Monday, June 25, 2007

அப்பா...

அப்பாவைப்பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. . அது நட்சத்திர வாரத்தில் நிறைவேறுவது மகிழ்ச்சியை தருகிறது.கொஞ்சம் பெரிய பதிவுதான். எதை விடுவது என்று தெரியவில்லை.

அப்பா பெயர்-கோ. ஸ்ரீ ராமச்சந்திரன். கே.ஸ்ரீன்னு கூப்பிடுவாங்க. நிஜத்தில் எங்களை விட்டுப்போய் வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது நினைவுகள் என் இறுதி நிமிடங்கள் வரை பசுமையாகவே இருக்கும். எல்லாப் பெண் குழந்தைகளைப் போல தான் நானும் அப்பாவிடம் அதிகமாக ஒட்டிக் கொள்வேன்.என் அன்றாட செயல்களில் கூட அவரை நினைவு படுத்தும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதுண்டு.

அப்பா நல்ல உயரம், பெரிய கண்கள், அஜானுபாகுவாக இருப்பார்.சுர்ரென கோவமும், அதற்கு சற்றும் குறையாத நகைச்சுவை உணர்வும் கொண்டவர். பிறந்தது கோவை, காளப்பட்டி கிராமம் வளர்ந்ததோ கோவை சிங்காநல்லூரில்.
1930களில் திரு. ஜீவாவும், திரு.N.G.ராமசாமியும் தொழிற்சங்கங்களில் தீவிரமாக ஈடுபட்டிறுந்த இடம் சிங்காநல்லூர். கோவையின் நூற்பாலைகளில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனுக்கு மட்டும் இன்றி, தேசிய போராட்டத்திலும் ஈடுபட்டிருந்த காலம். இந்த போராட்டங்களைப் பார்த்தே வளர்ந்தவர். இந்த இயக்கங்களின் கொள்கை தாக்கம் அவரின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

கோவை சர்வஜன பள்ளியில் படிக்கும் போதே, இலக்கியத்திலும், மற்ற கலைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.பக்ஷி ராஜா ஸ்டுயோவும், சென்ட்ரல் ஸ்டுடியோவும், அப்பொழுது கோவை திரைப்பட இயக்கத்தின் ஆரம்பகால போக்கின் பிறப்பிடமாக இருந்ததும், நாடக துறையின் பல முக்கிய பிரமுகர்கள் கோவையில் இருந்ததும் இதற்கு ஏதுவாக அமைந்தது.



பள்ளி படிப்பை தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். (சென்னையில் இந்த கல்லூரிதான் திராவிட இயக்கத்தின் பிறப்பிடம் என்று அடிக்கடி கூறுவார்). அவர் படித்த நாட்களின் நினைவுகளை ஒன்று கூட மறக்காமல் எங்களிடம் கூறுவார். இந்த திராவிட இயக்கமே இவரது ஆற்றலுக்கு ஏதுவாக அமைந்தது என்று கூறி பெருமை பட்டுக்கொள்வார்.

பட்டப்படிப்பை முடித்து, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுளையாளராக பணிபுரிந்த போதும் கூட, கலைத்துறையில் தான் அப்பாவிற்கு நாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. அப்போது முன்னனி இயக்குனர்களில் ஒருவரான திரு. கிருஷ்னனின் (கோவை) நட்பு கிடைக்கவே, சினிமா துறையில் கால் பதித்தார்.

அப்பாவின் திரைக்கதையில் வெளி வந்த 'அருமை மகள் அபிராமி' படம் மிகவும் சிறப்பாக அமைந்தாம். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படம் வெளிவந்த போது , குமுதத்தில் வெளிவந்த விமர்சனத்தை அடிக்கடி எங்களிடம் சொல்லுவார், "20 ஆண்டுகளுக்கு பின்னர் வந்திருக்க வேண்டிய படம்'' என்று விமர்சனம் வந்ததாம்.

மற்றொரு படம் 'முல்லை வனம்'. தமிழ்த் திரை உலகில் COWBOY ஸ்டைலில் வெளிவந்த முதல் படம். ஸ்ரீராமும், ருக்மனியும் (நடிகை லக்ஷ்மியின் தாய்) நடித்தது. இந்த படத்தில் வரும் Gun Fight பெரும் வரவேற்பை பெற்றதாம். மலைக்கள்ளன் படத்தில் வரும் காமெடி ட்ராக்கும் அப்பா எழுதினதே. ஆனால் அப்பா அப்பொழுது அவ்வளவு பிரபலம் பெறாததால், அவரின் பெயரை போட மறுத்துவிட்டனராம்.

பின்னர் திரைத்துறையில் இருந்த போட்டியாலும், எம்.ஜி.யாருடன் ஏற்பட்ட மன வருத்தாலும், திரைத்துறையை விட்டு வெளியேறி, தில்லியில் ஆல் இந்தியா ரேடியோவில், கிழக்காசிய நேயர்களுக்கான தமிழ் பிரிவில் சேர்ந்தார். அப்பாவின் குரலும், வார்த்தை உச்சரிப்பும் தெளிவாக, கணீரென்று இருக்கும். இங்கும் இவரது நாடக பணி தொடர்ந்தது. முக்கியமாக இவரது இயக்கத்தில் மேடை ஏறின 'under seceratary' என்ற நாடகம் அந்த கால கட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக பலர் கூறி கேட்டிருக்கிறேன்.

அப்போது அப்பாவுடன் சேர்ந்து நடித்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக இருந்த திரு. பூர்ணம் விஸ்வநாதன், மற்றொருவர், இந்திரா பார்த்தசாரதி. தில்லி தமிழ் சங்கத்தில் அப்பா பல நாடகங்களை இயக்கி மேடையேற்றி உள்ளார். பூர்ணம் விஸ்வநாதன் இன்றும் எதையும் மறக்காமல் தொலை பேசி மூலம் எங்களை தொடர்பு கொண்டு பேசுவார்.

சில காலம் கழித்து மீண்டும் கோவை திரும்பி, 'வான்மதி' என்ற பத்திரிக்கை ஆரம்பித்து, ஆசிரியராக மட்டும் இல்லாமல் பல கட்டுரைகளையும் விடுதலை போராட்டம் பற்றிய ஒரு சிறு வரலாறும், பல சிறு கதைகளையும் எழுதினார்.

அப்பா கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பு, சினிமா, நாடகம், பத்திரிக்கை, மார்க்கடிங்க், மருந்து கடை, பிரிண்டிங்க், உணவு விடுதி, ஆசிரியர் பணி, ஸ்டீல் ஆலையில் மேலாளர், ILO வில் திட்டப் பணியாளர் என்று அவர் இருந்த அனைத்து துறையிலும் அப்பா தன் முத்திரையை பதித்தவர்.

அப்பா ரவீந்திரநாத் தாகூரின் வெறித்தனமான ரசிகர். அதனாலேயே என் அண்ணன் பெயரை ரவீந்திரன் என்று வைத்து, தாகூரின் பிரசித்து பெற்ற கவிதையான 'ரக்தகர்வி' யின் நாயகி பெயரை எனக்கு வைத்தார்.

அப்பா கோவை குப்புசாமி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்காக, இலவசமாக மாதம் ஒரு நாடகத்தை மேடையேற்றுவார். நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட காலம் தங்க வேண்டி இருந்ததால், அவர்களுக்காக நகைச்சுவை நிகழ்ச்சி, நாடகங்கள் என்று ஏதாவது அரங்கேற்றி, நோயாளிகளின் மனப்பாரத்தை குறைப்பார். இங்கு தான் நான் அவரின் நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தான் இருப்பார்.

பாதிக்கப்பட்டவர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், வார்ட்பாய், டெக்னீஷியன்கள், கூலி ஆட்கள் என்று அனைவரையும் நாடகத்தில் நடிக்க வைத்து விடுவார். வெளியாட்கள் யாரும் நடிக்க மாட்டார்கள். அவரது ஈடுபாட்டை இப்பொழுது நினைத்தாலும் உடம்பு சிலிர்க்கிறது.

இப்படி அப்பாவைப் பற்றி சொல்லிக்கொண்டே போக எத்தனையோ வரிசைகட்டி நிற்கின்றன, இதை எழுதும் நிமிடங்களில் கர்வமும்,அழுகையும் முட்டிக்கொண்டு வார்த்தையில்லாமல் தடுமாறுகிறேன்.இப்படியொரு சந்தர்ப்பத்தில், இம்மாதிரியான ஒரு ஊடகத்தில், எனக்கு நெருக்கமான ஒரு வட்டத்தில் அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடிந்தது நான் அவருக்கு செய்யும் மிகச்சிறிய அஞ்சலி.

அப்பாவைப் பற்றி நீங்கள் யாராவது கேள்விபட்டிருந்தால், அதை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

51 comments:

Chinna Ammini said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு படிக்க. பொதுவா எல்லா பெண் குழந்தைகளுமே அப்பாகிட்டதான் ஒட்டிக்குவாங்க. (அம்மா கிட்ட சாதிக்க முடியாதது எல்லாமே அப்பா கிட்ட முடியுமே)நம்ம சமையல சாப்டு சூப்பர்னு சொல்லறவங்க அப்பா மட்டும்தான்.
நானும் கோவைதான். ஆனாலும் உங்க அப்பா பத்தி எதுவும் எனக்கு தெரியல(நமக்கு தெரிஞ்சதே ரொம்பக்கொஞ்சம்

கானா பிரபா said...

வணக்கம் மங்கை


உங்க அப்பா பற்றி முன் எனது பதிவொன்றிலே கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள், இப்போ முழுமையா அவர் பற்றி தெரிவதில் மகிழ்ச்சியடைகின்றேன். எந்தத் துறையிலும் திறமையோடு கூடவே செல்வாக்கும் இருந்தால் தான் வெளி உலகுக்கு பரந்த அளவில் தெரிவார்கள். உங்க அப்பாவின் விட்டுக்கொடுக்காமை என்ற உயரிய பண்பு அட்ஜெஸ்ட்மென்றிற்கு இடம் கொடுத்திருக்காது என்று தெரிகின்றது.

Srinan said...

Hi Mangai, I read your blog regularly. Very moving post about your father. I am from Coimbatore too. Your father might have known my father, Ranganathan from Peelamedu. My father was involved in Congress party, was a freedom fighter, and he was very famous for the social work he did in our area. He died about 25 yrs ago. I was still very young, so I don't remember much about him.

You won't believe this, a neighbor from Bharathi Nagar is visiting his son in Seattle (I live in Seattle now) and last week we met for dinner. He asked me if I knew your family. I didn't recognize, so he said your father was the director of Mullaivanam, a good movie. I thought it was some new movie, but I couldn't really remember the name. Are you a family of three sons/daughters and one of you lives in Australia? There is a good chance that I am wrong. Very surprising though that I was hearing about Mullaivanam just last week. Small world!

பங்காளி... said...

ம்ம்ம்ம்ம்...

பங்காளி... said...

எனக்கு தெரிந்து இங்கே அப்பாவின் அருமையை பதிந்த முதல் பதிவர் நீங்களாய்த்தான் இருக்கும்...

அருமையா வந்திருக்கு....

வெங்கட்ராமன் said...

நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.

தென்றல் said...

எளிமையாக...நேர்த்தியாக உங்கள் அப்பாவை பற்றி பகிர்தமைக்கு நன்றி, மங்கை!

SurveySan said...

touching!

Chandravathanaa said...

மங்கை
நல்ல பதிவு.

கவிதா | Kavitha said...

நல்ல பதிவு மங்கை... நான் என்னுடைய 50 ஆவது பதிவிலேயே என்னுடைய அப்பாவை பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் முடிக்க முடியவே இல்லை... அப்பாவை பற்றி எழுத ஆரம்பித்தாலே எனக்கு அழுகை வந்து, எழுத்துக்கள் மறைந்து, மனம் மிகவும் கனமாகி போகிறது..

ம்ம்..எப்போ முடிக்கபோகிறேனோ தெரியவில்லை.. :) உங்களின் பதிவு படிக்கும் போது திரும்பவும் எழுதிவிட வேண்டும் என்று நினைக்கிறேன்..

மாலன் said...

'அண்டர் செகரட்டரி' நாடகம் கலைமகளிலும் தொடராக வந்தது.
மாலன்

வல்லிசிம்ஹன் said...

அப்பா அருமை அப்பாதான்.
வெகு நேர்த்திஆக எழுதி இருக்கிறீர்கள்.
மங்கை இத்தனை விதங்களில் ,பலதுறைகளில் பிரகாசித்தவர் பற்றி அறிய பெருமையாக இருக்கிறது.

எழுத ஆரம்பித்ததும் எங்க அப்பாவைப் பற்றித்தான் எழுதினேன்.அது என்னுடைய ஆங்கிலப் பதிவில் பதித்து வந்தது.

இன்னோரு அப்பாவும் அருமை என்று அறிய மகிழ்ச்சி.:)))

வல்லிசிம்ஹன் said...

||"Vaasippathu Poornam Viswanathan,Panchapakesan,and later Saroj Narayanswami".The english news was read by Melville Demello.

Our Day to day news good and bad, exciting and dull all came from this wonder called radio.On every morning the programme meant for fareastern countries like Indonesia,Malaya,Burma and Philippines came on air.I used to listen all of those 45 minutes.||
இந்த இடத்தில் என் அப்பா பதிவில் உங்க அப்பாவும் வந்துவிட்டார் மங்கை.

ஷோபாசக்தி said...

இது அறிந்த கதையாக அல்லவா இருக்கிறது என படிக்கும்போது மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது. பாதிக் கட்டுரையிலேயே நம்ம கூட்டாளி ரவியிடமிருந்து இதே கதையைக் கேட்டிருக்கிறேன் என்பது ஞாபகத்திற்கு வந்தது. ரவி இப்ப கோவையிலிருக்கிறாரா அமெரிக்காவில் இருக்கிறாரா?
- Shobasakthi

கண்மணி/kanmani said...

ஒரு தந்தைக்கு மளின் நினைவாஞ்சலி அருமை மங்கை

சிநேகிதன்.. said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க மேடம்!

மங்கை said...

நன்றி சின்ன அம்மனி..சின்ன அம்மனின்னா கோவயாதான் இருக்கனும்னு நினச்சேன்..:-)))

நன்றி பிரபா..நீங்கள் சொல்வது சரிதான்

மங்கை said...

Srinan...

ஆச்சிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...

நீங்கள் குறிப்பிடுபவர் திரு.கிரிஷ்னன் அவர்கள்..பதிவிலேயும் அவரைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.. அவர் தான் இந்த படத்தின் இயக்குனர்.. அப்பா உதவி இயக்குனராக இருந்தார்.. திரைக்கதையும் அப்பா தான்...

ஆஸ்திரேலியாவில் இருப்பது கிருஷ்னன் அவர்களின் மகள்கள், திருமதி காஞ்சனா, ஆண்டாள். ஒரு மகனும் அங்கு தான் இருந்தார்.. இப்பொழுது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை...

நீங்களும் கோவைதானா?...மகிழ்ச்சி..

மிக்க நன்றி..நிறைவாக இருக்கிறது எனக்கு...

மங்கை said...

நன்றி பங்காளி...மனதிஏகு நிறைவை தந்த பதிவு...ஹ்ம்ம்ம்..

மங்கை said...

வெங்கட்ராகவன், தென்றல், சர்வேசன் மிக்க நன்றி..

நன்றி சந்திரவதனா...

மங்கை said...

கவிதா..

உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிகிறது..

//ம்ம்..எப்போ முடிக்கபோகிறேனோ தெரியவில்லை.. :) உங்களின் பதிவு படிக்கும் போது திரும்பவும் எழுதிவிட வேண்டும் என்று நினைக்கிறேன்..//

இதையே என் அழைப்பாக ஏற்றுக்கொண்டு எழுதுங்களேன்

மங்கை said...

//மாலன் said...
'அண்டர் செகரட்டரி' நாடகம் கலைமகளிலும் தொடராக வந்தது.
மாலன்///

அப்படியா...எனக்கே தெரியாது... நன்றி மாலன் அவர்களே செய்திக்கு

மங்கை said...

வல்லிம்மா...

ஹ்ம்ம் என்ன சொல்லன்னு தெரியலை
அப்பாவோட பணியாற்றியவங்க பேர் எல்லாம் சொல்லிட்டீங்க..இதுல அப்பாவோட நெருங்கிய நன்பர்கள் இன்னும் சிலர்..கண்ணம்மா சர்மா, லக்ஷ்மி (பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் அக்கா)..

ரொம்ப நன்றி வல்லிம்மா..

கதிர் said...

ரொம்ப அருமையா வந்திருக்கு இந்த பதிவு!

அடுத்து "அம்மாவ" பத்தி எழுத போறிங்களா? :)

மங்கை said...

Theo..

அண்ணாவ தெரியுமா உங்களுக்கு.. அவர் அமெரிக்காவுல தான் இருக்கார்
நியூயார்க்ல....

நீங்களும் கோவைதானா...இல்லை சென்னை நன்பரா?...நன்றி தியோ..

மங்கை said...

நன்றி சிநேகிதன்..கண்மணி

சிநேகிதன்..ஒரு வேண்டுகோள்.. என்னை பாட்டின்னு வேனா கூப்பிடுங்க கண்டுக்க மாட்டேன்.. 'மேடம்' வேண்டாமே..:-))

மங்கை said...

வாங்க டெல்ஃபின்...நீங்கள் சொல்வது சரி..ஃப்ரொபஷனலா விட்டுக் குடுக்கமாட்டார்..யாராயிருந்தாலும்..
ஆனா..குடும்பத்துல அதுக்கு நேர் எதிர்.. அவரை விட ஒரு அனுசரித்து போக முடியாது..

ஹ்ம்ம் நன்றி டெல்ஃபின்

மங்கை said...

நன்றி தம்பி..அம்மாவ பத்தி சொல்லனும்னா....
ஒரே வார்த்தை.. 'வெகுளி'

அபி அப்பா said...

super appa! super pathivu! vera onnum solla thonalai!

மங்கை said...

வாங்க அபி அப்பா..நன்றி

Santhosh said...

நல்ல பதிவு மங்கை.

மங்கை said...

நன்றி சந்தோஷ்

காட்டாறு said...
This comment has been removed by the author.
காட்டாறு said...

நட்சத்திரமே! உன்னை உருவாக்கிய நட்சத்திரத்தை நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் அறியச் செய்ததற்கு நன்றி!

Thekkikattan|தெகா said...

அப்பாவின் திரைக்கதையில் வெளி வந்த 'அருமை மகள் அபிராமி' படம் மிகவும் சிறப்பாக அமைந்தாம்.

மற்றொரு படம் 'முல்லை வனம்'. தமிழ்த் திரை உலகில் COWBOY ஸ்டைலில் வெளிவந்த முதல் படம்.//

இந்தப் படங்கள் இரண்டையும் எப்படியாவது பார்த்தாக வேண்டும். அப்பாவிற்கு பிள்ளைகள் தப்பாமல்... :-)

அப்பாவை நினைக்கும் பொழுதெல்லாம் மனதில் உறுதி வர வேண்டும், வாழ்வின் எல்லா போரட்டாங்களையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்... இருக்கிறீர்கள் தானே :-))

நன்றாக வந்திருக்கிறது. இங்கு நிறைய பேருக்கு, அப்பாவை தெரிந்திருக்கிறது மாதிரி இருக்கிறதே...

மங்கை said...

நன்றி காட்டாறு, தெகா

நாம நல்லா இருக்கனுங்க்கிறது தவிர வேற என்ன நோக்கம் அவங்களுக்கு இருந்து இருக்கும்.

ஹ்ம்ம்..இன்றுபோல் நான் என்றும் உணர்ந்ததில்லை...

உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி.

இலவசக்கொத்தனார் said...

நெகிழ வைத்த பதிவு. அப்பாவை பற்றி நீங்கள் பெருமை படுவதின் காரணம் நன்றாகவே புரிகிறது. அவருடைய அனுபவங்களை பல பதிவுகளாகப் போடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நியூயார்க்கில் சகோதரர் வீட்டிற்கு வரும் பொழுது சொல்லுங்கள். சந்திக்கலாம்.

மங்கை said...

மிக்க நன்றி இ கொ..அங்கு வர வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சந்திக்கலாம்...

துளசி கோபால் said...

மனசுக்கு ரொம்ப நெருக்கமா உங்களை உணர வச்ச பதிவு இது மங்கை.

அப்பாக்களுக்கும் பொண்களுக்கும் இருக்கும் உறவு எப்பவுமே ஸ்பெஷல்தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவு நன்றாக வந்திருக்கிறது. வேறென்ன சொல்ல ...கொஞ்சமும் குறைவில்லாம உங்க புகழை நாளை உங்க பொண்ணு சொல்லட்டும்ன்னு வாழ்த்தறேன்.

சென்ஷி said...

ஹி..ஹி..
நான் சொல்ல வந்ததை முத்துலட்சுமி அக்கா சொல்லிட்டாங்க.
அதனால வெறுமனே அவங்க சொன்னதுக்கு ரிப்பீட்டே போட்டுக்கறேன்..

சென்ஷி

- யெஸ்.பாலபாரதி said...

இயல்பான நடையில் அமைந்த பதிவு மங்கை.

பொதுவில் எல்லோரும் அம்மாவைப் பற்றியே கதைத்துக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது சில வருடங்களாக அப்பா பற்றிய படைப்புகளும் வரத்தொடங்கி இருக்கின்றன. அந்த விதத்தில்.. உங்களின் இந்த பதிவு.

அதேசமயம் அப்பாவைப் பற்றி எல்லாமும் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையையும் காண முடிந்தது. இது அவசியம் தானா.. என்ற கேள்வியும் என்னுள் வந்து உண்மை. ஏதாவது ஒரு நிகழ்வை.. நீங்கள் பார்த்த அனுபவப்பட்ட கேள்விப் பட்ட விசயத்தை மட்டும் சொல்லி இருந்திருக்கலாம். இது அப்பாவைப் பற்றி முழுமையடையாமல் போன பதிவு. :(

மங்கை said...

நன்றி துளசி..லட்சுமி...

வாங்க பாலபாரதி..நீங்கள் சொல்வது சரிதான்..ஆரவத்துல எல்லாம் எழுதிட்டேன்...கடைசியில பதிவு பெருசா இருந்துச்சுன்னு..கட் பண்ண வேண்டியது ஆயுடுச்சு...ஹ்ம்ம்ம்
இன்னொரு சமயத்துல எழுதுறேன்..
நன்றி

கோபிநாத் said...

ரொம்ப அழகாகவும், அருமையாகவும் எழுதியிருக்கிங்க.

வாழ்த்துக்கள் அக்கா ;)))

சிவபாலன் said...

மங்கை

கலக்கிடீங்க..

சூப்பர் பதிவு!

ஒரு சாதனையாளரைப் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி

மங்கை said...

நன்றி கோபி, சிவா

தருமி said...

பெண்களைப் பெற்றவன் என்ற முறையில் ரொம்ப பிடித்தது பதிவு.


//என்னை பாட்டின்னு வேனா கூப்பிடுங்க கண்டுக்க மாட்டேன்..//
:) நல்லா இருக்கு இதுவும்..

மங்கை said...

தருமி ஐயா..

உங்க பின்னூட்டம் நான் முதலியே எதிர்பார்த்தேன்..ரொம்ப சந்தோஷம் நன்றி

Mum's blog said...

dear Mangai

What a pleasure reading about your dad. My dad is V Krishnan and he made Mullai vanam and arumai magal Abirami. I remember your dad well. he had a nice voice and big beatiful eyes. Yes I lived in Australia and now live in Newyork.My anme is kanchana and my email is kanchana @gmail.com. Drop me aline any time.Regards kanchana

cheena (சீனா) said...

மங்கை, எப்போதுமே அப்பாவைப் பற்றி நினைக்கும் போது இது மாதிரியான நெஞ்சம் நெகிழும் பதிவுகள் தன்னாலெ வரும். அருமையான நினைவுகள். அந்த இனிய காலத்தினை நினைத்து மாகிழ்வது தவிர்க்க இயலாது.

sury siva said...

அப்பா, அப்பா என பதினெட்டு முறை அப்பாவைக் கூப்பிட்டுள்ளீர்கள்.

அப்பா எப்ப‌டி எல்லாம் இருப்பார் என‌ வ‌ர்ணித்து இருக்கிறீர்க‌ள் ! அப்ப‌ப்பா !!

""கோபம்... நகைச்சுவை,... கொள்கை தாக்கம்,குரலும், வார்த்தை உச்சரிப்பும் தெளிவாக, கணீரென்று இருக்கும்....,கால் பதிக்காத துறைகளே இல்லை, அனைத்து துறையிலும் அப்பா தன் முத்திரையை பதித்தவர்.......மனப்பாரத்தை குறைப்பார்,.......ஈடுபாட்டை இப்பொழுது நினைத்தாலும் உடம்பு சிலிர்க்கிறது.,சொல்லிக்கொண்டே போக எத்தனையோ வரிசைகட்டி நிற்கின்றன,...
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தான் இருப்பார்.""
அதிசயம்..
அத்த‌னையும் உங்க‌ளுக்கும் பொருந்துகிற‌தே !

புலிக்குப் பிற‌ந்த‌து பூனையாகுமா என்ன‌?

//அது நட்சத்திர வாரத்தில் நிறைவேறுவது மகிழ்ச்சியை தருகிறது.//

த‌ங்க‌க்கிரீட‌ம் அணியும் வார‌த்திலா !!

"இதை எழுதும் நிமிடங்களில் கர்வமும்,அழுகையும் முட்டிக்கொண்டு வார்த்தையில்லாமல் தடுமாறுகிறேன்"

அது அப்பா இல்லையா ! அத‌னால் தான் !

த‌க்கார் த‌க‌வில‌ர் என்பது அவ‌ர‌வ‌ர்
எச்ச‌த்தால் காண‌ப்ப‌டும் = வ‌ள்ளுவ‌ர்.

உங்க‌ள‌து ப‌ணிக‌ள் அவ‌ர‌து பெருமைக்குச் சான்றாகும்.

வாழ்த்துக்க‌ள்.
சுப்பு ர‌த்தின‌ம்.
த‌ஞ்சை.
பி.கு.: உங்க‌ள் வ‌லையில் உள்ள‌ இரு குழ‌ந்தைக‌ளும் என‌து ப‌திவில்
இட‌ம் பெற‌ இருக்கிறார்க‌ள்.
http://arthamullavalaipathivugal.blogspot.com