Monday, June 15, 2009

ஹானர் கில்லிங்-கெளரவக் கொலைகள்


ஐக்கிய நாடுகள் சபைகளின் ஆய்வுகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 5000 பெண்கள், கெளரவக் கொலைகள் என்ற பெயரில் உறவினர்களால் கொல்லப் பட்டு வருகிறார்கள். இது போன்ற கொலைகள் இஸ்லாமிய நாடுகளில் தான் நடத்தப் பட்டு வருவதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வட இந்திய கிராமங்களில் இன்றும் இது நடந்து கொண்டு தானிருக்கிறது.

பரம்பரையாக கட்டி காத்து வரும் மானத்திற்கு, மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தினால் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'கெளரவக் கொலையை' செய்து அந்த 'கலங்கத்தை' சரி செய்ய இது போல செயல்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆணை ஒரு பெண் திருமணம் செய்துவிட்டாலோ, அல்லது ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டாலோ அந்தப் பெண் உறவினர்களாலேயே கொலை செய்யப்படுவது தான் 'ஹானர் கில்லிங்'.தாங்கள் சேர்ந்த இனத்திற்கு அவமானத்தை உண்டு பண்ணிய பெண்ணை கொல்வது அவளுக்கும், இனத்திற்கும் கெளரவம் என்பது இவர்கள் வாதம்.

இது போல மனித உரிமை அத்து மீறல்கள், ஜாதி மத கோட்பாடுகளை காரணம் காட்டி இன்றும் வட இந்திய கிராமங்களில் வெகுசாதாரணமாக நடந்து வருகிறது. நம் சமூகம் தொடர்ந்து பரிணமித்து வந்தாலும் இன்றும் காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களை தக்க வைத்துக்கொண்டு, கெளரவத்தை கலாச்சாரத்தை நிலை நாட்டுகிறோம் பேர்வழி என காட்டு மிராண்டிதனமாக நடந்து கொள்கிறார்கள்.

இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே. இது போன்ற ஜாதி வெறி பிடித்த கலாச்சார காவலர்கள் சிலரின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் இருக்குமெனில் அவள் வாழ இந்த சமூகம் அவளுக்கு உரிமை அளிக்கிறது. அப்படி அவள் நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில் அவளைக் கொலை செய்ய இந்த சமூகத்திற்கு அதிகாரம் உண்டு போன்ற ஒரு எண்ணத்தை இந்தக் கொலைகள் நம்முள்ளே எற்படுத்துகிறது.

இவர்கள் பார்வையில் இப்படி ' முறை தவறிய' பெண்ணிற்கு, தண்டனையாக அவளை அந்த கிராமத்து 'பெரியவர்கள்' வன்புணர்வதும் உண்டு. அதுவும் அங்கீகாரத்துடன். பல பெண்ணுரிமை போராளிகள் கேட்டுக்கொண்டும் இதுவரை அதனைத் தடுக்கும் சட்டம் வரவில்லை.

இதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்பட்டாலும், சம்பந்தப் பட்ட ஆணும் பல சமயங்களில் தண்டனையிலிருந்து தப்ப முடிவதில்லை. நோய்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில் காதலித்த ஆணும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கில், ஹரியானா, உத்திரபிரதேசம், பஞ்சாப், பீஹார் போன்ற மாநிலங்கலில் இது போன்ற கொலைகள் நடந்து வருகிறது. பீஹார் மாநிலத்தில் பகல்பூர் கிராமம் தான் இதில் முன்னோடி. இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாவட்டமான பகல்பூரில் எல்லாவிதமான மனித உரிமை அத்துமீறல்களும் சாதாரணமாக நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு என்ற பேச்சுக்கே இடமில்லாத ஒரு மாவட்டம்.

சமீபத்தில், கூலித்தொழிலாளியான ரத்தன் மண்டலுக்கும், கஞ்சன்குமாரி என்ற 18 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கஞ்சன் குமாரி பணக்காரப் பெண். அந்தக் கிராமத்தின் இரு வேறு கோஷ்டியை சேர்ந்த இவர்கள் ஊரை விட்டு ஓடி விட்டதால் பெண் வீட்டார், பையனின் குடும்பத்தை சேர்ந்த 8 பேரின் தலையை வெட்டி ஆற்றில் வீசி விட்டனர். இதில் காதலித்தவர்கள் தப்பித்துவிட்டார்கள்.

இந்தக் கொலைகளை சட்டத்தால் கூட தண்டிக்க முடிவதில்லை. பெரும்பாலும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, இந்தக் கொலைகள் தற்கொலைகளாக காட்டப் பட்டு வருகிறது. இதை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகளுக்குள்ளும் அதே வெறி இருப்பதால், இந்தக் கொலைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. சிலர் வெளியே வந்து தைரியமாக தாங்கள் இந்தக் காரணத்திற்காகத்தான் இதை செய்தோம் என்று சரண் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளின் உதவியுடன் வெகு சுலபமாக குறைந்தபட்ச தண்டனையுடனோ, அல்லது அதுவும் இல்லாமலோ தப்பித்து விடுகிறார்கள். இந்தக் கொலைகளைத் தடுக்க இதுவரை எந்த சட்டத்தையும் உருவாக்க முடியவில்லை.

ஜூலை 2006 ல் நடந்த ஒரு வழக்கில், உச்ச நீதி மன்றம் இது போன்ற கெளரவக் கொலைகள் கண்டனத்துக்கு உரியவை என்றும் நாடு முழுதும் இருக்கும் காவல் துறை அதிகாரிகள், இது போன்ற கொலைகள் தெரிய வந்தால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் இது எந்த வித பாதிப்பையும் இது வரை ஏற்படுத்த வில்லை என்பது தான் உண்மை.

மதத்தையும் கலாச்சாரத்தையும் காரணம் காட்டி பெண்களை கெளரவக் கொலைகள் என்ற பெயரில் தண்டிப்பது காட்டுமிராண்டித்தனம். கலாச்சாரம் என்பதை இருக்கமான ஒரு கட்டமைப்பாகக் கொள்ளாமல், அதையே கொஞ்சம் தளர்த்திக் கொண்டு சகிப்புத்தன்மை, சகோரத்துவம் போன்ற நன்னெறிகளை வளர்க்க பயன்படுத்தவேண்டும். கலப்புத்திருமணங்கள் இதற்கு வழி வகுக்கும். காலத்திற்கு ஏற்ப, தேவைகளுக்கு ஏற்ப கலாச்சார மாற்றங்கள் நிகழத்தான் செய்யும். மற்றவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாத வரை, தன் எல்லையை நிர்ணயித்து போகும் வரை அது தவறில்லை.

எந்த ஒரு கலாச்சாரத்திற்கும் ஒரு பெண்ணை அவள் நடத்தையை முன்னிருத்தி தண்டிக்கும் உரிமை இல்லை.கலாச்சாரத்தையும் மதத்தையும் நலிந்தவருக்கெதிரான குற்றங்கள் புரிய எவ்வாறு பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த கெளரவக் கொலைகளே எடுத்துக் காட்டு.

இந்த கொலைகளினூடாக, இந்த உலகில் பிறந்த ஒரு மனிதனின் வாழ்வுரிமை மறுக்கப்படுவதாகிறது. தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. வன்முறைக்கு எதிரான சட்டம் எதுவும் இவர்கள் துணைக்கு வருவதில்லை. வன்முறைக்கு எதிரான சட்டத்திலுருந்து இவர்களை தப்பிக்க வைக்கும் வரை, கலாச்சாரத்தையும் மதக்கோட்பாடுகளையும் காரணம் காட்டி நடத்தப்படும் வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கும்.

Tuesday, June 09, 2009

கரன் / கிரன் ஏழைத் திருடர்கள்

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆச்சு.

நான் பணி புரிந்து வந்த கல்லூரியில, ஒரு திங்கள் காலையில எங்கள் துறையில ஜன்னல் எல்லாம் உடைஞ்சு, அலுவலகமே தலைகீழா இருந்துச்சு. ஆனா கதவு மட்டும் மூடினது மூடின படி இருக்கு. கணினி சி பி யூ பிரிஞ்சு கிடந்துச்சு. அதிர்ச்சியுடன் என்னன்னு போய் பார்த்தா 5 ஹார்ட் டிஸ்க் காணாம போயிடுச்சு. கணினியின் மற்ற பாகங்கள் எல்லாம் அப்படியே இருக்கு. ஜன்னல் கம்பிகளை உடைச்சு ஹார்ட் டிஸ்க் மட்டும் எடுத்துட்டு போயிட்டாங்க.

திருட வந்தவன் திருடினது மட்டுமல்லாமல், மேஜை மேல் இருக்கும் ஃபைல், பேப்பர் எல்லாம் பார்த்து இருக்கிறான். இங்க தான் திருடனின் நகைச்சுவை உணர்ச்சியை பாராட்டனும். திருடு போனது சனிக்கிழமை. வெள்ளிக்கிழமை, எங்கள் நிறுவனம் நடந்தி வரும் இலவச பெண் கல்வி திட்டத்திற்கு நன்கொடை அளித்தவர்களுக்கு அனுப்ப " தேங்ஸ் லெட்டர்" ஆங்கிலத்துல டைப் பண்ணி, துறைத்தலைவரின் கை எழுத்திற்காக மேஜை மேல் வச்சிறுந்தோம். அந்த லெட்டர்ல நன்கொடை அளித்தவர்கள் எந்த குழந்தைக்கு ஸ்பான்சர் பண்றாங்கன்னு விவரம் இருக்கும். கரன் மற்றும் கிரன் என்ற இரு ஏழை குழந்தைகளின் விவரம் அடங்கிய லெட்டர் மேலால இருந்துச்சு. அதில் அவர்களின் ஏழ்மை நிலவரத்தை படிச்சு தெரிஞ்சுட்டான். ஆங்கிலம் தெரிந்த திருடன். மேஜை டிராயரில் இருந்த லிப்ஸ்டிக்கை எடுத்து (லிப்ஸ்டிக் பற்றிய கேள்வி எல்லாம் கேட்க கூடாது சொல்லிட்டேன்) சுவற்றில் "கரன் அவுர் கிரன், கரீப் ச்சோர் " ( கரன் மற்றும் கிரன், ஏழைத் திருடர்கள்) னு கொட்டை எழுத்தில் எழுதி, ஒரு பெரிய ஸ்மைலியும் போட்டுட்டு போயிட்டாங்க. பக்கத்துல இருந்த ஃபிரிட்ஜ்ல இருந்து கூல் ட்ரிங்கஸ் எல்லாம் காலி பண்ணி, ரிலாக்ஸ்டா இருந்துட்டு போயிருக்காங்க.

எல்லா இடத்துலே இருக்குற மாதிரி இங்கேயும் நிறுவனத்து மேலே அன்பு, அக்கறை, பாசம், கோவம், நக்கல் எல்லாம் இருக்கு. அது இந்த மாதிரி நேரத்துல தானே பொங்கி வெளியே வரும். அதுலேயும் கரீப் சோர் மேட்டரை படிச்சதும் யாருக்கும் சிரிப்பை அடக்க முடியலை. ஹார்ட் டிஸ்க் போன சோகம் போயே போச். அப்படி ஒரு இளிப்பு.

துறைத் தலைவர் ரிடயர்ட் மேஜர் ஜெனரல்...கையில் விலை உயர்ந்த ஒரு வாக்கிங் ஸ்டிக்குடன் சினிமாவில் வரும் பணக்கார அப்பா மாதிரி எப்பவும் மிடுக்காக இருப்பார். விஷயம் கேள்விபட்டு, எல்லோரையும் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வர சொன்னார். ஹாலுக்குள்ள போறதுக்கே பயம். அவருக்கு முன்னாடி சிரிச்சுட்டா என்ன பண்ணன்னு பயம்.

கல்லூரியில ஒரு துப்பறியும் துறைனே ஒன்னு இருக்கு. அதுக்கு ஹுக்கும் சிங் என்பவர் தான் தலைவர். விஷயம் தெரிவிக்கப்பட்டு ஹுக்கும் சிங் வந்தார். முதல் சந்தேகம் எங்க மேலயாம். அதுனால எங்க கை ரேகை எல்லாம் எடுத்து எங்களை விசாரிச்சாங்க. அப்புறம் கை எழுத்து மேட்ச் பண்ணலாமுன்னு முடிவு பண்ணி எல்லார்த்தையும் ஹிந்தில கரன் அவுர் கிரன் கரீப் ச்சோர் னு எழுத சொன்னாங்க. அப்படியே எங்க பேரையும் ஹிந்தில எழுதுனமாம். நமக்கு தான் ஹிந்தி எழுத படிக்க தெரியாதே, அதுனால பந்தாவா கைய கட்டி பேசாம நின்னுட்டு இருந்தேன்.

'ஏன் நீ எழுதலையா' னு கேட்டார் துறைத்தலைவர்.

'சார் எனக்கு ஹிந்தி எழுத தெரியாது' னு சொன்னேன்.

அதுக்கு ஹுக்கும் சிங், "கரெக்ட்!!!.. சுவற்றில எழுதின கை எழுத்து கூட எழுத படிக்க தெரியாதவன் எழுதின மாதிரி தான் இருக்கு. அதுனால பேட்டி ( ஹிந்தி பேட்டி..அதாவது மகளே- இது வேற) நீ தான் கண்டிப்பா எழுதனும்" னார். இன்டர்போல்ல இருக்க வேண்டியவுங்க இப்படி இங்க வந்து மாட்டிட்டாங்களேன்னு நொந்துட்டு எரிச்சலுடன் சிரிப்பையும் அடக்க முடியாமல் உட்கார்ந்தேன்.

துனை துறைத் தலைவர், "பரவாயில்லைம்மா, உனக்கு ஹிந்தி தெரியாட்டி அதை ஆங்கிலத்துல எழுது" ன்னு ரொம்பபப புத்திசாலித்தனமா சொன்னார். மீண்டும் மீண்டும் சிரிப்பு. மறுபடியும் எல்லாரும் பலமா சிரிச்சுட்டாங்க. ஏன்யா கையெழுத்து மேட்ச் பண்றதுக்கு தானே எழுத சொல்றீங்க, அப்புறம் அதை நான் ஆங்கிலத்துல எழுதி என்ன ஆக போகுதுன்னேன். ஓ அப்படி வேற ஒன்னு இருக்கோ... சரி அப்போ உனக்கு எப்படி வருதோ அப்படி எழுது ன்னு சொன்னார்.

நான் என் பேரை தமிழ்ல எழுதி கொடுத்தேன். :-).. what is this rubbish னு கத்தல்... எனக்கு வந்ததே கோபம்.. சார் திருடனை பிடிக்க வக்கில்லை..நாங்க தான் ஜன்னலை உடச்சிட்டு வந்து எடுக்கறமா...does it make any sense? னு எல்லாரும் பிடிச்சிட்டோம்.

அலுவலக நண்பன் ஒருவன் ஹுக்கும் சிங் தோள்ல கைபோட்டு அந்தப் பக்கம் கூப்டுட்டு போய் 'சார் இப்படி செய்தா என்ன, லிப்ஸ்டிக்ல தானே எழுதி இருக்கு யாரோட லிப்ஸ்டிக்குன்னு பார்த்துடலாமே' னு சொல்ல அவர் பாவம் 'ஐயா தம்பிகளா கொஞ்சம் எல்லாரும் போங்க' னு அழ ஆரம்பிச்சுட்டார்.

இன்னொருத்தன் சார் இந்த துப்பறியும் துறைக்கு ஏதாவது வேலை கொடுக்கனும்னு இந்த மாதிரி நீங்களே செய்துட்டீங்களான்னு துறைத் தலைவரை கேட்க, அவருக்கு டென்ஷன் ஆயிடுச்சு. சேர்மன்க்கு என்ன பதில் சொல்றதுன்னு அவருக்கு கவலை. "எல்லாரும் வீட்டுக்கு போங்க...leave me alone." அப்புறம் என்ன...கரன் அண்ட் கிரன் புண்ணியத்துல ஒரு நாள் ஜாலியா ஊர் சுத்தீட்டு வீட்டுக்கு போனோம்.

அதுக்கு அப்புறம் 8 எல் சி டி காணாம போச்சு. ஆனா நம்ம இன்டெர்போல் ஹுக்கும் சிங் மூச்சு விடலை. எங்களைப் பார்த்தாலே தலைய தொங்கப் போட்டுட்டு போயிடுவார்.