Thursday, June 28, 2007

நான் நொறுங்கிய பொழுதுகள்...

மிகை ஆர்வம் காரணமாக சமயங்களில் திட்டமிடாமல் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கிறோம். விளைவு பிரச்சனை வரும்போது அதை எதிர் கொள்ள முடியாமல் மன உளைச்சல்.காலம் கடந்த பின்னர் திரும்பிப் பார்த்தால் நாமளா இவ்ளோவ் முட்டாள்தனமா நடந்திருக்கோம்னு நினைச்சி வெக்கமும் வேதனையும் படுவோம்.அப்படி என் வாழ்க்கையில சந்தித்த ஒரு பிரச்சனையை பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது ஒரு பெண்ணால் எனக்கு ஏற்பட்ட இன்னல்கள், அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு, துன்பங்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத வேதனை வடுக்கள். நமக்கு நல்லது செய்தவர்களை எப்படி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதோ அப்படி நம்பவச்சு கழுத்தறுத்த துரோகிகளையும் வாழ்நாள் பூரா மறக்க நினைத்தாலும் முடியறதில்லை.

90களின் ஆரம்பத்தில் ஏதாவது தொழில் துவங்கி பெரிய 'தொழில் அதிபரி' ஆயிடனும்னு புராஜக்ட் எல்லாம் தயாரிச்சு வங்கியில குடுத்து PMRY ல லோன் கேட்டேன்.ஆச்சர்யமான ஆச்சர்யமா ஒரு வாரத்துல குடுத்துட்டாங்க. மாணவர்களுக்கான நோட்டு புத்தங்கள் தயாரிக்கலாம்னு பெங்களூரு போய் நாலஞ்சு பேர பார்த்து மெஷினரி எல்லாம் இறக்குமதி பண்ணி, முதல் வருடமே சுமார் 10 லட்ச ரூபாய்க்கு பள்ளிகளில் இருந்து நோட்டுகளுக்கான ஆர்டர் வந்துச்சு. தலைகால் புரியலை. ஏதோ சும்மா வீட்ல இருக்க பிடிக்காம ஆரம்பிச்சது இவ்வளவு நல்ல வரவேற்பு இருக்கேன்னு சந்தோஷம் ஆயுடுச்சு. இதற்கு பல காரணங்ககள் இருந்தாலும் இரு முக்கிய காரணங்கள், இந்த குறிப்பிட்ட தொழில்ல பெண்கள் யாரும் இல்லாததும் மேலும் நான் அணுகிய பெரும்பாலான பள்ளி தலைமை ஒரு பெண்ணா இருந்ததும்தான்.

முழுக்க முழுக்க labour oriented தொழில் ஆனதால் பணியாட்களை தாஜா செய்ய வேண்டியிருக்கும். நானும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு அவர்கள் தங்குவதற்கு
கம்பெனியிலேயே ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, ஊட்டி, கொடைக்கானல் என பல ஊர்களில் இருந்து ஆர்டர் வந்து குவிந்தது. முக்கியமா தூத்துக்குடியில் தான் அதிகமாக கிடைத்தது. 1994 இல் இருந்து 99 வரை, நான் பெரும்பாலும் தூத்துகுடியில்தான் இருந்தேன் என்று சொல்லலாம். மூன்றாம் ஆண்டே 20 லட்சமும், 4 ஆம் ஆண்டு 30 லட்சம் என டர்ன்ஓவர் உயர்ந்தது.இப்படி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் நான் அவசரப்பட்டு யோசிக்காமல் எடுத்த ஒரு முடிவும் அதன் விளைவும் என் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது என்றால் மிகையில்லை.

அந்த சமயத்தில் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்த ஒரு பெண்ணின் (அவளை பெண் என்று சொல்லக் கூட எனக்கு விருப்பம் இல்லை) நட்பு கிடைத்தது. ஆனால் அவளால் பல லட்சத்தை இழக்கப் போகிறேன் என்று அப்பொழுது தெரியவில்லை.


அந்தப் பெண்,தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஒரு கூட்டமைப்பின் செகரட்டிரியாகவும் இருந்தாள். இந்த கூட்டமைப்பின் மூலமாக உறுப்பினராக இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் சப்ளை செய்யலாம் என்றும், எல்லோருக்கும் ஒரே தரத்துடன் கூடிய நோட்டுக்களை செய்வதால் உற்பத்தி செலவும் குறையும், வருடா வருடம் அதிக சிரமம் இல்லாமல் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கும் என்றும் கூறினாள்.

கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து பேசினோம். இன்று இவன் ஒரு கட்சி ஆரம்பித்து கொள்கைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும்.....................(அ)யோக்கியன்...நன்றாக நினைவிருக்கிறது. பிப்ரவரி 4ஆம் தேதி. பூந்தமல்லிசாலையில் இருக்கும் ஹோட்டல் 'சுதா'வில் தான் சந்தித்தோம். விலையை மிக குறைவாக கேட்டான். நான் முடியாது என்று கூறி புறப்பட்டு விட்டேன். ஆனால் எப்படியோ மீண்டும் பேசி, கொஞ்சம் விலையை ஏற்றி, ஒரு வழியாக ஒத்துக்கொண்டோம். சப்ளை செய்து மூன்று மாத தவனையில் பணம் கொடுப்பதாக ஒத்துக்கொண்டான்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் மார்ச் மாதத்தில் உற்பத்தியை துவங்கினோம். என் நல்ல நேரம் அந்த வருடம் பேப்பர் தட்டுப்பாடு, விலை உயர்வு, பணியாட்களின் பிரச்சனை என்று எல்லாம் சேர்ந்து, ஒத்துக்கொண்ட ஆர்டர்களை எப்படியாவது முடித்தால் போதும் என்கிற நிலைமை. போதாக்குறைக்கு, நான் மேலே குறிப்பிட்ட பெண் தினமும் என் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு எல்லாரையும் அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத கோபம் வந்து அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக துரத்தி அடித்தேன்.

மேலே சொன்ன தலைவருக்கு மட்டும் மொத்தம் ரூபாய் 22லட்சத்துக்கு நோட்டுகள் சப்ளை செய்தோம். இது தவிர வழக்கமாய் வரும் ஆர்டர்கள் சேர்த்து 4/5 மாதத்திற்குள் நிறுவனத்தின் மொத்த டர்ன் ஓவர் 48 லட்சம் ரூபாய்....ஆரம்பத்தில் தருவதாக ஒப்புக்கொண்ட அட்வான்ஸ் தொகையையும் சொன்னபடி கொடுக்காததால் மேற்கொண்டு சப்ளை செய்ய முடியாது என்று கூறிவிட்டேன்.என் நிலைமை எப்படியிருந்திருக்குமென யோசித்துப் பாருங்கள், விழி பிதுங்கி விட்டது.

ஒரு வழியாக சப்ளை செய்து முடித்தேன்.பின்னர் அவளை பார்ப்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஒரு மாதம் இரண்டாகி,மூன்றாகி..பணம் வந்த பாடில்லை. ஆளும் சிக்கவில்லை. அவள் கணவன் கோவை பார் கவுன்சிலில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தான்.அதே சமயத்தில் என் கணவரின் மாமா, பொள்ளாச்சியில் மேஜிஸ்ட்ரேட்டாக இருந்ததினால் அவனை மிரட்டி, நுகர்வோர் கோர்ட் நீதிபதி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதில் மாதம் 5 லட்சம் வீதம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டாள். அவள் சொன்னபடி பார்த்தால் என் பணம் வசூலாக 4 மாதம் ஆகுமே, என்ன செய்வது விதியை நொந்துகொண்டும், வந்தால் போதும் என்று அவள் கொடுத்த காசோலைகளை வாங்கிக்கொண்டோம். காசோலைகளில் அந்த சென்னை ஆசாமி கையெழுத்துதான் இருந்தது.

முதல் காசோலையே போட்ட வேகத்தில் திரும்பியது. சென்னை, புதுக்கோட்டை
, மதுரை என்று அவன் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று போராடி போராடி முதல் 5 லட்சம் வாங்கவே டிசம்பர் அகிவிட்டது. அதற்கு பிறகு பல தடவை சென்னை சென்றும் அவனை பார்க்க முடியவில்லை. அந்த பெண்ணோ தலைவரிடம் பேசிக்கொள்ளுங்கள், நான் வெறும் செகரட்டரிதான் என்று கூறி கை கழுவி விட்டாள்.

பிறகு வழக்கு பதிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக மீத தொகையினை வாங்குவதற்குள் மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தது. அதிலும் ஒன்றைரை லட்சம் ரூபாய் இன்று வரை வரவில்லை.இதன் விளைவாய் இரண்டாம் வருடம் எங்கள் வியாபாரமும் படுத்து விட்டது. 3 வருடங்கள் கழித்து 20 லட்சம் வந்தாலும் அது எந்த விதத்திலும் என் பிரச்சனையையும் தீர்க்கவில்லை, இழந்து போன என் தொழிலையையும் மீட்டுத்தரவில்லை. PMRY ல் கடன் வாங்கி ஆரம்பித்த வியாபாரத்தில் இத்தனை குளறுபடி நடந்தால், என் நிலமை என்னவெல்லாம் ஆகியிருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.

பிறகு எனக்கு தொழிலில் இருந்த ஆர்வமும் வேகமும் சுத்தமாக குறைந்து விட்டது. முதுகலை பட்டத்தை வைத்துக் கொண்டு எதற்கு நாம் இந்த தரித்திர தொழிலில் இருக்க வேண்டும் என்று மனதில் பட்டது. எத்தனை ஆர்வமாய் இந்த படிப்பை படித்தோம்.. எதற்காக இந்த தொழிலை ஆரம்பித்து இத்தனை மன உளைச்சல், வேதனை. என்ன சாதித்துவிட்டோம்


யோசித்தேன்...ஒரே இரவுதான், காலையில் முடிவெடுத்து விட்டேன்.

அடுத்த நாள் சான்றிதழ்களை எல்லாம் தூசுதட்டி எடுத்து, PSG மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் செய்தேன். அங்கு சமுதாய மருத்துவ துறையில், எச்ஐவி/ எய்ட்ஸ் ல் project officer 5 வருடங்கள், பின் தில்லியில், வாய்ப்பு கிடைக்கவே இங்கு வந்து விட்டேன். பிஎஸ்ஜி யில் சேர்ந்ததில் இருந்து இன்று வரை, 8 வருடங்கள், திரும்பி பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றேன். ஆனால் அன்று ஏற்பட்ட காயமும்,வலியும் அதன் வேதனையும் இந்த நிமிடம் வரை பத்திரமாய்தான் இருக்கிறது. தூக்கியெறிய நினைத்தாலும் துலைந்து போகாத தழும்புகளாக எனக்குள்ளேயே இருக்கின்றன.

என் மீதும் தப்பிருக்கிறது, இத்தனை பெரிய நஷ்டம் ஏற்பட்டதற்கு எனது கவனக்குறைவும், அனுபவமின்மையும் காரணம்...அதற்காக என் சக்திக்கு மீறிய விலையையும் கொடுத்துவிட்டேன். ஆனால் என்னால் ஜீரணிக்க முடியாதது என்னை சுற்றி இருந்த பொய் முகங்களை அடையாளம் கண்டபோதுதான். நிஜமாகவே நான் நொறுங்கிப் போய்விட்டேன். நம்மிடம் இருக்கும் பணத்திற்கும், பொருளுக்குமா நம்மிடம் வந்து கொண்டிருந்தார்கள் என்று நினைத்த போது, உண்மையில் நம் மதிப்புதான் என்ன?, என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.


இன்று மீண்டும் அதே ஜென்மங்கள் ஆஹா இருந்தால் இவர்களைப் போல் இருக்க வேண்டும் என்று நமக்கு சான்றிதழ் குடுத்து, பொய்ப் பாசம் காட்டி, வேசம் போடுவதைப் பார்த்தால்.... ஹ்ம்ம்ம் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நாம் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க நேர்ந்துவிடும் ஏராளமான நிகழ்ச்சிகள் வாழ்க்கையில் நடந்தபடியே தான் உள்ளன. இந்த நிகழ்வுகலால் நமக்கு பாதிப்பு ஏற்படும் போது அது துாண்டிவிடும் எண்ணங்களையும் துக்கங்களையும் கேள்விகளையும் கூர்ந்துபார்த்து நம்மை செதுக்கி, உண்மையில் உலகத்தில் நிலையானது எது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால் வேதனையான விஷயம், இப்படி அடி பட்டும் திருந்தாத சில மனிதப் பிறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

50 comments:

ILA (a) இளா said...

பெரிய இழப்புதாங்க. படிக்கும் போதே கஷ்டமா இருந்துச்சு, எப்படிதான் தாங்கிட்டீங்களே, இரும்பு மனசுங்க உங்களுக்கு

கானா பிரபா said...

வலித்தது,
ஒரு பிள்ளை போல வளர்த்த நிறுவனம் யாரோ கண் பட்டு அழிவது கொடுமை. தன்னம்பிக்கையோடு எழுந்து வந்தீங்களே அதுவே உங்களை நிரூபித்துவிட்டது.

சிவபாலன் said...

மங்கை

அடடா

சோகமான நிகழ்வு.. ம்ம்ம்

சரி விடுங்க.. இப்ப நிலைமையை நினைத்து சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.

இருந்தாலும் அதன் வலி இருந்துகொண்டே இருக்கும்..

எனக்கே மனது கஷ்டமாக இருக்கிற்து..ம்ம்ம்

Ayyanar Viswanath said...

நம்பிக்கை துரோகம் வலி மிகுந்ததுதான். மத்தவங்களோட வலிகளை முன்நிறுத்தி நாம் எவ்வளவோ பரவாயில்லன்னு மனச தேத்திக்கிறத தவிர வேற வழியில்லை.உங்கள் தன்னம்பிக்கை பாராட்டத் தகுந்தது

Chinna Ammini said...

உலகத்தில் எப்படியெல்லாம் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள். யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்புவது தவறு போல இருக்கே.
அதையெல்லாம் தாண்டி வந்து சாதித்த உங்களுக்கு ஓஓஓஓ போடணும்

ramachandranusha(உஷா) said...

மங்கை, மகாநதி படம் பார்த்தமாதிரி இருக்கிறது. ஏன் இப்படி சிலருக்கு பிறரை அழிக்க நினைக்கும் குணம்? நன்கு திட்டம் போட்டு செய்கிறார்கள் இல்லையா? இவர்களை எல்லாம் சாகும்வரை மறக்க முடியாது.

துளசி கோபால் said...

அடடா....எப்பேர்ப்பட்ட நம்பிக்கை துரோகம்(-:

பணம் எப்படி மனுஷனை ஆட்டி வைக்குது பாருங்க.

தப்பி வந்த உங்கள் தைரியத்தைப் பாராட்டறேன்.

BadNewsIndia said...

இவ்வளவையும் தாண்டி வந்த உங்கள் மன திடம் பாராட்டுக்குரியது.

அயோக்கியர்களைக் கண்டு, துவண்டு விடாமல், புதிய முயற்ச்சிகள் தொடங்குவதை தவிர்க்காதீர்கள்.

ஏமாற்றியவர்கள் திட்டம் போட்டு செய்திருப்பின், அவர்களைப் பற்றி முழு விவரங்களோடு பதிவிடுங்கள். மற்றவர்கள் தப்பிக்கலாமே அவர்களிடமிருந்து.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வணக்கம்,

குமார் என்ற அயோக்கினால் நடுத்தெருவுக்கு வந்த கல்வியாளர்கள் ஏராளம். 1991 லிருந்து தான் அவனுடைய இந்த லீலைகள் ஆரம்பமாயின. அப்போதைய கல்வி அமைச்சருடன் மிகவும் நெருக்கம். இந்த சங்கத்தின் தலைவி சென்னையை சேர்ந்த முன்னாள் சாராய வியபாரி. ரூ10,000 கொடுங்கள் உங்கள் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் வாங்கி தருகிறேன் என்று தமிழகம் முழுவதும் 500க்கு மேற்ப்பட்ட பள்ளிகளில் வாங்கிக்கொண்டு... நான் அமைச்சருக்கு கொடுத்துவிட்டேன் என்று கொள்ளையடித்தவன்.

நீங்கள் குறிப்பிட்ட 1998 களில் ஏதாவது ஒரு நல்ல பள்ளி நிர்வாகியை அணுகி கேட்டிருந்தாலே அவர்கள் குமாரின் வண்டவாளங்களை பிட்டு பிட்டு வைத்திருப்பார்கள்.

இந்த நாய்களிடம் எனக்கு கொஞ்சம் கசப்பான அனுபவம் இருக்கிறது.

எப்படியோ... மீண்டும் வந்த உங்களுக்கு வாழ்த்துகள்.

குசும்பன் said...

சில நேரங்களில் சில மனிதர்கள்...
முகமூடி போட்டு அலையும் ஓநாய்களிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள தனி திறமை வேண்டும் போல இருக்கிறது...

வல்லிசிம்ஹன் said...

மங்கை,
தொழில் ஆரம்பிக்கவே துணிவு வேண்டும். அது உங்க மண் தந்த ஆரோக்கியமான கட்டம்.

ஒரு துஷ்டனின் கையில் சிக்கியது ஒன்றுதான் தவறாகி விட்டது.
இத்தோடு போச்சே என்று சந்தோஷப்படுங்கள்.

வடுக்கள் இருந்தால் அது ஆரோக்கியம்தான்.மறக்கமாட்டோம்.
மீண்டு வந்து எழுதுகிறீர்கள்.அதுவே உங்கள் தைரியத்துக்கு மகுடம்.
வாழ்த்துக்கள்.

நந்தா said...

ரொம்ப கஷ்டம்தாங்க. ஆனால் உங்கள் மனத்துணிவைக் கண்டு மகிழ்கின்றேன்.

இதை ஒரு போராட்டமாக எடுத்துக் கொண்டு முன்னேறியதற்கு என் பாராட்டுக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது போல ஏமாற்றுபவர்கள் எத்தனை சாதுரியமாக பேசுகிறார்கள்...கண்டுபிடிக்கவே முடிவதில்லை.நல்லவர்கள் மற்றவர்களையும் நல்லவர்களாகவே பார்க்கும் காரணத்தால் தான் ஏமாற்றப்படுகிறார்கள்.

இந்த இழப்பு சில நன்மையை செய்திருக்கிறது...

பொய்முகம் கொண்ட அருகாமை ஆட்களை உங்களுக்கு அடையாளம் காட்டியது.
பிசினஸிலிருந்தால் உங்கள் நட்பு எனக்கு கிடைத்திருக்காது.

மணியன் said...

தோல்வியை சந்தித்து துவளாமல் மீள்வது ஒரு சாதனைதான். அதற்கு உங்களுக்கு தலை வணங்குகிறேன். நாட்டில் வளையவரும் நரிகளையும் ஓநாய்களையும் இனம் காண்பது கடினம்தான்.
/இன்று மீண்டும் அதே ஜென்மங்கள் ஆஹா இருந்தால் இவர்களைப் போல் இருக்க வேண்டும் என்று நமக்கு சான்றிதழ் குடுத்து, பொய்ப் பாசம் காட்டி, வேசம் போடுவதைப் பார்த்தால்.... ஹ்ம்ம்ம் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை./
இந்த பொய்வேடதாரிகளின் மெய்யை அம்பலத்தில் அரங்கேற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டட்டும் என்று வாழ்த்துகிறேன்.

சோமி said...

மனிதர்களின் இரண்டுமுகங்களை தினமும் பார்க்கும் வாய்ப்பு தினமும் பெற்றவன் நான்....ம்......

வெங்கட்ராமன் said...

/////////////////////////////////
நம்மிடம் இருக்கும் பணத்திற்கும், பொருளுக்குமா நம்மிடம் வந்து கொண்டிருந்தார்கள் என்று நினைத்த போது, உண்மையில் நம் மதிப்புதான் என்ன?
/////////////////////////////////

நிதர்சனமான உண்மை.

வாழ்க்கையில் நாம் படிக்கும் சில பாடத்திற்கு நாம் கொடுக்கும் விலை மிகப் பெரியதாய் இருக்கும்.

குட்டிபிசாசு said...

@ மங்கை அக்கா,

மனசு கனத்தது. ரொம்பவே அனுபவப்பட்டு இருக்கீங்க. மனம் தளராமல் தடைகளை படிக்கல் ஆக்கி இருக்கீங்க. உங்களோட முன்னேற்றப்பாதையில் மேலும் தொடருக!!

- யெஸ்.பாலபாரதி said...

:(((

இது அனுபவ வலிக்கு!

?!?!?!

இது பதிவு வெளிப்படுத்திய கோபத்தின் சொற்களுக்கு! பிறிதொரு சமயம்.. நானும் எழுதுகிறேன் என் அனுபவத்தை!

அபி அப்பா said...

மங்கைஜி! இது நான் எழுத வேண்டிய கட்டுரை! நீங்கள் எழுதிவிட்டீர்கள். எனக்கு ஒன்னும் சொல்ல தோனலை! அபிஅம்மா அப்போது எனக்கு தோள் கொடுத்து ஊக்கம் கொடுத்து இன்றைக்கு நான் ஒரு மனிதனாக இருப்பதற்க்கு காரணமாக இருந்தாங்க என்பதை நான் இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும்:-((

அன்பேசிவம் said...

கடந்த ஒருவருட காலமாக என்னுள் இருந்த மன இறுக்கம் உங்கள் பதிவை பார்த்ததும் சற்று குறைந்துள்ளது.

லக்ஷ்மி said...

மனந்தளராத உங்கள் உறுதி கண்டு வியக்கிறேன் மங்கை. மேலும் உங்கள் வாழ்க்கை பாதையில் வெற்றிகள் பல காண என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

வணக்கம் மங்கை

எதுவும் எழுதத் தொணவில்லை

என்னால இதைத்தான் சொல்ல முடியும் என்று நினைக்கின்றேன்

வலையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்கை இல்லை


வாழ்த்துகள்

எனக்கு இதைச்சொல்ல என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை ஏனெனில்
நம்பிக்கை துரோகத்தில் விழுந்த நான் இன்னும் எழவில்லை

PAISAPOWER said...

எல்லாரும் எல்லாம் சொல்லிட்டதால...நான் சொல்ல ஒன்னே ஒன்னுதான் இருக்கு...அது...

இனி

"வாழ்க வளமுடன்"

ப்ரசன்னா said...

படித்துவிட்டு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இப்படியொரு சூழலிலிருந்து தப்பி வெளிவர மிகுந்த மன வலிவு வேண்டும். உங்களது மன வலிவை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

PAISAPOWER said...

அடாடாடா...

ப்ரொஃபைல் மாறிடுச்சே...ஹி..ஹி..என்னை தெரியுதா...பரவாயில்லை, இன்னிக்கு ஒரு நாளாவது அவன் தொல்லை இல்லைன்னு நினைச்சிட்டு இருந்திருப்ப்பீங்க....அதை அப்படியே மெய்ண்டெய்ன் பண்ணிக்கங்க....ஹி..ஹி...

வர்ட்டா!

மங்கை said...

நன்றி இளா...

நன்றி பிரபா..சரியாக சொன்னீர்கள், உழைப்பெல்லாம் வீனாய் போனது தான் வலிக்கிறது...

சிவா..அதான்...அந்த சந்தோஷம் தான்

அய்யனார்,சின்ன அம்மனி, உஷா நன்றி

மங்கை said...

துளசிக்கா...'பணம் மட்டும் தான்' ஆடிப்படைக்கிறது...உங்க வாழ்த்துக்கு நன்றி..

BNI
இதற்கு மேல் விவரங்கள் கொடுத்து என்ன பிரயோஜனம்.. இந்த தகவல்கள் கொடுத்தற்கே என் மேல் அன்புள்ளவர்கள் பயப்படுகிறார்கள்..ஹ்ம்ம்.. நன்றி BNI

மங்கை said...

பாரி அரசு..

அவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்
உங்க வாழ்த்துக்கு நன்றி..

மங்கை said...

நன்றி குசும்பன்

நன்றி வல்லிம்மா..சரியா சொன்னீங்க அந்த வலி இருக்கனும்..இருக்கட்டும்

நன்றி நந்தா...போராட்டத்தில் துனை நின்றவர்களும் இருக்கிறார்கள்..

லட்சுமி..இப்ப யாரையும் நம்ப முடிய மாடேங்குது..அதான் பிரச்சனை.. உங்க அன்புக்கும், நட்புக்கும் நன்றி லட்சுமி

நன்றி மணியன்

மங்கை said...

சோமி நன்றி முதல் வருகைக்கு

வெங்கட்ராமன்,,முற்றிலும் உண்மை

நன்றி பிசாசு குட்டி

மங்கை said...

பாலபாரதி..

என்ன வார்தைகள்?...எதை சொல்றீங்க அப்படி என்ன வார்த்தைகளை உபயோகப் படுத்தி இருக்கிறேன்...

நமக்கு கொஞ்சம் கம்மி..விளக்கமா சொல்லுங்களேன்... அந்தப் பெண்னை அவள் இவள் னு சொல்லிட்டேன்.. அதான்..அவளை பெண் என்று சொல்லக்கூட விருப்பம் இல்லைனு சொல்லி இருக்கேன்.. அது நான் பட்ட வலியின் வேதனையில் வந்த வார்த்தைகள்..

மங்கை said...

வாங்க அபி அப்பா..நன்றி... நீங்களும் நம்ம கிளப்புல இருக்கீங்களா?

அன்பே சிவம்...ஹ்ம்ம் நன்றி.. இப்படித் தான் நமக்கு ஆறுதல்
மகிழ்ச்சி சிவம் அவர்களே..

நன்றி லக்ஷ்மி...

மங்கை said...

//இராஜராஜன் said...
வணக்கம் மங்கை

எனக்கு இதைச்சொல்ல என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை ஏனெனில்
நம்பிக்கை துரோகத்தில் விழுந்த நான் இன்னும் எழவில்லை///

இராஜராஜன்..இந்த வரிகளை படித்தால் எனக்கு மீண்டும் பழைய நியாபகம் தான் வருகிறது...விரைவில் உங்கள் பிரச்சனைகள் தீர ஆண்டவனை பிராத்திக்குறேன்..கவலை வேண்டாம்..
அந்த நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.. நிம்மதியாக உங்கள் பணியை தொடருங்கள்...

மங்கை said...

பங்காளி..

நீங்க 'எப்படி' வந்தாலும் கண்டு பிடிக்கிறது எனக்கு கஷ்டம் இல்லை.. :-))

உங்க வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி..ஹ்ம்ம்ம்

மங்கை said...

நன்றி பிரசன்னா

மங்கை said...

///இன்னிக்கு ஒரு நாளாவது அவன் தொல்லை இல்லைன்னு நினைச்சிட்டு இருந்திருப்ப்பீங்க....////

இருந்தாலும் இதெல்லாம் ஓவர்... லேட்டா வந்துட்டு சமாளிப்ஸ் வேற..

கண்மணி/kanmani said...

மங்கை சோதனைகளையெல்லாம் உடைத்தெறிந்து 'பீனிக்ஸ்' பறவை போல மீண்டு வந்த நீங்கள் 'சாதனை மங்கை' தான்

காட்டாறு said...

மங்கை, வருத்தமாக இருந்தது வாசித்து முடித்ததும். நீ இப்போது செய்து கொண்டிருப்பது ஒரு உன்னதமான வேலை. உன் சுய தொழிலில் இன்றும் ஈடுபட்டிருந்தால், இன்று உங்களால் சமூக சேவையில் ஈடுபட முடிந்திருக்குமா? உன் நல் மனதுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்க அம்மா வாழ்த்துகிறேன்.
-- காட்டாறுவின் அம்மா.

மங்கை said...

நன்ரி கண்மணி

//உன் நல் மனதுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்க அம்மா வாழ்த்துகிறேன்.
-- காட்டாறுவின் அம்மா.//

அம்மா இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்...நன்றிம்மா..

Thekkikattan|தெகா said...

என்ன மங்கை உங்களின் மனச் சுமை கொஞ்சம் இறங்கி இருக்குமே. நீங்கள் மட்டும் இதனில் தனி ஆள் கிடையாது என்பதனை தெரிந்து கொள்வதின் மூமமாக. கொஞ்சம் மன ஆருதல் கிடைத்திருந்து, இதன் மூலம் அந்த கும்பலின் இருப்பிடமும், அவர்களின் பித்தலாட்டமும் வெளிச்சத்திற்கு வந்தால் அதனினும் சிறப்பே.

பொறகு இன்னொரு விசயம் சில இடங்களில் உங்களின் எழுத்துக்களில் "தினத்தந்தி" நாளிதழின் நொடி அடித்தது, கட்டுரையின் தாக்கத்தை உணர உதவியது.

திருட்டுப் பசங்களுக்கு என்ன மரியாதை வேண்டிக் கெடக்கு. கோவத்தை வெளிப்படுத்தும் பொழுது, சிரிச்சுக்கிட்டவே சொல்ல முடியும் மனசில நிக்கிற பிம்பத்தை அப்படி கொட்டி வைச்சிருக்கீங்க.

தென்றல் said...

/நீ இப்போது செய்து கொண்டிருப்பது ஒரு உன்னதமான வேலை. உன் சுய தொழிலில் இன்றும் ஈடுபட்டிருந்தால், இன்று உங்களால் சமூக சேவையில் ஈடுபட முடிந்திருக்குமா? /

எனக்கும் அதே எண்ணம்தான் தோன்றியது...

உங்களின் நல் எண்ணங்களுக்கு / நல் மனதுக்கு .... வாழ்க வளமுடன்!!

மங்கை said...

//பொறகு இன்னொரு விசயம் சில இடங்களில் உங்களின் எழுத்துக்களில் "தினத்தந்தி" நாளிதழின் நொடி அடித்தது, கட்டுரையின் தாக்கத்தை உணர உதவியது.///

தெகா...அவள் இவள் என்று எழுதுறதுல எனக்கும் முதல்ல இஷ்டம் இல்ல...ஆனாலும் எழுதீட்டேன்.. ஹ்ம்ம்


தென்றல்...

//உங்களின் நல் எண்ணங்களுக்கு / நல் மனதுக்கு .... வாழ்க வளமுடன்///


மிக்க நன்றி

Santhosh said...

கூட்டாளிகளுடன் வியாபாரம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல அப்பா இது போன்று தொழில் செய்யும் பொழுது இரண்டு மூன்று பேர் வீட்டுக்கு எப்ப வந்தாலும் சாப்பிடாமல் போக மாட்டார்கள், அண்ணா அண்ணீ அப்படின்னு கூப்பிடுவாங்க, ரொம்ப அக்கரை உள்ளவர்கள் போல இருப்பாங்க. ஆனா இறுதியில் ரொம்ப ஏமாத்திட்டாங்க :(.. கஷ்டமா போச்சி..

Boston Bala said...

---நம்மிடம் இருக்கும் பணத்திற்கும், பொருளுக்குமா நம்மிடம் வந்து கொண்டிருந்தார்கள் என்று நினைத்த போது, உண்மையில் நம் மதிப்புதான் என்ன?,---

படித்தவுடன் பல மணி நேரம் இங்கேயே நின்று யோசிக்க வைத்து, புடம் போட்ட சிந்தனை!!!

அசலான பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

சினிமாவில் 'குதிரை/யானை' என்று வசனம் சொல்லிவிடலாம். நிஜத்தில் ஒருவரை அறியும்போது நம்பிக்கை எழுகிறது.

ஜி said...

:(( அப்போதைய நிலைமைக்கு

:)) இப்போதைய நிலைமைக்கு...

நாகை சிவா said...

//முதுகலை பட்டத்தை வைத்துக் கொண்டு எதற்கு நாம் இந்த தரித்திர தொழிலில் இருக்க வேண்டும் என்று மனதில் பட்டது. //

மனிதர்கள் சிலர் பண்ணின தப்புக்கு தொழிலை குறை கூறுவது தவறு என்பது என் எண்ணம்....

நடந்தது தவறு தான். அதில் இருந்து மீண்ட வரை ஆண்டவனுக்கு நன்றி கூறுவோம். ஏற்பட்ட தவறில் பாடம் பயில்வோம்....

மங்கை said...

நன்றி பாலா..ஜி

//மனிதர்கள் சிலர் பண்ணின தப்புக்கு தொழிலை குறை கூறுவது தவறு என்பது என் எண்ணம்...///

சிவா..இந்த வரிகளை எழுதும்போது கண்டிப்பாக யாராவது இதைச்ச் சொல்வார்கள் என்று நினைத்தேன்.. :-))) பரிதாபப்பட்டு போனா போகட்டும்னு சொல்லாம இருந்துட்டாங்க போல...ஹ்ம்ம் சொல்லக் கூடாது தான்..அந்த சமயத்துல இருந்த வேதனையும், வலியும் அப்ப என்னை அப்படி சொல்ல வச்சிடுச்சு..எங்க திரும்பினாலும் பிரச்சனை, சிக்கல்... அந்த சமயத்துல இதை சொல்லிட்டே இருப்பேன்....அப்ப எங்க உறவினர் ஒருவர் நீங்க சொன்னது தான் சொல்லுவார்.... ஆனால் அப்ப என் மண்டையில் எதுவும் ஏறாது...இப்படி ஆகிவிட்டதேன்னு என் மேலேயே கோவம், தோத்து போய்விட்டமேன்னு அவமானம், எல்லாம் ஒன்னா சேர்ந்து ஹ்ம்ம்ம்..நன்றி சிவா சுட்டிக் காட்டியமைக்கு....

Aruna Srinivasan said...

விழுவது பெரிய விஷயமில்லை; ஆனால் விழுந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் எழுகிறோம், எவ்வளவு வேகமாக மீண்டும் ஓடத்துவங்குகிறோம் என்பதுதான் வாழ்க்கையின் உண்மையான வெற்றி என்பார்கள். மங்கை, உங்கள் அனுபவங்கள் பலருக்கும் புது வேகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்களுடைய இந்த ஆக்கபூர்வமான அணுகுமுறைகள் மேன்மேலும் தழைக்க வாழ்த்துக்கள்!

ஜே கே | J K said...

எல்லோருகும் இதுபோல் அனுபவம் ஏதாவது இருக்கும் போல.

அந்த பழைய நினைவுகளின் வலி, அதை வார்த்தைகளால் விளக்க முடிவதில்லை.

வாழ்த்துக்கள்.

"வாழ்க வளமுடன்"

K.R.அதியமான் said...

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...
----
கருப்பு பணத்தின் லீலைகள்
வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.

கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.

காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..

தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்.. மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.

கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.

வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?

Labels: கருப்பு பணத்தின் லீலைகள்

--------------------
Thursday, July 12, 2007
போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.

இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.

ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..

http://nellikkani.blogspot.com/