Thursday, March 08, 2007

தேவைகள்....ஆசைகள்

பொய் புரட்டு
பகற்கனவுகளை மீறி
உலகம் அழகானதுதான்


அவலங்களை கடைவிரித்து நியாயம் கேட்பதாய், பிச்சைபாத்திர பதிவாய் இதை இட எனக்கு விருப்பமில்லை. படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அலசப்பட்ட ஒரு விஷயம் தான் இது. மனித குலத்தின் சரிபாதி, ஆகக்கூடிய அத்தனை வகையான அடக்குமுறைகளுக்கும் ஆளாகி, அதை நிலைநிறுத்த மேற்கொள்ளும் வன்முறைகளை காலங்காலமாய் அனுபவித்து வருகையில், மனிதகுலம் நாகரீகத்தின் உச்சானிக்கொம்பில் ஆடிக் கொண்டிருப்பதாய் தம்பட்டம் அடிப்பது கேலிக்கூத்து என்பதை என்று தான் உணரப் போகிறோம்?

சமுதாயத்தில் சரி பாதியினர் துன்பங்களுக்கும் வன் முறைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் போது, அச்சமுதாய வளர்ச்சிகான முயற்சிகளில் ஒரு இலக்கை அடைவது சாத்தியமில்லை

இன்றுவரை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்த கொடுமைகள், அதன் சுபாவம், இவை எல்லாம் நேர்மையாக பதியப் பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம். இதைபற்றி எல்லாம் விரிவாக சிந்திக்கவும், காரணகாரியங்களை பற்றி அலசவும் இன்று இரு பாலாறும் தொடர்ந்து செயல்பட்டு வருவது ஆறுதல் அளிக்கும் ஒரு விசயம். இந்த போராட்டங்கள் கூர்மை அடைந்து பல வெற்றிகளை பார்த்து இன்று பெண்களின் நிலையில் மாற்றம் வந்திறுப்பதையும் யாரும் மறுக்க முடியாது. சமீப காலங்களில் இதன் வலியை உணர்ந்தவர்கள், போராடவும், செயல்படவும் ஆரம்பித்திருப்பது காலத்தின் கட்டாயம் மற்றும் தேவை என்றே நினைக்கிறேன்.


இவர்களின் ஒருமுகப்பட்ட உழைப்பின் விளைவும் வெற்றியும் நகர்புற சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கான சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. நகரங்களைத் தாண்டினால் பெண்களின் நிலமை........வேண்டாம் எனக்கு கோவம்தான் வருக்கிறது.

அதற்காக நகரங்களைத் தாண்டி முயற்சிகளோ, அதை செயல்படுத்தும் போராளிகளோ இல்லையென்று அர்த்தமில்லை. சாதிக்கவும் முன்னேறவும் ஆசையும் உத்வேகமும் உள்ள பெண்கள் இல்லை என்று சொல்ல முடியாது படிக்காத பாமர 'சின்ன பிள்ளை' யால் ஒரு களஞ்சியத்தை உருவாக்கிக் காட்ட முடிந்தது. நாட்டு நலனை முன்னிறுத்தி ஒரு 'துர்காபாய்'யால் போர்முனையில் 35 ஆண்டுகளாக மருத்துவராய் பணிசெய்ய முடிந்தது. ஆனால் இவர்கள் மிகச்சொற்பமே, இன்றைய தேவை இவர்களை போன்ற ஆயிரமாயிரம் சரித்திர நாயகிகள்.

ஹரியானா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் நேற்று நடந்த பெண்களுக்கான பயிற்சி முகாமில், தங்களின் எதிர்கால கனவுகளை பகிர்ந்து கொண்டனர் அங்கு வந்த கிராமத்து பெண்கள். அரசு அதிகாரிகளும், கிராம பெரிய தலைகளும் கூடியிருந்த அந்த வளாகத்தில் இரண்டு பெண்கள் எழுந்து, ஒருவர் தான் நாடாளுமன்ற உருப்பினர் ஆக ஆசை படுவதாகவும், மற்றொருவர் தான் முதலமைச்சர் ஆக விரும்புவதாகவும் சொன்னது அனைவரையும் ஆச்சிரியப் படவைத்தது. ஏதோ கேட்டதற்காக அவர்கள் சொன்னதாக தெரியவில்லை. அதிகாரிகள் கேட்ட கேள்விகளை தொடர்ந்து, அவர்கள் கொடுத்த விளக்கத்தையும், ஊர்புரங்களில் நிலவும் பிரச்சனைகள் பற்றிய அவர்களின் புரிதலையும், நாட்டு நடப்பை அவர்கள் கூர்ந்து கவனிப்பதையும் பார்க்கும் போது, வாய்ப்பு கிடை(கொடு)த்தால் அரசியலிலும் இவர்கள் சாதிப்பார்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. பெண் குழந்தை பிறந்தால் உதவித் தொகை என்ற பெயரில் அதற்கு பிச்சை இடும் வேலையை செய்வதுடன் மட்டும் நிற்காமல், அவளின் படிப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் ஏதாவது செய்தால், உண்மையிலேயே பெண் சிசு கொலை அகற்றப்படலாம்.

இலங்கையாய் இருந்தாலும்,ஈராக்காய் இருந்தாலும் உலகலாளவிய அளவில் பெண்கள் மீது ஏவப்படும் எளிமையான அடக்குமுறை, பாலியல் வல்லுறவு. இலங்கையில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், மனித உரிமை அத்து மூறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை நாம் அறிவோம். வீடுகளையும் உறவுகளையும் இழந்து, மற்றவரின் ஆதரவில் வாழும்போது, வயது வித்தியாசமில்லாமல், பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுமைகளை படிக்கிற பொழுதில் துடித்துப்போகிற நாம் பின் அதை ஒரு செய்தியாக ஜீரணித்து மறந்துபோவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்.

இது போல நடக்கும் பாலியல் வன்முறைகளே, பெண்ணை வீட்டோடு முடக்கக் காரணமாக இருந்து வருகிறது. பெண்ணை உடல்சார்ந்து காக்கும் பெரிய பொறுப்பை மனதில் வைத்தே பெற்றோர்கள், (ஆசை இருந்தாலும்), வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க தயங்குகின்றனர். இதை சொல்லி சொல்லி வளர்க்கும் இந்த சமூகம், அவளை, தன்னை தானே காக்க முடியாதவளாய், பிறரை சார்ந்து இருக்கும் ஒரு சூழ்நிலையில் தள்ளிவிடுவது நாம் பார்ப்பது தானே.

இப்பொழுது மருத்துவத் துறைக்கு சவாலாக இருக்கும் ஒரு பிரச்சனை எய்ட்ஸ். இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருப்பது வேதனையான விஷயம். குறிப்பாக ஆப்ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பாதிக்கப்பட்ட பெண்களில், திருமணமாகி தன் கணவனிடம் மட்டுமே உடலுறவு வைத்து இருக்கும் பெண்கள் தான் அதிகம். தன் கணவன் தவறான வழியில் செல்கிறான் என்று தெரிந்திருந்தும், தங்களை பாதுகாத்துக் கொள்ள, இந்தப் பெண்களுக்கு வாய்ப்புகள்/ உரிமை குறைவு. இவர்களும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் கணவனையும் இழந்து, சில சமயங்களில் குழந்தையையும் இழந்து, கணவர் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு வேண்டா விருந்தாளியாக தாய் வீட்டில் உட்கார்ந்திருப்பது கொடுமை. இதையும் தாண்டி எதிர்நீச்சல் போட்டு சிரித்த முகத்துடன் நம்மிடையே வலம் வரும் எண்ணற்ற சகோதரிகளைப் பார்த்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்...ஹ்ம்ம்ம்...

இன்று உலகத்தில், ஒவ்வொறு மூன்று பெண்களுக்கும், ஒரு பெண், தனது நெருங்கிய சொந்தத்தினால் ஏதாவதொரு வன்முறைக்கு ஆளாகிறாள் என்று WHO அறிக்கை ஒன்று கூறுகிறது.

இதை எல்லாம் மனதில் வைத்து, அங்கங்கே நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளின் விளைவுகளை கருத்தில் கொண்டு, எந்தந்த விதத்தில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நினைவில் நிறுத்தி ஒரு புதிய சட்டம், 2005ல் அமுலுக்கு வந்தது.பெண் உரிமைச் சாத்தியப்பாட்டை உறுதிப்படுத்தி, பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக குடும்ப வன்முறை சட்டம்- (Domestic Violence Act) பல ஆண்டுகளின் சர்ச்சைக்கு பின்னர் ஒரு வழியாக அமுலாக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின் தனித்துவம்.

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பல இருந்தாலும், இந்த குறிப்பிட்ட சட்டம் குடும்ப வன்முறையை வெகுவாக குறைக்கவும், வழக்கு நடக்கும் நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடத்தையும் உணவையும் வழங்க வழி செய்கிறது.
  • உடலியல் வன்முறை, பாலியல் வன்முறை மனரீதியிலான கொடுமைகள், சொல் வன்முறை, பொருளாதார வன்முறை ஆகிய அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. (முன்பு அவ்வாறு இல்லை)

  • வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள், நீதி வழங்கப்படும்.

  • பாதிக்கப்பட்ட பெண், தனக்கு எது பாதுப்பான இடம் என்று நினைக்கிறாளோ அங்கு தங்க கோர்ட் அவளுக்கு அனுமதி அளிக்கிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டுள்ள "Protection Ofiicers" ன் பொறுப்பு.

  • வழக்கு முடியும் வரை சம்பத்தப்பட்ட குடும்பத்தாரின் வீட்டில் இருக்கலாம் என்றும், அவளின் உணவு மற்ற செலவுகளை அந்த குடும்பமே எற்றுக் கொள்ளவேண்டும் என்றும் இந்த புதிய சட்டம் கூறுகிறது.
பெண்கள் தங்களின் சுயத்தை இழந்து, வன்முறையின் கொடுமையால் தங்களின் உற்பத்தி திறனை இழந்து,கொள்கை முடிவுகளில் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இந்த சமுதாயத்தில் வாழ்வது அனைவரும் அறிந்த, புரிந்த ஒன்று. அதனை சரி செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வேண்டிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

முயற்சிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், பிரச்சனைகளை எதிர்த்து வாழ நம்முள் திறமையை வளர்த்துக் கொள்வது ஒரு நிலையான தீர்வை கொடுக்கும். நம்மை பலவீனப் படுத்தும் புலம்பல் எந்த விதத்திலும் நமக்கு உதவாது என்பது என் தனிப்பட்ட எண்ணம். நம் உரிமையை உரிய களத்தில், நேர்மையாக, உரிய விதத்தில் தெரிவிக்க நாம் தயங்க வேண்டியது இல்லை.

உறுதி, திறமை, நேர்மையான உழைப்பு, இவைகளுடன் உறவுகளின் அன்பும் ஆதரவும் இருந்தால் சிகரத்தை எட்டுவது எந்தப் பெண்ணுக்கும் கடினமில்லை.

8 comments:

சிவபாலன் said...

மங்கை,


மிக நல்ல பதிவு!!

மகளிர் சமுதாயம் எழுச்சியுறட்டும்!!

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\உறுதி, திறமை, நேர்மையான உழைப்பு, இவைகளுடன் உறவுகளின் அன்பும் ஆதரவும் இருந்தால் சிகரத்தை எட்டுவது எந்தப் பெண்ணுக்கும் கடினமில்லை.//

முதல் மூன்றும் இருந்து கடைசியானது கிடைக்காமல் போனவர்களின் சோகம் கேட்ககேட்க , வெற்றி பெற்றவர்களின் கதையும் , அவர்களின் வெற்றிக்கு முந்தைய போராட்டங்களும் பற்றி சொல்லச்சொல்லத்தான்
புது வேகம் வரும் மங்கை.

கானா பிரபா said...

பெண்கள் தின வாழ்த்துக்கள் உங்களுக்கு.

சிறப்புப் பதிவுக்கு நன்றிகள்

மங்கை said...

உறுதி, திறமை, நேர்மையான உழைப்பு, இவைகளுடன் உறவுகளின் அன்பும் ஆதரவும் இருந்தால் சிகரத்தை எட்டுவது எந்தப் பெண்ணுக்கும் கடினமில்லை... **



சூப்பர்...



//இவற்றுடன் தடைகளை தகர்த்தெறியும் தளராத உள்ளத்து உரம் நிச்சய தேவை...//

மகளிர் தின வாழ்த்துக்கள் !!!

செந்தழல் ரவி

நன்றி ரவி

மங்கை said...

சிவா, லட்சுமி, கானாபிரபா நன்றி

வைசா said...

// மனித குலத்தின் சரிபாதி, ஆகக்கூடிய அத்தனை வகையான அடக்குமுறைகளுக்கும் ஆளாகி, அதை நிலைநிறுத்த மேற்கொள்ளும் வன்முறைகளை காலங்காலமாய் அனுபவித்து வருகையில், மனிதகுலம் நாகரீகத்தின் உச்சானிக்கொம்பில் ஆடிக் கொண்டிருப்பதாய் தம்பட்டம் அடிப்பது கேலிக்கூத்து என்பதை என்று தான் உணரப் போகிறோம்? //

நல்ல பதிவு. நன்றி, மங்கை.

வைசா

பங்காளி... said...

நல்லா வந்திருக்க்கு,....என்ன கொஞ்சம் நீளம்.

கடைசில கொட்டாவி வந்துச்சுன்னு உண்மையச் சொன்ன உங்களுக்கு கோவம் வரும்.....ஹி...ஹி...

வாழ்த்துக்கள் தாய்க்குலமே....

மங்கை said...

நன்றி வைசா

பங்காளி
//வாழ்த்துக்கள் தாய்க்குலமே.... //

அட அட அட
புல்லரிச்சு போச்சு...தூக்கத்தில கூட தாய்குலத்த வாழ்த்தற நீங்க இருக்கப்போ எங்களுக்கெல்லாம் என்ன கவலை.....