Friday, December 10, 2010

பணம், பகட்டு, பக்தி

கொல்கொத்தா புராணம் தொடர்கிறது....

துர்கா பூசையை முன்னிட்டு பிரம்மாண்ட பந்தlல்களில் தற்காலிக வழிபாட்டு கூடங்கள் அமைக்கப் பட்டிருந்ததாக கூறியிருந்தேன்.  அவை ஒவ்வொன்றும் தனித்துவமான கருத்தியல் ஒன்றின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்தன.இன்று அந்த பந்தல்கள் சிலவற்றின் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 
கொல்கத்தா அரசியலில் முக்கியமானவரான சுப்ரத்தோ முகர்ஜி என்பவரின் பந்தல் இது . உள்ளே தேவியின் பெரிய சிலையுடன், லஷ்மி, சரஸ்வதி, விநாயகர் மற்றும் முருகனின் சிலைகள், பகட்டான அலங்காரத்துடன் பளபளப்புடன் காட்சியளித்தது.
சுவற்றிலும், மேற்கூரைகளிலும்,  நுன்னிய கலைநயத்துடன் அழகிய  வேலைப் பாடுகள்,வரைபடங்கள், பெரிய பெரிய விளக்குகள். எதோ ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் நுழைந்ததைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது.

இந்தப் பந்தலுக்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறக்கேட்டோம்.  முக்கிய பிரமுகர்கள், அரசியவாதிகள், துர்கா பூஜையின் போது, இது போல பணத்தைக் கொட்டி பகட்டான பெரிய பெரிய பந்தல்களை அவர்கள் பேரில் அமைக்கிறார்கள். வருடா வருடம்  இவர்கள் அமைக்கும் பந்தல்களை வேடிக்கை பார்க்க திரளான கூட்டம் வருகிறதாம்.

மேலே சொன்ன பந்தலுக்கு பக்கத்தில்தான் கீழே நீங்கள் பார்க்கும் இந்தப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதிக பணம் செலவு செய்யப்படா விடினும், நுணுக்கமான கைவேலைப் பாட்டிலும், கலைநயத்திலும் சிறந்த தரத்துடன்                அமைக்கபட்டிருந்தது. உள்ளே மரவேலைபாடுகளுடன், அளவிலே சின்னதாக இருந்தாலும் பளிச்சென்றிருந்தது.                                                                                                                                                                     
               
தாகூரின் சிலையை முன்னால் நிறுத்தி  அவரின் படைப்புகளை ஓவியமாக தீட்டி அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல். தாகூர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மற்ற கலைஞர்களின் ஓவியங்களும் இங்கே இடம் பெற்றிருந்தது.

பாரம்பர்ய கட்டிடகலையை அடிப்படையாக கொண்டு அத்தனை ஆடம்பரமில்லாத எளிமையான தோற்றத்துடன் கூடிய ஒரு பந்தல்


மேலே படத்தில் இருப்பது போலத்தான் முந்தைய காலத்தில் துர்கா பூசையின் போது சிலைகள் இது போலவே வடிவமைக்கப்பட்டனவாம்.


வங்க மொழியின் புகழ்பெற்ற எழுத்தார்கள், கவிஞ்சர்களின் படைப்புகள், வங்க இலக்கியம் ஆகியவைகளை பெருமையாக எடுத்துக்காட்டுகிறது இந்தப்பந்தல் அற்புதமான ஒரு வடிவமைப்பு.

 

கீழே நீங்கள் பார்ப்பது இரயில்வே அமைச்சர் செல்வி. மம்தா பேனர்ஜியின் யோசனையில் வடிவமைக்கப்ப்ட பந்தலாம் இது. மாடர் ஆர்ட் போல் இருக்கும் இந்த தேவியின் சிலையைப் பாருங்கள்.


 நான்கு பக்கமும் வண்ணமயமாக காட்சியளித்த இந்த பந்தலில் மற்ற பந்தல்களில் காணப்பட்ட  மக்கள் கூட்டம் இல்லை. என்ன காரணமோ தெரியவில்லை.

இந்த பந்தல்கள் ஒரு வகையில் நமது திருவிழா பொருட்காட்சி அரங்கங்களையே நினைவு படுத்தியது. உண்மையைச் சொல்வதானால் இந்த பந்தல்களில் பணமும், பகட்டுமே மிஞ்சியிருந்தது. பக்தி இரண்டாம் பட்சமாகவே இருந்தது நெருடலாய் இருந்தது. மேலே ஒரு படத்தில் பூசாரி ஒருவரைப் பார்க்கலாம்...பார்க்கவவே பாவமாக இருந்தார்..இவ்வளவு பகட்டாக நடக்கும் ஒரு நிகழ்வில், வருமையில் வாடும் இவரை கண்டு கொள்பவர்கள் யாரும் இல்லை

கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம். பெரியாரை ஒரு சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலைவர் என்கிற வகையில் ரொம்பவே பிடிக்கும். தமிழகத்தில் பெண்கள் சமூக மேம்பாடு கண்டதற்கு அவர் மட்டுமே காரணம் என தீவிரமாய் நம்புகிறவள் நான்.ஆனால் அவரது கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் நான் உடன் படுவதில்லை....கொல்கொத்தா அனுபவம்  ஒன்றிற்கு பிறகு பெரியார் கடவுள் மறுப்பில் உறைந்திருந்த உண்மை உறைத்தது.

அந்த அனுபவம்...அடுத்த பதிவில்Wednesday, December 01, 2010

உலக எய்ட்ஸ் தினம் 2010


இன்று உலக எய்ட்ஸ் தினம்.மருத்துவ உலகத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் நோய். முற்றிலுமாய் தீர்த்திடும் மருந்துகள் கண்டுபிடிக்கப் படா விட்டாலும், நோயின் தன்மையோடு போராடி நோயாளியின் வாழ் நாளை நீட்டிக்கச் செய்யும் மருந்துகள் இப்போது சந்தையில் வந்து விட்டன.இந்த நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது முழு மூச்சுடன் செயல் படுத்தப் பட்டு வருகிறது.

விழிப்புணர்வுடன் செயல் பட்டால் இந்த நோயின் தாக்குதலில் இருந்து எளிதாக தப்பி விட முடியும்.உலகலாவிய அளவில் இந்த விழிப்புணர்வு என்பது பல கட்டங்களாய் செயல் படுத்தப் பட்டிருக்கிறது.தடுப்பு முறைகள்,  சிகிச்சை முறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள், மருந்துகள், மறுவாழ்வு, என பல கூறுகளை உள்ளடக்கியது இந்த விழிப்புணர்வு திட்டம்.

உலகம் முழுவதும் திசெம்பர் முதல் தேதியன்று, உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தியலை மையமாக கொண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதை அந்த ஆண்டு முழுவதும் பிரசாரங்கள், நடவடிக்கைகள், முடிவுகள், கலந்துரையாடல், கருத்தரங்குகள் என பல கட்டங்களாக செயல் படுத்துகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கருத்தியல் ”மனித உரிமை மற்றும் அனைவருக்குமான திட்டங்கள் ”.

பாலியல் தொழிலாளிகள், திருநங்கையர், மற்றும் ஓரினச் சேர்கையாளர்களை இச்சமூகம் தீண்டத்தகாதவர்களைப் போல அணுகுகிறது. இதனால் பல இடங்களில் இவர்களின் அடிப்படை மனித உரிமை கூட மறுக்கப்படுகிறது என்பது வேதனையான உண்மை. அத்தகைய மனப் போக்கினை அறவே வேரறுக்க வேண்டிய எல்லோருக்கும் எல்லாமும் பொதுவானது என்கிற கருத்தியலே இந்த ஆண்டு வலியுறுத்தப்படுகிறது.

இனி கொஞ்சம் சொந்த கதை...

இந்தியா முழுமைக்கும் எய்ட்ஸ் தொடர்பான திட்டங்களை வகுத்து அவற்றின் செயல்பாடுகளை நெறிப் படுத்தி மேற்பார்வையிடும்அரசுத் துறையில் அங்கம் வகித்தவள் என்ற வகையில் மற்றவர்களை விட நிதர்சனங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.எனது முந்தைய பதிவுகளில் எனது அனுபவங்களையும், ஆதங்கத்தினையும் சமயத்தில் ஆத்திரத்தையும் பதிந்திருக்கிறேன்.

இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் முகங்கள்,அவர்களின் கதைகள், வேதனைகள், அதிர்ச்சிகள், வெறுமை, தனிமை,இயலாமை என எல்லா உணர்வுகளையும் சந்தித்த பயணம்.பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி அவர்களூக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு பல நாட்கள் இறுக்கமாய் வீடு போயிருக்கிறேன்.

இந்த பதிவின் இடது பக்கத்தில் ஒரு அழகிய குழந்தையின் படத்தினை பார்க்கலாம்.பலரும் அது நானாகவோ அல்லது என் குழந்தையாகவோ இருக்கலாம் என நினைத்திருக்க கூடும். யாரோ ஒருவரின் கவனக்குறைவால், பொறுப்பின்மையால் பிறந்த பிஞ்சு இவள்.இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி.இவளின் மரணத்தை கண்ணெதிரில் பார்த்தவள் நான்.இனியொரு குழந்தைக்கு இத்தகைய நிலை வரவிடக் கூடாது என்கிற உறுதியை பார்வையால் உணர்த்தியதவள்.

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டம் என்பது தனியொரு அமைப்பையோ, அரசாங்கத்தையோ சேர்ந்தது அல்ல என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் இந்த நோயினை தடுப்பதற்கு தேவையான விழிப்புணர்வினையும், பாதிக்கப் பட்டவனுக்கு உறுதுனையாக நிற்கும் மனப்பாங்கினையும் கொள்ள வேண்டும்.

இந்த நாளில் அதற்காக உறுதியினை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.

Monday, November 29, 2010

கங்கையில் ஒர் கலை நிகழ்ச்சி

துர்கா பூசை கொண்டாட்டங்களில் பங்கேற்க உலகெங்கும் உள்ள வங்காளிகள் ஊருக்கு வருகின்றனர்.இவர்களைப் போலவே நாடெங்கிலும் இருந்து எங்களைப் போல ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த சமயத்தில் வருகின்றனர். இவர்களை கவரும் வகையில் அரசின் சுற்றுலாத்துறை பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறது. நகரின் இயல்பான கொண்டாட்டங்களின் ஊடே சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கும் பிரத்யேக கேளிக்கைகள்,கலை விழாக்கள் இங்கே மிகப் பிரசித்தம். குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னரே இதற்கான முன்பதிவுகள் எல்லாம் முடிவடைந்து விடுகின்றன.இந்த வகையில் சுற்றுலாத் துறை அகண்ட கங்கை நதியின் நடுவில் ஏற்பாடு செய்திருந்த கலைவிழா ஒன்றில் பங்கெடுக்க முடிவு செய்து அதற்கான பதிவுச் சீட்டினை மூன்று மாதங்களுக்கு முனன்ரே முன்பதிவு செய்திருந்தோம். மற்றவர்கள் எப்படியோ நான் மிகவும் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்தேன்.
 
 சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கங்கையில் நகர்ந்து கொண்டிருக்கும் படகில் அமர்ந்து கொண்டு இன்னொரு படகில் நடக்கும் நடன நிகழ்சியை பார்ப்பதுதான் திட்டம்.ஆறு மணிக்கெல்லாம் படகுத் துறையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி இருந்தனர், ஆனால் மூன்று மணியில் இருந்து மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையில் நிகழ்சி சாத்தியமாகுமா என்ற நினைப்பில் ரொம்பவே பதட்டத்தில் இருந்தேன். யார் செய்த புண்ணியமோ ஆறு மணிக்கெல்லாம் மழை சுத்தமாய் நின்று விட்டது.

ஒரு வழியாய் ஆறு மணி வாக்கில் ஒரு படகில் ஏறி நாங்கள் அமர வேண்டிய பெரிய படகுக்கு பயணமானோம். பெரிய படகு அதே மாதிரியான இன்னொரு படகுடன் சேர்த்து கட்டப் பட்டிருந்தது. ஒன்றில் நாங்கள் உட்கார்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். மற்றதில் இசைக் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராய் இருந்தது. அங்கேயும் பெரிய துர்கா தேவியின் சிலை, பூஜை சாமாச்சாரங்கள் என கரையில் காணப்படும் அதே திருவிழா உற்சாகம் நிறைக்கப் பட்டிருந்தது.படகின் மேல் தளத்தில் நாங்கள் உட்கார வைக்கப் பட்டோம்.மெல்ல இருள் சூழ கரையில் விளக்குகள் உயிர்த்தெழ ஒளி ஓவியமாய் கொல்கொத்தா மிளிர ஆரம்பித்தது. பெரிய நதியின் நடுவே படகில், மெல்லிய குளிரை சுமந்த காற்றின் உரசலில் எதிரில் மிளிர்ந்த ஒளி ஜாலம் தந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. 


படகு மெதுவாக நகர ஆரம்பித்தது.வேறெதையும் நினைக்காமல் இந்த எகாந்தமான படகு பயணத்தை முழுவதுமாய் அனுபவிக்க வேண்டும் என்கிற தீவிரத்தில் இருந்தேன்.நகரின் பரபரப்பு ஓசைகளிள் இருந்து விலகி, இருளின் ஆளுமையை முழுமையாய் அனுமதித்து, ஈரக்காற்றின் குளுமையை உள்வாங்கி எல்லாம் எனக்கு புதிதாகவும், ப்ரியமானதாகவும் இருந்தது. 
 இப்படியே பயணித்துக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமே என்று கூடத் தோன்றியது.இதற்குள் படகு புகழ்பெற்ற ஹௌரா பாலத்தை நெருங்கி இருந்தது. இந்த சமயத்தில் கூட கட்டியிருந்த படகில் இசைக் கச்சேரி ஆரம்பம் ஆகியது.வங்காள மொழி பாடல்கள் பாடினர். அநேகமாய் அவை நாட்டுப் புற பாடல்களாய் இருக்க வேண்டும். இந்த சமயத்தில் எதிரில் வர்ண விளக்குகளுடன் நாட்டிய மேடை போல வடிவமைக்கப் பட்ட மேல் தளத்துடன் படகு ஒன்று எதிர் வந்தது. அதுதான் நாங்கள் காண  இருக்கும் கலை நிகழ்ச்சிக்கான படகு. எங்கள் படகு அந்த படகை சுற்றி  சுற்றி வந்தது.

துர்கா பூஜை பற்றிய முன்னுரையுடன் நாட்டியம் தொடங்கியது. முதல் நாட்டியம் யா தேவி ஸர்வபூதேஷு என்ற தேவி ஸ்துதிக்கு அழகிய இளம் வங்காளப் பெண்களும், ஆண்களும் நிஜமான உற்சாகத்துடன் ஆடினர்.ஆண்களை  விட ஆடிய பெண்கள் கம்பீரமாக ஆடியதைப் போல எனக்கு தோன்றியது. அவர்களின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.அதற்குப் பின்னர் பல வாங்காள நாட்டுப்புற பாடல்களுக்கும், பாப் இசைக்கும். பாரம்பரிய உடை அணிந்து ஆடினார்கள். நாட்டியம் நடந்து கொண்டிருக்கும் போதே இரவு சாப்பாடு பரிமாரப்பட்டது.அசைவ உணவும், சைவ உணவும் பரிமாறப்பட்டது. கங்கை நதியின் நடுவில் படகில் உட்கார்ந்து கொண்டு இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தது எனக்கு நிஜமாகவே பரவசமான அனுபவம்தான்.அனுபவித்து பார்க்கவேண்டிய ஒரு காட்சி அமைப்பு.

Monday, November 22, 2010

கொல்கத்தா துர்கா பூஜை...நான்-II


வங்காளத்துக்கும், துர்கா பூஜைக்கும் இடையே உள்ள தொடர்பாக வங்காளிகள் கூறும் புராணக் கதை இதுதான்....

தட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும்,கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். இதைத் தொடர்ந்து இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு சிவன் கோரதாண்டவம் ஆடினாராம். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தாராம். அவ்வாறு சிதறிய உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய  ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதப் படுகிறது.

பின்னர் மஹாவிஷ்ணு சக்தியை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சக்தியும் அவரின் புதல்வர்களும்,புதல்விகளும் தாய் வீட்டிற்கு வரும் நிகழ்வே வங்காளத்தில் துர்காபூஜையாக கொண்டாடப் படுகிறது. சக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில் பதினாறு சக்தி பீடங்கள் வங்காளத்தில் இருப்பதாகவும் கூறக் கேட்டேன்.சக்தி வழிபாடு என்பது வங்காளிகளின் வாழ்க்கையின் ஆதாரமான ஒரு அங்கமாகவே இருக்கிறது.

                                                                                          
தற்காலிக வழிபாட்டுக் கூடங்களில் 
அமைக்கப் பட்டிருக்கும் துர்கையின் சிலைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாகவும், சிலிர்ப்பூட்டும் வகையில் உயிர்ப்புடன் அமைக்கப் பட்டிருக்கிறது. அன்னையின் முகத்தில் தவழும் உணர்ச்சியினை இன்னதென தெளிவாக கூற இயலாதவகையில் கலவையான உணர்வுகளை தருகிறது.எல்லாராலும் துர்கையின் சிலையினை செய்திட முடியாதென கூறுகிறார்கள்.இந்த சிலைகளை செய்வதற்கென விசேடமான சிற்பிகள் இருக்கிறார்களாம்.துர்கையின் சிலையோடு கூடவே, விநாயகர், கார்திகேயன், லக்ஷ்மி சரஸ்வதி ஆகியோரின் சிலைகளையும் அமைத்திருக்கின்றனர்.

நவராத்திரியின் முதல் நாளன்று, பூஜையறையில் மண் படுக்கை போன்ற ஒன்றில் பார்லி விதைகள் விதைக்கப்பட்டு, பாத்தாவது நாளில் அது முளைகட்டி வளர்ந்த பிறகு, விதையுடன் பறித்து பக்தர்களுக்கு அன்னையின் அருளுடன் கூடிய பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் ஊரெங்கும் தக் என்ற இசைக் கருவி எப்பொழுதும் எங்கும் ஒலித்துக் கொண்டே  இருக்கிறது.பெரிய பெரிய மத்தளங்களைப் போல் இருக்கும் இந்த இசை கருவியை வாசிக்கும் பொழுது மனமும் உடலும் ஒரு வித பரவசம் அடைவது உண்மை.இந்த பண்டிகை காலத்தில் விதவிதமான தின்பண்டங்கள் விசேட கவனத்துடன் தயாரிக்கப் பட்டு பூசையில் படைக்கப் பட்ட பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப் படுகிறது.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தை முன்னிறுத்தி வழிபாடுகள் நடை பெறுகிறது.முதல் நாள் குழந்தையின் அம்சமாகவும்,இரண்டாம் நாள் கன்னியின் அம்சமாகவும், மூன்றாம் நாள் பேரிளம் பெண்ணின் அம்சம் என தொடர்கிறது வழிபாடுகள்.கடைசி நாளான மஹாநவமியில் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு பாத பூசை செய்து, அன்னையின் ஒன்பது வடிவங்களாக வழிபடுகிறார்கள்.

இப்படி மாய்ந்து மாய்ந்து பெண்களைக் கொண்டாடும் இதே ஊரில்தான் பெண்களை போகப் பொருளாய் கருதி சீரழிக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.பெண் குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிற்து.ஒரு பக்கம் பெண்குழந்தைகளை தெய்வமாய் பூஜித்து கொண்டிருக்கையில்  மறுபக்கம் ஈவிரக்கமில்லாமல் அத்தகைய குழந்தைகளை பாலியல் இச்சைக்கு பலியாக்குவது வேதனையான வேதனை..

(பதிவின் நீளம் கருதி பயண அனுபவங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்)

Thursday, November 18, 2010

கொல்கத்தா துர்கா பூஜை...நான்-1

நான் வட இந்திய மாநிலங்கள் பலவற்றிற்கு பயணம் செய்திருந்தாலும், இப்போது சொல்ல வரும் இந்த பயணம் கொஞ்சம் வித்தியாசமானது. இது வரையில் பயணங்கள் பெரும்பாலும் துறை சார்ந்த அலுவலக பயணமாகவே இருந்திருக்கிறது. முதல்முறையாக உற்றார் உறவினர் சூழ அமைந்த இந்தப் பயணம் என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.இந்திய நாட்டின் இந்தப் பகுதி எப்பொழுதும் ஏதாவது ஒர் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு பகுதி. பெரிதாக மற்றவர்களால் சுற்றி பார்க்கப்படாத ஒரு பகுதி.  கோவையில் இருந்து கொல்கொத்தாவிற்கு, அதுவும் ஒரு திருவிழாவில் பங்கேற்க...

ஆம், துர்கா பூஜை என பிரபலமாய் கொண்டாடப் படும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளத்தான் இந்த பயணம்.உணர்வு ரீதியாக நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு பயணம் இது. எனது தந்தையார் தேசிய கவி, தாகூரின் மிகப் பெரிய ரசிகர். அந்த கலைஞனின் பெயரையே அண்ணனுக்கு வைத்து, தாகூரின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை பெண் பிள்ளைகளுக்கு வைத்தார். ''ரக்தகரபி'' தந்த மயக்கத்தில் அதில் வரும் நாயகியின் பெயரைத்தான் எனக்கு சூட்டியிருக்கிறார்.என் தந்தையார் மிகவும் நேசித்த ஒரு கலைஞனின் மண்ணிற்கு, அவன் உருவாக்கிய பாத்திரங்கள் உலவிய அந்த மண்ணிற்கு போகிறேன் என்கிற பரவசமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பயணம் இது.

நூற்றாண்டுகளை கடந்த கட்டிடங்கள், குறுகலான நெரிசல் மிகுந்த காங்கிரீட் சாலைகள், குறுக்கும் நெடுக்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும் ட்ராம் வண்டிகள், மஞ்சள் நிற அம்பாஸிடர் டாக்சிகள்,ஆர்பாட்டம் எதுவும் இல்லாமல் நகரின் நடுவே அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் அகண்ட கங்கை


என  பழமை பூசிய முகத்துடன் வரவேற்றது கொல்கத்தா.சட்டெனெ இருபது வருடங்கள் பின்னோக்கி போய்விட்டதைப் போல ஒரு உணர்வு தோன்றியதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
 
திரும்புகிற பக்கமெல்லாம் வண்ண வண்ண விளக்குகள், விதவிதமான வீதியோர சிற்றுண்டிச் சாலைகள், சிவப்பு, வெள்ளை, அல்லது மஞ்சள் நிற பருத்திப் புடவையுடுத்திய, பெரிய கண்களும் பளிச்சென பொட்டும் வைத்த அழகிய பெங்காலி பெண்கள்.ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்த தற்காலிக வழிபாட்டு கூடங்கள்,அவற்றில் அமைக்கப் பட்டிருந்த வண்ண வண்ண தோரணங்கள்,ஆர்பாட்டமான இசை,பாடல்,ஆடல்கள் என திருவிழா களைகட்ட வயதெல்லாம் மறந்து சிறுமியாய் மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.


 இந்த தற்காலிக வழிபாட்டு கூடங்களைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு செலவு செய்து அலங்கரித்து வைத்திருந்தனர்.தங்களின் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலத்தினை பறைசாற்றும் விதமாக சில வழிபாட்டு கூடங்களில் பணம் தண்ணீராக இறைக்கப் பட்டிருந்தது. பல இடங்களில் அலங்கார செலவுகள் மட்டுமே கோடிகளை தாண்டியிருப்பதாக கூறக் கேட்டேன்.ஒவ்வொரு வழிபாட்டுக் கூடமும் ஒரு கருத்தியலை(Theme) அடிப்படையாக கொண்டு வடிவமைத்திருந்தனர்.தங்கள் பகுதி வழிபாட்டு கூடங்கள் குறித்த
பெருமையும்,அலட்டல்களும், பீற்றல்களும் மக்களிடம் வழிந்தோடியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதில் சில அரசியல் வாதிகளின் கூடாரங்களும் அடக்கம்.

நவராத்திரி நாடெங்கும் கொண்டாடப் பட்டாலும், வங்காளிகள் அளவுக்கு இத்தனை தீவிரமான கொண்டாட்டத்தை நாட்டின் மற்ற பகுதிகளில் காண இயலாது.இது அவர்களின் உணர்வுகளோடு கலந்த ஒரு விழாவாகவே கருதுகிறார்கள். ஒன்பது நாட்களும் புத்தாடை உடுத்தி, விதவிதமாய் பலகாரங்கள் செய்து விருந்து வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

இத்தனை தீவிரமான கொண்டாட்டங்களுக்கு பின்னால் புராண கதை ஒன்றையும் கூறுகிறார்கள். பதிவு நீளமாய் போகிறது எனவே அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Wednesday, November 17, 2010

காற்று வெளியிடைக் கண்ணம்மா

இதை விட ரொமாண்டிக்கான ஒரு பாடலை கேட்டதில்லை...

கண்ணம்மா கண்ணம்மா என்று உருகி உருகி காதலியை வர்ணித்து, இளமைத் துடிப்பு நிறைந்த பாரதி, காதலன் காதலியையும், காதலையும் நம் கண் முன்னே வைக்கிறார்.காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா
ம்ம்ம்
கண்ணம்மா
ம்ம்ம்

கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்
தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(காற்று)

படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்

Friday, October 15, 2010

நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவ்ள் இல்லை!

கடந்த பத்து நாட்களில் இரண்டாவது முறையாக எனது வலைப் பதிவு ஹேக் செய்யப் பட்டிருக்கிறது. இரண்டு முறையும் பதிவினை மீட்டெடுத்து விட்டேன். அந்த தொடர் முயற்சியாளருக்கு எனது வாழ்த்துக்களும், அனுதாபங்களும்....

வாழ்த்துக்கள், வெற்றிகரமாய் எனது வலைப் பதிவுக்குள் நுழைந்து என் பெயரில் விடை பெறுவதாக பதிவு போட்டதற்கு, அனுதாபங்கள் அவரின் பிறழ்ந்த மனநிலையை நினைத்து....வாழ்க்கை என்பது இந்த பதிவோடு முடிவதில்லை நண்பரே, இதைத் தாண்டியது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

ஒரு வலைப் பதிவினை முடக்குவதால் என்னை முடக்கிவிட முடியும் என நினைப்பதில் அபத்தமானது.எனக்கு இதை விட பல முக்கியமான வேலைகள் இருக்கிறது.எனவே நீங்கள் தொடர்ந்து முயற்சியுங்கள்....உங்களால் இந்த வ்லைப் பதிவினை முடக்கிட முடிந்தால் இன்னொரு வலைப் பதிவு தொடக்க எனக்கு நேரமாகாது, அதையும் முடக்குங்கள்....நான் போய்க் கொண்டே இருப்பேன், நீங்கள் என் பின்னால் நாய்க் குட்டி மாதிரி தொடர்ந்து ஓடிவரலாம். அதுல் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை....

ஏனெனில் நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவள் இல்லை.