Friday, April 27, 2007

நான் தாங்க மீனாட்சி பேசறேன்...

கண்ணுக்குள் சிற்றோடையாய் இருந்து
கண்ணத்தில் கன மழையாய் பொழிந்து
நெஞ்சுக்குள் காவிரியாய் புகுந்த ஆனந்தக் கண்ணீருடன் எழுதுகிறேன்..


தமிழ்மண அன்பர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

என்னைப் பற்றிய அக்காவின் (உங்கள் மங்கை) பதிவுகளும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும், உங்களில் சிலரின் பதிவுகளையும் படித்தேன். முக்கியமாக இந்தப் பதிவு. அதில் இருந்த முதல் பத்தியை படித்து விட்டு, என்னுள் எழுந்த உணர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு நிமிடம் நான் யார் என்பதை மறந்துவிட்டேன். அடுத்த பத்தியை படித்த பின்பு தான் என் சுயத்திற்கு வந்தேன். அப்பொழுது எழுந்த உணர்வே மேலே உள்ள கவிதை. படித்துவிட்டு பேசாமல் போக மனமில்லாமல் இந்த பதிவை எழுத ஆசப்பட்டேன்.

நான் யார் என்று தெரிந்து கொள்ள இதை படிக்கவும். இந்த ஊடகத்தின் மூலம் பல அன்பு நெஞ்சங்களை சென்றடைய முயல்கிறேன். கொஞ்சம் பெரிய பதிவு, மன்னிக்கவும். கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் என்னுள் இருக்கும் சில உணர்வுகளையும், எண்ணங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

இன்னும் அழியாமல் இருக்கும் தமிழ் உணர்வை பார்த்து மகிழ்ந்தேன். நாடு விட்டு நாடு சென்றாலும், இந்த அளவிற்கு தமிழ் பற்றுடன், ஒரு குடும்பமாய் இருக்கும் இந்த அன்பு நெஞ்சங்களைப் பார்த்து மனம் நெகிழ்கிறது. கோவை அன்பர்கள் சிலரின் பதிவுகளையும் படித்தேன். இது ஒரு தனி சந்தோஷம்.

நாங்களும் அக்காவும் ஈடு பட்டிருக்கும் ஒரு திட்டத்தின், ஒருங்கினைப்பாளர்களின் சந்திப்பிற்கு இங்கு தில்லி வந்துள்ளோம். இதைப் பற்றிய தகவல்களை சந்திப்பு முடிந்த பின்பு அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

பாதிக்கப்பட்ட நான் இன்று தன்னம்பிக்கையுடன் வலம் வரக் காரணம், என்னை சுற்றி இருக்கும் 'மனித நேயங்கள்', அக்காவைப் போல உறவுகள். ஆனால் இந்த பாக்கியம் பாதிக்கப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் கிடைப்பதில்லை. அதற்காகத்ததான் என்னால் ஆன சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மை நிலை உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை. இன்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குறிப்பாக கணவனை இழந்த இளம் பெண்கள். கணவனை இழந்த பின்னர் இவர்கள் பெற்றோராலும், புகுந்த வீட்டாராலும் நிராகரிக்கப்பட்டு, தனியாளாய், தங்கள் நிலையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு, அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். தனியாக வாழ வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட இவர்களுக்கு நம் சமுதாயம் எந்த வித பாதுகாப்பும் கொடுப்பதில்லை. ஒரு சராசரி பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் கஷ்டங்கள் இவர்களுக்கும் ஏற்படுகிறது.


தற்போது கோவையில் " பாதிக்கப்பட்ட தாய்மார்களின் மேம்பாட்டு கூட்டமைப்பு" (Society for Positive Mothers Development) என்ற அமைப்பின் மூலம்
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சில உதவிகளை (மருத்துவ உதவி, அலோசனை, யோகா, சத்துணவு, கல்வி) செய்து வருகிறோம். கோவை அளவில் இயங்கி வரும் இந்த அமைப்பைப் போல பல அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகிறது. நான், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆலோசகராகவும் பணி புரிந்து வருகிறேன்.

நானும் டாக்டர் மகாதேவனும்

படத்தில் இருக்கும் டாக்டர். மகாதேவன் அவர்களின் ஆதரவுடன் இன்று கோவையில் பாதிக்கப்பட்ட பலர் நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருத்தியாக நானும் வாழ்ந்து கொண்டிருகின்றேன். அவரின் சேவையை ஒரு வரியில் சொல்லி புரிய வைக்க முடியாது. அவரைப் பற்றிய தனிப் பதிவு ஒன்று வரும். என்னை தன் மகளாக தத்தெடுத்துக் கொண்டுள்ளார் என்றால், புரியும் உங்களுக்கு அவருள் இருக்கும் மனித நேயம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உதவி மறுக்கப் படுகிறது. இதனால், தடுத்திருக்கக்கூடிய பல இழப்புகளை பார்த்து விட்டோம். இது மேலும் நடக்காமல் இருக்க எங்கள் அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று ஒரு மருத்தவமனையை நிறுவுவது என்பது எங்கள் லட்சியம். கடவுள் இதற்கு அருள் புரிய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கென மாநில அளவில் ஒரு கூட்டமைப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன். அதற்கான முதற்கட்ட முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தொடங்கப்பட்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தொழில் பயிற்சி வகுப்புகள் (கம்ப்யூட்டர்) தொடங்கலாம் என்று இருக்கிறேன். சென்னையை மையமாக வைத்து தொடங்க இருக்கும் இந்த திட்டம், எல்லாம் சரியாக நடந்தால், விரைவில் செயல் படும்.

மனிதருள் மனிதராய் வாழும் ஒரு கடவுள்-சகோதரி. லயோலா

பாதிக்கப்பட்ட நாங்கள், சாந்தி ஆசிரமம், டாக்டர். மகாதேவன், சகோதரி.லயோலா, மங்கை, தன்னல மற்ற சில தொண்டு நிறுவணங்கள், ஒரு குடும்பமாக, புரிதலுடன், ஒத்த சிந்தனையுடன், மன நிறைவுடன் சேர்ந்து பணி புரிகிறோம். எங்களுக்குள் இருக்கும் பல அனுபவங்கள், உணர்வுகள், சாதிக்க வேண்டும் என்ற உந்துதல், எங்களை ஒன்றாக கட்டிப் போட்டிருக்கிறது. விமானம் ஒன்று வந்தால் ஓடி வந்து அண்ணாந்து பார்த்து கூச்சல் போடும் ஒரு சராசரி கிராமத்துப் ( தொண்டாமுத்தூர், கோவை) பெண்ணாக வாழ்ந்தவள் தான் நான். இன்று அதே விமானத்தில் சாதரணமாய் பறந்து கொண்டிருகின்றேன். இதற்கு காரணம், என் நிலையும், அதை உணர்ந்து எனக்கு உதவி செய்யக் காத்துக் கொண்டிருக்கும் சில மனித நேயங்கள். இந்த நம்பிக்கைக்கு நன்றி என்ற ஒரே வார்த்தையில் சொல்லி என்னை அவர்களிடம் இருந்து வேறு படுத்திக் கொள்ள எனக்கோ அவர்களுக்கோ விருப்பம் இல்லை.

மறுமணம் செய்து கொண்ட எங்கள் தோழியும், பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனும்

உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். பாதிக்கப்பட்ட யாரையாவது பார்க்க நேர்ந்தால், நம்பிக்கை கரம் நீட்டுங்கள். அதைத் தவிர நாங்கள் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கொடுக்கும் நம்பிக்கையை சொல்லும் வண்ணம் உங்கள் பதிவுகளில் 'ரெட் ரிப்பனை' போட்டு உங்கள் ஆதரவை காட்டுங்கள். இது என் அன்பு வேண்டுகோள். ரெட் ரிப்பனில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். அந்த உணர்வைப் பற்றி எங்களுக்குத் தான் தெரியும்.

நீண்ட நாட்களுக்கு பின் சந்திப்பதினால், சந்தோஷம் எனக்கும் அக்காவிற்கும். வந்த இடத்தில் தோழி முத்துலெட்சுமியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. சந்தோஷம். உங்களில் சிலரின் பதிவுகளையும் படித்தேன். சிந்திக்க, சிரிக்க, வியக்க, அழ வைத்த எல்லாமே முத்து முத்தான பதிவுகள். இந்த உலகம் என்னை வியக்க வைக்கிறது. வெளி உலகத்தில் இல்லாத ஒரு புரிதலும், உணர்வையும் இங்கே நான் உணர்கிறேன். அசாதாரணமான ஒரு சக்தி உங்களிடம் இருக்கிறது. இதே போல் நீங்கள் என்றும் ஒற்றுமையுடன், உங்கள் எழுத்தின் மூலம் பல நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். ஆக்கப் பூர்வமான சில காரியங்களும் செய்யலாமே, செய்வீர்கள் என்ற நம்பிக்கையிடன் விடை பெறுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம். எங்களையெல்லாம் பார்த்த சந்தோஷத்தில் இருக்கும் அக்காவிடம் பேச இன்னும் நிறைய இருப்பதினால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

எங்கள் திட்டங்களும், லட்சியமும் நிறைவேற கடவுளின் ஆசியும், உங்கள் வாழ்த்துக்களும் வேண்டி உங்கள் தோழி

மீனாட்சி.

( எங்கள் அமைப்பின் வலைதளம் . இதில் செய்யவேண்டிய சில மாற்றங்கள் பற்றி அக்காவிடம் பேசிக் கொண்டிருக்கின்றேன்.)

பொறுமையாக படித்தமைக்கு நன்றி.

Tuesday, April 24, 2007

முன் மாதிரி மாணவர்கள்

நமக்காக பல சட்டங்கள் இது வரை அமலுக்கு வந்து விட்டன. அந்த சட்டம் எல்லாம் எந்த அளவிற்கு மக்களுக்கு உதவியாக இருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அன்மையில் அமலுக்கு வந்த தகவல் உரிமை சட்டம் ஓரளவிற்கு மாறுதல்களை செய்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கமே அரசின் பொதுநல விஷயங்களில் வெளிப்படையான தகவல்களை தரவேண்டும் என்பது தான் என்பதை நாம் அறிவோம். இந்த சட்டத்தை பயன் படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது. நமக்கு இருக்கும் சமுதாய பொறுப்பை சீண்டிப் பார்க்கும் ஒன்று என்று கூட எனக்குத் தோன்றும்.

அமலாக்கப் படும் எந்த ஒரு சட்டமும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே இயற்றப் பட்டாலும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் அதை சரிவர உபயோகிக்க முடியாமல் போகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல தொண்டு நிறுவணங்கள் இன்று களத்தில் இறங்கியுள்ளது. விழிப்புணர்வுடன் சேர்ந்து இன்று நமக்கு தேவை சமுதாய முன்னேற்றப் பணிகளில் அக்கறை, நம்மைச் சுற்றி நடப்பனவற்றில் கவனம்.

மேலே கூறிய சமுதாய பொறுப்பை உணர்ந்து சில ஐஐடி மாணவர்கள், இங்கு தில்லியில் இந்த சட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். தில்லியில் உள்ள சில முக்கிய சாலைகள் (ரிங் ரோடு, NH-10, NH-24) சரி வர பராமரிக்கப்படாததால், தினமும் அந்த சாலை வழியே வரும் ஐஐடி மாணவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் 46 விண்ணப்பங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். சாலை இடப்பட்ட சில தினங்களுக்குள் ஏன் அதில் வெடிப்புகளும், குழிகளும் ஏற்படுகின்றன?, பராமரிப்புச் செலவிற்காக ஒதுக்கப்பட்ட தொகை (சுமார் 420 கோடி), சாலை இடப்பட்ட பின் நடத்திய ஆய்வு ரிப்போர்ட் ஆகிய தகவல்களை கேட்டு இந்த மாணவர்கள் விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அரசு செய்து முடித்த வேலைகளை ஆய்வு செய்யவும் இந்த சட்டம் உதவுமாதலால், இந்த சாலைகளின் தரத்தை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

சுவாதி என்ற ஒரு மாணவி தாக்கல் செய்த ஒரு விண்ணப்பத்தின் பயனாக, சில மாணவர்களும், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு பொறியாளரும் இந்த சாலையை ஆய்வு செய்தார்கள். இவர்கள் ஆய்வு செய்யப் போவதை அறிந்து, இரண்டு நாட்களுக்கு முன் சாலை பராமரிப்பு பணிகளை துவங்க உத்தரவிட்டனர் அதிகாரிகள்.

இளைய சமுதாயம் இது போல பொறுப்புடன் நடந்து கொள்வது மன நிறைவைத் தருகிறது. நம் சமுதாய அக்கறையை ஒரு முறை சுய பரிசோதனை செய்யத் தூண்டும் ஒரு செயல்பாடு. இவர்களைப் போல ஒவ்வொரு மாணவரும் சிந்தித்தால் ஆரோக்கியமான ஒரு சந்ததி உருவாகும் என்பதில் ஐயம் இல்லை.

Thursday, April 19, 2007

வெகுஜன ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை

வெகுசன ஊடகங்கள், கருத்தையும் சிநதனையையும் தூண்டும் வண்ணம் இருக்கும் காலம் போய், இப்பொழுது அப்படி ஒரு சிந்தனையே இல்லாமல் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. இன்று குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டியும், இன்டர்னெட்டுமே கதி என்று இருக்கையில், அது ஒரு ஆரோக்கியமான ஊடகமாக இருக்க செய்வது நம் கடமையில்லையா.

பல நல்ல மாற்றங்களை செய்துவரும் ஊடகங்கலை பாராட்டவும் செய்கிறோம். ஆனால் இவை சில சமயம் தவறுகளையும் செய்து வருகிறது. செய்யக் கூடாதனவற்றை ஊடகங்கள் செய்யும் போது அதை சுட்டிக்காட்டுவது நம் கடமை. அதனால் தான் இந்த பதிவு.

நேற்று CNN-IBN லைவ்வாக நடத்திய ஒரு நிகழ்ச்சி, ஊடகங்களின் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையை கேள்விகுறியாக்கிவிட்டது. இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு விஷயம், அபிஷேன் பச்சன் - ஐஷ்வர்யா ராய் திருமணம். ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு இந்த 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த' ஒரு நிகழ்வை மக்களுக்கு கொண்டு வருவதிலே மிகவும் மெனக் கெடுகிறார்கள்..சரி போகட்டும். அவர்களுக்கு விளம்பரம் தேவைப்படுகிறது, சம்பந்தப்பட்ட குடும்பத்தாரை குஷிப்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் மக்களும் இதை எதிர்பார்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட தொலககாட்சியின் சொந்த விருப்பு, வெறுப்பு இது. நான் விமர்சிக்க கூடாது.

நான் இதைப் பற்றி பேச வரவில்லை.

நேற்று இந்த திருமணம் சம்பந்தப்பட்ட ஒரு சடங்கு அமிதாப் வீட்டில் நடந்தது. இதற்கு CNN-IBNல் இருந்து இரண்டு இளைஞர்கள், அமிதாப் வீட்டின் எதிரே நின்று கொண்டு, வருபவர்கள் போகிறவர்களை படம் பிடித்து, அபிஷேக் பற்றியும் ஐஸ்வ்ர்யா பற்றியும் 'சுவையான' தகவல்களை பரிமாரிக் கொண்டிருந்தார்கள். பின் அருகில் இருந்த குழந்தைகளிடம் சில கேள்விகள் கேட்டு இம்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு பேரில் ஒருவர் ஒரு சின்ன குழந்தையிடம்.. 4 அல்லது 5 வயது தான் இருக்கும், அந்த குழந்தையிடம் கேட்ட கேள்வி, இப்படியும் ஒரு தொலைக்காட்சி தரம் கெட்டு போகுமா என்று நினைக்க வைக்கிறது.

அந்த குழந்தையிடம் அவர் கேட்கிறார்

'' hey, do u know what happens after marraige?"

அந்த குழந்தை ஒன்றும் பேசவில்லை

''do you know what people do after marraige?''

குழந்தை மீண்டும் மிரள மிரள முழித்தது


''do you know that a child is born after marraige?''

இதற்கெல்லாம் 5 வயது குழந்தை என்ன பதில் சொல்லும்.

''do you know how a child is born?''

குழந்தைக்கே பொறுக்கவில்லை போலும்...தலையை பலமாக அட்டிவிட்டு இறங்கி ஓடிவிட்டது.

இந்த கேள்விகளை கேட்டு விட்டு அந்த இரண்டு லூசுகளுக்கும் ஹ ஹா ஹா என்று சிரிப்பு வேறு.

இதையெல்லாமா மக்கள் எதிர் பார்க்கிறார்கள்?. இவர்களுக்கு எல்லாம் என்ன சமுதாய பொறுப்பு இருக்கிறது? இத்தனை பலம் வாய்ந்த ஒரு ஊடகம், குழந்தைகளை வளர்ச்சியில் நல்லதொரு பங்கை வகுக்க வேண்டாமா?.

இதில் இன்னொரு பெண் குழந்தையை, பத்து வயது இருக்கும், ஷாருகான் பற்றி எதோ கேள்வி கேட்கிறார்கள், என்ன கேள்வி என்று மறந்து விட்டது,

அந்த பத்து வயது சிறுமியின் பதில்..

' hmmm என்று ஒரு இழுவை..பின், தோலை குலுக்கி, கண்ணை சிமிட்டி

" ya may be Shaaru is jealous of Abishek".

மக்களுக்கு கொண்டு சேரவேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் எத்தனையோ இருக்க , தேவையில்லாத செயல்களும் விமர்சனங்களும் தான் செய்து கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இது போல ஊடகங்களை எவ்வளவு கவனமாக குழந்தைகள் கவனித்து வருகிறார்கள் என்பது தெரியாதா இவர்களுக்கு?. ஊடகங்கள் எந்த அளவிற்கு ஒரு பாதிப்பை உண்டாக்கிறது என்பதை இவர்களே பல ஆராய்ச்சி அறிக்கைகளை நிபுணர்கள் கொண்டு விவாதிக்கத்தான் செய்கிறார்கள்.

நாட்டின் எதிர்காலம் பற்றிய எந்தவிதமான அக்கறையோ எதிர்பார்ப்போ இல்லாத இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை.

Wednesday, April 18, 2007

மேடையேறும் நிதாரி

நிதாரி கொலைகள் நடந்த வீட்டை கடப்பதற்கு கூட பயந்து தயங்கிய நிதாரி குழந்தைகள், இவர்களுடன் சிரித்து, சண்டைபோட்டு விளையாடிய தோழியர், ஒரு காமுகனுக்கு பலியான கொடுமையை மேடையேற்ற தயாராக உள்ளனர். 'பான்டேஸ்' என்ற ஒரு வீதி நாடகக் குழுவினர் இவர்களை அனுகி, '' இங்கு நடந்த கொடுமையை மக்களுக்கு எடுத்து கூற உங்களை விட பொருத்தமானவர்கள் இருக்க முடியாது'' என்று ஊக்கமும் தைரியமும் கொடுத்து, இங்கு நடந்தவற்றை ஒரு நாடகமாக மேடை ஏற்ற குழந்தைகளை தயாராக்கி வருகிறார்கள்.

நிதாரியில் இருக்கும் 50 குழந்தைகள், இதில் சிலர் சாவின் வாயில் வரை சென்று தப்பித்தவர்கள். இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டில் புதறுக்குள் மறைந்து உட்கார சென்ற சிலர், பின் வெளியெ வராமலே போன ஜீரனிக்க முடியாத உண்மையை நடித்து காட்ட இருக்கின்றனர். தங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போதே காணாமல் போன இவர்களின் நட்பு வட்டத்தின் சாவின் பின்னாலும் சாகாத வடுக்கள் இவர்களிடம் மட்டுமே அல்லவா?.

இதில் ஒரு பெண் அவளின் அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு இந்த வீட்டின் வழியே வந்து கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு கை இவளை உள்ளே இழுத்து போட பார்க்க, கையில் வைத்து இருந்த இரும்பு கம்பி கொண்டு இழுத்தவனை அடித்ததினால், பிடி தளரவே ஓடி வந்து விட்டாள். இதற்கு பின் பல குழந்தைகள் காணாமல் போன போது, இந்த சம்பவத்தை காவல் துறையிடம் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நம் சமுதாயத்தில் புறையேறிப்போன அரசு அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கையும் மேடையேற்ற உள்ளனர்.

இவர்களே இதில் நடித்து, சில காட்சிகளை எழுதி, இயக்கவும் செய்கிறார்கள். பாந்தருக்கும் அவன் நண்பர்களுக்கும், கோலி பெண்களை சப்ளை செய்த முறை, நடந்த கொலைகளில் வீட்டில் வேலை செய்த பெண்ணின் பங்கு (ரத்தக் கறை படிந்த தரையை கழுவி விடுவது உட்பட), கொலை செய்த உடலை கோலி சாக்கடையில் வெட்டி போட்டது ஆகிய அனைத்து செயல்கலையும் நடித்து காட்ட இருக்கிறார்கள்.

இந்த நாடகத்தை அரங்கேற்ற இக்குழந்தைகள் காட்டும் ஆர்வம், வெளிப்படுத்தும் உணர்வு நம்மை மனம் நெகிழச்செய்கிறது. இந்த நாடகத்தில் கடைசி கட்டம் மட்டும் வசனம் ஏதும் இல்லாமல், மொளனமாக நடித்துக் காட்ட இருக்கிறார்கள். கண்ணீரை வர வைக்கும் ஒரு நடிப்பு. எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தால், இது நாள் வரையில் கிரிகெட்டும், பட்டமும், விட்டு விளையாடி கொண்டிருந்த இந்தச் செல்வங்கள், இன்று உணர்ச்சி பெருக்குடன் நடிக்க முன் வருவார்கள்?.

ஏனோ இந்த சம்பவத்தை மறக்கவே முடியவில்லை. அதனாலேயே மீண்டும் குழந்தைகளையும், பாதிக்கப்பட்ட பெற்றோர்களையும் பார்த்து பேசலாம் என்று சென்றேன். அப்போது தான் இந்த தகவல்கள் கிடைத்தன. நாளிதழ்களிலும் இந்த செய்தி வந்தது.ஒத்திகை நடந்து கொண்டு இருக்கிறது.

படத்தில் குழந்தைகளின் முகத்தை பாருங்கள். எவ்வளவு கலக்கம், அதிர்ச்சி..

Tuesday, April 17, 2007

ஆஹா எத்தனை அழகு....

லட்சுமி கிட்ட இருந்து தப்பிச்சுட்டு வந்தா நம்ம காட்டாறு கிட்ட மாட்டிக்கிட்டேன். அதுனால இந்த அழகு காட்டாறுக்கும், எங்க அம்மணிக்கும்.

மழலை உலகம்


பிஞ்சுக் குழந்தைகள், அதாவது பிறந்த குழந்தைலிருந்து 3 மாத குழந்தை வரை, பார்த்தீங்கன்னா, தூக்கத்தில சில சமயம் சிரிக்கும், அழுகற மாதிரி உதட்டை பிதுக்கும். பெரியவங்க சொல்லுவாங்க, அது கடவுள் கிட்ட பேசி சிரிக்குதுன்னு. ஆனா இது வரைக்கு அது ஒரு புரியாத புதிர், அதிசியம், அழகு, கொள்ளை அழகு இது. அப்படி எந்த உலகத்துல தான் இருப்பாங்களோ.. எவ்வளவு நேரம் வேனா பார்த்துட்டே இருக்கலாம். என் பெண் பிறந்தப்போ இப்படி தூக்கத்தில சிரிக்கும் போது அவள எடுத்து கசக்கி கொஞ்சுனா, உடனே அழுக ஆரம்பிச்சுடுவா.. அம்மா சொல்லு வாங்க, குழந்தைய சமாளிக்கிறத விட உன்ன சமாளிக்கிறது தான் எனக்கு பெரும்பாடா இருக்கு.. நீ முதல்ல ஆஃபீஸ்க்கு போன்னு விரட்டி விடுவாங்க.

முதல் நாலு, அஞ்சு மாசம் எங்கேயும் நகர மனசு வராது, முகத்தில் பல சேஷ்டைகள் பண்ணும். இதோ இதோ இது என் சொத்து அப்படீன்னு ஒரு கர்வம் அப்போ. ஆஃபீஸ்ல இருந்து வந்த பின்னால சில சமயம் அழுதுட்டு இருந்தா, நம்ம எடுத்த அப்புறம் அழுகைய நிறுத்தும்...அப்ப மனசுல ஒரு பெருமிதம் வரும் பாருங்க..அது எல்லாம் அனுபவிச்சு பார்க்க வேண்டிய அழகு. இப்ப நினச்சாலும் கண்ணு ஈரம் ஆகுது.ம்ம்ம்ம்

கருப்பு
கருப்பாக இருப்பவர்களுக்கு ஒரு வசீகரம், கம்பீரம், அதீத அழகு. கருப்பு அழகற்றதுன்னு எப்படியோ ஒரு கருத்து நமக்குள்ள வந்துருச்சு. குழந்தை பிறந்தா, நல்லா இருக்கான்னு கேக்குறதுக்கு முன்னாடி, குழந்தை 'சிவப்பா, அழகா இருக்கா' ன்னு கேப்பாங்க. அப்படீன்னா, கருப்பு அழகற்றதுன்னு முடிவு. வெள்ளைத் தோலுக்கான ஏக்கம் இல்லாத மக்கள் நம்மிடையே மிக சொற்பம். வெள்ளைத் தோலுக்கு கிடைக்கும் தனி மரியாதை, அந்தஸ்து தான் இதற்கு காரணம். தோலின் நிறத்த பார்த்து அறிவையும், நட்புக்கான தகுதியையும் எடை போடுற உலகம் தானே இது.


என்னதான் சொல்லுங்க கருப்பாக இருக்கும் ஆண்,பெண்களின் அழகே தனி தான்.

தாய்மையும் நட்பும்.


என்ன மன உலைச்சல் இருந்தாலும் அம்மாவ பார்த்தா, இல்ல ஃபோன்ல பேசினா கூட போதும் மனசு லேசாயிடிது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சகிப்புத்தன்மையோட, அன்பு காட்டறது தான தாய்மை?. நம்மள பார்த்து சந்தோஷ படற ஒரு நிஜம். அது மாதிரி 'நான் இருக்கேன்னு' பல சமயங்கள்ல நம்ம நண்பர்கள் கிட்ட இருந்து வெளிப்படற 'இந்த தாய்மை' ஒரு தனி அழகு.

பாவடை தாவனி

பாவாடை தாவனி, லோலாக்கு, ஒத்தை சடை, சைட்ல ஒரு ரோஸ், விபூதி கீரல் அதுல லேசா குங்குமப்பொட்டு..இந்த அழகு வேற எதுலங்க இருக்கு...அதுவும் தாவனி போட ஆரம்பிச்ச புதுசுல, இடுப்பும், முதுகும் தெரியுதேன்னு நெளிஞ்சு நெளிஞ்சு நடக்குற அழகு. எங்க ஸ்கூல்ல 9 ஆம் வகுப்பில இருந்து கண்டிப்பா தாவனி போடனும். அந்த முதல் நாள் அனுபவம் இன்னும் பசுமையா இருக்கு மனசுல. தாவனி போடுட்டு பசங்களுக்கு முன்னாடி போறதுக்கு வெட்கம். எங்களை பார்த்து அவங்களுக்கு அதுக்கு மேல வெட்கம். தாவனி நல்லா நிக்கிறதுக்கு ஒரு டஜன் பின்னூசிகள குத்தி... எதுக்கு எடுத்தாலும் சிரிப்பு, தான் தான் அழகி என்ற ஒரு மமதை, ஓயாத பேச்சு... லட்சுமி சொன்ன மாதிரி இந்த வயது தான் அழகு. இப்பெல்லாம் கிராமத்துல கூட இந்த அழகு மிஸ்ஸிங்.

அடுத்து

எல்லாம் சொல்லீட்டு உங்களைப் பத்தி சொல்லலைனா அழகுக்கே அழகில்லாமல் போய்விடும்.

ஒவ்வொருவரிடமும் நான் ரொம்ப ரசிக்கும் அழகு.

அக்கா பேசும் போது ஒவ்வொரு முறையும் 'ப்பா' போட்டு பேசறது.

எங்க அம்மணி, படித்து, உணர்ந்து போடற பின்னூட்டங்களும், வரும் பின்னூட்டங்களைப் பார்த்து வெளிப்படுத்தும் மகிழ்ச்சியும் அழகு.

அழகப்பன் எங்களை எல்லாம் நேசமுடனும் 'தாயீ' என்று அழைப்பது அழகு.

நகைச்சுவை நாயகரின் சமீபத்திய
விசேஷம் அழகு.

தங்கம்மாவின்
இயல்பான, வெளிப்படையான பேச்சு அழகு.


மிஸ் கன்ஃப்யூஸியஸ் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை எல்லாம் பார்த்து அம்மணியே குழம்பிப் போய் , அப்புறம் அதிலேயே இன்ஸ்பயர் ஆகி, அடுத்த புரியாத பதிவை தயார் செய்வது அழகு. (ஆமா... என்ன ஆச்சு ஆளக் கானோம்.)

இவங்க மனசுக்குள்ள இன்னும் எத்தனை விஷயங்கள் தான் இருக்கோ. இவங்க எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடறது இல்லை. ஒவ்வொரு முறையும் நல்லா இருக்குன்னு மட்டும் சொல்றதுக்கு எனக்கே கஷ்டமா இருக்கும். வேற எதுவும் எழுத தெரியாது. ஆனா சில வரிகள் படிச்சா அன்னைக்கு பூரா மனசு அதிலேயே இருக்கும். உதாரணத்துக்கு

//வாழ்வோடு பிணைத்து வைத்திருந்த கயிறுகள் ஒவ்வொன்றாக அறுந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கை என்பது, இப்போது காண்பதுபோல வித்தைக்காரனின் கூடாரமாக, சர்க்கஸ் காட்டுபவன் நடக்கும் கயிறாக, மகாநடிகர்களின் மேடையாகத்தான் எப்போதும் இருந்ததா…? //

இதோ இப்போ புதுவெள்ளமா வந்து அசத்தும் இவளின் பட படப் பேச்சு அழகு.

இன்னும் இருக்கு. ஆனா என் பதிவ படிச்சா சிலருக்கு கொட்டாவி வருதாம்:-)

அதுனால மத்தவங்கள பத்தி எல்லாம் தனிப் பதிவா போடுக்கலாம்.

எதோ எனக்கு தெரிஞ்சத தெரிஞ்ச விதத்தில எழுதி இருக்கேன்.

சரி.. இப்ப யாரையும் கூப்பிடலைன்னா கொத்தனார் வூடு கட்டி அடிப்பார்.

இவங்க மூனு பேர கூப்பிடறேன்

சிவபாலன்

சிந்தாநதி

லக்ஷ்மி

Wednesday, April 04, 2007

நடமாடும் கடவுள்- (சாதனை பெண்கள்)


விளம்பரத்தேடலுக்கும், விளம்பரப்படுத்துவதற்காகவே அலையும் உலகம் இது. இந்த சகோதரியை நீங்கள் பார்க்க போனால் எழுத பேனாவை எடுத்தால் கூட அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர். ஆனால் இவரிடம் பேசிவிட்டு வந்தால் நம் மனதில் அவர் சொல்வதும் செய்வதும் தானாக பதிந்து விடும். எழுத தேவையில்லை. அவர்தான் கோவையில் ஒரு பிரபல கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டெ ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முகம் சுளிக்காது உதவும் Sr. லயோலா. பல வருடங்களுக்கு முன் இவரை முதல் முதல் பார்த்த போது என்னில் மின்சாரம் பாய்வது போன்ற ஒரு உணர்வு.

பேராசிரியராக பணிபுரிந்துகொண்டே பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் மாதாமாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அது பெண்கள் கல்லூரியானாலும் பாதிக்கப்பட்ட ஆண்களும் கல்லூரி வளாகத்தினுள் சென்று இவரை பார்க்க முடியும். அளுகையும் விரக்தியுமாக வரும் பாதிக்கப்பட்டவர்கள் , பின்னர் இவரின் அன்பும் உறுதியும் நிறைந்த வார்தைகளால் புத்துணர்வு பெறுகின்றனர்.

இவரிடன் வருபவர்கள் அனைவரும் ஏழைகளானதால் இவருக்கு வேண்டிய பண உதவி, பொருள் உதவி செய்ய மற்றவர்களை கேட்க தயன்குவதில்லை.

துணிக்கடைகளில் துணி, தொழில் அதிபர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை,, பணம் படைத்தவர்களிடம் பணம் என்று சலைகாமல் கேட்கிறார். மாதாமாதம் இவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்திற்கு பக்கத்து மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டபின் இவர்களை அரவனைக்கும் இவர், பள்ளி பள்ளியாய் சென்று விடலைப் பருவத்தினை நேர்த்தியாய் சமாளிக்குக் விதத்தையும் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறார். இந்த வயது குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறுகிறார்.

இவர் செய்யும் இன்னொரு சேவை எனக்கு தெரிந்து யாரும் செய்ததாக தெரியவில்லை. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து போனால் அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்ய அவர்களின் உறவினர்களே தயங்கு வார்கள். ஆனால் இவரோ அப்படி ஒரு சூழ்நிலையில் எல்லா சடங்குகளையும் இவரே செய்கிறார். இந்துவாக இருந்தால் இவரின் கண்ணியாஸ்த்ரி உடையை மாற்றி, இந்துவாக ஒரு சேலையைக் கட்டிகொண்டு எல்லா சடங்குகளையும் முறைப்படி செய்கிறார். அந்த சடங்குகளை எப்படி செய்ய வேண்டும் (மந்திரங்கள் உட்பட) என்று தெரிந்து வைத்திருக்கிறார். இந்துவாக இருந்தால் மந்திரங்களும், கிறுஸ்துவாய் இருந்தால் ஜபமும் செய்கிறார். அப்பொழுதானே அவர்கள் ஆத்மா சாந்தி அடையம் என்கிறார். இந்த மகத்தான காரியத்தை செய்யும் இவர் கோவையில் அதிகம் பிரபலம் அடையாதவர்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவமனையும், மயானமும் கொண்டு வரத் திட்டமிடிருக்கிறார். மறுமணம், குழந்தைகளின் படிப்பு, மருந்து என்று அதையும் விடாமல் கூர்மையாய் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மதம் கடந்து நிற்கும் இவரின் மனிதாபிமானமும், மனிதநேயமும் மனம் நெகிழ செய்கிறது. இவருடன் சேர்ந்து பணி புரிவதையே நாங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.

தொண்டு நிறுவணங்கள் என்ற பெயரை வைத்துகொண்டு இன்று லட்ச லட்சமாய் அன்னிய நிறுவனங்களிடம் பணம் சுரண்டும் 'சமூக சேவகர்கள்' வெட்கி தலை குனியவேண்டும்.

உறுதி, மெண்மை, கண்டிப்பு, அன்பு, வெளிப்படையான பேச்சு, உழைப்பு, துணிவு இது தான் சகோதரி. லயோலா. இவரைப் பற்றி இங்கே எழுதியதே எனக்கு மன நிறைவைத் தருகிறது. இப்பொழுதும் ஏதோ ஒரு உணர்வு என்னுள் பாய்வதை உணர்கிறேன்.

எந்தவித ஆதரவும் இல்லாமல் சேவைமனப்பான்மையே மூலதனமாக வைத்துக்கொண்டு பம்பரமாய் சுத்தி வரும் சதோதரி. லயோலா நம் கண் முன்னே சிரித்த முகத்துடன் நடமாடும் கடவுள்.