Tuesday, April 24, 2007

முன் மாதிரி மாணவர்கள்

நமக்காக பல சட்டங்கள் இது வரை அமலுக்கு வந்து விட்டன. அந்த சட்டம் எல்லாம் எந்த அளவிற்கு மக்களுக்கு உதவியாக இருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அன்மையில் அமலுக்கு வந்த தகவல் உரிமை சட்டம் ஓரளவிற்கு மாறுதல்களை செய்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கமே அரசின் பொதுநல விஷயங்களில் வெளிப்படையான தகவல்களை தரவேண்டும் என்பது தான் என்பதை நாம் அறிவோம். இந்த சட்டத்தை பயன் படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது. நமக்கு இருக்கும் சமுதாய பொறுப்பை சீண்டிப் பார்க்கும் ஒன்று என்று கூட எனக்குத் தோன்றும்.

அமலாக்கப் படும் எந்த ஒரு சட்டமும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே இயற்றப் பட்டாலும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் அதை சரிவர உபயோகிக்க முடியாமல் போகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல தொண்டு நிறுவணங்கள் இன்று களத்தில் இறங்கியுள்ளது. விழிப்புணர்வுடன் சேர்ந்து இன்று நமக்கு தேவை சமுதாய முன்னேற்றப் பணிகளில் அக்கறை, நம்மைச் சுற்றி நடப்பனவற்றில் கவனம்.

மேலே கூறிய சமுதாய பொறுப்பை உணர்ந்து சில ஐஐடி மாணவர்கள், இங்கு தில்லியில் இந்த சட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். தில்லியில் உள்ள சில முக்கிய சாலைகள் (ரிங் ரோடு, NH-10, NH-24) சரி வர பராமரிக்கப்படாததால், தினமும் அந்த சாலை வழியே வரும் ஐஐடி மாணவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் 46 விண்ணப்பங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். சாலை இடப்பட்ட சில தினங்களுக்குள் ஏன் அதில் வெடிப்புகளும், குழிகளும் ஏற்படுகின்றன?, பராமரிப்புச் செலவிற்காக ஒதுக்கப்பட்ட தொகை (சுமார் 420 கோடி), சாலை இடப்பட்ட பின் நடத்திய ஆய்வு ரிப்போர்ட் ஆகிய தகவல்களை கேட்டு இந்த மாணவர்கள் விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அரசு செய்து முடித்த வேலைகளை ஆய்வு செய்யவும் இந்த சட்டம் உதவுமாதலால், இந்த சாலைகளின் தரத்தை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

சுவாதி என்ற ஒரு மாணவி தாக்கல் செய்த ஒரு விண்ணப்பத்தின் பயனாக, சில மாணவர்களும், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு பொறியாளரும் இந்த சாலையை ஆய்வு செய்தார்கள். இவர்கள் ஆய்வு செய்யப் போவதை அறிந்து, இரண்டு நாட்களுக்கு முன் சாலை பராமரிப்பு பணிகளை துவங்க உத்தரவிட்டனர் அதிகாரிகள்.

இளைய சமுதாயம் இது போல பொறுப்புடன் நடந்து கொள்வது மன நிறைவைத் தருகிறது. நம் சமுதாய அக்கறையை ஒரு முறை சுய பரிசோதனை செய்யத் தூண்டும் ஒரு செயல்பாடு. இவர்களைப் போல ஒவ்வொரு மாணவரும் சிந்தித்தால் ஆரோக்கியமான ஒரு சந்ததி உருவாகும் என்பதில் ஐயம் இல்லை.

20 comments:

பொன்ஸ்~~Poorna said...

நல்ல விசயம்ங்க மங்கை.. நம்ம பதிவர்கள் சேர்ந்து இது போன்ற தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கவென்றே ஒரு குழுவை ஏன் அமைத்துக் கொள்ளக் கூடாது?

பதிவர் சங்கம் என்று பதிவு செய்து கொள்வதைப் பற்றி ஜோசப் சார் ஒரு சமயம் சொல்லிக் கொண்டிருந்தார். அது போல் சங்கம் என்று ஒன்று இருந்தால் தகவல் கேட்க கூட்டு முயற்சியாக பயன்படுத்தலாமே...

பங்காளி... said...

பயனுள்ள தகவல்...இது குறித்து இன்னும் விரிவாக எழுதலாமே...

எழுதுங்கள்...ப்ளீஸ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சங்கம் ... கூட்டுமுயற்சி...ஆகா ..

மங்கை நீங்க தலைவியாகப் போறீங்களா?

வாங்க வாங்க இப்படி பொன்ஸ் மங்கை மாதிரி நாட்டைப்பற்றிக் கவலைப்படுகிறவங்க கொஞ்சம் நாட்டுக்கு என்ன செய்யலாம்ன்னு முடிவெடுத்து செய்ய ஆரம்பிங்க .நாங்கள்ளாம்..அணில் கல்லெடுத்து போட்ட கதை மாதிரி எதையாவது செய்யறோம்.

மங்கை said...

பொன்ஸ், பங்காளி

நன்றி...நீங்கள் சொல்வது போல் தாராளமாக செய்யலாம், பாமர மக்களிடையே விழிப்புணர்வு உண்டு பண்ணலாம், அவர்களின் உரிமைகளை எடுத்துக் கூறலாம்.

பங்காளி..எழுதறேன்..இதுலயே அந்த விண்ணபத்தாள், மற்றும் பிற தகவல்களை கொடுக்கலாம்னு தான் இருந்தேன்.. அப்புறம் பெருருருருசா போயுடும்னு போடலை..தனியா போடறேன்..

மங்கை said...

லட்சுமியக்கா

எம்மேல என்ன இவ்வளவு கோவம்... அங்க சென்ஷி கிட்டேயும் நான் இல்லை மங்கை தான் தலைவின்னு சொன்னீங்க...ஒரு ஊருக்கு ஒரு பதவி தான் குடுக்க முடியுமாம்.. நீங்க தான் ஏற்கனெவே கொ.ப.செ. இருக்கீங்களே..அதனால தலைவி தமிழ்நாட்டுல இருந்து தான்..:-))

தென்றல் said...

நல்ல தகவல், மங்கை!
முடிந்தால், இதைப்பற்றி விரிவாக எழுதுங்கள்...

மாணவி சுவாதிக்கு பாராட்டுக்கள்!

சிவபாலன் said...

மங்கை,

//நீங்கள் சொல்வது போல் தாராளமாக செய்யலாம், பாமர மக்களிடையே விழிப்புணர்வு உண்டு பண்ணலாம், அவர்களின் உரிமைகளை எடுத்துக் கூறலாம்.//

நல்ல விசயம்..

ஆவன செய்யுங்கள்! நம்மையும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்..

நல்ல பதிவு!

மங்கை said...

தென்றல், சிவா..நன்றி..கண்டிப்பாக செய்யலாம்..

நாகை சிவா said...

சூப்பர் செய்திய சொல்லி இருக்கீங்க மங்கை.

SFI இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்....

ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்றைய இளைய சமுதாயத்துக்கு நாட்டின் மீது அக்கறை இல்லை என்ற வாதத்துக்கு சவுக்கடி கொடுக்கும் செயல்பாடு இது. இது மேலும் விரிவடைய வேண்டும்.

நாகை சிவா said...

சமீபகாலத்தில் இந்திய அரசு கொண்டு வந்த சில நல்ல திட்டங்களில் ஒன்று இந்த தகவல் அறியும் திட்டம்.

இது குறித்து அனைவரும் விழிப்புணர்வு அடைய வேண்டும். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நாகை சிவா said...

//நல்ல விசயம்ங்க மங்கை.. நம்ம பதிவர்கள் சேர்ந்து இது போன்ற தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கவென்றே ஒரு குழுவை ஏன் அமைத்துக் கொள்ளக் கூடாது? //

பொன்ஸ் ஆக்கபூர்வமான யோசனை. செயல்படுத்த மாதிரி திட்டம் தயார் பண்ணலாமே!

சென்ஷி said...

//தென்றல் said...
நல்ல தகவல், மங்கை!
முடிந்தால், இதைப்பற்றி விரிவாக எழுதுங்கள்...

மாணவி சுவாதிக்கு பாராட்டுக்கள்!//

ரிப்பீட்டே...!


// மங்கை said...
லட்சுமியக்கா

எம்மேல என்ன இவ்வளவு கோவம்... அங்க சென்ஷி கிட்டேயும் நான் இல்லை மங்கை தான் தலைவின்னு சொன்னீங்க...ஒரு ஊருக்கு ஒரு பதவி தான் குடுக்க முடியுமாம்.. நீங்க தான் ஏற்கனெவே கொ.ப.செ. இருக்கீங்களே..அதனால தலைவி தமிழ்நாட்டுல இருந்து தான்..:-))//

:)) அப்ப யார்தான் தலைமை பொறுப்பெடுக்கப்போறீங்க... :)

சென்ஷி

மங்கை said...

//நாகை சிவா said... இது குறித்து அனைவரும் விழிப்புணர்வு அடைய வேண்டும். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்//

நன்றி சிவா...இது தான் நான் எதிர் பார்க்கிறேன்.. சென்னையில் உள்ள சில நிறுவணங்கள் இதற்கு உதவுகின்றன.. கேட்டுப் பார்க்கிறேன்..

மங்கை said...

//:)) அப்ப யார்தான் தலைமை பொறுப்பெடுக்கப்போறீங்க... :)சென்ஷி///

அதான் சொல்லிட்டேன் இல்ல...தங்கத் தமிழ்நாட்டுல இருந்து தான் தலைவின்னு
:-))

செல்வநாயகி said...

நல்ல பதிவு.

மங்கை said...

வாங்க செல்வநாயகி..நன்றி

Jazeela said...

நல்ல தகவல் மங்கை.

மங்கை said...

முதல் வருகைக்கு நன்றி ஜெஸிலா..:-)

காட்டாறு said...

கேட்கவே ரொம்ப நல்லாயிருக்குது மங்கை. வருங்காலம் கெட்டுப்போய் கிடக்குதுன்னு கேட்டுக்கேட்டு புளித்துப் (?) போன காதுகளுக்கு/மனதுக்கு, இனிமையான செய்தி மாணவர்கள் செய்த இந்த செயல். அவங்கள மேலும் ஊக்கப் படுத்தினா வளமான இந்தியா உருவாகும்.

மங்கை said...

வாங்க காட்டாறு..

இது போல செய்திகள் அதிகமா வெளியே வரனும்..மற்ற மாணவர்களுக்கும் ஒரு ஊக்கமா இருக்கும்..