Sunday, February 25, 2007

நம்பிக்கை வளையம்.

ஒளி தரும் வெளிச்சம் சூரியன் கிட்ட மட்டுமா இருக்கு, இருட்டு இருக்குற இடத்தில எல்லாம் சின்ன வெளிச்சங்கள் வந்துட்டு தான இருக்கு.

மனித குலத்தின் மகத்தான வெற்றிகளெல்லாம் பெரிய பெரிய யுத்த பூமியில் மட்டும் விளையவில்லை...எதிர் கொள்ள முடியாத சூழ்நிலையில், போராடி வென்ற எனக்கு தெரிந்த சில எளிய மனிதர்களை பற்றி எழுதலாம் என்று இந்த தொடரை தொடங்குகிறேன்.

முதலில் பெண்களில் இருந்து தொடங்குகிறேன்

மீனாட்சி


அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை

இவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில எழுதி இருக்கேன். இருந்தாலும் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கு.

ஏமாற்றங்கள் எல்லோறது வாழ்விலும் வருவது தான். இந்த ஏமாற்றங்களை எவ்விததில் அனுகுகிறோம் என்பது தான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசபடுது.


காலமும், கட்டியவனும் தன் கனவுகளை சிதைத்தாலும் அதே சிதைவு மற்றவர்களுக்கு நேரக்கூடாது என்று தளராது பணி புரியும் ஒரு பெண்தான் மீனாட்சி. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர். விசுவின் அரட்டை அரங்கம் மூலம் வெளி உலகிற்கு அறிமுகம் ஆனவர். கோவையில் உள்ள ஒரு கிராமத்தில் 9 ஆம் வகுப்பு வரை படித்த சராசரி கிராமத்துப் பெண்.

முதல் இரவு அன்று, திருமணத்திற்கு முன் தான் சில தாகாத உறவுகளை வைத்து இருந்ததாகவும் இனிமேல் அது மாதிரி தவறுகளை செய்யமாட்டேன் என்று கூறிய கணவரை பார்த்து ஆஹா, இத்தனை 'நேர்மையான' மனிதர் தனக்கு கணவனாக கிடைத்து விட்டாரே அன்று பெருமிதம் கொண்டு கடவுளுக்கு நன்றி கூறிய தொலகாப்பியரின் 'ideal house wife'. ஆனால் இந்த நன்றி உணர்ச்சி, கடவுளை எந்த விதத்திலும் சந்தோஷப்படுத்தவில்லை. கணவனின் உடல் நிலை மோசமாகி சில பரிசோதனைகளை மேற்கொண்ட போது அவருக்கு எச்ஐவி தாக்கு இருப்பது, நோய் முற்றிய பின் தான் தெரிந்திருக்கிறது.கணவனின் உடல் நிலை மிகவும் மோசமாகவே, வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். கைக்குழந்தையோடு அவதிபட்டுக் கொண்டிருந்த போது கணவரும் இறந்துவிட்டார். மீனாட்சியையும் எச்ஐவி தாக்கியிருப்பது பின்பு தான் தெரிந்தது. ஆனால் அவர் தளரவில்லை. புரிதலும் பரிவும் உள்ள உறவுகளை விட பலம் சேர்க்கும் விஷயம் ஏதாவது இருக்கிறதா?...ஹ்ம்ம். அருமையான பெற்றோர்கள்,அன்பான சகோதரன், இந்த உறவுகள் இவரை சொந்தக்காலில் நிக்க இயக்கியது.

விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்றபின் இவரது முகம் பரவலாக அனைவருக்கும் தெரிந்தது. அந்த மேடையில் தைரியமாக பேசி, எங்களுக்கு மட்டுமா, அனைவருக்குமே முடிவு மரணம் தானே என்று கேட்டு அனைவரையும் வாய் அடைக்க வைத்தார்.

தனக்கு கிடைத்த இந்த அரவனைப்பும் ஆதரவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். மேலும், மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும், எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறெல்லாம் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள் என்பதை பார்த்த இவர், மருத்துவமனையில் பணியாற்ற முடிவு செய்தார். அதற்காக கவுன்சலிங்க துறையில் டிப்ளமா படித்து தேர்ச்சி பெற்றார். கவுன்சலிங் திறமையை வளர்த்துக் கொண்டதோடு, எச்ஐவி கிருமியை பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டார். இன்று கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண்கள் மருத்துவத் துறையில், கவுன்சலராக பணியாற்றுகிறார். ஒரு நாளும் இவர் அழுதோ, அல்லது தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று வறுத்தப்பட்டதை பார்த்ததில்லை. சமீபத்தில் கோவயில், நானும் மீனாட்சியும் எச்ஐவி பற்றியும், இருவரின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதை போல ஒரு குரும் படம் தயாரிக்க ஒரு தோழி ஆசைபடவே, மருத்துவமனை வளாகத்திலேயே இந்த படம் ஷூட் செய்யப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக எடுக்கப்பட்ட 15 நிமிட படம். அவரின் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்த போது, எச் ஐவியால் பாதிக்கப்படாத தன் மகளைப் பற்றி பேசுகையில் உடைந்தே போய்விட்டார். இந்த விஷ்யத்தில் அவரை சமாதானம் செய்ய எங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இது ஒரு 5 நிமிடம் தான், மீண்டும் சுதாரித்துக் கொண்டு, எங்களுக்கு ஆறுதல் கூறி, தொடர்ந்து படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 'Positive Mother's Network என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார். இவரது கரத்தை இருகப் பற்றிக் கொண்டு கரையேரும் பெண்கள் ஏராளம். இவர் ஊக்குவித்து இன்று களப்பணியில் இருக்கும் பெண்கள், தமிழரசி, காயத்ரி, கோமதி, ஆதிலட்சுமி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்கள் அனைவருக்கும் சமூக மாற்றங்கள் பற்றிய உரத்த சிந்தனையும், குறிப்பாக ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இதில் மனதை பிசையும் விஷயம், இவர்கள் அனைவரும் 24 வயதை தாண்டாதவர்கள்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் நடத்தும் கேபில் டீவி குழு இவர்களோடது தான்.

சமீபத்தில் மீனாட்சிக்கு Spirit of Assisi National Awardம் வளங்கப்பட்டது. ஈரோட்டில்
உள்ள ஒரு நிறுவனம் இவருக்கு Life time achivement award ம் வழங்கியுள்ளது.

இந்தப் பெண்கள் உருவாக்கியுள்ள இந்த நம்பிக்கை வளையம், உணர்வுகளால் ஆன உறுதி வளையம்.

இவர்களுக்கு உறுதினையாக இருக்கும் டாக்டர். மகாதேவன் அவர்களை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

.

Saturday, February 24, 2007

சுயநலம்......


ரெண்டு நாளா இந்த குழப்பம், மன உளைச்சல். நேத்து மதுரா பிண்ணூட்டத்தில சொன்னதுக்கு அப்புறம்தான் இது இப்ப பதிவா வெளிய வருது. எதுவும் மனசில இருக்குற வரைக்கும் தானே. அதனால இப்ப கொட்டீடறேன்.

//நான் முழுமையான சுயநலவாதி. நான் அடுத்தவருக்கு உதவுவது என்றாவது நான் கஷ்டப்படும்போது யாரேனும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை வருவதற்கே//

இது தான் மதுரா சொன்னது.

நாம ஆதரவு இழந்தவங்களுக்கு உதவி செய்யறோம். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள்னு எல்லாருக்கும். திடீர்னு ஒரு நாள் போய் செய்யறமா?. செய்யறவங்க இருக்காங்க. இல்லைனு சொல்லலை. நம்மில் நிறைய பேர் நம்ம பிறந்த நாளுக்கு, திருமண நாளுக்குன்னு போய் உதவி பண்ணி புண்ணியத்த தேடிக்குறோம். இதுல நிஜமாவே உதவி மனப்பான்மை இருக்காங்க?...உடனே கேக்கலாம்..உதவி செய்யலாம்னு தோன்றதுனால ஏதாவது ஒரு நாள தேர்ந்தெடுக்கனும். அது ஏன் நமக்கு திருப்தி தர்ர நாளா இருக்க கூடாதுன்னு..ஹ்ம்ம்ம்....அது தாங்க எந்த ஒரு செயல்லேயும் நமக்கு என்ன லாபம் இருக்குன்னு பார்க்கிறோம். சரி அது அவங்கவங்க சொந்த விஷயம்....செய்வது வெளியே தெரியாமல் செய்யறவுங்க நிறைய பேர் இருக்காங்க. நான் நிறைய இடத்துல பார்த்ததுனால சொல்றேன்.

கல்லூரியில் இருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை மானேசர்னு ஒரு கிராமத்துக்கு எதோ முக்கியமான நிகழ்ச்சி, கண்டிப்பா வரணும்னு உத்தரவு போட்டு கூட்டிட்டு போனாங்க. காலையில 7 மணிக்கெல்லாம் அங்க போயிட்டோம். கிராமத்து மக்கள் எல்லாம் ஷேமியானா எல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணி யிருந்தாங்க. என்ன விழா, எதுக்காக இந்த பதட்டம்னு ஒன்னும் சொல்லலை. 10 மணிக்கு கப்பல் மாதிரி ஒரு கார்ல ஒரு அம்மிணியும், அய்யாவும் வந்தாங்க. சேர்மனின் ஒன்னு விட்ட சித்தப்பாவோட, தம்பியோட மனைவிக்கு..... இப்படி எதோ சொன்னாங்க. காரில் இருந்து இனிப்பு பொட்டலங்களும், வேட்டி, சேலையும் இறங்கிச்சு. அன்னைக்கு அம்மையாருக்கு பிறந்தநாளாம். கூட்டத்தில முதல்லேயே ஒரு 5 பேர செலக்ட் பண்ணி தனியா நிக்க வச்சிருந்தாங்க. அவங்களும் ரொம்ப அழகா அழங்கரிச்சுட்டு ரெடியா நின்னுட்டு இருந்தாங்க. அம்மையார் சேலையயும் இனிப்பு பொட்டலங்களையும் இந்த அஞ்சு பேருக்கு மட்டும் குடுத்து நமஸ்தம் பண்ணீட்டு, பத்து நிமிஷத்தில ச்சலேகய். மத்தவங்களுக்கு எங்கள குடுக்க சொல்றதுக்குதான் கூட்டிட்டு போயிருக்காங்க. முதல்லேயே சொன்னா வரமாட்டோம்னு, சஸ்பன்ஸ் எல்லாம் வச்சு..ஹ்ம்ம்ம்.... சண்டை போட்டோம். ஆனா இதுக்காக அங்க வந்திருந்த ஏழை மக்களை மனசில வச்சுட்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்தோம். அதில பாருங்க ஒரு 6 பேருக்கு கடைசியில எதுவும் இல்லை. மனசு ரொம்ப கஷ்டம் ஆயுடுச்சு. இதுல என்ன பிரயோஜனம். இவங்க 6 பேரும் ஏமாற்றம் அடைஞ்சு திரும்பி போறத நாங்க விரும்பலை. விழா ஏற்பாடு செய்த புண்ணியவான்கள் கண்டுக்கறமாதிரி தெரியலை. சரின்னு நாங்க 7, 8 பேர் இருந்தோம். எல்லாரும் சேர்ந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு போய் இனிப்பு பொட்டலங்கள் மட்டும் வாங்கீட்டு வந்து குடுத்தோம். இப்படி தான் பல இடங்களில நடக்குது.

நான் சொல்ல வந்த விஷயம். சோனிபட் போற வழியில சின்னதா ஒரு முதியோர் இல்லம். அங்க இருக்கும் முதியோர்கள் எல்லாரும் ஏழைகள், ஆதரவு இல்லாதவர்கள். ஒவ்வொரு முறையும் நினைப்பதுண்டு ஒரு நாளைக்கு அங்க இறங்கி அவர்களோடு கொஞ்சநேரம் இருக்க வேண்டும் என்று. ஆனா நேரமும், குளிரும் ஒத்து வரவில்லை. (இப்படி ஒரு சாக்கு) . கொஞ்ச நாளைக்கு முன்னால வேண்டியவரின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அவரோட மன உளைச்சலை உணர்ந்திருந்தேன். கடவுள் கிட்டே வேண்டீட்டேன். ஆனா இந்த விரதம் இருந்து பேரம் பேசுறது நண்பருக்கு பிடிக்காதுங்கறதுனால அவருக்கு தெரியாம கூட நான் அத செய்ய விரும்பலை. அன்னைக்கு கார்ல இத நினச்சுட்டே போய்ட்டு இருந்தேன்.. அந்த முதியோர் இல்லம் பக்கத்தில போனதும், கார கொஞ்ச நேரம் நிறுத்த சொல்லி, அந்த இல்லதுக்கு போய் அவர்களோடு கொஞ்ச நேரம் பேசீட்டு வந்தேன். முதிலிலேயே அங்க போற திட்டம் இல்லாததால் ஒன்னும் வாங்கீட்டு போகலை. பக்கதிலேயும் ஒன்னும் கிடைக்கல. அப்புறம் அடுத்த நாள் போன போது அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து குடுத்தோம். என்னோட தோழியும் நானும் சேர்ந்து. உங்க ஆசீர்வாதம் வேனும்னு சொன்னதும் புறப்படும் போது எதோ ஒரு பிரார்தனை பாடல் பாடினாங்க.... மனசுக்கு நிறைவா இருந்துச்சு, உச்சி முகர்ந்து ஒவ்வொருத்தரும் முத்தம் குடுத்து எங்கள நெகிழ வச்சுட்டாங்க. கண் கலங்கி நின்னோம். ஒரு பாட்டி கிட்ட சொன்னேன் எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்க ஆசீர்வாதமும் பிரார்தனையும் ஒருத்தருக்கு உதவும்னு நம்பிக்கை இருக்குன்னு சொன்னேன். நான் சார்ந்திருக்கும் துறையில இது போல இடத்துக்கு அடிக்கடி போயிருக்கேன்.. ஆனா அப்ப எல்லாம் இல்லாத ஒரு உணர்வு, அன்னைக்கு.

அதுக்கு அப்புறம் அங்க போக முடியலை. நான்கு நாட்களுக்கு முன்னால அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு தகவல் வந்தது. அருகில் இருந்தாலாவது ஆறுதலா இருக்கும். இத்தனை தொலைவுல இருக்குறுதுனால பயம், பதட்டம், பக்கத்தில இருக்க முடியலைனு ஒரு ஆதங்கம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததுனால மறுபடியும் அந்த முதியோர் இல்லம் நியாபகம் வந்துச்சு.

எத்தனை சுயநலம்!!..

ஆனா இந்த முறை நான் போகவில்லை. போக மனம் வரவில்லை. உண்மையாகவே அவங்களுக்கு உதவனும்னு நோக்கம் இருக்கானு தெரியலை.. தெரியலை என்ன...இல்லை.

இத தெரிஞ்சு செய்யற தப்புன்னு சொல்ல வரலை. மனதுக்கு நிறைவா இருக்குன்னு சில காரியங்கள் செய்யறோம். ஆனா அதற்கான பின்னனி, நோக்கம் என்னன்னு நாம யோசிக்கிறமானு தெரியலை.

நம்ம துளசி, சென்னைல இருக்குற ஹோப் பவுன்டேசன்கு உதவி பண்றாங்க. இங்க வரும்போதெல்லாம் அங்க போயிட்டு வர்ரதாவும் சொன்னாங்க. எந்த வித நோக்கமும் இல்லாம உதவி செய்யனும்னு செய்யறவுங்க நம்மிடையே ரொம்ப ரொம்ப குறைச்சல்.

நான் உங்களில் யாரையும் இதுல சேர்க்கலை....என்னோட நேற்றைய பதிவில மதுராவின் பின்னூட்டத்த படிச்சுட்டு, ஏற்கனவே இந்த எண்ணங்கள் எனக்குள்ள இருந்ததுனால, குறைந்தபட்சம் அத நேர்மையா ஒத்துகனும்னு தான் இந்த பதிவு.

Friday, February 23, 2007

அறமா?.. சட்டமா?


நம்ம சமூகத்தில் அறத்திற்கு அஞ்சி தவறு செய்யாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்?..சட்டம் தான் நம்மை எல்லாம் கப்பாத்திட்டு இருக்குனு நினைக்குறேன்..நாளைக்கே, கொலையும் கொள்ளையும் சட்டத்துக்கு புறம்பானது இல்லைனு சொன்னா, நம்மில் பல பேர் உயிரோடு இருக்க மாட்டோம்...அறத்திற்கு அஞ்சி, இது சமூகத்தின் பாவம் என்று நினனத்துக் கொண்டு தவறு செய்யாமல் இருப்பவர்கள் குறைவு...அப்போ சமூகத்த எது காக்குது?..சட்டம்னுதான்னு நினைக்க தோனுது...சட்டத்திற்கு அஞ்சி வாழ்கிற சமூகம், சட்டத்தில இருக்குற ஓட்டைகளை கண்டுபிடித்து மேலும் மேலும் தவற செஞ்சுட்டு தான் இருக்கும்...

இரண்டு நன்பர்கள் கூட்டு சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பிச்சாங்களாம். நல்லா ஒப்பந்தம் எல்லாம் போட்டு கடைசி வரை பிரியக் கூடாதுனு ஒற்றுமையா தான் நடந்துச்சு எல்லாம். சில நாட்களிலேயே, ஒரு நண்பனுக்கு உடல் நிலை சரி இல்லாம மரணப் படுக்கையில விழுந்துட்டான். அப்போ இரண்டாவது நண்பன் சோகமே உறுவாகி பக்கத்தில உக்காந்து அழுதுட்டு இருக்கான். மரணப் படுக்கையில இருக்கும் நண்பன் சொல்றானாம்

என்னை மன்னிச்சுடு, நான் உனக்கு துரோகம் செஞ்சுட்டேன்.

எனக்கு துரோகமா?..என்ன செஞ்ச அப்பிடி?

உனக்கு தெரியாம நான் நிறைய சொத்த ஒதுக்கீட்டேன்..இப்பவாது உன்கிட்ட சொல்லிட்டேனே..மனசுக்கு நிம்மதியா இருக்குன்னு சொன்னாம்...

அப்ப இன்னொரு கூட்டாளி சொன்னானாம்... இதுக்கு எதுக்கு போய் கவலை படற, நீ மரணப்படுக்கையில இருக்கிறதுக்கே நான் தான் காரணம்..நான் கொடுத்த Slow Poisonனால தான் இன்னைக்கு நீ மரணப்படுக்கையில இருக்கேனு சொன்னானாம்.

நட்பின் ஆழத்தையும் அன்பின் ஆழத்தையும் பல சமயங்களிலே பணமே நிர்ணயிக்கிது.

சமுதாயத்தில நான் என்ன வேனா பண்ண எனக்கு உரிமை இருக்கு. எனகுள்ள இருக்குற id அது பண்ணு இத பண்ணுன்னு ஆசைய தூண்டி விட்டுடுது....ஆனா Super ego, வேண்டாம்மா, இது எல்லாம் தப்பு, நம்ம பெரியவங்க இது எல்லாம் சொல்லி இருக்காங்கனு எனக்குள்ள ஒரு லைட் அடிக்குது... கூடவே வளர்ந்த Super ego சொல்றத ஒதுக்கவும் முடியலை, ஆசையும் அடங்க மாட்டேங்குது, அதுனால மனசுல தோனின ஆசையை நிறவேத்திக்கறதுக்கு சில defence mechanisms வச்சுட்டு என்னோட செயல் பாடுகளுக்கு நியாயம் கண்டுபிடிச்சு வச்சுக்குறேன்.


என்னோட செயல்பாடுகள் அடுத்தவங்க சுதந்திரத்தை பாதிக்கறப்போ தான் சட்டம் நடுவுல வருது. சட்டம் வந்து நீ பண்றது சரியில்லை, மீறி பண்ணேனா இது தான் உனக்கு தண்டனை சொன்னப்புறம் நான் பேசாம இருக்கலாம். இல்லை அதுக்கு அப்புறமும் தப்ப செஞ்சுட்டு தண்டனைய அனுபவிக்கலாம். இதுல நான் மனசாட்சிக்கும் பயப்படலை, சட்டத்திக்கும் பயப்படலை. என்னோட சுய நலம் தான் முன்னாடி டேன்ஸ் ஆடுது.


ஓம் சர்பே பவந்த்து

சுகினஹா
நாவாலும் கரத்தாலும் எவர்க்கும் தீங்கிழைக்காமல் இருப்போம்

அய்யோ...இவளுக்கு என்ன ஆச்சுன்னு நினைக்குறீங்களா...என்னமோ தோனித்து, அப்படியே விரல் வழியா கொட்டீடுத்து....கண்டுக்காதீங்கோ.

பங்காளி மனசில இப்ப - எழுத சொல்வானேன், இந்த கொடுமைய அனுபவிப்பானேன், இதெல்லாம் நமக்கு தேவையா, வம்ப விலை குடுத்து வாங்கீட்டமேனு நினைக்குறார். என்ன பண்ண உங்க தலை எழுத்து....

எல்லாம் P6 புரட்சி னால வந்த கொடுமை.

Tuesday, February 06, 2007

நெஞ்சு பொறுக்குதில்லையே-நிதாரியின் நிஜங்கள்


அண்மையில் நோய்டாவில் சிறார்களின் எலும்புக் கூடுகள் மூட்டை மூட்டையாக தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் எல்லோர் மனதையும் உறைய வைத்துள்ளது. நோய்டாவின் செக்டார் 31ல் நடந்த இந்த கொடிய சம்பவத்திற்கு பின்னர், குழந்தைகளை தனியாக வெளியே விட இங்கு யாருக்கும் துணிவில்லை. ஒரு வித பதட்டமும், பயமும் இன்றும் நிலவி வருகிறது.


இந்தப் பகுதியில் பெரும்பாலானோர் வங்க தேசத்திலிருந்து வேலை தேடி இங்கு வந்தவர்கள். மொனீந்தர் சிங் என்பவனும் அவனது பணியாளனான கோலியும் வெறித்தனமாக இந்த காரியத்தை செய்து வந்திருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான இந்த செயலை செய்து விட்டு, சமூகத்தில் நம்மிடையே எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், வெற்றிகரமாக ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருந்திருக்கின்றான். இத்தனைக்கும் இந்த இடத்திற்கு வெகு அருகில் தான் காவல் நிலையமும் இருக்கிறது. இங்கு வீடுகள் ஒன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை.நெருக்கமான குடியிருப்பு பகுதியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இத்தனை எளிதாக குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்திறுக்கின்றான், அருகில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. நகர (நரக!?) வாழ்க்கை பல குற்றங்களுக்கு துணை போகிறது. அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் ஓடி ஓடி அலைந்து களைத்து வீட்டில் ஒடுங்கிக் கொள்கிறோம்.


என்னுடன் பணி புரியும் ஒருவரும் நானும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை சந்தித்து பேசலாம் என்று அங்கு சென்றோம். அந்த இடத்தை நெருங்க நெருங்க மனம் படபடத்தது. நமக்கே இப்படி இருந்தால், அங்கேயே குடி இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும். காவல் துறையினருக்கும், பத்திரிக்கைக்காரர்களுக்கும் பதில் சொல்லியே அவர்கள் ஓய்ந்து போயிருந்தனர். என்னுடன் சென்றவர் பெங்காளியானதால் ஒரு சகோதரி மட்டும் அருகில் வந்து பேச முற்பட்டார். ஆனால் இரண்டு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. அதற்கு மேலும் யாரையும் சந்தித்து பேச துணிவில்லாமல் திரும்பி விட்டோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 20 குடும்பத்தினர், இந்த சம்பவம் நடந்த பின் அவர்களின் சொந்த ஊருக்கே சென்று விட்டார்கள்.

பாயல் என்ற 20 வயது பெண் 2006 மே மாதம் முதல் காணவில்லை. இவர் உத்தரான்ச்சல் மாநிலத்தை சேர்ந்தவர். காணாமல் போவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான் வேலை தேடி தில்லி வந்திருக்கிறார். இவரை சுரேந்திராவும் மொனீந்தரும் தொலைபேசியில் அழைத்து, வேலை வாங்கி தருவதாக சொல்லி வீட்டிற்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டனர். கொலை செய்யப்பட்ட அன்று, பாயல் அந்த வீட்டிற்குள் சென்றதை பார்த்த சாட்சியங்களுடன் புகார் கொடுக்க சென்ற அவர் தந்தையை வாய்க்கு வந்தபடி திட்டி, அடித்து அனுப்பிவிட்டனர் காவல் துறையினர். அவர் தொடர்ந்து தன் மகளைப் பற்றிய தகவல்களை அறிய முயன்றதால், காவல் துறை பாயலுக்கு 'விபச்சாரி' என்று பட்டம் கட்டி, அவர்களின் வாயை அடைத்து அந்த இடத்தை விட்டே காலி செய்ய வைத்து விட்டதாம். பாயலின் செல்போனுக்கு சுரேந்திராவின் செல்லில் இருந்து அழைப்பு வந்ததை காட்டியும் காவல் துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாயலை கொலை செய்த பின்னரும் அவரின் செல்போனை சுரேந்திரா தொடர்ந்து உபயோகித்து வந்திருக்கிறான். அதில் தான் மாட்டிக்கொண்டான்.

காவல் துறையினரின் இந்த பொறுப்பில்லாத, மெத்தனப்போக்கே இத்தனை குழந்தைகள் பலியானதற்குக் காரணம். ஒரு வருடத்திற்கு முன், இங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், இந்த வீட்டிற்குள் விழுந்த பந்தை எடுக்க சென்ற போது ஒரு குழந்தையின் கை எலும்பை பார்த்து பயந்து பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். பெற்றோர்கள் சிலர் சேர்ந்து காவல் துறையினரிடம் முறையிட்டதற்கு, இது பன்றியின் எலும்பு என்று கூறி அனுப்பிவிட்டனராம். காவல் துறை அன்றே உறிய நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த குழந்தைகளை காப்பாற்றி இருக்கலாம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது உண்மையாகி விட்டது.



ஆறு மாதத்திற்கு முன்பு தினமும் குறைந்தது இரண்டு குழந்தைகளாவது காணாமல் போவார்களாம். இதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இங்கு இருக்கும் பெற்றோர்கள், தினம் தினம், அவர்களின் குடும்ப புகைப் படத்தை அருகில் இருக்கும் ஒரு ஸ்டுடியோவில் கொடுத்து அதிலிருக்கும் அவர்களின் குழந்தையின் படத்தை மட்டும் தனியாக பல பிரதிகள் எடுத்துக் கொடுக்குமாறு கேட்பார்களாம், எல்லா இடங்களிலும் புகார் கொடுப்படதற்காக.

இதே நோய்டாவில் 'அடோப்' நிறுவன அதிபரின் மூன்று வயது மகன் ஆனந்த் குப்தா காணாமல் போன போது எடுத்த துரித நடவடிக்கைகளில் பாதி கூட இரண்டு வருடங்களில் இந்த ஏழைகளுக்காக காவல் துறை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறையும், தொலைக்காட்சி துறையும் இந்த தொழில் அதிபரின் வீட்டு வாசலிலேயே தவம் இருந்தனர். குழந்தையை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகளை மணிக்கொரு தரம் மக்களுக்கு அள்ளி வீசி கொண்டிருந்தனர். ஆனால் நிதாரியின், இந்த பாவப்பட்ட அத்மாக்கள் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க அத்தனை புண்ணியம் செய்யவில்லை. சட்டமும் நீதியும் அதிகாரவர்கத்திற்கும், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை தவிர வேறு எந்த காரணத்தையும் இதற்கு நினைக்க தோன்றவில்லை.

இந்தியாவிலேயே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற இடம் தில்லியாகத்தான் இருக்க வேண்டும். அனைத்து குற்றங்களுக்கும் தலைநகரமாக தில்லி இருந்து வருகிறது என்பதற்கு சமீபத்தில் நடந்த சம்பவங்களே சாட்சி.

Monday, February 05, 2007

புற்று நோய் விழிப்புணர்வு நாள்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4ஆம் நாள் உலக புற்று நோய் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 7,00,000 பேர் புற்று நோயால் பாதிக்கப் ப்டுகிறார்கள்

ஒவ்வொறு வருடமும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருவை மையமாக வைத்து வருடம் முழுவதும் விளிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும்.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் குழந்தைகளுக்காக நடத்தப்படும்.

"இன்றைய குழந்தைகள், நாளைய உலகம்"

புற்று நோயின் 4 முக்கிய காரணிகளை வலியுருத்தி இந்த பிரச்சாரங்கள் நடத்தப்படும்.


புகை பிடித்தல், அளவுக்கு அதிகமான கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை தொற்று நோய்கள் மற்றும் சில உணவு பழக்க வழக்கங்கள் புற்று நோயின சில காரணிகள்.


இந்த வருடத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார செய்திகள்- பெற்றோர்கள், மருத்துவ துறையில் இருப்பவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்காக

  • Provide a smoke-free environment for children ("no smoking in homes")


    Adopt an energy-balanced lifestyle, be physically active, exercise regularly, avid obesity, eat well




  • Learn the facts about vaccines that can prevent certain forms of cancer

  • Be sun-smart – avoid over-exposure to the sun and sunburn
குழந்தைகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்போம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வழிகாட்டுவோம்