Wednesday, April 18, 2007

மேடையேறும் நிதாரி

நிதாரி கொலைகள் நடந்த வீட்டை கடப்பதற்கு கூட பயந்து தயங்கிய நிதாரி குழந்தைகள், இவர்களுடன் சிரித்து, சண்டைபோட்டு விளையாடிய தோழியர், ஒரு காமுகனுக்கு பலியான கொடுமையை மேடையேற்ற தயாராக உள்ளனர். 'பான்டேஸ்' என்ற ஒரு வீதி நாடகக் குழுவினர் இவர்களை அனுகி, '' இங்கு நடந்த கொடுமையை மக்களுக்கு எடுத்து கூற உங்களை விட பொருத்தமானவர்கள் இருக்க முடியாது'' என்று ஊக்கமும் தைரியமும் கொடுத்து, இங்கு நடந்தவற்றை ஒரு நாடகமாக மேடை ஏற்ற குழந்தைகளை தயாராக்கி வருகிறார்கள்.

நிதாரியில் இருக்கும் 50 குழந்தைகள், இதில் சிலர் சாவின் வாயில் வரை சென்று தப்பித்தவர்கள். இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டில் புதறுக்குள் மறைந்து உட்கார சென்ற சிலர், பின் வெளியெ வராமலே போன ஜீரனிக்க முடியாத உண்மையை நடித்து காட்ட இருக்கின்றனர். தங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போதே காணாமல் போன இவர்களின் நட்பு வட்டத்தின் சாவின் பின்னாலும் சாகாத வடுக்கள் இவர்களிடம் மட்டுமே அல்லவா?.

இதில் ஒரு பெண் அவளின் அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு இந்த வீட்டின் வழியே வந்து கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு கை இவளை உள்ளே இழுத்து போட பார்க்க, கையில் வைத்து இருந்த இரும்பு கம்பி கொண்டு இழுத்தவனை அடித்ததினால், பிடி தளரவே ஓடி வந்து விட்டாள். இதற்கு பின் பல குழந்தைகள் காணாமல் போன போது, இந்த சம்பவத்தை காவல் துறையிடம் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நம் சமுதாயத்தில் புறையேறிப்போன அரசு அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கையும் மேடையேற்ற உள்ளனர்.

இவர்களே இதில் நடித்து, சில காட்சிகளை எழுதி, இயக்கவும் செய்கிறார்கள். பாந்தருக்கும் அவன் நண்பர்களுக்கும், கோலி பெண்களை சப்ளை செய்த முறை, நடந்த கொலைகளில் வீட்டில் வேலை செய்த பெண்ணின் பங்கு (ரத்தக் கறை படிந்த தரையை கழுவி விடுவது உட்பட), கொலை செய்த உடலை கோலி சாக்கடையில் வெட்டி போட்டது ஆகிய அனைத்து செயல்கலையும் நடித்து காட்ட இருக்கிறார்கள்.

இந்த நாடகத்தை அரங்கேற்ற இக்குழந்தைகள் காட்டும் ஆர்வம், வெளிப்படுத்தும் உணர்வு நம்மை மனம் நெகிழச்செய்கிறது. இந்த நாடகத்தில் கடைசி கட்டம் மட்டும் வசனம் ஏதும் இல்லாமல், மொளனமாக நடித்துக் காட்ட இருக்கிறார்கள். கண்ணீரை வர வைக்கும் ஒரு நடிப்பு. எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தால், இது நாள் வரையில் கிரிகெட்டும், பட்டமும், விட்டு விளையாடி கொண்டிருந்த இந்தச் செல்வங்கள், இன்று உணர்ச்சி பெருக்குடன் நடிக்க முன் வருவார்கள்?.

ஏனோ இந்த சம்பவத்தை மறக்கவே முடியவில்லை. அதனாலேயே மீண்டும் குழந்தைகளையும், பாதிக்கப்பட்ட பெற்றோர்களையும் பார்த்து பேசலாம் என்று சென்றேன். அப்போது தான் இந்த தகவல்கள் கிடைத்தன. நாளிதழ்களிலும் இந்த செய்தி வந்தது.ஒத்திகை நடந்து கொண்டு இருக்கிறது.

படத்தில் குழந்தைகளின் முகத்தை பாருங்கள். எவ்வளவு கலக்கம், அதிர்ச்சி..

12 comments:

சென்ஷி said...

மங்கை... ப்ளீஸ், நடந்தவற்றை பற்றி விரிவாக எழுத முடிந்தால் தொடருங்கள்... குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான ஒரு புதிய தொடராக அது அமையட்டும்..

எந்த சந்தர்ப்பத்திலும் இதில் கொடுஞ்செயலில் ஈடுபட்ட எவனும் தப்பிக்கக்கூடாது...

சென்ஷி

பொன்ஸ்~~Poorna said...

ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே இந்தக் குழந்தைகள்..

மற்ற விசயங்களில் மெத்தனமான அரசு அதிகாரிகள், இதைப் போல் வெளிச்சம் போட்டுக் காட்டும் செய்கைகளை மட்டும் எந்த மெத்தனமும் இல்லாமல் ஒடுக்க முயலும் வாய்ப்பிருக்கிறது...

குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்..

பங்காளி... said...

ம்ம்ம்ம்ம்ம்ம்.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ இப்படிப்பட்ட செய்திகளை
அவர்கள் காதுக்கே கொண்டுபோகாமல் இருக்க நினைக்கும் நிலைபோய்
அவர்களே அதை உணர்ந்து நடிக்கும் நிலை வந்ததே என்று பதறுகிறது எனக்கு.

நாகை சிவா said...

நல்ல முயற்சி... விழிப்புணர்வு வரட்டும். இந்த குழந்தைகளை கண்டாவது அனைவரும் திருந்தட்டும்.

//நிதாரியில் இருக்கும் 50 குழந்தைகள், இதில் சிலர் சாவின் வாயில் வரை சென்று தப்பித்தவர்கள். //

இறந்து இருந்தால் ஒரு சில நாள் சோகம், சிக்கி உயிர் பிழைத்தவர்களின் சோகம் வாழும் வரை மனதை உறுத்திக் கொண்டு இருக்குமே :-(

காட்டாறு said...

மங்கை, என்னங்க இது? பசுமரத்து ஆணி போல்--ன்னு கேள்விப்பட்டதில்லையா? நடந்த கொடுமை ஆறா புண்ணாய் இருக்கும் போது, இது குழந்தைகளின் மனநிலைக்கு நல்லதில்லைங்க. இது நடந்த கொடுமையை விட கொடுமைங்க. எனக்கு மனசு இங்க அடிச்சிக்குது. யாரும் இதை தடுக்க இல்லையா?

மங்கை said...

கருத்து சொன்ன சென்ஷி, பொன்ஸ், பங்காளி, லட்சுமி,காட்டாறு, சிவா
நன்றி

ஏற்கனவே இத பத்தி எழுதி இருக்கேன்

பொன்ஸ்
நீங்க சொல்றது சரி.. ஆனா இப்ப எல்லாரும் ரொம்ப உஷாரா இருக்காங்க பொன்ஸ்.. மனித உரிமை வாரியமும் பார்த்துட்டு தான் இருக்கு... நானே ஆர்வக் கோளார்ல அங்க போறத ஒரு நன்பர் வேண்டாம்னு நம்மளையும் கேள்வி கேப்பாங்க எதுக்கு போறீங்க என்னன்னு.

மங்கை said...

லட்சுமி , காட்டாறு

ஆமா பதறத்தான் செய்யுது.. ஆனா பாருங்க, இவங்களுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு தான் இந்த மூயற்சி..ஆலோசனை எல்லாம் குடுத்துதான் இந்த முயற்சிக்கு ஆதரவு குடுத்து இருக்காங்க..காட்டாறு, அரசு அதிகாரிங்க நடந்துட்ட முறை கண்டிப்பா இந்த ஊருக்கு எடுத்து சொல்லனும்...மற்ற குழந்தைகளுக்கு இந்த விழிப்புணர்வு இருக்கனும்.. அப்பதான் அதை எதிர்த்து போராடற ஒரு மனநிலைய அவங்களுக்குள்ள வளர்க்க முடியும்...குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பெருகீட்டே வர்ர இந்த கால கட்டத்துல...இது ரொம்ப தேவை..

தென்றல் said...

தகவலுக்கு நன்றி, மங்கை!

செய்தி அறிந்த நமக்கே மனதில் கலவரமும், பயமும் வருகிறேதே ...
பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் மேடை ஏற்ற தயாராக்கி வருவது... கேட்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது ...

அந்த குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மற்றும் பாதுகாப்புக்கு அராசாங்கம்/அதிகாரிகள் அல்லது NGO ஏதாவது நடவடிக்கை எடுத்து உள்ளார்களா? தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

கலாச்சார கனமுள்ள விஷயம். நேருல பார்த்தாதான் தெரியும் அது கொடுக்கும் இறகுகள்.

ஏரோப்ப்ளேன்ல இருக்கதிலையே கனமானது அதனோட எரிவாயு தானாம். ஆனா அதை கொண்டு தான் பறக்கிறது, தன்னோடு சேர்த்து பலரையும், பல புதிய எல்லைகளுக்கு கொண்டு செல்கிறது. அப்படி நினைச்சிக்கிறேன்.

இதன் பின்னணியில், துணிந்து முயற்சி செய்பவர்களை எண்ணி வியந்து கொள்கிறேன். செய்திக்கு நன்றி மங்கை.

மங்கை said...

வாங்க தென்றல்

ஆலோசனை எல்லாம் முறைப்படி நடக்குது..

மதுரா..

கருத்துக்கு நன்றி...

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மங்கை,

இதை எங்களுடன் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

என்ன சொல்வதென்று தெரியாமல் மனது கஷ்டமாக இருக்கிறது.

உங்களுடைய இந்த இடுகையை, Global Voice Onlineஇல் சுட்டியிருக்கிறேன்.

http://www.globalvoicesonline.org/2007/04/25/tamil-blogs-agriculture-street-threatre-and-children

-மதி