Thursday, April 19, 2007

வெகுஜன ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை

வெகுசன ஊடகங்கள், கருத்தையும் சிநதனையையும் தூண்டும் வண்ணம் இருக்கும் காலம் போய், இப்பொழுது அப்படி ஒரு சிந்தனையே இல்லாமல் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. இன்று குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டியும், இன்டர்னெட்டுமே கதி என்று இருக்கையில், அது ஒரு ஆரோக்கியமான ஊடகமாக இருக்க செய்வது நம் கடமையில்லையா.

பல நல்ல மாற்றங்களை செய்துவரும் ஊடகங்கலை பாராட்டவும் செய்கிறோம். ஆனால் இவை சில சமயம் தவறுகளையும் செய்து வருகிறது. செய்யக் கூடாதனவற்றை ஊடகங்கள் செய்யும் போது அதை சுட்டிக்காட்டுவது நம் கடமை. அதனால் தான் இந்த பதிவு.

நேற்று CNN-IBN லைவ்வாக நடத்திய ஒரு நிகழ்ச்சி, ஊடகங்களின் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையை கேள்விகுறியாக்கிவிட்டது. இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு விஷயம், அபிஷேன் பச்சன் - ஐஷ்வர்யா ராய் திருமணம். ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு இந்த 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த' ஒரு நிகழ்வை மக்களுக்கு கொண்டு வருவதிலே மிகவும் மெனக் கெடுகிறார்கள்..சரி போகட்டும். அவர்களுக்கு விளம்பரம் தேவைப்படுகிறது, சம்பந்தப்பட்ட குடும்பத்தாரை குஷிப்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் மக்களும் இதை எதிர்பார்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட தொலககாட்சியின் சொந்த விருப்பு, வெறுப்பு இது. நான் விமர்சிக்க கூடாது.

நான் இதைப் பற்றி பேச வரவில்லை.

நேற்று இந்த திருமணம் சம்பந்தப்பட்ட ஒரு சடங்கு அமிதாப் வீட்டில் நடந்தது. இதற்கு CNN-IBNல் இருந்து இரண்டு இளைஞர்கள், அமிதாப் வீட்டின் எதிரே நின்று கொண்டு, வருபவர்கள் போகிறவர்களை படம் பிடித்து, அபிஷேக் பற்றியும் ஐஸ்வ்ர்யா பற்றியும் 'சுவையான' தகவல்களை பரிமாரிக் கொண்டிருந்தார்கள். பின் அருகில் இருந்த குழந்தைகளிடம் சில கேள்விகள் கேட்டு இம்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு பேரில் ஒருவர் ஒரு சின்ன குழந்தையிடம்.. 4 அல்லது 5 வயது தான் இருக்கும், அந்த குழந்தையிடம் கேட்ட கேள்வி, இப்படியும் ஒரு தொலைக்காட்சி தரம் கெட்டு போகுமா என்று நினைக்க வைக்கிறது.

அந்த குழந்தையிடம் அவர் கேட்கிறார்

'' hey, do u know what happens after marraige?"

அந்த குழந்தை ஒன்றும் பேசவில்லை

''do you know what people do after marraige?''

குழந்தை மீண்டும் மிரள மிரள முழித்தது


''do you know that a child is born after marraige?''

இதற்கெல்லாம் 5 வயது குழந்தை என்ன பதில் சொல்லும்.

''do you know how a child is born?''

குழந்தைக்கே பொறுக்கவில்லை போலும்...தலையை பலமாக அட்டிவிட்டு இறங்கி ஓடிவிட்டது.

இந்த கேள்விகளை கேட்டு விட்டு அந்த இரண்டு லூசுகளுக்கும் ஹ ஹா ஹா என்று சிரிப்பு வேறு.

இதையெல்லாமா மக்கள் எதிர் பார்க்கிறார்கள்?. இவர்களுக்கு எல்லாம் என்ன சமுதாய பொறுப்பு இருக்கிறது? இத்தனை பலம் வாய்ந்த ஒரு ஊடகம், குழந்தைகளை வளர்ச்சியில் நல்லதொரு பங்கை வகுக்க வேண்டாமா?.

இதில் இன்னொரு பெண் குழந்தையை, பத்து வயது இருக்கும், ஷாருகான் பற்றி எதோ கேள்வி கேட்கிறார்கள், என்ன கேள்வி என்று மறந்து விட்டது,

அந்த பத்து வயது சிறுமியின் பதில்..

' hmmm என்று ஒரு இழுவை..பின், தோலை குலுக்கி, கண்ணை சிமிட்டி

" ya may be Shaaru is jealous of Abishek".

மக்களுக்கு கொண்டு சேரவேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் எத்தனையோ இருக்க , தேவையில்லாத செயல்களும் விமர்சனங்களும் தான் செய்து கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இது போல ஊடகங்களை எவ்வளவு கவனமாக குழந்தைகள் கவனித்து வருகிறார்கள் என்பது தெரியாதா இவர்களுக்கு?. ஊடகங்கள் எந்த அளவிற்கு ஒரு பாதிப்பை உண்டாக்கிறது என்பதை இவர்களே பல ஆராய்ச்சி அறிக்கைகளை நிபுணர்கள் கொண்டு விவாதிக்கத்தான் செய்கிறார்கள்.

நாட்டின் எதிர்காலம் பற்றிய எந்தவிதமான அக்கறையோ எதிர்பார்ப்போ இல்லாத இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை.

23 comments:

Radha Sriram said...

நல்ல பதிவு மங்கை!
தொலைகாட்சியில் கேள்Vஇ கேட்கும் இவர்களிடம் கொஞ்சம் கூட ஒரு சமூக பொறுப்பு இருக்கற மாதிரி தெரியலயே!
இவ்வளவு கேவலமாகவா நடந்துப்பாங்க!
என்னத்த சொல்லரது போங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முன்பெல்லாம் செய்தியை அறியத்தான் ஊடகங்கள்..இன்று அவர்களே செய்தியை உருவாக்குகிறார்கள்.ஒன்று மில்லாததை செய்தியாக்கி செய்தியை ஒன்றுமில்லாததாக்கி ..

பங்காளி... said...

கள்ள சாராயம் விற்பவர்களுக்குள்ள சமூக அக்கறைதான் இந்த ஊடக வியாபாரிகளுக்கும் இருக்கமுடியும். தங்கள் சரக்கு விற்றுத் தீர வேண்டும் அவ்வளவே....அதற்காக எத்தனை கேவலமாகவும் கீழிறங்க தயங்காத மோசடி பச்சோந்திகள்.

அரசாங்கம்,தொழில் நிறுவனங்கள், நீதிமன்றங்கள் என தங்களுக்கு ஒத்துவராதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை குறிவைத்து தாக்கும் ப்ளாக்மெய்லர்கள்......

ஆனால் பேசுவதெல்லாம் நாட்டின் மேன்மைக்காய் ஓடாய் உழைப்பதாய் ஊளையிடும் தெருநாய்கள்.....

இந்தியாவின் எந்தவொரு செய்திச் சேனலும் யோக்கியன் இல்லை....அது யாராக இருந்தாலும் சரி....

பங்காளி... said...

முந்திய பின்னூட்டத்தில் ரொம்ப உணர்ச்சிவசப் பட்டுட்டேனோ.....ம்ம்ம்ம்ம்

பல சமயங்களில் மண்டிக்கிடந்த எரிச்சலின் மொத்த வெளிப்பாடு....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இந்த பூணைகளுக்கு மணி கட்ட வேண்டியது தற்போதைய அவசியம்....ம்ம்ம்ம்ம்ம்

தென்றல் said...

கொடுமை தாங்க!

Rajdeep Sardesai, editor of CNN IBN
கு மெயில் (editor@ibnlive.com) அனுப்பலாம். பொறுப்பான பதில் வரலாம்.
அல்லது SMS (at 2622) அனுப்பலாம்.

மங்கை said...

ராதா, லட்சுமி, பங்காளி, தென்றல்
கருத்துக்கு நன்றி

பங்காளி, தென்றல்

கோவம் தான் வருது.mail அனுப்பலாம்னு தான் இருக்கேன்.

நாகை சிவா said...

//'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த' ஒரு நிகழ்வை மக்களுக்கு கொண்டு வருவதிலே மிகவும் மெனக் கெடுகிறார்கள்.//

தப்பு அவங்க மேல இல்ல, இதுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாக்குறோம் பாருங்க நம்ம மேல....

இது மாதிரி செய்தி எல்லாம் வந்தா இரண்டு செகண்ட் ஐஸ் பாத்துட்டு சேனல மாத்திடனும்...

நாகை சிவா said...

//பல சமயங்களில் மண்டிக்கிடந்த எரிச்சலின் மொத்த வெளிப்பாடு....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இந்த பூணைகளுக்கு மணி கட்ட வேண்டியது தற்போதைய அவசியம்....ம்ம்ம்ம்ம்ம் //

எங்க... தன்னை பற்றிய செய்தி முதல் பக்கத்தில் வரனும் என்று அவன் அவன் காசு கொடுத்துக்கிட்டு இருக்கான்....

//இந்தியாவின் எந்தவொரு செய்திச் சேனலும் யோக்கியன் இல்லை....அது யாராக இருந்தாலும் சரி.... //

பணம் விளையாடும் ஆட்டத்தில் யோக்கியனுக்கு என்ன வேலை சொல்லுங்க பங்காளி...

மங்கை said...

கருத்துக்கு நன்றி நாகை சிவா..

மக்கள் இது போல செய்திகளை எதிர்பார்கிறார்கள் என்பது உண்மை தான்..ஆனால் இவர்கள் நினைத்தால் மக்களின் இந்த எண்ணத்தில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ண முடியும்.. ஆனால் கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், நல்ல நிகழ்ச்சியகளை கொடுத்தால் மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுகார்களே கொடுமை
ம்ம்ம்ம்ம்

துளசி கோபால் said...

அட தண்டப் பன்னாடைகளா........... இப்படியா ச்சின்னப்புள்ளைங்களைக் கேக்கறது?
அக்கம்பக்கத்துலே யாரும் ரெண்டு 'போட்டு' அனுப்பலையா? அடச்சீ....(-:

மங்கை said...

//அக்கம்பக்கத்துலே யாரும் ரெண்டு 'போட்டு' அனுப்பலையா? அடச்சீ....(-:///

இத தான் நானும் சொன்னேன்..அந்த குழந்தையோட அப்பா, அம்மா கண்டிப்பா அங்க தான இருந்து இருப்பாங்க..நாலு போட வேண்டாம்.
அப்பதான் அடுத்த முறை பேசறப்போ எல்லாரும் கவனமா பேசுவாங்க.. ராஸ்கல்ஸ்... இந்த கல்யாணத்த பார்க்க, அதுவும் ரோட்ல இருந்து பார்க்க வந்த பெரியவங்களையும் சொல்லனும், அதுவும் இத்த சின்ன குழந்தைகளை எடுத்துட்டு.. என்னைக்கு தான் நம்ம மக்கள் உணர்ந்து திருந்தப் போராங்களோ... நம்மூட்டு கல்யாண அழைப்புக்கு ஆயிரம் சொத்த சொல்லி தப்பு கண்டு பிடிப்பாங்க.. ஆனா இங்க போய் அமிதாப் வீட்டு முன்னாடி தெருவில தவம் இருக்காங்க...

நினச்சா எரிச்சலா வருது...என்ன ஜென்மங்களோ..ச்ச்சே..

பங்காளி... said...

CNN IBN க்கு மெயில் அனுப்பீட்டிங்களா....அப்படி அனுப்பறதா இருந்தா அந்த டெக்ஸ்ட்...ட இங்க போட்டா...தமிழ் வலைபதிவர்கள் எல்லாரும் அதை ஆளாளுக்கு அனுப்பி நம்ம எதிர்ப்பினை பதிவு செய்யலாம்...

ஒரு ஓரத்துல நமக்கும் வெளம்பரம் கெடச்ச மாதிரி இருக்கும்..ல...ஹி..ஹி...

செல்வநாயகி said...

மங்கை,

மிக்க மகிழ்ச்சி உங்களின் எழுத்துக்கள் இப்படியான விடயங்கள் நோக்கியும் விரிய ஆரம்பித்திருப்பது கண்டு. மடல் கண்டிப்பாக அனுப்புங்கள். இதுகுறித்து வேறு சில எண்ணங்கள் என்னிடம் உண்டு, அதாவது இதையெல்லாம் கண்ணுறுகிற நாம் ஒருங்கிணைந்து ஏதாவது செய்ய முடியுமா என யோசிப்பது பற்றி. விரைவில் அவற்றைத் தொகுத்து இடுகிறேன்.

அந்தக் குழந்தைகளின் அப்பா, அம்மா ஒன்றும் செய்யாததைப் பற்றி நீங்கள் வருத்தப்பட்டிருப்பது நியாயமானது. பொதுவாய்ப் பலருக்கு இருக்கும் ஊடகங்களில் தாமோ, தம் சார்ந்தவர்களோ வருவதில் உள்ள விளம்பர மயக்கம் எப்படியெல்லாம் போவதுவரை அனுமதிக்கிறது என்பது வேதனைக்குரியது. இதைச் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவள் என்ற முறையில் அருகிலேயே பார்த்தும் இருக்கிறேன்.

பெப்சி உமாவுக்கு லைன் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சியில் "பேச்சே வராமல் நாக்கு ஒட்டிக்கொள்கிறது" என்றும் "நீங்க எப்படி இவ்வளவு அழகாயிருக்கீங்க?" என்று ஒரே கேள்வியை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒம்பதாவது ஆளாகவும் கேட்டுவைக்கவும் பழக்கப்பட்ட பெரும்பான்மை சமூகப் பிரஜைகளைக் கொண்டவர்கள் நாம். நம் வட்டத்தில் சின்னச் சின்ன முயற்சிகளை ஆரம்பிப்பதிலிருந்து மேற்கொண்டும் ஏதாவது செய்ய யோசிக்கலாம் மங்கை. நீங்கள் இதுபோன்ற பார்வைகளைத் தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

வெங்கட்ராமன் said...

இன்று ஊடகங்கள் எல்லாம் வியாபாரத்தில் தான் கவனம் செலுத்துகிறார்கள்

நல்ல தொரு பதிவு.

வெங்கட்ராமன் said...

/////////////////////////////////////

கள்ள சாராயம் விற்பவர்களுக்குள்ள சமூக அக்கறைதான் இந்த ஊடக வியாபாரிகளுக்கும் இருக்கமுடியும். தங்கள் சரக்கு விற்றுத் தீர வேண்டும் அவ்வளவே....அதற்காக எத்தனை கேவலமாகவும் கீழிறங்க தயங்காத மோசடி பச்சோந்திகள்.

அரசாங்கம்,தொழில் நிறுவனங்கள், நீதிமன்றங்கள் என தங்களுக்கு ஒத்துவராதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை குறிவைத்து தாக்கும் ப்ளாக்மெய்லர்கள்......

ஆனால் பேசுவதெல்லாம் நாட்டின் மேன்மைக்காய் ஓடாய் உழைப்பதாய் ஊளையிடும் தெருநாய்கள்.....

இந்தியாவின் எந்தவொரு செய்திச் சேனலும் யோக்கியன் இல்லை....அது யாராக இருந்தாலும் சரி....

/////////////////////////////////////

பங்காளி வெளுத்து வாங்கீட்டிங்க. . . .

தென்றல் said...

/பங்காளி said..
தமிழ் வலைபதிவர்கள் எல்லாரும் அதை ஆளாளுக்கு அனுப்பி நம்ம எதிர்ப்பினை பதிவு செய்யலாம்...
/
/செல்வநாயகி said...
அதாவது இதையெல்லாம் கண்ணுறுகிற நாம் ஒருங்கிணைந்து ஏதாவது செய்ய முடியுமா என யோசிப்பது பற்றி. /

பங்காளி, செல்வநாயகி சொன்னது
நல்ல யோசனை-ங்க, மங்கை!

மங்கை said...

பங்காளி, செல்வநாயகி, வெங்கட்ராமன்
கருத்துக்கு நன்றி

எங்க டிபார்ட்மெண்ட் சார்பா, ஒரு மெயில் அனுப்பி இருக்கோம்.. அதுனால நான் தனியா போடலை. இது வரைக்கும் அதுக்கு பதில் வரலை.

செல்வநாயகி..
//பெப்சி உமாவுக்கு லைன் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சியில் "பேச்சே வராமல் நாக்கு ஒட்டிக்கொள்கிறது" என்றும் "நீங்க எப்படி இவ்வளவு அழகாயிருக்கீங்க?" என்று ஒரே கேள்வியை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒம்பதாவது ஆளாகவும் கேட்டுவைக்கவும்//

சரியா சொன்னீங்க..

நீங்களூம் பங்காளியும் சொன்ன மாதிரி ஏதாவது செய்யலாம்

மங்கை said...

வாங்க தென்றல்..

கருத்துக்கு நன்றி.. எல்லோரும் சேர்ந்து ஏதாவது செய்யலாம்..

நம்பி.பா. said...

ஆக்க பூர்வமான பதிவு, தேவையான கேள்விகள்.
இந்த சிந்தனைகளும் வேகமும் நீர்த்துப் போய்விடாமல்,
வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் எதிர்ப்புக் குரலை
பதிவு செய்வது தான் நமது கடமையாக இருக்கும்.

பணத்துக்காக எந்தக் குப்பையினையும் காட்டுவார்கள்,
இருந்தாலும், நமக்கென்ன என்ற சிந்தனையோடு
நாம் போனால், வெகுஜன ஊடகங்களை மட்டுமல்ல,
வெகுஜனங்களின் பொறுப்பற்ற தன்மையைப் பற்றியும்
சிந்திக்க வேண்டிவரும்.

G.Ragavan said...

சரியாச் சொன்னீங்க. தேசிய அளவிலயும் சரி..மாநில அளவுலயும் சரி..இப்பிடித்தான் ஓடிக்கிட்டிருக்கு. அபிஷேக்-ஐஸ்வரியா கல்யாணத்தக் கிண்டலடிக்கிற நாம...சூரியா-ஜோதிகா கல்யாணத்துக்கு எப்படிப் பாஞ்சு பாஞ்சு படிச்சோம். ஆனாலும் ஊடகங்களுக்குப் பொறுப்பு கொஞ்சம் நஞ்சமல்ல....ரொம்பவே குறைவு. அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி செய்திகளை மாற்றித் தருவதில் எல்லா ஊடகங்களும் சிறப்பாகப் பணியாற்றுகின்றன.

அபி அப்பா said...

அபிஷேக்-ஐஸ் வீட்டு வாசலில் ஒரு டி.வி காரர் ஒரு குழந்தையை பார்த்து "கல்யாணத்துக்கு பிறகு என்ன நடக்கும்"ன்னு கேக்க அந்த குழந்தை திரு திரு ன்னு முழிக்க அந்த வழியா போன அபிஅப்பா"டைவர்ஸ்"ன்னு குரல் உட்டார் பாருங்க ....அது அப்படியே லைவா ரிலே ஆயிடுச்சு!


விஷயம் சீரியஸா போவதாலே...கொஞ்சம் ரிலாக்ஸுக்கு..ஹி ஹி

சென்ஷி said...

//அபி அப்பா said...
அபிஷேக்-ஐஸ் வீட்டு வாசலில் ஒரு டி.வி காரர் ஒரு குழந்தையை பார்த்து "கல்யாணத்துக்கு பிறகு என்ன நடக்கும்"ன்னு கேக்க அந்த குழந்தை திரு திரு ன்னு முழிக்க அந்த வழியா போன அபிஅப்பா"டைவர்ஸ்"ன்னு குரல் உட்டார் பாருங்க ....அது அப்படியே லைவா ரிலே ஆயிடுச்சு!


விஷயம் சீரியஸா போவதாலே...கொஞ்சம் ரிலாக்ஸுக்கு..ஹி ஹி//

அபி அப்பா..

என்ன இது சீரியஸான மேட்டர்ல கூட சிரியஸ் பண்றீங்க...

அக்கா.. நல்ல பதிவு.. மெயில் அனுப்பிய மேட்டரை போடவும்.
எல்லோரும் மெயில் அனுப்புகின்றோம்

சென்ஷி

காட்டாறு said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன். எல்லாரும் சொல்லிட்டாங்க நான் சொல்லனும்னு நெனைக்கிறதையெல்லாம்.
தென்றல் குறிப்பிட்டிருந்த மாதிரி ராஜ்தீப்புக்கு ஈமெயில் உடனே அனுப்பிட்டேன். அவருக்கிட்டேயிருந்து பதில் வருதான்னு பார்ப்போம். எனக்கென்னமோ பதில் வரும்ன்னு நம்பிக்கையில்லைதான். ஆனா, கண்டிப்பா நம்ம மாதிரி நாலு பேரு எழுதிப் போட்டிருப்பாங்க. நன்றி தென்றலுக்கு.

எல்லாமே வியாபார நோக்கிலிருந்து மட்டும் தான் பார்க்கப் படுகின்றதுன்னு நெனைக்கிறப்போ மனசு வலிக்கிறது.