Monday, August 11, 2008

பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)

தாய்மை எந்த ரூபத்திலும் எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இதோ கீழே இருக்கும் ஒரு கலந்துரையாடலே சான்று.

தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .

கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மரணப்படுக்கையில்.. அவரைப் பார்த்துக் கொள்வது அவருடைய பத்து வயது மகள்.


சம்பந்தப் பட்ட குழந்தையின் நலன் கருதி, பெயரோ, அடையாளமோ கொடுக்கப்படவில்லை.


எத்தன நாளா அம்மா இப்படி இருக்காங்க?
ஒரு வருஷமா அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவங்க ஒரு ஹோட்டல்ல வேலை செய்துட்டு இருந்தாங்க. அங்க யாருடனோ ஏற்பட்ட தொடர்பால் தங்கச்சி பாப்பா பிறந்தா. அப்ப இருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லை. அம்மாக்கு எய்ட்ஸ் வியாதின்னு சொன்னாங்க. அம்மா ரொம்ப நாளா எங்க கிட்ட சொல்லலை...லேட்டா தான் வெளியே சொன்னாங்க.. முதல்ல எல்லாம் ரொம்ப அழுவேன். இப்ப எனக்கு தைரியம் வந்துடுச்சு. சொந்தக்காரர் ஒருத்தர் தைரியமா இருக்க சொன்னதுனால அம்மாவ நல்லா பார்த்துக்குறேன்.

அம்மாக்கு என்ன எல்லாம் நீ செய்வே.. எப்படி பார்த்துப்பே?
அம்மா உடம்ப தொடச்சி விடனும். வாயில் நீர் வழிஞ்சுட்டே இருக்கும். அதை தொடர்ந்து தொடைக்கனும். துணி மாத்தி விடனும். தினமும் படுக்கை மாற்றனும். பவுடர் போடனும். அவங்க டாய்லெட் போனா கழுவி விடனும்.

உனக்கு இது எல்லாம் செய்ய கஷ்டமா இல்லையா?
( நம் கண்களுக்குள் ஊடுறுவிப் பார்த்துட்டு)

என் அம்மாதானே, நான் தானே செய்யனும்...

அம்மாவ மட்டும் இல்லை.... தங்கச்சி பாப்பாவையும் நான் தான் பார்த்துப்பேன். அவ ரொம்ப குறும்பு ( சிரித்துக் கொண்டே).. சில சமயம் அம்மாவ கவனிச்சுட்டு இருக்கும் போது அவளை கவனிக்கலைன்னு அழுவா... கோவம் வந்துடும் அவளுக்கு..(ஹா ஹா என்று சிரிப்பு)

அப்பா?

அவர் எங்கள விட்டுட்டு போய் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார்

அம்மா இப்படி பண்ணிட்டாங்களேன்னு உனக்கு கோவம் வந்திருக்கா?
இல்லை..ஆனா ரொம்ப வருத்தமா இருக்கு... அம்மாவ முழுவதும் குணப்படுத்த முடியலைன்னு.. எத்தன நாளைக்கு அம்மா இப்படியே இருப்பாங்கன்னு தெரியலையே..ஆனா அம்மா தான் எனக்கு விஷம் குடு விஷம் குடுன்னு கேட்டுட்டே இருப்பாங்க....நான் எப்படி குடுப்பேன்..நான் அம்மாவ நல்லா பார்த்துப்பேன்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே தங்கச்சிப்பாப்பா துறு துறு என்று இவள் பக்கம் தவழ்ந்து வர..அவளை அள்ளிக் கொள்கிறாள்..

குட்டிப்பாப்பாவ தூக்கணும், பார்த்துக்கணும், அதுனால உனக்கு களைப்பா இல்லையா?

(சிரித்துக்கொண்டே வெகுளியாக)..
கைவலிச்சா அவள அடுத்த கைக்கு மாத்திக்குவேன்.. ஆனா அவ ரொம்ப சேட்டை..பாருங்க என் முடிய பிடிச்சு இழுக்கறா. என் கன்னத்தை கிள்ளி வச்சுட்டே இருப்பா..நேத்து என்னை பளார்னு அறஞ்சுட்டா.. ஆனா குட்டிப்பாப்பாதானே அவளுக்கு தெரியாதில்ல.. ரொம்ப குறும்பு பண்ணா, " பேசாம இரு..இல்லன்னா பேச மாட்டேன்னு சொல்லுவேனா..அப்புறம் சிரிப்பா..பேசாம இருப்பா". (குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே)

பாப்பாவ கீழ போட்டற மாட்டியே..?..நல்லா பிடிச்சுக்கோ
அதெல்லாம் போடமாட்டேன்..கெட்டியா பிடிச்சுப்பேன்..இப்படி (கெட்டியாக நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்).

(குட்டிப்பாப்பா இந்த பத்து வயது சிறுமியை அம்மா என்று தான் அழைக்கிறாள்).

குட்டிப்பாப்பா உன்னை அம்மான்னு கூப்பிடறாளே?.. உங்க வீட்ல உங்க அம்மா, பாட்டி எல்லாம் இருக்காங்க..அவங்களையும் அம்மான்னு தான் கூப்பிடுவாளா?
இல்லை...என்னை மட்டும் தான் அம்மான்னு கூப்பிடிவா...ஏன்னு தெரியலை.. ஆனா அவ அப்படி கூப்பிடும் போது எனக்கு நல்லா இருக்கும் ... என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவா என் குட்டி (என்று மீண்டும் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கிறாள்)

நீ ஸ்கூலுக்கு போறதில்லையா?
நான் ஸ்கூலுக்கு போனா அம்மாவையும், குட்டிப் பாப்பாவையும் யாரு பார்த்துப்பா?

தங்கச்சி பாப்பாவ யாராவது எடுத்து வளர்க்க முன் வந்தா நீ சரி சொல்லுவியா?
அவ நல்லா படிக்கனும்.. எனக்கு அவள நல்லா பார்த்துக்கனும்னு ஆசை.. ஆனா நான் என்ன வேலை பார்க்குறதுன்னு தெரியலை... அவ வசதியான இடத்துக்கு போனா சந்தோஷம் தான்.. ஆனா நான் எப்படி அவள விட்டுட்டு இருப்பேன்...(மிகுந்த சோகத்துடன்)

உனக்கு எய்ட்ஸ் பத்தி என்ன தெரியும்?
(கைகள் இரண்டையும் இருக்கமாக கட்டிக் கொண்டு)

ஐயோ யாருக்கும் அது வரக்கூடாது.

எய்ட்ஸ் எப்படி வருதுன்னு உனக்கு தெரியுமா?
ஆணுறை உபயோகிச்சா வராதாம்.

உனக்கு யாரு சொன்னா ?
ஒரு விளம்பரத்துல படிச்சேன்.. எச்ஐவி ல் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுறை உபயோகிங்கள் என்று. (ம்ம்ம்.. என்ன சொல்ல)

அம்மா மாதிரி எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க கிட்ட நீ என்ன சொல்லுவே?
அம்மா மாதிரி லேட்டா சொன்னா, என் மாதிரி குழந்தைங்க என்ன பண்ணுவாங்க...அதுனால தெரிஞ்ச உடனே டாக்டர் கிட்ட போனா கஷ்டப்பட வேண்டியது இல்லை...லேட்டா சொல்லி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளால தாங்க முடியுமா?..வீட்ல இருக்குறவுங்களும் அவங்கள நல்லா பார்த்துக்கனும் ( இதை விட ஒரு சிறந்த விழிப்புணர்வு செய்தி இருக்க முடியுமா..ம்ம்ம்)

நீ ஏதாவது கேட்க விரும்பறியா?
அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எங்க இருப்பேன்?...என்ன பண்ண? ( மனதை பிழியவில்லை?..ம்ம்ம்)

நீ எங்க போக விரும்பறே?
தெரியலை....என்ன என்னமோ சொல்றாங்க... தனியா இருந்தா யாராவது தப்பா நடந்துப்பாங்களாம்...கடத்திட்டுப் போய் வித்துடுவாங்களாம்...ரேப் பண்ணிடுவாங்களாம். (கடவுளே!!!)

நீ சாமிய பார்த்தா என்ன கேட்பே?
எல்லாரும் எந்த நோயும் இல்லாம ஆரோக்கியமா இருக்கனும்.

உனக்காக ஒன்னும் கேட்க மாட்டியா?
கண்டிப்பா கேட்பேன்..என் அம்மாக்கு சீக்கிறம் நல்லாகனும்.. குட்டிப்பாப்பா நல்லா இருக்கனும்...( சுயநலம் இல்லாத இந்த அன்பான மனதை வணங்கத் தோன்றுகிறதல்லவா?ம்ம்)

தற்பொழுது அம்மா மருத்துவமனையில்..
அம்மாவ பார்க்க போறியா? ..
நான் கூப்டுட்டு போறேன்..
அம்மாவ பார்க்கனும் போல இருக்கு.. ஆனா நான் போன அப்புறம் ஏதாவது.......................................... (குட்டிப்பாப்பாவை அனைத்துக் கொண்டு அழுகிறாள்..)

இது போல எத்தனையோ குழந்தைகள் படித்து, விளையாடி மகிழ வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.


இயலாமையை நினைத்து நினைத்துத் துவண்டு விடுகிறது என் மனம்.


எத்தனையோ திட்டங்கள், கோடி கோடியாய் பணம் எச்ஐவி தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இத்திட்டங்களினால் பயன் அடைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களின் எண்ணிகையை விட திட்டம் தீட்டுபவர்களுக்கும், அதை செயல் படுத்துவர்களுக்கும் செலவு செய்யும் பணம் அதைவிட அதிகம்.


மறுபடியும் மறுபடியும் மரணத்தைப் பார்க்கும்போது வேதனையின் கடுமை குறைவதைப்போல, சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவருக்கு எல்லாமே பழகிப் போவதைப் போலத்தான் இந்தச் சிறுமியின் கதையும். அதிகாரிகளுக்கு இது மற்றொரு 'கேஸ்'.


இந்தப் பதிவினை எழுதி முடித்த அடுத்த நாள் என் தோழி ஒருத்தி கோவையில் இருந்து தொலைபேசினாள். ஒரே பெண்...நல்ல வசதியான குடும்பம்...அந்த உரையாடலையும் படியுங்கள்.


நான் - ரொம்ப நாளா பேச முடியலை .. எப்படி இருக்கே?


தோழி- நல்லா இருக்கேன்...நானும் கட்டட வேலைய பார்த்துகறதுனால பேச முடியலை.


நான் - ஓ மறுபடியும் வீடு கட்டறியா?


தோழி- இல்லை.... அப்பா படுத்த படுக்கை ஆகிட்டார். எல்லாமே பெட்ல தான். வீட்டுக்குள்ள ஸ்மெல் வருது. இன்பெக்ஷன் ஆயிட்டா என்ன பண்ண. அதுனால தான் ஒரு அவுட் ஹவுஸ் கட்டினேன். அப்பா அங்க தான் இருக்கார்.


பெரிய வீடு, நான்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி தந்தையை பார்த்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வசதி...அவர் சேர்த்த சொத்துதானே.... இயற்கையாக இருக்க வேண்டிய பாசமும், கடமை உணர்வும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது. எந்த சூழ்நிலை மனிதர்களை இப்படி மாற்றுகிறது? நடைமுறைக்கு ஒத்துவராத உணர்வுகளா இவை..?...என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.


நாம் செய்யும் செயல்களுக்கு மனதிற்குள்ளேயே நியாயம் கற்பித்து நம்மையே சமாதானம் செய்து கொள்வதை தவிர நாம் வேறு என்ன செய்கிறோம்.


இந்தக் குழந்தை நீடுழி வாழ வாழத்தி வணங்குவோம்

48 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்... வேதனையான விசயங்கள்...இப்ப இது போன்றுவிசயங்கள் அதிகமாக வெளியே வருகிறது.. அன்னைக்கு படிச்சீங்களா பம்பாயில் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டதுன்னு..

ஆயில்யன் said...

//அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எங்க இருப்பேன்?...என்ன பண்ண?//

:((((


கலங்குகிறது மனம்!

ஏதோ ஒரு தைரியத்தில் அச்சிறுமி தன் குட்டி பாப்பாவினை பற்றி எதிர்காலம் பற்றி சொல்லும் போது அவருக்கு இருக்கும் நம்பிக்கை அது மட்டும் பாழாகாமல் இருந்தால் நிச்சயம் நல்லதொரு வாழ்க்கை அவருக்கு அமையும்!

கடைசி வரைக்கும் கலங்காமல் இருக்கும் மனம் பெறவேண்டும் அச்சிறுமி என்ற சிறு கோரிக்கையினோடு இறை பிரார்த்திக்கின்றேன் !

சந்தனமுல்லை said...

ம்ம்..மனம் கனத்துப் போகிறது!!
அந்த சிறுகுழந்தையும் பாதிக்கப்பட்டிருக்கிறதா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இந்த தகவலை உங்களது படைப்பாக எங்கள் இணைய இதழுக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா?


- ரசிகவ்

VIKNESHWARAN ADAKKALAM said...

தாயன்பு படைத்த மனம் அக்குழந்தைக்கு... மனம் கனக்கிறது...

Anonymous said...

படிக்கவே வேதனையா இருக்கு.

மங்கை said...

லட்சுமி

விஷ்யங்கள் வெளியே வந்து என்ன செய்ய... மக்கள் சுய நினைவிற்கு வரனுமே.. மக்கள் மேலும் மேலும் செல்ஃப் சென்ட்ர்டா தான் ஆகிட்டு இருக்காங்க...நாலு பேர் முன்னாடி தன்னை யோக்கியனா காமிச்சக்கனும் அவ்வளவு தான்..இந்த சமுதாயத்தில் தன் தனிப்பட்ட நிலை என்ன.. அதை எந்த அளவிற்கு உயர்த்தனுமோ அதற்கான முனைப்பகளில் தான் நாட்டம்.. இதனுடன் சேர்த்து சில அடிப்படை கடமைகளும், உணர்வுகளும் இருக்கனும்னுங்குறது மறந்துட்டமே...ஹ்ம்ம்ம்..

இது எல்லாம் சொன்னா இன்றைய சூழ்நிலை அப்படின்னு வாக்குவாதம், பிடிவாதம், பக்கவாதம் எல்லாம் பிடிப்பாங்க...என்னமோப்பா..ம்ம்ம்

மங்கை said...

நன்றி ஆயில்யன்..கண்டிப்பாக இந்தக் குழந்தைக்கு உதவி கிட்டும்... இருந்தாலும் இந்த வயதில் எத்தனை பெரிய சுமை...

மங்கை said...

நன்றி சந்தனமுல்லை...நிலவுநண்பன், சின்ன அம்மணி..விக்னேஷ்வரன்

மங்கை said...

குழந்தைக்கு ஒரு வருடம் தானே ஆச்சு.. 18 மாதங்கள் கழித்து தான் தெரியும்...

கௌசி said...

இரண்டு மாறுபட்ட மனதின் முதிர்வுகளை ஒரே பதிவில் தந்திருக்கீங்க.
நம்மைப் பெற்றவங்க தானே கஷ்டப் படுகிறார்கள் என
குழந்தைக்கு தெரியும் நியாயம் கூட வளர்ந்த அந்த பெண்ணுக்கு இல்லையே

Unknown said...

இதை படித்திவிட்டு கண்ணில் நீர் வந்துவிட்டது ...
இறைவன் அவர்களை காக்கட்டும்

Unknown said...

இறைவன் அவர்களை காக்கட்டும்

துளசி கோபால் said...

பிஞ்சு தலையில் சுமை(-:

வருத்தமா இருக்கு.

நமக்குத் தெரிஞ்சவங்க வீட்டில் ( சென்னையில்) அம்மாவுக்கு ரொம்ப முடியலை. வீச்சம் வருதுன்னு வெளியே தனி அறையில் வச்சுருக்காங்க.

அனாதைபோல கிடக்கு அந்தம்மா..தன் சொந்த வீட்டுலேயே.

மங்கை said...

நன்றி கெளசி...நியாயம் தெரியாமல் இல்லை கெளசி..நியாபகமா மறந்து போற மாதிரி இது...

மங்கை said...

விவேக், புதுகைத்தென்றல் நன்றி

மங்கை said...

துளசி

பார்த்து பார்த்து கட்டின சொந்த வீட்ல இப்படி இருக்குறது எத்தன கொடுமை...

delphine said...

யாருக்கும் இந்த மாதிரி கஷ்டம் வரக்கூடாது மாமி...கொடுமை!

Thekkikattan|தெகா said...

மங்கை,

ஓவ்வொரு கேள்விக்கும் பதிலைப் படிக்கும் பொழுது இத்தனை சிறு வயதில் எத்தனை சுமை பதில்களாக பெற்றுத் தந்திருக்கிறதுன்னு மலைப்பா இருக்கு.

இங்கே லிங்க் ட்டி.வியில அடிக்கடி ஆஃப்ரிக்கா நாடுகளில் இது போல சிறுவ/மிகளின் தலைகளில் குடும்பப் பாரம் விழுவதை அதாவது இந்த எய்ஸ்ட்ஸ்க்குப் பிறகுன்னு காமிப்பாங்க, பார்த்துட்டு இருக்கும் பொழுதே நெளிய வைச்சிடும்.

இது அத்துறையில் இருப்பவர்களுக்கு இன்னொரு கேசுன்னுதான் ஆகிப்பூடும் காலப் போக்கில்...

அந்த தோழி என்னா சொல்றது...

யட்சன்... said...

அடிக்கடி பதிவெழுதனும், ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கொரு தடவைன்னு பதிவெழுதினா இப்படித்தான் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்...

இப்போதைக்கு வேறெதுவும் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளில்லை....பிறகு வருகிறேன்....

ம்ம்ம்ம்ம்

மங்கை said...

யட்சன்

நன்றி..பார்த்து திருத்திக்குறேன்..

இனிமேல் கவனமா இருக்கேன்...

E said...

மங்கை அவர்களே

பெண் பதிவர்களிடன் எதையும் சொல்வதற்கு பயமாக இருக்கிறது..

நான் நேற்றே உங்கள் பதிவை படித்து விட்டேன்....அதிலிருக்கும் பிழைகள் எரிச்சலடைய வைக்கிறது... எழுதுவது முக்கியமல், தமிழ்மணம் போன்ற தரமான ஒரு தளத்தில் எழுத வேண்டுமென்றால், தங்களின் எழுத்தின் தரத்தை கொஞ்சமாவது உயர்த்திகொண்டு பின் வரலாமே.....
யோசிக்கவும்

உங்கள் எழுத்துப் பிழையை ஒருவர் சுட்டிக் காட்டியதால் நானும் சொல்கிறேன்...

கோபிநாத் said...

;(

E said...
This comment has been removed by a blog administrator.
அழகை மைந்தன் said...

அந்த குழந்தையின் அன்பும், பாசமும், நம்பிக்கையும் இன்றைய தலைமுறைக்கு ஒரு வாழ்க்கைப்பாடம்.

தியாகராஜன் said...

சில துளிகள் கண்ணீர் விடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.
நா.தியாகராஜன்

Maddy said...

விழியோரும் நிச்சயமாக நீர் வரவைக்கும் சேதி இது. இறைவன் அந்த பிஞ்சுக்கு அன்பையும் ஆதரவையும் அருள்வாராக!!

கோவி.கண்ணன் said...

மங்கை,
படிக்கும் போதே மனம் பதைபதைக்குது.

யாரோ செய்த தவறுகளுக்கு அறியா பிஞ்சுகள் வதைபடுகின்றன.

:(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அறியாப் பருவத்தில் அந்த குழந்தை படும் அவலங்கள் வேதனையை ஏற்படுத்துகிறது.

யட்சன்... said...

என்னுடைய வருகையினை பதிவு செய்ய அன்றைக்கு எழுத்துப்பிழையை மட்டுமே சொல்ல முடிந்தது...வலியும், இயலாமையும் கலந்த குழப்பமான அந்த மனநிலையிலேயே இன்னமும் தொடர்கிறது.

பதிவில் குறிப்பிட்டிருக்கும் வயதையொத்த எந்தவொரு குழநதையை பார்த்தாலும் மனது கனத்துப் போகிறது. இந்த குழந்தைக்கு அந்த கஷ்டமில்லை என்கிற நிம்மதி வந்தாலும் கஷ்டத்திலும் கலங்காதிருக்கும் அந்த குழந்தையின் நினைப்பு என்னை கலவரப்படுத்தி என்னுடைய குற்றவுணர்ச்சியினை அதிகப்படுத்துகிறாள்.

இந்த வலி எனக்கு தேவையாயிருக்கிறது...இந்த வலி என்னை உருப்படியாய் ஏதேனும் செய்ய உந்துமென்கிற நம்பிக்கையிருக்கிறது.

அந்த வகையில் உஙக்ளுக்கு நன்றி....

வசந்த் said...

மங்கை அக்கா

மனதைப் பிசைகிறது...உங்கள் குழு எடுக்கும் முயற்சிகள் இது மாதிரி குழந்தைகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது...

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அக்கா..

ராணியும், சேதுவும் தங்களின் அன்பை தெரிவிக்க சொன்னார்கள்...

உங்கள் பணி தொடரட்டும்...

வசந்த் said...

அக்கா..

இந்த தருனத்தில் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது...

நாக்பூரில் இது போல ஒரு குழந்தைக்கு உதவப் போய் தங்கள் குழு பட்ட அவமானம் என்னால் மறக்க முடியாது...

மனித நேயத்திற்கு மதிப்பே இல்லை... முடிந்ததை செய்பவர்களையும் வார்த்தைகளால் வாட்டும் உலகம் இது அக்கா...

மஞ்சக்காமாலை வந்தவன் கண்கள் போல, சுயநல வாதிகள், முயற்சி எடுப்பவர்களையும் அதே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள்...

Ramya Ramani said...

மனம் கணத்துவிட்டது :(

இறைவன் அக்குழந்தைகளுக்கு நல்வழி காட்ட வேண்டுகிறேன்

Compassion Unlimitted said...

ennavendru solla..iru unmaigalum ullathhai pizhigindrana..veli ittadhirku nandri
TC
CU

மங்கை said...

பின்னூட்டமிட்ட

ரமா, கோபி, தியாகராஜன், கோவி, அழகை மைந்தன், வசந்த், மேடி, ஜோதி பாரதி, ரம்யா, சி யு நன்றிகள்

மங்கை said...

வசந்த்..

மறுபடியும் உண்ண பார்க்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு... மனம் தளராமல் இரு... இங்கு தொடர்ந்து எழுது.. அன்பிற்கும் ஆதரவிற்கும் இங்கு பஞ்சம் இல்லை... உனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வை தொலைத்து விடாதே..

உன் அடையாளத்தை கொடுக்க வேண்டியது இல்லை வசந்த்.. இங்கு யாரும் அதை கேட்கப்போவதில்லை...

உன் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கும் நண்பர்கள் இங்கு கிடைப்பார்கள், உன் குடும்ப நலன் கருதி நீ எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் துனை இருப்போம்.. தைரியமாக எழுத ஆரம்பிக்கலாம் வசந்த்...நான் இருக்கிறேன்..

Compassion Unlimitted said...

Kadavule,idhuvum Vidhi endru solvadha,appadiyendral andha vidhiyai verukkiren
Andha pinju ullatthai enna vendru koora
TC
CU

RATHNESH said...

கனத்துப் போனது மனது.

இந்தப் பேட்டி மிகப் பெரிய அளவில் பரப்பபட வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எல்லாம் துண்டுப் பிரசுரங்களாக வெளியிடப்பட வேண்டும்.

சென்ஷி said...

நான் ரொம்ப லேட் போல.. உங்க பதிவு லின்க்க் கொடுக்க உள்ள வந்தா இந்த பதிவு கண்ணுல படுது. உண்மையிலேயே அந்த சின்ன பொண்ண நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குதுக்கா ...

சரிதா said...

மனது கனக்கிறது... உருக்கமான பதிவு... :-(

சுரேகா.. said...

அந்தத்தாய்மைக்கு
கோடி வணக்கங்கள்!

கண்ணில் நீர் துளிர்க்க
வைத்துவிட்டது பதிவு!

இப்போது அந்தப்பெண்
எங்கு இருக்கிறாள்?
அவளுக்கு யார் பாதுகாப்பு!?

தகவல் தர இயலுமா?

நாம் ஏதேனும் செய்வோம்!
மின்னஞ்சல் இதோ:
rsundartronics@gmail.com

SurveySan said...

//ஆனால் அவர்களின் எண்ணிகையை விட திட்டம் தீட்டுபவர்களுக்கும், அதை செயல் படுத்துவர்களுக்கும் செலவு செய்யும் பணம் அதைவிட அதிகம். //

hmm admin செலவு கொஞ்சம் இருக்கும், ஆனா, அது அதிகம்னு சொல்லி ஒதுக்கிட முடியாது. பொதுவா, 10% to 30% வரை admin செலவு ஆகும், சில charity நிறுவனங்களுக்கு.

உதாரணத்துக்கு Red Crossக்கு 6% செலவு ஆகுதாம்.

இந்த பக்கத்தில் அந்த விவரமெல்லாம் கிட்டும்.
http://www.charitynavigator.org/index.cfm?bay=search.summary&orgid=3277


அந்த பொண்ணு உங்களுக்குத் தெரிஞ்சவரா? அடிக்கடி பாப்பீங்கன்னா, அவரை, ஏதாவது ஒரு இல்லத்தில் சேர்த்து விட்டு, வருஷா வருஷம், யாராவது sponsor செய்வதர்க்கு ஏற்பாடு செய்யலாம்.

உதவும் கரங்கள் மாதிரி இடங்களில், ஒரு குழந்தையை கவனித்து அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த, வருஷத்துக்கு, 5000, பத்தாயிரமோ செலவாகுமாம். ந்றைய பேர் உதவுவாங்க.

ஏதாச்சும் செய்யுங்க.

மங்கை said...

அனைவருக்கும் நன்றி

இந்தப் பெண்ணை ஒரு நிறுவணம் தத்து எடுத்து பாதுகாத்து வருகிறது... நன்றாகவே இருக்கிறாள்

நன்றி

அபி அப்பா said...

மங்கை என்னத்த சொல்ல:-((

Unknown said...

:'(

rapp said...

:(:(:(

Anonymous said...

ரெம்பக் கஷ்டமா இருக்குங்க. வேற என்ன சொல்ல.

யாரோ செய்த தவறுக்கு ஒரு பாவமும் அறியாப் பிஞ்சுக் குழந்தை சிலுவை சுமக்கிறது.

ரிதன்யா said...

நான் இதுவரை பாதிக்கப்படவர்களை பார்த்ததில்லை, ஆனால் இப்பொழுது உணரமுடிகிறது.
குழந்தை வடிவ தெய்வம் தான்.
நலமாய் வாழ பிராத்திப்போம்.