Monday, December 31, 2007

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...


கபடமில்லா இந்தச் சிரிப்பை போல் வரும் புத்தாண்டை தூய்மையான நெஞ்சோடு எதிர்கொள்வோம்

மனதில் அமைதியும், உடலில் வலிமையும், சிந்தனையில் தெளிவும் பெற்று, வாழ்வில் இன்னும் உயரங்களை அடைய எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்திக்குறேன்.

அனைவருக்கும் எதிர்வரும் புத்தாண்டு இனிமையாகவும் வளமையாகவும் அமைய, இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 28, 2007

பரீக்ஷித் - குறும்படம்

ரொம்ப நாளா குறும்படத்தை பற்றி பதிவு எழுதனும்னு நினச்சுட்டு இருந்தேன். படத்தை யூ ட்யூப்ல போட முயற்சி செய்தேன். முடியலை. அதனால படத்தில் இருந்து சில காட்சிகளை மட்டும் இங்கே குடுத்து இருக்கேன்.

கணவன் மூலமாக எச்ஐவி நோய்க்கு ஆளாகும் ஒரு பெண், கணவனின் வீட்டாரால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் அந்தப் பெண் கட்டிட வேலை செய்து குழந்தையை காப்பாற்றுகிறாள். மேலும் அவளுடன் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு எச்ஐவி பற்றி எடுத்து கூறி, கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கண்டிப்பாக எச்ஐவி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கூறுகிறாள்.

விழிப்புணர்வு கூட்டங்களில் போட்டு காட்டவேண்டிய படமானதால் பெரும்பாலும் எச்ஐவி பற்றிய அடிப்படைத் தகவல்கள், பாதிக்கப்பட்டவர்கள் படும் கஷடங்கள் போன்றவை எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது.

முப்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்ல எடுத்த படம். நான் எதிர் பார்த்த அளவிற்கு வரலைன்னாலும், படத்திற்கான குறிக்கோள் நிறைவேறியாச்சு.

நாமும் ஏதோ செய்திருக்கோம்னு ஒரு திருப்தி.


எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அம்பாவாக நடித்த சாகரீக்கா- நிறைவான நடிப்பு

தம்லியாக நடித்த கீதா, அசத்தீட்டார்

தான் கர்ப்பமாக இருப்பதை கணவனிடம் சொல்லும் அம்பா
அடிக்கடி நோய்வாய்ப்படும் கணவனாக நடித்த ஜீத்து.


டாக்கடராக நடித்த சந்தீப் ஆர்யாவில்லி மாமியார்.. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய பெண் வராததால், மேக்அப் வுமன் பிரியா, மாமியாராக ஒரே காட்சியில் வந்தாலும் அசல் வில்லி தோற்றும் போகனும். அப்படி ஒரு லுக்கு.வீட்டை விட்டு விரட்டப்பட்ட அம்பா, தெருவில் குழந்தையுடன்டாக்டரம்மாவாக நடித்த ரிது ஆர்யாஉண்மையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பத்மாவதி


பகவதி

நல்ல படியாக குழந்தையை பெற்றெடுத்த சந்தோஷதத்தை அம்பாவிடம் பகிர்ந்து கொள்ளும் தம்லி.


Tuesday, December 11, 2007

என் அருகே நீ இருந்தால்!


தானாய் வந்த அன்பு
தாராளமாய் வந்த அன்பு
தவிக்க விடாத அன்பு
தெவிட்டா அன்பு

தவித்திருந்தேன் விழித்திருந்தாய்
தோல்வியில் உறைந்திருந்தேன் தோளானாய்
தோள் கொடுப்பதில் தனையனானாய்
தேற்றி அரவணைத்து தந்தையானாய்

பொறுமையில் என் தாயானாய்
மறுக்காமல் என்னை வழி நடத்தும் வழித்துணையானாய்

இந்த அன்பிடம் தஞ்சமடைந்தேன் என் நட்பே....

காணாது கண்ட உன் அன்புடனே, என் அருகே நீயுமிருந்தால்.....!

பி. கு- இங்க பாருங்க எல்லாரும், படிச்சிதும் நல்ல பிள்ளைக்கு அழகா ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க...இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை....

Friday, November 30, 2007

ஆதரவுக்கரம் நீட்டுவோம்- உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்


நாளை உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்

ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவை கண்டறிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும்.

முதல் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது கூறப்பட்டது. 1982ல் தான் இது சி.டி.சியால் எய்ட்ஸ் என பெயரிடப்பட்டது. இதன் பின், 3 ஆண்டுகளில், அதாவது 1984ல் எச்.ஐ.வி. எனப்படும் ஹியூமன் இம்யூனோ டெபிசியன்சி வைரஸ் பிரித்தறியப்பட்டது.

இந்தியாவில் எச்.ஐ.வி. பரவல்

எச்.ஐ.வியை தடுக்கும் நடவடிக்கைகளை எச்.ஐ.வியின் தொடக்கத்திலேயே முடுக்கிவிட்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமைப் பட வேண்டிய விஷயம். தொடர்ந்து எச்.ஐ.வி. தடுப்பு முயற்சிகளை முனைப்புடன் செயல்படுத்தினாலும் உலக எச்.ஐ.வி/எய்ட்ஸ் தலைமையகமாக இந்தியா விளங்குகிறது. இந்தியரில் பெரும்பான்மையினருக்கு எச்.ஐ.வி. விழிப்புணர்வு மிகக்குறைவாகவே உள்ளது. இந்தியாவின் சமூக பொருளாதாரநிலை, சமூக கலாச்சார நம்பிக்கைகள்,செக்ஸ் மற்றும் பால் வேறுபாடுகள் குறித்த கருத்துக்கள், பெரிய அளவில் நிகழும் இடம் பெயரல்கள் (migration), சமூகத்தால் கீழே தள்ளப்பட்டிருக்கும் மக்களில் பெரும் பகுதியினர் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பெறும் சூழ்நிலையில் உள்ளனர்.

இந்தியாவில் உள்ள எச்.ஐ.வியின் பொதுவான அம்சங்கள் என இவற்றைக் கூறலாம்.

எய்ட்ஸ் இளவயதினரையும் பாலுறவில் அதிகம் ஈடுபடும் வயதினரையுமே அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில்எச்.ஐ.வி. உள்ளவரில் 88.7 சதவீதத்தினர் 15முதல் 49 வயதுக்குட்பட்டவரே.


போதை ஊசி மூலமாக பெரும்பாலும் எச்.வி.ஐயைப் பெறும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர, இந்தியாவில் பலருடன் உடலுறவு கொள்வதன்மூலமாகவே 85 சதவீதத்தினர் எச்.ஐ.வியைப் பெற்றுள்ளனர்.


எய்ட்ஸினால் உருவாகும் சந்தர்ப்பவாத நோய்களில் காசநோயே அதிகமாக எச்.ஐ.வி. இருப்பவரைத் தொற்றுகிறது. இதனால் எச்.ஐ.வியும் காசநோயும் சேர்ந்து பரவும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.


உலகெங்கும் பெரும்பாலும் நகர்ப்புறமக்களே எச்.ஐ.வியைப் பெறுகையில், இந்தியாவில் மட்டும் எச்.ஐ.வி.தொற்றியவரில் 60 சதவீதத்தினர் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


தமக்கு எச்.ஐ.வி. வரவே வராது என்னும் மூட நம்பிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் கொண்டிருக்கிறார்கள்.


எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதித்திருப்போருக்கான மனித உரிமைகள் அதிக அளவில்மக்களிடையே கொண்டு செல்லப்பட்டாலும் எச்.ஐ.வி. பாதித்திருப்போரை சமூகம் பார்க்கும் பார்வையிலும் நடத்தும் விதத்திலும் பெரிய மாறுபாடு ஏற்படவில்லை.


ஆண் பெண் பாகுபாடு, சமூகத்தில் பெண்களை சமமாக நடத்தாமலிருப்பது, பாதுகாப்பான செக்ஸ் என்பதில் பெண்கள் உரிமையின்றி இருப்பது ஆகியவை எச்.ஐ.வி. தடுப்பு நடவடிக் கைகளை பெரிதும் பாதிக்கிறது.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கிடை யேயும் மக்கள் சென்று வருவது பல்வேறு பிரிவுகளுக்கிடையே எச்.ஐ.வி. பரவகாரணமாக உள்ளது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மாளான உதவிகள் செய்து, அன்புக் கரம் நீட்டி மனித காப்போம்

Wednesday, November 07, 2007

பிரபலமடைந்து வரும் எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகள்

சிப்லா கம்பெனியின் புதிய அறிமுகமான ' ஐ-பில்' - கருத்தடை மாத்திரை இளம்பெண்களிடம் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. தில்லியில் உள்ள மருந்துகடைகளில் இந்த மாத்திரயை வாங்குபவர்களில் 20% சதவீதம் இளம்பெண்கள் தானாம். அதுவும் 16ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆகாத பெண்கள். இது நாள் வரையில் வெளிநாடுகளில் மட்டுமே இது போல 'எமர்ஜென்ஸி' மருந்துகள் உபயோகத்தில் இருந்தன. அதென்ன 'எமர்ஜென்ஸி' மருந்துகள்னு பார்க்குறீங்களா. அதாங்க உடலுறவுக்குப் பின் 72 மணி நேரத்துக்குள்ள இந்த மருந்து எடுத்துக்கோனும்.

இந்த மருந்துகள் எப்படி வேலை செய்கிறது
  1. உடலறுவுக்கு பின் ஓவரியில் இருந்து முதிர்ச்சி அடைந்த முட்டை வெளியே வராமல் தடுக்கிறது.

  2. ஒரு வெளியே வந்து விட்டால் அது ஆண் உயிரணுக்களை சேர விடாமல் தடுக்கிறது.

  3. முதிர்ச்சியடைந்த கரு முட்டைகள் கருப்பையின் உட்சுவர்களை ஒட்டாமல் பார்த்துக் கொள்கிறது.
சரி. திருமணம் ஆன தம்பதியருக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியா இருக்கலாம். ஆனால் திருமணமாகாத பெண்களுக்கு சில மனரீதியான பிரச்சனைகள் வரும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இந்த மருந்து சாப்பிடறதுனால வரும் பிரச்சனைகள் என்ன என்னன்னு இவங்களுக்கு தெரியாது. எப்படியோ அந்த நேரத்துல உதவுனா போதும்னு இளைய சமுதாயம் இந்த வழியை தேர்ந்தெடுப்பது வேதனை அளிக்கிறது. முறையில்லாத கருக்கலைப்பினால் ஏற்படும் ஆபத்துகளை வெகுவாக குறைக்கலாம் என்பது சிப்லா கம்பெனியின் வாதம்.

இந்த மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே எல்லா மருந்துகடைகளிலுன் கிடைக்கும். ஒரு மாத்திரை ரூபாய் 75 ரூபாய்.

இந்த மாத்திரைகள் ஹார்மோன் மாத்திரைகளானதால், முறையில்லாத மாதவிடாய், அல்லது மாதவிடாய் வராமலே இருத்தல், குழந்தை பேறு பெறுவதில் தாமதம் போன்ற சிக்கல்கள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம், நம் நாட்டில் இன்னும் பலருக்கு கருத்தடை மாத்திரைகள் எந்த விதத்திலும் அவர்களை எச்ஐவி கிருமியிடமிருந்தோ
பால்வினை நோய்களிருந்தோ காப்பாற்றாது என்ற அடிப்படை உண்மை தெரியாது.

இதைப்பற்றி எந்த கருத்தையும் சொல்ல சிப்லா கம்பெனி தயாராக இல்லை.

இந்த மருந்தின் விற்பனையை பார்த்து மற்ற கம்பெனிகளும் இந்த ஆராய்ச்சியில இறங்க தயாராகிவிட்டார்கள்

மேலும் நவம்பர் மாதத்தின் மூனாவது வாரத்தில் சிப்லா கம்பெனி இன்னொரு மருந்தை அறிமுகப் படுத்தவுள்ளது. ' கிரசென்டா'' எந்த வித பக்க விளைவுகள் இல்லாமல் வருகிறதாம்.

இது போல எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகளுக்கு அனுமதி அளித்து வரும் அரசு, இதைப் பற்றிய போதிய அறிவில்லாத நம் இளைய தலைமுறையை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது?....

Saturday, October 27, 2007

மாமியார்(கள்) வாழ்க..வாழ்க


எப்பவுமே ரொம்ப விமர்சனத்துக்கு ஆளாகுற கதாபாத்திரங்கள் யாருன்னு யோசிச்சு பார்த்தா, மாமியார்கள் தான். இணையத்திலேயும் சரி, தொலைக்காட்சியிலேயும், திரைப்படங்கள்ளேயும், ஏன், நாலு பேர் சேர்ந்து பேசினா கூட நகைச்சுவைக்காகவும் கிண்டலுக்காகவும் மாமியார் மருமகள் சண்டைகள் தான் வரிசையில முதல்ல நிக்கும். தொலைக்காட்சிகள்ல காலங்காலத்துக்கு தீனி போடும் கதாபாத்திரங்கள் இவங்க ரெண்டு பேரும். சரி விஷயத்துக்கு போகலாம்.

இதுல யார் மேல தப்புன்னு நான் பேச வர்லீங்க. நமக்கு அந்த அனுபவமும் இல்லீங்க. இங்க இருக்குற மருமகன், மருமகள் எல்லாரும் என்னோட சேர்ந்து நம்ம மாமியார் நல்லா இருக்குனும்னு வேண்டிக்கலாம் வாங்க.

இன்னைக்கு மாமியார்கள் தினமாம்

இது என்ன ஃபேஷனான்னு கேட்க வேண்டாம். யாஹூ முகப்புல பார்த்தேன். அதுனால இந்த பதிவு. இங்க வலைப்பதியும் மாமியார்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். டிப்ஸ் குடுத்தா பிற்காலத்துல, பேர் சொல்லும் மாமியார்களா நாங்க இருப்போம்...:-))

எல்லாரும் நோய் நொடி இல்லாம, சந்தோஷமா, பல்லாண்டு பல்லாண்டு வாழ உங்கள் பிள்ளைகளின் பிரார்த்தனைகள்.

Thursday, October 25, 2007

ஈமெயில் மோசடி..

என் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.

Dr. Zubair என்பவர் ஜாமியா பல்கலைகழகத்துல பேராசிரியர். கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள்ல அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அவரோட ஜீமெயில் அக்கவுன்ட்ல இருந்து எனக்கு வந்த ஈமெயில்.

தான் ஆப்ரிக்காவுல இருப்பதாகவும், அவசரத்துல புறப்படும் போது சொல்ல முடியலைனும் எழுதி இருந்தது. மேலும், தன் பாஸ்போர்ட், பணம், பேக் முதலியன திருடு போய்விட்டதாகவும், செலவுக்கு காசு இல்லை அதனால் உடனே $2600 அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தது. நானும் எல்லாம் செக் பண்ணி பார்த்தேன். அதே ஈமெயில் ஐடி, கீழ அவர் எழுதற மாதிரியே அவரோட அலுவலக முகவரி எல்லாம் சரியா இருந்துச்சு.

அதுவும் HIV/AIDS கருத்தரங்குன்னும் எனக்காக சில புத்தங்கள் கிடைச்சதுன்னும் எழுதியிருந்துச்சு. எனக்கு அத படிச்ச பின்ன, நிஜமாவே எங்காவது மாட்டி இருப்பாரோன்னு இருந்துச்சு. ஏன்னா இவரும் அடிக்கடி வெளிநாடு செல்பவர் தான்.

ஜாமியாவுல அவரின் துறையில இருக்கும் மற்ற பேராசிரியர்களை கேட்கலாம்னா வெள்ளி விடுமுறையானதால கல்லூரியில யாரும் இல்லை. சரி அவரோட கைப்பேசிக்கே போன் பண்ணலாம்னு பண்ணேன், அதுவோ switched off.

மீண்டும் அந்த மின்னஞ்சலை படிச்சு பார்த்தேன்.. மேல மட்டும் எப்பவும் அவர் எழுதற மாதிரி இல்லை. எப்பவும் என் பெயரை மட்டுமே அவர் எழுதுவது வழக்கம். ஆனா இந்த மெயில்ல ' ஹலோ' அப்படீன்னு போட்டிருந்தது. அப்புறம் தான் இது அவர் அனுப்பலைன்னு நினைக்க தோனுச்சு. அந்த ஈமெயில் பாருங்க

Hello,

I am sorry I din't email you about my traveling to Africa for a program on HIV/AIDS that is taking place in three major countries in Africa. Ghana, SouthAfrica and Nigeria. In fact I have collected a lots of materials for you, which would be very useful to you.

It as been a very sad news and bad moment for me, thepresent condition that I found myself is very hard for me to explain.I am really stranded in Nigeria because I forgot my little bag in a Taxi where mymoney and passport documents were kept on my way to a Hotel that am staying,I have no more money left with me.

I am now owning a hotel bill of $1400and they wanted me to pay the bills soon else they will have to seize mybag and hand me over to the Hotel Management,please I need some help fromyou urgently to help me back home,and I need you to help me with the hotelbill and i will also need $1200 to feed and help myself back home so pleasecan you help me with a sum of $2600 ? to sort out this problems here

I needthis help so much and on time because i am in a terrible and tightsituation here,please understand how urgent i need your help.I am sending you this e-mail from the city of lagos.

I will appreciate what so ever you can afford to send me for now and I promise to pay back yourmoney as soon as i return home, you need to transfer the money throughWestern Union

Regards

Dr Zubair
........................................................................
Professor, Department of Social Work,
Jamia Millia Islamia [CentralUniversity],
New Delhi-110025

அப்புறம் மீண்டும் இன்னைக்கு அவர கூப்டேன். எதுக்கும் கேட்கலாம்னு. எடுத்த உடனே எங்க இருக்கீங்கன்னு கேட்டேன். அவர் '' என்ன?.. உங்களுக்கும் அந்த ஈமெயில் வந்துருச்சா, நான் எங்கேயும் போகலை, நான் நல்லா இருக்கேன். பணம் ஒன்னும் அனுப்பிடலையே'' ன்னு கேட்டார்.

ஏன்னா அவரோட பணி புரியும் பெண் ஒருவர் பணம் அனுப்பலாம்னு நினச்சுட்டு இருந்தப்போ கரெக்டா இவர் கூப்டு விஷயத்தை சொல்லிட்டாராம். இதுல முக்கியமான விஷயம் இவரோட ஈமெயில் லிஸ்ட்ல இருக்கும் பெண்களுக்கு தான் அதிகமா இந்த மின்னஞ்சல் வந்து இருக்கு.

இதே செய்தி NDTV லயும் வந்துச்சு. மும்பையில இதே மாதிரி வந்த ஈமெயில்னால ஒருவர் 6 லட்ச ரூபாய் நண்பருக்காக அனுப்பிட்டாராம்.
நண்பர்களே, இப்ப இது அதிகமா நடக்கறதா செய்திகள் வருது. ஹாக் செய்த ஈமெயில் ஐடியில இருந்து பழைய மெயில் எல்லாம் படிச்சு அதுல இருக்குற செய்திகளுக்கு தொடர்பு இருக்கும் செய்திகள் எழுதி நம்பிக்கை வர வைப்பது தான் இவங்க கையாளும் யுத்தி.

தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க எல்லாருக்கும் சொல்லி வைங்க மக்களே. முக்கியமா வெளிநாடுகள்ல இருக்கும் நண்பர்கள் கவனமா இருங்க.

Saturday, October 13, 2007

முதுமையில் நீளும் நாட்கள்


என் தோழி ஒருத்தியின் அம்மா, 60 அல்லது 65 வயது இருக்கும். படுத்த படுக்கையாய் இருப்பதால் ஒரு முறை வீட்டுக்கு வந்து விட்டு போன்னு சொன்னதுனால, தெரியாத இடம்னாலும் எப்படியோ தேடிக் கண்டு பிடிச்சுட்டு போய் சேர்ந்தேன். அம்மா பிறந்த குழந்தையைப் போல் படுக்கையில். என் தோழி பக்கத்துல போனதும் அவ கைய உறுதியா பிடிச்சுட்டு, 6 மாத குழந்தை போல அவளைப் பார்த்து கள்ளமில்லா சிரிப்பு. பேத்தி அருகில் போனதும் இவ யார்னு மிரள மிரள பார்த்து, என்னையும் ஒரு முறை திரும்பி பார்த்துட்டு, இன்னொரு பக்கம் உக்கார்த்துட்டு இருந்த தோழியின் அப்பாவைப் பார்த்து அதே குழந்தை சிரிப்பு. தன் மகளையும் கணவனையும் தவிர வேறு யாரும், எதுவும் அம்மாவின் நினைவில் இல்லை.

அல்சைமர்ஸ் (Alhziemer's disease) என்கிற மறதி நோயால் கடந்த ஒரு வருட காலமாக இவர் படுக்கையில். இந்த நோயைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மூளையின் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, மறதி அதிகமாகி, மொழி மறந்து, எந்த ஒரு புரிதலும் அற்ற ஒரு நிலை.
நாலு வரி சேர்ந்தாற் போல் பேச முடியாமல் பேசும் வார்த்தைகளிலும் ஒரு தெளிவில்லாமல் இருக்கும். எப்பொழுதும் எதையாவது தொலைத்துவிட்டு அது பற்றியே நினச்சுட்டு இருப்பாங்க. இது போல சின்ன சின்ன பிரச்சனைகளில் ஆரம்பிக்கறப்போ தான் நாம் கவனமா இருக்கனும். நம்ம கிட்ட மீண்டும், மீண்டும் ஒன்றையே சொல்லிட்டு இருக்கும் போது அதை பொறுமையா கேக்கனும். தொலைக்காத ஒன்றை தேடும் போது நம்ம கிட்டதான் கேப்பாங்க. ஒரு முறை இல்லை, நாலு அஞ்சு முறை கூட கேப்பாங்க. அப்ப தான் நாம பொருமையா பதில் சொல்லனும்.

ஆரம்பகால நிலை இப்படி என்றால், நோய் முற்றிய பின்,பாதிக்கப்பட்டவர்கள் படுத்த படுக்கையாகி, தான் வாழும் சுற்றுப் புற சூழ்நிலை புரியாமல், எல்லாவற்றிற்கும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். உணவு கூட சில சமயத்துல குழாய் மூலம் குடுக்க வேண்டியிருக்கும். மேலை நாடுகள்ல சிலர் ஒருவர் இது போல நிலைக்கு தள்ளப் பட்ட பின், மருத்துவர்களின் ஆலோசனையுடன் இந்த உணவுக் குழாய்களை அகற்றி விடுகிறார்களாம். தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் இருக்கும் ஒருவரை கஷ்டப் படுத்துவது சரியல்ல என்பது இவர்களது வாதம். நினைச்சும் பார்த்தா பயங்கரமா இருக்கு.... ம்ம்ம்

விசித்திரமான எண்ணங்கள், குணங்கள், செயல்கள்... இதையே ஒரு குழந்தையிடம் ரசிக்க முடிந்த மனிதனுக்கு, ஏன் வயசானவங்ககிட்ட ரசிக்க முடியறதில்லை?.எல்லாருக்கும் முதுமை என்பது இளமையைப் போன்ற உற்சாகம் நிறைந்த பருவம் இல்லை. ...ம்ம்ம்

1906 ஆம் ஆண்டு, அலாய்ஸ் அல்சைமர் (Dr. Alois Alzheimer) என்ற மருத்துவரால் கண்டரியப்பட்டது. அகஸ்தா என்னும் 51 வயது பெண்மணிக்கு நியாபக மறதியும், தன் கணவன் மேல் சந்தேகமும் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போய், பின்னர் படுத்த படுக்கையாகி நிமோனியா நோயால் இறந்து போனார். அவர் இறந்த பின், குடும்பத்தாரின் அனுமதியுடன் அவரின்
மூளையை பரிசோதனை செய்து பார்த்ததில், மூளையில் சில பகுதிகள் வழக்கத்துக்கு மாறாக சுறுங்கி இருந்ததைப் கண்டறிந்தார். மேலும் சில படிவுப்பொருட்களும், இறந்த செல்களும் இருப்பதையும் பார்த்தார். 1910ல் இது போல அறிகுறிகளுடன் தோன்றும் மூளைக் கோளாறுகளுக்கு இவருடைய பேரே வைக்கபட்டது

தோழி, அவள் அம்மாவைப் பார்த்துக்குறதுக்காக வேலையை விட்டுட்டு, ஹைதராபாத்தில தனியாக இருந்த அவங்கள இங்கே அழைச்சுட்டு வந்துட்டா. வீட்டுக்கு போனப்போ அவள் அப்பா சொன்னது, '' மகன் இல்லையே என்ற நினைப்பே எங்களை அனுக விடாத மருமகன், எங்களை குழந்தையை போல பார்த்துக்குற மகளும், பேத்தியும், சந்தோஷமா தான் இருக்கேன். ஆனா பார்க்க வர்ரவுங்க தான் சீக்கிரம் போய் சேர்ந்துட்டா பரவாயில்லைன்னு சொல்றப்போ நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு... சுத்தியும் இவளை பத்தின இத்தன எண்ணங்கள், அபிப்ராயங்கள் இருக்குறது தெரியாம, குழந்தையாட்டம் எப்பவும் இதே சிரிப்பு'' . அவர் அம்மாவின் கையை பிடிச்சுட்டு, நெற்றியை தடவிக் குடுக்க...மன நிறைவும், அதே சமையத்தில ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வுடனே நான் கிளம்பினேன்.ஹ்ம்ம்...

சாவின் விளிம்பில் இருப்பவரைப் பற்றிய ரவீந்திரநாத் தாகூரின் கவிதை ஒன்றில் இருந்து சில வரிகள்...

''வீணாய் என்னைத் தேடிக்காண வந்தவர்

அனைவரும் திரும்பிச் சென்றனர் சினத்துடன்!

ஆயினும் நானோ

இறுதியாய் என்னை அவன் கைவசம்

ஒப்படைக்கப் பொறுத்திருக்கிறேன்,

அவனது
அன்பு வரவேற்புக்கு!''

Wednesday, September 12, 2007

தில்லி- Crime Capital


இன்று மதியம் எங்கள் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சொன்ன சேதியை கேட்ட பின்னால் சிறிது நேரம் எங்களால் ஒன்றும் பேச முடியவில்லை.
தில்லியில் நடக்காத குற்றங்கள் இல்லை, இதை விட பாதுகாப்ப இல்லாத ஒரு இடம் இருக்க முடியாது என்பதற்கு இதை விட ஒரு உதாரணம் வேண்டியது இல்லை. மனிதர்கள் இதை விட தரம் கெட்டு போக முடியுமா?

இந்த இரண்டு மாணவர்களும் நேற்று ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு திறும்பிக்கொண்டிருந்த போது ரோட்டோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணை ஒருவன் பலாத்காரம் செய்துகொண்டிருந்திருக்கின்றான். ஒரு மரத்தினடியில்..லைட் வெளிச்சத்தில், இந்த கொடுமை நடந்திருக்கிறது. பைக்கில் சென்று கொண்டிருந்த இந்த மாணவர்கள் ஒரு பெண்ணின் அவலக் குரல் கேட்கவே வாகனத்தை நிறுத்தி பார்த்திருக்கிறார்கள். சிறு வயதானதால் அருகில் செல்ல பயந்து கொண்டு தூரத்தில இருந்து அவனை திட்டி விரட்ட பார்க்க அவன் எதையும் காதில் வாங்காமல் முன்னேரிக் கொண்டிருந்திருக்கின்றான்.

ஆடை அலங்கோலமாக இருக்கவே மாணவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையாம். பின்னர் இரண்டு போலீஸ்காரர்கள் வருவது தெரியவே அவர்களை அழைத்து விஷயத்தை சொல்ல, அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர். பின்னர் அருகில் இருக்கும் ஒரு குடியிறுப்பு பகுதியில் ட்யூட்டியில் இருந்த செக்யூரிட்டி ஆட்களுடனும், மற்ற ஜனங்களுடனும் வந்து அவனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

குற்றவாளியை அடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள் சாட்சி கை எழுத்து மட்டும் போட மறுத்து விட்டனராம். ஆனால் இந்த இரண்டு மாணவர்களும் நாங்கள் போடுகிறோம் என்று கூறி அவர்கள் கையாலேயே எழுதி கொடுத்துவிட்டு, இன்று காலை கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவரிடம் விஷயத்தை கூற, இவர்களுக்கு பயம். ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று. ஆனால் மாணவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை. நாங்க குடுத்த புகாரை திறும்ப வாங்க மாட்டோம் என்று உறுதியாக கூறி விட்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமையை மருத்துவர்களின் சான்றிதழ்களுடன் இன்று எல்லா ஊடகங்களுக்கும் தெரிவித்து விட்டனர். மேலும், அந்த பெண்மணி இன்னும் காவல் நிலையத்தில் இருப்பதால் அதற்கும் ஆட்சேபனை தெரிவித்து மகளிர் ஆணையத்திடம் முறையிட வேண்டும் என்று எங்களிடம் வந்தார்கள். மகளிர் ஆணையத்திடம் சொல்லியாகி விட்டது.

இதோடு நிக்காமல் இந்த மாணவர்கள் இந்த வாரத்திற்குள் அனைத்து மாணவர்களையும் ஒரு பாதயாத்திரைக்கு தயார் படுத்தி வருகின்றனர். அவர்கள் முகத்தில் நேற்று பார்த்த காட்சியின் அதிர்ச்சி இன்னும் இருந்தது.

மாணவர்கள் சம்பவத்தை விவரிக்கும் போது, அந்தப் பெண் கத்தியது கூட வலியானாலே ஒழிய அவளுக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கின்றது என்று தெரியவில்லை. காவல் நிலையத்திலும் தனக்கு நேர்ந்த கொடுமையின் தீவிரத்தை உணராமல் தான் இருந்து இருக்கிறாள்.

சராசரியாக இந்தியா முழுவதும் நடக்கும் குற்றங்களைப் போல் இரண்டு மடங்கு குற்றங்கள் தில்லியில் மட்டும் நடக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரம் என்றால் அது தில்லியாகத்தான் இருக்க வேண்டும்.
இதை விட கேவலமாக ஒரு மனிதன் நடந்து கொள்ள முடியுமா. பணமும் அதிகாரமும் தில்லியை இன்று எந்த அளவிற்கு ஒரு நரகமாக ஆக்கியிருக்கிறது என்பதற்கு இங்கு தினமும் நடக்கும் குற்றங்களே சாட்சி.

மனிதர்களைக் குறித்த நம்பிக்கை அருகிக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில்
இந்த மாணவர்களின் உறுதியும் எண்ணமும் ஆறுதல் அளிக்கிறது.

Tuesday, August 28, 2007

உணர்வுகள் அற்ற நம் மக்கள்


NDTV மற்றும் Times Now சானலில் பார்த்த ஒரு செய்தியினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியாமல் இதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதை யார், எப்படி படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை.

மக்கள் சிலரின் மிருகத்தன்மையும், சக மனிதனின் பாதுக்காப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர் இரண்டு பேர் ஏவிய மனித உரிமை மீரலின் கொடுமையையும் படம் பிடித்து வேற காண்பித்தார்கள்.

காலையில் கையில் உணவை வைத்து கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த செய்தியை பார்த்த பின் என்னால் உணவருந்த முடியவில்லை. எழுந்து விட்டேன். பீஹாரில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துவிட்டு ஓட பார்த்தவனை பிடித்து உதைத்த காட்சியை கல் மணம் கொண்டவர்கள் கூட பார்க்க முடியாது.

அவர் கை பின்னால் கட்டப்பட்டிருந்தது, சுத்தியும் நின்று கொண்டிருந்தவர்கள் காலாலேயே அவரின் முகத்தில் உதைத்து சித்தரவதைப் படுத்தி, ஓட விட்டு பெல்ட்டால் உதைத்து, ஹ்ம்ம்ம்...என்னால் பார்க்க முடியவில்லை.

இதை எல்லாம் கேள்விப்பட்டு அங்கு வந்த காவல் தெய்வங்கள், கடமை உணர்வோடு தண்டனை கொடுக்க தயாரானார்கள். ஒரு பைக்கில் அந்த ஆளின் காலை கட்டி இழுத்து செல்ல...பின்னால் அந்த ஊர் மக்கள் அவரை உதைத்துக் கொண்டே செல்கிறார்கள்.

இதற்கும் பறித்த சங்கிலி மீட்கப்பட்டு விட்டது. இதற்கு பிறகும் அவருக்கு இவ்வளவு கொடுமை. மனித உரிமை மீறல் என்ற ஒன்று நம் காவல் தெய்வங்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே.

இப்பொழுது அவர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த பணி நீக்கம் என்ன பெரிதாக செய்துவிடப் போகிறது.

இதுவே நம்ம சன்ஜய் தத் சிறைய விட்டு வெளியே வந்தப்ப வெட்கம் கெட்டுப் போய் அவரை அனைத்து, கை கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொண்டார்கள் இதே காவல் தெய்வங்கள்.

இவர்களை திட்டக் கூட நா கூசுகிறது.

Monday, August 27, 2007

''Couvade syndrome'' - ஆண்களுக்கு வரும் மசக்கை

(டிஸ்கி - டாக்டரம்மா....நான் சொல்ற மேட்டர்ல தப்பிருந்தா கண்டுக்காம ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு விட்டுடுங்க.....சபையில் கால வாரி விட்டறாதீங்க.)

மாப்பிள்ளைகளெல்லாம் ஒரு உம்மைய சொல்லோனும். ..பொய் சொல்லாம, வெக்கப் படாம சொல்லனும். Yester year மாப்பிள்ளைகளுக்கெல்லாம் டைம் தர்ரேன் யோசிச்சு சொல்லுங்க.

இது தான் மேட்டர். தங்கமணி கருவுற்றிருக்கும்போது, இந்த மார்னிங்க் சிக்னஸ் னு சொல்லுவாங்களே அது உங்களுக்கும் இருந்துச்சா..

அட அமாங்க நெசமாத்தான். மனைவி கர்பமா இருக்கும் போது, மூனாவது வாரத்துல இருந்து கணவனுக்கும் இது மாதிரி '' morning sickness'' வரும்னு ஒரு கருத்து இருக்கு. இதுக்கு பேர் ''Couvade syndrome''. Couvade (to hatch) ஒரு ஃப்ரென்ச் வார்த்தை. ( இது தான் எங்களுக்கு தெரியுமேனு சொல்றவுங்க, உங்களுக்கு இப்படி இருந்துச்சானு மட்டும் சொல்லுங்க)

இது மேலை நாடுகள்ல தான் நிறைய இருக்குன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. அது எப்படி??....அப்ப நம்ம ஊர்ல ரங்கமணிக எல்லாம் தங்கமணிகள் மேல அக்கறை இல்லையா என்ன?...நீங்க தான் சாமி சொல்லோனும்.

Now jokes apart..இப்ப இந்த சின்றோம் இன் அறிகுறி என்னன்னு பார்க்கலாம். எடை கூடுதல், வயிறு குமட்டல், தூக்கம், அதிகமான பசி போன்ற மாற்றங்கள் கணவனுக்கு ஏற்படுமாம்.

இப்படி ஒன்னு இருக்குறத பலர் ஒத்துகறதில்லை. ஆனா ஆதாரத்துக்கு ஆராய்ச்சி முடிவுகள் பல இருக்கு. இதுல முக்கியமான விஷயம் பல நாட்கள் குழந்தைகள் இல்லாம இருந்து பிறகு இந்த பாக்கியம் கிடைத்த ஆண்களுக்கு இது மாதிரி பெரும்பாலும் நடக்கும்னு ஆராய்ச்சி சொல்லுது.

மனைவிக்கு கர்பகாலத்துல ஏற்படுற சில கஷ்டங்களைப் பார்த்து ஆண்களுக்கு மனசுல ஏற்படுற கலக்கம் தான் இதுக்கு அடிப்படை காரணம்னு கருதப்பட்டாலும்..இன்னும் நிறைய காரணங்கள் இருக்கு.

இந்த சிம்பதி பெயின் (Sympathy pain) உளவியல் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ஹார்மோன் மாற்றங்களும் இருக்கத்தான் செய்கிறது என்றும் சில ஆராய்ச்சிகள் சொல்லுது. உளவியல் அல்லாமல் உடலியல் மாற்றங்களினால் மட்டுமே ஏற்படக்கூடிய அறிகுறிகளும் பலருக்கு ஏற்படறதுனால இதுல ஹார்மோன்களுக்கும் பங்கு இருக்குன்னு சொல்றாங்க. தன்னோட வாரிசுங்குற ஒரு பெருமை, தானும் இதுல பங்கெடுத்துக்கனும்னு ஆசை இது போல பல காரணங்கள்.

ஆராய்ச்சியில கலந்துக்கிட்ட கணவன்மார்கள் '' எங்களுக்கும் இது மாதிரி மாற்றங்கள் ஏற்பட்டது பெருமையா இருக்குது'' ன்னு சொல்லி இருக்காங்க. இது மனைவிமார்களுக்கு தெரிய வரும்போது ரொம்ப சந்தோஷப் பட்டாங்களாம்.இது பல ஆராய்ச்சியில நிருபனம் ஆகியிருந்தாலும் இதற்கான சரியான காரணம் ஒரு முடிவுக்கு வராமதான் இருக்கு.

Thursday, July 19, 2007

Memory Triggers


நம் மனதில் தோன்றும் பெரும்பாலான நினைவுகள் தானாகவோ ஏதேச்சையாகவோ ஏற்படுவதில்லை. No memory, however perfect, operates in a vacuum என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. அந்த நினைவுகள் எழ நமக்கு தூண்டுகோளாக இருப்பது நாம் பார்க்கும் பொருளாகவோ, கேட்கும் சப்தமாகவோ, ஏதாவது சுவையோகவோ இருக்கலாம்.

நம் அன்றாட வாழ்வில் நாம் காணும் சில பொருட்கள், கேட்கும் பாடல்கள், குறிப்பிட்ட சத்தம், நறுமணம், நிகழ்வுகள் போன்றவை, நாம் மறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும், நம் ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும், சில பல உணர்வுகளை வெளிக்கொணர்வது உண்டு. நம்மை அதிகமாக பாதித்த அல்லது சந்தோஷத்தை கொடுத்த சில நிகழ்வுகளுக்கு தொடர்புடைய விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதை நாம் மீண்டும் எதிர்கொண்டால் நம்மையே அறியாமல் நாம் பழைய நினைவுகளுக்கு சென்றுவிடுவோம்.

நம் மூளையில் இருக்கும் Amygdala என்னும் ஒரு விசஷே பகுதி, நமக்குள் எழும் உணர்ச்சிகளை பதித்து வைத்து அவற்றை கட்டுப்படுத்துகிறது. நாம் சுவாசிக்கும்போது, நறுமன நுண்அணுக்கள் Amygdala வுக்கு நேரடியாக செல்வதால், நறுமணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள், மற்ற புலன்களை விட அதிக சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. Memory Triggers எனப்படும் இந்த நினவு தூண்டல்களிலேயே, நறுமணத்தினால் ஏற்படும் உணர்வே அதிக தெளிவான, உணர்ச்சி பூர்வமான நினைவை உண்டு செய்பவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இது நம் எல்லோருக்கும் ஏற்படும் ஒரு அனுபவம்.

அது போலத்தான் எனக்கு இந்த ரோஜா பூவின் நறுமணம். ரோஜாமணம். ஹ்ஹ்ம்..எனக்கு அப்பாவோட மரணத்தை நினைவு படுத்தும். அவர் மரணம் பம்பாயில் ஏற்பட்டதால் உடலை கோவைக்கு எடுத்து வர 24 மணி நேரம் ஆனது. இந்த 24 மணி நேரமும் அவர் படத்திற்கு போட்ட ரோஜா மாலை மற்றும் மலர் வளையங்களின் ஊடே உட்கார்ந்து கொண்டு இருந்ததால், அந்த ரோஜா மணம் என் துக்கத்துடன் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது. அத்ற்கு பின் எனக்கு ரோஜா வாசனை வந்தாலே மனம் பட பட என்று அடித்துக் கொள்ளும்.

பெங்களூர் NIMHANS இல் முதுநிலை பட்டப் படிப்பு பயிற்சியின் போது, ஒரு பெண் சிகிச்சைகாக வந்திருந்தாள். திருமணம் ஆகி 3 மாதம் ஆகியும் அந்த பெண் தாம்பத்திய உறவிற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இது உளவியல் சம்பத்தபட்ட ஒன்றாக கருதியும், அவள் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டாள்.

நாள் முழுக்க கணவனிடம் அன்பாக பேசி பழக முடிந்த அவளுக்கு இரவு நேரத்தில் மட்டும் அவரிடம் ஒரு வித வெறுப்புடனே நடந்து கொண்டிருக்கிறாள். உடல் ரீதியாக ஆரோக்கியமாகவே இருந்தாள் அவள். பத்து நாள் கலந்துரையாடலுக்கு பிறகு தான் தெரிய வந்தது அவளின் உண்மையான பிரச்சனை.

அவளுக்கு ஏதாவது கசப்பான அனுபவம் நடந்து இருக்கும் என்ற கோணத்தில் கேள்விகள் கேட்ட போது சில உண்மைகள் தெரிய வந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது பெண்களிடம் அத்து மீறி பேசி தவறாக நடக்க முயன்ற அவளின் ஆசிரியர் உபயோகித்ததை போல ஒரு வாசனை திரவியத்தை கணவனும் உபயோகப் படுத்துகிறான். இதனால் அவன் அருகில் வரும் போதெல்லாம் அவளுக்கு அந்த ஆசிரியரும் அவர் நடந்து கொண்ட விதமும் நினைவிற்கு வர, அவளால் தாம்பத்திய உறவில் ஈடு பட முடியவில்லை. இதை அவளே உணர்ந்த பின்னர் அந்த நினைவுகளில் இருந்து வெளியே வர அவளுக்கு எளிதாக இருந்தது.

நறுமண நுண் அணுக்களின் சமிக்ஞையால் ஏற்படும் இது போல உணர்வுகள் 'Proustian Phenomenon' என்று அழைக்கப்படுகிறது.

சரி இப்போ உங்களுக்கு இது மாதிரி "Memory Triggers" ஏதாவது இருந்தா அத இங்க எழுதுங்க மக்களே. இல்லைன்னா தனிப் பதிவா போடுங்களேன்.

உதாரணத்துக்கு சில Memory triggrs..
பாப் கார்ன் வாசனை வந்தா, நமக்கு சின்ன வயசுல தியேட்டர்ல படம் பார்த்தது நினைவிற்கு வருதில்ல?....

பசும் புல்லின் மணம்.
புதுத் துணியின் மணம்.
ஏதாவது பாடல் வரிகள்/இசை/குறிப்பிட்ட சத்தம்.

குறிப்பிட்ட பொம்மை.

தமிழ் தாய் வாழ்த்து.

Tuesday, July 17, 2007

புதிர் மனிதர்கள்

நேற்று காலையில கேபின் கதவ படார்னு திறந்துட்டு ஒரு அம்மா உள்ள வந்தாங்க. உள்ள வந்த அப்புறம் மீண்டும் வெளியே போய், உள்ள உக்கார்ந்துட்டு இருக்குறது நான் தானான்னு பெயர் பலகையை பார்த்து உறுதி பண்ணீட்டு, சுனிதா சிங் அனுப்பிச்சாங்க....உங்க கிட்ட பேசனும்னு சொல்லீட்டு அவங்களே சேர் இழுத்து போட்டு உக்கார்ந்துட்டு...எனக்கு ஒரு உதவி வேனும், செய்வீங்களான்னு ஒரே பதட்டம்.

நான் முதல்ல உட்கார சொல்லி குடிக்க தண்ணி குடுத்து ஆசுவாசப்படுத்தினேன். நான் தண்ணி கேக்கவேயில்லியே அப்படீன்னு ஆரம்பிச்சாங்க.'' என் பையனுக்கு எதிலெயும் ஆர்வம் இல்லை. படிக்க மாட்டேங்குறான், யாரு கிட்டேயும் பேச மாட்டேங்குறான், எத பார்த்தாலும் பயம், கோவம், எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை, அவன் ரொம்ப ப்ரில்லியன்ட், நல்ல மனசு, ஆனா என்னமோ இப்படி ஆயிட்டான், அவன எப்படியாவது சரி பண்ணனும்னு அழுக ஆரம்பிச்சுட்டாங்க

நானும் என் அலுவலக நண்பர்களும் அந்த அம்மாவ சமாதனப் படுத்தி, முதல்ல பதட்டப் படாம இருங்க, கண்டிப்பா நாங்க உதவி செய்யறோம்னு சொல்லி அமைதி படுத்தினோம். ஆனா அந்த அம்மா ஹிந்தியிலேயும், பஞ்சாபியிலேயும் மாறி மாறி பேசறத நிறுத்தவேயில்லை.

பையன் என்ன படிச்சு இருக்கான்னு கேக்கவே, +2 ன்னு சொன்னாங்க. ஓ சின்ன பையன் தானே கவுன்சலிங்க் குடுத்தா சரி ஆயுடும்னு சொன்னா, அந்த அம்மா ''என்ன சின்ன பையனா..? 26 வயசு பையன் சின்ன பையனா?" ன்னு கேட்டு கோவப்பட்டாங்க. எங்களுக்கு எப்படி தெரியும் 26 வயசுன்னு? சரி எதோ மனக் கஷ்டத்துலே இருக்காங்கன்னு நாங்களும் பேசாம இருந்தோம்.

சரி சின்ன வயசுல அவன பாதிக்கற மாதிரி ஏதாவது நடந்ததான்னு கேட்டா. அப்புறம் சொல்றாங்க மெதுவா. அவன் பிறந்தது ஈரான்ல, அதுக்கு அப்புறம் கனடாவுல இருந்தோம், அப்ப சில குடும்ப பிரச்சனைகள், எனக்கும் என் கணவருக்கும் எப்பவும் பிரச்சனை னு சொல்லி அவங்க கணவர் பத்தி புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க.

கொஞ்ச நேரம் கேட்டுட்டு நான் சொன்னேன், ''மேடம், உங்களுக்கு கண்டிப்பா நாங்க உதவி செய்யறோம், ஆனா இதுக்குன்னு தனி டிபார்ட்மென்ட் இருக்கு, நானே உங்களை அங்க கூப்டுட்டு போறேன், Clinical Psychologist இருக்காங்க அங்க போலாம்னு சொன்னா,

''என்ன நீ என்ன தட்டி கழிக்க பார்க்குறே,அங்க எல்லாம் போக என் பையன் ஒன்னும் பைத்தியம் இல்லை, நான் மனசு விட்டு பேசனும் அப்பதான் உங்களுக்கு புரியும், கேக்க முடியுமா முடியாதா'' ன்னு பேப்பர் வெயிட்ட டமால்னு கீழே போட, சரி சரி சொல்லுங்கன்னு சொன்னேன். பாரு என் பையன் வெளியே நின்னுட்டு இருக்கான். அவனுக்கு உள்ள வர பயம். முதல்ல நான் பேசீட்டு அப்புறம் அவன கூப்பிடலாம்னு தான் அவனை வெளியவே விட்டுட்டேன். இது தான் பிரச்சனைனு மீண்டும் அவங்க முதல்ல சொன்ன விஷயத்த சொல்ல ஆரம்பிச்சாங்க.

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்னு கேட்டேன். அதுக்கு அவங்க எனக்கு ரெண்டு பசங்க, இரட்டை குழ்ந்தைகள்னு சொன்னாங்க. என் அலுவலக நண்பர் ராகுல், '' அப்ப இன்னொரு பையன் என்ன பண்றார். அவர் நல்லா இருக்காரா? 26 வயசுன்னா அவரு இப்ப ஏதாவது வேலையில இருக்கனுமே'' ன்னு கேட்டார், அவன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்னு அடுத்த குண்ட தூக்கி போட்டாங்க.

எங்களுக்கு ஒன்னும் புரியலை. ஆனா ஏதோ பிரச்சனைல இருக்காங்கன்னு மட்டும் புரிஞ்சது. ஆர்வக் கோளாறுல ராகுல் 'அது எப்படி' ன்னு கேக்கவே அந்த அம்மா, " இங்க பார்..நான் பெரிய பையன பத்தி பேசத்தான் வந்து இருக்கேன், அவன பத்தி மட்டும் பேசுங்க, ஏன் தேவை இல்லாத கேள்விகள் கேக்கறீங்க"....இதக் கேட்டுட்டு ராகுல் கப்சிப்.

நான் ''சரி சரி...சாரி மேடம்...சொல்லுங்க...உங்க வீடு எங்க இருக்கு'' ன்னு கேட்டேன், கிரேட்டர் கைலாஷ்ல இருக்குன்னாங்க.

இதக் கேட்டுட்டு நான் பேசாம இருந்து இருக்கலாம்.....''கிரேட்டர் கைலாஷ் பார்ட் ஒன்னா, பார்ட் டூவா ன்னு கேட்டேன் ( GK- 1 & GK-2 ன்னு ரெண்டு இடம் இருக்கு). இத்தன டீடெய்லா கேட்டு நான் என்ன பண்ணப் போறேன்..அதான் விதி வலியது...பிரச்சனைய தேடி போய் வாங்குறது தான் நம்ம வழக்கம்

வந்ததே கோபம் அந்த அம்மாக்கு. ''அதான் GK-1 னு தானே சொன்னேன், எதுக்கு நீ மறுபடியும் கேக்குறே, பாரு இப்படித்தான், என் பையனையும் முட்டாள் தனமா கேள்வி கேக்குறதுனால அவனுக்கு கோவம் வருது, ஏன் நீங்க எல்லாம் இப்படி இருக்கீங்க?..ன்னு கேட்டாங்களே பார்க்கலாம்.

ராகுல் அவங்ககிட்ட...''மேடம் நீங்க GKனு தானே சொன்னீங்க...அதான் கேட்டோம்''...அந்த அம்மா....''அப்ப நான் பொய் சொல்றனா...நீங்கள்ளாம் படிச்சவங்களா...be professional''.

ஆஹா இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லை போல இருக்குன்னு நினச்சுட்டேன். ராகுல் வேற என்னை பார்த்து முறச்சுட்டு உட்கார்ந்து இருக்கான்...பிரச்சனை யாருக்கு பையனுக்கா, அம்மாக்கான்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு.

அப்புறம் பக்கத்துல வந்து தோள் மேல கை போட்டு " பாருங்க மேடம், உங்களுக்கு உதவறதுக்கு தான் நாங்க இங்க இருக்கோம். ஆனா கவுன்சலிங்க் டிபார்ட்மென்ட் இன்னொரு இடத்துல இருக்கு.

நாங்க எய்ட்ஸால பாதிக்கப் பட்டவுங்களுக்காகவும், ஊனமுற்றோர்க்காகவும் சில களப்பணிகள் செய்யறோம்..அவ்வளவு தான்னு சொன்னேன் மேலும் " Our Psychologist sits in another room, i will take you there" ன்னு சொன்னா அந்த அம்மா.." so if I want your help, I should have HIV is it?...otherwise I should be a handicap?. you people want to escape when you really meet live cases. you are hippocrates, good for nothing னு சகட்டு மேனிக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க.

அது வரைக்கும் ஆர்வக் கோளார்ல இருந்த ராகுலும், அபிஷேக்கும் எழுந்து வெளியே ஒடியே போய்ட்டாங்க.

நான் தொலைஞ்சேன்னு நினச்சுட்டு மீண்டும் பக்கத்துல உக்காந்து எடுத்து சொன்னேன். எதுக்காக உளவியல் நிபுனர பார்க்கனும்னு. ஒரு வழியா அவங்களுக்கு புரிய வச்சு உளவியல் நிபுனர பார்க்கிறதுக்கு ஒத்துக்க வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயுடுச்சு.

எனக்கு ''இன்னைக்கு நேரம் ஆயுடுச்சு, நாளைக்கு வந்து பார்க்குறே''ன்னு சொல்லிட்டு வேகமா போய்ட்டாங்க.

எங்க கிட்ட பேச்சீட்டு இருக்கப்பவே ஃபோன் வந்துட்டே இருந்துச்சு... பையனும், கணவரும் ஃபோன் பண்றாங்கன்னு சொன்னாங்க. அவங்க கிட்ட நான் ஆபீஸ்ல இருக்கேன்...இதோ வந்துடறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க. உண்மையான பிரச்சனை என்ன, யாருக்குன்னு தெரியலை?.

ஆனா குடும்பத்தில ஏதோ பிரச்சனை இருக்கு....ஹ்ம்ம். மறுபடியும் அந்த அம்மாவ சந்திச்சு பேசனும். நிஜமாவே அப்படி பிரெச்சனையோட ஒரு பையன் இருக்கானா.. இல்லை... இந்த அம்மா கிட்ட தான் பிரச்சனையான்னு பார்க்கனும்.

Tuesday, July 03, 2007

எட்டுனதும் எட்டாததும்

மீண்டும் நான் தானுங்கோவ்....தலை எழுத்து தான்...என்ன பண்ண...இந்த செயின் ஆட்டத்த கொஞ்ச நாளைக்கு நிறுத்து சொல்லுங்கப்பா...நமக்கே மேல் மாடி காலி.

நாலு பேர் நம்மள கூப்டுட்டாங்க, அந்த மரியாதைக்காக இந்த பதிவு.. நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் பத்மா, கவிதா, உஷா, சந்தோஷ் :-))

1) பரதநாட்டியம்.

ஸ்கூல்ல படிக்கும் போது பரத நாட்டியம் கத்துக்கனும்னு ஆசை. எங்க ஸ்கூல்லேயே கத்துக்கலாம்னு டான்ஸ் மாஸ்டர் கிட்ட போய் கேட்டா, பொண்ணு ஒல்லியா இருக்குன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார். ஆனா அழுது, புரண்டு எப்படியோ சேர்ந்துட்டேன் . டான்ஸ் டிராமால நிறைய நகை எல்லாம் போட்டு ராணி வேஷம், சாமி வேஷம் போடனும்னு ஆசை. ஸ்கூல் டேல கலந்துக்கலாம்னா நாம Don Quixsot மாதிரி இருந்ததுனால எந்த வேஷமும் ஒத்து வரலை. இருந்தாலும் பாவம்னு ஒரு வேஷத்த குடுத்தாங்க. என்ன வேஷம்?... தெரிஞ்சக்கனும்னு ரொம்ப ஆவலா இருக்கீங்க இல்ல.. இருங்க இருங்க...

இந்திய வரலாற்றில் தனக்குன்னு ஒரு 'தனி இடத்த' பிடிச்சு இருக்குற ஒரே கதாபாத்திரம். அதாங்க 'சாமரம்' வீசுர பொண்ணு. அதுவும் ராணி யாரு தெரியுங்களா, நம்ம எனிமி. வந்ததே எனக்கு கோபம். என்ன ஆனாலும் சரி நான் சாமரம் வீச மாட்டேன்னு சொல்லிட்டேன். டேன்ஸ் மாஸ்டர் இவ கூட பெரிய வம்பா போச்சேன்னு , ''சரி சரி வள்ளித் திருமணத்துல முருகர் கிழவனா வருவாரே அந்த வேஷம் தான் குடுக்க முடியும். வேனும்னா பண்ணு , இல்லன்னா ஓடிப் போ'' ன்னு சொல்லிட்டார். எனிமிக்கு சாமரம் வீசரதுக்கு இது எவ்வளவோ பெட்டர்னு கிழவன் வேஷம் போட்டேன். எப்படியோ மேடை ஏறி எனிமிய விட ஒசத்தியான பாத்திரத்துல நடிச்சு சாதனை புரிஞ்சுட்டேன்.

2) சைக்கிள் யாத்திரை.
NCCல சேர்ந்து கோவைல இருந்து திருமூர்த்தி மலைக்கு சைக்கிள் யாத்திரை போனது சுவாரஸ்யமான விஷயம். எல்லா காலேஜ் பொண்ணுகளும் சேர்ந்து போனோம். ஜூலை மாசம் வேற, பொள்ளாச்சி தாண்டின பிறகு ஒரே மழை. எங்க க்ரூப் ஒரு 6 பேர் மட்டும் பின்னாடி மாட்டிக்கிட்டோம். எங்க கூடவே ஒரு ட்ரக் வந்துட்டு இருந்துச்சு. அதுல இருந்த NCC ஆபீஸர், ''இதுக்கு தான் கிருஷ்னம்மாள் காலேஜ் பொண்ணுகளே வேண்டாம்னு சொல்றது, இனி அரை மணி நேரத்துல உடுமைலைல இருக்கனும்'' னு மிரட்டீட்டு போயிட்டார். . நாங்க கோவத்துல 'சார் அரை மணி நேரத்துல இருக்கோம் பாருங்க' ன்னு சவால் விட்டுட்டோம். ஆனா எப்படி போறதுன்னு தெரியலை.. இன்னும் ரொம்ப தூரம் இருக்கு. கால் வலியில சைக்கிள் மிதிக்கவே முடியலை. ஆனாலும் போயிட்டோம். எப்படி?.எத்தன லாரி போகுது அந்த ரோட்ல.. :-)) ..எங்கள பார்த்த அபீஸர், எப்படிம்மா இவ்வளோ சீக்கிரம் வந்தீங்க, நிஜமாவே சாதனை தான்னு ஒரே பாராட்டு மழை.


3) நம்ம தமிழ் புலமை.

தமிழ்ல எழுதறப்போ இந்த ழ ல எப்பவும் நமக்கு பிரச்சனை தான். வல்லினமா, மெல்லினமா இடையினமான்னு கேக்க தெரியாது. ஸ்கூல படிக்கும் போது அண்ணா கிட்ட, "எந்த ள/ல?... School க்கு வர்ர ள வா இல்ல lizard க்கு வர்ர ல வான்னு கேட்டு, அவர டென்ஷன் படுத்திய புத்திசாலி. நீங்க எல்லாம் என்ன பாவம் பண்ணீங்களோ, நானும் தமிழ்ல எழுதி, அத நீங்க எல்லாம் படிச்சி, 2006 ஆம் ஆண்டு Indi blogs லிஸ்ட்ல வேற நம்ம பிளாக் வந்ததும் எனக்கு ஹார்ட் ஆட்டாக் வந்துடுச்சு. எனக்கு சாதனை..உங்களுக்கு வேதனை.

4) எழுத வந்ததே பெரிய விஷயம் இதுல போன வாரம் நட்சத்திரம் வேற. எழுத வந்த புதுசுல நாம் எல்லாம் எந்த காலத்துல நட்சத்திரம் ஆகப் போறோம்னு நினச்சதுண்டு.

இப்ப நம்ம மேட்டர்

5) பிரதீபா திட்டம்- ஆசியாவிலேயெ முதல் முறையா பெண் மதத் தலைவர்களுக்கு பயிற்சி கொடுத்து எய்ட்ஸ் விழிப்புணர்வுல ஈடுபடுத்துற ஒரு திட்டத்த ஆரம்பிச்சு இருக்கேன். பொது மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் 250 பெண்களை அடையாளம் கண்டு, பயிற்சி குடுத்து இருக்கேன். இந்த வருஷ கடைசிக்குள்ள இன்னும் 250 பெண்களை அடையாளம் கண்டு பயிற்சி கொடுக்கனும்.

6) எச்ஐவி/ எய்ட்ஸ் பற்றிய குறும்படம்- சமீபத்துல சந்தோஷத்தை கொடுத்தது, நான் ரொம்ப நாளா எதிர் பார்த்திருந்த ஒரு திட்டம், UNICEF மூலமா கிடைச்சு இருக்கு. எச்ஐவியால பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு குறும்படம் தயாரிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சு இருக்கு. அதற்கான பணியும் துவங்கியாச்சு.

7) எட்டாத ஆசை ஒன்னு இருக்குங்க. பாடனும்னு எனக்கு ஆசை....அட இருங்க இருங்க..ஓடாதீங்க...ரிலேக்ஸ். முதல்ல என் கினி பிக் லட்சுமி கிட்ட பாடி காமிச்சுட்டு அப்புறம் தான் உங்க கிட்ட வருவேன். அதுனால யாரும் ஓட வேண்டாம்.

இன்னும் என்னத்த சேர்த்தறது..டான்ஸ்ல இருந்து உடான்ஸ் வரைக்கும் எல்லாத்தையும் சேர்த்தாச்சு.....அவ்ளோ தாங்க...பொழச்சு போங்க.

Sunday, July 01, 2007

நன்றி நண்பர்களே

நட்சத்திர வாரத்திற்கான அழைப்பு வந்ததும் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன். நட்சத்திரமா இருக்குறப்பவாவது உறுப்படியா எழுதனும்னு தான். ஒரு மாசத்திற்கு முன்னாடியே மடல் வந்து இருந்தாலும்..என்ன எழுதறது..என்ன எழுதறதுன்னு ஒரே கன்ப்யூஷன் ஆஃப் இந்தியா. ஒரு வழியா ஒரு வாரத்த தள்ளிட்டேன். முதல் நாள் இருந்த படபடப்பு அன்னைக்கு சாயந்திரமே போயிந்தி...:-))

ஆனா மனசுக்கு நிறைவான பதிவுகள் எழுதுனதுனால ரிலேக்ஸ்டா இருந்த மாதிரி தான் இருக்கு. நான் விளையாட்டா ஒரு வாரத்த தள்ளிட்டேன் உங்களுக்கு எப்படி இருந்துச்சோ....

என்னையும் நட்சத்திரமாக்கிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.

பின்னூட்டங்கள் மூலமா என்னை திக்கு முக்காட வைத்த அன்புள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.

வித்தியாசமான அனுபவம் இந்த ஒரு வாரம்....

நன்றி நண்பர்களே.

Saturday, June 30, 2007

மீனாட்சிக்கு உதவ

மீனாட்சிய உங்களுக்கு எல்லாம் தெரியும்.....அவங்கள பற்றிய அறிமுகம் தேவை இல்லைனு நினைக்குறேன்...

சென்ற முறை தில்லி வந்து இருந்தப்போ சில திட்டங்கள் பற்றி என்கிட்ட பகிர்ந்துக்கிட்டாங்க.... கோவைல எச்ஐவியால பாதிக்கப்பட்டோர்களின் கூட்டமைப்பு அங்கங்க நடந்துட்டு இருக்கு. இந்த கூட்டமைப்பில் இருந்தவங்கெல்லாம் ஒன்னா சேர்த்து இப்ப ஒரே கூட்டமைப்பா செயல் படறாங்க. இதன் மூலமா, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சில தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தனும்னு திட்டம். இவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு சிலரின் உதவிகளை நாடி இருக்காங்க. வேண்டிய உதவிகள் கிடைக்க வில்லை.

மீனாட்சி பகிர்ந்து கொண்ட பதிவுல கண்டிப்பா ஏதாவது செய்வோம்னு நம்மில் பலர் சொன்னோம்.. சும்மா பேசியும், அனுதாப வார்த்தைகளை கொட்றதுனாலேயும் எந்த பலனும் இல்லைங்கறது உங்களுக்கே தெரியும். தனி மடல் மூலமாகவும் என்கிட்ட சிலர் உதவறதா சொல்லி இருக்காங்க . இத எப்படி செய்யலாம் அப்படீன்னு யோசனை கேட்க தான் இந்த பதிவு.

இப்ப மீனாட்சி மற்றும் அவருடன் சேர்ந்து பணியாற்றுபவர்களின் திட்டம் என்னன்னா...குழந்தைகள் கல்வி, மருத்துவ செலவு....கணவனை இழந்த பெண்கள் சொந்த கால்ல நிக்க கம்யூட்டர் பயிற்சி வகுப்புகள்..இது தான் உடனடி தேவை.

மற்றொன்று இந்த கூட்டமைப்பின் இனையதளத்தை மேம்படுத்தி கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பின்னும் மற்றவர்களுக்காக உழைக்கும் இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.

உங்க கருத்துக்களை இப்ப நீங்க சொலுங்க..

நேற்று பேசும்போது பாதிக்கப்பட்ட தமிழரசி என்கிற பெண்ணின் உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கிறதா சொன்னாங்க. இப்ப மருத்துவமனையில இருக்காங்க. தமிழரசி விரைவில் குணமடைய பிரார்திப்போம்.

மிஸ்.அனாரா


அனாரா குப்தா 2004 ஆம் ஆண்டின் மிஸ்.காஷ்மீர்.


2004 ஆம் ஆண்டு ஒரு போர்ன் ஃபிளிம்ல நடிச்சார்னு குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டார். 2 வருஷத்திற்கு பிறகு ஜம்மு ஹைகோர்ட், படத்துல இருக்குறது அனாரா இல்லைனு தீர்ப்பு குடுத்தாலும், கீழ் கோர்ட் மீண்டும் விசாரனைக்கு உத்தரவு போட்டது. இன்னும் இந்த 'விசாரனை' நடந்துட்டு இருக்கு.

ஆனா இந்த ரெண்டு வருஷத்துல அந்த பொண்ண உண்டு இல்லைனு பண்ணிட்டாங்க நம்ம காவல் தெய்வங்களும், நீதி தேவர்களும். படத்தில் நடிச்சது இந்த பொண்ணு தான்னு வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்துச்சு. சினிமால வருமே, ஒரு பொண்ண விசாரனை செய்யும் முறை, அப்படியே தான் நடந்திருக்கும் போல. அனாரா முன்னாடியே அவங்க அம்மாவ அடிச்சு, தம்பிகளை அடிச்சு, கொலை பண்ணீருவோம்னு மிரட்டி வலுக்கட்டாயமா சில வாக்குமூலத்த சொல்ல சொல்லி இருக்காங்க. பத்திரிக்கை ரிப்போர்டர்கள் கிட்ட பேட்டி குடுக்கறப்போ சில விஷயங்களை மனசு வீட்டு பேசீட்டு இருக்கும்போது, பின்னால இருந்து போலீஸ் பேனாவால அனாராவ குத்திட்டே இருந்தாங்களாம்.

அந்த படத்துல இருக்குறது அந்தப் பொண்ணு தானான்னு பார்த்து சொல்லுங்கன்னு சன்டிகர்ல இருக்கும் ஃபோரன்சிக் துறைக்கு (Central Forensic Science Laboratory) சொல்ல, அங்க இருந்த புண்ணியவான்களுக்கு கூலியோட கரும்பு திண்ண கசக்குமா, இந்த பிரோஜக்ட ரொம்ப 'அக்கறையோட' பார்த்து, அலசி ஆராய்ச்சி செய்து '' நாங்க படத்த ''frame by frame" பார்த்தோம் கண்டிப்பா அது அனாரா தான்னு தங்கள் கண்டு பிடிப்பை கோர்டுக்கு ரிப்போர்ட் அனுப்பிச்சாங்க.

''Sources at the CFSL said scientists had examined 'frame-by-frame' the pornographic CD sent by the Jammu and Kashmir police on January 23 before coming to the conclusion that the girl in the film was Anara.''

ஆனா நீதி தேவர்களுக்கு இந்த பதில்ல திருப்தி இல்லை. இங்க வட இந்தியாவுல இப்படி சொல்லிட்டாங்களே, ஒரு செகண்ட் ஒபீனியனுக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வச்சாங்க. அங்க இருந்த கடமை வீரர்களும், ''Frame by Frame" பார்த்து, சீச்சீ இது அனாரா இல்லை.. இது வேறு, அப்படீன்னு ரிபோர்ட் குடுத்துட்டாங்க.

In Hyderabad, the Andhra Pradesh Forensic Science Laboratory Director K P C Gandhi said "We had compared the CD as per forensic biometric studies from head to toe, including the fingers, toes and the hair line. We found the lady featured in the blue film sent by the J&K police was not Anara."

''The report was of three pages, but many documents, including still photographs, had been attached with the report, the sources added.''

இப்ப கோர்டுக்கு குளப்பம் ஆயுடுச்சு. தெற்கும் வடக்கும் சரியில்லை எதுக்கும் இன்னொரு ஒபீனியன் கேப்போம்னு குஜராத்துக்கு அனுப்பி வச்சாங்க. (Gujarat Directorate of Forensic Science)

எப்படியோ கோர்ட் 'உத்தரவுப்படி' இப்படி ஒரு சிடிய பார்த்துட்டு என்சாய் பண்ணிட்டு இருக்காங்க ஃபோரன்சிக் மக்கள். இந்த ரெண்டு வருஷத்துல அந்த பொண்ணு என்ன பாடு பட்டிருக்கும், இந்த ரிப்போர்ட் எல்லாம் பத்திரிக்கைல வந்து. . .. ஹ்ம்ம்ம்

ஆனால் மனம் தளராத அனாரா தான் அனுபவிச்ச இந்த கொடுமை எல்லாம் ஒரு சினிமா மூலமா இந்த உலகத்துக்கு சொல்லிட்டாங்க. ஒன்னு விடாம எல்லா நிகழ்வுகளையும் சினிமாவுல கொண்டு வந்திருக்காங்களாம். ''எனக்கு நடந்த கொடுமைகளுக்கு பிறகு வாழக்கூடாதுன்னு தான் இருந்தேன். ஏன்னா நரகம்னா எப்படி இருக்கும்னு இப்ப நான் உணர்ந்துட்டேன். எனக்கு நடந்த இந்த அநியாயம், வேற யாருக்கும் நடக்கக்கூடாதுன்னா, நான் தான் ஏதாவது செய்யனும்னு தான், நானே இந்த படத்துல நடிச்சு இருக்கேன்" அப்படீன்னு சொல்ற அனாரா, படமாக்கும் போது பல இடங்கள்ல நினைவிழந்து விழுந்துட்டாங்களாம்.

ஜூன் 22 ஆம் தேதி வெளிவர வேண்டிய படம், ஜம்முல சிவ சேனா ஆளுக, விசாரனை நடந்துட்டு இருக்கும் போது இந்த படம் வரக்கூடாதுன்னு தடை உத்தரவு வாங்கிட்டாங்க.

எப்படியோ ஃபோரன்ஸிக் டிபார்ட்மெண்டுல வேலை செய்யற எல்லார் கம்ப்யூட்டர்லேயும் இந்த படம் இருக்கும், இன்னும் அவங்க, frame by frame பார்த்துட்டு இருப்பாங்கன்னு பேசிக்கராங்க.


படத்துல நடிச்சது அந்த பொண்ணா இல்லையாங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் கோர்ட், ஒரு பெணணுங்கிற காரணத்துனால நடத்திய இந்த பொது விசாரணையை பார்க்கும் போது மனதில் ஒரு வெறுமை தான் தோன்றுகிறது. இந்த வழக்குக்கு போலீஸ் குடுத்த விளம்பரமும், அனாராவுக்கு நேர்ந்த கொடுமையும் கண்டிப்பா கண்டிக்க வேண்டியவை. வெறும் எழுத்துகளின் தொகுப்பா தான் நமது சட்டம் நமக்கு தெரியுது. அதை உணர்வு பூர்வமா அனுகி, சட்டம் எதற்காக என்பதை தவறு செய்தவர்கு உணர்த்த எத்தனை முறை நம் காவல் துறையும் நீதி துறையும் முயற்சி செய்து இருக்கு?.

Friday, June 29, 2007

குரங்காட்டிகள்


ப்ரீ ஸ்கூல் (Pre-school) வழக்கத்துக்கு வந்த புதுசுல பல எதிர்ப்புகள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பவே உளவியல் நிபுணர்கள் இரண்டரை வயது குழந்தைகளை இப்படி பள்ளிக்கு அனுப்பறது நல்லதே இல்லைனு கருத்து சொல்லியிருந்தாலும், நாளுக்கு நாள் ப்ரீ ஸ்கூல் பல புதுமைகளுடன் இன்னைக்கு வரைக்கும் முளைச்சுட்டுதான் இருக்கு.

நாமும் இது அவசியமான ஒன்னுதான்னு ஏத்துகிட்டு குழந்தைகளை அங்க அனுப்ப ஆரம்பிச்சிட்டோம். இது கூட பரவாயில்லைங்க. நான்கு நாட்களுக்கு முன்னால டீவீயில பார்த்த ஒரு நிகழ்ச்சி. நம்ம மக்கள் உணர்வுகளையும் சுய புத்தியையும் சுத்தமா உபயோப் படுத்தறதில்லைனு முடிவு பண்ணிட்டாங்களானு தோனுச்சு. இப்படியுமா பெண்கள் இருப்பாங்க?.

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் 'Child Genius' ஆகனும்னு கங்கனம் கட்டி அதற்கான முயற்சியில தீவிரமா இறங்கிட்டாங்க. லிட்டில் ஜெம்ஸ் னு ஒரு ஸ்கூல், சென்னைல, குழந்தைகள் தொட்டில்ல இருக்கும் போதே சொல்லிகுடுக்க ஆரம்பிச்சுடறாங்களாம். இவங்களைப் பொறுத்தவரை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொன்னதை உள் வாங்கும் சக்தி அதிகமா இருக்குமாம். அதனால 3 மாத குழந்தைகள்ல இருந்து நாம சொல்லி குடுக்க ஆரம்பிச்சா கண்டிப்பா அந்த குழந்தை பெரிய ஜீனியஸா வர காரண்டி தராங்களாம்.

Flash-cards முறையை உபயோகித்து சொல்லிக்குடுக்குறாங்க. மூணு மாச குழந்தைகிட்ட ஒரு ரெட் அட்டையில ஆப்பிள்னு எழுதி காமிச்சா, அது பேச ஆரம்பிக்கும் போது மீண்டும் கேட்டா, இத நியாபகம் வச்சு கரீட்டா சொல்லிடுமாம். அடக்கடவுளே, இந்த லூசுகளை எல்லாம் என்ன பண்ண.
குழந்தைகள் என்ன பாவம் பண்ணாங்களோ, நம்ம சமுதாயத்தில பிறக்குறதுக்கு. இதுல ஒரு லட்சியத் தாய் சொல்றாங்க என் குழந்தை மற்ற பொம்மைகளை விட இந்த அட்டைகள் கொடுத்தா தான் ரொம்ப ஆர்வமா விளையாடுறான். குழந்தைகள் எத கொடுத்தாலும் ஆர்வமாத்தான் விளையாடும். முக்கியமா பேப்பர், அட்டை போன்றவை கிழித்தா சத்தம் வர்ரதுனால, பொதுவா எல்லாக் குழந்தைகளும் பேப்பர்னா ரொம்ப ஆர்வமா விளையாடுவது வழக்கம். இது மாதிரி விஷயங்களை தெரிந்து கொள்ள யாருக்கும் விருப்பம் இல்லை.
மற்றொரு லட்சியத்தாய் இரண்டு ஃபோட்டாக்களை 5 மாச குழந்தை கிட்ட காமிச்சு, '' இதுல அப்துல் கலாம் எது?" அப்படீன்னு கேட்க, அந்த குழந்தையும் தெரிஞ்சு காமிச்சதா இல்லை அகஸ்மாத்தா கலாம் அவர்கள் படத்துல கை வச்சுதான்னு தெரியலை.

இவங்களைப் பொருத்த வரைக்கும் இது ஒரு "uncommon opportunity’ யாம். அத அவங்க உபயோகப் படுத்திக்கிறாங்களாம். இவங்க லட்சிய வேட்கைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.

இந்த மாதிரி அதிபுத்திசாலிக இனிமேல் குழந்தை வயத்துல இருக்கப்பவே சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சுறுவாங்க போல இருக்கேனு நினச்சேன். நினச்சுட்டு இருக்கப்பவே ஒருத்தர் பேசினார். ஏதோ டீவில பார்த்தாராம், வயத்துல இருக்கும் குழந்தையை கூட நாம் ஜீனியஸ் ஆக்கலாம்னு. அதனால கர்ப்பமா இருக்குற அவர் மனைவி இப்ப இங்க வந்துட்டு இருக்காங்களாம். தலைய எங்க போய் முட்டிக்கறதுன்னு தெரியலை.

இந்த ஸ்கூல் நடத்தீட்டு இருக்குற 'அம்மா' சொல்றாங்க, இவங்க சொல்லி குடுக்குற முறையை தொடர்ந்து சொல்லிக் குடுத்தா, 16 வயசுல கத்துக்க வேண்டிய விஷயங்களை 5 வயசுலயே குழந்தை ரொம்ப சுலபமா கத்துக்குமாம்.

சமீபத்தில் நம்ம மணப்பாறை டாக்டரின் மகன் சிசேரியன் செய்ததும் விளைவாய் அவனது பெற்றோர் இன்று கம்பி எண்ணும் அவலமும், நமது சமூகம் முழுக்க இப்படிப்பட்ட பெற்றோரால்தான் நிரம்பியிருக்கிறது என்பதை எடுத்து காட்டுகிறது.

உளவியல் ரீதியாக தற்போதுள்ள இளம் பெற்றோர் ஒருவகையான வெறியுடன் அலைகின்றனர் என்று சொன்னால் மிகையில்லை. போட்டிகள் நிறைந்த உலகத்தில் தங்களால் சாதிக்க முடியாமல் போன கனவுகளை தங்களின் பிள்ளைகளைக் கொண்டு சாதித்துவிட துடிக்கு வக்கிரம் என்றுதான் சொல்லுவேன்.

அடிப்படையில் நாம் அனைவரும் மறந்துவிடும் ஒரு சாதாரண விஷயம், குழந்தைகளுக்கு அந்தந்த வயதுக்கேற்பவே புரிந்து கொள்ளும் சக்தியும் இருக்கும்....இதை எந்த மாயமந்திரத்தாலும், கூர்தீட்டும் பயிற்சியாலும் அதிகரித்துவிட முடியாது. குழந்தைகள் புரிந்து கொள்ளும் எல்லையில் அது குறித்தான நுணுக்கங்களையும், அதை ஆராயும் ஆர்வத்தினை உருவாக்குவதே சிறந்த உத்தியாக இருக்கும். ஆர்வம் வளரும் பட்சத்தில் குழந்தைகளே அதன் அடுத்த படிகளை நோக்கி உற்சாகமாய் நகர்வார்கள்.

அக்கறையான பெற்றோர், தங்களின் குழந்தையின் நிறை குறைகளை நேர்மையாக மதிப்பிடவும், குழந்தையின் விருப்பத்தினையும், ஆர்வத்தினையும் கண்டறிந்து அந்த துறையில் அவன் உயரங்களை அடைய ஊக்குவிக்க வேண்டும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதை செய்கிறோம், தங்களின் சொந்த விறுப்பு வெறுப்புகள் மற்றும் சமூக, பொருளாதார அளவுகோலில் தன்னிச்சையாய் தீர்மாணித்து அதிபுத்திசாலி களாக்குகிறேன் என வற்புறுத்தலும், திணித்தலுமான உளவியல் சித்திரவதைகளும்தான் தொடர்ந்து நடக்கின்றன.

குழந்தைகளின் மீது திணிக்கப்படும் இவ்வகையான அத்துமீறல்கள் அதி புத்திசாலிகளை உருவாக்கிடும் என நினைப்பது அடிமுட்டாள்தனம். நாம் உருவாக்கும் வேலையை விட்டுவிட்டு அவர்களை உருக்குலைக்கும் வேலையை செய்கிறோம் என்பதை அறியாமலே பல பெற்றோர் மேலும் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். சமயங்களில் குழந்தைகள் ஒத்துழைத்துவிட்டால் பெற்றோர் நிதாணமிழந்து விடுவது மணப்பாறை மருத்துவர் விஷயத்தில் கண்கூடு.

குழந்தைகள் திருப்பி கேள்வி கேட்க தெரியாதுங்கிற தைரியத்துல அவங்களை கினி பிக்ஸ் மாதிரி நம்ம மக்கள் உபயோக படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. குழந்தைகளை குழந்தைகளா இருக்கவே விடறதில்லை. குழந்தைப் பருவமும் இப்ப குறைஞ்சிட்டே வருவது வேதனை அளிக்கும் உண்மை.... ஹ்ம்ம்..அந்த மழலை, சிரிப்பு, குறும்பு, விளையாட்டு இது எல்லாம் அந்த அந்த வயசுல ரசிக்காம எப்ப ரசிக்க முடியும்.


Thursday, June 28, 2007

இன்னைக்கு நான் பல்ப் ஆன கதை

இன்னைக்கு கல்லூரியில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி...

இப்ப அட்மிஷன் நேரம்ங்கிறதுனால கல்லூரியில் எப்பவும் கூட்டம். இன்னைக்கு நல்ல மழை வேற. மழை பெய்தா யாரும் கேபின்குள்ள உட்கார மாட்டோம்..எழுந்து வெளியே வந்து இயற்கைய ரசிசுட்டு இருப்போம். அப்படி வெளியே வந்து நின்னுட்டு இருந்தேன் அப்ப அட்மிஷனுக்கு வந்த ஒருத்தர் அகுகில் வந்து நீங்க தமிழா ன்னு கேட்டார். நான் ஆமான்னு சொல்லவே.... அக்கா பொண்ணு அட்மிஷ்னுக்காக வந்தோம்..இந்த கல்லூரி எப்படி...படிப்பு எப்படின்னு விசாரிச்சுட்டு இருந்தார். பின்ன..நீங்க எந்த ஊரு ன்னு கேட்டார். கோவைன்னு சொன்னேன்.

அப்புறம் பேச்சு விளையாட்டு, படிப்புன்னு அவர் படிச்ச காலத்துக்கு போய்.. நான் ஓட்டப்பந்தைய வீரர்...லாங்க் ஜம்ப் சேம்பியன்னு அவர் ஒரே அறுவை. எனக்கு கொஞ்ச நேரத்துல போர் அடிக்க ஆரம்பிச்சுறுச்சு. அவர் கூட வந்த பெண்கள் வேற என்னை விடற மாதிரி இல்லை...அவர் ரொம்ப அளக்க ஆரம்பிக்கவே..காசா பணமா நாமும் சொல்லி வைப்போம்..கொஞ்சம் பொழுது போகட்டும்னு நானும் சொல்லி வச்சேன். நான் கூட பேஸ்கெட் பால் பிளேயர் சொன்னேன்... என்னுடன் வேலை செய்யும் திருச்சியியை சேர்ந்த பெண் நான் ஷாட் புட்ல அப்ப ஸ்டேட் சாம்பியனாக்கும்னு அவள் பங்குக்கு அவளும் எடுத்து விட்டாள்.

நாங்க பேச பேச அவர் "என்ன மருத முழி எல்லாம் சொல்லி முடிச்சாச்சா"" ன்னு கேட்டார். எனக்கு ஷாக்.. இந்த 'மருத முழி' பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு. கொசுவத்தி சுத்தி சுத்தி பார்த்தேன்.. ஆஹா இது நமக்கு ஸ்கூல ப்ரெண்ட்ஸ் வச்ச செல்லப் பேர் ஆச்சேன்னு பொரி தட்டுச்சு.. மனசு பட படக்கவே....முழி முழின்னு முழிச்சேன். அவர் ''என்ன என்னை தெரியலையா?, இதுக்கு மேல என்னால ஓட்ட முடியாது..நான் தான் ஷங்கர்.... 10 ஆம் வகுப்பு வரை உன் கூட படிச்சேன்.. என்னை உனக்கு அடையாளம் தெரியாதுன்னு எனக்கு தெரியும்....ஆனா உண்ண எனக்கு அடையாளம் தெரிஞ்சது..இருந்தாலும் நீ எப்படி தில்லியிலன்னு ஒரு சந்தேகம்...அதான் டெஸ்ட் பண்ணேன்'' னு சொல்லவே..ஆஹா....நம்ம நிலமை இப்படி ஆயுடுச்சேன்னு நினச்சுட்டேன்.

அவருடன் இருந்த பெண்கள் ''உங்களை பார்த்த உடனே கண்டு பிடிச்சுட்டார், நாங்க தான் கோவைல இருக்கவுங்க இங்க எப்படி..நீ யாராவது கிட்ட ஏதாவது கேட்டு வாங்கிக் கட்டிக்க போறே'' ன்னு சொல்லிகிட்டு இருந்தோம், ஆனா அந்த 'மருத முழி' பேர சரியாத்தான் வச்சு இருக்காங்க..நல்லா முழிக்கரீங்க'' னு சொல்லி சிரியோ சிரின்னு சிரிக்கிறாங்க.

ஷங்கர் என்கிட்ட 'நீ பேஸ்கெட் பால் சாம்பியனா...என்ன என்ன கதை எல்லாம் விடறீங்கப்பா'' ன்னு சொல்லி தர்மசங்கடத்துல தள்ளிட்டார். ஆனா இத்தனை வருஷங்கள் கழித்து ஒருத்தர பார்க்குறது சந்தோஷமாவும், ஆச்சிரியமாவும் இருந்துச்சு...ஹ்ம்ம்

நான் நொறுங்கிய பொழுதுகள்...

மிகை ஆர்வம் காரணமாக சமயங்களில் திட்டமிடாமல் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கிறோம். விளைவு பிரச்சனை வரும்போது அதை எதிர் கொள்ள முடியாமல் மன உளைச்சல்.காலம் கடந்த பின்னர் திரும்பிப் பார்த்தால் நாமளா இவ்ளோவ் முட்டாள்தனமா நடந்திருக்கோம்னு நினைச்சி வெக்கமும் வேதனையும் படுவோம்.அப்படி என் வாழ்க்கையில சந்தித்த ஒரு பிரச்சனையை பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது ஒரு பெண்ணால் எனக்கு ஏற்பட்ட இன்னல்கள், அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு, துன்பங்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத வேதனை வடுக்கள். நமக்கு நல்லது செய்தவர்களை எப்படி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதோ அப்படி நம்பவச்சு கழுத்தறுத்த துரோகிகளையும் வாழ்நாள் பூரா மறக்க நினைத்தாலும் முடியறதில்லை.

90களின் ஆரம்பத்தில் ஏதாவது தொழில் துவங்கி பெரிய 'தொழில் அதிபரி' ஆயிடனும்னு புராஜக்ட் எல்லாம் தயாரிச்சு வங்கியில குடுத்து PMRY ல லோன் கேட்டேன்.ஆச்சர்யமான ஆச்சர்யமா ஒரு வாரத்துல குடுத்துட்டாங்க. மாணவர்களுக்கான நோட்டு புத்தங்கள் தயாரிக்கலாம்னு பெங்களூரு போய் நாலஞ்சு பேர பார்த்து மெஷினரி எல்லாம் இறக்குமதி பண்ணி, முதல் வருடமே சுமார் 10 லட்ச ரூபாய்க்கு பள்ளிகளில் இருந்து நோட்டுகளுக்கான ஆர்டர் வந்துச்சு. தலைகால் புரியலை. ஏதோ சும்மா வீட்ல இருக்க பிடிக்காம ஆரம்பிச்சது இவ்வளவு நல்ல வரவேற்பு இருக்கேன்னு சந்தோஷம் ஆயுடுச்சு. இதற்கு பல காரணங்ககள் இருந்தாலும் இரு முக்கிய காரணங்கள், இந்த குறிப்பிட்ட தொழில்ல பெண்கள் யாரும் இல்லாததும் மேலும் நான் அணுகிய பெரும்பாலான பள்ளி தலைமை ஒரு பெண்ணா இருந்ததும்தான்.

முழுக்க முழுக்க labour oriented தொழில் ஆனதால் பணியாட்களை தாஜா செய்ய வேண்டியிருக்கும். நானும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு அவர்கள் தங்குவதற்கு
கம்பெனியிலேயே ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, ஊட்டி, கொடைக்கானல் என பல ஊர்களில் இருந்து ஆர்டர் வந்து குவிந்தது. முக்கியமா தூத்துக்குடியில் தான் அதிகமாக கிடைத்தது. 1994 இல் இருந்து 99 வரை, நான் பெரும்பாலும் தூத்துகுடியில்தான் இருந்தேன் என்று சொல்லலாம். மூன்றாம் ஆண்டே 20 லட்சமும், 4 ஆம் ஆண்டு 30 லட்சம் என டர்ன்ஓவர் உயர்ந்தது.இப்படி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் நான் அவசரப்பட்டு யோசிக்காமல் எடுத்த ஒரு முடிவும் அதன் விளைவும் என் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது என்றால் மிகையில்லை.

அந்த சமயத்தில் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்த ஒரு பெண்ணின் (அவளை பெண் என்று சொல்லக் கூட எனக்கு விருப்பம் இல்லை) நட்பு கிடைத்தது. ஆனால் அவளால் பல லட்சத்தை இழக்கப் போகிறேன் என்று அப்பொழுது தெரியவில்லை.


அந்தப் பெண்,தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஒரு கூட்டமைப்பின் செகரட்டிரியாகவும் இருந்தாள். இந்த கூட்டமைப்பின் மூலமாக உறுப்பினராக இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் சப்ளை செய்யலாம் என்றும், எல்லோருக்கும் ஒரே தரத்துடன் கூடிய நோட்டுக்களை செய்வதால் உற்பத்தி செலவும் குறையும், வருடா வருடம் அதிக சிரமம் இல்லாமல் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கும் என்றும் கூறினாள்.

கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து பேசினோம். இன்று இவன் ஒரு கட்சி ஆரம்பித்து கொள்கைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும்.....................(அ)யோக்கியன்...நன்றாக நினைவிருக்கிறது. பிப்ரவரி 4ஆம் தேதி. பூந்தமல்லிசாலையில் இருக்கும் ஹோட்டல் 'சுதா'வில் தான் சந்தித்தோம். விலையை மிக குறைவாக கேட்டான். நான் முடியாது என்று கூறி புறப்பட்டு விட்டேன். ஆனால் எப்படியோ மீண்டும் பேசி, கொஞ்சம் விலையை ஏற்றி, ஒரு வழியாக ஒத்துக்கொண்டோம். சப்ளை செய்து மூன்று மாத தவனையில் பணம் கொடுப்பதாக ஒத்துக்கொண்டான்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் மார்ச் மாதத்தில் உற்பத்தியை துவங்கினோம். என் நல்ல நேரம் அந்த வருடம் பேப்பர் தட்டுப்பாடு, விலை உயர்வு, பணியாட்களின் பிரச்சனை என்று எல்லாம் சேர்ந்து, ஒத்துக்கொண்ட ஆர்டர்களை எப்படியாவது முடித்தால் போதும் என்கிற நிலைமை. போதாக்குறைக்கு, நான் மேலே குறிப்பிட்ட பெண் தினமும் என் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு எல்லாரையும் அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத கோபம் வந்து அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக துரத்தி அடித்தேன்.

மேலே சொன்ன தலைவருக்கு மட்டும் மொத்தம் ரூபாய் 22லட்சத்துக்கு நோட்டுகள் சப்ளை செய்தோம். இது தவிர வழக்கமாய் வரும் ஆர்டர்கள் சேர்த்து 4/5 மாதத்திற்குள் நிறுவனத்தின் மொத்த டர்ன் ஓவர் 48 லட்சம் ரூபாய்....ஆரம்பத்தில் தருவதாக ஒப்புக்கொண்ட அட்வான்ஸ் தொகையையும் சொன்னபடி கொடுக்காததால் மேற்கொண்டு சப்ளை செய்ய முடியாது என்று கூறிவிட்டேன்.என் நிலைமை எப்படியிருந்திருக்குமென யோசித்துப் பாருங்கள், விழி பிதுங்கி விட்டது.

ஒரு வழியாக சப்ளை செய்து முடித்தேன்.பின்னர் அவளை பார்ப்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஒரு மாதம் இரண்டாகி,மூன்றாகி..பணம் வந்த பாடில்லை. ஆளும் சிக்கவில்லை. அவள் கணவன் கோவை பார் கவுன்சிலில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தான்.அதே சமயத்தில் என் கணவரின் மாமா, பொள்ளாச்சியில் மேஜிஸ்ட்ரேட்டாக இருந்ததினால் அவனை மிரட்டி, நுகர்வோர் கோர்ட் நீதிபதி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதில் மாதம் 5 லட்சம் வீதம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டாள். அவள் சொன்னபடி பார்த்தால் என் பணம் வசூலாக 4 மாதம் ஆகுமே, என்ன செய்வது விதியை நொந்துகொண்டும், வந்தால் போதும் என்று அவள் கொடுத்த காசோலைகளை வாங்கிக்கொண்டோம். காசோலைகளில் அந்த சென்னை ஆசாமி கையெழுத்துதான் இருந்தது.

முதல் காசோலையே போட்ட வேகத்தில் திரும்பியது. சென்னை, புதுக்கோட்டை
, மதுரை என்று அவன் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று போராடி போராடி முதல் 5 லட்சம் வாங்கவே டிசம்பர் அகிவிட்டது. அதற்கு பிறகு பல தடவை சென்னை சென்றும் அவனை பார்க்க முடியவில்லை. அந்த பெண்ணோ தலைவரிடம் பேசிக்கொள்ளுங்கள், நான் வெறும் செகரட்டரிதான் என்று கூறி கை கழுவி விட்டாள்.

பிறகு வழக்கு பதிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக மீத தொகையினை வாங்குவதற்குள் மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தது. அதிலும் ஒன்றைரை லட்சம் ரூபாய் இன்று வரை வரவில்லை.இதன் விளைவாய் இரண்டாம் வருடம் எங்கள் வியாபாரமும் படுத்து விட்டது. 3 வருடங்கள் கழித்து 20 லட்சம் வந்தாலும் அது எந்த விதத்திலும் என் பிரச்சனையையும் தீர்க்கவில்லை, இழந்து போன என் தொழிலையையும் மீட்டுத்தரவில்லை. PMRY ல் கடன் வாங்கி ஆரம்பித்த வியாபாரத்தில் இத்தனை குளறுபடி நடந்தால், என் நிலமை என்னவெல்லாம் ஆகியிருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.

பிறகு எனக்கு தொழிலில் இருந்த ஆர்வமும் வேகமும் சுத்தமாக குறைந்து விட்டது. முதுகலை பட்டத்தை வைத்துக் கொண்டு எதற்கு நாம் இந்த தரித்திர தொழிலில் இருக்க வேண்டும் என்று மனதில் பட்டது. எத்தனை ஆர்வமாய் இந்த படிப்பை படித்தோம்.. எதற்காக இந்த தொழிலை ஆரம்பித்து இத்தனை மன உளைச்சல், வேதனை. என்ன சாதித்துவிட்டோம்


யோசித்தேன்...ஒரே இரவுதான், காலையில் முடிவெடுத்து விட்டேன்.

அடுத்த நாள் சான்றிதழ்களை எல்லாம் தூசுதட்டி எடுத்து, PSG மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் செய்தேன். அங்கு சமுதாய மருத்துவ துறையில், எச்ஐவி/ எய்ட்ஸ் ல் project officer 5 வருடங்கள், பின் தில்லியில், வாய்ப்பு கிடைக்கவே இங்கு வந்து விட்டேன். பிஎஸ்ஜி யில் சேர்ந்ததில் இருந்து இன்று வரை, 8 வருடங்கள், திரும்பி பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றேன். ஆனால் அன்று ஏற்பட்ட காயமும்,வலியும் அதன் வேதனையும் இந்த நிமிடம் வரை பத்திரமாய்தான் இருக்கிறது. தூக்கியெறிய நினைத்தாலும் துலைந்து போகாத தழும்புகளாக எனக்குள்ளேயே இருக்கின்றன.

என் மீதும் தப்பிருக்கிறது, இத்தனை பெரிய நஷ்டம் ஏற்பட்டதற்கு எனது கவனக்குறைவும், அனுபவமின்மையும் காரணம்...அதற்காக என் சக்திக்கு மீறிய விலையையும் கொடுத்துவிட்டேன். ஆனால் என்னால் ஜீரணிக்க முடியாதது என்னை சுற்றி இருந்த பொய் முகங்களை அடையாளம் கண்டபோதுதான். நிஜமாகவே நான் நொறுங்கிப் போய்விட்டேன். நம்மிடம் இருக்கும் பணத்திற்கும், பொருளுக்குமா நம்மிடம் வந்து கொண்டிருந்தார்கள் என்று நினைத்த போது, உண்மையில் நம் மதிப்புதான் என்ன?, என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.


இன்று மீண்டும் அதே ஜென்மங்கள் ஆஹா இருந்தால் இவர்களைப் போல் இருக்க வேண்டும் என்று நமக்கு சான்றிதழ் குடுத்து, பொய்ப் பாசம் காட்டி, வேசம் போடுவதைப் பார்த்தால்.... ஹ்ம்ம்ம் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நாம் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க நேர்ந்துவிடும் ஏராளமான நிகழ்ச்சிகள் வாழ்க்கையில் நடந்தபடியே தான் உள்ளன. இந்த நிகழ்வுகலால் நமக்கு பாதிப்பு ஏற்படும் போது அது துாண்டிவிடும் எண்ணங்களையும் துக்கங்களையும் கேள்விகளையும் கூர்ந்துபார்த்து நம்மை செதுக்கி, உண்மையில் உலகத்தில் நிலையானது எது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால் வேதனையான விஷயம், இப்படி அடி பட்டும் திருந்தாத சில மனிதப் பிறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Wednesday, June 27, 2007

Mr/Mrs.கில்லி


பரபரப்பான வாழ்வியல் சூழலில் சிக்கிக்கொண்ட பின்னர் குடும்பம் என்பது ஆத்மார்த்தமான பினைப்பு என்பதெல்லாம் போய் ஒரு வர்த்தககட்டமைப்பாய் மாறிவிட்ட அவலத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இலக்குகளை நோக்கி ஓடும் விற்பனை பிரதிநிதிகளாய் தம்பதியர் ஆலாய்பறந்தால்தான் குடும்ப தேவைகளை ஓரளவிற்காவது பூர்த்தி செய்ய முடிகிறது. திறமையான விற்பனை பிரதிநிதிக்கு கிடைக்கும் ஊக்கத்தொகை போல திறமையானவர்களின் குடும்பத்தில் போலியான நிறைவும்,மற்ற குடும்பங்களில் நம்பிக்கையின்மையும், சலிப்பும் சச்சரவுகளும் தொடர்கின்றன.

குடும்பத்தின் வெற்றிக்கு இருவரின் பங்கும் சமமானது என்றாலும் புரிந்துணர்வு என்பது ஒத்த அலைவரிசையில் இல்லாவிடில் எத்தனை நிறையிருந்தும் விழலுக்கிறைத்த நிரே...புரிந்துணர்வினை இரு வகையில் உருவாக்க இயலுமென நம்புகிறேன், ஒன்று ஆத்மார்த்தமான பினைப்பினால் வருவது அல்லது ஆடுகிற மாட்டை ஆடியும்,பாடுகிற மாட்டை பாடியும் கறக்கிற வழி....இந்த பதிவில் இரண்டாவது வகை பற்றி எனக்கு தெரிந்ததை அல்லது நான் புரிந்துகொண்டதை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இவை இரு பாலாருக்கும் பொருந்தும்.

1.ஒத்துழைப்பு, இது மிக முக்கியமான மந்திரச்சொல்...இதை எப்படி உங்கள் இனனயிடமிருந்து பெறுவது. ஒரு எளிய வழி சொல்கிறேன் முயற்சித்துப் பாருங்கள்.உங்களுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ அவர்கள் அறியாமல் அவர்களின் உலகத்தில் நுழைந்து பாருங்கள்.அவர்களின் செயல்கள், எண்ணங்கள், நடவடிக்கைகள், பிரச்சினையை அணுகும்விதம், பலம்,பலவீனம் போன்றவைகளை விருப்பு வெறுப்பின்றி கவனியுங்கள், மிக முக்கியம் நீங்கள் மோப்பம் பிடிப்பதை அவர்கள் அறியக்கூடாது. இதில்தான் உங்களின் வெற்றி இருக்கிறது.

ஒரு கட்டத்தில் நீங்கள் மிக எதார்த்தமாக நீங்கள் அவரைப் போலவே செயல்பட ஆரம்பியுங்கள், அதாவது கண்ணாடி பிரதிபலிப்பதைப் போல,அவருக்கு அது ஆச்சர்யமாகவும் அதே நேரத்தில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது(ஈகோதான்) ரசிக்க துவங்கியிருப்பார். சந்தர்ப்பங்களில் அவர் சொல்ல வருவதை முந்திக்கொண்டு நீங்களே சொல்லுங்கள், மனிதர் ஒரு கட்டத்தில் அசந்து போய்,நீங்கள் அவரைப் போல செயல்படுவதாக நம்பி அவரையறியாமலே உங்களுக்கு தேவையான அதீத ஒத்துழைப்பினை தரத்துவங்குவார்.இது வெறும் முதல்படிதான் இங்கேயே சந்தோஷப்படாதீர்கள்.

2.பொதுவில் மனிதர்கள் அனைவரும் சுயநலமும், தான் என்கிற ஈகோவும் பிசைந்த கலவைதான்.எதிலும் முதலில் தங்களின் நிலைப்பாடும், பாதுகாப்பும்தான் முக்கியம் என கருதுவர்.அதை உறுதி செய்யும் பதட்டத்தில்தான் பாதிக்கு மேலான பிரச்சினனகள் தோன்றுகின்றன. சரி, முதல் கட்டத்தில் அவரின் ஈகோவை கரைத்திருப்பீர்கள், இப்போது அவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்.அதாவது நீங்கள் நினைப்பதை அல்லது விரும்பியதை அவரின் மீது பட்டவர்த்தனமாய் திணிக்காதீர்கள்.

நீங்கள் விரும்பியதை பொதுவான கருத்து மாதிரி சொல்லுங்கள், சொல்லும் போதே எங்கெல்லாம் அவர் இடக்கு பண்ணுவாரோ அங்கெல்லாம் 'ஆனால்'னு ஒரு வார்த்தையை சேர்த்து இது நமக்கு ஒத்துவராது என அவருடைய நிலைப்பாட்டினை உங்கள் இருவரின் நிலைப்பாடாக சொல்லி விட்டு அதற்கான தீர்வினை, அதாவது உங்களின் சமாதானத்தை பட்டும் படாமல் கோடி காட்டுங்கள். நிச்சயமாக மேஜிக் நிகழும், 'நீ சொல்றதும் சரிதான்' என புத்திசாலித்தனமாய் முடிவெடுப்பதாய் உங்கள் தீர்மானங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். உங்கள் பங்குக்கு 'நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், நீங்களே சொன்னப்புறம் நான் என்ன சொல்றதுக்கு இருக்கு, உங்க விருப்பப்படியே செஞ்சிரலாம்'னு அடிச்சி ஆடுங்க.

3.இப்போது அவர் முறை, உங்களுக்கு பிடிக்காத ஒன்றை உங்களிடம் சொல்கிறார், அதாவது இந்த கட்டத்தில் அவர் உங்களின் இரண்டாவது கருத்தினை கேட்கும் அளவுக்கு வந்திருப்பார்.உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஆர்வமாய் கேளுங்கள், தொடர்ந்து,அவர் சொல்லும் கருத்தின் நேர்மையை பாராட்டுங்கள்,மனிதர் புகழ்ச்சியில் தடுமாறும் நேரத்தில் பொறுமையாக உங்கள் மறுப்பினை சந்தேகக் கேள்விகளாக தூவுங்கள்.

விவாதத்தை மென்மையாக அதே நேரத்தில் அவரின் போக்கிலேயே வளர்த்து கொண்டு போங்கள், எந்த இடத்திலும் உங்கள் கருத்தென ஊன்றிப்பேசாதீர்கள்,"இப்படி ஆய்ட்டா நாம என்ன பண்றது","அதுக்கு நாம என்ன செய்யலாம்" என பன்மையிலேயே விவாதம் போகவேண்டும். உங்கள் பக்கம் நியாமிருந்தால் நிச்சயமாக ஆனால் மெதுவாக அவர் தன் நிலைப்பாட்டில் தளர ஆரம்பித்திருப்பார் அல்லது அவர் பக்கம் நியாயமிருக்கும் பட்சத்தில் ஆர்வமாய் உங்களுக்கு விளக்க ஆரம்பித்திருப்பார்.அவர் சொலவது சரியாய் இருந்தால் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் பாவம் எத்தனை நாளைக்குத்தான் அவரை நாமே
ஆட்டுவிப்பது.

4.முதல் மூன்று கட்டங்கள் தொடர வேண்டுமானால் இந்த நாலாவது விஷயம் ரொம்ப முக்கியம், அதாவது உங்களின் இனையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டுங்கள், அதேநேரத்தில்
பாராட்டுகிறேன் பேர்வழியென ஓவராக்ட் கொடுத்து சொதப்பிவிடக்கூடாது. முடிந்தவரை இனிமையாக பேசுங்கள், அவரின் நிறைகளை அடிக்கடி சுட்டிக்காட்டுங்கள், அதே நேரத்தில் அவரின் குறைகளை நேரடியாக கடுமையாய் தடித்த வார்த்தைகளில் விமர்சிக்காமல், "நான் சொல்றத கேளுங்க" என அதிரடியாய் ஆரம்பிக்காது மென்மையான தொனியில் 'எனக்கொன்னு தோணுது சொல்லவா?' என அனுமதி கேட்பது போல ஆரம்பித்து உங்களின் அதிருப்தியை சொல்லிப்பாருங்கள். அந்த கணத்தில் அவர் மறுத்தாலும் அடுத்தடுத்து அந்த குறைகள் காணாமலோ அல்லது உங்களின் பார்வைக்கு வராமலோ போய்விட வாய்ப்புண்டு.

5.நிறைவாக...ஏற்றுக்கொள்ளுங்கள், காது கொடுங்கள், நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்காக உண்மையாய் கவலைப்படுங்கள், உற்சாகப்படுத்துங்கள், அவர்களின் போக்கில் உங்கள் கருத்தினை இனைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் தனித்தன்மையை உறுதி செய்யுங்கள்.நிலமையை புரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் நீங்கள் மட்டுமே முக்கியமானவர் இல்லை, குடும்ப நலமே முக்கியமென்பதை உணரத்தலைப்படுங்கள்.

இந்த ஐந்து நிலைகளுக்கு பின்னால் திரும்பி பாருங்கள்.இந்நேரத்திற்கு நீங்கள் இருவரும் ஆத்மார்த்தமாய் பின்னி பினைந்திருப்பீர்கள்.

வாழ்க வளமுடன்.

Monday, June 25, 2007

அப்பா...

அப்பாவைப்பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. . அது நட்சத்திர வாரத்தில் நிறைவேறுவது மகிழ்ச்சியை தருகிறது.கொஞ்சம் பெரிய பதிவுதான். எதை விடுவது என்று தெரியவில்லை.

அப்பா பெயர்-கோ. ஸ்ரீ ராமச்சந்திரன். கே.ஸ்ரீன்னு கூப்பிடுவாங்க. நிஜத்தில் எங்களை விட்டுப்போய் வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது நினைவுகள் என் இறுதி நிமிடங்கள் வரை பசுமையாகவே இருக்கும். எல்லாப் பெண் குழந்தைகளைப் போல தான் நானும் அப்பாவிடம் அதிகமாக ஒட்டிக் கொள்வேன்.என் அன்றாட செயல்களில் கூட அவரை நினைவு படுத்தும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதுண்டு.

அப்பா நல்ல உயரம், பெரிய கண்கள், அஜானுபாகுவாக இருப்பார்.சுர்ரென கோவமும், அதற்கு சற்றும் குறையாத நகைச்சுவை உணர்வும் கொண்டவர். பிறந்தது கோவை, காளப்பட்டி கிராமம் வளர்ந்ததோ கோவை சிங்காநல்லூரில்.
1930களில் திரு. ஜீவாவும், திரு.N.G.ராமசாமியும் தொழிற்சங்கங்களில் தீவிரமாக ஈடுபட்டிறுந்த இடம் சிங்காநல்லூர். கோவையின் நூற்பாலைகளில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனுக்கு மட்டும் இன்றி, தேசிய போராட்டத்திலும் ஈடுபட்டிருந்த காலம். இந்த போராட்டங்களைப் பார்த்தே வளர்ந்தவர். இந்த இயக்கங்களின் கொள்கை தாக்கம் அவரின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

கோவை சர்வஜன பள்ளியில் படிக்கும் போதே, இலக்கியத்திலும், மற்ற கலைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.பக்ஷி ராஜா ஸ்டுயோவும், சென்ட்ரல் ஸ்டுடியோவும், அப்பொழுது கோவை திரைப்பட இயக்கத்தின் ஆரம்பகால போக்கின் பிறப்பிடமாக இருந்ததும், நாடக துறையின் பல முக்கிய பிரமுகர்கள் கோவையில் இருந்ததும் இதற்கு ஏதுவாக அமைந்தது.பள்ளி படிப்பை தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். (சென்னையில் இந்த கல்லூரிதான் திராவிட இயக்கத்தின் பிறப்பிடம் என்று அடிக்கடி கூறுவார்). அவர் படித்த நாட்களின் நினைவுகளை ஒன்று கூட மறக்காமல் எங்களிடம் கூறுவார். இந்த திராவிட இயக்கமே இவரது ஆற்றலுக்கு ஏதுவாக அமைந்தது என்று கூறி பெருமை பட்டுக்கொள்வார்.

பட்டப்படிப்பை முடித்து, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுளையாளராக பணிபுரிந்த போதும் கூட, கலைத்துறையில் தான் அப்பாவிற்கு நாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. அப்போது முன்னனி இயக்குனர்களில் ஒருவரான திரு. கிருஷ்னனின் (கோவை) நட்பு கிடைக்கவே, சினிமா துறையில் கால் பதித்தார்.

அப்பாவின் திரைக்கதையில் வெளி வந்த 'அருமை மகள் அபிராமி' படம் மிகவும் சிறப்பாக அமைந்தாம். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படம் வெளிவந்த போது , குமுதத்தில் வெளிவந்த விமர்சனத்தை அடிக்கடி எங்களிடம் சொல்லுவார், "20 ஆண்டுகளுக்கு பின்னர் வந்திருக்க வேண்டிய படம்'' என்று விமர்சனம் வந்ததாம்.

மற்றொரு படம் 'முல்லை வனம்'. தமிழ்த் திரை உலகில் COWBOY ஸ்டைலில் வெளிவந்த முதல் படம். ஸ்ரீராமும், ருக்மனியும் (நடிகை லக்ஷ்மியின் தாய்) நடித்தது. இந்த படத்தில் வரும் Gun Fight பெரும் வரவேற்பை பெற்றதாம். மலைக்கள்ளன் படத்தில் வரும் காமெடி ட்ராக்கும் அப்பா எழுதினதே. ஆனால் அப்பா அப்பொழுது அவ்வளவு பிரபலம் பெறாததால், அவரின் பெயரை போட மறுத்துவிட்டனராம்.

பின்னர் திரைத்துறையில் இருந்த போட்டியாலும், எம்.ஜி.யாருடன் ஏற்பட்ட மன வருத்தாலும், திரைத்துறையை விட்டு வெளியேறி, தில்லியில் ஆல் இந்தியா ரேடியோவில், கிழக்காசிய நேயர்களுக்கான தமிழ் பிரிவில் சேர்ந்தார். அப்பாவின் குரலும், வார்த்தை உச்சரிப்பும் தெளிவாக, கணீரென்று இருக்கும். இங்கும் இவரது நாடக பணி தொடர்ந்தது. முக்கியமாக இவரது இயக்கத்தில் மேடை ஏறின 'under seceratary' என்ற நாடகம் அந்த கால கட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக பலர் கூறி கேட்டிருக்கிறேன்.

அப்போது அப்பாவுடன் சேர்ந்து நடித்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக இருந்த திரு. பூர்ணம் விஸ்வநாதன், மற்றொருவர், இந்திரா பார்த்தசாரதி. தில்லி தமிழ் சங்கத்தில் அப்பா பல நாடகங்களை இயக்கி மேடையேற்றி உள்ளார். பூர்ணம் விஸ்வநாதன் இன்றும் எதையும் மறக்காமல் தொலை பேசி மூலம் எங்களை தொடர்பு கொண்டு பேசுவார்.

சில காலம் கழித்து மீண்டும் கோவை திரும்பி, 'வான்மதி' என்ற பத்திரிக்கை ஆரம்பித்து, ஆசிரியராக மட்டும் இல்லாமல் பல கட்டுரைகளையும் விடுதலை போராட்டம் பற்றிய ஒரு சிறு வரலாறும், பல சிறு கதைகளையும் எழுதினார்.

அப்பா கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பு, சினிமா, நாடகம், பத்திரிக்கை, மார்க்கடிங்க், மருந்து கடை, பிரிண்டிங்க், உணவு விடுதி, ஆசிரியர் பணி, ஸ்டீல் ஆலையில் மேலாளர், ILO வில் திட்டப் பணியாளர் என்று அவர் இருந்த அனைத்து துறையிலும் அப்பா தன் முத்திரையை பதித்தவர்.

அப்பா ரவீந்திரநாத் தாகூரின் வெறித்தனமான ரசிகர். அதனாலேயே என் அண்ணன் பெயரை ரவீந்திரன் என்று வைத்து, தாகூரின் பிரசித்து பெற்ற கவிதையான 'ரக்தகர்வி' யின் நாயகி பெயரை எனக்கு வைத்தார்.

அப்பா கோவை குப்புசாமி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்காக, இலவசமாக மாதம் ஒரு நாடகத்தை மேடையேற்றுவார். நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட காலம் தங்க வேண்டி இருந்ததால், அவர்களுக்காக நகைச்சுவை நிகழ்ச்சி, நாடகங்கள் என்று ஏதாவது அரங்கேற்றி, நோயாளிகளின் மனப்பாரத்தை குறைப்பார். இங்கு தான் நான் அவரின் நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தான் இருப்பார்.

பாதிக்கப்பட்டவர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், வார்ட்பாய், டெக்னீஷியன்கள், கூலி ஆட்கள் என்று அனைவரையும் நாடகத்தில் நடிக்க வைத்து விடுவார். வெளியாட்கள் யாரும் நடிக்க மாட்டார்கள். அவரது ஈடுபாட்டை இப்பொழுது நினைத்தாலும் உடம்பு சிலிர்க்கிறது.

இப்படி அப்பாவைப் பற்றி சொல்லிக்கொண்டே போக எத்தனையோ வரிசைகட்டி நிற்கின்றன, இதை எழுதும் நிமிடங்களில் கர்வமும்,அழுகையும் முட்டிக்கொண்டு வார்த்தையில்லாமல் தடுமாறுகிறேன்.இப்படியொரு சந்தர்ப்பத்தில், இம்மாதிரியான ஒரு ஊடகத்தில், எனக்கு நெருக்கமான ஒரு வட்டத்தில் அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடிந்தது நான் அவருக்கு செய்யும் மிகச்சிறிய அஞ்சலி.

அப்பாவைப் பற்றி நீங்கள் யாராவது கேள்விபட்டிருந்தால், அதை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

தலை வாழை விருந்து
வீடுகளில் தற்போது வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் அறவே இல்லாது போய்விட்ட ஒன்று.ஹோட்டல்களில், கல்யாண விருந்துகளைத் தவிர மற்ற சமயங்களில் வாழையிலையில் உணவருந்துவதில்லை என்ற நிலை வந்துவிட்டது! ப்ளாட்டுகளில் வாழை இலை கிடைப்பது கஷ்டம்...நாகரீகம், சூழ்நிலை, நேரமின்மை ஆகியவற்றால் இன்று வாழை இலை சாப்பாடு என்றால் அது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

ஆனால், வாழை இலையில் சூடான உணவு வகைகளை வைத்து சாப்பிட்டு பழகியவர்கள், தட்டில் சாப்பிட்டால் மனத்திருப்தி அடைய மாட்டார்கள். வாழையிலையின் நுனி சாப்பிடும் நபருக்கு இடது கைப்பக்கம் இருப்பதாகப் போட வேண்டும் என்பது மரபு. ஏனெனில் சாப்பிடுவதற்கு அகலமான பகுதி வலது கை அருகில் அப்போது அமையும் என்பதுதான் காரணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.


பருப்பு, நெய், சாதம், சாம்பார், பதார்த்தங்கள் என எல்லாம் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். இதில் பொறியல், கூட்டு, பச்சடி, ஊறவைத்த பருப்பு இப்படி எல்லாவகையான எல்லா வித சுவையுள்ள உணவும் இருக்கும்....


அப்பளம், வடை, ஊறுகாய், உப்பு இவை சாப்பிடுபவரின் இடது கை மேல் ஓரத்தில் வைப்பார்கள்... ஏன்? இந்த வகை பதார்த்தங்கள் குறைவாக சுவைக்கு மட்டுமே என்பதை உணர்ந்து சாப்பிடத்தான். கொஞ்சம் தூரத்தில் உள்ளவற்றில் நமது கவனம் செல்லாது இல்லையா?. அதுவும் பருப்பு வெல்லம் போட்ட பாயசம் பரிமாறுவார்கள். காரணம் பசி நேரத்தில் உணவு உண்ண நமக்கு உடனடி சக்தி வேண்டுமே! வெல்லம் குளுக்கோஸாக மாறி சக்தியை அளிக்கும் இதுவே அதிகமானால் உணவைக் குறைத்து போதும் என்ற நிலையை ஏற்படுத்தி விடும்!


தென்னிந்திய ஸ்டைல் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சாப்பாடு பாருங்க.....:-)))

1. உப்பு

2.ஊறுகாய்

3.சட்னி பொடி

4. பாசிப்பயிரில் செய்த சாலட்
5.கடலைப் பருப்பு கூட்டு
6.தேங்ககாய் சட்னி

7. அவரை பொறியல் 8. கரிப்பலா பொறியல், 9. எழுமிச்சம் சாதம், 10. பப்படம், 11. சிப்ஸ் வகைகள், 12. இட்லி, 13. சாதம், 14. பருப்பு, 15. பச்சிடி, 16. ரசம் 17. உளுந்தினால் ஆன உணவு 18. கத்திரிக்காய் கூட்டு 19.இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு பச்சிடி 20 வறுத்த மைதாவினால் ஆன உணவு 21. அவியல் 22. வெண்டைகாய் 23. சாம்பார் 24. இனிப்பான பால் 25. வடகரி 26. போளி. 27. வெஜிடபிள் உப்மா 28. இஞ்சி சட்னி 29. பாயஸம் 30. தயிர் 31. மோர்.{யப்ப்பா...இத தட்டச்சு பண்றதுக்குள்ளேயே நான் ஒரு வழி ஆயிட்டேன். இதையெல்லாம் சமைச்சு.....31 ஐட்டம்....இதுல மூனு ஐயிட்டம் பண்றதுக்கே

நாம (ன்) (ங்க) விடற பீலா.. ஹ்ம்ம்ம்}வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு என்பதுடன், இதில் ஒரு மருத்துவத் தன்மையும் உண்டாம். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் இருக்குமாம். நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.


நம் முன்னோர்கள்களின் வாழ்க்கை முறையில்தான் எத்தனை சிறப்பம்சங்கள். அவர்கள் வகுத்துள்ள வாழ்க்கை விதிகள் யாவுமே மனிதர்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பெருக்கிப் பாதுகாக்கும் சிறப்புகள் படைத்தவை என்று நன்கு தெரிந்தும் ஏனோ நாம் அதை எல்லாம் விட்டு வெகு தூரம் வந்து விட்டோம்.

சாம்பார், ரசம் சாப்பிட்ட பிறகு பாயசம் போடுவது... சாப்பாட்டில் ஒரு நிறைவைத் தந்துவிடும். பிறகு மோர் சாதம் சாப்பிடும்போது அந்த இனிப்பான பாயசம் நெஞ்சிலே ஏப்பமாக வராமல் இருக்கும்.இப்படிப்பட்ட வாழ்க்கையைக் கடைபிடிக்கும் நம்மைப் பார்த்து மேலைநாட்டவர்கள் வாழத் தெரியாதவர்கள் என்று சொல்வது பொறாமையின் சொற்களே தவிர வேறென்ன...


பாயாசமே 64 வகை வைக்கிறார்களே!

அதே மேலை நாட்டவர்கள் உணவில் கொழுப்பு, மாவு இவை தவிர ஒன்றும் இருப்பதில்லை! மற்ற சத்துகளையெல்லாம் மருந்தாக இணைத்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் நமக்கோ உணவே மருந்தாகிவிடுகிறது.தலைவாழை இலை போட்டு மரியாதை, பணிவு, சூடான சாப்பாடு... அன்புடனும் மன்வாசனையுடன் கூடிய இந்த விருந்துக்கு ஏங்காதவர்கள் யார்?.

(சமீபத்தில் படித்த பத்திரிக்கை செய்தியொன்றின் தாக்கத்தில் எழுதியது)

வணக்கம் அன்பர்களே...


உங்க கண்ண நம்பலாங்க, நட்சத்திரப் பதிவர் பேர சரியாத்தான் படிச்சீங்க, நிஜமாவே நான் தானுங்கோவ் ஒரு வாரத்துக்கு.

தமிழ்மணம்ல கால் வச்சு ஒரு வருஷம் ஆச்சு....அப்பப்ப வந்து தொல்லை பண்ணீட்டு இருந்த நான் ஒரு வாரத்துக்கு தொடர்ந்து உங்களை ஒரு வழி பண்ணப் போறேன்.

யாரும் பயப்பட வேண்டாம். கண்டிப்பா எச்ஐவி/எய்ட்ஸ் பற்றி எழுதி உங்களை கடுப்பாக்க மாட்டேன் :-))

நமக்கு கிரியெடிவ்வா எல்லாம் எழுத வராதுங்கோவ்....எப்பவும் போல எல்லாமே அனுபவ பகிர்தலும், கொஞ்சம் சொந்த கதை,
கொஞ்சம் செய்தி விமர்சனம் தான்.

படிச்சுட்டு உங்க கருத்த சிரமம் பார்க்காம ரெண்டு வரி எழுதீட்டு போங்க.

நான் எழுதறதையும் மதிச்சி என்னை நடசத்திரப் பதிவராய் இருக்க அழைப்பு விடுத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.

Friday, June 15, 2007

என் முதல் முயற்சி- படிச்சு பாருங்க

பூ ங் கா

தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து வெளியேறி
திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.

என்னங்க.. கவிதை நல்லா இருக்கா?..இது கஷ்டப்பட்டு நான் எழுதினேன்

அப்படீன்னு சொன்னா நம்பவா போறீங்க...இது நம்ம லட்சுமி அன்புடன் கவிதைப் போட்டிக்கு எழுதின காட்சி கவிதையின் வரிகள்.

அம்மணிக்கு இரண்டாம் பரிசு..

சுதந்திரமும் சந்தோஷமுமாய் ஊர் சுத்தீட்டு இருக்கும் (ஹ்ம்ம்ம்) அம்மணிக்கு வாழ்த்துக்கள்

இங்க க்ளிக்கி படக் கவிதைய பாருங்க

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.