Tuesday, January 30, 2007

நீங்களும் சாப்பிடுங்க...


மன இருக்கம் அகல இதோ ஒரு நகைச்சுவை அனுபவம்...

சென்ற வாரம் சோனிபட்ல 40 அங்கன்வாடி பணியாளர்களுக்கு நடந்த பயிற்சி முகாம்ல, ஒரு பெண்மணி மட்டும் ஒரு மணிக்கொருதரம் எழுந்து எழுந்து வெளியே போய்ட்டு இருந்தாங்க. அனுமதி கேட்டுட்டு தான் போகனும்ங்குற ஒரு விதி இருக்கிறதுனால, நான்காவது முறை போறப்போ நான், என்ன பிரச்சனை உடம்பு ஏதாவது சரியில்லையான்னு கேட்டேன். ஒன்னும் இல்ல இப்ப வந்தர்ரேன்னு சொல்லீட்டு போய்ட்டாங்க...மதியம் அதே மாதிரி..இந்த தடவை இன்னொரு பெண்ணும் சேர்ந்து போக, சக பயிற்சியாளர்கள் கிட்ட சொன்னேன், இது என்ன கிளாசுல நடுவுல இத்தன தடவை எழுந்து போறாங்க , மத்தவங்க கவனமும் கெடுதுன்னு சொன்னேன். எனக்கு இது கண்டிப்பா கண்டுபிடிச்சே ஆகனும்னு சொல்ல, அதுக்கு அவங்க சரி போய் பார்த்துட்டுவான்னு சொன்னாங்க. அந்த பெண்கள் போனப்புறம், ஒரு நிமடம் கழிச்சு போய்ப்பார்த்தா, ரெண்டு பேரும் முதுகு மட்டும் தெரிஞ்சது...ஒரு மரத்தடியில உக்கார்ந்துட்டு இருந்தாங்க..நான் வருவதை பார்த்துட்டு ஒரு பெண் திரும்பி..வாங்க மேடம்..உங்களுக்கு வேணுமான்னு கேட்க, சரி எதோ பசிக்கு சாப்பிடறாங்க போல, குடுங்கன்னு கேட்டேன்...அப்படி என்னதான் சாப்பிடறாங்கன்னு பார்க்க ஆர்வம் எனக்கு...ஹி..ஹி..அப்புறம் வச்சாங்க பாருங்க என் கையில...என்ன தெரியுமா பீடி.... அடப்பாவிங்களா..இதுக்குத்தான் வந்தீங்களான்னு அத வீசி எரிஞ்சுட்டு பேசாம வந்துட்டேன்... ஒரு வேளை எனக்கும் அந்த பழக்கம் இருக்கும் போலன்னு நினச்சுட்டாங்க....:-)))).....

கூட வந்த பயிற்சாளர்கள கேட்டா, அவங்க ஸ்மோக் பன்ணதான் போறாங்கன்னு தெரியாதா?..கேட்டுருந்தா சொல்லியிருப்போம்லனு சொல்லி என்ன வச்சு காமடி பண்ணிட்டாங்க.....

அன்னைக்கு பூரா சர்ப்ரைஸ்..சர்ப்ரைஸ்

Monday, January 29, 2007

நெஞ்சு பொறுக்குதில்லையே

சமீப காலமாக குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மனித உரிமை மீறல்களிலேயே மோசமானதாக கருதப்படும் இந்த குற்றங்களை புரிபவர்கள், பெரும்பாலும் உறவினர்களோ, பெற்றோர்களோ அல்லது குழந்தைக்கு நன்கு பரிச்சியம் ஆனவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த குற்றங்களை பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நடக்கும் குற்றங்களை மட்டும் தான் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். பெற்றோர் சிலரே குழந்தைகளுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கொடுமைகளை செய்து வருகிறார்கள் என்பது உணரப்படாத உண்மை. இந்த கொடுமைகள் பலவகைப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு சிகரமாக இருப்பது அறியா வயதிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கும் ஈனச் செயல்தான் . 'நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்' என்று நாம் நம்பும் உறவுக்காரர்கள் தான் குழந்தைகளுக்கு எதிரிகள் என்றால், உங்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கும். ஆனால் இது தான் உண்மை.
இந்தப் பதிவில் சமீபத்தில் ராஜமுந்திரியில், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமையை மட்டும் பார்ப்போம்.

CNN-IBN ன் உதவியுடன் இந்த குற்றத்தை கண்டு பிடித்திருக்கிறது போலீஸ்.
இந்தப் பெண்களின் பெற்றோர்களே இவர்களை புரோக்கர்கள் உதவியுடன். கோவா, சென்னை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 10,000 ல் இருந்து 12,000 வரை விலை போகும் இவர்கள் அனைவரும் 18 வயதை தாண்டாதவர்கள். எச்ஐவியின் தாக்கத்திற்கு பயந்து, இப்பொழுது இது போல இளம்பெண்களுக்கு என்ன விலை ஆனாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் சிலர். இது போல அதிக விலை கொடுக்க முன்வருபவர்கள், பாதுகாப்பான உடல் உறவில் (ஆனுறையை உபயோகித்தல்) அக்கறை காட்ட மாட்டார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக இந்தப் பெண்களை நாடுகிறார்கள்..ஆனால் இந்த அப்பாவிப் பெண்களின் பாதுகாப்பை பற்றி அவர்களின் பெற்றோர்களே கவலை படுவதில்லை. இவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, இரக்கமில்லாத பாலியல் கொடுமைகளுக்கு துணை போகிறார்கள். மனதளவில் கொஞ்சமா பாதிக்கப்படுவார்கள் இந்த பிஞ்சுகள்..ம்ம்ம்ம்.. நினைத்துப் பார்க்கவே நெஞ்சு பதைக்கிறது. இது போன்ற வன்செயல்களுக்கு பெற்றோர்களே காரணமாய் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.
சென்ற மாதம் விஜயவாடாவில் ஒரு பயிற்சி முகாம் நடத்த சென்றிருந்தபோது, எச்ஐவியால் பாதிக்கப் பட்டிருந்த 15 வயது சிறுமியை பார்த்தேன். 15 வயதில் எப்படி என்று அதிர்ச்சியாக இருக்கவே, அவளிடம் மெதுவாக பேச்சு கொடுத்து விஷயத்தை தெரிந்து கொள்ள முனைந்தேன். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூட தெரியாத வெகுளிப் பெண்ணாக இருந்தாள். பின்னர் அவள் இருந்த காப்பக நிர்வாகி சொன்ன தகவலைக் கேட்டு ஆடிப் போய்விட்டேன். அவளின் வீட்டில் திருமணம் ஆகாத அவளின் சித்தப்பா....ம்ம்ம்..அந்த அயோக்கியன், வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் அண்ணன் மகளையே பலவந்தப் படுத்தி, அவனின் மன விகாரங்களுக்கு அவளை உபயோகப் படுத்தி இருக்கிறான். பல பெண்களிடம் தொடர்பு இருந்த அவனுக்கு எச்ஐவி தொற்றிக்கொள்ள, இந்த பிஞ்சுக்கும் அது..... ம்ம்ம்.. என்ன சொல்ல... அவளுக்கு வந்து இருக்கும் நோயின் கொடுமையோ, தீவிரமோ தெரியாமல் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த பரிதாபக்காட்சியில் இருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை... உனக்கு என்ன வேண்டும் என்று நான் கேட்டதற்கு, உடனே, எந்த வித தயக்கமும் இல்லாமல், எனக்கு சிவப்பு தாவணி ஒன்று வேண்டும் என்று கண்களை அகல விரித்தப்படி சொன்னது மனதை என்னவோ செய்தது. அந்த காப்பகத்தில் இருந்தவர்களிடம் பணத்தை குடுத்து வாங்கி குடுக்க சொன்னேன்.அவள் இந்த காப்பகத்திற்கு வரும் போதே நோய் முற்றிய நிலையில் தான் வந்து இருக்கிறாள். இவளுக்கு இந்நோய் இருப்பது தெரிந்தவுடன் அவளின் பெற்றோர்கள் இங்கு தள்ளி விட்டு சென்று விட்டார்களாம். பெற்றவர்களும், சொந்தபந்தங்களுமே உலகம் என்று இருந்த இந்த குழந்தைக்கு அவர்களே எதிரிகள் ஆகிவிட்டனர்.
அகில இந்திய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் ஒன்றில் ஒரு பாதிரியார் பேசினது நினைவிற்கு வருகிறது. அரங்கில் அமர்ந்து இருந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மாணவர்கள். பேசிகொண்டிருந்த பாதிரியார் சொல்கிறார், "நீங்கள் தவறு செய்தால் எச்ஐவி வரும். அதனால் தவறான வழியில் செல்லாதீர்கள்"....

நான் மேலே குறிப்பிட்ட பெண் என்ன தவறு செய்தாள்?. அவளுக்கு ஏன் இந்த நிலமை.?..

இதில் தவறு செய்தது யார்?..

இது ஒரு புறம் இருக்க, நம் சமுதாயத்தில் காலங்காலமாக அவதூறு பேச்சுக்களுக்கு ஆளாகி வரும், சில சுயநலவாதிகளால் ஒடுக்கப்பட்டு, பாலியல் தொழிலில் 'தள்ளப்பட்ட' 'தேவதாசிகள்', மனித நேயத்துடன் சில உன்னத காரியத்தில் தங்களை ஈடு படுத்தி வருகிறார்கள். கர்நாடகாவில் பகல்கோட் மாவட்டத்தின், கலடிகெ என்னும் கிராமத்தில் தான் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாழ்கிறார்கள். இங்கு இருக்கும் கஸ்தூரி, ஒரு பாலியல் தொழிலாளி. இவரும் இன்னும் சில பாலியல் தொழிலாளர்களும், சைத்தன்யா மஹிலா சங் (sex workers' collective) என்னும் அமைப்புடன் சேர்ந்து பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். இவர்களின் குழந்தைகள் இந்த தொழிலுக்கு வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கென ஒரு பள்ளியை நடத்தி, கல்வியுடன் எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், பாலியில் தொழிலாளிகள் அதிகமாக இருக்கும் இந்த கிராமத்தில் ஒரு பெண் (யாரும் செய்யத் துனியாத ஒரு காரியம்) ஆணுறையை வீடு வீடாக சென்று விற்று வருகிறார். "எங்களை நாங்கள் தானே பாதுகாத்துக் கொள்ளவேண்டும், அதனால் வெக்கத்தை தூர எறிந்து விட்டு முழுமனதோடு இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளேன்" என்கிறார்.
ஹ்ம்ம்ம்..மனித நேயத்துடன் வாழும் இவர்கள் எங்கே.... சொந்த மகளையே காசுக்கு விற்று போலியான கவுரவத்துடன், பெற்றோர்கள் என்னும் போர்வையில் வாழும் ஈனப் பிறவிகள் எங்கே...ம்ம்ம்ம்
கலாச்சார சீர்கேட்டிற்கும், எச்ஐவி பரவுவதற்கும் காரணமாய் இருப்பது பாலியல் தொழிலாளர்கள் தான் என்று பொருப்பில்லாமல் கூறித்திரியும் இந்த சமூகம், இனியாவது தன் வாயை கட்டிககொண்டால் நல்லது....

குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பற்றி மேலும் சில தகவல்கள் அடுத்த பதிவில்.....

Wednesday, January 10, 2007

டாக்கிங்...டாக்கிங்...டாக்கிங்


என் அருமை நண்பிகளே, பெண்கள் ரொம்ம்ம்ம்ம்ம்பபபபப பேசறதா பலர் பலகாலமா சொல்லீட்டே தான் இருக்காங்க. இந்த அதிகமா பேசற பழக்கத்த ஒரு பெண் ஆராய்ச்சி செய்து நிரூபிச்சு இருக்காங்க...

சரி விஷயத்துக்கு வரேன்.....சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு இந்த ஆராய்ச்சியில...

ஆண்கள விட பெண்கள் மூன்று மடங்கு அதிகமா பேசறாங்களாம். ஆண்கள் 7000 வார்த்தைகள் ஒரு நாளைக்கு பேசினா, பெண்கள் 20,000 வார்த்தைகள் பேசறாங்களாம்...(அது சரி....ஒரு விஷயத்த ஒரு தடவ சொன்னா புரிறதில்லை..) இன்னொன்னு, ஆண்களை விட பெண்கள் வேகமாகவும் பேசறதா அந்த ஆராய்ச்சி சொல்லுது.......... இதற்கான காரணத்தையும் அவங்க சொல்லி இருக்காங்க...

ஆண்களின் உடம்பில் சுரக்கும் testosterone ஹார்மோன்கள், அவங்க மூளையில வார்த்தை பரிமாற்றத்தையும் நினைவாற்றலையும் கட்டுபடுத்தற முக்கியமான ஒரு பகுதியை சுருங்கச் செய்துடுதாம். இதுனால ஆண்கள் ரொம்ப நேரம் பேசினா சோர்ந்து போயிடறாங்களாம்.. பெண்களால ஆண்கள் அளவுக்கு வேகமா நடக்க முடியாம போற மாதிரி....பேச்சு திறமையில ஆண்களால பெண்களோட paceக்கு ஈடு கொடுக்க முடியறதில்லையாம்.. இந்த காரணத்தினால அவங்க பெண்கள் அளவிற்கு உணர்சிகளை வெளிக்காட்ட முடியறதில்லைனு அந்த பெண்மணி சொல்லியிருக்காங்க.. அதே சமயத்தில பெண்களுக்கு இப்படி communicate பண்றதுக்கான செல்கள் மூளையில அதிகமா இருக்காம்...

இத்தனை காரணத்த சொல்லிட்டு இந்த ஆராய்ச்சியாளர் ஒரு சிக்ஸர் அடிச்சிருக்கார்.... பெண்கள் அதிகமா, அவங்க திருப்திக்கு பேசும் போது, அவங்க உடம்பில சுரக்கும் ஒரு வித அமிலத்துனால, ஹெராயின் சாப்பிட்டவுங்க அடையும் உச்ச கட்ட போதை நிலைய போல ஒரு நிலைய அடையறாங்களாம்... ஹம்ம்ம்ம்...இது கொஞ்சம் ஓவரா இல்ல..?

"Female Mind" - இது தான் அந்த புத்தகத்தின் பெயர்....இன்னொரு விஷயம்....

மற்றவர்கள், முன் வைக்கும் வாதங்களை கேட்கும் திறனை கட்டுப்படுத்தும் பகுதியையும் இந்த testosterone ஹார்மோன்கள் சுருங்கச் செய்துடுதாம்.. இதனால நியாயமான (பெண்களின்..?) வாதங்களை கூட அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லையாம். இது எல்லாம் நான் சொல்லலை....அந்த ஆராய்ச்சியாளர் தான் சொல்லி இருக்காங்க...

So carry on Girls......

(ச்ச்ச்சும்மா சுவாரஸ்யமா இருந்துச்சுன்னு பதிர்ந்துகிட்டேன்.... அவ்வளவே...)