Monday, May 25, 2009

ROCK ONNNNNN.............

என்னுடைய 23வது வயது வரை சினிமா இல்லாத சனிக்கிழமையை நினைத்துக் கூட பார்த்தது இல்லை, ஏன் இரண்டு படங்கள் கூட பார்த்து உண்டு. யார் கண் வைச்சாங்களோ.. அதுக்கு அப்புறம் இந்த 19 வருசத்துல மொத்தம் நான் பார்த்த படங்களே 4 அல்லது 5. அதுவும் கடைசியா நான் எப்போ தியேட்டருக்கு போய் படம் பார்த்தேன்னு எனக்கே நினைவில்லை.

இன்னைக்கு என் பழைய அலுவலக நண்பனும் அவன் அம்மாவும், சொல்லாமல் கொள்ளாமல் ஒரு தியேட்டருக்கு கடத்தீட்டு போனாங்க...சினிமானு சொன்னா நான் வரமாட்டேனு..ஷாப்பிங்க போலாம்னு பொய் சொல்லி...'ராக் ஆன்' என்ற இந்தி படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து அழைச்சுட்டு போனாங்க. தியேட்டர் காலியா இருந்துச்சு..இதுக்கு எதுக்கு ரிசர்வ் பண்ணாங்கன்னு தெரியலை... தி்யேட்டர்ல 2 1/2 மணி நேரம் உட்காருவதே கஷ்டம்...அதுவும் கூட்டமே இல்லாத படத்துக்கு கூப்டுட்டு வந்து இம்சை பண்றாங்களேனு எரிச்சல்... தியேட்டரில் ஜில்லுனு ஏசி...உள்ளே நுழைஞ்ச உடனே, மனதில் ஏதோ ஒரு குதூகலம்....அந்த சூழல்.... ட்ஜிட்டல் சவுண்ட்...படம் பார்க்க வந்திருந்த காதல் ஜோடிகளின் சிரிப்பு, கல்லூரி மாணவர்களின் கலாட்டா மனசுக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது.

பழைய நினைவுகள், தோழிகளுடன் கோவை கே ஜி தியேட்டரில் கூத்தடித்த நாட்கள் சட்டென்று கண் முன்னே நடனம் ஆடின. சனிக்கிழமை காலைக்காட்சி அல்லது மதியம் கண்டிப்பாக அங்கிருப்போம். ஸ்டடி ஹாலிடேஸ்களில்,எங்கள் க்ரூப் ஸ்டடி பெரும்பாலும் கே ஜி தியேட்டரில் தான். டிக்கெட் இல்லாமல் திரும்பின நாட்களே இருக்காது. யாரையாவது பிடித்து படத்தை பார்த்துவிட்டு தான் வருவது. என்னை தவிர தோழிகள் எல்லோரும் தீவிர ரஜினி ரசிகைகள்...ரஜினி படத்தை ஓபனிங் ஷோ பார்ப்போம்னா...நாங்க அடிச்ச கூத்த கொஞ்சம் நினைச்சு பாருங்க...அது எல்லாம் ஒரு காலம்...ஹ்ம்ம்ம்ம்...

சரி Rock On..படத்தைப் பற்றி கொஞ்சம் பார்போம்...2008 ல் வெளிவந்த படம்...இப்படத்தின் தயாரிப்பாளர் 'தில் சாத்தா ஹை' புகழ் ஃபர்ஹான் அக்தர்.இவர் ஜாவேட் அக்தரின் (ஷபனா ஆஸ்மியின் கணவர்) முதல் மனைவியின் மகன். படத்தை இயக்கியவர் அபிஷேக் கபூர். பல விருதுகளைப் பெற்ற படம்.

ஏற்கனவே என் மனதில் ஓடிக்கொண்டிருந்த நினைவுகளுக்கு தீனி போட்டது படம். நம் சிறு வயது ஆசா பாசங்களை, சில காரணங்களினால் காலப்போக்கில் நாம் எவ்வாறு மறந்து போகிறோம் என்பது தான் கரு. நமக்கு நாமே சமாதானங்கள் கற்பித்துக்கொண்டு, காரணங்களை பட்டிலிட்டுக் கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் போய் ஏற்றுக் கொள்கிறோம். இது ஒரு வகையில் நல்லதாக பட்டாலும், இன்று எனக்கு அமைந்தது போன்ற ஒரு நாளில்,ஒரு அனுபவத்தில், பழைய வாழ்க்கைக்கு மனது ஏங்காமல் இருப்பதில்லை. பெரிதாக ஏதும் இழக்கவில்லை என்றாலும், அந்த நினைவுகளுக்கு ஈடாக வேறு ஏதும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?....ம்ம்ம்ம்


படத்தில் நான்கு நண்பர்கள் ஆதித்யா (ஃபர்ஹான் அக்தர்), ஜோ (அர்ஜுன் ராம்பால்) ராப் மற்றும் கே.டி, மேஜிக் என்ற ராக் இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். திறமை இருந்தாலும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு போட்டியில் ஜெயித்து, அதன் பரிசாக நல்லதொரு வாய்ப்பு அமையும் பொழுது, ஆதிக்கும் ஜோவிற்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து நண்பர்கள் பிரிந்து விடுகிறார்கள். பத்து ஆண்டுகள் கடந்து செல்கின்றன.

ஆதி பெரும் பணக்காரனாகி விடுகிறான். அவனுக்கு தன் அலுவலக பணிகளைத் தவிர வேறொன்றும் பெரிதில்லை. சிரிப்பதை கூட மறந்து, மனைவி சாக்ஷியிடம் கூட தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல், இயந்திரத்தனமான வாழ்க்கயை வாழ்ந்து வருகிறான்.

ஜோ இசையை தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியாமல், வாழ்க்கையை வறுமையில் கழிக்கிறான். தன் குடும்ப தொழிலான மீன் வியாபரத்தை அவன் மனைவி கவனித்துக் கொள்கிறாள்.



அர்ஜுன் ராம்பால்


கேடி தன் தந்தையின் ஷோரூமை அக்கறை இல்லாமல் நிர்வாகம் செய்கிறான். ராப் மட்டும் சில விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

ஆதியின் மனைவிக்கு தன் கணவன் வாழ்க்கையில் எதையோ பரிகொடுத்தவனைப் போல இருப்பதாக படுகிறது. ஏதோச்சையாக அவள் கணவனின் இசை ஆர்வமும், அவனின் கடந்த கால வாழ்க்கையும் தெரிய வருகிறது. இசையை இப்படி வெறித்தனமாக ரசித்தவனா இன்று ஒரு ஜடம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று ஆச்சிரியப்படுகிறாள்.அவளின் முயற்சியால், ஆதிக்கு விருப்பம் இல்லாவிடினும், ஒரு சந்தர்பத்தில் மனம் மாறி, சில பல சம்பவங்களுக்குப் பின்னர் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள்.

பிரிந்த நண்பர்கள், 10 வருடங்கள் கழித்து ஒன்று சேரும் பொழுது அவர்களின் தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கூட படத்தில் ஆழமாக சித்தரிக்கப்ப
ட்டிருக்கிறது. 20 களில் நீண்ட கூந்தலுடன் இருந்த நண்பர்கள், இப்பொழுது ஜோவைத் தவிர மற்றவர்கள் ட்ரிம் செய்து கொள்கிறார்கள். ஜோ காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதை இது காட்டுகிறது. ராப்புக்கு தலை முடி வெகுவாக குறைந்திருப்பதை நண்பர்கள் கேலி செய்கிறார்கள். அதற்கு ராப், இப்போது இது தானே ஃபேஷன் என்று கூறி சிரிக்கிறான். வயதாகி விட்டது, முடி கொட்டிவிட்டது என்று ஒத்துக் கொள் என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால் முடி கொட்டுதல் வயதினால் அல்ல,புற்று நோய்க்கு அவன் எடுத்துக் கொண்டிருக்கும் கீமோ தெரபியினால் என்று பின்னர் தான் தெரியவருகிறது. அவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, மீண்டும் ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி கொண்ட பின் இரண்டு மாதங்களில் ராப் இறந்து விடுகிறான். ஆதிக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு ராப் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மீண்டும் தங்கள் உயிரான இசையை வாழ்க்கையோடு இணைத்துக் கொள்கிறார்கள்.

சாதாரண கதை, ஆனால் அது சொல்லப்பட்டிருக்கும் விதம், அசத்தல். நடித்த ஒவ்வொரு நடிகரும் உணர்வு
ப் பூர்வமாக நடித்திருக்கிறார்கள். ஜோவாக நடித்த அர்ஜூன் ராம்பால்...ஆதியாக நடித்த ஃபரான் அக்தர்...நம் நடிகர்கள் இவர்களிடம் கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளம். தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரத்தின் தன்மையை நன்றாக உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இதில் நடித்த நான்கு நடிகர்களுமே திறமையாக நடித்திருக்கிறார்கள். ஆதியின் மனைவியாக நடித்த ப்ரச்சி தேசாய், தன் சிறிய புன் சிரிப்பிலேயே அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டிவிடுகிறார்.

என்னை மிகவும் கவர்ந்தவர் ஜோவின்
மனைவியாக நடித்த சஹானா
கோஸ்வாமி. நசிருதீன் ஷா முதன்
முதலில் இயக்கிய படத்தில் அறிமுகமானவர். சர்வ சாதாரணமாக அலட்டல் இல்லாமல் நடித்து, கதாபாத்திரத்தின் உணர்வுகளை கலக்கலாக வெளிப்படுத்துகிறார்.

ஆதியின் மனைவி எடுக்கும் முயற்சி அவனுக்கு பிடிக்காமல் போகவே அவளை கடிந்து கொள்கிறான். பிரிந்து போன மனைவி தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று மனைவியின் தோழியிடம் சொல்கிறான். அவள், அவன் மனைவி அவனின் சந்தோஷத்திற்காகவே செய்ததாக சொல்லும்போது, ஆதி சொல்கிறான்' எனக்கு யாரையும் சந்திப்பதில் விருப்பமில்லை...இன்னும் எத்தனை நாட்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வுகள் என் பின்னால் ஓடி வரும்' என்று கேட்கிறான், அதற்கு தோழி ''நீ அதைக் கண்டு ஓடும் வரை" என்கிறாள்.


நன்றாக எடுக்கப் பட்டிருக்கும் ஒரு படம். கண்டிப்பாக சிடி வாங்கி பாருங்கள்.

Monday, May 18, 2009

ஜெர்சி கர்ல்- Jersy Girl-திரைப்பார்வை


ஜெர்சி கர்ல்... திரைப்பட விமர்சகர்களால் பல் வேறு விதமாக விமர்சிக்கப் பட்ட படம். மனைவியை இழந்த கணவனுக்கும், அவன் மகளுக்கும் இடையேயான பிணைப்பை பற்றிய ஒரு உருக்கமான படம்.

ஊடகத்துறையில் பிரபலமானஆலிவர் ட்விங்கி் (Ben Affleck) மனைவியை இழந்தவர்.
குழந்தை பேற்றின்போது மனைவி இறந்து விடுகிறார். மனைவி இழந்த துக்கத்தை மறக்க தன் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். பிறந்த குழந்தையின் மேலும் அக்கறையில்லை. ஆலிவரின் தந்தை ஊரில் இருந்து வந்து குழந்தையை பார்த்துக் கொள்கிறார். மகனின் இந்தப் போக்கை திருத்த நினைத்து, ஒரு நாள் தன் ஊருக்கு கிளம்பிவிடுகிறார். மனைவியை இழந்த துக்கம் ஒரு பக்கம் அழுது கொண்டே இருக்கும் குழந்தை ஒரு(மறு) பக்கம், இதனால் மிகுந்த மன அழுத்தம் அடைந்து அடுத்த நாள் பணி செய்யும் இடத்தில் பிரபல நடிகர் வில் ஸ்மித்தை அறைந்து விடுகிறார். அனைவருக்கும் எதிரில் இது நடந்ததால், வேலையை இழக்க நேரிடுகிறது. அதுமட்டுமில்லாமல் அனைத்து நிறுவனங்களும் இவரை பிளேக் லிஸ்ட் செய்து விடுகிறது. இதனால் ஆலிவரின் தந்தை இருக்குமிடமான நீயூ ஜெர்ஸ்சிக்கே குழந்தையுடன் சென்று விடுகிறார். குழந்தையை பார்த்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவதுடன் அதை முழுமனதுடன் நேர்த்தியாக செய்து வருகிறார்.

எவரும் அவருக்கு ஏற்ற வேலையை கொடுக்காத நிலையில், ஒரு அரசு நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். ஒரு நல்ல தந்தையாக இருப்பதை மட்டுமே மனதில் கொண்டு வேறு பெண்களை மனதிலும் நினைக்காமல், மனைவியின் நினைவுகளுனூடேயே 7 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்.


இந்த நிலையில் அருகில் இருக்கும் ஒரு வீடியோ/சீடி கடை
யில் பணி புரியும் ஒரு பெண் இவர்கள் குடும்பத்திற்கு நல்ல தோழியாக இருந்து வருகிறார்.

ஒரு பொதுப்பணியில் சிலருக்கு ஆதரவாக பேசி அவர்களுக்கு நியாயம் வாங்கி கொடுத்த பின், தன் கடந்தகால பணி அவருக்கு நினைவு வருகிறது. மீண்டும் நீயூயார்க் நகரம் செல்ல முயற்சி செய்கிறார். பழைய நண்பர் ஒருவர் மூலம் ஒரு நிறுவனத்திடம் நேர்காணலுக்கான தேதியை குறிக்கிறார். இது தந்தைக்கோ, மகளுக்கோ தோழிக்கோ யாருக்கும் பிடிக்கவில்லை. நியூஜெர்சியை விட்டு போக மகளுக்கு விருப்பமில்லை. நேர்கானலுக்கு செல்ல வேண்டிய அதே நாளில் தான் பள்ளியில் குழந்தையுடன் ஒரு போட்டியில் தானும் பங்கேர்க்க வேண்டும். இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் குழந்தை அழுகிறாள். விவாதத்தில் உணர்ச்சிவசப்பட்டு, கோவத்தில், உன்னாலும் உன் அம்மாவாலும் தான் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று கூறிவிடுகிறார்.

இந்த வார்த்தைகளை எதிர்பாக்காத குழந்தை அழுதபடி தன் அறைக்குள் சென்றுவிடுகிறாள். அடுத்த நாள் தன் தவறை உணர்ந்து குழந்தையிடம் மன்னிப்பு கேட்கும் இடத்தில் அவருடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்குகிறது. தொழிலின் மேல் தந்தைக்கு இருக்கும் ஆர்வத்தினாலேயே அப்படி நடந்து கொண்டார் என்பதை உணர்ந்து, நியூயார்க் செல்வதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறாள்.

நியூயார்க் நகரில் நேர்காணலுக்காக காத்துக்கொண்டிருக்கும் போது 7 ஆண்டுகளுக்கு முன் இவர் அறைந்த வில் ஸ்மித்தை சந்திக்கிறார். ஆனால் வில் ஸ்மித்திற்கு இவர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. பேச்சு குழந்தை குடும்பம் என்று செல்கிறது. இந்த உரையாடலில் குழந்தையின் மகிழ்ச்சியை விட இந்த உலகத்தில் வேறொன்றும் பெரிதில்லை என்று நம்புகிறார்.

உடனே
நேர்காணலை புறக்கணித்துவிட்டு தன் குழந்தையுடன் பள்ளியில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரைகிறார். கடைசி நிமிடத்தில் மேடையில் தோன்றி குழந்தையை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார்.

போட்டியில் வெற்றி பெற்ற பின் குழந்தை, தாத்தாவுடனே இருக்கப்போகிறோமா என்று கேட்க, ஆலிவரும் ஆமாம் என்கிறார்.

மகள்- " உனக்கு அந்த வேலை அவ்வளவு பிடித்தமான ஒன்றென்றால் அதை ஏன் ஏற்கவில்லை'.

ஆலிவர்-
எனக்கு அந்த வேலை பிடித்தமானது தான்.. ஆனால் யோசித்துப் பார்த்தால் என் வாழ்க்கையில் உனக்கு அப்பாவாக இருப்பதில் மட்டும் தான் நான் வெற்றியடைந்திருக்கிறேன்"

ஆலிவரின் இந்த பதில் தான் எனக்கு இந்த பதிவை எழுத தூண்டியது.


நியூயார்க் நகருக்கு தான் செல்லுவதாக மகன் கூறியதும்..தானும் அவர்கள் கூட வருவதாக ஆலிவரின் தந்தை கூறுவார். அந்த உரையாடல்..............

ஆலிவர்-அப்பா நீங்க கடைசி காலத்தில் தனியாக இருக்க விரும்பவீ்ங்கன்னு நினச்சேன்.

அப்பா - இருக்கலாம், அதே சமயம் நான் தனியாக சாக விரும்பவில்லை

Tuesday, April 14, 2009

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்



அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே


ஒற்றுமையும் அன்பும் தழைத்து

கருணை, சகோரத்துவம் ஆகிய நற்பண்புகள் பெற்று

புத்துணர்வோடும் புதுப்பொலிவோடும் இனிதே வாழ

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என் அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு இனிய

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Monday, April 13, 2009

ஏன் இப்படி இருக்க கூடாது?......

தொடர்ந்து ஒரே மாதிரி என் துறை சார்ந்த விஷயத்தை மட்டுமே எழுதறேன்னு ஒரு எண்ணம். அதனால ஒரு மாறுதலுக்காக வேற ஏதாவது எழுதலாம்னு ஒரு ஆசை.

தமிழ் வலைப்பதிவுகள்ள ஒரு காலகட்டத்துல துறை சார்ந்த பதிவுகள் அதிகமா வந்துட்டு இருந்துச்சு. ஒவ்வொருதுறையிலும் விஷயம் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருந்தாங்க...இருக்காங்க.. வலையுலகில் நான் காலடி எடுத்து வைத்த புதிதில் இது போன்ற பதிவுகள் நிறைய படிக்க முடிஞ்சது. உதாரணத்திற்கு- சாஃப்ட்வேர் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்.அதையெல்லாம் ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ள பலருக்கு பொறுமை இருக்காது.எனக்கு இல்லை..:-) லட்டு மாதிரி எளிய தமிழில் தெளிவா எழுதி கொடுத்துட்டு இருந்தாங்க. ஆர்வத்துடன் படித்து வந்தோம். ஆனா அது எல்லாம் இப்போ சுத்தமா காணோம்.

புகைப்படக்கலை , மென்பொருள், கணினி, மருத்துவம், பொருளாதாரம், மனோதத்துவம், உயர் கல்வி இப்படி நமக்கு ரொம்பவும் பரிச்சயமில்லாத பல துறைகளை பற்றிய தமிழ் பதிவுகள் என் போன்ற பலரின் அறிவுக்கு சத்தான தீனியை போட்டவை. குறிப்பாக பொருளாதாரம் பற்றிய மா.சிவகுமாரின் பதிவுகள். நான் விரும்பி படிப்பவைகளில் ஒன்று. எதனாலோ அது எல்லாம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டன. அந்ததந்த துறையில் இருப்பவர்கள் அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால், உலக தமிழ்மக்கள் பலருக்கு உதவியாக இருக்கும்.

இதுல விதிவிலக்கா நானும் ரொம்ப நாளா கவனிச்சுட்டு இருக்குற ஒன்னு... இந்த பங்கு சந்தையை பத்தி எழுதுற சரவணகுமார் மட்டும் யாருக்காக எதுக்கு இப்படி மெனகெட்டு மாங்கு மாங்குனு எழுதறார்னு நினப்பேன். (http://panguvaniham.wordpress.com) . அவர் ஆரம்பித்த கால கட்டத்தில் அதுல அதிகமா பின்னூட்டம் நான் பார்த்தில்லை. அப்புறம் யார் வந்து படிக்கிறாங்கன்னு இவர் தினமும் எழுதறார்னு நினச்சதுண்டு. ஆனா இப்ப தான் தெரியுது பின்னூட்டமிடாமல் நிறைய பேர் படிச்சிட்டு இருந்திருக்காங்கன்னு.

அவருடைய ஆர்வத்தினாலேயே தினமும் பங்குச்சந்தை நுட்பங்களை ஆராய்ந்து, நிலவரங்களை சொல்வதோடு நில்லாமல், வர்த்தகம் செய்யக்கூடிய பங்குகளை பரிந்துரையும் செய்துவருகிறார். இவரைத் தொடர்ந்து திரு. சாய் கனேஷ் அவர்களும் பங்குசந்தை நிலவரங்களை அருமையாக தினமும் வழங்கி வருகிறார். இவர்களை தொடர்ந்து Share hunter, பாலாஜி, விஜய்கனேஷ், அஷோக் நாட்டாமை ன்னு நிறைய பேர் இப்போ தினமும் சந்தை பற்றி தங்களின் பார்வையை எழுதிட்டு இருக்காங்க.

கோவை சென்ற போது தோழி ஒருத்தி இந்த பதிவுகளுக்கு பாராட்டு பத்திரம் கொடுத்த போதுதான் இவர்களின் பங்களிப்பின் அருமை எனக்கு தெரிந்தது. சக வலைபதிவர் என்கிற முறையில் அது மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. முழுநேர தினவர்த்தகம் செய்யும் அவள், இந்த பதிவுகள் அவளுக்கு பேருதவியாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினாள். இது வலைபதிவுகளின் வெற்றியல்லவா!


பங்குச்சந்தை பற்றிய அடிப்படைகளை தெரிந்து கொள்ளவும், நுட்பங்களை கற்றுக்கொள்ளவும் பல ஆங்கில தளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அன்றாடம் அமெரிக்க பொருளாதாரம் சரிவதையும், அது சந்தைகள் மீது ஏற்படுத்தும் தாக்கதையும், தங்கத்தின் ஏற்ற இறக்கத்தையும் பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். இது எதனால் ஏற்படுகிறது?, இதன் பின் புலம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வமிருந்தும், அதை ஆங்கிலத்தில் தேடிப்பிடித்து படித்து தெளிய நமக்கு பொறுமையோ,ஆர்வமோ இருப்பதில்லை.

அதையே எளிய தமிழில் நமக்கு தர கூடிய பதிவர்கள் கண்டிப்பாக நம்மிடையே இருக்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்களை பங்குசந்தையை அலசுவதன் மூலம் இந்த பதிவுகள் நமக்கு தருகின்றன. எத்தனை பேருக்கு இந்த பதிவுகள் இருப்பது தெரியும் என்று தெரியவில்லை.

பங்குசந்தை நிலவரங்களை கூறவும், அன்றைய தினத்திற்கான பரிந்துரைகளைச் சொல்லவும், இந்த நண்பர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு குறிப்பிட்ட பங்கினை பரிந்துரைக்க அந்தப்பங்கின் கடந்த கால நிலை, தற்போதைய நிலை, பங்கின் விலையை நிர்ணயிக்கும் வெளி - உள் காரணிகள் ஆகியவைகளை ஆராய்ந்து, அவை அன்றைய தினத்திற்கு வர்த்தகம் செய்ய ஏற்றதுதான என்பதை கூறி தினவர்த்தகர்களுக்கு உதவி வருகிறார்கள். இதில் மற்றவர்களின் பணம் சம்பந்தப்படிருப்பதால் இவர்கள் அதிக அக்கறையுடனும், கவனத்துடனும் ஆராய்ந்து கூறிவருகிறார்கள்.

கடந்த 4-5 மாதங்களாக பங்குசந்தையில் தினவர்த்தகம் செய்து வரும் சில நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இதில் ஆர்வத்துடன் தினவர்த்தகம் செய்யும் பெண்களும் உள்ளனர். இவர்களில் பலர் குடும்பத் தலைவிகள். இவர்கள் சாதாரணமாக என்னுடன் யாஹூவில் தமிழில் பேசிக் கொண்டே தினவர்த்தகம் செய்வது இன்றுவரை எனக்கு பெரிய ஆச்சிரியமே. இவர்களுக்கு உற்சாகமளித்து உதவுபவர்கள் மேற்கூறிய பதிவுகளை எழுதும் நண்பர்கள் என்பது சந்தோஷமான ஒரு சங்கதி.


பங்குசந்தை பற்றிய அடிப்படையில் இருந்து நுட்பகூறுகள் வரை தாங்கள் கற்றுக் கொண்டது இந்த பதிவுகள் மூலம் தான் என்று இவர்கள் கூறும் போது, இந்தப் பதிவுகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களின் அனுபவத்தினை, ஆற்றலை தன் தாய் மொழியில் அனைவரும் பயன்படுத்திடும் வகையில் எடுத்துரைக்கும் இவர்கள்தான் உண்மையான மொழி பற்றாளர்கள் அல்லது இன உணர்வாளர்கள் என்றால் அது மிகையாகாது.


தினவர்த்தகம் பற்றிய பதிவுகள்


சரவணகுமார் - http://panguvaniham.wordpress.com
சாய்- http://top10shares.wordpress.com/

சரவண பாலாஜி- http://mayashare.blogspot.com/

விஜய் கணேஷ்- http://krvijayganesh.wordpress.com/

அசோக் நாட்டாமை - http://investorarea.blogspot.com/

அலெக்ஸ்- http://sharehunter.wordpress.com

மிழ் வலைபதிவுகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டுமானால் இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்.தங்களுக்குத் தெரிந்ததை சக தமிழர்களுக்கு உணர்த்துவதன் மூலம் ஒற்றுமையையும், பினைப்பினையும் உருவாக்க இயலும். இந்த பதிவின் நோக்கமும், எதிர்பார்ப்பும் அதுவே.

Saturday, April 11, 2009

பெண்மையின் மென்மை கண்டு கலைஞனாகினான்..

உயர்ந்த மனிதன் படத்தில் வரும் 'நாளை இந்த வேளை பார்த்து...' பாடலுக்கு தான் பி. சுசீலா அவர்களுக்கு முதல் முதலில் தேசிய விருது கிடைத்தது (தமிழில்).
பாடும் வரிகளுக்கு உணர்ச்சியூட்டி நம்மை அந்த பாடலின் சூழ்நிலைக்கே கொண்டு சென்றுவிடுவார்.

சுசீலாம்மாவை சொல்லீட்டு இந்த பாட்டுக்கு ஒயிலாக நடனம் ஆடிய வாணிஸ்ரீ யை சொல்லைன்னா எப்படி...கருப்பு வெள்ளை படத்திலும் அழகோ அழகாக....

பாடலை கேட்டு ரசியுங்கள்.




பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய் ?

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா..
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு.. ஆ...
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்
கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்..
கலைஞனாகினான்..( நாளை )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்..
மயக்கம் கொண்டதேன்..( நாளை )

Tuesday, March 31, 2009

மௌனங்கள்...Childhood Interrupted


குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள், அரசாங்கத்தின் உறுதி மொழிகள் இருந்தும் பிஞ்சுகள் நாளும் ஏதோ ஒரு முறையில் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டும் தானிருக்கிறார்கள். காலங்காலமாக நம் சமூகத்தில் நடந்தேறிக் கொண்டிருந்த சில மன்னிக்க முடியாத குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளியே வர தொடங்கியிருக்கின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் மட்டும் 3 சம்பவங்கள். தந்தை என்று சொல்லி கொண்டிருந்த ஜென்மமே சொந்த மகளை கற்பழித்த கொடூரம். இதில் தாயும் உடந்தை. நினைத்துப் பார்க்கவே பதைக்கிறது. இதைத் தொடர்ந்து பஞ்சாபிலும், இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அல்லும் பகலும் காத்தருளும் ஒரு கட்சிப் பிரமுகரின் மகள், தன் தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறி இருக்கிறார்.

பாலியல் கல்வியின் அவசியத்தை ஆராய்ச்சிகள் மூலமும், எடுத்துகாட்டுகள் மூலமும் எடுத்துக் கூறியும், தங்களின் வக்கிர மனதுக்கு தீனி போடவே, அரசியல் கட்சிகள் பாலியல் கல்வியை வேண்டாமென்று ஒதுக்கி வருகிறார்கள் என்று தான் நான் கூறுவேன். பண்பாடு, கலாச்சாரம், வெங்காயம் என்று கூவி, கூவி இளைய தலைமுறையினருக்கும் இடையூறு விளைவித்து கொண்டிருக்கிறார்கள். வக்கிர மனங்கொண்ட அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.


குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறை அவர்களது சுதந்திரத்தையும், உரிமையையும் வன்முறைக்குள்ளாக்கி, அவர்களின் இருப்பை முடக்கி நிர்மூலமாக்குகின்றது.இது பெரும்பாலும் குடும்பத்துக்கு வேண்டியவர்களாலும், உறவினர்களாலுமே ஏற்படுகிறது என்பது தான் கொடுமை. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இரண்டு பாலாரும் வன்முறைக்கு உள்ளாகிக்கொண்டு தானிருக்கிறார்கள்.


ஆராய்ச்சிகள் மூலமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நேர்காணல் மூலமும் இது போன்ற உண்மைகள் தெரிய வருகிறது. அதை வைத்து தான் பாலியல் கல்வியில் பாடங்களை வகுத்து இருக்கிறார்கள். இந்த வன்முறைகளிலிருந்து எவ்வாறு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கூறுவதே பாலியல் கல்வி. மற்றபடி பாலியல் கல்வி என்பது உடலுறவைப் பற்றி சொல்லிக் கொடுப்பது அல்ல. குழந்தைகளுக்கு யாரிடமிருந்து, எவ்வாறு இது போன்ற தொல்லைகள் வருகிறது, அதை எவ்வாறு அடையாளம் காண்பது, அதிலிருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது, போன்ற பயிற்சிகள் அடங்கிய ஒரு கல்வி முறை தான் பாலியல் கல்வி.

நடைமுறையில் இல்லாத ஒரு நிகழ்வு ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால் அதை உணர்ந்து, முன்கூட்டியே மற்றவர்களிடம் எடுத்துக் கூற ஒரு நம்பிக்கையை ஊட்டவே இந்த பயிற்சி. 'பாலியல் கல்வி' என்றால் தகாத ஒன்றாக பார்ப்பதால், சிலர் அதை 'வாழ்வியல் கல்வி' என்றும் கூறுவர். பெற்றொர்களும் ஆசிரியர்களும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசினால் யாராவது ஒருவரிடமாது அக்குழந்தை புகார் கூற வாய்பிருக்கிறது. ஒருவர் தவறு செய்தால், மற்றவரிடம் நாம் கூறலாம் என்ற நம்பிக்கை வரும்


பாலியல் கல்வியை முதலில் மகாராஷ்ட்ரா மாநிலம் அரசு தான் தடை செய்தது. அந்த தடைக்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் பேராதரவு அளித்தன. அதைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களும் தடை செய்தன.



இந்திய அரசு தரப்பில் நடந்த ஒரு ஆராய்ச்சியில், மகாராஷ்டிர மாநிலத்தில், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், 49.43 % சதவீத ஆண் குழந்தைகளும் 50.57 % சதவீத பெண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக அவ்வறிக்கை சுட்டுகிறது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் 61.73% பேர் குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்களாம். 5 வயதில் ஆரம்பித்து, 10 வயதில் வேகம் கூடி, 12-15 வயதில் வன்முறை உச்சத்தை அடைகிறதாம். (இதை டைப் செய்யக் கூட எனக்கு கை வரலை)
.

தங்களுக்கு நேரும் அவலங்களை தைரியமாக சொல்ல இந்தப் பிஞ்சுகளுக்கு தெரிவதில்லை. ஏதாவது ஒன்றை சொல்லி அவர்களை அடக்கி விடுவது எளிதான ஒன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறது. வெளியே சொல்லுவதற்கான ஏதுவான சூழ்நிலை எப்பொழுதும் அமைவதில்லை. சொன்னால் அவர்கள் மீதே பழி விழும் என்று பயந்து வெளியே சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும், குடும்ப கவுரவத்தை காரணம் காட்டி பெற்றோர்களும் உறவினர்களும் அதை மூடி மறைத்து விடுவார்கள். மாமாக்களும், சித்தப்பாக்களும் இது போன்ற விளையாட்டுக்கள் விளையாடாமல் இல்லை. பள்ளியில் வாத்தியாரின் தொடுதல் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இதை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து தான் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எதையும் தங்களிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு பெற்றோர்களே இப்படி அயோக்கியர்களாக இருந்தால் என்ன செய்வது.இது மாதிரியான சூழ்நிலையில் தான் ஆசிரியர்களும், நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். இந்த உதவியை நாடுவதற்கான தைரியத்தை வாழ்வியல் கல்வி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்த மௌனங்கள் கலைக்கப்படவேண்டியவை...நண்பர்களாக, ஆசிரியர்களாக, பக்கத்துவீட்டுகாரர்களாக, தாயாக, தந்தையாக நாமும் இந்த மௌனத்தை கலைப்போம்

Friday, March 27, 2009

மரப்பயிர்- ஒர்- பணப் பயிர்

தரிசு நிலங்கள் இருந்தும் பயன்படுத்தாதவர்களுக்கும், நிலம் நீர் வசதி இருந்தும் சரியாக பயன் அடைய முடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கும், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கும், நல்ல முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காகவும் அரசு தரப்பில் இருந்து ஒரு நல்ல வாய்ப்பு.

"தனியார் நிலங்களில் காடு வளர்ப்பு" என்ற திட்டத்தில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் வரை, ஒரு கோடி மரங்கள் நடப்பட்டு சாதனை படைக்கப்படுள்ளது. வரும் ஆண்டு 3 கோடி மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம்,
வனத்துறையின் கீழ் எல்லா மாவட்டத்திலும் செயல் படுத்தப்படுகிறது. தேக்கு, நாட்டு வேம்பு,மலை வேம்பு, சவுக்கு, தீக்குச்சி மரம், குமிழ், வாகை, முல்லில்லா மூங்கில் போன்ற மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப் படவுள்ளது. அடுத்த ஆண்டு மழைப்பருவத்தில் (செப்டெம்பர்- அக்டோபர்) நடவு செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வனத்துறை அலவலகத்தில் தங்கள் நிலம் சமபந்தப்பட்ட 10(1) அடங்கள் சமர்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். முன் பதிவின் அடிப்படையில் மட்டுமே செடிகள் வளர்க்கப்படுதால், இந்த முன் பதிவு அவசியமாகிறது.

இதற்கு நம்மிடம் குறைந்தது ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) நிலம் இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது ( சவுக்கு மட்டும் 2000 நாத்துகள் வழங்கப்படுகிறது.). மேலும் பராமரிப்பு செலவில் ஒரு பகுதி மானியமாக வழங்கப்படுகிறது.


தங்களின் நிலத்தின் மண்ணை ஆய்வு செய்து, கார அமிலத்தன்மையை பொருத்தும், நீரின் வகையை பொருத்தும், அருகில் மரங்களின் தேவை (Demand) மற்றும் விற்பனை (Marketing) வசதியை பொருத்தும், காலத்தின் அளவைப்
பொருத்தும் (மரங்களின் கால அளவு) தாங்கள் பயிர் செய்ய விரும்பும் மர வகைகளை முடிவு செய்யவும். (பொதுவாக சவுக்கு 3 அல்லது 4 ஆண்டுகளிலும் மற்ற வகைகள் 7 முதல் 20 ஆண்டுகளிலும் வெட்டலாம்).

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் வர்த்தகம் பதிவின் மூலம் தீக்குச்சி மரத்தை பற்றி தெரிந்து கொண்டேன். பிறகு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் போகும் பாதையில் இருக்கும் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று இந்த மரத்தை பற்றிய விபரங்களை அறிந்தேன். அங்கு இருந்த வனத்துறை அதிகாரி மிகப் பொறுமையுடன் மகிழ்ச்சியுடன் விவரங்களை அளித்தார். அதன் படி கடந்த 5 மாதங்களின் செயல்பாட்டில் கீழே படத்தில் உள்ள மரங்கள் கோவில்பட்டி அருகே பயிரிட்டிருக்கிறேன்.
இந்த மரத்தின் பெயர் பெருமரம் அல்லது பீமாட்டி(ailanthus). பொதுவாக தீக்குச்சி மரம் என்று அழைக்கபடுகிறது. இந்த மரத்தை நான் தேர்ந்தெடுத்தற்கு முக்கியமான சில காரணங்கள்

1) மார்கெட்டிங்க் - கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி போன்ற இடங்களில் அதிகமாக தீக்குச்சி ஆலைகள் இருப்பதால்.

2) 7 ஆண்டுகளில் வெட்டலாம்.

3) இந்த வகை மரங்களுக்கு எப்பொழுதும் நல்ல demand' இருப்பதால் நல்ல விலை கிடைக்கிறது.


ஒரு ஏக்கருக்கு 200 மரங்கள் வளர்க்கலாம்.
இடைவெளி - 14 x 14 அடி இந்த வகை மரத்துக்கு நீர் தேங்காத செம்மண் நிலமாக இருப்பது அவசியம். முதல் மூன்று ஆண்டுகளில் ஊடு பயிர் செய்யலாம்.( பாசிப்பயிர், உளுந்து, எள்..)

இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மரங்களை பயிர் செய்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன் சேர்ப்போம்.

மேலும் விபரங்களை பெற- 9942456605

Friday, February 27, 2009

நாட்டுப் பற்று என்றால்?????

வாக்கு வாதம் எனக்கு பிடிக்காத ஒன்னு தான்...அதுவும் அலுவலகத்துல, அலுவல்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை யென்றாலும், இன்னைக்கு அது தவிர்க்க முடியாததாயிடிச்சு....

மதியம் ஒரு அலுவலக நண்பர், இரண்டு பேரை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ஆண், ஒரு பெண், 23 அல்லது 24 வயது இருக்கும். ஒரு ஆன்மீக அமைப்புல இருந்து வந்திருந்தாங்க. அலுவலக நண்பர்கள் 6 பேரை உட்கார வைத்து, அந்தப் பெண் பேச ஆரம்பித்தார்.

"வரும் ஞாயிறு நாங்க ஒரு பீஸ் மார்ச்சுக்கு ஏற்பாடு செய்திருக்கோம்..Peace march is against the terrorism and corruption.. Please..please..please...you should all join' அப்பிடீன்னு பல ப்ளீஸ்களை போட்டு பேச ஆரம்பித்தார். கூட வந்த பையன் "எதுக்கு நீ ப்ளீஸ் இவ்வளோ போடுறே..வரவேண்டியது அவங்க கடமை' னு ஆரம்பிச்சான்..அப்பவே நாங்க நெளிய ஆரம்பிச்சோம்.

பிறகு நாங்கள் எல்லோரும் "நல்ல விஷயம் தான்... நாங்களும் வர்ரதுக்கு முயற்சி செய்யறோம்" னு சொன்னோம். வந்த அம்மணி, "இல்லை நீங்க கண்டிப்பா வர்ரேன்னு சொன்னா மேற்கொண்டு பேசலாம்' னு சொல்ல...நாங்க ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்தோம்.


அலுவலக தோழி ஒருத்தி ரொம்ப யதார்த்தமா.. "நாங்க ஃபேமிலியோட வெளியே போறோம்...ஏற்கனவே பிளான் பண்ணிட்டோம்....இன்னைக்கு இரவே கிளம்பறோம்" னு சொல்ல.... வந்த பையன்...."நீங்க ஏன் அதை ஒரு வாரத்துக்கு தள்ளி போடக் கூடாது" னு கேட்டான். சரி நல்ல விஷயத்துக்காக இதை ஆர்வம் மிகுதியால சொல்றான்னு நினைத்து யாரும் ஒன்னும் பேசலை.

அவர் அதோட நிற்கலை...."நீங்க இந்த பீஸ் மார்ச்சுக்கு வராம, I am a true Indian...I love my India...I love peace னு சொன்னா... 'THAT MEANS YOU ARE A FRAUD' னு ஒரு அறிக்கை விட்டான்... எனக்கு வராத கோபம் வந்தே விட்டது.... நாங்களும் சின்ன பையன்...போகட்டும்னு அடக்கி வாசிச்சோம்...ஆனா இந்த வார்த்தை என்னை ரொம்பவே ட்ரிக்கர் பண்ணீடுச்சு.

"Who are you to give an endorsement for my patriotism?" னு கேட்டேன்... அவங்க குடும்ப சூழ்நிலை தெரியாம அவங்களை ஃபிராடுனு சொல்ல நீ யார்னு கேட்டேன்.... உதாரணத்திற்கு... நான் இங்க தனியா இருக்கேன்....நான் இருக்கும் இடத்திற்கும் பீஸ் மார்ச்சு துவங்கும் இடத்திற்கும் 35 கி மீ. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தனியா வந்துட்டு போக எனக்கு தைரியம் இல்லை....தில்லி அவ்வளவு பாதுகாப்பான இடமும் இல்லை....அப்படி நான் வராத பட்சத்தில், உடனே எனக்கு நாட்டுப்பற்று இல்லை...நான் ஒரு ஃபிராடுனு சொல்ல நீ யார் னு கேட்டேன்... அவர் உடனே...அப்போ உங்களுக்கு உங்க பாதுகாப்பு தான் முக்கியம்....நாட்டின் பாதுகாப்பு முக்கியம் இல்லையானு கேள்வி எழுப்பினார். மேலும் பஸ் ரூட் தெரியலை, அதுனால வரலைன்னு சொல்ற நீங்க எல்லாம் ஹிப்போக்ரெட்ஸ். You people dont have the responsiblity....Wont you go miles if you get a job for 50,000..there you wont see safety...because you are paid.

நான் கேட்டேன்..do you want me to compromise my personal safety and join your peace march...னு கேட்டேன்...அவர்.".again and again you are talking about your personal safety and proving how selfish you people" are னு வசனமா வசனம் பேசினார். கூட வந்த பெண் இதுக்கு மேல பேச விட்டா நிறுவனத்திற்கு கெட்ட பெயர் வந்திடும்னு பையனை இழுத்துட்டு போயிட்டார்.

நோக்கம் சரியானதாய் இருந்தாலும் அதை அணுகும் முறையை நல்ல படியாக கையால வேண்டாமா?. ஒரு நல்ல விஷயத்திற்காக பாடுபடும் இவர்கள், வார்த்தைகளை இப்படி மானாவாரியா விடலாமா?... நல்ல உணர்வுகளை, நல்ல எண்ணங்களை இங்கே கற்றுக் கொள்ளும் இவர்கள், அதை செயலில் காட்டவேண்டாமா?. எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு வார்த்தையை விட்டால், கேட்ப்பவர்களுக்கு இந்த நோக்கத்தின் மேல் நம்பிக்கை வருமா?.

குறிப்பு: ஒரு தனிமனிதன் ஒரு சக மனிதனின் மேல், அதுவும் அவரைப் பற்றி அறியாத பொழுது, சுமத்தும் குற்றச்சாட்டின் பொருட்டு வெளிப்பட்ட கோபத்தின் விளைவாக இந்தப் பதிவு....மற்றபடி பீஸ் மார்ச் போவதைப் பற்றியதில்லை

Saturday, February 07, 2009

விக்கி ராய் - குப்பையில் கிடைத்த மாணிக்கம்


தெருவோர நிஜங்களில், கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைஞனை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அவர் பெயர் விக்கி. வீட்டை விட்டு ஓடி வந்து, தெருவில் வாழ்ந்து இன்று ஒரு தொண்டு நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்.

கொல்கத்தா மாநிலத்தின் புரூலியா என்ற இடத்தில் பிறந்த விக்கியின் வீட்டில் 6 குழந்தைகள். 6 பேருக்கான இடமோ, உணவோ இல்லாத சூழ்நிலை. தையல் வேலை பார்த்து வந்த தந்தைக்கு, அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற கவலை எப்பொழுதும். ரொட்டியும், ஊறுகாயுமே அன்றாட உணவாக இருந்து வந்தது. சில சமயம் அதுவும் இருக்காது.

7 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த விக்கிக்கு பள்ளியும் அலுத்து போனது. சதா அடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியரால் படிப்பின் மேல் வெறுப்பு வந்தது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும், தானும் வசதியாக வாழவேண்டும் என்ற வெறி மட்டும் மனதில். ஆனால் படிப்பு ஏறவில்லை. வீட்டை விட்டு ஓட திட்டமிட்டு, அம்மா சிமென்ட் வாங்க கொடுத்த 800 ரூபாயை கொண்டு தில்லிக்கு ரயிலேரிவிட்டார். விக்கியின் அனுபவங்களை அவரே சொல்கிறார்.

" தில்லிக்கு டிக்கெட் வாங்கி உட்கார்ந்த பின் அளவில்லா ஆனந்த மடைந்தேன். ரயில் புறப்பட்டவுடன் முகத்தில் அடித்த சிலு சிலு காற்று எனக்கு புத்துணர்சியை கொடுத்தது.



ஆனால் அந்த உணர்வுகள் மட்டுமே ஆனந்தமான ஒன்று என்ற உண்மை தில்லியில் இறங்கின அடுத்த நிமிடம் உணர்ந்து கொண்டேன். பாஷை தெரியாத ஊர், ஏன் என்று கேட்க ஆள் இல்லை, அம்மாவின் பாசத்திற்கும், அப்பாவின் பரிவிற்கும், அடுத்த வேலை உணவிற்கு வழி இல்லாவிடினும் என் உறவுகள் எனக்கு கொடுத்த பாதுகாப்பிற்கும் மனம் ஏங்கியது. என்னை நானே தேற்றிக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என்னைப் போன்ற சிறுவர்களுடன் சேர்ந்து தெருவோரத்தில் கிடக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, நாளொன்றிற்கு 100ல் இருந்து 150 ரூபாய் வரை சம்பாதித்தேன்.



ஆனால் அதுவும் அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை. ஏரியா தாதாக்கள் அடித்து துன்புறுத்தி பணத்தை பரித்துக் கொண்டார்கள். என் மேல் பரிதாபப்பட்டு அங்கு இருந்த ஒரு ஹோட்டல் முதலாளி் பாத்திரம் கழுவும் வேலையை கொடுத்தார். 50 ரூபாய் கொடுத்து, நாள் முழுக்க மலைபோல் குவிந்து கிடக்கும் பாத்திரங்கள் கழுவ சொன்னார். உணவோ, ஓய்வோ இல்லாமல் என் கைகள் புண்ணாகும் வரை வேலை செய்தேன். அந்த சமையத்தில் அங்கு உணவு அருந்த வந்த பெண்மணி ஒருவர், சலாம் பாலக் ட்ரஸ்ட் என்ற அமைப்பை பற்றி சொன்னார். கடவுள் கிருபையால் அங்கே என்னை ஏற்றுக் கொண்டார்கள். சின்ன சின்ன கைவேலைப் பாடுகள் செய்ய கற்றுக் கொண்டேன்.



அப்பொழுது தான் எனக்கு வாழ்க்கையில் முன்னேற முதல் வாய்ப்பு அமைந்தது. அதை என் இரண்டு கைகளாலும் இருக்க பிடித்து கொண்டேன். ட்ரஸ்டில் இருக்கும் குழந்தைகளை புகைப்படம் எடுக்க பிரிட்டிஷ்காரர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ட்ரஸ்டை சுத்திக் காட்டும் பொறுப்பு எனக்கு ஒதுக்கப்பட்டது. அது எனக்கு மிகவும் பெறுமையாக இருந்தது. ட்ரஸ்டில் மட்டுமில்லாமல் வெளியே தெருவில் வாழும் குழந்தைகளையும் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார். என்னுடன் தெருவில் வாழ்ந்த சிறுவர்களிடம் அழைத்து சென்றேன். எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் சிறுவர்கள் எதிரில் பேசியது எனக்கு பெருமையாக இருந்தது. அவரிடம் புகைப்படக்கலை பற்றி பேசி பேசி எனக்கும் அதில் ஆர்வம் வந்தது. இதற்கிடையில் நான் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களில் தேறினேன். எனக்கு18 வயதானபடியால் ட்ரஸ்டை விட்டு வெளியே வந்தாக வேண்டிய சூழ்நிலை. அங்கு 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை தான் வைத்துக் கொள்வார்கள்.



வெளியே வந்தால் எனக்காக ஒரு வேலை தேடவேண்டும். பிரிட்டிஷ்காரர் அவரின் நண்பர் ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் ஒரு பேஷன் போட்டோகிராபர். எனக்கிருக்கும் ஆர்வத்தை உணர்ந்து அவர் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்து சென்றார். நிறைய கற்றுக் கொண்டேன். சென்னை, பங்களூர், மும்பை, கொல்கத்தா, லடக், கேஷ்மீர் என பல ஊர்களுக்கு சென்றேன். நான் சென்ற ஊர்களுக்கான பயணச்சீட்டுகளையும், விமானமானால் 'போர்டிங்க் பாஸும்' இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.மறக்க முடியாத நினைவுகள், அனுபவங்கள் அவை.

ஒரு பழைய கேமராவை வைத்து தெருக்குழந்தைளை படம் பிடித்தேன்.



நான் எடுத்த புகைப்படங்கள் பிரிட்டிஷ் ஹைகமிஷனின் ஆதரவில் ஒரு கண்காட்சியாக வைக்கப்பட்டது. நான் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்கள், குழந்தைகள் மீதான வன்முறையை எடுத்து காட்டியது. குழந்தைகள் மீதான உரிமை மீறல்களை கருத்தாக கொண்டு படங்கள் எடுத்தேன். என் இந்த வளர்ச்சியை என் தாய் தந்தையர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர்களும் வந்தார்கள். அவர்களின் முகத்தில் நான் பார்த்த பெருமிதமும்,

ஆனந்தக் கண்ணீரும் நான் கடந்து வந்த பாதையை எனக்கு நினைவு கூறியது. அந்த புகைப்படக்கண்காட்சி மூலம் எனக்கு கிடைத்த 10,000 ரூபாயில் ஒரு கேமரா வாங்கினேன், என்னை வளர்த்த ட்ரஸ்டிற்கு உதவித்தொகை வழங்கினேன்.

எனக்கும் ஒரு் கனவு இருக்கிறது. ஒரு ஆப்பில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும், 12.5 megapixel கேமரா வாங்கவேண்டும். கண்டிப்பாக வாங்குவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது".

விக்கிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம், அமெரிக்காவில் இருக்கும் World Trade Centre" ன் கட்டுமானப்பணிகளை புகைப்படம் எடுக்க தேந்தெடுக்கப்படிருக்கிறார்.

முனைப்பும், ஆர்வமும் இருந்தால் இந்த உலகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த இடத்தையும் அடையலாம் என்பதற்கு விக்கி தான் சாட்சி. தனக்கு கிடைத்த முதல் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தன்னை ஆளாக்கிய நிறுவனத்திற்கு கொடுத்த அந்த மனித நேயம் இன்னும் பல வெற்றிகளை காண வேண்டும்.

மேலே உள்ள படங்கள் அனைத்தும் விக்கி எடுத்தது ...

Saturday, January 31, 2009

சாதர் தாக்னா- ஹரியானா மாநிலத்தின் ஒரு சமுதாய வழக்கம்


வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களின் அவல நிலையை முந்தைய எனது பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். கணவனை இழந்து, குடும்பத்தாராலும் கைவிடப்பட்டு, அன்றாட தேவைகளுக்கே கஷ்டப் பட்டு கொண்டிருப்பது ஒரு வகையான கொடுமை என்றால், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கணவனை இழந்த சில பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேறொரு வகையான வதை.

ஒரு முறை சென்னை லயோலா கல்லூரியில் CNN IBN தொலைகாட்சியின், ராஜ்தீப் சர்தேசாய், நடத்திய ஒரு கலந்துரையாடலின் போது, "South India is more a conservative society than North India" என்ற தன் கருத்தை முன்வைத்து துவக்கினார். இந்த மனப்பான்மைதான் பெரும்பாலான வட இந்தியர்களுக்கு (வட இந்தியாவில் வாழும் அநேக தென் இந்தியர்களும் இதில் அடக்கம்) இருக்கிறதென்றால் அது மிகையில்லை. இந்த மக்களோடு மக்களாய் அன்றாடம் பழகி (பேருந்தில், கடைகன்னியில், அலுவலகங்களில்) வாழ்ந்து பார்த்தால் , ராஜ்தீப்பின் கருத்து சற்றும் உண்மையில்லை என்பது புரியும்.

தென்னிந்தியாவில், அதி முக்கியமாக தமிழ்நாட்டில் பெண்கள் நிச்சயமாக மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப் படுகிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. அது இளம் பெண்களாக இருந்தாலு்ம் சரி, முதியவர்கள் என்றாலும் சரி. தமிழ்நாட்டிலும் சில பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, ஆனால் அது சில இடங்களில் மட்டுமே என்று சொல்லலாம். சரி நான் இதை விவாதம் செய்ய வரவில்லை. அது இந்த பதிவின் நோக்கமும் இல்லை.

காலங்காலமாய் ஹரியானா மாநிலத்து கிராமங்களில் கணவனை இழந்த பெண்களின் மீது திணிக்கப்பட்டு வரும் சமுதாய பழக்கமான ‘சாதர் தாக்னா’ பற்றி நான் நேரில் பார்த்து தெரிந்து கொண்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், இதன் பின்னராவது ராஜ்தீப் போன்றோரின் கண் மூடித்தனமான கருத்துக்கள் சரியா என்பதை நீங்களே சொல்லுங்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்

சில மாதங்களுக்கு முன்னால் வட இந்திய பெண்கள் சிலரை ( பெண் பத்திரிகையாளர், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள், அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள்) கோவையில் நடந்த ஒரு கருந்தரங்கிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அரசு துறையில் பணி புரியும் ஒரு பெண் கணவனை இழந்தவர். முதலில் வருகிறேன் என்றவர், புறப்படுவதற்கு முந்தைய நாள் தன்னால் வரமுடியாது என்றும், அதற்கான காரணத்தை நேரில் சந்தித்து கூற விரும்புவதாகவும் கூறினார்.

இந்த இடத்தில் ‘சாதர் தாக்னா’ என்கிற பழக்கத்தை பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.' சாதர் தாக்னா' என்பது, ஹரியானா கிராமங்களில், இளம் வயதில் பெண்கள் கணவனை இழந்து விட்டால், கணவனின் சகோதரருடன் அந்தப் பெண்ணை வாழவைக்க செய்வது அந்த சமுதாயத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழக்கம். அந்த நபர் பெரும்பாலும் திருமணம் ஆனவராகத்தான் இருப்பார். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரிவித்தாக வேண்டும். 'சாதர் தாக்னா " என்ற சடங்கை செய்து இப்படி வலுக்கட்டாயமாக கணவரின் சகோதரனுடன் சேர்ந்து வாழவைக்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட பெண் என் அலுவலகத்திற்கு வந்தார்.பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார். உடனே காரணத்தை பட படவென்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். நானும் ' சாதர் தாக்னாவில்' மாட்டிக் கொண்டேன். அதில் இருந்து தப்பிக்க என் பிறந்த வீட்டாரோடு சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

கணவனை இழந்த பெண்கள் மறு திருமணம் செய்து கொள்வது வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும், இந்த வகை கட்டாயப்படுத்துதலை, அந்த வகை திருமணமாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.இதில் அந்த நபருக்கு ஆண் வாரிசு இல்லாமல், கணவனை இழந்த பெண்ணுக்கு ஆண் வாரிசு இருந்து விட்டால்,இந்த கட்டாயப்படுத்தல் மேலும் அதிகமாகிறது. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை...ம்ம்ம்

கணவனை இழந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க, சமுதாயாத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பழக்கம் என்று இவர்கள் இதனை நியாயப்படுத்திகிறார்கள். இந்த வழக்கம் எப்படி தொடங்கியது என்று பார்த்தால், அந்தக்காலத்தில் கணவனை இழந்த, குழந்தை செல்வமில்லாமல் இருக்கும் பெண்களை, கணவனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் 'Levirate marriage' என்று கூறுவார்கள். இதை தென்னிந்தியாவிலும் சில இடங்களில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பெண் வீட்டாரும், கணவனின் வீட்டாரும் சேர்ந்து பேசி எடுக்கப்படும் ஒரு முடிவு. பெரும்பாலும் பெண் வீட்டாரும், அந்தப் பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல விரும்புவதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். ம்ம்ம்ம் இதில் பெண்ணின் விருப்பம் இருந்து விட்டால் இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் பெரும்பாலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை யாரும் மதிப்பதில்லை. பெண்ணிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பழக்கம், இன்று உருமாறி பெண்களை அடிமை படுத்தவும், தன் பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே சில ஆண்கள் பயன் படுத்திக் கொள்ளும் ஒரு பழக்கமாகி இருக்கிறது என்பது தான் உண்மை.

கணவனை இழந்த பெண்ணும் அவளுக்கு சேர வேண்டிய சொத்தும் எப்பொழுதும் அந்த வீட்டின் ஆண் மகனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை தவிர இதற்கு வேறு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.நான் மேலே குறிப்பிட்ட பெண் படித்து நல்ல வேலையில் இருப்பதால், தன் சொந்தக் காலில் நிற்க துணிவும் இருப்பதால், தன் விருப்பமின்மையை தெரிவித்து, வெளியே வந்துவிட்டார். இதனால் புகுந்த வீட்டாரின் வெறுப்பிற்கு ஆளான போதும், கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது. ஆனால் பெரும்பாலான ஹரியானா கிராம புறத்துப் பெண்கள் படிப்பறிவும், உலக அறிவும், சுய சிந்தனையும் அற்றவர்களாகவே, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். எனது அனுபத்தில் நான் பார்த்த பெரும்பாலான வட இந்திய கிராம பெண்கள் சுய சிந்தனை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் பிரதான தேவை பணம்,அது தரும் ஆடம்பரமான வாழ்க்கை முறை, அலங்கார சாதனங்கள், விலை உயர்ந்த உடைகள், காலனி முதற்கொண்டு எல்லாவற்றிலும் படோபகாரம் தெரியவேண்டும். இதை வஞ்சனை இல்லாமல் இந்த ஆண்கள் கொடுத்து விடுகிறார்கள். என் நான்காண்டு வட இந்திய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும் இதுதான்.

ஒரு வகையில் இவர்களின் இந்த நிலைக்கு இவர்களே காரணம் என்று பல சமயம் நினைக்கத்தோன்றுகிறது. கணவனுக்கென ஒரு விரதம் (கர்வா சவுத்), அண்ணன் தம்பிகளுக்கென ஒரு விரதம் (பாய் தூஜ், ராக்கி) இது போக மருமகன் நன்றாக இருக்க வேண்டுமென்று சில சமுதாயத்தாரின் விரதம். இது கட்டாயமாக எல்லாப் பெண்களும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள். இல்லையென்றால் அவள் குடும்பத்திற்கே லாயக்கற்றவள் என்கிற முத்திரை குத்தப்படுவாள்.இந்த பூஜைகளையும், விரதங்களையும், ஆடம்பரத்தையும் தாண்டி இவர்களின் சிந்தனை செல்வதில்லை. அதற்கான சூழலும் கிராம புறங்களில் இல்லை.

இன்றும் பெண் கல்வியென்பது வட மாநில கிராமங்களில் அதிசயமான ஒன்றாகவே இருந்து வருவது அதிர்ச்சியளிக்கும் நிஜம். இந்தப் பகுதி மக்களின் கண்ணோட்டமும் சுயநல போக்கும் பல சமயங்களில் எனக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் இன்னும் இவர்கள் அடைபட்டு கிடைக்கிறார்கள் என்பதே உண்மை..

நம் எளிமையும், சகிப்புத்தன்மையும் ராஜ்தீப் போன்றோருக்கு நம்மை conservative ஆக காட்டுகிறது. உண்மையான பெண் அடிமைத்தனம் என்ன என்பதை வட மாநிலங்களில் வந்து வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.ம்ம்ம்ம்... தென்மாநிலங்கள் இந்த விஷயத்தில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.இதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு சொல்லாமல் விடுவதில்லை. இது குறித்து இன்னும் விரிவாக எழுதிட முயல்கிறேன்.

இப்படி ஒரு முற்போக்கு சமுதாயத்தை ஏற்படுத்தி கொடுத்த பாரதி, பெரியார், போன்ற சமூக புரட்சியாளர்களுக்கு இந்த சமயத்தில் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதை களங்கமில்லாமல் வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

Monday, January 26, 2009

தெருவோர நிஜங்கள்......

முன் குறிப்பு- Slum Dog Millionaire னு ஒரு படம்... எல்லாரும் கேள்விபட்டிருப்பீங்க.. உலக அளவில் சிறப்பான விருதுகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு படம்... பத்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படிருக்கிறது...இந்திய மண்ணில் இருக்கும் சேரிகளின் உண்மை நிலைமையை எடுத்து சொல்லும் ஒரு நல்ல முயற்சி..

ஆனால் நம்மில் சிலர், தாங்கள் மட்டுமே
இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில ஜென்மங்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஏதோ இல்லாத ஒன்றை சொல்லியிருப்பதாக குதிக்கிறார்கள். இந்திய நிலைமையை சொல்லி காசாக்கும் முயற்சி இது என்று நினைப்பவர்கள் சிலர்....ஒரு பிரிடிஷ்காரன் வந்து நம் நாட்டின் நிலைமையை சொல்ல அனுமதிக்க கூடாது என்றெல்லாம் பிரச்சினையை கிளப்புகின்றனர்.

சேரிகளில் இந்த நிலைமை இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா இவர்களால்??.. இல்லை அப்படி இருந்தால் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு வாய் கிழிய பேசும் இவர்கள் ஏதாவது செய்யப் போகிறார்காளா???... கோவமும் ஆதங்கமும் தலைக்கு ஏறுகிறது.... இதில் தில்லி வாழ் மக்களை சொல்லவே வேண்டாம்.... கெட்டு குட்டிச்சுவரான கலாச்சாரம், உணர்வுகளை ஒதுக்கி படோபகார வாழ்க்கையில் லயித்துப்போயிருக்கும் திமிர் பிடித்த அயோக்கியர்கள்....

இந்த பதிவு இந்தப் படத்தை பற்றியதில்லை... ஆனால் இந்தப் படத்தில் வரும் சிறார்களைப் போல தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாபாத்திரங்கள் பற்றியது.


ஒவ்வொரு முறை தில்லி ரயில் நிறுத்தத்தில் ரயில் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்களை உறுத்தும் சில காட்சிகள். அங்கு குப்பை பொறுக்கும் குழந்தைகள், நாம் அசுத்தம் செய்த ரயில் பெட்டியை சுத்தம் செய்து அதற்கு காசு கேட்கும் பாலகர்கள், சுத்தம் செய்ய வரும் போது குப்பையை கால்களால் இந்தக் குழந்தைகளின் மீதே தள்ளிவிட்டு, அவர்கள் காசு கேட்டால் விரட்டி அடிக்கும் இறக்கமில்லா பெண் ஜென்மங்கள்....பிச்சை எடுக்கும் வயது வந்த பெண்களின் கிழிந்த ஆடைகளினூடே பார்த்து கண்களால் கற்பழிக்கும் காமப் பார்வைகள், ....ம்ம்ம்ம்... இதில் எதுவுமே பாதிக்காமல் கர்மமே கண்ணாயிரமாய் பழைய பாட்டில்களை சேகரித்துக் கொண்டும், பாக்கு பாக்கெட் சரங்களை விற்றுக் கொண்டும், பிச்சை எடுத்துக் கொண்டும் இருக்கும் என்னற்ற குழந்தைகளை பார்க்கும் போது மனது சில நிமிடங்களேனும் நொறுங்காமல் போகாது.


இவ்வாறு தெருவில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் தான் அதிகம். ஒரு வேளை உணவிற்காக செய்யக் கூடாத வேலைகளை செய்து, குழந்தை பருவம் என்ற ஒன்றை நினைவில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் வயதிற்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாத பெரியவர்களின் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இல்லை... வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களின் உலகத்தில் போட்டி போட்டு வாழ பழகிக்கொள்ளும் இவர்களுக்கு, குழந்தை பருவத்திற்கே உண்டான பிரத்யேக குணாதிசியங்கள் அறவே இல்லாமல் போய்விடுகிறது என்பது தான் கொடுமை.

இந்தக் குழந்தைகள் ஏரியா தாதாக்களாலும், ரவுடிகளாலும் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப் படுகிறார்கள். இதில் ஆண் குழந்தைகளும் விதிவிலக்கில்லை. ஓரினச்சேர்க்கை இளைஞர்களால் இந்தச் சிறுவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். இவர்களுக்கு ஓரினச்சேர்க்கை உணர்வுகள் பெரும்பாலும் இருப்பதில்லையென்றாலும், பணத்திற்காக அதையும் செய்ய தயங்குவதில்லை. நாளடைவில் இவர்களுக்கும் இதுவே பிடித்து விடுகிறது. முடிந்தால் இதைப் பற்றி இன்னொரு தனிப்பதிவு போடுகிறேன்.

தில்லியில் மட்டும் 1,00,000 தெருக் குழந்தைகள் இருக்கிறார்களாம். ராஜஸ்தான், பீஹார், கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து பிழைக்க வந்த ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம். இவர்களில், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருப்பார்கள். குழந்தைகள் பிச்சை எடுப்பது, ரோட்டோரத்தில் இருக்கும் பழைய பாட்டில் பேப்பர் போன்றவற்றை சேகரிப்பது, சிக்னலில் பொருட்களை விற்பது போன்ற வேலைகளை செய்து நாளொன்றுக்கு 100ல் இருந்து 150 வரை சம்பாதிக்கிறார்கள்.

தெருவில் வாழந்தாலும் இவர்களுக்கும் லட்சியங்கள், ஆசைகள், கனவுகள் உண்டு. ஒரு சின்ன மூலதனத்தை போட்டு, அதை சில நிமிடங்களுக்கே தெருவில் சந்திக்கும் மக்களிடம் விற்று காசாக்கும் திறமை கொண்ட இவர்களுக்கு கல்வியறிவும், நல்வழிகாட்டுதலும் அமைந்துவிட்டால்??... ம்ம்ம் இதை உணர்ந்த சில தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கென்று மாலை நேர வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதை சரியான முறையில் பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேறி இருக்கும் குழந்தைகளும் உண்டு.

ரோஹித் என்னும் 13 வயது அழகான பாலகன். பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவன், 2 வருடம் முன்பு அப்பா அடித்தற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவன். இன்று தில்லி ரயில்வே நிறுத்ததில் தேங்காய் கீற்றுகளை விற்று நாளொன்றிற்கு 150 ல் இருந்து 200 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறான்.ரோஹித்துக்கு டாக்டர் ஆகி இவனைப் போன்ற ஆதரவில்லா குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவற்றகர்களே ஆதரவு இல்லையா?... ம்ம்ம்ம்.. மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த தொண்டு நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த குழந்தைகளுக்கென்று துவங்கி இருக்கும் வங்கி. பட்டர்ஃப்ளை என்ற தொண்டு நிறுவனத்தின் கண்கானிப்பில் இருக்கும் இந்த வங்கிக்கு தில்லியில் 12 கிளைகளும், சுமார் 2000 குழந்தைகள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த வங்கிகள் இந்தக் குழந்தைகளாலேயே பராமரிக்கப் படுகிறது. 6 மாதத்திற்கொரு முறை இவர்களே ஒரு மேளாளரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம், ஃபோர்னோகிராபியின் மூலம் ஈட்டிய பணம், திருட்டு வழியில் ஈட்டிய பணம், போதை பொருட்கள் விற்று ஈட்டிய பணம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பல குழந்தைகள் இது போல தீய வழியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். தங்கள் நண்பர்களை நல்வழிப் படுத்த இவர்களே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று.

தினமும் மாலையில் வங்கியில் இருக்கும் பணம், அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கியில் தொண்டு நிறுவன கண்கானிப்பாளரால் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த சேமிப்பு பழக்கத்தினால், புகைபிடித்தல், அடிக்கடி சினிமாவுக்கு செலவு செய்தல், குடிப்பழக்கம் போன்ற வேண்டாத பழக்கவழக்கங்கள் குறைந்திருப்பதாக இக்குழந்தைகளே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள்.

படிப்பு பிடிக்காமல் விட்டை விட்டு ஓடிவந்த அஜய்க்கு மேனேஜர் வேலை மிகவும் பிடித்தமான வேலை. உடையை அழகாக 'டக்கின்' செய்து, சர்டில் மேல் பட்டனை போட்டு, தலையை கோதி, ஒரு எக்ஸக்யூடிவ் ரேஞ்சுக்கு ஸ்டைலாக "கவுண்டரில்" அவன் உட்கார்ந்து இருக்கும் அழகே தனி. ..:-)))...புதியதாக வரும் கஸ்டமர்களின் பெயரை கேட்பதும், அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்து சொல்வதும், கறாராக நடந்து கொள்வதும்....பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.

இந்தக் குழந்தைகளுக்குத்தான் எத்தனை பொறுப்புணர்ச்சி. தினமும் பணத்தை சரியாக கணக்கு பார்த்து வாங்கி, 'கஸ்டமர்களின்' பாஸ் புத்தகத்தில் வரவு வைத்து, அதை தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் கொடுத்து, தங்களைப் போன்று கஷ்டப்பட்டு பணம் ஈட்டும் நண்பர்களுக்கு உண்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

கிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற இவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக மாற நாம் உளமாற வாழ்த்துவோம்.

இவர்களைப் போல தெருவில் வாழ்ந்து் 'சலாம்பாலக் ட்ரஸ்டால்' வழிகாட்டப்பட்டு, இன்று ஒரு பெரிய போட்டோகிராபர் ஆகியிறுக்கும் விக்கி என்ற இளைஞனைப் பற்றி அடுத்த பதிவில் போர்போம்.

Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்



மீண்டும் ஒரு புதிய ஆண்டு

நாம் சோர்ந்தாலும் எதுவும் நமக்காக நிற்கப் போவதில்லை

என்பதை உணர்த்தும் காலப் பாதையின் மற்றொரு மைல்கல்

புதிய கனவுகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய பொறுப்புகள்

தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக,

இந்நாட்டின் ஒரு குடிமகனாக

நம் பொறுப்பை மனதில் கொண்டு

புதிய உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும்

புத்தாண்டை எதிர் கொள்வோம்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tuesday, December 09, 2008

மனித உரிமை நாள் - பெனாசீர் கவுரவிக்கப் படுகிறார்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப் பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த ஆண்டு முழுவதும் அது தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள், சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகள், மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனித நாகரீகத்தின் பயனத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். அந்த பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நடைமுறையாக்க இந்த மனித உரிமை நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.


இந்த ஆண்டிற்கான கருப்பொருள் " கெளவுரவமும், நீதியும் நம் அனைவருக்கும் ". உலகமிருக்கும் நிலவரத்திற்கு மிக பொருத்தமான கருப்பொருள்.

இந்நாளில் மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரப்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் 6 பேரை (5 தனி நபர், ஒரு நிறுவணம்) ஐநா சபை தேர்வு செய்திருக்கிறது. இதில் இறந்த பிறகு கொடுக்கும் பாஸ்துமஸ் (Posthumous) பரிசிற்காக இரண்டு பேர் தேர்ந்தெடுத்தப் பட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தை நிலைநாட்ட ஏற்றுக் கொண்ட முயற்சியில் கொடூரமாக கொள்ளப்பட்ட பெனாசீர் பூட்டோ,
மற்றும் பிரேசில் நாட்டில் நிலபுலன்கள் இல்லாத பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடிய கன்னியாஸ்திரி சிஸ்டர். டோரதி ஸ்டாங்க் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. டோரதி ஸ்டாங்க் பல கொலை மிரட்டல்களுக்கு மத்தியுலும் தளராது தைரியமாக தான் ஏற்றுக் கொண்ட பணியை செய்து வந்தவர். இவர் கொல்லப்பட்ட போது நடந்த சம்பவத்தை கேட்டால், நாம் எல்லாம் எவ்வளவு சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என எண்ணத் தோன்றுகிறது. முன்று வருடங்களுக்கு முன்பு, அமேசான் காட்டுக்குள், அங்கு வாழும் பழங்குடியினருக்காக போராடிக் கொண்டிருந்த போது, இரண்டு பேர் துப்பாக்கியுடன் இவரை வழி மறித்தனர். அவர்கள் யாரால் எதற்காக அனுப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்த இந்த மூதாட்டி, அவர்களை அன்புடன் வரவேற்று, அமைதியாக 15 நிமிடங்கள் பேசி இருக்கிறார். அவரின் போராட்டத்திற்கு பின்னால் இருக்கும் நியாயத்தை விளக்கி இருக்கிறார். கையில் இருந்த ஒரு வரை படத்தை வைத்து பழங்குடியனருக்கு சொந்தமான நிலத்தை சுட்டி காட்டி இருக்கிறார். எந்த நியாயத்தையும் கேட்கிற மன நிலையில் வந்தவர்கள் இல்லை என்று தெரிந்ததும், கடைசியில் தன் கைப்பையில் இருந்த பைபிலை எடுத்து, " எனக்கு இருக்கும் ஒரே ஆயுதம் இது தான்" என்று கூறி ' "Blessed are the peacemakers, they shall be called children of God, Blessed are they who hunger and thirst for justice, for they shall be satisfied" என்ற வாசகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதே கொல்ல வந்தவர்கள் ஸ்டாங்கை 5 முறை சுட்டு விட்டு ஓடி விட்டனர். 79 வயதில் இப்படி ஒரு மன வலிமையா..ம்ம்ம்

இந்த பரிசை வாங்கப் போகும் மற்றவர்கள்...

ராம்சே க்ளார்க்: முதல்ல நம்ம ஹீரோ....:-))...யூ எஸ் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியவர். அமெரிக்க னித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலும் மரண தண்டனை முறை ஒழிக்கப்படுவதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், சதாம் மீதான வழக்கில் சதாமிற்கு ஆதரவாக வாதாடியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்தவர். உலகமயமாக்கல் என்பது சாதாரன மனிதனுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் ஊடுருவல் என்ற கருத்தை உடையவர். கொல்கத்தாவின் நந்திகிராமில் நடந்த கொடுமையின் போது அங்கு சென்று மக்களை நேரில் சந்தித்து நடந்ததை தெரிந்து கொண்டவர்.

மற்றொரு முக்கிய நபர் காங்கோ நாட்டை சேர்ந்த டாக்டர். டெனிஸ் முக்வெஜ். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களின் நலத்திற்காக ஒரு மருத்துவமனை நிறுவி தொண்டாற்றி வருபவர். இவரின் மருத்துவமனைக்கு இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் நாளொன்றிற்கு 10 பேர் வந்து போகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்து இலவசமாக சிகிச்சையும் அளித்து வருகிறார்.


ஜமாய்க்கா நாட்டில் மனித உரிமைக்காக போராடும் டாக்டர். கேரொலின் கோம்ஸ் க்கும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இவர் Jamaicans for Justice என்ற அமைப்பின் மூலம் ஜமாய்க்கா நாட்டில் நடக்கும் மனித உரிமை அத்து மீறல்களுக்கு எதிராக அரும்பணியாற்றி வருகிறார்.


ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற நிறுவனமும் இந்த ஆண்டு கவுரவிக்கப் படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்நிறுவனம் உலகம் முழுதும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை பதிவு செய்து, சில ஆக்கப்பூர்வமான பரிந்துறைகளை செய்து வருகிறது. மேலும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தை நிறுவ காரணமாக இருந்ததும் இந்நிறுவனம் தான்.

எல்லாம் சரி. உலக அளவில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை மறுப்பதிற்கில்லை என்றாலும் நாளுக்கு நாள் இந்த மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். வருடா வருடம் பெரிய அளவில், உலகம் முழுவதும் இந்த நாள் வெகு விமர்சையாக அனுசரிக்கப்படுவ தென்னமோ உண்மை. வாய் கிழிய பேசும் தலைவர்கள், அரசியல் ஆலோசகர்கள், சட்ட நிபுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என இந்நாளில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை சொல்பவர்கள் ஏராளம். ஆனால் இந்த கருத்து பரிமாற்றங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்தியாவைப் பொறுத்தவரை, (காவல் துறையை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்) ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சிறைக் காவலில் ஒவ்வொரு நாளும் நான்கு பேர் இறக்கின்றனர் என கூறியிருக்கிறது. ரவுடிகள் என்கெளவுன்ட்ரில் கொல்லப்படுவது சாதாரணமாகி வரும் இந்நாளில் அவர்களை உருவாக்குபவர்களை என்ன செய்ய முடிந்திருக்கிறது நம்மால். கொல்லப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள், தாதாக்கள் என்ற காரணத்தால் அவர்களின் மரணமும், அவர்கள் கொல்லப்பட்ட விதமும் நம்முள்ளே எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் உண்மைதானே. இது போல செயல்பாடுகளில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், வீர பதக்கமும் கொடுத்து, மறுநாளே பெரிய வெற்றி விழாக்கள் கொண்டாடும் ஆட்சிகளையும் நாம் பார்த்துவிட்டோமே.

அதிகாரத்தை பயன் படுத்தி அவர்களை விசாரணையின்றி கொல்லுவது மற்றறொரு முக்கிய குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கை என்பது என் எண்ணம். திறைமறைவில் இருக்கும் சில பெரும்புள்ளிகளும் காவல் துறையும் சேர்ந்து அரங்கேற்றும் ஒரு நாடகம்.


இந்தச் சாவுகளில் எங்கே இருக்கிறது நீதியும் கெளரவுமும்.....ம்ம்ம்ம்

வாழ்க ஜனநாயகம்..!

Monday, December 01, 2008

உலக எய்ட்ஸ் தினம் 2008

Support World AIDS Day

சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் முதலிய வேறுபாடுகளை அறவே தவிர்த்திடுவோம்.... உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை

தெரிந்து தெளிவடைவோம்

தெளிவடைந்து கைகொடுப்போம்

நாம் கோரும் உரிமைகளை அனைவருக்கும் அளிப்போம்..

கோவையில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் தங்களுக்கென ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

Sunday, October 19, 2008

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர முடியவில்லை. அப்படி அவர்களின் நிலையில் என்னை வைத்து பார்க்க, நிஜத்தில் அனுபவிக்க ஒரு வாய்ப்பை சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டேன். வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத தருணங்கள், அனுபவங்கள். இந்த அனுபவம் மூலம் என் பணி சார்ந்த எண்ணங்களை இன்னும் பட்டைத் தீட்டிகொள்ள முடிந்தது.

இன்று வரை இந்நோயை ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமாகத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் சமுதாய, பொருளாதார, உளவியல் கூறுகள் சம்பந்தப் பட்டிருப்பதை உணர மறுக்கிறோம். மருத்துவமனைகளில், சமுதாயத்தில், தொழில் செய்யும் இடங்களில் பல அவமானங்களை பாதிக்கப்பட்டவர்கள் எதிர் கொள்கிறார்கள். இதை பற்றி பேசுவதும், அச்சச்சோ என்று உச்சு கொட்டுவதும் எவ்வளவு சுலபமாக வேலை என்பதை இப்பொழுது உணர்கிறேன். (அதாவது என்னைப் போல இந்தத் துறையில் இருப்பவர்களை மட்டுமே சொல்கிறேன்). இந்த பரிதாபம் காட்டுதல் எந்த வகையில் அவர்களுக்கு இது நாள் வரையில் உபயோகமாக இருந்திருக்கிறது, என்றால், இங்கு எழுதுவதால், சில வலை நண்பர்கள் நேராக சென்று
மீனாட்சி போன்றவர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.

இது தவிர கொள்கையளவிலும் சில மாற்றங்கள் தேவை. அதை தொடர்ந்து சம்பந்தப் பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கண்ணோட்டத்திலும் மாற்றம் வரவேண்டும். அவ்வாறு சில மாற்றங்களை கொண்டு வர சமீபத்திய அனுபவம் எனக்கும் என் உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வாய்ப்பாக கிடைத்தது. இந்த அனுபவம் என் சொந்த முயற்சியால் கிடைத்த ஒன்று என்று சொல்லிக் கொள்வதில் உண்மையிலே பெருமை அடைகிறேன். ஏனென்றால் எடுத்துக் கொண்ட முயற்சியும் கிடைத்த அனுபவமும் அப்படி.

தில்லியில் உள்ள அரசு மருத்துவனைகளில் இயங்கி வரும் ஒருங்கினைந்த எச்ஐவி சோதனை மற்றும் ஆலோசனை மையங்கள், (Integrated Counselling and Testing Centres) எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்களை மிக மோசமாக நடத்துவதாக சில பத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டன. அதனால் தில்லியில் உள்ள அனைத்து தன்னார்வ சோதனை மையங்களுக்கும் ஒரே நாளில் எந்த முன்னறிவுப்புமின்றி சென்று பார்த்து வர அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் படி குழுவிற்கு 5 பேர் என 7 குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை மேற்கொள்ளப் பட்டது. நான் இருந்த குழுவிற்கு தென் தில்லி பக்கம் உள்ள 7 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டது.

முதலில் சென்ற மருத்துவமனையில் நாங்கள் இருப்பதுனாலோ என்னமோ எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆலோசனைக்காக ஒதுக்கப்பட்ட நேரம் மட்டும் மிகவும் குறைவாக இருந்தது. அதை சரி செய்ய சொல்லி விட்டு அடுத்த மருத்துவமனைக்கு சென்றோம்

அடுத்த மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னால், உண்மையை கண்டுபிடிக்க வேறு என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசித்தோம். நான் ஒரு யோசனை கூறினேன். நம்மில் யாராவது இரண்டு பேர் எச்ஐவி ஆலோசனைக்காக செல்வதைப் போல சென்று பார்க்கலாம் என்றேன் (Mock patient). சொன்னது தான் தாமதம் எல்லாரும் என்னை ஒரு எதிரியை பார்ப்பதைப் போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதே சமயம் யாரும் அவ்வாறு செல்ல முன்வரவும் இல்லை. ஏனென்றால் ஆலோசனைக்காக சென்றால் முதலில் காத்திருக்கவேண்டும். காத்திருக்கும் போது வேறு யாராவது நம்மை பார்க்க வாய்பிருக்கிறது. இது அவர்கள் 'ஊராம்'. அதனால் அவர்கள் பெயர் கெட்டு விடுமாம். இது தானா பிரச்சனை, சரி, நான் தானே யோசனை கூறினேன் நானே செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல் காரை விட்டு இறங்கினேன்.

முதலில் ஆலோசனை மையம் எங்கிருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும். இதற்கும் ஒரு மருத்துவமனை விதி இருக்கிறது. எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்கள் மற்றவர்களை கேட்க சங்கடப்படுவார்கள். அதனால் மருத்துவமனை நிர்வாகம் தகுந்த வழிகாட்டி பலகைகளை வைத்திருக்க வேண்டும். ஆனால் அங்கே எந்த வழிகாட்டி பலகையும் இல்லாததால் விசாரித்தே செல்ல வேண்டியிருந்தது. ஒரு வழியாக கண்டுபிடித்து ஆலோசனை மையத்தினுள் நுழைந்தேன். நான் சென்ற போது எனக்கு முன்னால் 8 பேர் இருந்தார்கள். ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இருக்கட்டும் என்று 'பெஞ்சில்' அமர்ந்து கொண்டேன்.

முதல் 10 / 15 நிமிடங்கள் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. நண்பர்களே, அதற்குப் பிறகு காத்திருந்த ஒரு மணி நேரம் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது. மிகப்பெரிய அனுபவம். வெராண்டாவில் சென்றவர்கள் என்னை பார்த்த பார்வை,பொது மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் ஒரு பார்வை திரும்பி பார்க்காமல் போகவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அப்படி சந்தேகப்பட்டு ஆலோசனைக்காக வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர முடிந்தது. பாதிக்கப்பட்டவராக நடித்துக் கொண்டிருக்கும் நமக்கு, டெஸ்ட் ரிசல்ட் பற்றிய கவலையில்லை. ஆனால் அவர்களுக்கு???...ம்ம்ம்ம்ம்.

இதனிடையே காரில் காத்துக் கொண்டிருந்த என் அலுவலக சகாக்கள், சமோசா வாங்கிட்டு வரவா, மிராண்டா வாங்கிட்டு வரவா என்று கைபேசியில் அழைத்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் பதட்டம் தான். இப்பவும் ஒன்றும் கெட்டு விடவில்லை, நாங்கள் வருகிறோம், ஆலோசகரிடம் பேசலாம் என்று மீண்டும் ஆரம்பித்தனர். ஒன்றும் வேண்டாம் நேரம் ஆகும் காத்திருங்கள் என்று கூறிவிட்டு அமர்ந்திருந்தேன்.

அருகில் ஒரு பெண் கலவர முகத்துடன் அமர்ந்திருந்தாள். என்னாலும் முகத்தை சகஜமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. உண்மையிலேயே எனக்கும் அடி வயிற்றில் ஏதோ பிரட்டிக் கொண்டுதானிருந்தது. மெதுவாக அருகில் வந்து 'நீங்களும் டெஸ்ட் செய்யத்தான் வந்தீங்களா". நான் எற்றுக்கொண்டிருக்கும் பாத்திரத்தின் உண்மை நிலையை உணர ஆரம்பித்தேன். "ஆமா, நானும் டெஸ்டுக்காகத் தான் வந்திருக்கேன்' என்றேன். என் உடையையும் என்னையும் மேலும் கீழும் பார்த்தாள். " ஏன்?, எப்படி?" என்றாள்.. அதாவது நான் எதற்காக டெஸ்டு செய்ய விரும்புகிறேன், எப்படி இந்த நோய்க்கு ஆளானேன் என்பதை விசாரித்தாள். எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் வந்துவிட்டேன். ஆனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள இயலவில்லை. கொஞ்சம் மெளனமாக இருந்தேன். அந்தப் பெண், தன் கணவர் ஒரு லாரி ஓட்டுனர் என்றும், கணவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்த பின்னர், நேற்று வந்து டெஸ்டுக்காக இரத்தம் கொடுத்துவிட்டு சென்றதாகவும், இன்று ரிசல்ட் கிடைக்கும் என்றும் கூறினாள். அவளின் மனநிலையை உணர முடிந்தது.

என் மெளனத்தை பார்த்து" பரவாயில்லை, சொல்லுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்றாள்'. நான் சொன்னேன், " எப்படி என்று தெரியவில்லை, மருத்துவர் இங்கு அனுப்பினார்" என்றேன். ரொம்ப புத்திசாலி என்று எனக்குள் நினைப்பு. உடனே அந்தப் பெண், " உங்கள் கணவர் அடிக்கடி வெளியூர் செல்பவரா" என்றார். ஆஹா இது என்னடா வம்பு, நாம் மேற்கொள்ளும் நடிப்பில் பாவம் கணவரை ஏன் இழுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பெண் மேல் தவறில்லை. நியாயமான கேள்வி தான் கேட்டாள். நான் 'இல்லை' என்றேன். காரணத்தை சொல்ல விரும்பாதவள் போல முகத்தை திருப்பிக் கொண்டேன். நடிப்பதற்கே இப்படியென்றால்... ம்ம்ம்
என் முறை வந்ததும் உள்ளே சென்றேன். ஆலோசகரும் அவரின் சகாக்களும் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தனர். என்னைப் பார்த்ததும் அந்த அறையே அமைதியானது. நான் தனியாக பேச விரும்பவதாக கூறினேன்.

அதற்கான வசதி இங்கில்லை, இப்படியே பேசுங்க என்றார். நான் "டெஸ்ட் செய்ய வந்தேன்" என்றேன்.

"உங்களைப் பார்த்தா படித்து ஏதோ நல்ல வேலையில் இருப்பவர் மாதிரி இருக்கு?" என்றார். நான் 'ஆமாம்" என்றேன்.

"சரி ஏன் டெஸ்ட் எடுக்க விரும்பறீங்க" என்றார். 'சந்தேகம் தான்' என்றேன். உண்மையில் காலுக்கடியில் பூமி என்னை விழுங்கவதைப் போல இருந்தது.

"எச்ஐவி பற்றி தெரியுமா" என்றார்.நான் "தெரியாது சொல்லுங்கள்" என்றேன்.-எச்ஐவி பற்றிய அனைத்து தகவல்களையும் அவர் கொடுக்க வேண்டும். அவரோ எச்ஐவி ஏதோ தகாத உறவின் மூலமாக மட்டுமே வருவதைப் போல தகவல்களை அடுக்கிக் கொண்டு போனார். "தகாத உறவு" என்ற வார்த்தையை ஆலோசகர் உபயோகப்படுத்தக் கூடாது. பாதுகாப்பில்லாத உறவல்லாமல் வேறு வழியுலும் ஒருவர் பாதிக்கப்படலாம் என்பதை கூற ஆலோசகர் மறந்துவிட்டார்.

என் பெயர், முகவரி, வயது, திருமண உறவு போன்ற தகவல்களை எழுத முற்பட்டார். நான் அதெல்லாம் பிறகு தருகிறேன், முதலில் டெஸ்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். "வந்தது எச்ஐவி டெஸ்டுக்கு, இதுல என்ன இரகசியம் வேண்டி இருக்கு". இதை சொன்னது ஆலோசகர் அல்லாத வேறொருவர்.

பிறகு இரத்தம் எடுக்கப்பட்டது. அவ்வளவு தான் ஆலோசனை. டெஸ்ட் பாஸிடிவ் என்றால் என்ன, நெகடிவ் என்றால் என்ன என்பதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.எந்த வித ஆதரவான ஆலோசனையும் வழங்கப்படவில்லை.
"அவ்வளவு தானா வேறு ஏதாவது நீங்க சொல்லணுமா" என்று கேட்டேன். "வேற என்ன போய்ட்டு நாளைக்கு வாங்க...உங்க 'லக்' எப்படி இருக்குன்னு பார்க்கலாம்" என்றார். எத்தனை பொறுப்பில்லாத பேச்சு!!!. அருகில் இருந்தவர்.."க்யா ஆப் மதராசி ஹே கயா" என்றார். நான் ' ஆமாம்" என்று சொன்னதும், " தமிழ்நாட் மே எச்ஐவி ஜாதா பட்தா ஜாராஹாஹே" (தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது) . நான் ஒன்றும் பேசவில்லை.

இதற்குள் என் அலுவலக நண்பர்கள் பொறுமை இழந்து அங்கு வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். ஆலோசகர் அசடு வழிந்து " மேடத்தை பார்த்ததும் நினச்சேன், அப்படி இருக்காதுன்னு" என்று அந்தர் பல்டி அடித்தார்.

"எப்படி" இருக்காதுன்னு நினச்சீங்க? படிச்சவங்க படிக்காதவங்கன்னு இந்த நோய்க்கு பேதம் வேற இருக்கா?. ஆலோசகர், "இல்லை மேடம் இருந்தாலும்...பார்த்தா தெரியும் இல்லை?"

"இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்க கூடாதுங்குறது தானே நாம் முதலில் மனதில் வைத்துக் கொள்ளவேண்டியது. எப்படி இருந்தாலும் நீங்க நடந்துட்ட முறை சரியில்லையே. படித்தவர்களிடமே இப்படி நடந்துட்டா, படிக்காத பாமரர்களிடம் உங்களின் நடத்தை எப்படி இருக்கும்!! "

இல்ல மேடம்...தினமும் 100 பேர் வராங்க...அதுனால சில சமயம் இது மாதிரி ஆயிடுது. இப்படி பல நியாயங்களை சொல்லி தன் தரப்பு வாதங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

'Unconditional Postive Regard" என்று உளவியலில் சொல்வார்கள். இது தான் எந்த ஒரு ஆலோசகருக்கும் தாரக மந்திரம். அவரிடம் உதவி கேட்டு வருபவர்களின் மேல் நிபந்தனை இல்லாத மரியாதையும் non-judgemental ஆட்டிட்யூடும் தேவை. ஆலோசகர் மட்டுமல்ல மற்ற மருத்துவ ஊழியர்களும் இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏன், நாமே இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.


இந்த இடத்தில் நான் மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.
அலோசகர்கள் தரப்பு வாதங்களையும் நாம் ஒரேயடியாக ஒதுக்க முடியாது. முதுகலை பட்டதாரிகளான இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் 6 அல்லது 7 ஆயிரம் ரூபாய். அவர்களின் சமுதாய, குடும்ப பொறுப்புகளையும் அதிகாரிகள் நினைவில் கொள்ளவேண்டும். எச்ஐவி குறித்த எந்த ஒரு திட்டத்தையும் வகுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அடிப்படை. அதை சரிவர தொகுத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆலோசகர்களிடம் இருக்கிறது. அவர்கள் பணி புரியும் சூழல், அன்றாடம் சந்திக்க வேண்டிய மக்கள், தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய ரெஜிஸ்டர்கள் (அதுவே ஒரு பெரிய வேலை..அத்தனை ரெஜிஸ்டர்கள் இருக்கிறது), என பல பொறுப்புகள். பொறுப்புகள் அதிகமாகும் போது அதற்கேற்ற சன்மானத்தை எதிர்பார்ப்பது நியாயம் தானே. எது எப்படி இருந்தாலும் அவர்களின் செயலை இங்கு நியாயப்படுத்த முடியாது.

பாதிக்கப்பட்டவளாக நான் நடித்த அந்த 1 மணி நேரம் எனக்குள் ஓடின எண்ணங்களை இங்கு சொல்லி புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இது போல எதிர்கொள்ள வேண்டிய தருணங்கள் ஏராளம். ஆலோசனைக்காக வருவது முதல் தொடர்ந்து சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஒரு அனுபவம் காத்திருக்கும். வீட்டில், தொழில் புரியும் இடத்தில், பொதுவாழ்வில், நண்பர்கள் மத்தியில் என அவர்கள் பல எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வேறு எந்த நோய்க்கும் இல்லாத ஒன்றாக, இந்நோய் வாய்ப்பட்டவர்கள் சமுதாய, பொருளாதார, உளவியல் மற்றும் மருத்துவ பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் ஓரளவிற்காவது மாற்றம் வரவேண்டுமென்றால் கொள்கை மாற்றங்களுடன் எண்ணமாற்றங்களும் வரவேண்டும். சகமனிதன் சுதந்திரம் இவர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.


பாதிக்கப்பட்டவர்களின் சமுதாய வாழ்க்கையில், அவர்களின் ஒழுக்கம் மீதான பொறுப்பில்லா விமர்சனங்கள், கருத்துக்களாக கண்ணோட்டங்களாக இவர்கள் மீது விழுந்து, அவமரியாதையையும், தாழ்மையுணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 'பண்பு ', 'பண்பாடு' போன்ற வார்த்தைகளை பாலியல் தொடர்பான செயல்களுக்கு மட்டுமே உபயோகிக்காமல், சக மனிதனின் பால் காட்டும் மரியாதையிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கே தயங்கும் நாம் அதற்கான நியாயமான காரணங்களை மனதில் நிறுத்தியே அவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளலாம் அல்லவா?. ...ம்ம்ம்..