Monday, May 25, 2009

ROCK ONNNNNN.............

என்னுடைய 23வது வயது வரை சினிமா இல்லாத சனிக்கிழமையை நினைத்துக் கூட பார்த்தது இல்லை, ஏன் இரண்டு படங்கள் கூட பார்த்து உண்டு. யார் கண் வைச்சாங்களோ.. அதுக்கு அப்புறம் இந்த 19 வருசத்துல மொத்தம் நான் பார்த்த படங்களே 4 அல்லது 5. அதுவும் கடைசியா நான் எப்போ தியேட்டருக்கு போய் படம் பார்த்தேன்னு எனக்கே நினைவில்லை.

இன்னைக்கு என் பழைய அலுவலக நண்பனும் அவன் அம்மாவும், சொல்லாமல் கொள்ளாமல் ஒரு தியேட்டருக்கு கடத்தீட்டு போனாங்க...சினிமானு சொன்னா நான் வரமாட்டேனு..ஷாப்பிங்க போலாம்னு பொய் சொல்லி...'ராக் ஆன்' என்ற இந்தி படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து அழைச்சுட்டு போனாங்க. தியேட்டர் காலியா இருந்துச்சு..இதுக்கு எதுக்கு ரிசர்வ் பண்ணாங்கன்னு தெரியலை... தி்யேட்டர்ல 2 1/2 மணி நேரம் உட்காருவதே கஷ்டம்...அதுவும் கூட்டமே இல்லாத படத்துக்கு கூப்டுட்டு வந்து இம்சை பண்றாங்களேனு எரிச்சல்... தியேட்டரில் ஜில்லுனு ஏசி...உள்ளே நுழைஞ்ச உடனே, மனதில் ஏதோ ஒரு குதூகலம்....அந்த சூழல்.... ட்ஜிட்டல் சவுண்ட்...படம் பார்க்க வந்திருந்த காதல் ஜோடிகளின் சிரிப்பு, கல்லூரி மாணவர்களின் கலாட்டா மனசுக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது.

பழைய நினைவுகள், தோழிகளுடன் கோவை கே ஜி தியேட்டரில் கூத்தடித்த நாட்கள் சட்டென்று கண் முன்னே நடனம் ஆடின. சனிக்கிழமை காலைக்காட்சி அல்லது மதியம் கண்டிப்பாக அங்கிருப்போம். ஸ்டடி ஹாலிடேஸ்களில்,எங்கள் க்ரூப் ஸ்டடி பெரும்பாலும் கே ஜி தியேட்டரில் தான். டிக்கெட் இல்லாமல் திரும்பின நாட்களே இருக்காது. யாரையாவது பிடித்து படத்தை பார்த்துவிட்டு தான் வருவது. என்னை தவிர தோழிகள் எல்லோரும் தீவிர ரஜினி ரசிகைகள்...ரஜினி படத்தை ஓபனிங் ஷோ பார்ப்போம்னா...நாங்க அடிச்ச கூத்த கொஞ்சம் நினைச்சு பாருங்க...அது எல்லாம் ஒரு காலம்...ஹ்ம்ம்ம்ம்...

சரி Rock On..படத்தைப் பற்றி கொஞ்சம் பார்போம்...2008 ல் வெளிவந்த படம்...இப்படத்தின் தயாரிப்பாளர் 'தில் சாத்தா ஹை' புகழ் ஃபர்ஹான் அக்தர்.இவர் ஜாவேட் அக்தரின் (ஷபனா ஆஸ்மியின் கணவர்) முதல் மனைவியின் மகன். படத்தை இயக்கியவர் அபிஷேக் கபூர். பல விருதுகளைப் பெற்ற படம்.

ஏற்கனவே என் மனதில் ஓடிக்கொண்டிருந்த நினைவுகளுக்கு தீனி போட்டது படம். நம் சிறு வயது ஆசா பாசங்களை, சில காரணங்களினால் காலப்போக்கில் நாம் எவ்வாறு மறந்து போகிறோம் என்பது தான் கரு. நமக்கு நாமே சமாதானங்கள் கற்பித்துக்கொண்டு, காரணங்களை பட்டிலிட்டுக் கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் போய் ஏற்றுக் கொள்கிறோம். இது ஒரு வகையில் நல்லதாக பட்டாலும், இன்று எனக்கு அமைந்தது போன்ற ஒரு நாளில்,ஒரு அனுபவத்தில், பழைய வாழ்க்கைக்கு மனது ஏங்காமல் இருப்பதில்லை. பெரிதாக ஏதும் இழக்கவில்லை என்றாலும், அந்த நினைவுகளுக்கு ஈடாக வேறு ஏதும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?....ம்ம்ம்ம்


படத்தில் நான்கு நண்பர்கள் ஆதித்யா (ஃபர்ஹான் அக்தர்), ஜோ (அர்ஜுன் ராம்பால்) ராப் மற்றும் கே.டி, மேஜிக் என்ற ராக் இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். திறமை இருந்தாலும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு போட்டியில் ஜெயித்து, அதன் பரிசாக நல்லதொரு வாய்ப்பு அமையும் பொழுது, ஆதிக்கும் ஜோவிற்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து நண்பர்கள் பிரிந்து விடுகிறார்கள். பத்து ஆண்டுகள் கடந்து செல்கின்றன.

ஆதி பெரும் பணக்காரனாகி விடுகிறான். அவனுக்கு தன் அலுவலக பணிகளைத் தவிர வேறொன்றும் பெரிதில்லை. சிரிப்பதை கூட மறந்து, மனைவி சாக்ஷியிடம் கூட தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல், இயந்திரத்தனமான வாழ்க்கயை வாழ்ந்து வருகிறான்.

ஜோ இசையை தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியாமல், வாழ்க்கையை வறுமையில் கழிக்கிறான். தன் குடும்ப தொழிலான மீன் வியாபரத்தை அவன் மனைவி கவனித்துக் கொள்கிறாள்.



அர்ஜுன் ராம்பால்


கேடி தன் தந்தையின் ஷோரூமை அக்கறை இல்லாமல் நிர்வாகம் செய்கிறான். ராப் மட்டும் சில விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

ஆதியின் மனைவிக்கு தன் கணவன் வாழ்க்கையில் எதையோ பரிகொடுத்தவனைப் போல இருப்பதாக படுகிறது. ஏதோச்சையாக அவள் கணவனின் இசை ஆர்வமும், அவனின் கடந்த கால வாழ்க்கையும் தெரிய வருகிறது. இசையை இப்படி வெறித்தனமாக ரசித்தவனா இன்று ஒரு ஜடம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று ஆச்சிரியப்படுகிறாள்.அவளின் முயற்சியால், ஆதிக்கு விருப்பம் இல்லாவிடினும், ஒரு சந்தர்பத்தில் மனம் மாறி, சில பல சம்பவங்களுக்குப் பின்னர் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள்.

பிரிந்த நண்பர்கள், 10 வருடங்கள் கழித்து ஒன்று சேரும் பொழுது அவர்களின் தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கூட படத்தில் ஆழமாக சித்தரிக்கப்ப
ட்டிருக்கிறது. 20 களில் நீண்ட கூந்தலுடன் இருந்த நண்பர்கள், இப்பொழுது ஜோவைத் தவிர மற்றவர்கள் ட்ரிம் செய்து கொள்கிறார்கள். ஜோ காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதை இது காட்டுகிறது. ராப்புக்கு தலை முடி வெகுவாக குறைந்திருப்பதை நண்பர்கள் கேலி செய்கிறார்கள். அதற்கு ராப், இப்போது இது தானே ஃபேஷன் என்று கூறி சிரிக்கிறான். வயதாகி விட்டது, முடி கொட்டிவிட்டது என்று ஒத்துக் கொள் என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால் முடி கொட்டுதல் வயதினால் அல்ல,புற்று நோய்க்கு அவன் எடுத்துக் கொண்டிருக்கும் கீமோ தெரபியினால் என்று பின்னர் தான் தெரியவருகிறது. அவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, மீண்டும் ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி கொண்ட பின் இரண்டு மாதங்களில் ராப் இறந்து விடுகிறான். ஆதிக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு ராப் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மீண்டும் தங்கள் உயிரான இசையை வாழ்க்கையோடு இணைத்துக் கொள்கிறார்கள்.

சாதாரண கதை, ஆனால் அது சொல்லப்பட்டிருக்கும் விதம், அசத்தல். நடித்த ஒவ்வொரு நடிகரும் உணர்வு
ப் பூர்வமாக நடித்திருக்கிறார்கள். ஜோவாக நடித்த அர்ஜூன் ராம்பால்...ஆதியாக நடித்த ஃபரான் அக்தர்...நம் நடிகர்கள் இவர்களிடம் கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளம். தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரத்தின் தன்மையை நன்றாக உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இதில் நடித்த நான்கு நடிகர்களுமே திறமையாக நடித்திருக்கிறார்கள். ஆதியின் மனைவியாக நடித்த ப்ரச்சி தேசாய், தன் சிறிய புன் சிரிப்பிலேயே அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டிவிடுகிறார்.

என்னை மிகவும் கவர்ந்தவர் ஜோவின்
மனைவியாக நடித்த சஹானா
கோஸ்வாமி. நசிருதீன் ஷா முதன்
முதலில் இயக்கிய படத்தில் அறிமுகமானவர். சர்வ சாதாரணமாக அலட்டல் இல்லாமல் நடித்து, கதாபாத்திரத்தின் உணர்வுகளை கலக்கலாக வெளிப்படுத்துகிறார்.

ஆதியின் மனைவி எடுக்கும் முயற்சி அவனுக்கு பிடிக்காமல் போகவே அவளை கடிந்து கொள்கிறான். பிரிந்து போன மனைவி தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று மனைவியின் தோழியிடம் சொல்கிறான். அவள், அவன் மனைவி அவனின் சந்தோஷத்திற்காகவே செய்ததாக சொல்லும்போது, ஆதி சொல்கிறான்' எனக்கு யாரையும் சந்திப்பதில் விருப்பமில்லை...இன்னும் எத்தனை நாட்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வுகள் என் பின்னால் ஓடி வரும்' என்று கேட்கிறான், அதற்கு தோழி ''நீ அதைக் கண்டு ஓடும் வரை" என்கிறாள்.


நன்றாக எடுக்கப் பட்டிருக்கும் ஒரு படம். கண்டிப்பாக சிடி வாங்கி பாருங்கள்.

19 comments:

FunScribbler said...

சூப்பரான படம்!!:) ரசித்து ரசித்து பார்த்தேன்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட நல்லாருக்கு.. நானும் பாக்கரேன் வந்து..
மங்கை வர வர உங்க பதிவு கலர்புஃல்லா ஆகுதே.. கீப் இட் அப்..:)

யட்சன்... said...

தமிழ் வலைபதிவுகளில் திரை விமர்சனம் எழுதிட்டு இருக்கறவங்களுக்கெல்லாம் புதுசா போட்டியா கிளம்பியிருக்கீங்க...

நல்லா வந்திருக்கு....

“எனக்கு யாரையும் சந்திப்பதில் விருப்பமில்லை...இன்னும் எத்தனை நாட்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வுகள் என் பின்னால் ஓடி வரும்' ”

....இது நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

அப்புறம் ஒரு ச்சின்ன டவுட்டு....உண்மை தமிழன்னு ஒருத்தர் பதிவெழுதறாரே அவர் பதிவு பக்கம் அடிக்கடி போய்ட்டு வர்றீங்களோ....ஹி..ஹி...

நாகை சிவா said...

ம்ம்ம்... இனிமேல் மாதத்துக்கு ஒரு படம் பாருங்க... தமிழ் படமும் பாருங்க ;)

//நன்றாக எடுக்கப் பட்டிருக்கும் ஒரு படம். கண்டிப்பாக சிடி வாங்கி பாருங்கள்.//

தரையிறக்கம் செய்யக் கூடாதா? ;)

மங்கை said...

Thamizhmaangani நன்றி..:-)

லட்சுமி...கலர்ஃபுல்லா இருக்கா...வயசாயிடுசில்ல...அதான் தைரியமா கலர் பார்க்கலாம்னு..:-))))

மங்கை said...

//அப்புறம் ஒரு ச்சின்ன டவுட்டு....உண்மை தமிழன்னு ஒருத்தர் பதிவெழுதறாரே அவர் பதிவு பக்கம் அடிக்கடி போய்ட்டு வர்றீங்களோ....ஹி..ஹி...///

நினச்சேன்.இந்த கமென்ட் தான் போடுவீங்கன்னு...

சென்ஷி said...

எனக்கு ரொம்ப பிடிச்ச படம்!

ரொம்ப அனுபவிச்சு நடிச்சுருப்பாங்க.. அதுவும் முடிவுல அர்ஜுன் ராம்பால் திரும்பி மேடைக்கு ஓடுற காட்சி எதிர்பார்த்ததுன்னாலும் அந்த ஒரு பாட்டுதான் கடைசின்னு எதிர்பார்ப்பை ஏற்ற வைச்சு மறுபடியும் அவரை பாட வைக்குறது நல்ல ட்விஸ்ட்..

விமர்சனத்துலயும் கலக்கலா எழுதறீங்கக்கா :)))

மங்கை said...

சிவா..தாரளமா தரவிரக்கம் செய்து பாருங்க... நீங்க இருக்குற மறந்துட்டேன் சாமி...:-)

மங்கை said...

ஆமா சென்ஷி..அந்த பாட்டு கலக்கல்.. ராம்பால் நடிப்பு அருமை...

தமிழ் அமுதன் said...

ஐய் ! கதையெல்லாம் நல்லா சொல்லுறீங்க ;;)) நெறைய படம் பாருங்க!
தமிழ் படமும் பார்த்து உங்க கருத்து சொல்லுங்க!!

//தியேட்டரில் ஜில்லுனு ஏசி...உள்ளே நுழைஞ்ச உடனே, மனதில் ஏதோ ஒரு குதூகலம்....அந்த சூழல்.... ட்ஜிட்டல் சவுண்ட்...படம் பார்க்க வந்திருந்த காதல் ஜோடிகளின் சிரிப்பு, கல்லூரி மாணவர்களின் கலாட்டா மனசுக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது. /// .....உண்மைதான் படத்துக்கு போனா ஒரு அரை மணிநேரம் முன்னாடியே
போய்டனும் அப்போதான் இதையெல்லாம் அனுபவிக்கமுடியும்!


;-நான் கடசியா பார்த்த ஹிந்தி படம் ''ஹே ராம்''

மங்கை said...

நன்றி அமுதன்... தமிழ் சினிமாவைத் தவிர வேற பாடம் பார்க்குறது ரொம்ப அறிது... நான் பார்த்த இரண்டாவது ஹிந்தி படம் இது..முதல் படம் மர்த்.. அதுவும் தப்பா டிக்கெட் வாங்கிட்டேன்..:-)

Thekkikattan|தெகா said...

அட நானும் பார்த்திட்டேன் இந்தப் படம். எப்பவா? படம் பார்த்தாக் கூட விளங்காத விசயத்தையும் விளக்கி விமர்சனம் வைக்கிறீங்கள்ல அதை வைச்சு படம் பார்த்ததா சொல்லிட வேண்டியதுதான் :)

கோபிநாத் said...

\\பழைய நினைவுகள், தோழிகளுடன் கோவை கே ஜி தியேட்டரில் கூத்தடித்த நாட்கள் சட்டென்று கண் முன்னே நடனம் ஆடின. சனிக்கிழமை காலைக்காட்சி அல்லது மதியம் கண்டிப்பாக அங்கிருப்போம். ஸ்டடி ஹாலிடேஸ்களில்,எங்கள் க்ரூப் ஸ்டடி பெரும்பாலும் கே ஜி தியேட்டரில் தான்\\

ம்ம்ம்...கலக்குறிங்க யக்கோவ்...சத்தமே இல்லமால் அந்த காலத்தில பல வேலைகள் செய்துயிருக்கிங்க போல!!!..குட் குட் ;))


நானும் படத்தை பார்த்துட்டேன். அருமையான படம். நீங்கள் கூறிப்பிட்டது போல இந்த மாதிரி கதைகள் ஏற்கனவே வந்திருக்கு இருந்தாலும் அதை தந்தவிதம் மிக அருமை.

அப்புறம் அக்கா உங்க விமர்சனத்துக்கு ஒரு பெரிய ஸ்பெசல் "ஒ"

மங்கை said...

நன்றி தெகா...இது எல்லாம் ஒவர்..:-)

கோபி

//சத்தமே இல்லமால் அந்த காலத்தில பல வேலைகள் செய்துயிருக்கிங்க போல!!!..குட் குட் ;))//

இது சாம்பிள் தான்...:-)

தினேஷ் said...

நான் பார்த்து ரொம்ப நாளாச்சு ,,

நீங்க நல்லா படத்தை பத்தி எழுதியிருக்கீங்க ..

காட்டாறு said...

என்ன நடக்குது இங்கே? ஒன்னுமே புரியல. மங்கை பதிவா? இல்லை மண்டபத்துல யாராவது.....???

மங்கை said...

நன்றி சூரியன்...

காட்டாறு

ஏனுங்க நம்பறதுக்கு அவ்வளவு கஷ்டமாவா இருக்கு

Ponnarasi Kothandaraman said...

Kandippa paathudalamm! :)

Unknown said...

Hello. i loved to read your blog.
the content and theme of writing is quite nice.
Help me with your suggestion about my blog
http://jugaadworld.blogspot.com
hope to have your precious suggestions about my blog.