலை கொண்டாட்டங்கள் என்பது நமது எண்ணம், செயல், சிந்தனைகளின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து பெருமையடைவதாக இருக்கவேண்டும். இந்த நாளிலாவது அதற்கான உறுதி மொழியினை ஏற்றிடுவோம். சக மனிதனை சாதியின் பெயரால் அவதூறு செய்வதை ஒழித்திடுவோம்

 பிற்சேர்க்கை - பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசிகொண்டிருந்த போது அவர், "அவ்வாறு தனியாக உணவு கொண்டு வருவதை நாங்கள் ஆதரிப்பது இல்லை. சிலர் உடல் நலம் இல்லாமல் இருக்கும்போது வீட்டில் இருந்து கொண்டுவருவார்கள். ஆனால் பெற்றோர் ஆசிரியர் சநதிப்பில் இந்தப் பிரச்சனை வராமல் இருப்பதில்லை. பள்ளியின் கொள்கைக்கும் கட்டுப்பாடிற்கும் கட்டுப்பட்டால் மட்டுமே குழந்தைகளை சேர்த்துக்கொள்வது' என்றார்

Saturday, August 07, 2010

கண்ணாடிப் பெண்...


கனவு நினைவு நிம்மதி மகிழ்ச்சி
தேவைகள் தடைகள் எதிர்பார்ப்பு ஏமாற்றம்
பயம் பதட்டம் கவலை வலி
இன்னும் எத்தனையோ வரட்டும்
பகிர்ந்து கொள்ளவும் பாதியாக்கவும்
மௌனம் நிறைத்த அவளின் இதமான அழுத்தம்
ரயில் பயணத்தில் நொடி நேரம் தோன்றி
மறையும் காட்சிகளாய் கடந்திட வைத்த
அவளின் பார்வை
இத்தனைக்கும் கண்ணாடியில் மட்டுமே அவளை...


Tuesday, August 03, 2010

வெளிச்சம்....


ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்..
என் சுயநினைவை கிழித்துக்கொண்டு ச்சோவென பெய்கிறது மழை
முகத்தில் அறைகிறது காற்று

மழையும் நிற்கப் போவதில்லை..
இந்த காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்???
கைகளை கேடயமாக்கி சுருண்டு கொள்கிறேன்
இந்த இரவு விடியாமலே போய்விட்டால்???
அறையெங்கும் அவநம்பிக்கைகள்

இறுதி நிமிடங்களில் இரவு - அதைக்
கிழிக்கும் ஒளிக்கீற்று வரவேண்டும்
சூரியனை மிரட்டலாம்தான்...எடுபடுமா?
அவநம்பிக்கைகள் மீது வெறுப்பு படர்கிறது

கருப்பையின் கதகதப்பிற்கு ஏங்கிக்கிடக்கிறேன்
மழைச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது
கண்ணுக்குள் கருமை நிறைந்திருக்கிறது
இந்த கருமைக்குள் தொலைந்து விடுவேனோ...

நிசப்தத்தை கிழிக்கும் என் எண்ணங்களின் கூக்குரல்
வெளிச்சம் தானாய் வராது விழிக்காத வரையில்
அதிர்ந்து எழுகிறேன், மெல்லிய வெளிச்சம் அறையெங்கும்..

நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்...