Sunday, February 25, 2007

நம்பிக்கை வளையம்.

ஒளி தரும் வெளிச்சம் சூரியன் கிட்ட மட்டுமா இருக்கு, இருட்டு இருக்குற இடத்தில எல்லாம் சின்ன வெளிச்சங்கள் வந்துட்டு தான இருக்கு.

மனித குலத்தின் மகத்தான வெற்றிகளெல்லாம் பெரிய பெரிய யுத்த பூமியில் மட்டும் விளையவில்லை...எதிர் கொள்ள முடியாத சூழ்நிலையில், போராடி வென்ற எனக்கு தெரிந்த சில எளிய மனிதர்களை பற்றி எழுதலாம் என்று இந்த தொடரை தொடங்குகிறேன்.

முதலில் பெண்களில் இருந்து தொடங்குகிறேன்

மீனாட்சி


அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை

இவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில எழுதி இருக்கேன். இருந்தாலும் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கு.

ஏமாற்றங்கள் எல்லோறது வாழ்விலும் வருவது தான். இந்த ஏமாற்றங்களை எவ்விததில் அனுகுகிறோம் என்பது தான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசபடுது.


காலமும், கட்டியவனும் தன் கனவுகளை சிதைத்தாலும் அதே சிதைவு மற்றவர்களுக்கு நேரக்கூடாது என்று தளராது பணி புரியும் ஒரு பெண்தான் மீனாட்சி. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர். விசுவின் அரட்டை அரங்கம் மூலம் வெளி உலகிற்கு அறிமுகம் ஆனவர். கோவையில் உள்ள ஒரு கிராமத்தில் 9 ஆம் வகுப்பு வரை படித்த சராசரி கிராமத்துப் பெண்.

முதல் இரவு அன்று, திருமணத்திற்கு முன் தான் சில தாகாத உறவுகளை வைத்து இருந்ததாகவும் இனிமேல் அது மாதிரி தவறுகளை செய்யமாட்டேன் என்று கூறிய கணவரை பார்த்து ஆஹா, இத்தனை 'நேர்மையான' மனிதர் தனக்கு கணவனாக கிடைத்து விட்டாரே அன்று பெருமிதம் கொண்டு கடவுளுக்கு நன்றி கூறிய தொலகாப்பியரின் 'ideal house wife'. ஆனால் இந்த நன்றி உணர்ச்சி, கடவுளை எந்த விதத்திலும் சந்தோஷப்படுத்தவில்லை. கணவனின் உடல் நிலை மோசமாகி சில பரிசோதனைகளை மேற்கொண்ட போது அவருக்கு எச்ஐவி தாக்கு இருப்பது, நோய் முற்றிய பின் தான் தெரிந்திருக்கிறது.கணவனின் உடல் நிலை மிகவும் மோசமாகவே, வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். கைக்குழந்தையோடு அவதிபட்டுக் கொண்டிருந்த போது கணவரும் இறந்துவிட்டார். மீனாட்சியையும் எச்ஐவி தாக்கியிருப்பது பின்பு தான் தெரிந்தது. ஆனால் அவர் தளரவில்லை. புரிதலும் பரிவும் உள்ள உறவுகளை விட பலம் சேர்க்கும் விஷயம் ஏதாவது இருக்கிறதா?...ஹ்ம்ம். அருமையான பெற்றோர்கள்,அன்பான சகோதரன், இந்த உறவுகள் இவரை சொந்தக்காலில் நிக்க இயக்கியது.

விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்றபின் இவரது முகம் பரவலாக அனைவருக்கும் தெரிந்தது. அந்த மேடையில் தைரியமாக பேசி, எங்களுக்கு மட்டுமா, அனைவருக்குமே முடிவு மரணம் தானே என்று கேட்டு அனைவரையும் வாய் அடைக்க வைத்தார்.

தனக்கு கிடைத்த இந்த அரவனைப்பும் ஆதரவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். மேலும், மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும், எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறெல்லாம் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள் என்பதை பார்த்த இவர், மருத்துவமனையில் பணியாற்ற முடிவு செய்தார். அதற்காக கவுன்சலிங்க துறையில் டிப்ளமா படித்து தேர்ச்சி பெற்றார். கவுன்சலிங் திறமையை வளர்த்துக் கொண்டதோடு, எச்ஐவி கிருமியை பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டார். இன்று கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண்கள் மருத்துவத் துறையில், கவுன்சலராக பணியாற்றுகிறார். ஒரு நாளும் இவர் அழுதோ, அல்லது தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று வறுத்தப்பட்டதை பார்த்ததில்லை. சமீபத்தில் கோவயில், நானும் மீனாட்சியும் எச்ஐவி பற்றியும், இருவரின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதை போல ஒரு குரும் படம் தயாரிக்க ஒரு தோழி ஆசைபடவே, மருத்துவமனை வளாகத்திலேயே இந்த படம் ஷூட் செய்யப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக எடுக்கப்பட்ட 15 நிமிட படம். அவரின் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்த போது, எச் ஐவியால் பாதிக்கப்படாத தன் மகளைப் பற்றி பேசுகையில் உடைந்தே போய்விட்டார். இந்த விஷ்யத்தில் அவரை சமாதானம் செய்ய எங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இது ஒரு 5 நிமிடம் தான், மீண்டும் சுதாரித்துக் கொண்டு, எங்களுக்கு ஆறுதல் கூறி, தொடர்ந்து படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 'Positive Mother's Network என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார். இவரது கரத்தை இருகப் பற்றிக் கொண்டு கரையேரும் பெண்கள் ஏராளம். இவர் ஊக்குவித்து இன்று களப்பணியில் இருக்கும் பெண்கள், தமிழரசி, காயத்ரி, கோமதி, ஆதிலட்சுமி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்கள் அனைவருக்கும் சமூக மாற்றங்கள் பற்றிய உரத்த சிந்தனையும், குறிப்பாக ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இதில் மனதை பிசையும் விஷயம், இவர்கள் அனைவரும் 24 வயதை தாண்டாதவர்கள்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் நடத்தும் கேபில் டீவி குழு இவர்களோடது தான்.

சமீபத்தில் மீனாட்சிக்கு Spirit of Assisi National Awardம் வளங்கப்பட்டது. ஈரோட்டில்
உள்ள ஒரு நிறுவனம் இவருக்கு Life time achivement award ம் வழங்கியுள்ளது.

இந்தப் பெண்கள் உருவாக்கியுள்ள இந்த நம்பிக்கை வளையம், உணர்வுகளால் ஆன உறுதி வளையம்.

இவர்களுக்கு உறுதினையாக இருக்கும் டாக்டர். மகாதேவன் அவர்களை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

.

22 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தன் துன்பத்திலேயே மூழ்கிப் போகாமல் அடுத்தவங்களுக்கு
எடுத்துக்காட்டாக இருட்டறையில் வெளிச்சக்கீற்றாக இருக்கிறார் மீனாட்சி.

அபி அப்பா said...

நான் முதன் முதலாக இந்த சகோதரி மீனாட்சி பற்றி உங்கள் வழியாக கேள்விபடுகிறேன். அவரின் தன்னம்பிக்கை மிகுந்த சந்தோஷத்தை தருகின்றது. அவர் நீண்ட வருஷங்கள் சந்தோஷமாய் வாழ வாழ்த்துக்கள்!!!

துளசி கோபால் said...

அருமையான பதிவு மங்கை.

இதைப்போல் மனோ தைரியம் உடைய பெண்கள்தான் மற்றவர்களுக்கு முன்மாதிரியா
இருக்கறாங்க. நம்பிக்கையைத்தரும் எல்லோருமே (நம்பிக்கை) நட்சத்திரங்கள்தான்.

மீனாட்சியின் சேவை மேன்மேலும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்து(க்)கள்

பங்காளி... said...

இந்த பெண்ணிற்கு தற்போது என்ன வயதிருக்கும்....

ramachandranusha(உஷா) said...

மங்கை வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள். ஞாநீ அவள் விகடனில் அதிகம் பிரபலம் ஆகாத
பெண்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருந்தார். இப்ப நீங்க நீங்களும் எழுத ஆரம்பித்துள்ளீர்கள்.
போன பதவில் பத்மா குறிப்பிட்டது இதைத்தான்,உதவி என்பது வெறும் பணம், காசை கொடுப்பது மட்டுமலல. அதைவிட சமூகத்திற்கு விழிப்புணவை ஏற்படுத்தும் செயலை நீங்கள் செய்யத் தொடங்கியுள்ளீர்கள்.

பொன்ஸ்~~Poorna said...

மீனாட்சி பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். இன்னும் அதிக தகவல்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்...

மன உறுதியுடன் வாழும் இவர் போன்ற பெண்கள் உலகத்தின் முன்னால் நல்ல எடுத்துக்காட்டு...

Anonymous said...

அருமையான தொடர் ஆரம்பம்... வாழ்த்துக்கள்.

உங்களின் இந்த பதிவின் மூலம்தான் மீனாட்சி எனக்கு அறிமுகம்.

மீனாட்சியின் நம்பிக்கை எனக்குள்ளும் பாய்கிறது. நன்றி மங்கை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நீங்கள் மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி.
மீனாட்சியை விட அவரை ஆதரித்த உறவினர்கள் அதிகம் வெளிக்காட்டப்பட வேண்டியவர்கள்.

Firefoxல் உங்கள் இடுகை மட்டும் ஜிலேபி எழுத்துக்காளகத் தெரிகின்றன. சரி பார்க்கவும்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஏன் உங்க பதிவுகள்ல பெண்கள் மட்டும் அதிகம் பின்னூட்டு இட்டிருக்காங்கன்னு தெரில..ஒரு வேளை உங்கள் எழுத்துக்கள் பெண்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறதா..இல்லை, பதிவுலகில் ஏதேனும் under currents-ஆ?

பெண்கள் மட்டும் வந்து போவதில் உங்களுக்கு வருத்தம் இல்லையென்றால் சரி. ஆனால், நீங்கள் எழுதும் கட்டுரைகளை அனைவருக்கும் ஈடுபாடு வரும் வகையிலும் எழுதியும் பார்க்கலாம்

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

இந்த தொடர் பதிவு முயற்சி நல்ல தொடக்கம். எய்ட்ஸ் நோயாளிகளை அருவெறுப்போடு பார்ப்பதன்மூலம் தன்னை யோக்கியன் எனக்காட்டிக் கொள்ளவே சமுதாயம் தொடர்ந்து முயற்சிக்கிறது.

சேர்ந்தாரைக்கொல்லி எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்ட பெண்கள் நிலை உண்மையில் மிகவும் கொடுமைதான். தான் எந்த தவறும்செய்யாத நிலையில் தண்டனையை அனுபவிப்பது கொடுமையல்லவா?.

திருமணங்களுக்கு முன்பு ஜாதகம் மட்டுமே பார்க்கப்பட்ட நிலை மாறி, இப்போது பெயர் ராசி, எண் ராசி என ஏதேதோ புதிய மூடநம்பிக்கைகளைப் புகுத்திவரும் சமுதாயத்தை ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படுவதன் அவசியத்தை புரிந்துகொள்ள வைக்க வேண்டும். அப்போதுதான் தவறான வழிதேடிச் செல்லும் ஆண்களுக்கு பயம் வரும். பெண்களும் தேவையில்லாமல் தண்டனையை அனுபவிக்கும் நிலை மாறும்.

VSK said...

ஒரு சிறு திருத்தம் மூலம் அரசியல் சட்டத்தில் "திருமணத்துக்கு முன் கட்டாய ரத்தப்பரிசோதனை" கொண்டு வர முடியும்.

அரசியல்வாதிகள்தான் கண்டு கொள்ள வில்லை.

உங்களைப் போன்ற தன்னார்வலக் குழுக்களின் பங்கு இதில் என்ன என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன்.

மீனாக்ஷியின் தைரியமும், அவரை ஊக்குவித்தவர்களின் முயற்சியும் போற்றுதலுக்குரியது.

மங்கை said...

லட்சுமி, அபி அப்பா, துளசி கோபால், பங்காளி, உஷா, பொன்ஸ், மதுரா, ரவி சங்கர், கவுதமன், நன்றி

பங்காளி,
மீனாட்சிக்கு இப்போது 24 வயசு....

ரவிசங்கர்

உங்க கருத்துக்களுக்கு நன்றி..
எதோ எனக்கு தெரிஞ்ச விஷயங்கள பத்தி மட்டும் எழுதீட்டு இருக்கேன்...
முக்கியமா அனுபவங்கள்... யோசிச்சு, எல்லாரையும் கவர்ர மாதிரி எல்லாம் நமக்கு..ம்ம்ம்..வராது....நான் கடைசியா தமிழ் எழுதினது காலேஜ் பரிட்சையில, கடைசியா படிச்சது, திட்டு வாங்கீட்டே கோனார்
அது நான் எழுதுறதலிருந்தே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்...
இந்த குமுதம், விகடன் இது கூட எந்த காலத்திலேயும் படிச்சது இல்ல... அதுக்காக ஆங்கில புத்தகம் தான் படிப்பீங்களானு கேக்காதீங்க..அது சுத்தம்...எல்லாரும் படிக்கனும், பின்னூட்டம் வரனும்னு தெரியாத விஷயங்கள பத்தி எழுதி நாம மக்குன்னு காமிக்கிறத விட இது மேல் இல்லையா...இதவே இன்னும் கொஞ்சம் தரமான தமிழ்ல எழுத முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.. ம்ம்ம்

நன்றி

சிவபாலன் said...

மங்கை,

Excellent Post!

படிக்க வருபவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் உங்கள் எழுத்துக்கள் உள்ளது.

தொடர்ந்து இது போன்று எழுதுங்கள்..

அப்ப ஜாலியான பதிவும் எழுந்துங்க.. ( கோவை போட்டோக்கள் போட மாட்டேன் என்கிறீர்களே? Ha hA hA..)

மங்கை said...

SK

நீங்க சொல்வது சரிதான், ஆனா இது ஓரளவுக்கு தான் உதவியா இருக்கும்...இந்தப்பெண்களே இத வலியுறுத்தீட்டு இருக்காங்க...தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் சொல்லீட்டு இருக்காங்க...

இதுலேயும் ஒரு சிக்கல் இருக்கு
ஆனோ, பெண்ணோ, இது போல ஆபத்தான நடவடிக்கையினால திருமனத்திற்கு முன் பாதிக்கப்பட்டுருந்தாலும்,
அவங்க WINDOW PERIOD ல இருந்தா அந்த சமயத்தில தெரியாது..

மேலும், இது போல பாதிக்கப்பட்ட பெண்களிட பேசும் போது அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம், கர்ப்பமா இருக்கும்போது தாய் வீட்டிற்கு சென்ற பின் கணவன் இது போல நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார்கள்... இது பல பெண்கள் எங்க கிட்ட தெரிவித்த விஷ்யம்.... பிறகு இரண்டாம் பிரசவித்திற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது தான் உண்மை தெரியும்... இதுல ஆனும் பெண்ணும் பாதிக்கப்பட்டு, முதல் குழந்தைக்கு ஆதரவு இல்லாத சூழ்நிலை உண்டாகுது..

ஹ்ம்ம்ம் கொடுமை இல்லையா..

அதனால நடவடிக்கை மாற்றம் மட்டுமே
நிலையான தீர்வா இருக்கும்...

மங்கை said...

நன்றி சிவபாலன்...

கோவை படங்கள் கைவசம் இல்லை...
போடறேன்...

வைசா said...

மீனாட்சியின் மனத்துணிவும் வைராக்கியமும் அசாதாரணமானது. அவரது முயற்சிகள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.

வைசா

VSK said...

ஒரு சிலர் காப்பாற்றப் பட்டாலும் அது நல்லதுதானே!

எங்கிருந்தோ இது ஆரம்பிக்கப் பட வேண்டும் இல்லையா?

அதற்கு இது முதல் நிலையாக இருக்குமே எனத்தான்....!

தப்பு செய்பவர்கள் தான் தான் திருந்தணும்.

பங்காளி... said...

24 வயசா?....

இறைவன் கொடியவன்...ம்ம்ம்ம்ம்

மாசிலா said...

http://padmareaches.blogspot.com/

tamil fonts eppidi??
therila?/ na puthusu athan help me plz
and then moderator on panitten nandri

இவங்களுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.

கண்மணி/kanmani said...

நல்ல சேவை மங்கை. இப்படிப்பட்ட பெண்களும் இவர்களுக்கு வெளிச்சம் காட்டுபவர்களும் இருப்பதால்தான் மனிதம் இன்னும் மிச்சமிருக்கிறது.

மங்கை said...

நன்றி கண்மணி... இவர்கள் தான் எங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர்கள்..

SINDUJAN said...

"அனைவருக்குமே முடிவு மரணம் தானே"
மிக உனர்வு பூர்வமான ஒரு பதிவு