Monday, November 29, 2010

கங்கையில் ஒர் கலை நிகழ்ச்சி

துர்கா பூசை கொண்டாட்டங்களில் பங்கேற்க உலகெங்கும் உள்ள வங்காளிகள் ஊருக்கு வருகின்றனர்.இவர்களைப் போலவே நாடெங்கிலும் இருந்து எங்களைப் போல ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த சமயத்தில் வருகின்றனர். இவர்களை கவரும் வகையில் அரசின் சுற்றுலாத்துறை பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறது. நகரின் இயல்பான கொண்டாட்டங்களின் ஊடே சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கும் பிரத்யேக கேளிக்கைகள்,கலை விழாக்கள் இங்கே மிகப் பிரசித்தம். குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னரே இதற்கான முன்பதிவுகள் எல்லாம் முடிவடைந்து விடுகின்றன.இந்த வகையில் சுற்றுலாத் துறை அகண்ட கங்கை நதியின் நடுவில் ஏற்பாடு செய்திருந்த கலைவிழா ஒன்றில் பங்கெடுக்க முடிவு செய்து அதற்கான பதிவுச் சீட்டினை மூன்று மாதங்களுக்கு முனன்ரே முன்பதிவு செய்திருந்தோம். மற்றவர்கள் எப்படியோ நான் மிகவும் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்தேன்.
 
 சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கங்கையில் நகர்ந்து கொண்டிருக்கும் படகில் அமர்ந்து கொண்டு இன்னொரு படகில் நடக்கும் நடன நிகழ்சியை பார்ப்பதுதான் திட்டம்.ஆறு மணிக்கெல்லாம் படகுத் துறையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி இருந்தனர், ஆனால் மூன்று மணியில் இருந்து மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையில் நிகழ்சி சாத்தியமாகுமா என்ற நினைப்பில் ரொம்பவே பதட்டத்தில் இருந்தேன். யார் செய்த புண்ணியமோ ஆறு மணிக்கெல்லாம் மழை சுத்தமாய் நின்று விட்டது.

ஒரு வழியாய் ஆறு மணி வாக்கில் ஒரு படகில் ஏறி நாங்கள் அமர வேண்டிய பெரிய படகுக்கு பயணமானோம். பெரிய படகு அதே மாதிரியான இன்னொரு படகுடன் சேர்த்து கட்டப் பட்டிருந்தது. ஒன்றில் நாங்கள் உட்கார்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். மற்றதில் இசைக் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராய் இருந்தது. அங்கேயும் பெரிய துர்கா தேவியின் சிலை, பூஜை சாமாச்சாரங்கள் என கரையில் காணப்படும் அதே திருவிழா உற்சாகம் நிறைக்கப் பட்டிருந்தது.படகின் மேல் தளத்தில் நாங்கள் உட்கார வைக்கப் பட்டோம்.மெல்ல இருள் சூழ கரையில் விளக்குகள் உயிர்த்தெழ ஒளி ஓவியமாய் கொல்கொத்தா மிளிர ஆரம்பித்தது. பெரிய நதியின் நடுவே படகில், மெல்லிய குளிரை சுமந்த காற்றின் உரசலில் எதிரில் மிளிர்ந்த ஒளி ஜாலம் தந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. 


படகு மெதுவாக நகர ஆரம்பித்தது.வேறெதையும் நினைக்காமல் இந்த எகாந்தமான படகு பயணத்தை முழுவதுமாய் அனுபவிக்க வேண்டும் என்கிற தீவிரத்தில் இருந்தேன்.நகரின் பரபரப்பு ஓசைகளிள் இருந்து விலகி, இருளின் ஆளுமையை முழுமையாய் அனுமதித்து, ஈரக்காற்றின் குளுமையை உள்வாங்கி எல்லாம் எனக்கு புதிதாகவும், ப்ரியமானதாகவும் இருந்தது. 
 இப்படியே பயணித்துக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமே என்று கூடத் தோன்றியது.இதற்குள் படகு புகழ்பெற்ற ஹௌரா பாலத்தை நெருங்கி இருந்தது. இந்த சமயத்தில் கூட கட்டியிருந்த படகில் இசைக் கச்சேரி ஆரம்பம் ஆகியது.வங்காள மொழி பாடல்கள் பாடினர். அநேகமாய் அவை நாட்டுப் புற பாடல்களாய் இருக்க வேண்டும். இந்த சமயத்தில் எதிரில் வர்ண விளக்குகளுடன் நாட்டிய மேடை போல வடிவமைக்கப் பட்ட மேல் தளத்துடன் படகு ஒன்று எதிர் வந்தது. அதுதான் நாங்கள் காண  இருக்கும் கலை நிகழ்ச்சிக்கான படகு. எங்கள் படகு அந்த படகை சுற்றி  சுற்றி வந்தது.

துர்கா பூஜை பற்றிய முன்னுரையுடன் நாட்டியம் தொடங்கியது. முதல் நாட்டியம் யா தேவி ஸர்வபூதேஷு என்ற தேவி ஸ்துதிக்கு அழகிய இளம் வங்காளப் பெண்களும், ஆண்களும் நிஜமான உற்சாகத்துடன் ஆடினர்.ஆண்களை  விட ஆடிய பெண்கள் கம்பீரமாக ஆடியதைப் போல எனக்கு தோன்றியது. அவர்களின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.அதற்குப் பின்னர் பல வாங்காள நாட்டுப்புற பாடல்களுக்கும், பாப் இசைக்கும். பாரம்பரிய உடை அணிந்து ஆடினார்கள். நாட்டியம் நடந்து கொண்டிருக்கும் போதே இரவு சாப்பாடு பரிமாரப்பட்டது.அசைவ உணவும், சைவ உணவும் பரிமாறப்பட்டது. கங்கை நதியின் நடுவில் படகில் உட்கார்ந்து கொண்டு இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தது எனக்கு நிஜமாகவே பரவசமான அனுபவம்தான்.அனுபவித்து பார்க்கவேண்டிய ஒரு காட்சி அமைப்பு.

14 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைக்கவே அழகா இருக்கே.. உங்கள் வர்ணனைகளும் எங்களை அங்கே நடந்ததைப் பார்த்ததுபோல தோணவைக்கிறது மங்கை..

தமிழ் அமுதன் said...

பரபரப்பான நேரடி வர்ணணை போல விருவிருப்பாக இருக்கிறது பதிவு..!

வீடியொ காட்சிகள் கிடைத்தால் நன்றாக
இருக்கும் ...!

வெங்கட் நாகராஜ் said...

கங்கை நதியினுள் படகில் அசைந்தபடிஅமர்ந்து மற்ற படகில் நடக்கும் ஆடலைப் பார்த்த அனுபவம், வாவ் சொல்ல வைக்கிறது. இங்கேயும் தான் யமுனை என்று ஒரு நதி இருக்கிறது - ஆட்டமெல்லாம் வேண்டாம், அட கொஞ்சம் சுத்தமாகவாவது இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் தொடருங்கள் உங்கள் கொல்கத்தா பயணப் பகிர்வை.....

நன்றி.

தோழி said...

நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை தோற்றுவிக்கிறது பதிவு.. நல்ல வர்ணனை.. நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

நல்ல வருணனை மங்கை....பகிர்வுக்கு நன்றி..

ADHI VENKAT said...

வர்ணித்துக் காட்டிய விதம் அருமையாக இருந்தது. புகைப்படங்களும் அழகாக இருந்தது. தொடருங்கள்.

கோபிநாத் said...

நன்றாக சொல்றிங்க....செம ஜாலி போல ! ;))

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

Thekkikattan|தெகா said...

சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கங்கையில் நகர்ந்து கொண்டிருக்கும் படகில் அமர்ந்து கொண்டு இன்னொரு படகில் நடக்கும் நடன நிகழ்சியை பார்ப்பதுதான் திட்டம்.//

என்ன டேஸ்டு, என்ன டேஸ்ட் நினைச்சுப் பார்க்கவே குதூகலமா இருக்கே!

அதுவும் கங்கையின் அந்த சன்னமான ஹம்மிங்வோட... காணாம கரைஞ்சி போயிருப்பீங்கன்னு தெரியுது. அருமை!

மங்கை said...

நன்றி லட்சுமி...

வீடியோ ஒன்னு இருக்கு அமுதன்... போட ட்ரை பன்றேன்

மங்கை said...

வெங்கட்...யமைனையின் கதிய நினச்சா கண்ல ரெத்தக்கண்ணீர் தான்...

நன்றி தர்ஷி..பசமலர்...கோவை2தில்லி
கோபி..சித்ரா..

தெகா நன்றி

டுபாக்கூர் பதிவர் said...

இப்பல்லாம் ரொம்ப அனுபவிச்சி எழுதறீங்க, வர்ணனை எல்லாம் நல்லா இருக்கு...

Tharik Ahamed said...

nice!!


Mobile Tricks and Mobile Tips

தருமி said...

கோவாவில் இது போன்று பெரியதொரு படகில் ஆட்டம் பாட்டம் பார்த்த நினைவு வந்தது.