Sunday, October 19, 2008

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர முடியவில்லை. அப்படி அவர்களின் நிலையில் என்னை வைத்து பார்க்க, நிஜத்தில் அனுபவிக்க ஒரு வாய்ப்பை சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டேன். வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத தருணங்கள், அனுபவங்கள். இந்த அனுபவம் மூலம் என் பணி சார்ந்த எண்ணங்களை இன்னும் பட்டைத் தீட்டிகொள்ள முடிந்தது.

இன்று வரை இந்நோயை ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமாகத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் சமுதாய, பொருளாதார, உளவியல் கூறுகள் சம்பந்தப் பட்டிருப்பதை உணர மறுக்கிறோம். மருத்துவமனைகளில், சமுதாயத்தில், தொழில் செய்யும் இடங்களில் பல அவமானங்களை பாதிக்கப்பட்டவர்கள் எதிர் கொள்கிறார்கள். இதை பற்றி பேசுவதும், அச்சச்சோ என்று உச்சு கொட்டுவதும் எவ்வளவு சுலபமாக வேலை என்பதை இப்பொழுது உணர்கிறேன். (அதாவது என்னைப் போல இந்தத் துறையில் இருப்பவர்களை மட்டுமே சொல்கிறேன்). இந்த பரிதாபம் காட்டுதல் எந்த வகையில் அவர்களுக்கு இது நாள் வரையில் உபயோகமாக இருந்திருக்கிறது, என்றால், இங்கு எழுதுவதால், சில வலை நண்பர்கள் நேராக சென்று
மீனாட்சி போன்றவர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.

இது தவிர கொள்கையளவிலும் சில மாற்றங்கள் தேவை. அதை தொடர்ந்து சம்பந்தப் பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கண்ணோட்டத்திலும் மாற்றம் வரவேண்டும். அவ்வாறு சில மாற்றங்களை கொண்டு வர சமீபத்திய அனுபவம் எனக்கும் என் உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வாய்ப்பாக கிடைத்தது. இந்த அனுபவம் என் சொந்த முயற்சியால் கிடைத்த ஒன்று என்று சொல்லிக் கொள்வதில் உண்மையிலே பெருமை அடைகிறேன். ஏனென்றால் எடுத்துக் கொண்ட முயற்சியும் கிடைத்த அனுபவமும் அப்படி.

தில்லியில் உள்ள அரசு மருத்துவனைகளில் இயங்கி வரும் ஒருங்கினைந்த எச்ஐவி சோதனை மற்றும் ஆலோசனை மையங்கள், (Integrated Counselling and Testing Centres) எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்களை மிக மோசமாக நடத்துவதாக சில பத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டன. அதனால் தில்லியில் உள்ள அனைத்து தன்னார்வ சோதனை மையங்களுக்கும் ஒரே நாளில் எந்த முன்னறிவுப்புமின்றி சென்று பார்த்து வர அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் படி குழுவிற்கு 5 பேர் என 7 குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை மேற்கொள்ளப் பட்டது. நான் இருந்த குழுவிற்கு தென் தில்லி பக்கம் உள்ள 7 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டது.

முதலில் சென்ற மருத்துவமனையில் நாங்கள் இருப்பதுனாலோ என்னமோ எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆலோசனைக்காக ஒதுக்கப்பட்ட நேரம் மட்டும் மிகவும் குறைவாக இருந்தது. அதை சரி செய்ய சொல்லி விட்டு அடுத்த மருத்துவமனைக்கு சென்றோம்

அடுத்த மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னால், உண்மையை கண்டுபிடிக்க வேறு என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசித்தோம். நான் ஒரு யோசனை கூறினேன். நம்மில் யாராவது இரண்டு பேர் எச்ஐவி ஆலோசனைக்காக செல்வதைப் போல சென்று பார்க்கலாம் என்றேன் (Mock patient). சொன்னது தான் தாமதம் எல்லாரும் என்னை ஒரு எதிரியை பார்ப்பதைப் போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதே சமயம் யாரும் அவ்வாறு செல்ல முன்வரவும் இல்லை. ஏனென்றால் ஆலோசனைக்காக சென்றால் முதலில் காத்திருக்கவேண்டும். காத்திருக்கும் போது வேறு யாராவது நம்மை பார்க்க வாய்பிருக்கிறது. இது அவர்கள் 'ஊராம்'. அதனால் அவர்கள் பெயர் கெட்டு விடுமாம். இது தானா பிரச்சனை, சரி, நான் தானே யோசனை கூறினேன் நானே செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல் காரை விட்டு இறங்கினேன்.

முதலில் ஆலோசனை மையம் எங்கிருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும். இதற்கும் ஒரு மருத்துவமனை விதி இருக்கிறது. எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்கள் மற்றவர்களை கேட்க சங்கடப்படுவார்கள். அதனால் மருத்துவமனை நிர்வாகம் தகுந்த வழிகாட்டி பலகைகளை வைத்திருக்க வேண்டும். ஆனால் அங்கே எந்த வழிகாட்டி பலகையும் இல்லாததால் விசாரித்தே செல்ல வேண்டியிருந்தது. ஒரு வழியாக கண்டுபிடித்து ஆலோசனை மையத்தினுள் நுழைந்தேன். நான் சென்ற போது எனக்கு முன்னால் 8 பேர் இருந்தார்கள். ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இருக்கட்டும் என்று 'பெஞ்சில்' அமர்ந்து கொண்டேன்.

முதல் 10 / 15 நிமிடங்கள் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. நண்பர்களே, அதற்குப் பிறகு காத்திருந்த ஒரு மணி நேரம் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது. மிகப்பெரிய அனுபவம். வெராண்டாவில் சென்றவர்கள் என்னை பார்த்த பார்வை,பொது மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் ஒரு பார்வை திரும்பி பார்க்காமல் போகவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அப்படி சந்தேகப்பட்டு ஆலோசனைக்காக வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர முடிந்தது. பாதிக்கப்பட்டவராக நடித்துக் கொண்டிருக்கும் நமக்கு, டெஸ்ட் ரிசல்ட் பற்றிய கவலையில்லை. ஆனால் அவர்களுக்கு???...ம்ம்ம்ம்ம்.

இதனிடையே காரில் காத்துக் கொண்டிருந்த என் அலுவலக சகாக்கள், சமோசா வாங்கிட்டு வரவா, மிராண்டா வாங்கிட்டு வரவா என்று கைபேசியில் அழைத்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் பதட்டம் தான். இப்பவும் ஒன்றும் கெட்டு விடவில்லை, நாங்கள் வருகிறோம், ஆலோசகரிடம் பேசலாம் என்று மீண்டும் ஆரம்பித்தனர். ஒன்றும் வேண்டாம் நேரம் ஆகும் காத்திருங்கள் என்று கூறிவிட்டு அமர்ந்திருந்தேன்.

அருகில் ஒரு பெண் கலவர முகத்துடன் அமர்ந்திருந்தாள். என்னாலும் முகத்தை சகஜமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. உண்மையிலேயே எனக்கும் அடி வயிற்றில் ஏதோ பிரட்டிக் கொண்டுதானிருந்தது. மெதுவாக அருகில் வந்து 'நீங்களும் டெஸ்ட் செய்யத்தான் வந்தீங்களா". நான் எற்றுக்கொண்டிருக்கும் பாத்திரத்தின் உண்மை நிலையை உணர ஆரம்பித்தேன். "ஆமா, நானும் டெஸ்டுக்காகத் தான் வந்திருக்கேன்' என்றேன். என் உடையையும் என்னையும் மேலும் கீழும் பார்த்தாள். " ஏன்?, எப்படி?" என்றாள்.. அதாவது நான் எதற்காக டெஸ்டு செய்ய விரும்புகிறேன், எப்படி இந்த நோய்க்கு ஆளானேன் என்பதை விசாரித்தாள். எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் வந்துவிட்டேன். ஆனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள இயலவில்லை. கொஞ்சம் மெளனமாக இருந்தேன். அந்தப் பெண், தன் கணவர் ஒரு லாரி ஓட்டுனர் என்றும், கணவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்த பின்னர், நேற்று வந்து டெஸ்டுக்காக இரத்தம் கொடுத்துவிட்டு சென்றதாகவும், இன்று ரிசல்ட் கிடைக்கும் என்றும் கூறினாள். அவளின் மனநிலையை உணர முடிந்தது.

என் மெளனத்தை பார்த்து" பரவாயில்லை, சொல்லுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்றாள்'. நான் சொன்னேன், " எப்படி என்று தெரியவில்லை, மருத்துவர் இங்கு அனுப்பினார்" என்றேன். ரொம்ப புத்திசாலி என்று எனக்குள் நினைப்பு. உடனே அந்தப் பெண், " உங்கள் கணவர் அடிக்கடி வெளியூர் செல்பவரா" என்றார். ஆஹா இது என்னடா வம்பு, நாம் மேற்கொள்ளும் நடிப்பில் பாவம் கணவரை ஏன் இழுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பெண் மேல் தவறில்லை. நியாயமான கேள்வி தான் கேட்டாள். நான் 'இல்லை' என்றேன். காரணத்தை சொல்ல விரும்பாதவள் போல முகத்தை திருப்பிக் கொண்டேன். நடிப்பதற்கே இப்படியென்றால்... ம்ம்ம்
என் முறை வந்ததும் உள்ளே சென்றேன். ஆலோசகரும் அவரின் சகாக்களும் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தனர். என்னைப் பார்த்ததும் அந்த அறையே அமைதியானது. நான் தனியாக பேச விரும்பவதாக கூறினேன்.

அதற்கான வசதி இங்கில்லை, இப்படியே பேசுங்க என்றார். நான் "டெஸ்ட் செய்ய வந்தேன்" என்றேன்.

"உங்களைப் பார்த்தா படித்து ஏதோ நல்ல வேலையில் இருப்பவர் மாதிரி இருக்கு?" என்றார். நான் 'ஆமாம்" என்றேன்.

"சரி ஏன் டெஸ்ட் எடுக்க விரும்பறீங்க" என்றார். 'சந்தேகம் தான்' என்றேன். உண்மையில் காலுக்கடியில் பூமி என்னை விழுங்கவதைப் போல இருந்தது.

"எச்ஐவி பற்றி தெரியுமா" என்றார்.நான் "தெரியாது சொல்லுங்கள்" என்றேன்.-எச்ஐவி பற்றிய அனைத்து தகவல்களையும் அவர் கொடுக்க வேண்டும். அவரோ எச்ஐவி ஏதோ தகாத உறவின் மூலமாக மட்டுமே வருவதைப் போல தகவல்களை அடுக்கிக் கொண்டு போனார். "தகாத உறவு" என்ற வார்த்தையை ஆலோசகர் உபயோகப்படுத்தக் கூடாது. பாதுகாப்பில்லாத உறவல்லாமல் வேறு வழியுலும் ஒருவர் பாதிக்கப்படலாம் என்பதை கூற ஆலோசகர் மறந்துவிட்டார்.

என் பெயர், முகவரி, வயது, திருமண உறவு போன்ற தகவல்களை எழுத முற்பட்டார். நான் அதெல்லாம் பிறகு தருகிறேன், முதலில் டெஸ்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். "வந்தது எச்ஐவி டெஸ்டுக்கு, இதுல என்ன இரகசியம் வேண்டி இருக்கு". இதை சொன்னது ஆலோசகர் அல்லாத வேறொருவர்.

பிறகு இரத்தம் எடுக்கப்பட்டது. அவ்வளவு தான் ஆலோசனை. டெஸ்ட் பாஸிடிவ் என்றால் என்ன, நெகடிவ் என்றால் என்ன என்பதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.எந்த வித ஆதரவான ஆலோசனையும் வழங்கப்படவில்லை.
"அவ்வளவு தானா வேறு ஏதாவது நீங்க சொல்லணுமா" என்று கேட்டேன். "வேற என்ன போய்ட்டு நாளைக்கு வாங்க...உங்க 'லக்' எப்படி இருக்குன்னு பார்க்கலாம்" என்றார். எத்தனை பொறுப்பில்லாத பேச்சு!!!. அருகில் இருந்தவர்.."க்யா ஆப் மதராசி ஹே கயா" என்றார். நான் ' ஆமாம்" என்று சொன்னதும், " தமிழ்நாட் மே எச்ஐவி ஜாதா பட்தா ஜாராஹாஹே" (தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது) . நான் ஒன்றும் பேசவில்லை.

இதற்குள் என் அலுவலக நண்பர்கள் பொறுமை இழந்து அங்கு வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். ஆலோசகர் அசடு வழிந்து " மேடத்தை பார்த்ததும் நினச்சேன், அப்படி இருக்காதுன்னு" என்று அந்தர் பல்டி அடித்தார்.

"எப்படி" இருக்காதுன்னு நினச்சீங்க? படிச்சவங்க படிக்காதவங்கன்னு இந்த நோய்க்கு பேதம் வேற இருக்கா?. ஆலோசகர், "இல்லை மேடம் இருந்தாலும்...பார்த்தா தெரியும் இல்லை?"

"இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்க கூடாதுங்குறது தானே நாம் முதலில் மனதில் வைத்துக் கொள்ளவேண்டியது. எப்படி இருந்தாலும் நீங்க நடந்துட்ட முறை சரியில்லையே. படித்தவர்களிடமே இப்படி நடந்துட்டா, படிக்காத பாமரர்களிடம் உங்களின் நடத்தை எப்படி இருக்கும்!! "

இல்ல மேடம்...தினமும் 100 பேர் வராங்க...அதுனால சில சமயம் இது மாதிரி ஆயிடுது. இப்படி பல நியாயங்களை சொல்லி தன் தரப்பு வாதங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

'Unconditional Postive Regard" என்று உளவியலில் சொல்வார்கள். இது தான் எந்த ஒரு ஆலோசகருக்கும் தாரக மந்திரம். அவரிடம் உதவி கேட்டு வருபவர்களின் மேல் நிபந்தனை இல்லாத மரியாதையும் non-judgemental ஆட்டிட்யூடும் தேவை. ஆலோசகர் மட்டுமல்ல மற்ற மருத்துவ ஊழியர்களும் இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏன், நாமே இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.


இந்த இடத்தில் நான் மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.
அலோசகர்கள் தரப்பு வாதங்களையும் நாம் ஒரேயடியாக ஒதுக்க முடியாது. முதுகலை பட்டதாரிகளான இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் 6 அல்லது 7 ஆயிரம் ரூபாய். அவர்களின் சமுதாய, குடும்ப பொறுப்புகளையும் அதிகாரிகள் நினைவில் கொள்ளவேண்டும். எச்ஐவி குறித்த எந்த ஒரு திட்டத்தையும் வகுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அடிப்படை. அதை சரிவர தொகுத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆலோசகர்களிடம் இருக்கிறது. அவர்கள் பணி புரியும் சூழல், அன்றாடம் சந்திக்க வேண்டிய மக்கள், தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய ரெஜிஸ்டர்கள் (அதுவே ஒரு பெரிய வேலை..அத்தனை ரெஜிஸ்டர்கள் இருக்கிறது), என பல பொறுப்புகள். பொறுப்புகள் அதிகமாகும் போது அதற்கேற்ற சன்மானத்தை எதிர்பார்ப்பது நியாயம் தானே. எது எப்படி இருந்தாலும் அவர்களின் செயலை இங்கு நியாயப்படுத்த முடியாது.

பாதிக்கப்பட்டவளாக நான் நடித்த அந்த 1 மணி நேரம் எனக்குள் ஓடின எண்ணங்களை இங்கு சொல்லி புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இது போல எதிர்கொள்ள வேண்டிய தருணங்கள் ஏராளம். ஆலோசனைக்காக வருவது முதல் தொடர்ந்து சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஒரு அனுபவம் காத்திருக்கும். வீட்டில், தொழில் புரியும் இடத்தில், பொதுவாழ்வில், நண்பர்கள் மத்தியில் என அவர்கள் பல எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வேறு எந்த நோய்க்கும் இல்லாத ஒன்றாக, இந்நோய் வாய்ப்பட்டவர்கள் சமுதாய, பொருளாதார, உளவியல் மற்றும் மருத்துவ பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் ஓரளவிற்காவது மாற்றம் வரவேண்டுமென்றால் கொள்கை மாற்றங்களுடன் எண்ணமாற்றங்களும் வரவேண்டும். சகமனிதன் சுதந்திரம் இவர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.


பாதிக்கப்பட்டவர்களின் சமுதாய வாழ்க்கையில், அவர்களின் ஒழுக்கம் மீதான பொறுப்பில்லா விமர்சனங்கள், கருத்துக்களாக கண்ணோட்டங்களாக இவர்கள் மீது விழுந்து, அவமரியாதையையும், தாழ்மையுணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 'பண்பு ', 'பண்பாடு' போன்ற வார்த்தைகளை பாலியல் தொடர்பான செயல்களுக்கு மட்டுமே உபயோகிக்காமல், சக மனிதனின் பால் காட்டும் மரியாதையிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கே தயங்கும் நாம் அதற்கான நியாயமான காரணங்களை மனதில் நிறுத்தியே அவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளலாம் அல்லவா?. ...ம்ம்ம்..

47 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல்ல உங்களுக்கு பாராட்டுக்கள்.. அதிரடி ஆப்பீச்சரம்மா!

சென்ஷி said...

உண்மையில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய எழுத்துக்களை படிக்கையில் எங்க போய் வாங்குனானோ அல்லது வாங்குனாளோ என்ற பேச்சுக்கள்தான் அதிகமாயிருக்கும் சூழலில் தங்களின் பதிவு மிகச்சிறந்த ஒன்றாகி இருக்கிறது.

தங்களின் எல்லாப்பதிவையும் மிகச்சிறந்த பதிவாக கருதும் என் மனதில் இந்தப் பதிவு மிக ஆழமான வடுவை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் தாங்களே இப்படி வேடமிட்டு சென்றது கூட இருக்கலாம். நான் உங்களைப்பற்றி பெருமிதம் கொள்வதின் அர்த்தம் இன்று முழுமையாகின்றது.

//'பண்பு ', 'பண்பாடு' போன்ற வார்த்தைகளை பாலியல் தொடர்பான செயல்களுக்கு மட்டுமே உபயோகிக்காமல், சக மனிதனின் பால் காட்டும் மரியாதையிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்.
//

சமூகத்தின் மேல் செருப்படி கொடுக்கக்கூடிய வார்த்தைகள்..

பதிவை முழுவதும் படித்தபிறகு தங்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் நினைவுதான் அதிகமாகிறது. கடவுளின் கிருபையால் அவருக்கு எந்த குறையும் இல்லாமல் இருக்க வேண்டுகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி சொன்னது போல சகமனிதன் மேல் காட்டும் மரியாதைங்கறது தான் பதிவின் முக்க்கியமான அம்சம்..

அந்த நேரத்தில் உண்மைன்னு நினைச்சு அந்த பெண் உங்களுக்கு தைரியம் கொடுத்து சொல்லுங்க ஒருவருக்கொருவர் ஆதரவா இருப்போம்ன்னு சொன்னாளே.. அந்த பெண் நல்லா இருக்கனும்..

ramachandranusha(உஷா) said...

மங்கை சில சமயங்களில் சில வார்த்தைகள் சரியாய் சொல்லவருவதை வெளிப்படுத்துவதில்லை. பாராட்டுகள்/ உங்கள் தைரியம் என்னை வியக்க வைக்கிறது இவைகள் எல்லாம் இல்லாமல், ஏதோ சொல்ல வருகிறேன், ஆனால் சொல்ல தெரியவில்லை.
மிக உணர்ச்சி வசப்பட்ட நிலை எனக்கு மிக அபூர்வம், இன்று அந்த மனநிலைமையில் சொல்கிறேன், உங்கள் பணியை தொடருங்கள்

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
சென்ஷி சொன்னது போல சகமனிதன் மேல் காட்டும் மரியாதைங்கறது தான் பதிவின் முக்க்கியமான அம்சம்..

அந்த நேரத்தில் உண்மைன்னு நினைச்சு அந்த பெண் உங்களுக்கு தைரியம் கொடுத்து சொல்லுங்க ஒருவருக்கொருவர் ஆதரவா இருப்போம்ன்னு சொன்னாளே.. அந்த பெண் நல்லா இருக்கனும்..
//

நீங்க சொன்னது உண்மைதான்க்கா. மத்தவங்ககூட பரிமாறிக்க முடியாத நிலைமையிலதான் எய்ட்ஸூங்கற வியாதிய மாத்தி வச்சிருக்கோமுன்னு நினைக்குறப்ப வெறுப்பா இருக்குது :(

அமர பாரதி said...

//இந்த இடத்தில் நான் மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.
அலோசகர்கள் தரப்பு வாதங்களையும் நாம் ஒரேயடியாக ஒதுக்க முடியாது. முதுகலை பட்டதாரிகளான இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் 6 அல்லது 7 ஆயிரம் ரூபாய். அவர்களின் சமுதாய, குடும்ப பொறுப்புகளையும் அதிகாரிகள் நினைவில் கொள்ளவேண்டும்//

எந்த சமுதாய சீர்கேட்டையும், லஞ்சத்தையும் மற்றும் ஊழலையும் இதை சொல்லி நியாயப்படுத்தி விடலாம். இந்த வாதம் எடுபடும் என்றால் அந்த தவறுகளை கண்டு பிடிக்க வேண்டியதில்லையே. இதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் மேடம்?

மற்றபடி இது ஒரு நல்ல கட்டுரை. பாவம் அவர்கள். இதற்காக ஒதுக்கப்படும் அரசாங்க பணம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் கோடிக்கணக்கான பணம் எப்படி செலவாகிறது?

கோபிநாத் said...

\\சென்ஷி said...
உண்மையில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய எழுத்துக்களை படிக்கையில் எங்க போய் வாங்குனானோ அல்லது வாங்குனாளோ என்ற பேச்சுக்கள்தான் அதிகமாயிருக்கும் சூழலில் தங்களின் பதிவு மிகச்சிறந்த ஒன்றாகி இருக்கிறது.

தங்களின் எல்லாப்பதிவையும் மிகச்சிறந்த பதிவாக கருதும் என் மனதில் இந்தப் பதிவு மிக ஆழமான வடுவை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் தாங்களே இப்படி வேடமிட்டு சென்றது கூட இருக்கலாம். நான் உங்களைப்பற்றி பெருமிதம் கொள்வதின் அர்த்தம் இன்று முழுமையாகின்றது.

//'பண்பு ', 'பண்பாடு' போன்ற வார்த்தைகளை பாலியல் தொடர்பான செயல்களுக்கு மட்டுமே உபயோகிக்காமல், சக மனிதனின் பால் காட்டும் மரியாதையிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்.
//

சமூகத்தின் மேல் செருப்படி கொடுக்கக்கூடிய வார்த்தைகள்..

பதிவை முழுவதும் படித்தபிறகு தங்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் நினைவுதான் அதிகமாகிறது. கடவுளின் கிருபையால் அவருக்கு எந்த குறையும் இல்லாமல் இருக்க வேண்டுகிறேன்.
\\

ரீப்பிட்டே..

உங்களுக்கு என்னோட பணிவான வணக்கங்கள் ;)

Thekkikattan|தெகா said...

மங்கை,

இது போன்ற ஒரு முடிவு எடுத்து அங்கே அமர்ந்து உண்மையை அறிய நீங்கள் எடுத்த முடிவு ரொம்ப துணிச்சலான விசயம்.

பதிவு மிகவும் நன்றாக வந்திருக்கிறது.

//" தமிழ்நாட் மே எச்ஐவி ஜாதா பட்தா ஜாராஹாஹே" (தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது) //

இப்படி ஒரு கேள்வியை கேட்டதின் மூலமாக எனக்கு ஒரு எதிர் கேள்வி தோன்றச் செய்கிறது. ஏன், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அனேகமான எச் ஐ வியால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுகிறார்கள்? அது, இது போன்ற பரிசோதனைக்குச் சென்று அறிந்து கொள்ளும் துணிவும், ஆர்வமும், விழிப்புணர்வு இருப்பதாலும் என்ற கொள்ள முடியுமா, தமிழகத்தில்?

அப்படியாகின் அது சார்ந்த பணியில் இருப்பவருக்கே உண்மை நிலை தெரியவில்லையென்று தானே பொருள்?

Unknown said...

ஹாட்ஸ் ஆஃப்!!!!!!!!!! கண்களில் கண்ணீரோடு வாழ்த்துகிறேன்!

//எது எப்படி இருந்தாலும் அவர்களின் செயலை இங்கு நியாயப்படுத்த முடியாது.// இது மிகச் சரி.

//சக மனிதனின் பால் காட்டும் மரியாதையிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்// அழகாய்ச் சொன்னீர்கள்.

மீண்டும் வாழ்த்துகள்!

King... said...

தேவையான கட்டுரை..

உங்கள் முயற்சிக்கும் செயற்பாடுகளுக்கும் பாராட்டுக்கள்...

King... said...

சமூகம் பண்பாடு பற்றி பேசுவதே அவரவருக்கு தேவையான நேரத்தில் மட்டும்தானே...

சென்ஷி பின்னூட்டத்தை வழி மொழிகிறேன்...

கவிதா | Kavitha said...

மங்கை நீங்களா நான் இருந்து இருக்க கூடாதா..ன்னு தோணுது... ..முயற்சி செய்கிறேன்...

Anonymous said...

நல்ல பதிவு, பதிவுலகம் என்பதை வெறும் பொழுது போக்குக்காக மட்டுமிலாமல் நல்ல தகவல்களைப் பரப்பவும் , மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்று நான் விரும்புவதுண்டு , உங்கள் போன்றோரின் பதிவுகளைப் பார்க்கும்போது அந்த நம்பிக்கை மேலும் அதிகரிக்கிறது. மிக்க நன்றி

யட்சன்... said...

:)

:) :)

:) :) :)

:) :) :) :)

தீபாவளிக்கு ஊருக்கு போவலியா ?

துளசி கோபால் said...

ஹைய்யோ.......

இண்டியன் தாத்தி( தாத்தாவுக்குப் பெண்பால்) ஆகிட்டீங்க.

உங்களை என் தங்கைன்னு சொல்லிக்கவே ரொம்பப் பெருமையா இருக்கு.

ஹேட்ஸ் ஆஃப் டு யூ.

மனம் நிறைஞ்ச பாராட்டுகள் மங்கை என் தங்கை.

ஆயில்யன் said...

/மங்கை சில சமயங்களில் சில வார்த்தைகள் சரியாய் சொல்லவருவதை வெளிப்படுத்துவதில்லை. பாராட்டுகள்/ உங்கள் தைரியம் என்னை வியக்க வைக்கிறது இவைகள் எல்லாம் இல்லாமல், ஏதோ சொல்ல வருகிறேன், ஆனால் சொல்ல தெரியவில்லை.
மிக உணர்ச்சி வசப்பட்ட நிலை எனக்கு மிக அபூர்வம், இன்று அந்த மனநிலைமையில் சொல்கிறேன், உங்கள் பணியை தொடருங்கள்///

நான் நினைத்தது ஏற்கன்வே வாக்கியமாக்கிவிட்ட நிலையில் அதை மறுமொழி செய்து விட்டு செல்கிறேன் !

SK said...

படிக்கும் போதே மனதிற்கு மிகவும் கஷ்டமா இருக்கு. உங்களோட துணிவிற்கு பாராட்டுக்கள்.

நீங்கள் செய்யும் வேலை பற்றி கொஞ்சம் விவரம் அறிந்துகொள்ளலாமா. முடிந்தால் எனக்கு ஒரு மெயில் அனுப்பவும். இதே போல் இயக்கமோ, அலுவலகமோ தமிழகத்தில் உள்ளதா?? இருந்தால் அவர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு எப்படி ? யாரேனும் தெரியுமா ??

My mail id is : friends.sk@gmail.com

Unknown said...

உங்களின் துணிவிற்கு முதலில் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
//'வந்தது எச்ஐவி டெஸ்டுக்கு, இதுல என்ன இரகசியம் வேண்டி இருக்கு'. இதை சொன்னது ஆலோசகர் அல்லாத வேறொருவர்//
இந்த மனிதரை என்ன செய்தீர்கள். குறைந்த பட்சம் ஒரு பாடமாவது எடுத்திருக்க வேண்டும்.

Anonymous said...

உங்கள் துனிச்சலுக்குப் பாராட்டுக்கள் மங்கை.

உண்மை நிலை அறியப் புகுந்த உங்களுக்கு உண்மை நிலை அதிர்ச்சியாக இருந்ததில் ஆச்சர்யமில்லை. எல்லா நல்ல திட்டங்களும் இப்படித்தான் பாழாகின்றது.

ஆனால் இதில் ஒழுக்கம் சம்பந்தப் பட்டிருப்பதால் கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருப்பார்கள்.

மற்றபடி சென்ஷியின் பின்னூட்டத்தை அப்படியே வழிமெழிகிறேன்.

Santhosh said...

ரொம்ப துணிச்சலான முடிவு தான் எடுத்து இருக்கீங்க. மத்தபடி ஹும்.. என்ன சொல்றதுன்னு தெரியலை..

கிருத்திகா ஸ்ரீதர் said...

பாராட்டுக்கள் தங்கள் பணியின் தீவிரம் புரிகிறது....

ஸ்ரீனிவாசன் said...

ellorum tamizhil pinootam potrukaanga...enakku tamil thateluzhthil avalabvaaga parishayam illai...mannikavum.

miga thairiyamaana seyal. vaazhthukkal. itharku enna theervu endru ninaikirirgal ???? HIV thadupathu matrum HIV yal baathikkapatavargalai aadaripathu..iderkellam ethenum thittam vaithirukirirgala ???

muraiy thavariya uravugal mukkiya pangu vagikirathu...idarku thani manida olukathai mattum kurai solla mudiaathu. itharku intha kedu ketta samudaayathirkum oru pangu irukathaan seikirathu ???? evvaaru sari seivathu ?????

manathukku migavum kastamaaga irukirathu..

PS: though it's not relevant, oru murai en potti nirvaagathidam ivvaru vedamittu sila thagavalgal segarithu vanden...miga koduramaaana anubavam...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்கள் கூறுவது மிக நுணுக்கமான விஷயம். எந்த தொழிலில் உள்ளவர்களும் தாங்கள் சந்திக்கும் பெருவாரியான மனிதர்களின் பழக்க வழக்கங்கள், எண்ணங்கள் சிந்தனைகள் பரவுவது இயல்பு. உயர் அதிகாரிகள் பணிபுரிபவர்களின் தரம் பாதுகாக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. மற்றபடி நீங்கள் சந்தித்த நபர்களின் தன்மை சரிசெய்யக் கூடியதே.

இலவசக்கொத்தனார் said...

//படிக்கும் போதே மனதிற்கு மிகவும் கஷ்டமா இருக்கு. உங்களோட துணிவிற்கு பாராட்டுக்கள்.//

ரிப்பீட்டே.

அதே சமயம் மற்ற பக்கத்தின் நியாயங்களையும் புரிந்து சொன்னதுக்கும் ஒரு சபாஷ்!

வல்லிசிம்ஹன் said...

ஒரு நிதானத்தோடு தைரியமாக இந்தப் பிரச்சினையை அணுகியதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள் மங்கை.

இன்னாளைய பாரதியின் உண்மையான புதுமைப் பெண்.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

பாச மலர் / Paasa Malar said...

பாராட்டுகள் மங்கை..மன்கை போல் அனவரும் முழுமையான சேவை மனப்பான்மையுடன் இருந்து விட்டால்..இத்தகைய சோதனைகளுக்கே அவசியம் வராது..

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாராட்டுக்கள் மங்கை.

படிக்கும்போது பாவம் என்று தோன்றும். அதற்கப்புறம் அந்த நினைவு கூட வராது. ஆனா நீங்க ரொம்ப பெரிய காரியம் செய்றீங்க. உங்களை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு.

உங்களின் வருகைக்கு அப்புறம் அந்த ஆலோசனை மையங்களில் இருக்கும் ஆலோசகர் மாறி விட்டாரா. இல்லை அதே நிலைதான் தொடருமா.

சும்மா காய்ச்சல், வயிறுவலின்னு கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல் பக்கம் போனாலே நல்லா கவனிக்க மாட்டாங்க. நாமதான் அவங்களை கவனிக்கனும்.
ஹெச் ஐவி சொன்னா கேக்கனுமா.
ஒரு மனிதன் சக மனிதன் மேல் மரியாதை குறைந்த பட்ச மரியாதை வைத்திருந்தாலே போதும். நோய் ஒரு பொருட்டாகாது.

ஒன்னும் இல்லீங்க. ட்ரெய்ன்ல கூட்ட நெரிசல்ல நல்ல இருக்குற நம்ம கை கால் பட்டாலே புடிச்சு தள்ளிவிடற ஆட்களுக்கு மத்தியில் ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்களை நாம் என்னவென்று சொல்வது.

butterfly Surya said...

என் முதல் வருகை இது.. இனி அடிக்கடி வருவேன்.. வாழ்த்துக்கள் மங்கை.. மனித நேயம் இன்னும் சாகவில்லை.. தங்களை போன்றவர்களால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்..

அன்புடன்
சூர்யா
butterflysurya@gmail.com

கானா பிரபா said...

அவசியான பதிவு, முயற்சி

உங்கள் வாழ்வில் பெருமிதமான பணிகளில் இதை நீங்கள் குறித்து வைக்கலாம்.

சுரேகா.. said...

உங்கள் சமூக அக்கறைக்கும்
துணிவுக்கும் என் உளமார்ந்த வணக்கங்கள்!

இப்படிச்செய்தால்தான்
இவர்களை தோலுரிக்க முடியும்!
எல்லா இடங்களிலும் இது
இருக்கத்தான் செய்கிறது!
உங்களுக்கும் ஒரு புதிய
உலகத்தை, பாதிக்கப்பட்டவரின்
பார்வையில் பார்க்கவைத்த
இயற்கைக்கட்டமைப்புக்கும்
நன்றிகள்!

நீங்களெல்லாம் இருப்பதால்தான்
அவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்)
கொஞ்சமாவது நிம்மதியாக
இருக்கிறார்கள்.!

வாழ்த்துக்கள்ங்க!

புருனோ Bruno said...

//தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய ரெஜிஸ்டர்கள் (அதுவே ஒரு பெரிய வேலை..அத்தனை ரெஜிஸ்டர்கள் இருக்கிறது),//

இதை கணினி மயமாக்க வேண்டும்.

புருனோ Bruno said...

//தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது)//

கடந்த இரு வருடங்களாக எண்ணிக்கை அதிகரிக்க வில்லை

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

புருனோ Bruno said...

//சும்மா காய்ச்சல், வயிறுவலின்னு கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல் பக்கம் போனாலே நல்லா கவனிக்க மாட்டாங்க. //

நீங்க கடைசியாக என்று அரசு மருத்துவமனைக்கு சென்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

புருனோ Bruno said...

//இதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் மேடம்?//

நோயாளிகளுடன் வேலை செய்பவர்களுக்கு அவர்களின் வேலைக்கு ஏற்ப ஊதியம் அளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

--

பணியில் ஊதியம் போதவில்லை என்றால்

அவர் லஞ்சம் வாங்கியிருக்கலாம் -- அதை அந்த ஊழியர் செய்ய வில்லை

அல்லது அங்கிருக்கும் பொருட்களை பாதி விலைக்கு விற்றிருக்கலாம் -- அதையும் அவர் செய்யவில்லை

அல்லது கையெழுத்து மட்டும் போட்டு விட்டு சொந்த வேலை செய்திருக்கலாம் --அதையும் அவர் செய்ய வில்லை

தனது எரிச்சலை, இயலாமையை, பணி அழுத்தத்தை அந்த ஊழியர்(கள்) வெளிபடுத்திய விதம் “எரிந்து விழுதல்”.

--

இதையும் லஞ்சத்தையும் ஒப்பிடுவது தவறு

புருனோ Bruno said...

//மற்றபடி இது ஒரு நல்ல கட்டுரை. பாவம் அவர்கள். இதற்காக ஒதுக்கப்படும் அரசாங்க பணம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் கோடிக்கணக்கான பணம் எப்படி செலவாகிறது?//

ஒரு ஊழியரால் எவ்வளவு பணி செய்ய முடியுமோ அதை விட 20 சதம் வேண்டுமானால் அதிகம் செய்ய சொல்லலாம்.

ஆனால் 200 சதம், 300 சதம் வேலை செய்ய சொல்வது மருத்துவத்துறையில் தற்சமயம் நடைபெறும் கூத்துக்களில் ஒன்று

கடந்த 10 வருடங்களாக பல புதிய திட்டங்கள். பல புதிய மருத்துவமனைகள். பல புதிய மருந்துக்கள்

ஆனால் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் அதே. பணி ஓய்வு பெற்றவர்களின் இடங்கள் நிரப்பப்படவில்லை.

--

வாடிக்கையாளர்களின் மீது / நோயாளிகளின் மீது எரிந்து விழுவது என்பது அதிக பணிச்சுமையின் விளைவே

புருனோ Bruno said...

//இப்படி ஒரு கேள்வியை கேட்டதின் மூலமாக எனக்கு ஒரு எதிர் கேள்வி தோன்றச் செய்கிறது. ஏன், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அனேகமான எச் ஐ வியால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுகிறார்கள்? அது, இது போன்ற பரிசோதனைக்குச் சென்று அறிந்து கொள்ளும் துணிவும், ஆர்வமும், விழிப்புணர்வு இருப்பதாலும் என்ற கொள்ள முடியுமா, தமிழகத்தில்?//

உண்மை. ஆர்வமும் விழிப்புணர்வும் இங்கு அதிகம்

மேலும் சில காரணங்கள்

1. இங்கு அதிக மருத்துவமனைகளில் இந்த வசதி உள்ளது

2. ஆந்திர மாநிலத்திலிருந்து பல நோயாளிகள் இங்கு (தாம்பரம் சானடோரியம், வேலூர் சி.எம்.சி) பதிவு செய்துள்ளதால் எண்ணிக்கை அதிகம்

//அப்படியாகின் அது சார்ந்த பணியில் இருப்பவருக்கே உண்மை நிலை தெரியவில்லையென்று தானே பொருள்?//
ஆமாம்.

மேலும் மதராஸி என்ற எரிச்சல் கூட காரணமாக இருக்கலாம்

புருனோ Bruno said...

வாடிக்கையாளர்களின் மீது / நோயாளிகளின் மீது எரிந்து விழுவது என்பது அதிக பணிச்சுமையின் விளைவே

இதில் முக்கிய விஷயம் -- லஞ்சம், ஒழுங்காக வேலைக்கு வராதது போன்ற தவறுகளை செய்பவர்களை விட எரிந்து விழுபவர்களை சரி செய்வது மிக எளிதான விஷயம்.

புருனோ Bruno said...

//சும்மா காய்ச்சல், வயிறுவலின்னு கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல் பக்கம் போனாலே நல்லா கவனிக்க மாட்டாங்க. நாமதான் அவங்களை கவனிக்கனும். //

நல்லா கவனிப்பது என்றால் என்ன ???

புருனோ Bruno said...

எய்ட்ஸ் திட்ட பணியாளர்களின் பிற பிரச்சனைகள்

1. மற்ற பணியாளர்களின் ஒத்துழையாமை மற்றும் பாராமுகம்

காரணம் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் அதிகப்படியான பணம்

* இந்த திட்ட பணியாளர்கள் மட்டும் நல்ல நாற்காலி, தனியறை, சில இடங்களில் தொலைகாட்சி !!, மற்றும் ஆய்வு கூட்டங்களுக்கு சென்றால் உடனடி பணம் !! போன்ற சில சலுகைகளால் இந்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை மருத்துவமனையில் பணியாற்றும் பிற ஊழியர்கள் எதிரிகளாக பார்க்கும் போக்கு இருக்கிறது

Anonymous said...

Hmm.. I can feel the pain of the affected people through your words.

Still people needs to be sensitised about the pain of others..only then the ywill realise

leave alone HIV/AIDS..hmmm

keep it up Ms.Mangai....

Amutha
Chennai

Venkata Ramanan S said...

பாராட்டுக்கள்.

Anonymous said...

மங்கை அக்கா...

உங்கள் எண் கிடைக்கவில்லை, மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, தாயும் சேயும் நலம்...

ரவி

சினேகிதி said...

உங்களுக்கு இவ்வளவு தைரியமா? நல்லாப் பண்றீங்க:-)

சிக்கிமுக்கி said...

துணிவான செயற்பாடு!

சிறப்பான வெளிப்படுத்தம்!

நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

My saluatations !

I do not have any other words except that wishing all government medical departments to have people like you to serve.

Think Why Not said...

I'm out of words... my hearties thanks for u to bring out these to the world....

by the way I would like to contact you to know more about this (could not find ur mail ID). I'm planning to help.
if you can please mail me.... my mail ID.. athusy@gmail.com

May god bless you with longer life with all prosperities.... continue your service

Unknown said...

மிகச் சிறந்த பதிவு.. தலை வணங்குகிறோம்.. உங்கள் உணர்வோட்டத்திற்கு