Tuesday, August 22, 2006

பொறியில் சிக்கிய.....பெண்கள்


நண்பர்களே!...நன்றாய் சாய்ந்து உட்காருங்கள், நான் சொல்வதை நிதானமாய் உள்வாங்கி யோசியுங்கள்...ஏதோ காரணமாய் ரத்தப் பரிசோதனை செய்யும் உங்களுக்கு HIV தாக்கியிரூப்பதாய் உறுதி செய்கிறார்கள், அக்கணத்தில் உங்களின் மனநிலையை கவனமாய் பரிசீலியுங்கள்.

இனி,அதே மனநிலையுடன் தொடர்ந்து படியுங்கள், இந்த நிமிடம் வரை வாயில்லாப் பூச்சியாய், வெளியுலகம் தெரியாதவளாய், இளம் தாயாய், கணவனே கண்கண்ட தெய்வமாய், வீட்டைத் தாண்டாத கூட்டுப் புழுவாய் தன் கணவனின் நடத்தையால் உயிர் கொல்லிநோயைச் சுமக்கும் எண்ணிலடங்கா சகோதரிகளை நினைத்துப் பாருங்கள். தாய்மைப் பூரிப்புடன் பரிசோதனைக்கு மருத்துவமனையில் காலடி வைக்கும் போதுதான் பெரும்பாலான பெண்கள் இந்த அவலத்தை அறிகிறார்கள். தாங்குமா அந்தப் பெண்மனம்? . இந்தியாவில் HIV ஆல் பாதிக்கப் பட்ட பெண்களில் பெரும்பாலோனோர் திருமணம் ஆன, கணவனிடம் மட்டுமே உடலுறவு வைத்துக் கொண்டிருக்கும் குடும்ப பெண்கள்.

எச்ஐவி +ve என இனங்காணப் பட்டபின் வாழ்வின் ஒவ்வொருநாளும் அவளுக்கு எத்தனை கொடுரமானதாய் இருக்கும் என்பதை உள்வாங்கிப் பாருங்கள். இப்பெண்கள் மீண்டு எழ வழிவகை செய்யவேண்டியது யார் கடமை...அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கலையும், அவதூறுகளையும் களைய வேண்டியது யார்கடமை? தயவு செய்து அடுத்தவரையோ, அரசாங்கத்தையோ கைகாட்டாதீர்கள். செய்வதறியாது திக்கித் திணறி விழிபிதுங்கி நிற்கும் அந்தச் சகோதரிகளின் கண்ணீர் துடைத்து, கனிவு முகம் காட்டி,அனைத்து ஆதரவாய் வாழ்வின் எஞ்சிய காலத்தை தன்னம்பிக்கையோடும் தவிப்பில்லாமலும் செய்யவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா....

இத்தோடு நம் பணி முடிகிறதா?...நிச்சயமாய் இல்லை, ஆதரவாய் தோளோடு தோள் நிற்பது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு சக மனிதனுக்கு இந்த நோய் அண்டாமல் அணுகாமலிருக்கத் தேவையான விழிப்புணர்வையும் அடிப்படை அறிவையும் வழங்குதல் நமது அடுத்த இலக்காய் கடமையை இருக்கவேண்டும். என்னுடைய அனுபவத்தில் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் மனத்தின்மையை கண்டு அசந்து போயிருக்கிறேன்.

தங்களின் இந்த நிலை மற்றவர்களுக்கு வரக்ககூடாது என்கிற சமுதாய நோக்குடன், எச்ஐவி பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த குழுவாக கூடி செயல்பட்டு வருகிறார்கள். கோவையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் ஒரு சுய உதவிக்குழு அமைத்து தங்களுக்கென ஒரு வருமானத்தையும் ஈட்டிக்கொண்டு , விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் செய்து வருகிறார்கள். சுய உதவிக்குழுவின் மூலம் கேபிள் டிவி இணைப்பை எடுத்து நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் குழு ஒன்று கேபிள் டிவி நடத்தி வருவது இங்குதான்.

வாழ்வின் விளிம்பில் நிற்கும் இவர்களில் பலர் கவுன்சிலிங் பிரிவில் டிப்ளமா படித்து அரசு மருத்துவமனைகளில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார்கள். எச்ஐவி கிருமி இவர்களை தாக்கிய பின்னரே இவர்கள் இந்த கவுன்சிலிங் பயிற்சியை மேற்கொண்டார்கள்.இதில் முதன்மையானவர் என் தோழி, மீனாட்சி ( வயது 26). காலம் சிதைத்த தன் கணவுகளை பொருட்படுத்தாது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுவரும் மீனாட்சி ஒரு சராசரி கிராமத்துப்பெண். கணவன் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பின்னர் கவுன்சலிங் பயிற்சி பெற்று, பாதிக்கபட்ட பெண்களுக்காக சுய உதவிக் குழுவை தொடங்கி,கேபிள் டீவி இனைப்பை நடத்தி வருகிறார்.இவரின் மிகப்பெரிய பலம் இவருடைய பெற்றோர், உறவினர்கள் மற்றும் நன்பர்கள்.இந்த ஆதரவு அவரை சொந்தக்காலில் நிற்க ஊக்குவித்தது. திரு.விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகிற்கு அறிமுகமானார்.அசாத்திய துணிச்சலும் நம்பிக்கையும் உடையவர்.அவருக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்வதில் ஈடுபாடு காட்டி வருகிறார். சென்ற முறை மீனாட்சி தில்லிக்கு வந்து இருந்த போது மதத்லைவர் ஒருவர் முன் அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். இந்தக் குழுவில் இருக்கும் கணவனை இழந்த சில பெண்கள் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும்,அதற்கு மதத் தலைவர்களின் ஆதரவு வேண்டும் எனவும் வேண்டினார். எவ்வளவு நல்ல விஷயம்...

இந்த நேரத்தில் இன்னொன்றும் கூற விறும்புகிறேன்.எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களோ, மருத்துவ துறையை சேர்ந்தவர்களோதான் செய்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக மதத்தலைவர்களும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை பெரும்பாலும் வழி தவறியவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் நினைப்பதால் மதத்தலைவர்களின் குறிக்கீடு இங்கே அதிகம் தேவை படுகிறது. கிருஸ்துவ பாதிரியார்களும், புத்தமத தலைவர்களும் இதில் ஆற்றும் பணி மகத்தானது.எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் எங்கள்குழு (தொண்டு நிறுவணங்களைச் சேர்ந்தவர்கள்) ஆசியாவிலேயே முதல் முறையாக பெண் மதத்தலைவர்களை ஒன்று சேர்த்து, சில அனுகு முறைகளை கையாண்டு வருகிறோம். "பிரதிபா" (பிரகாசமான ஒளி) என்று இந்த திட்டத்துக்கு (Project) பெயரிட்டு இதன் மூலம் பெண் மதத்தலைவர்களை ஒன்றினைத்து, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதில் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இதற்கான ஆதரவு, எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கிறது. இந்தக் குழுவில் மீனாட்சி ஆரம்பித்த 'Society for Postive Mother's Network' ம் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை மீனாட்சியும் நானும் கோவையில் ஒரு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எய்ட்ஸ்சுக்கு முடிவு மரணம் தான் என்று பேசிக்கொண்டிருந்த என்னிடம் 'ஒரு நிமிடம்' என்று கூறி விட்டு," அக்கா! எய்ட்ஸ்னா மரணம் மரணம்...னு சொல்றீங்களே.. எல்லாருக்கும் முடிவு மரணம் தானே.. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களிடம், பயம் வேண்டாம், நீங்கள் இன்னும் நீன்ட காலம் வாழலாம் என்று ஆலோசனை கூறும் நீங்களே,எய்ட்ஸ்க்கு முடிவு மரணம் என்று முரண்பாடாக கூறுகிறீர்களே" என்றாள். எய்ட்ஸால் பாதிக்க பட்ட அவர் அருகில் இருக்கும் போது நான் அவ்வாறு கூறியது சரி அல்ல என்று பின்புதான் உணர்ந்தேன். மேலும் இது போல 'Negative Messages' எந்த வித பயனும் தராது என்பதும் உண்மை.

எச்ஐவியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தில்லியில் 'National School of Drama (NSD)' ஒரு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. நாடு முழுவதும் இருந்து பாதிக்கபட்ட பலர் இந்த முகாமில் பங்கேற்றனர்.விழிப்புணர்வு பிரச்சாரங்களில் சில கலை நுனுக்கங்களை புகுத்தி, எவ்வாறு இச்செய்திகள் மக்களை சென்றடைய செய்யலாம் என்று பயிற்சி அளித்தார்கள். பாடல், நாடகம், ஒவியம், போன்றவைகளில் எளிதான சில பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கபட்டது. பயிற்சி நடைபெற்ற 10 நாட்களும் மறக்கமுடியாதவை. இறுதி நாள் அன்று இவர்கள் தங்களின் ஆசைகளை பகிர்ந்து கொண்டார்கள். லக்நோவில் இருந்து வந்து கலந்து கொண்ட ஒரு பெண் மற்றவர்களை விட துடிப்பாக, மகிழ்சியாக காணப்பட்டார். அவர் தன் ஆசையை சொல்ல எழுந்து நின்று, சிறிது நேரம் சிரித்துக் கொண்டும், என்ன சொல்ல என்று அருகில் இருந்த தன் தோழியிடம் கேட்டுக்கொண்டும் இருந்தார். அப்போது தன் 5 வயது மகள் (எச்ஐவியால் பாதிக்கப்படவில்லை) உள்ளே ஓடி வரவே, கண்களில் நீர் கொட்ட பேச வார்த்தை இல்லாமல் குழந்தையை அனைத்துக் கொண்டு கேவிக்கேவி அழுத காட்சி நான் நொறுங்கிப் போன தருணங்களுள் ஒன்று.

இங்கு மேலே படத்தில் இருப்பவரை பற்றி நீங்கள் பத்திரிக்கை செய்திகளில் படித்திருப்பீர்கள். இவர் தான் ஜனாபி கோஸ்வாமி. வடகிழக்கு மாநிலமான அஸாமை சேர்ந்த இவர், 1996 ஆம் ஆண்டு, தான் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தைரியமாக கூறிய முதல் பெண்மனி. திருமணம் நடந்து இரண்டே ஆண்டுகளில் கணவனை இழந்தார். திருமணத்திற்கு முன்பே இவர் கணவர் எச்ஐவியால் பாதிக்கப் பட்டிருக்கிறார். இதை மறைத்து திருமணம் செய்துவைத்து விட்டனர். மேலும், கணவர் இறந்த பின்னர் இவரை வீட்டை விட்டும் துரத்தி விட்டனர். நீதி மன்றத்தின் உதவியுடன் இவரின் உடமைகளை திரும்ப பெற்றார். சென்ற சட்டமண்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இவர் போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால், அஸாமில் போட்டியிட்ட மற்ற போட்டியாளர்கள் ஜனாபியோடு சட்டமன்றத்தில் சேர்ந்தது உட்கார்ந்தால்,அவர்களுக்கும் எச்ஐவி பரவி விடும் என்று முட்டாள்தனமாக கூறி, தேர்தலில் போட்டியிட விடாமல் செய்து விட்டனர்.
சொன்னவர்களுக்கு தான் அறிவு இல்லை என்றால், இதை செவி கொடுத்து கேட்ட காங்கிரஸ்க்கு எங்கே போயிற்று என்று தெரியவில்லை.

யார் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம், நிஜமான தவிப்பும் அதனைத் தொடரும் ஏக்கம் போக்கும் பரிவான வார்த்தைகளும்,நேசமான அரவணைப்பும் தான் அவர்களின் தனிமை உணர்வை தகர்க்கிறது. இந்த பாதிப்பினால் விதியின் சவாலை எதிர் கொள்ளும் இவர்கள், நம்பிக்கை நட்சத்திரங்கள்தான். எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோகம், கஷ்டம் என்று தளர்ந்து போய் உட்காராமல், மன அழுத்தம் பீடிக்க பட்டும் பின் அதிலிருந்து விடுதலையாகி நம்பிக்கையுடன் உண்மையான சமூகஅக்கறையுடன் வாழ்க்கையுடன் போராடும் இந்தச் சகோதரிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அநேகம்....

பொதுவில் பெண்களுக்கு வாழும் திறனைப் பற்றிய அறிவும் புரிந்துணர்வும், முன்னைவிட இன்று அதிகமாக தேவைப்படுகிறது. நோய்களை பற்றிய அடிப்படை புரிதலும், தற்காப்பிற்கான அறிவையும், வசதிகளையும் கள்ளம் கபடமறியாத நம் சகோதரிகளிடம் கொண்டு சேர்ப்பது மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு மனிதத்தின் கடமையாகவே கருதுகிறேன்.

சற்றும் எதிர்பாராத வேளையில் வரும் ஆகக்கூடிய இடர்களை கலங்காமல் ஏன் தளராமல் எதிர்கொண்டு போராடி வெற்றிகொள்வது நம்மில் எத்தனை பேருக்கு சாத்தியம்?.வாய்கிழிய யுக்திகளை பற்றி யார்வேண்டுமானாலும் பேசலாம்.பேனாவை முறுக்கிக்கொண்டு பக்கம் பக்கமாய் அணுகுமுறைகளை எழுதிவைக்கலாம்.இவற்றால் சாமானியனுக்கு ஏதாகிலும் வெளிச்சம் கிட்டுமா....சிந்தியுங்கள். சாமானியக்கு சாகசங்களைச் சொல்லிக்கொடுத்துச் சாதனையாளனாக்க வேண்டாம்...குறைந்தபட்சம் அவன் அப்பாவித்தனமாய் எமாறாமலிருப்பதற்கான வித்தையையாவது சொல்லித்தரலாமே!

நீங்களும் செய்வீர்கள்தானே....செய்வீர்கள் என்கிற நம்பிக்கையிருக்கிறது.

14 comments:

ரவி said...

///நீங்களும் செய்வீர்கள்தானே....செய்வீர்கள் என்கிற நம்பிக்கையிருக்கிறது.///

நம்பிக்கைதானே வாழ்க்கை...!!!!! கண்டிப்பாக...

Unknown said...

மங்கை உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள். இதேபோல் தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டும் பதிவுகளும் நடவடிக்கைகளும் விவாதங்களும் மட்டுமே இது குறித்த ஒரு விழிப்புணர்வை , எச்சரிக்கையை, நம் மக்களிடம் உருவாக்க முடியும்...... மீணாட்சி போன்றவர்களால் தான் நம்பிக்கை எனும் ஒரு வார்த்தைக்கு முழு அர்த்தம் கிடைக்கிறது .அவருக்கும் அதேபோல் தங்களோடு தொண்டாற்றும் அனைவருக்கும் எமது தாழ்மையான வணக்கம்

மங்கை said...

நன்றி ரவி

சதயம்
மத்தவங்க எல்லாம் century அடிக்கராங்க.. என்ன பார்த்தா பாவமா இருந்து இருக்கும் போல எங்க "சாமிக்கு".. overnight miracle நடந்து இந்த பதிவுக்கு அருள் புரிஞ்சிருக்கார்..எதோ எனக்கு தெரிஞ்சத எழுதி இருக்கேன்.. மறுபடியும் over night miracle நடந்தா தான் ட்ரிம் எல்லாம் பன்ன பண்ண முடியும்..

நன்றி :-)))

மகேந்திரன்

நன்றி.. மீனாட்சி மற்றும் அவருடன் சேர்ந்து பணி பிரியும் மற்ற பெண்கள் தான் எங்கள் inspiration.. அவர்களை பார்க்கும் போது..எங்கள் பணி எல்லாம் ஒன்றும் இல்லை
வாழ்த்துக்கி நன்றி

மங்கை said...

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சாமி அருள் புரியட்டும்னு.. புரிவார்னு நம்பிக்கை இருக்கு.. நாளைக்கே பதிவிடறமாதிரி அருள் புரிஞ்சா பரவால்ல.. தில்லி பத்தியும் எழுத்தீடுவோம்...

///ஹி..ஹி...கோவிக்கலைன்னா கடைசியா ஒன்னு சொல்றேன்...நெறைய எழுங்கன்னு எல்லாரும் ஊக்கப்படுத்தறது நெறைய பதிவுகள் எழுதனும்னு அர்த்தத்துல...ஹி..ஹி..அதை தப்பா ஒரே பதிவுல நெறைய எழுதனும்னு எடுத்துகிட்டீங்க போல...ஹி..ஹி) ///

ஹி ஹி..இருந்தாலும்..ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்
இவ்வளவு கின்டல் ஆயிருச்சு இல்ல.. நாளைக்கு பாருங்க தில்லிய பத்தின பதிவ..( சாமி..கடவுளே கைவிட்ராதப்பா,, challenge எல்லாம் பன்னிட்டேன்)

Anonymous said...

என்னங்கடா இது இன்னிக்கு எல்லாம் ஒரே எய்ட்ஸ் பத்தின பதிவா இருக்கு.. கலாய்க்கலாம்னா யாரும் வரமாட்டேங்கராய்ங்க..அனானிகளா.. இன்னும் புதுசா முளச்ச காளானுகளா வாங்கப்பா எல்லாம்...

துளசி கோபால் said...

மங்கை,

அருமையான பதிவு. கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்கறதைவிட இந்த நோய் இருக்கான்னு முதல்லே பார்க்கச் சொல்லணும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை

மங்கை said...

வாங்க துளசி

நீங்க சொல்றது ஓரளவுக்கு தான் எதிர்பார்க்கிற மாற்றத்தை தரும்... திருமணம் செய்துகொள்கிற ஆனோ பெண்ணோ, "Window Period" ல இருந்தா பரிசோதனை எந்த பிரயோஜனமும் தராது..

அதனால மக்கள் மனசாட்சியோட நடந்துட்டாதான் இதற்கு தீர்வு காணமுடியும்..அதுவும் முடியலைனா பாதுகாப்பான முறைகளை கடைப்பிடிக்கனும்..

நம்மிடையே நடக்கிற சில விஷயங்கள நாம வெளிப்படையா ஒத்துகொள்ளனும்.. அப்பதான் அதற்கான தீர்வ அலசி ஆராயவோ பரிந்துரைக்கவோ முடியும்...

ALIF AHAMED said...

அதனால மக்கள் மனசாட்சியோட நடந்துட்டாதான் இதற்கு தீர்வு காணமுடியும்..
/./

நல்ல கருத்து

././
அதுவும் முடியலைனா பாதுகாப்பான முறைகளை கடைப்பிடிக்கனும்
/./

யாருக்கு இது ??

திருமணம் ஆனவருக்கா??

மங்கை said...

//யாருக்கு இது ??

திருமணம் ஆனவருக்கா//

HIV பாதிப்புக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான வாழ்க்கை முறை உள்ளவங்க யாராயிருந்தாலும் அவங்களுக்கு...

HIV உடலுறவினால் மட்டும் பரவுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.. பாதுகாப்பான வழிமுறைகள் என்பது போதை மருந்தை ஊசி மூலம் செலுத்துபவர்களுக்கும் பொருந்தும்,,
பல பேருடன் உடலுறவு வைத்துக் கொள்பர்களுக்கும் பொருந்தும்.. அடிக்கடி இரத்த மாற்றம் செய்து கொள்பவருக்கும் பொருந்தும்.

திருமணம் ஆனவருக்கும் சரி ஆகாதவருக்கும் சரி, அறிவுறை ஒன்றுதான்..

HIV பரவீட்டு இருக்கிற வேகத்திற்கு பதிலடியா தடுப்பு நடவடிக்கைகள் வேகம் பத்தல.. ஒருவருடன் மட்டுமே உடலுறவு என்று தான் முதல்ல இருந்தே விளிப்புணர்வு கூட்டங்கள்ள சொல்லீட்டு இருக்காங்க, ஆனா அது எல்லா எல்லா தரப்பு மக்களிடயேயும் எடுபடலேன்னு தான் இப்போ பாதுகாப்பான உடலுறவ பத்தி பேசராங்க.. தடுப்பு நடவடிக்கைகள பத்தி பேசறதுனால அத பறிந்துறைகிறாங்கன்னு அர்த்தம் இல்லை

துளசி கோபால் said...

மங்கை,

நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு நான் சொன்ன இடத்துலே ஒரு சுட்டி இருக்கு,பாருங்க.

குழந்தைகளை நினைச்சால்தான் பகீர்னு இருக்கு.

மங்கை said...

துளசி

ரொம்ப மன நிறைவா, சந்தோஷமா இருக்கு உங்களை பார்க்கும் போது.. எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க படற துன்பத்த முழுமையா உணர்ந்து இருக்கீங்க... குடும்பத்தில ஒருவர் HIV கிருமியால பாதிக்கப் பட்டிருந்தாலும்.. அந்த குடும்பமே வேற விதத்தில பாதிக்கப்படுது.. கிருமியால பாதிக்கப்பட்டவங்க ஒரு பக்கம்.. சமூக தாக்கத்தினால பாதிக்கபட்டவங்க மற்றொரு பக்கம்...

தொண்டு நிறுவணங்கள் நிறைய செஞ்சுட்டு இருந்தாலும்.. இன்னும் பல புதிய திட்டங்கள்..எல்லா தரப்பு மக்களும் பங்கு பெற மாதிரியான திட்டங்கள் தீட்டனும்..

நன்றியுடன் வாழ்த்துக்கள்,, உங்க பணி தொடரட்டும்

மங்கை

E said...

பாதிக்கப்பட்ட பெண்கள் இவ்வளவு துன்பம் அனுபவிகிறார்கள் என்று நினைக்கும் போது..மனம் கணக்கிறது..

வித்தியாசமான பதிவு...

Chandravathanaa said...

மங்கை
உங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.

மங்கை said...

நன்றி சந்திரவதனா

முதல் தடவையாக வந்திருக்கிறீர்கள்.. நன்றி