Tuesday, February 06, 2007

நெஞ்சு பொறுக்குதில்லையே-நிதாரியின் நிஜங்கள்


அண்மையில் நோய்டாவில் சிறார்களின் எலும்புக் கூடுகள் மூட்டை மூட்டையாக தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் எல்லோர் மனதையும் உறைய வைத்துள்ளது. நோய்டாவின் செக்டார் 31ல் நடந்த இந்த கொடிய சம்பவத்திற்கு பின்னர், குழந்தைகளை தனியாக வெளியே விட இங்கு யாருக்கும் துணிவில்லை. ஒரு வித பதட்டமும், பயமும் இன்றும் நிலவி வருகிறது.


இந்தப் பகுதியில் பெரும்பாலானோர் வங்க தேசத்திலிருந்து வேலை தேடி இங்கு வந்தவர்கள். மொனீந்தர் சிங் என்பவனும் அவனது பணியாளனான கோலியும் வெறித்தனமாக இந்த காரியத்தை செய்து வந்திருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான இந்த செயலை செய்து விட்டு, சமூகத்தில் நம்மிடையே எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், வெற்றிகரமாக ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருந்திருக்கின்றான். இத்தனைக்கும் இந்த இடத்திற்கு வெகு அருகில் தான் காவல் நிலையமும் இருக்கிறது. இங்கு வீடுகள் ஒன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை.நெருக்கமான குடியிருப்பு பகுதியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இத்தனை எளிதாக குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்திறுக்கின்றான், அருகில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. நகர (நரக!?) வாழ்க்கை பல குற்றங்களுக்கு துணை போகிறது. அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் ஓடி ஓடி அலைந்து களைத்து வீட்டில் ஒடுங்கிக் கொள்கிறோம்.


என்னுடன் பணி புரியும் ஒருவரும் நானும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை சந்தித்து பேசலாம் என்று அங்கு சென்றோம். அந்த இடத்தை நெருங்க நெருங்க மனம் படபடத்தது. நமக்கே இப்படி இருந்தால், அங்கேயே குடி இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும். காவல் துறையினருக்கும், பத்திரிக்கைக்காரர்களுக்கும் பதில் சொல்லியே அவர்கள் ஓய்ந்து போயிருந்தனர். என்னுடன் சென்றவர் பெங்காளியானதால் ஒரு சகோதரி மட்டும் அருகில் வந்து பேச முற்பட்டார். ஆனால் இரண்டு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. அதற்கு மேலும் யாரையும் சந்தித்து பேச துணிவில்லாமல் திரும்பி விட்டோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 20 குடும்பத்தினர், இந்த சம்பவம் நடந்த பின் அவர்களின் சொந்த ஊருக்கே சென்று விட்டார்கள்.

பாயல் என்ற 20 வயது பெண் 2006 மே மாதம் முதல் காணவில்லை. இவர் உத்தரான்ச்சல் மாநிலத்தை சேர்ந்தவர். காணாமல் போவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான் வேலை தேடி தில்லி வந்திருக்கிறார். இவரை சுரேந்திராவும் மொனீந்தரும் தொலைபேசியில் அழைத்து, வேலை வாங்கி தருவதாக சொல்லி வீட்டிற்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டனர். கொலை செய்யப்பட்ட அன்று, பாயல் அந்த வீட்டிற்குள் சென்றதை பார்த்த சாட்சியங்களுடன் புகார் கொடுக்க சென்ற அவர் தந்தையை வாய்க்கு வந்தபடி திட்டி, அடித்து அனுப்பிவிட்டனர் காவல் துறையினர். அவர் தொடர்ந்து தன் மகளைப் பற்றிய தகவல்களை அறிய முயன்றதால், காவல் துறை பாயலுக்கு 'விபச்சாரி' என்று பட்டம் கட்டி, அவர்களின் வாயை அடைத்து அந்த இடத்தை விட்டே காலி செய்ய வைத்து விட்டதாம். பாயலின் செல்போனுக்கு சுரேந்திராவின் செல்லில் இருந்து அழைப்பு வந்ததை காட்டியும் காவல் துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாயலை கொலை செய்த பின்னரும் அவரின் செல்போனை சுரேந்திரா தொடர்ந்து உபயோகித்து வந்திருக்கிறான். அதில் தான் மாட்டிக்கொண்டான்.

காவல் துறையினரின் இந்த பொறுப்பில்லாத, மெத்தனப்போக்கே இத்தனை குழந்தைகள் பலியானதற்குக் காரணம். ஒரு வருடத்திற்கு முன், இங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், இந்த வீட்டிற்குள் விழுந்த பந்தை எடுக்க சென்ற போது ஒரு குழந்தையின் கை எலும்பை பார்த்து பயந்து பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். பெற்றோர்கள் சிலர் சேர்ந்து காவல் துறையினரிடம் முறையிட்டதற்கு, இது பன்றியின் எலும்பு என்று கூறி அனுப்பிவிட்டனராம். காவல் துறை அன்றே உறிய நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த குழந்தைகளை காப்பாற்றி இருக்கலாம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது உண்மையாகி விட்டது.ஆறு மாதத்திற்கு முன்பு தினமும் குறைந்தது இரண்டு குழந்தைகளாவது காணாமல் போவார்களாம். இதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இங்கு இருக்கும் பெற்றோர்கள், தினம் தினம், அவர்களின் குடும்ப புகைப் படத்தை அருகில் இருக்கும் ஒரு ஸ்டுடியோவில் கொடுத்து அதிலிருக்கும் அவர்களின் குழந்தையின் படத்தை மட்டும் தனியாக பல பிரதிகள் எடுத்துக் கொடுக்குமாறு கேட்பார்களாம், எல்லா இடங்களிலும் புகார் கொடுப்படதற்காக.

இதே நோய்டாவில் 'அடோப்' நிறுவன அதிபரின் மூன்று வயது மகன் ஆனந்த் குப்தா காணாமல் போன போது எடுத்த துரித நடவடிக்கைகளில் பாதி கூட இரண்டு வருடங்களில் இந்த ஏழைகளுக்காக காவல் துறை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறையும், தொலைக்காட்சி துறையும் இந்த தொழில் அதிபரின் வீட்டு வாசலிலேயே தவம் இருந்தனர். குழந்தையை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகளை மணிக்கொரு தரம் மக்களுக்கு அள்ளி வீசி கொண்டிருந்தனர். ஆனால் நிதாரியின், இந்த பாவப்பட்ட அத்மாக்கள் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க அத்தனை புண்ணியம் செய்யவில்லை. சட்டமும் நீதியும் அதிகாரவர்கத்திற்கும், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை தவிர வேறு எந்த காரணத்தையும் இதற்கு நினைக்க தோன்றவில்லை.

இந்தியாவிலேயே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற இடம் தில்லியாகத்தான் இருக்க வேண்டும். அனைத்து குற்றங்களுக்கும் தலைநகரமாக தில்லி இருந்து வருகிறது என்பதற்கு சமீபத்தில் நடந்த சம்பவங்களே சாட்சி.

31 comments:

Unknown said...

//இதே நோய்டாவில் 'அடோப்' நிறுவன அதிபரின் மூன்று வயது மகன் ஆனந்த் குப்தா காணாமல் போன போது எடுத்த துரித நடவடிக்கைகளில் பாதி கூட இரண்டு வருடங்களில் இந்த ஏழைகளுக்காக காவல் துறை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறையும், தொலைகாட்சி துறையும் இந்த தொழில் அதிபரின் வீட்டு வாசலிலேயே தவம் இருந்தனர். குழந்தையை மீட்க எட்டுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகளை மணிக்கொரு தரம் மக்களுக்கு அள்ளி வீசி கொண்டிருந்தனர். ஆனால் நிதாரியின், இந்த பாவப்பட்ட அத்மாக்கள் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க அத்தனை புண்ணியம் செய்யவில்லை. சட்டமும் நீதியும் அதிகாரவர்கத்திற்கும், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை தவிர வேறு எந்த காரணத்தையும் இதற்கு நினைக்க தோன்றவில்லை. //

கேவலமான மனிதர்கள்
எப்படி இவர்களால் வாழ முடிகிறதோ?
:-((((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நாளா இதைப் பற்றி நீங்க பதிவிடுவீங்கன்னு எதிர்பார்த்திட்டு இருந்தேன் மங்கை. அனந்த் கண்டுபிடிக்க எடுத்துக்கிட்ட முயற்சியும் இத்தனை குழந்தைகளை கண்டுக்காம விட்டதும் நாட்டுல சட்டம் பணம் இருக்கறவங்களுக்கு மட்டும் தான் சரியான பதில் தரும்ன்னு சொல்லாம சொல்லுது. போய் கேட்ட பெண்களை உங்கிட்ட வளர்க்க பணம் இல்லைன்னா எதுக்கு பெத்து இப்படி காணாம விடறீங்கன்னு கேட்டு கேவலப்படுத்தி இருக்காங்க கேஸ் பதிவு பண்ணவேண்டிய காவல் துறை. :((

Unknown said...

இவன் நிதாரி இல்லை...நாதாரி....பொது மக்களிடம் விட்டு பொது மன்னிப்பு மாதிரி பொது தண்டனை தரனும்,.

பங்காளி... said...

இரு தனி மனிதர்களால் இத்தனை பெரிய கொடூரம் நிகழ்த்தப் பட்டிருக்குமென நினைக்க முடியவில்லை......இதன் பின்னால் இருக்கும் மொத்த உண்மைகளும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும்.......ம்ம்ம்ம்ம்

சீனு said...

//பத்திரிக்கை துறையும், தொலைக்காட்சி துறையும் இந்த தொழில் அதிபரின் வீட்டு வாசலிலேயே தவம் இருந்தனர்.//

பினந்தின்னி பாப்பரசி பேய்கள் அவைகள். பத்திரிக்கை தொழிலுக்கே கேவலம். பேசாமல் வேறு வேலை செய்யலாம்...

இவர்களுக்கு தண்டனை தூக்கெல்லாம் வேண்டாம். ஒரு உயரமான தூன் எழுப்பி தினமும் உண்ண உனவு மட்டும் கொடுத்து மேலேயே ஒரு கூண்டு கட்டி அதில் தங்க வைக்க வேண்டும், சாகும் வரை (யாரோ ஒரு மன்னர் இப்படி தான் தண்டனை கொடுத்தார்). அவனை பார்த்தாவது மற்றவர்களுக்கு பயம் வர வேண்டும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தொடர்ந்து நல்ல தலைப்புகளில் செறிவாக எழுதுகிறீர்கள். நன்றி.

உங்க இடுகைப்பக்கத்துல உரைய காட்டுற அகலத்துல இன்னும் விரிக்கலாமோன்னு தோணுது..இப்ப, பத்திரிக்க styleல பத்தி மாதிரி இருக்கிறது வாசிக்க கடினமா இருக்கு

மங்கை said...

பலூன் மாமா, முத்துலெட்ட்ச்ச்சுமி, ரவி, பங்காளி, சீனு, கருத்துக்களுக்கு நன்றி..

ரவிசங்கர்.. கட்டட வேலை நடந்துட்டு இருக்கு..:-)))....பொறுத்தருள்க.. தங்களின் ஊக்கத்திற்கு நன்றி

சிவபாலன் said...

மங்கை,

உண்மையில் நெஞ்சு பதறுகிறது..

என்னால் எதுவும் பேசு முடியவில்லை..

எது எதுக்கோ என்கவுண்டர் போடறாங்க.. ம்ம்ம் இந்த ஜந்துக்களையும் அப்படி போட்டுவிட்டு போயிடறாலாம்..

இவர்களை பார்க்கும் போது மனசு மிகவும் வலிக்கிறது.

மங்கை said...

சிவா

நல்லா சொன்னீங்க....இவங்கள கோர்ட்ல ஆஜர் படுத்த வந்தப்போ மக்கள் பின்னி எடுத்துட்டாங்க....அவன் நினைவிழந்து விழுந்துட்டான்

நன்றி

பங்காளி... said...

//கட்டட வேலை நடந்துட்டு இருக்கு..:-)))....//

ஏனுங்க இந்த ரேஞ்சுல கட்டடம் கட்டினா என்ன ஆவறதுங்க....மேஸ்திரி சரியில்லையோ....ஹி..ஹி

VSK said...

முழு உண்மையும் வெளிவரும் வாய்ப்பு இருக்கா, மங்கை!

இல்லை, இதுவும் எல்லா ஹை-ப்ரொஃபைல் கேஸுங்க போல பூ சுத்தல்தானா?

கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்களேன்.

மணிகண்டன் said...

இவர்கள் மனிதர்களே அல்ல. இழிபிறவிகள். சி.பி.ஐ.யின் விசாரனையில் இவர்கள் நரமாமிசம் சாப்பிட்டிருக்ககூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களும், இவர்களின் பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

சீனு said...

//சி.பி.ஐ.யின் விசாரனையில் இவர்கள் நரமாமிசம் சாப்பிட்டிருக்ககூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.//

அட! போலீஸ் கிட்டையே நர மாமிசம் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. தர முடியுமான்னு கேட்டிருக்காங்க...

மங்கை said...

மணிகண்டன், சீனு..
அதை பற்றி நானும் கேள்விபட்டேன்.

மங்கை said...

அதெப்பிடி பங்காளி க்கரீட்டா கண்டுபிடிச்சீங்க...
:-))).....
இருந்தாலும் நேத்து ராத்திரி எல்லாம் உக்கார்ந்து over time பண்ணியிருக்கார்..அதுக்காக அவர மன்னிச்சு விட்டரலாம்..:-)))

மங்கை said...

SK ஐயா

இதுல ஒரு நல்ல தீர்ப்பு வராம மக்கள் விட மாட்டாங்க...நிஜ முகங்கள் வெளியே வரும்...

thiru said...

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நமது நாட்டில் பாதுகாப்பு மிக மிக குறைவு. இன்று தாட்ஸ்தமிழ்.காம் ல் மத்திய பிரதேச மருத்துவமனையில் சுமார் 300 சடலங்கள், எலும்புக்கூடுகள், உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடப்பதாக செய்தி. உடலுறுப்பு விற்பனைக்காக கொலைகளும், கடத்தலும் நடக்கின்றனவா என கண்காணிக்கவும், அவற்றை தடுக்கவும் வேண்டிய காலம் வருகிறது.

மங்கை said...

திரு

நாளுக்கு நாள் இந்த குற்றங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன..

அந்த சுட்டியை குடுக்க முடியுமா... அந்த தளத்தில் என்னால் கண்டு பிடிக்க முடியவைல்லை

வருகைக்கு நன்றி

Anonymous said...

மனிதம் இறந்து கொடுமை எங்க நடக்குதுன்னு சுட்டிக் காட்டிய பின்னும், முதலில் நம்மை நல்லவர்களே வசை பாடி, பின்னர், தொடர்ந்து அங்கு அவ்வாறே நடப்பதை தாங்களே பார்க்க நேர்ந்தாலும் யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது என்ன தன்மைன்னு நானும் யோசிச்சிருக்கேன் நிறைய முறை.

தீமை இருக்காது, நல்லவராத்தான் இருக்கணும்னு நினைக்கிறது ஒரு மனித தன்மை தானோ? இல்ல, வெறும் பயம்தான் போல.
இதனால எத்தனை இழப்புகள், எத்தனை கொடுமைகள், சோகமா போச்சுங்க நிறைய விஷயத்தை நினைச்சு.

இந்த கேஸ் பற்றி மேலும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன் உங்க பதிவு பாத்து. நன்றி மங்கை.

thiru said...

மங்கை நான் குறிப்பிட்ட சுட்டி இங்கே http://thatstamil.oneindia.in/news/2007/02/18/mp.html 300 அல்ல 390 எலும்புக்கூடுகள் என்பது செய்தி.

மங்கை said...

மதுரா

ஆஹா..வா கண்ணு வா.. ஒன்ன தான் காணமேனு பாத்துட்டு இருந்தேன்... மொத தொரக்கா வந்திருக்கே.. இனி அடிக்கொருவாட்டி வந்து எட்டி பார்துட்டுப் போ கண்ணு..

கண்கள் திறந்திருந்தும் பார்க்க முடியாமல், காதுகள் இருந்தும் கேட்காமல் அல்லது கேட்க பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மதுரா..
இப்படி நடந்து இருக்கலாம் என்று யூகிப்பதற்கு வேண்டிய தடையங்கள் இருந்தும், பிள்ளைகளை வளர்க்க தெரியாதவர்கள் என்று கூறி விரட்டிய அரசு அதிகாரிகளை என்னவென்று கூறுவது... ஹ்ம்ம்ம்

மனிதம் இல்லை மதுரா..மதம் தான் இருக்கிறது...மதம் ஏறிய மனிதர்கள்

பத்மா அர்விந்த் said...

இன்றுதான் படித்தேன். செய்தியை ஏற்கெனவே கேட்டிருந்தேன். இதே போல முன்பு சில வருடங்கள் முன்னால் நிறைய் 6 -9 மாத பெண்சிசுக்கள் பார்மால்டிஹய்டி நிரப்பிய பெரிய கண்ணாடி குடுவைகளில் இருந்ததை எதற்காகவோ பள்ளம் தோண்டும் போது கண்டெடுத்தார்கள். கிட்டதட்ட ஒரு 100. அந்த செய்தி இறகு யாரும் தொடரப்படாமலே முடிந்துவிட்டது. இதுவும் சில நாட்களில் மறக்காமல் இருக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

மங்கை said...

நன்றி பத்மா..எல்லாத்துக்கும்..:-)

david santos said...

Hello!
This work is very good
I know some INDU, but I do not keiboard to write.
Tank you

சேதுக்கரசி said...

என்ன கொடுமை! தகவல்களுக்கு நன்றி.

உங்கள் பதிவின் அலைன்மெண்டை மாற்றலாமே? ஃபையர்ஃபாக்ஸில் வாசிக்க இயலாமல் நோட்பேடில் ஒட்டவேண்டியிருக்கிறது. நன்றி...

மங்கை said...

வாங்க சேதுக்கரசி.. அலைன்மெண்ட் மாத்தனுமா..பார்க்கிறேன்.. நன்றி அரசி

துளசி கோபால் said...

முந்தியே வந்து பார்த்துட்டு, திகைச்சுப்போய் ஓடிப்போயிட்டேன்.

மனுஷ உயிருக்கு மதிப்பே இல்லாத நாடுன்னு சொல்லணுமுன்னா .........வேற எதைச் சொல்றது?

இங்கே சட்டங்கள் எல்லாம் ரொம்ப வளைஞ்சு கொடுக்கும், பெரிய மனிதருக்கும் பணத்துக்கும் மட்டுமே(-:

மங்கை said...

துளசி...


இவ்வ்வ்வ்வ்ளோஓஓஓஓஓஓஓஒ லேட்டா

துளசி கோபால் said...

இல்லேப்பா. 'முந்தி ஒரு நாள் வந்து பார்த்துட்டுப் போயிட்டேன்'ன்னு
சொன்னதைக் கவனிக்கலையா? (-:

பங்காளி... said...

ஆத்தா...கோவிக்காதிக...

சந்திரமுகி ரேஞ்சுக்கு இந்த பதிவ இன்னும் எத்தினி நாளைக்கு ஓட்டப் போறீக...

புதுசா எதாவது எளுதலாம்ல...

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

கயர்லாஞ்ஜியில் நடந்த கொடுமை நாகரீக வளர்ச்சி இல்லாத கிராமத்தில் ஜாதிக் காட்டுமிராண்டிகள் உலவுவதைக் காட்டியது. நொய்டா சம்பவம் நாகரீக உலகத்திலும் நரமாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் பதுங்கி இருப்பதை காட்டுகிறது.

குழந்தைகளை பாதுகாப்பு இல்லங்களில் சிறைப்படுத்திவிட்டு பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கும் நகர வாழ்க்கை முறைக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மணி தான் இது. பிள்ளைகளோடு பெற்றோருக்குள்ள தொடர்பினை சரியான முறையில் கவனத்தோடு பராமரிப்பதன் மூலமே இது போன்ற கொடுமைகளை சரியான நேரத்தில் தடுக்க, தவிர்க்க முடியும்.