Friday, December 10, 2010

பணம், பகட்டு, பக்தி

கொல்கொத்தா புராணம் தொடர்கிறது....

துர்கா பூசையை முன்னிட்டு பிரம்மாண்ட பந்தlல்களில் தற்காலிக வழிபாட்டு கூடங்கள் அமைக்கப் பட்டிருந்ததாக கூறியிருந்தேன்.  அவை ஒவ்வொன்றும் தனித்துவமான கருத்தியல் ஒன்றின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்தன.இன்று அந்த பந்தல்கள் சிலவற்றின் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 
கொல்கத்தா அரசியலில் முக்கியமானவரான சுப்ரத்தோ முகர்ஜி என்பவரின் பந்தல் இது . உள்ளே தேவியின் பெரிய சிலையுடன், லஷ்மி, சரஸ்வதி, விநாயகர் மற்றும் முருகனின் சிலைகள், பகட்டான அலங்காரத்துடன் பளபளப்புடன் காட்சியளித்தது.
சுவற்றிலும், மேற்கூரைகளிலும்,  நுன்னிய கலைநயத்துடன் அழகிய  வேலைப் பாடுகள்,வரைபடங்கள், பெரிய பெரிய விளக்குகள். எதோ ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் நுழைந்ததைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது.

இந்தப் பந்தலுக்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறக்கேட்டோம்.  முக்கிய பிரமுகர்கள், அரசியவாதிகள், துர்கா பூஜையின் போது, இது போல பணத்தைக் கொட்டி பகட்டான பெரிய பெரிய பந்தல்களை அவர்கள் பேரில் அமைக்கிறார்கள். வருடா வருடம்  இவர்கள் அமைக்கும் பந்தல்களை வேடிக்கை பார்க்க திரளான கூட்டம் வருகிறதாம்.

மேலே சொன்ன பந்தலுக்கு பக்கத்தில்தான் கீழே நீங்கள் பார்க்கும் இந்தப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதிக பணம் செலவு செய்யப்படா விடினும், நுணுக்கமான கைவேலைப் பாட்டிலும், கலைநயத்திலும் சிறந்த தரத்துடன்                அமைக்கபட்டிருந்தது. உள்ளே மரவேலைபாடுகளுடன், அளவிலே சின்னதாக இருந்தாலும் பளிச்சென்றிருந்தது.                                                                                                                                                                     
               
தாகூரின் சிலையை முன்னால் நிறுத்தி  அவரின் படைப்புகளை ஓவியமாக தீட்டி அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல். தாகூர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மற்ற கலைஞர்களின் ஓவியங்களும் இங்கே இடம் பெற்றிருந்தது.

பாரம்பர்ய கட்டிடகலையை அடிப்படையாக கொண்டு அத்தனை ஆடம்பரமில்லாத எளிமையான தோற்றத்துடன் கூடிய ஒரு பந்தல்


மேலே படத்தில் இருப்பது போலத்தான் முந்தைய காலத்தில் துர்கா பூசையின் போது சிலைகள் இது போலவே வடிவமைக்கப்பட்டனவாம்.


வங்க மொழியின் புகழ்பெற்ற எழுத்தார்கள், கவிஞ்சர்களின் படைப்புகள், வங்க இலக்கியம் ஆகியவைகளை பெருமையாக எடுத்துக்காட்டுகிறது இந்தப்பந்தல் அற்புதமான ஒரு வடிவமைப்பு.

 

கீழே நீங்கள் பார்ப்பது இரயில்வே அமைச்சர் செல்வி. மம்தா பேனர்ஜியின் யோசனையில் வடிவமைக்கப்ப்ட பந்தலாம் இது. மாடர் ஆர்ட் போல் இருக்கும் இந்த தேவியின் சிலையைப் பாருங்கள்.


 நான்கு பக்கமும் வண்ணமயமாக காட்சியளித்த இந்த பந்தலில் மற்ற பந்தல்களில் காணப்பட்ட  மக்கள் கூட்டம் இல்லை. என்ன காரணமோ தெரியவில்லை.

இந்த பந்தல்கள் ஒரு வகையில் நமது திருவிழா பொருட்காட்சி அரங்கங்களையே நினைவு படுத்தியது. உண்மையைச் சொல்வதானால் இந்த பந்தல்களில் பணமும், பகட்டுமே மிஞ்சியிருந்தது. பக்தி இரண்டாம் பட்சமாகவே இருந்தது நெருடலாய் இருந்தது. மேலே ஒரு படத்தில் பூசாரி ஒருவரைப் பார்க்கலாம்...பார்க்கவவே பாவமாக இருந்தார்..இவ்வளவு பகட்டாக நடக்கும் ஒரு நிகழ்வில், வருமையில் வாடும் இவரை கண்டு கொள்பவர்கள் யாரும் இல்லை

கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம். பெரியாரை ஒரு சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலைவர் என்கிற வகையில் ரொம்பவே பிடிக்கும். தமிழகத்தில் பெண்கள் சமூக மேம்பாடு கண்டதற்கு அவர் மட்டுமே காரணம் என தீவிரமாய் நம்புகிறவள் நான்.ஆனால் அவரது கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் நான் உடன் படுவதில்லை....கொல்கொத்தா அனுபவம்  ஒன்றிற்கு பிறகு பெரியார் கடவுள் மறுப்பில் உறைந்திருந்த உண்மை உறைத்தது.

அந்த அனுபவம்...அடுத்த பதிவில்Wednesday, December 01, 2010

உலக எய்ட்ஸ் தினம் 2010


இன்று உலக எய்ட்ஸ் தினம்.மருத்துவ உலகத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் நோய். முற்றிலுமாய் தீர்த்திடும் மருந்துகள் கண்டுபிடிக்கப் படா விட்டாலும், நோயின் தன்மையோடு போராடி நோயாளியின் வாழ் நாளை நீட்டிக்கச் செய்யும் மருந்துகள் இப்போது சந்தையில் வந்து விட்டன.இந்த நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது முழு மூச்சுடன் செயல் படுத்தப் பட்டு வருகிறது.

விழிப்புணர்வுடன் செயல் பட்டால் இந்த நோயின் தாக்குதலில் இருந்து எளிதாக தப்பி விட முடியும்.உலகலாவிய அளவில் இந்த விழிப்புணர்வு என்பது பல கட்டங்களாய் செயல் படுத்தப் பட்டிருக்கிறது.தடுப்பு முறைகள்,  சிகிச்சை முறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள், மருந்துகள், மறுவாழ்வு, என பல கூறுகளை உள்ளடக்கியது இந்த விழிப்புணர்வு திட்டம்.

உலகம் முழுவதும் திசெம்பர் முதல் தேதியன்று, உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தியலை மையமாக கொண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதை அந்த ஆண்டு முழுவதும் பிரசாரங்கள், நடவடிக்கைகள், முடிவுகள், கலந்துரையாடல், கருத்தரங்குகள் என பல கட்டங்களாக செயல் படுத்துகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கருத்தியல் ”மனித உரிமை மற்றும் அனைவருக்குமான திட்டங்கள் ”.

பாலியல் தொழிலாளிகள், திருநங்கையர், மற்றும் ஓரினச் சேர்கையாளர்களை இச்சமூகம் தீண்டத்தகாதவர்களைப் போல அணுகுகிறது. இதனால் பல இடங்களில் இவர்களின் அடிப்படை மனித உரிமை கூட மறுக்கப்படுகிறது என்பது வேதனையான உண்மை. அத்தகைய மனப் போக்கினை அறவே வேரறுக்க வேண்டிய எல்லோருக்கும் எல்லாமும் பொதுவானது என்கிற கருத்தியலே இந்த ஆண்டு வலியுறுத்தப்படுகிறது.

இனி கொஞ்சம் சொந்த கதை...

இந்தியா முழுமைக்கும் எய்ட்ஸ் தொடர்பான திட்டங்களை வகுத்து அவற்றின் செயல்பாடுகளை நெறிப் படுத்தி மேற்பார்வையிடும்அரசுத் துறையில் அங்கம் வகித்தவள் என்ற வகையில் மற்றவர்களை விட நிதர்சனங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.எனது முந்தைய பதிவுகளில் எனது அனுபவங்களையும், ஆதங்கத்தினையும் சமயத்தில் ஆத்திரத்தையும் பதிந்திருக்கிறேன்.

இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் முகங்கள்,அவர்களின் கதைகள், வேதனைகள், அதிர்ச்சிகள், வெறுமை, தனிமை,இயலாமை என எல்லா உணர்வுகளையும் சந்தித்த பயணம்.பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி அவர்களூக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு பல நாட்கள் இறுக்கமாய் வீடு போயிருக்கிறேன்.

இந்த பதிவின் இடது பக்கத்தில் ஒரு அழகிய குழந்தையின் படத்தினை பார்க்கலாம்.பலரும் அது நானாகவோ அல்லது என் குழந்தையாகவோ இருக்கலாம் என நினைத்திருக்க கூடும். யாரோ ஒருவரின் கவனக்குறைவால், பொறுப்பின்மையால் பிறந்த பிஞ்சு இவள்.இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி.இவளின் மரணத்தை கண்ணெதிரில் பார்த்தவள் நான்.இனியொரு குழந்தைக்கு இத்தகைய நிலை வரவிடக் கூடாது என்கிற உறுதியை பார்வையால் உணர்த்தியதவள்.

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டம் என்பது தனியொரு அமைப்பையோ, அரசாங்கத்தையோ சேர்ந்தது அல்ல என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் இந்த நோயினை தடுப்பதற்கு தேவையான விழிப்புணர்வினையும், பாதிக்கப் பட்டவனுக்கு உறுதுனையாக நிற்கும் மனப்பாங்கினையும் கொள்ள வேண்டும்.

இந்த நாளில் அதற்காக உறுதியினை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.