Tuesday, August 22, 2006

பொறியில் சிக்கிய.....பெண்கள்


நண்பர்களே!...நன்றாய் சாய்ந்து உட்காருங்கள், நான் சொல்வதை நிதானமாய் உள்வாங்கி யோசியுங்கள்...ஏதோ காரணமாய் ரத்தப் பரிசோதனை செய்யும் உங்களுக்கு HIV தாக்கியிரூப்பதாய் உறுதி செய்கிறார்கள், அக்கணத்தில் உங்களின் மனநிலையை கவனமாய் பரிசீலியுங்கள்.

இனி,அதே மனநிலையுடன் தொடர்ந்து படியுங்கள், இந்த நிமிடம் வரை வாயில்லாப் பூச்சியாய், வெளியுலகம் தெரியாதவளாய், இளம் தாயாய், கணவனே கண்கண்ட தெய்வமாய், வீட்டைத் தாண்டாத கூட்டுப் புழுவாய் தன் கணவனின் நடத்தையால் உயிர் கொல்லிநோயைச் சுமக்கும் எண்ணிலடங்கா சகோதரிகளை நினைத்துப் பாருங்கள். தாய்மைப் பூரிப்புடன் பரிசோதனைக்கு மருத்துவமனையில் காலடி வைக்கும் போதுதான் பெரும்பாலான பெண்கள் இந்த அவலத்தை அறிகிறார்கள். தாங்குமா அந்தப் பெண்மனம்? . இந்தியாவில் HIV ஆல் பாதிக்கப் பட்ட பெண்களில் பெரும்பாலோனோர் திருமணம் ஆன, கணவனிடம் மட்டுமே உடலுறவு வைத்துக் கொண்டிருக்கும் குடும்ப பெண்கள்.

எச்ஐவி +ve என இனங்காணப் பட்டபின் வாழ்வின் ஒவ்வொருநாளும் அவளுக்கு எத்தனை கொடுரமானதாய் இருக்கும் என்பதை உள்வாங்கிப் பாருங்கள். இப்பெண்கள் மீண்டு எழ வழிவகை செய்யவேண்டியது யார் கடமை...அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கலையும், அவதூறுகளையும் களைய வேண்டியது யார்கடமை? தயவு செய்து அடுத்தவரையோ, அரசாங்கத்தையோ கைகாட்டாதீர்கள். செய்வதறியாது திக்கித் திணறி விழிபிதுங்கி நிற்கும் அந்தச் சகோதரிகளின் கண்ணீர் துடைத்து, கனிவு முகம் காட்டி,அனைத்து ஆதரவாய் வாழ்வின் எஞ்சிய காலத்தை தன்னம்பிக்கையோடும் தவிப்பில்லாமலும் செய்யவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா....

இத்தோடு நம் பணி முடிகிறதா?...நிச்சயமாய் இல்லை, ஆதரவாய் தோளோடு தோள் நிற்பது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு சக மனிதனுக்கு இந்த நோய் அண்டாமல் அணுகாமலிருக்கத் தேவையான விழிப்புணர்வையும் அடிப்படை அறிவையும் வழங்குதல் நமது அடுத்த இலக்காய் கடமையை இருக்கவேண்டும். என்னுடைய அனுபவத்தில் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் மனத்தின்மையை கண்டு அசந்து போயிருக்கிறேன்.

தங்களின் இந்த நிலை மற்றவர்களுக்கு வரக்ககூடாது என்கிற சமுதாய நோக்குடன், எச்ஐவி பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த குழுவாக கூடி செயல்பட்டு வருகிறார்கள். கோவையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் ஒரு சுய உதவிக்குழு அமைத்து தங்களுக்கென ஒரு வருமானத்தையும் ஈட்டிக்கொண்டு , விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் செய்து வருகிறார்கள். சுய உதவிக்குழுவின் மூலம் கேபிள் டிவி இணைப்பை எடுத்து நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் குழு ஒன்று கேபிள் டிவி நடத்தி வருவது இங்குதான்.

வாழ்வின் விளிம்பில் நிற்கும் இவர்களில் பலர் கவுன்சிலிங் பிரிவில் டிப்ளமா படித்து அரசு மருத்துவமனைகளில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார்கள். எச்ஐவி கிருமி இவர்களை தாக்கிய பின்னரே இவர்கள் இந்த கவுன்சிலிங் பயிற்சியை மேற்கொண்டார்கள்.இதில் முதன்மையானவர் என் தோழி, மீனாட்சி ( வயது 26). காலம் சிதைத்த தன் கணவுகளை பொருட்படுத்தாது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுவரும் மீனாட்சி ஒரு சராசரி கிராமத்துப்பெண். கணவன் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பின்னர் கவுன்சலிங் பயிற்சி பெற்று, பாதிக்கபட்ட பெண்களுக்காக சுய உதவிக் குழுவை தொடங்கி,கேபிள் டீவி இனைப்பை நடத்தி வருகிறார்.இவரின் மிகப்பெரிய பலம் இவருடைய பெற்றோர், உறவினர்கள் மற்றும் நன்பர்கள்.இந்த ஆதரவு அவரை சொந்தக்காலில் நிற்க ஊக்குவித்தது. திரு.விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகிற்கு அறிமுகமானார்.அசாத்திய துணிச்சலும் நம்பிக்கையும் உடையவர்.அவருக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்வதில் ஈடுபாடு காட்டி வருகிறார். சென்ற முறை மீனாட்சி தில்லிக்கு வந்து இருந்த போது மதத்லைவர் ஒருவர் முன் அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். இந்தக் குழுவில் இருக்கும் கணவனை இழந்த சில பெண்கள் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும்,அதற்கு மதத் தலைவர்களின் ஆதரவு வேண்டும் எனவும் வேண்டினார். எவ்வளவு நல்ல விஷயம்...

இந்த நேரத்தில் இன்னொன்றும் கூற விறும்புகிறேன்.எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களோ, மருத்துவ துறையை சேர்ந்தவர்களோதான் செய்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக மதத்தலைவர்களும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை பெரும்பாலும் வழி தவறியவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் நினைப்பதால் மதத்தலைவர்களின் குறிக்கீடு இங்கே அதிகம் தேவை படுகிறது. கிருஸ்துவ பாதிரியார்களும், புத்தமத தலைவர்களும் இதில் ஆற்றும் பணி மகத்தானது.எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் எங்கள்குழு (தொண்டு நிறுவணங்களைச் சேர்ந்தவர்கள்) ஆசியாவிலேயே முதல் முறையாக பெண் மதத்தலைவர்களை ஒன்று சேர்த்து, சில அனுகு முறைகளை கையாண்டு வருகிறோம். "பிரதிபா" (பிரகாசமான ஒளி) என்று இந்த திட்டத்துக்கு (Project) பெயரிட்டு இதன் மூலம் பெண் மதத்தலைவர்களை ஒன்றினைத்து, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதில் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இதற்கான ஆதரவு, எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கிறது. இந்தக் குழுவில் மீனாட்சி ஆரம்பித்த 'Society for Postive Mother's Network' ம் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை மீனாட்சியும் நானும் கோவையில் ஒரு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எய்ட்ஸ்சுக்கு முடிவு மரணம் தான் என்று பேசிக்கொண்டிருந்த என்னிடம் 'ஒரு நிமிடம்' என்று கூறி விட்டு," அக்கா! எய்ட்ஸ்னா மரணம் மரணம்...னு சொல்றீங்களே.. எல்லாருக்கும் முடிவு மரணம் தானே.. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களிடம், பயம் வேண்டாம், நீங்கள் இன்னும் நீன்ட காலம் வாழலாம் என்று ஆலோசனை கூறும் நீங்களே,எய்ட்ஸ்க்கு முடிவு மரணம் என்று முரண்பாடாக கூறுகிறீர்களே" என்றாள். எய்ட்ஸால் பாதிக்க பட்ட அவர் அருகில் இருக்கும் போது நான் அவ்வாறு கூறியது சரி அல்ல என்று பின்புதான் உணர்ந்தேன். மேலும் இது போல 'Negative Messages' எந்த வித பயனும் தராது என்பதும் உண்மை.

எச்ஐவியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தில்லியில் 'National School of Drama (NSD)' ஒரு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. நாடு முழுவதும் இருந்து பாதிக்கபட்ட பலர் இந்த முகாமில் பங்கேற்றனர்.விழிப்புணர்வு பிரச்சாரங்களில் சில கலை நுனுக்கங்களை புகுத்தி, எவ்வாறு இச்செய்திகள் மக்களை சென்றடைய செய்யலாம் என்று பயிற்சி அளித்தார்கள். பாடல், நாடகம், ஒவியம், போன்றவைகளில் எளிதான சில பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கபட்டது. பயிற்சி நடைபெற்ற 10 நாட்களும் மறக்கமுடியாதவை. இறுதி நாள் அன்று இவர்கள் தங்களின் ஆசைகளை பகிர்ந்து கொண்டார்கள். லக்நோவில் இருந்து வந்து கலந்து கொண்ட ஒரு பெண் மற்றவர்களை விட துடிப்பாக, மகிழ்சியாக காணப்பட்டார். அவர் தன் ஆசையை சொல்ல எழுந்து நின்று, சிறிது நேரம் சிரித்துக் கொண்டும், என்ன சொல்ல என்று அருகில் இருந்த தன் தோழியிடம் கேட்டுக்கொண்டும் இருந்தார். அப்போது தன் 5 வயது மகள் (எச்ஐவியால் பாதிக்கப்படவில்லை) உள்ளே ஓடி வரவே, கண்களில் நீர் கொட்ட பேச வார்த்தை இல்லாமல் குழந்தையை அனைத்துக் கொண்டு கேவிக்கேவி அழுத காட்சி நான் நொறுங்கிப் போன தருணங்களுள் ஒன்று.

இங்கு மேலே படத்தில் இருப்பவரை பற்றி நீங்கள் பத்திரிக்கை செய்திகளில் படித்திருப்பீர்கள். இவர் தான் ஜனாபி கோஸ்வாமி. வடகிழக்கு மாநிலமான அஸாமை சேர்ந்த இவர், 1996 ஆம் ஆண்டு, தான் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தைரியமாக கூறிய முதல் பெண்மனி. திருமணம் நடந்து இரண்டே ஆண்டுகளில் கணவனை இழந்தார். திருமணத்திற்கு முன்பே இவர் கணவர் எச்ஐவியால் பாதிக்கப் பட்டிருக்கிறார். இதை மறைத்து திருமணம் செய்துவைத்து விட்டனர். மேலும், கணவர் இறந்த பின்னர் இவரை வீட்டை விட்டும் துரத்தி விட்டனர். நீதி மன்றத்தின் உதவியுடன் இவரின் உடமைகளை திரும்ப பெற்றார். சென்ற சட்டமண்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இவர் போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால், அஸாமில் போட்டியிட்ட மற்ற போட்டியாளர்கள் ஜனாபியோடு சட்டமன்றத்தில் சேர்ந்தது உட்கார்ந்தால்,அவர்களுக்கும் எச்ஐவி பரவி விடும் என்று முட்டாள்தனமாக கூறி, தேர்தலில் போட்டியிட விடாமல் செய்து விட்டனர்.
சொன்னவர்களுக்கு தான் அறிவு இல்லை என்றால், இதை செவி கொடுத்து கேட்ட காங்கிரஸ்க்கு எங்கே போயிற்று என்று தெரியவில்லை.

யார் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம், நிஜமான தவிப்பும் அதனைத் தொடரும் ஏக்கம் போக்கும் பரிவான வார்த்தைகளும்,நேசமான அரவணைப்பும் தான் அவர்களின் தனிமை உணர்வை தகர்க்கிறது. இந்த பாதிப்பினால் விதியின் சவாலை எதிர் கொள்ளும் இவர்கள், நம்பிக்கை நட்சத்திரங்கள்தான். எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோகம், கஷ்டம் என்று தளர்ந்து போய் உட்காராமல், மன அழுத்தம் பீடிக்க பட்டும் பின் அதிலிருந்து விடுதலையாகி நம்பிக்கையுடன் உண்மையான சமூகஅக்கறையுடன் வாழ்க்கையுடன் போராடும் இந்தச் சகோதரிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அநேகம்....

பொதுவில் பெண்களுக்கு வாழும் திறனைப் பற்றிய அறிவும் புரிந்துணர்வும், முன்னைவிட இன்று அதிகமாக தேவைப்படுகிறது. நோய்களை பற்றிய அடிப்படை புரிதலும், தற்காப்பிற்கான அறிவையும், வசதிகளையும் கள்ளம் கபடமறியாத நம் சகோதரிகளிடம் கொண்டு சேர்ப்பது மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு மனிதத்தின் கடமையாகவே கருதுகிறேன்.

சற்றும் எதிர்பாராத வேளையில் வரும் ஆகக்கூடிய இடர்களை கலங்காமல் ஏன் தளராமல் எதிர்கொண்டு போராடி வெற்றிகொள்வது நம்மில் எத்தனை பேருக்கு சாத்தியம்?.வாய்கிழிய யுக்திகளை பற்றி யார்வேண்டுமானாலும் பேசலாம்.பேனாவை முறுக்கிக்கொண்டு பக்கம் பக்கமாய் அணுகுமுறைகளை எழுதிவைக்கலாம்.இவற்றால் சாமானியனுக்கு ஏதாகிலும் வெளிச்சம் கிட்டுமா....சிந்தியுங்கள். சாமானியக்கு சாகசங்களைச் சொல்லிக்கொடுத்துச் சாதனையாளனாக்க வேண்டாம்...குறைந்தபட்சம் அவன் அப்பாவித்தனமாய் எமாறாமலிருப்பதற்கான வித்தையையாவது சொல்லித்தரலாமே!

நீங்களும் செய்வீர்கள்தானே....செய்வீர்கள் என்கிற நம்பிக்கையிருக்கிறது.

Thursday, August 17, 2006

நேசம் - நிஜம் - காதல்


மாலைப் பேருந்தில் வீட்டை நோக்கி, முன்னிருக்கை நடுத்தர வயது ஆசாமிகளின் பேச்சுவார்த்தை காதிலும் மனதிலும்...."நீ யாரையாவது லவ் பண்ணீருக்கியா?" அடுத்தவன் வெறுமையாய் சிரிக்க, "தப்பிச்சே" என்றான் கேட்டவன். திருமணங்களில் காதல்னா என்ன? அது எங்கே இருக்கு? எப்படி வருது? எங்க போய் முடியுது? ,கூழாங்கற்களாய் மனதில் சரிந்த கேள்விகளை நோக்கியதே இந்தப் பதிவு.

"எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருவது காதல்", சரி இந்த இலக்கணத்தோடான மனதை எங்கே தேடுவதாம்? அவன் என்னை மட்டுமே நேசிக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பிலேயே இந்த காதல் இலக்கணம் பொய்த்து விடுகிறதே?.சில விஷயங்களை உணர்வுகளால் மட்டுமே அணுபவிக்கவும் கொண்டாடவும் முடியும் அந்த வகையில்தான் என்னுடைய காதல் சேர்த்தி என நினைக்கிறேன். வார்த்தைகள் பொய்த்துப் போய் நினைவுகளும் நிஜங்களும் என்னைக் கொண்டாடும் உணர்வுகள்தான் காதலாய் இருக்க முடியுமோ?

கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் எல்லாம் தங்கள் இனையை காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு சரியாக இருக்க முடியும்?. என் பார்வையில் எல்லா தம்பதியரிடமும் காமம் மிகுந்திருக்கும் அளவிற்கு காதல் மிகுந்திருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.எனக்குத் தெரிந்து சமுதாய நிர்பந்தங்களுக்காய் குடும்ப கட்டுக்குள் உழலும் தம்பதியர்தான் பெரும்பான்மையினர்.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் திருமணத்தின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது.எதிர்பார்ப்புகளுடன் கூடிய திருமண உறவில் இந்தக் காதலின் விளைவுகள் எத்தகையது? ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோளும், அதைக் கொடுக்கும் பக்குவமும் இல்லாத போதுதான் அதன் விளைவுகள் குடும்ப கட்டமைப்பை மீறி பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து வரை எதிரொலிக்கிறது.
வெற்றிகளைக் சேர்ந்து கொண்டாடத் தெரிந்த தம்பதியர் தோல்வியென வரும் போது தோளோடு தோள் நின்று எதிர்கொள்ளாது ஒருவரை ஒருவர் காயப்படுத்தி காதலையும் குடும்பத்தையும் தெரிந்தே அழிப்பது வேதனையான வேதனை.

பொருளாதார தேவைகளுக்கு இருவரும் போராடும் குடும்பங்களில் ஆண்களை விட பெண்களுக்கே தன் இனையின் ஆதரவும், அங்கீகாரமும், அருகாமையும் அதிகமாய் தேவைப்ப்டுகிறது.ஏனெனில் பொருளாதார பங்களிப்பையும் தாண்டி பெண்களின் பங்கு குடும்ப நிர்வாகம் முதல் குழந்தை வளர்ப்பு வரை நீள்வதை யாரும் மறுக்கமுடியாது.சகிப்புத்தன்மை, பரஸ்பர அங்கீகாரம், ஒத்த முடிவெடுக்கும் பாங்கு, பிரச்சினைகளை ஒரு சேர எதிர்கொள்ளும் நம்பகத்தன்மை இத்தனையும் தருவது காதல்தானே!

இதெல்லாம் தன் இனையிடம் கிடைக்காமல் ஏமாற்றமும், இயலாமையும் சூழ புழுங்கும் ஆனோ பெண்ணோ வெளியில் சின்னதாய் ஒரு ஆறுதல் கிடைத்தாலும் கொம்பினைச் சுற்றும் கொடியாய் பற்றிக் கொள்வது இயல்புதானே! பிறகு அழுது ஆர்ப்பாட்டம் செய்வதால் யாருக்கு பயன்? இதை தவிர்க்க ஒரே வழி, உங்கள் இனையை ஆதரிப்பதுதான். எல்லா வகையிலும்.
திருமணமாவர்களே உங்கள் காதலைக் கொண்டாடுங்கள்.

உன்மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ...


"மங்கயராய் பிறப்பதற்கே......- பஞ்சாபில் கொடூரம்
Of woman are we born, of woman conceived,
To woman engaged, to woman married.
Woman we befriend, by woman do civilizations continue.
When a woman dies, a woman is sought for.
It is through woman that order is maintained.
Then why call her inferior from whom
all great ones are born?
Woman is born of woman;
None is born but of woman.

-குரு நானக்


நதிகளை பெண் தெய்வங்களாக வழிபட்டு பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் நம் நாட்டில், ஐந்து ஆறுகள் ஓடுவதாலேயே பஞ்சாப் என்ற பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் மனதை உலுக்கும் ஒரு சம்பவம்.நேற்றய Times of India நாளிதலில் வந்த செய்தி என்னை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நகரத்தில், ஒரு கிணற்றில் கலைக்கபட்ட பெண் சிசு கருக்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நர்ஸிங் ஹோமுக்கு பின்புறம் இருந்த ஒரு கிணற்றிலிருந்து கருகலைப்பு செய்யப்பட்ட 15 கருக்களை எடுத்திருக்கிறார்கள். (The Tribune என்னும் நாளிதள் இதையே 100 என்கிறது).

ஆண் பெண் விகிதாசார வேறுபாடு அதிகம் உள்ள மாநிலங்கலில் ஒன்று பஞ்சாப் மாநிலம் (1000:762)(tamilnadu 1000:920).இந்தியாவோட அதிக பணக்கார மாநிலமான பஞ்சாபில், பெண் சிசு கொலையை தங்கள் மத தர்மத்துக்கும் நம்பிக்கைகும் எதிராக கருதும் சீக்கியிர்களிடைய தான் இது நடந்திருக்கிறது. படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் இந்த கொடுமையை செய்து வருகிறார்கள்.

சரி செய்தியை பார்போம். மேலே குறிப்பிட்ட நர்ஸிங் ஹோமில் வேலை பார்த்து வந்த ஒரு தாய் (dai) எதோ ஒரு காரணத்தால் வேலையை விட்டு துரத்தப்படிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் பேரில், நேரில் சென்று பார்த்த மாநில சுகாதார அதிகாரிகள் கருகலைப்பு செய்த 15 கருக்கள் கிணற்றில் இருந்ததாக கூறுகிறார்கள். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 35 கருக்கலைப்பு செய்து அதை இந்த கிணற்றில் வீசியிருக்கிறார்கள். சாஹிப் நர்ஸ்சிங் ஹோம் என்னும் அந்த மருத்தவமனை, டாக்டர்.ப்ரீத்தம் சிங் மற்றும் அவரது மனைவி டாக்டர். அமர்ஜித் கெளர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது. காவல் துறையினர் அங்கு சென்று கருக்கலைப்புக்கு பயன் படுத்தப்பட்ட சாதனங்கள், மருந்ததுகள் ஆகியவைகளை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த மருத்துவமனைக்கு, கருக்கலைப்பு செய்ய சட்டப்படி அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.

THE PRE-NATAL DIAGNOSTIC TECHNIQUES (REGULATION AND PREVENTION OF MISUSE) ACT என்று ஒரு கடுமையான சட்டம் அமலில் இருந்து வருகிறது.சட்டம் கடுமையானதாக இருந்தாலும் மிக பலவீனமாகத்தான் இது அமுல் படுத்தபடுகிறது. இந்த சட்டத்தின் படி, அரசால் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட மருத்தவமனைகளுக்கு தான் கருகலைப்பு சாதனங்களை விற்க வேண்டும். ஆனால் இந்த சாதனங்களை உற்பத்தி செய்பவர்கள் இந்த சட்டத்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ஸ்கேன் மூலம் குழந்தை ஆணா பெண்ணா என்று கூறுவது சட்டப்படி குற்றம் என்றாலும், இங்கு இருக்கும் மருத்துவர்கள் மிகவும் புத்திசாலிகள். நேரடியாக சொல்லாமல் அவர்கள் சில code words மூலம் எப்படியாவது குழந்தை ஆணா பெண்ணா என்பதை கூறிவிடுவார்கள். இதோ அவர்கள் உபயோகப்படுத்தும் சில வாக்கியங்கள், ஆணாக இருந்தால் " your baby is fine and will play football" பெண்ணாக இருந்தால் "you are in the pink of health" அல்லது "your child is like a doll".

பெருகி வரும் பெண் சிசு கொலையின் தீவிரத்தை உணர்ந்த சீக்கிய மத குருக்கள் விளிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடு பட்டு வருகிறார்கள்.இது போல பெண் சிசுக்களை அழிப்பவர்களை
"குடிமார்" (Kudimaar)என்று அழைக்கும் வழக்கம் சீக்கிய மத வழக்கத்திலேயே இருந்து வருகிறது. பெண் சிசுவை அழிக்கும் செயல் மத கொள்கைக்கு எதிரானது என்று தெரிந்து இருந்தும் பல சீக்கிய பெண்களே இந்த கொடுமையை செய்து வருகிறார்கள்.

வடமாநிலங்களில் தான் பென் சிசுவதை அதிகமாக காணப்படுகிறது. அனால் வடமாநிலங்கலில் இருப்பவர்களோ தென்மாநிலங்கள் இன்னும் "socially conservative" ஆக இருப்பதாக கூறிக்கொண்டு திரிகிறார்கள்.CNNIBN தொலைக்காட்சியில் தேர்தலின் போது நடந்த ஒரு கலந்துரையாடலில் சர்தேசாய் இப்படி ஒரு கருத்தை சொன்னார். அதுவும் இந்த கலந்துரையாடல் சென்னை லயலோ கல்லூரியில் நடை பெற்றுக் கொண்டிருந்த்தது. ஆடம்பர வாழ்க்கை வாழ்வதும்
கலாச்சாரத்தை மறந்து ஆட்டம் போடுவதும், ஆண் குழந்தை பெற்றால் தான் ஒரு பெண் குடும்ப வாழ்க்கைக்கு தகுதி உடையவள் ஆகிறாள் என்று பெரும் படிப்பு படித்தவர்களே (?)கருதுவது தான் இவர்களை பொருத்தவரை நாகரீகம். (இங்க ரொம்ப நாளா இருந்து வரும் சில தமிழர்கள் கூட நம்ம தமிழ்நாட்டை பத்தி இப்படித்தான் நினைச்சிட்டு இருக்காங்க. இந்த கொடுமையை எங்க போய் சொல்ல.. அப்ப வரும் பாருங்க கோபம்...ஹ்ம்ம்..)

அரசாங்கம் செய்யும் விழிப்புணர்வு முயற்சிகளை கடைநிலையிலுள்ள மக்கள் வரை சென்றடைந்தாலும் மேல் குடி மக்களிடையேயும் இந்த பாவச் செயல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும் என்றால் ,இதற்கான மூல காரணத்தை அலசி அராய்ந்து அதற்கான தீர்வு காணவேண்டும். சமுதாயத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும், அரசியல் வாதிகள் உட்பட அனவருக்கும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தவேண்டும்.


Doctors are selling their soul for greed.