Monday, November 27, 2006

கர்வா ச்ச்வுத் அன்னைக்கு நம்ம சவுத்:-)

கர்வா ச்சவுத் பற்றி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். இந்த கர்வா ச்சவுத் அன்னைக்கு நம்ம சவுத் பெண்கள் (என்னையும் சேர்த்து தான்) பண்ண ஒரு கூத்த சொல்றேன்.

கர்வா ச்சவுத் பத்தி எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள். கணவன் நல்லா இருக்கனும்னு கார்திக் மாசத்தின் நாளாவது நாள் பெண்கள் விரதம் அனுசரிச்சு, பல வித பலகாரங்கள் பண்ணி, தங்களை நல்லா அலங்கரிச்சு, பூஜை எல்லாம் செய்து கொண்டாடற நாள். தமிழ்நாட்டில கடைபிடிக்கும் வரலக்ஷ்மி பூஜை, காரடையான் நோன்பு மாதிரி தான். கர்வா னா சின்ன மண் பானை. ச்ச்வுத் னா 4 (chaar-4). சின்ன அலங்கரிங்கப்பட்ட மண் சட்டியில பெண்கள் உபயோகப் படுத்தும் பொட்டு, வளையல், சிலர் ரிப்பன்,, இப்ப எல்லாம் லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ், ஐ லைனர் எல்லாம் போட்டு மற்ற பெண்களுக்கு கொடுப்பாங்க. மதியம், வயசில பெரியவங்க யாராவது கர்வா ச்சவுத் கதைய சொல்ல, அதை மத்தவங்க சுத்தி உட்கார்ந்து கேட்கிறது வழக்கம்.

நம்ம வீட்டுக்கு கீழ வீட்டுல ஒரு பஞ்சாபி குடும்பம் இருக்கு. அங்க ஒரு பாட்டி,நம்ம மேல ஒரே லவ்வோ லவ்வு. அன்பு காட்றதிலேயும், அதட்றதுலேயும், ஆதரவு காட்டுறதலேயும், பக்கத்தில மாமியார் இல்லாத குறைய தீர்துட்டு இருக்காங்க.. :-))

போன கர்வா ச்சவுத்துக்கே என்னையும் விரதம் இருக்க சொல்லி வற்புறுத்தல். ஆனா நான் இருக்கலை. பூஜையில மட்டும் கலந்திட்டேன். இந்த முறை விடமாட்டேன்னு ஒரே நச்சு பண்ணி விரதம் இருக்க வச்சாங்க.. பக்கத்தில காரைக்குடியை சேர்ந்த பெண்ணையும், பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணையும் சேர்த்து விரதம் அனுசரிக்க வச்சுட்டாங்க. இதுல காரைக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 3 மாசம் தான் ஆகியிருக்கு. அதனால அந்த பெண் ரொம்ப sincereஆ விரதம் இருந்து பாட்டி கிட்ட என்ன எல்லாம் பண்ணனும்னு கேட்டு ஒரே களேபரம்.

பூஜை எல்லாம் முடிஞ்சு, பரிசு எல்லாம் பரிமாறினதுக்கு அப்புறம் தான் climax. பூஜைக்கு அப்புறம் விரதத்த முடிக்க நிலாவ சல்லடை வழியா பார்த்து, கணவன் கால்ல விழுந்து கும்பிடனும். இது எல்லாம் நமக்கு ஆகுற காரியமா... அங்க இருந்த வடஇந்திய பெண்கள் லைன்னா கால்ல விழுந்து கும்பிட்டாச்சு.. நாங்க மட்டும் நின்னுட்டு இருந்தோம்... புதுப்பெண்.. 'இது எல்லாம் நாங்க பண்ணமாட்டோம். எங்களுக்கு பழக்கமில்லைனு சொல்லீட்டு ஒடீருச்சு... அப்புறம் நம்ம ஆளு, பாட்டி கிட்ட, "பாட்டி இன்னைக்கு ஒரு நாளைக்கு அவங்கள எங்க கால்ல விழ வச்சுறுவீங்க.... அதுக்கப்புறம்?...எதுக்கு ரிஸ்க்..., இது எல்லாம் வேண்டாம்னு ஜோக் அடிச்சு..எங்களை காப்பாத்தீட்டார்.பாட்டி அப்ப என்னை ஒரு லுக்கு விட்டது பாருங்க..மறக்க முடியாது...அந்தப்பக்கம் திரும்பிட்டேன்..

அதுக்கப்புறம் பாட்டு பாடற டைம்...அப்ப நம்ம புது மாப்பிள்ளை என்கிட்ட வந்து, "என்னங்க! நீங்களாவது அவள அந்த பாட்ட பாட வேனாம்னு சொல்லாம பேசாம உக்கார்ந்துட்டு இருக்கீங்க, எல்லாரும் plan பண்ணிதான் பண்றீங்களா, மானம் போகப் போகுது விளையாடாதீங்கன்னு சொல்லீட்டு போயிட்டார்..மேலும் அவர் அவகிட்டே பாடவேண்டாம்னு சொல்லி பார்த்தார். அவ காதில போட்டுக்கலை...நான் கண்டிப்பா பாடியே ஆவேன்னு ஒரே பிடிவாதம்.... அப்படி என்ன பாட்டு பாட போறான்னு கேக்க ஆவலா இருந்தோம். அப்புறம் அது பாடுச்சு பாருங்க பாட்டு.. 'வசீகரா' ன்னு ஆரம்பிச்சு நிறுத்தவே இல்லை... தமிழ்ல தான் பாடுச்சு...இருந்தாலும் இந்த பாட்டு இந்தியிலேயும் இருக்கிறதுனால பாட்டிய தவிர மத்தவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருச்சு...எல்லாருக்கு ஒரே சிரிப்பு..நல்ல வேளை பாட்டிக்கு சினிமா பாட்ட பத்தி ஒன்னும் தெரியாததுனால தப்பிச்சோம்...

புதுமாப்பிள்ளைக்கு வெக்கம், தர்மசங்கடம் எல்லாம்... அடுத்த நாள் அந்த பெண், "இது அவங்களுக்கான பூஜை தானே, அதனால தான் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச பாட்ட பாடினேன்" சொல்லி ஒரே சந்தோஷ மழை....

ஹ்ம்ம்ம்..எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி.. மறக்க முடியாத சம்பவம்...

இதுல மற்றொரு பெண் பாடின பாட்ட நீங்களும் கேட்கனும்...எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. 'காந்தான்' படத்தில நூத்தன் பாடற பாட்டு... (நம்ம பாழும் பழமும் படம் தான், தங்கத்தில ஒரு குறையிருந்தாலும் பாட்டு..) இந்தியில லதா மங்கேஷ்கரின் காந்தக்குரல் தான் இந்த பாட்டுக்கு முத்தாரம்.

நீங்களும் கீழ இருக்க சுட்டிய க்ளிக்கி கேட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு...

Tuesday, November 21, 2006

சில நேரங்கள்...சில மனிதர்கள்

இன்னைக்கு எச்ஐவி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கிடைக்கிற மாதிரி நிதியுதவி வேற எந்த சமுதாய பணிகளுக்கும் கிடைப்பதில்லை. ஆனா இது நியாயமா பாதிக்கப்பட்டவங்களுக்குப் போய்ச் சேருதாங்கறது சர்ச்சைக்குரிய விஷயம்.

கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி, National Professional Social Workers Association ம் அமெரிக்க தூதரகமும் இணைந்து அகில அளவில HIV/AIDS குறித்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. MSW படிச்சவங்க எல்லாரும் சேர்ந்து தொடங்கின இந்த அசோசியன்ல நானும் ஒரு நாம்கே வாஸ்தா மெம்பர். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில இருக்கும் ஒரு பேராசிரியர், நான் மற்றும் இப்ப நான் ஈடுபட்டிறுக்கிற ஒரு திட்டத்தில (Project Prathibha- Engaging Women of Faith) இருக்கும் partners எல்லாரும் சேர்ந்து இந்த கருத்தரங்க்கில ஒரு பேப்பர் பிரசன்ட் பண்ணோம்.

மத நல்லிணகத்த (Inter Faith Concept) அடிப்படையா வச்சு செயல்படுத்துற இந்த திட்டத்தின் நோக்கம் ,ஆன்மீகத் தொண்டில் தம்மை அர்பணித்த பெண்கள், அவர்கள் எந்த மதமாய் இருந்தாலும் சரி அவங்க மூலமா எச்ஐவி பற்றிய விழிப்புணர்வ ஏற்படுத்திறதுதான். சமுதாயத்தில இருக்கிற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகள் அதிகபட்ச வெற்றியை அடைய முடியும். இத கருத்தில் கொண்டு தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


அமிர்தானந்தமாயி, பிரம்மகுமாரிகள், பஹாய், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், ஆர்ய சமாஜ், இந்து, சமண மதப்பெண்கள், Gandhi Peace Foundation ல இருக்கிற பெண்கள் என, எல்லாரும் ஆதரவா இருக்காங்க. UNICEF உதவியுடன் சுமார் 500 பெண்களுக்கு அவங்க நடத்திற பிரார்த்தனை கூட்டத்தில HIV பற்றிய விழிப்புணர்வ ஏற்படுத்த பயிற்சி கொடுக்க திட்டம்.இந்த திட்டம் ஆசியாவிலேயே இது வரைக்கும் யாரும் செயல் படுத்தாத திட்டம்.

கிறிஸ்தவ மதத்திலுருந்து சர்ச் ஆப் நார்த் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண், அவங்களா விருப்பபட்டு வர்ரேன்னு சொல்ல அவங்க பேச்சுத்திறனை பற்றி அறிந்து அவங்களையும் சேர்த்தோம்.அவங்க பேர் பதிவு செஞ்ச அடுத்த நாளே கருத்தரங்க ஒருங்கினைப்பாளர் என்ன கூப்பிட்டு, 'சர்ச் ஆப் நார்த் இந்தியா' பெண்ணுக்கு அவ்வளவு அனுபவம் இல்லை வேறயாராவது சேர்த்துக்குங்கன்னு சொல்ல, நான் அடுத்த நாள் சொல்றேன்னு சொல்லிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது ஒருங்கினைபாளரும் அவரோட இருக்கும் மற்றவர்களும் கத்தோலிக்கர்கள்,சர்ச் ஆப் நார்த் இந்தியாவோ பிரோட்டஸ்டான்ட் பிரிவ சேர்ந்ததுன்னு.

பேசப்போற விஷயமே மத நல்லிணகத்த அடிப்படையா வெச்சு செயல்படுத்தும் ஒரு திட்டத்தை பற்றி. அதனாலேயே எங்களுக்கு இந்த அழைப்பும் விடப்பட்டது. ஆனா அழைப்பு விடுத்த அவங்களே இப்படி ஒரு பிரச்சனைய ஏற்படுத்துனது அதிர்ச்சியா இருந்தது.ஆனா கடைசியில அந்த பெண் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால அவருக்கு பதிலா Catholic Bishop Conference ல களப்பணியாளரா இருக்கும் திரு.ஜேம்ஸ் என்பவரை சேர்த்தோம். மறுபடியும் ஒருங்கினப்பாளரின் தலையீடு. புதுசா குழுவில சேர்ந்தவர் களப்பணியாளர் தான் அவருக்கு எல்லாம் கருத்தரங்கில பேச அனுமதி கொடுக்க முடியாதுன்னு சொல்ல,நான் முடிவா அவர் தான் பேசுவார்னு சொல்லீட்டேன். பேசறதுல ஏதாவது தப்பு இருந்தா கேள்வி பதில் பகுதியில பார்த்துக்கலாம்னு அடிச்சு விட்டேன்.

HIV/AIDS தடுப்பு பணியில களப்பணியாளர்களின் அனுபவப் பகிர்தல் தான் ரொம்ப முக்கியம். இந்த கோணத்தில பார்க்காம முதுநிலை பட்டம், டாக்டர் பட்டம் வாங்கினவுங்க தான் பேசனும்னு சொல்றத எங்களால ஏத்துக்க முடியலை.மற்ற தலைப்புகளுக்கு அவர் சொல்றது சரியாக இருக்கலாம். ஆனா எச்ஐவி எய்ட்ஸ் பற்றி பேச களப்பணியாளர் கண்டிப்பா வேனும்னு சொல்லி புரிய வச்சோம்.மேலும் பேசப் போற விஷயத்திலேயும் அவர் அவரோட (கத்தோலிக்கர்களின்) கருத்துக்களை சேர்த்துக்க சொல்லி வற்புறுத்தினார். ஆணுறை பற்றி பேசக் கூடாது, ஓரிணச்சேர்க்கையை பற்றி பேசக்கூடாதுன்னு பல கட்டுப்பாடுகள் போட்டார். நாங்க எதையும் ஏத்துகலை. இது எல்லாம் இல்லாம எய்ட்ஸ் பற்றி பேச முடியாதுன்னு சொல்லி கருத்தரங்கத்தில சந்திக்கலாம்னு ஒரே போடா போட்டேன்.

பதட்டத்தோட கருத்தரங்கில பேசி முடிச்சோம்.ஆனா எதிர் பார்த்ததை விட சிறப்பாவே வந்துச்சு. நிறைய கேள்விகள். களப்பணியாளர் தான் பார்வையாளர்களின் பல சந்தேகங்கள தீர்த்து வச்சார்.3 நாள் நடந்த இந்த கருத்தரங்கில எங்க presentation தான் சிறப்பா இருந்துச்சுன்னு அறிவிச்சப்போ..ஹம்ம்ம்.. ஒரு மாசமா இருந்த பதட்டம் எல்லாம் போயே போச்.....பின்ன இருக்காதா, வாழ்க்கையில முதல் முறையா முதல் பரிசு வாங்கியிருக்கேனே.. :-))) ... களப்பணியாளருக்கு சிறப்பு பரிசும் கொடுத்தாங்க. . ஒரு பெரிய பெரு மூச்சு விட்டுட்டு, தாமஸ போய் பார்த்து நாலு வார்த்தை கேக்கனும்னு தேடினேன். ஆள் தட்டுப்படவே இல்லை.


மற்ற சமுதாய பணிகளை விட எய்ட்ஸ் தடுப்பு பணிகள், அனுபவ பகிர்தல மையமா வச்சு,பாதிக்கபட்டவங்களின் ஈடுபாட்டோட செயல்படுத்தினாதான் அந்த முயற்சி முழுமை அடையும். எச்ஐவியால பாதிக்கபட்டவங்களை கருத்தரங்கில சேர்த்துக்கறதுக்கும் அவர் அனுமதி தரலை.உண்மையா அர்ப்பணிப்புடன் திட்டங்ளை செயல் படுத்தீட்டு வர எத்தனையோ நிறுவனங்கள் நிதி உதவி கிடைக்காம, தத்தளிச்சுட்டு இருக்கு. எயிட்ஸ் நோய் பாதிப்பு காரணமா பெற்றோரை இழந்த சிறார்கள், கணவனை இழந்த பெண்கள் என, மருத்துவ செலவு செய்ய முடியாம அவதிபடறவுங்க ஏராளம்.


ஆனா வருடா வருடம் இத்தன அமர்களத்தோட கருத்தரங்கம் நடத்துரவுங்க குறைந்தபட்சம் பாதிக்கபட்டவங்களையும் கலந்துக்க வச்சு அவர்களின் எதிர்பார்பையும், இன்னல்களையும் பகிர்ந்துக்கவாவது அனுமதிக்கலாம். இந்த கருத்திரங்க்கின் நோக்கம் அல்லது கருத்திரங்கின் மூலமா அவங்க எதிர்பார்க்கும் output end result என்னன்னு யாருக்கும் தெரியலை.


MSW பாடதிட்டத்தில HIV சம்பந்தமான பகுதிகளை சேர்ப்பதை பற்றி விவாதிப்பது தான் எங்கள் நோக்கம் அடிச்சு விட்டார் தாமஸ். அதுக்கு இவ்ளோவ் செலவுபண்ணி அகில இந்திய அளவில கருத்தரங்கு நடத்தனுமா?, தேவையில்லையேஅனுபவம் மிக்க பேராசிரியர்கள் பத்து பேர கூப்பிட்டு ஒரு அறையில, கலந்துரையாடல்ல முடிச்சிருக்கலாமே. எச்ஐவி கருத்தரங்கம்னு பேரு வச்சாதான் நிதி வரும். அது தான் உண்மை.அதுக்காக நிதிய வாங்கி நாட்டில மூலை முடுக்கில இருக்கவங்கள எல்லாம் கூப்டு 5 ஸ்டார் ஓட்டல்ல தங்கும் வசதி கொடுத்து தில்லிய சுத்திக் காமிச்சுட்டு இருக்காங்க.


இதைவிட கேவலம் வேறெதுவும் இருக்கமுடியாது.

Saturday, November 11, 2006

திருநெல்வேலி குசும்பு and Monkey Matters

இங்க எங்க கல்லூரியில திருநெல்வேலிகாரர் ஒருத்தர் ஆயுர்வேதத்தில எதோ ஆராய்ச்சி பண்ணீட்டு இருக்கார். வயசில மூத்தவர்,ரொம்ப நகைச்சுவையா பேசுவார். கிண்டலும் கேலியுமா அவர் பேசறது இங்க ரொம்ப பிரபலம். அதுவும் இந்த சர்தார்ஜி மற்றும் பீஹாரீஸ் சிக்கினா அவருக்கு கொண்டாட்டம்தான். மனுசன் யார பத்தியும் எத பத்தியும், கவலப்படாம பின்னி எடுத்துருவார்.

போன செவ்வாய்கிழமை, விரிவுரையாளர் ஒருத்தர் வேகமா எங்கிட்ட வந்து "இருந்தாலும் சீதாராமன் ரொம்ப கின்டல் பன்றார். சொல்லி வைய்ங்க" னு சொலீட்டு, விவரம் எதுவும் சொல்லாம கோவமா சாமியாடிட்டு போய்ட்டார்.ஆஹா நம்ம ஆள் எதோ வாயடிச்சிருபார்னு தோனிச்சு. உடனே அவர ஃபோன்ல கூப்ட்டு "சார் ஜீதெந்தர் கோவமா போறார், என்ன ஆச்சுன்னு" கேட்டேன். அதுக்கு அவர் சாகவாசமா"அந்த பய அங்குட்டு வந்து சொல்றத எங்கிடயே சொல்லாம்ல...முட்டாப் பய' னார். அப்பிடி என்னதான் சொன்னீங்கன்னு கேட்டேன். எல்லாம் Monkey Matters தான், வேற ஒன்னும் இல்லைன்னு சொலீட்டு ஃபோன வைச்சிட்டார். எனக்கோ ஒன்னும் புரியலை, இருந்தாலும் நமக்கு எதுக்கு வம்புன்னு அந்த விரிவுரையாளர்ட்ட நான் ஒன்னும் கேட்டுக்கலை.

ஆனா நம்ம ஆளு விடுவாரா?.. அடுத்த நாள் மீண்டும் போன் பண்ணி என்ன சொன்னான் அந்த மடையன் னு கேட்டார். சார் உங்க விளையாட்டுக்கு நான் வரலை ...அவர்ட்ட நான் ஒன்னும் கேக்கலைனேன்.

அது எப்படி உன்ன விட முடியும். இன்னைக்கு பேப்பர்ரல முதல் பக்கத்தில நியூஸ் படின்னார்.

தில்லியில குரங்குகள் அட்டகாசம் பற்றி போட்டிருந்தாங்க. படிச்சியானு கேடுட்டு " இன்னைக்கு என் கார் சர்வீசுக்கு விட்டுருந்தேன். இந்த பயல என் கூட கொஞ்சம் மினிஸ்ட்ரி வரைக்கும் வர முடியுமானு கேட்டா, எனக்கு வேலை இருக்குனு சொல்றான். அப்பிடி என்னதான் வேலை செய்றான்னு பார்த்தா பொழுதன்னிக்கும் ஸ்டூண்ட்ஸ் கிட்ட கடலை போடுட்டு இருக்கான்.

இது என்ன சார் அநியாயம், வர்ரதும் வராததும் அவர் விருப்பம்தானேன்னு சொன்னேன்.நான் போறதே அவன் டிபார்ட்மெட்ன்ட் வேலையாதான்,அதான் டென்ஷன்ல அப்பிடி சொன்னேன்,அதுவும் அவன் சம்சாரத்துக்கு முன்னாடி தான் சொன்னேன். அவளுக்கு நான் அப்படி சொன்னதுல ஒரே சந்தோஷம். நீ வேனா அவகிட்ட கேட்டுப்பார்னு வேற பெருமை பேசினார். ஜிதேந்தர் மனைவி பெங்காலி. ஜீதெந்தர் பஞ்சாபி. அதானால அந்த பொண்ண நம்ம ஆளு அவர் கட்சியில சேர்த்துட்டு அலும்பு பண்ணீட்டு இருக்கார்.

தில்லியில குரங்குகள் அட்டகாசம் ரொம்ப ஜாஸ்தியானதுனால, அரசு ஒரு முறை 300 குரங்குகளை பிடிச்சு மத்தியப்பிரதேசத்துல இருக்குற காட்டுக்கு அனுபிச்சாங்க. இப்ப மீண்டும் குரங்குகளின் எண்ணிக்கை ரொம்ப ஜாஸ்தியானதுனால, மத்தியப்பிரதேசத்துக்கு குரங்குகளை அனுப்ப சொல்லி கோர்ட் உத்தரவு போட்டிருக்கு. ஆனா மத்தியப்பிரதேச அரசாங்கமும், வனத்துறை அதிகாரிங்களும் தில்லி குரங்குகள் ரொம்ப லொல்லு பன்னுதுக, சமாளிக்க முடியலைனு அதுனால குரங்குகளை அனுப்பவேண்டாம்னு சொல்லிட்டாங்க.

சரி நம்ம ஆள் இதுக்கு என்ன சொன்னார்னு பார்போம்.அந்த விரிவுரையாளர் வரலைன்னு சொன்னதுனால இவர் கோவத்தில அவர் கிட்ட " யோவ், அதான் மத்தியப்பிரதேச அரசாங்கம் தில்லி குரங்குகள வேண்டாம்னு சொலீடுச்சில்ல, அதனால நீ தைரியமா வெளியே வரலாம், உன்னை யாரும் பிடிக்க மாட்டாங்கன்னு சொல்லி வெறுப்பேத்தியிருக்கார். பாவம் அந்த மனுசன் நொந்து போய்ட்டார். நம்ம ஆள பத்தி எல்லார்க்கும் தெரிஞ்சதுனால இவரும் நேர்ல ஒன்னும் காட்டிக்கில.. சிரிச்சுட்டே பேசாம இருந்து இருந்துட்டு இங்க வந்து புலம்பீட்டு போய்ட்டார்.

ஆனா இங்க இந்த குரங்கு தொந்தரவு ரொம்ப ஜாஸ்தி தான் (படத்த பார்த்தா தெரியும்). ராமாயணப் போர்ல வாணரப் படைகள் வர்ர மாதிரி படை படையா வருதுக. இப்ப மத்தியப்பிரதேச அரசாங்கம் வேண்டாம்னு சொன்னதுனால குரங்குகள தெஜிகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யறாங்களாம். குரங்குகள் எண்ணிக்கை அதிகம் ஆனதுனால எல்லா மாநில அரசையும் குரங்குகளை தத்து எடுத்துக்க சொல்லி கேட்டுட்டு இருக்காங்க. ஆனா தில்லி குரங்குகளை தத்து எடுக்க எந்த மாநில அரசும் முன் வரலை.

:-))))

Monday, November 06, 2006

தவிக்கும் தலித்துகள்


ஊர்புறங்களில் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளின் தாக்கமோ,வலியோ நம்மைப்போன்ற பெரும்பாலான நகரவாசிகளுக்கு தெரிவதில்லை.ஒருசில தலித்துகளின் வெற்றியையும்,முன்னேற்றங்களையும் மட்டுமே அறிந்திருக்கும் நாம் பெரும்பாலானவர்களின் நிஜத்தை எளிதாக மறந்துவிடுகிறோம் என்பதுதான் உண்மை.அரசு மற்றும் உடகங்களினால் இவர்களது துயரங்கள் வெளிஉலகிற்கு தெரியாதவாறு மறைக்கப்பட்டு வருவதுதான் கொடுமமயின் உச்சம்.பல இடங்களில் இன்றைக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையே தொடர்வதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?.

பீஹார் 'போஜ்பூர்' மாவட்டத்தில், தலித் வகுப்பைச் சேர்ந்த 60 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரான சுகர் ராம் என்கிற பஞ்சாயத்து தலைவர், நாற்காலியில்' உட்கார்ந்து ஊர் கூட்டத்தை நடத்தியதற்காகவே தாக்கப்பட்டுள்ளார்.வறுமைக் கோட்டிற்கு கீழிருக்கும் ஊர்மக்களின் பட்டியலை சரிபார்ப்பதற்காக நடந்த கூட்டத்தில், உயர் சாதியை சேர்ந்த சிலர், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த்த சுகர் ராமை வாய்க்கு வந்த படி "சாலா! துசத் ஹோகர் குர்சி பர் பைடேகா?... ( என்ன தைரியமிருந்தால் தலித் வகுப்பை சேர்ந்த நீ நாற்காலியில் உட்காருவாய்?.. ) பேசி, அடித்தும் இருக்கிறார்கள்.இது பற்றி போலீசில் புகார் கொடுத்தபோது புகாரை மட்டும் வாங்கிக்கொண்டு, FIR பதிவு செய்ய மறுத்து விட்டனர் அங்கு இருந்த அதிகாரிகள்.

மொத்தமுள்ள 2100 வோட்டில் 475 வோட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ள போதும், பஞ்சாய்த்து போர்டில் உயர்சாதியினரே அதிகம் இருப்பதால் தனக்கு அங்கு பாதுகாப்பில்லை என்கிறார் சுகர்ராம். ஆனால் இந்த தாக்குதலை நியாயப்படுத்த மேல் சாதியினர், 'வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மக்களின் பட்டியலில் உயர் சாதியினரை சேர்க்க மறுத்ததினால்தான் அடித்தோம்' என்று கதை கட்டுகின்றனர்.

நாடெங்கும் நாள்தோறும் இதுமாதிரியான எத்தனையோ அடக்குமுறைகளும், அவமானங்களும் நடந்துவருவது வேதனையானது.இதைத் தடுக்க அரசோ,அல்லது தலித் மக்களின் காவலர்கள் எனக்கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளோ உருப்படியாக எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல் வெறும் வார்த்தைஜாலங்களினால் ஓட்டு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.காலம்காலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இச்சமூகத்திற்கு என்று தான் விடிவு காலம் வருமோ தெரியவில்லை.

சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இத்தகைய இழிசெயல்கள் தொடர்வது ஒவ்வொரு இந்தியனுக்குமே அவமானமில்லையா?.தாயகத்திற்கு ஒன்று என்றால் எவ்வித பாகுபாடின்றி தோளோடு தோள் நிற்கும் இந்தியர்கள் தன் சக மனிதன் மீது அக்கறையின்றி இருப்பது வேதனையானது.ஏற்றத்தாழ்வுகளை புறந்தள்ளும் சமுதாயத்தை உருவாக்க அம்பேத்கார்களும், பெரியார்களும் வந்துதான் நமக்கு உணர்த்த வேண்டுமென்பதில்லை.நீங்களும் நானும் சேர்ந்தாலே செய்யமுடியும்.

செய்யவேண்டும்.