Monday, January 28, 2008

குழந்தைகள் குழந்தைகள்தானே.....


கடந்த சனிக்கிழமை தில்லியிலுருந்து 50 கி மி தள்ளி இருக்கும் ஒரு காப்பகத்துக்கு சென்றிருந்தேன். வெகு நாட்களாக போக நினைத்துக் கொண்டிருந்த பயணம் அது. எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம். இந்த முறை காப்பகத்தை நடத்தி வரும் ஃபாதர் கேரமல் போவதாக சொல்லவே நானும் தொற்றிக் கொண்டேன். கேரளாவில் இருக்கும் Missioneries of St.Thomas the Apostle ஆல் நடத்தப் பட்டு வருகிறது.

அழகான,அமைதியான இயற்கை சூழலில் அமைந்திருந்தது அந்த காப்பகம். 5 டிகிரி குளிரை பொருட்படுத்தாமல் கிடைத்த பூவை கையில் வைத்து கொண்டு களங்கமில்லா சிரிப்புடன் அன்பாய் வரவேற்றார்கள்.

அங்கு இருப்பவர்களிலேயே கடைக்குட்டியின் பெயர் அலோக், 4 வயதுதான். எச்ஐவி நோயாளியான அவன் அம்மா இவன் பிறந்த உடனே இறந்து போக, அப்பா இவனை இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டு போய்விட்டார். இத்தனைக்கும் அவர் ஒரு கோவில் பூஜாரி. மனைவி எச்ஐவியால் இறந்து விட்ட போதும், தான் இந்த பரிசோதனை செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை அந்த தாய் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ, சரியான விவரம் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அலோக் பிறந்தவுடன் தாய் இறந்து விட, தந்தை மறுமணம் செய்து கொண்டார்.


ரெண்டாவது மனைவி பாதிக்கப்பட்ட குழந்தையை பார்த்துக்கொள்வாள் என்று நினைப்பது இன்றைய சுயநலம் பீடித்த சூழ்நிலையில் மிகப்பெரிய மடத்தனம்.ஆதரவில்லாத அந்த பச்சை மண் இப்பொழுது காப்பகத்தில். அலோக்கின் உடம்பில் நோய் கிறுமியின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவனுக்கு ஏஆர்டி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நிமிடம் கூட ஒரு இடத்தில் உட்கார பிடிக்காமல் ஓடி விளையாட துடித்தாலும், அதற்கு அவன் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. வீட்டில் எத்தனை மன உளைச்சலுக்கு தள்ளப் பட்டிருந்தால் இந்த 4 வயது பாலகன் வீட்டிற்கு போகவே பதறுவான். அப்பாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலே இல்லை.

ஹ்ம்ம்...கணவன் இறந்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தையுடனும்,நோயுடனும், பழிச்சொல்லுடனும் ஆதரவின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இன்று ஏராளம். ஆனால் இங்கு.....ஹ்ம்ம்ம்...

மற்றறொருவன் சுஷில். 9 வயது. அம்மா, அப்பா இரண்டு பேரும் இறந்து போக, பாட்டியால் பார்த்துக் கொள்ள முடியாததால், இங்கே இருக்கிறான். இந்த நோய்க்கே உண்டான சில அறிகுறிகளான வயிற்றுப்போக்கு, உடம்பு வலி, சோர்வு போன்றவைகளால் தற்பொழுது அவதிப்படும் இவன், தனக்கு ஏதோ பெரும் வியாதி இருப்பதை தற்பொழுது உணர்ந்து வருகிறான். நாம் எங்கு சென்றாலும் அருகில் வந்து ஒட்டி உட்கார்ந்து கொள்ளும் இந்த குழந்தையின் மனதில் என்ன என்ன இருக்கிறதோ, அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

காப்பகம், சுத்தமாகவும், பணிபுரிபவர்கள் உண்மையான அக்கறையுடனும், அன்புடன் இருந்தது திருப்தி அளிப்பதாக இருந்தது. அன்று அவர்களுடன் இருப்பதாக சொன்னதும், '' அப்போ நீங்க சமைத்து தாங்களேன்'' என்றனர் குழந்தைகள். சாம்பார், ரசம் என்று எங்கள் சமையல் செய்யவா என்று கேட்கவே, உடனே ஆளுக்கொரு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கல்யாண வீடு போல கலகலப்பாக இரண்டு மணி நேரத்தில் சமையல் வேலை முடிந்து, வெளியே, கட்டைகளை அடுக்கி, தீ மூட்டி, சுற்றி உட்கார்ந்து உணவருந்தியது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது.

அந்த குழந்தை என்ன தவறு செய்தது, ஏன் இவர்கள் மட்டும் இங்கே இப்படி காப்பகத்தில், இந்த அவல நிலைக்கும்,பழிச்சொல்லுக்கும் அந்த குழந்தைகள் எந்தவிதத்தில் காரணமாவார்கள்.உதவிகள் என்ற பெயரில் ஏதோ என்னாலானவற்றை செய்யமுடியும். ஆனால், அன்புக்கும்,அரவனைப்புக்கும் ஏங்கும் அந்த பிஞ்சுகளுக்கு சக மனுஷியாய், ஒரு தாயாய் ஏதும் செய்யமுடியாமல் வெறும் பார்வையாளனாய் இருக்க முடிவது எத்தனை கொடுமை.

இயலாமை என்னை பிடுங்கித்தின்ன கனத்த மனதுடன், மௌனத்துக்குள் என்னை புதைத்துக் கொண்டு தில்லி திரும்பினேன்...

Wednesday, January 16, 2008

பிடித்த பதிவுகள்-கண்மணியின் அழைப்புக்காக

நான் எழுதறதும், அதை நீங்க படிச்சு கருத்து சொல்றதே பெரிய விஷயம்னு நினச்சுட்டு இருக்கேன்...ஒன்றரை வருஷமா எழுதினாலும் மொத்தமே 67 பதிவுகள் தான் எழுதியிருக்கேன்...

அதுல பிடித்த பதிவுகளை சொல்ல அழைப்பு விடுத்த கண்மணிக்கு நன்றி.

சில பதிவுகள் ரொம்ப ஆர்வமா,ஈடுபாட்டோட எழுதுவோம்..... அப்படி திருப்தி அளித்த (எனக்கு) பதிவுகள்


1) Growing Old... - எப்பவும் பெரியவங்க கூட இருக்கனும்னு நினைப்பேன்.. கூட்டுக்குடும்பம்...மாமியார்...அம்மா...நாத்தனார்..ம்ம்ம்... உறவுகள் விட்டு தூரமா..(மனசளவுல இல்லை) இருக்கறப்போ... இன்னும் நிறைய ஒட்டுதல் வருது....ஒரு நாள் அம்மாவும் மாமியாரும் அடுத்தடுத்து கூப்டு தங்கள் தனிமையை சொல்லாம சொல்ல...அன்னைக்கு முதியோர்கள் தினமும்...இந்த பதிவ எழுதினேன்...

2) திருநெல்வேலி குசும்பு - எப்பவும் சீரியஸா எழுதறதுனால, லைட்டான பதிவுகளே நமக்கு வராதான்னு தோனும். பதிவுல சொன்ன சம்பவத்தை அப்படியே எழுத ஆரம்பிக்க...நல்லா இருந்த மாதிரி இருந்துச்சு....முதல் முறையா லைட்டான பதிவு எழுதுனதால இந்தப் பதிவும் பிடிச்சுப் போச்சு

3) அப்பா.. - அப்பாகிட்ட தான் ரொம்ப நெருக்கமா உணர்ந்திருக்கிறேன்.. அவர் இவ்வளோ சீக்கிறமா என்னை விட்டு போவார்னு எதிர்பார்க்கலை... என்னோட இன்றைய வளர்ச்சியை பார்த்தா அவரின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.....அவர் எனக்கு குடுத்த படிப்பும், அனுபவமும், நல்ல விதத்துல உபயோகப்படறதே அவருக்கு நான் செய்யும் மரியாதை.. அவரைப்பற்றி எழுத வாய்ப்பு கிடச்சதுனால இந்த பதிவும் பிடிக்கும்.

பின்னூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.

நான் அழைப்பவர்கள்...

மலர்வனம் லக்ஷ்மி

டாக்டரம்மா....

சின்ன அம்மனி

Thursday, January 10, 2008

கண்டுபிடிச்சுட்டேன்...

மொக்கை போஸ்ட் எழுதனுமாம். லட்சுமி இத சொன்னப்போ நான் என்ன எழுதறதுன்னு கேட்டா, "அது தான் நேத்து போட்டீங்களே அது மாதிரி தான். சும்மா போடுங்க" னு சொல்ல.. ஓ அப்ப நாம நேத்து எழுதுனது மொக்கையா. அப்ப இதுக்கு முன்னாடி நாம எழுதனதுல எது இல்லாம் இதுல சேத்தின்னு நினச்சுட்டேன்.

யோசிக்காம எழுதுனா மொக்கை பதிவாம். ஒழுங்கா எழுதினாலே நாலு வரியில நாப்பது எழுத்துப்பிழை. இதுக்கு பெரிய மனசோட நம்ம கன் ஃபைட் காஞ்சனா பிழையே உன் பெயர் மங்கையானு ஒரு கேள்வி எல்லாம் கேட்டுட்டு போயிட்டாங்க. இதுக்கும் பதிவ நாலு தடவை படிச்சுட்டு பப்ளிஷ் பண்றப்பவே நம்ம அழகு இப்படி.

நாம என்னைக்கு யோசிச்சு பதிவு எழுதுனோம்னு நானும் யோசிச்சேன். ஹூம்...அப்படி ஒன்னு எழுதுனதா நியாபகத்துக்கு வரலை.

சரி. இந்த மொக்கை விளையாட்ட யாருங்க ஆரம்பிச்சது?

இதன் நோக்கம் என்னன்னு இந்த ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுட்டேன்... :-)))

நீங்க எழுதினது எல்லாமே இது வரைக்கும் மொக்கை தான்னு நம்ம ஒவ்வொருவரையும் நம்ம வாயாலேயே ஒத்துக்க வச்ச புண்ணியவான் வாழ்க. நாம எந்த அளவுக்கு நேர்மையானவங்கன்னு அவருக்கு புரிஞ்சிருக்கும்.:-)))

பி-கு- இது நாள் வரைக்கும் கிடைக்காத முதல் பரிசு இப்ப எனக்குத்தான்.. என்ன சொல்றீங்க??..மொக்கை பதிவுல எழுத்துப் பிழை எல்லாம் கண்டுக்க கூடாது ஆமா...

Wednesday, January 09, 2008

நான் யார்?..யார்?..யார்?

தலைப்பு பார்த்துட்டு இவ என்ன பிலாசப்பி (கவுண்ட மனி ஸ்டைல் Philosophy ன் உச்சரிப்பு) பேச வந்துட்டானு திட்ட வந்துட்டீங்க இல்ல?. ..நோ டென்ஷன் ப்ளீஸ். நாம அந்த தப்பெல்லாம் பண்ண மாட்டோம். இது வேறு. நான் யாருன்னு தெரிஞ்சுக்க இமையமலையா போகனும்? நீங்க சொல்ல மாட்டீங்களாக்கும்.

சூப்பர் ஸ்டார் சில நாட்களுக்கு முன்னால தன்னை மராத்தின்னும் ஒத்துக மாட்டேங்குறாங்க, கன்னடக்காரர்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க, தமிழன் அப்படின்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்கன்னு ஒரே பீலிங்கஸ் விட்டார். நியாபகம் இருக்கா.?.. அது மாதிரி தானுங்க நானும் இப்ப ஒரெ ஃபீலிங்கஸ்ல இருக்கேன்.

இன்னைக்கு எங்க கல்லூரியில ஒரு கருத்தரங்கு நடந்தது. அதுக்கு வந்து இருந்த அசாம் காரர் ஒருத்தர்க்கு என்னை அறிமுகப் படுத்தினார் நம்ம குசும்பு சீதாராமன். அவர் பேர் டோர்ஜீ (Dorjee) . இவர் அறிமுகப் படுத்தினாலே ஏதாவது வில்லங்க புடிச்ச கேசா தான் இருக்கும்னு எனக்கு தெரியும். அதே மாதிரி தான் ஆச்சு.

சில கேள்விகளுக்கு ஒரு பதில் குடுக்க முடியாது. அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம்னு சொல்ல தோனும். ஆனா அப்படிப்பட்ட கேள்விகள் ஒரே சமயத்துலயா வரனும்.

பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின்னர் என் நெற்றியில் இருந்த விபூதிய காமிச்சு, "நீங்க தமிழா'' னார். தலைய ஆட்டி ஆமான்னு சொல்ல வாய திறக்குறதுக்கு முன்னால அவர் "இல்ல தெலுங்கா" னார். அதுக்கும் சிரிச்சுட்டே தலைய ஆட்டினேன். தமிழ்நாடா ஆந்திராவான்னு கேட்டிருந்தா தமிழ்நாடுன்னு சொல்லி இருப்பேன்.

தமிழா, தெலுங்கானு கேட்டதுனால, (என்னமோ ஹரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடுன்னு நினப்பு) ரெண்டுத்துக்கும் தலைய ஆட்டிட்டேன்

ஆனா அதுக்கு மேல ஒன்னும் சொல்லலை. அவர் எப்படி புரிஞ்சுட்டாரோ அப்படி இருக்கட்டும்னு சும்மா இருந்தேன். ஆனா மனுஷன் விடாம "அப்படின்னா" னார்.

நான் "அது அப்படித்தான்" அப்படின்னேன். அவர் உடனே "ஓ உங்க பெற்றோர்கள்ல ஒருத்தர் தெலுங்கு, இன்னொருத்தர் தமிழா'' னு ஒரு மகா கண்டு பிடிப்ப கண்டு பிடிச்சு கேட்டார்.

இதுக்கு மேல நாம வாய மூடீட்டி இருந்தா நல்லா இருக்காதுன்னு "நான் மற தமிழச்சி தான்.ஆனா என் தாய்மொழி தெலுங்கு. தமிழ்நாட்டுல தெலுங்கு பேசறவங்க நிறைய பேர் இருக்காங்க" ன்னு சொன்னா, மனுஷனுக்கு பதில்ல திருப்தி இல்லை. சரி போகட்டும்னு விட்டார்.

இதோடு அவரோட கேள்விக்கனைகள் நிக்கலை. இதற்குள்ள இன்னொரு தமிழ் பெண்ணும் வந்து சேர்ந்தாள். ரெண்டு பேர்கிட்டேயும், 'நீங்க எந்த ஊர்' னார். சொன்னோம்.

நாங்க சொன்னதைக் கேட்டு குசும்பர் வந்து, '' ஏன்டீம்மா, புக்காத்த சொல்லப்படாதோ, ரெண்டு பேரும் பொறந்த ஊரையே சொல்றேளே '' -
கேட்டவர்க்கு தமிழகத்துல சென்னைய தவிர வேற எந்த ஊரும் தெரியாது. அப்புறம் எது சொன்னா என்ன. பிறகு சீதாராமனே "அவங்க ஊர் அது இல்லை" அப்படீன்னு எங்களோட 'புக்காத்த' சொல்ல, டோர்ஜீ என்னை ஒரு மாதிரி பார்த்தார்.

அடுத்து "எய்ட்ஸ்ல நீங்க திட்டப்பணியில இருக்கீங்களா இல்லை களப்பணியில இருக்கீங்களா' னார். இரண்டும் செய்ய வேண்டி இருப்பதால "ரெண்டும் தான்" னேன். இவ கிட்ட எதுக்கும் 'ஒரு' பதில் கிடைக்காது போலன்னு டோர்ஜீ இடத்தை காலி பண்ணிட்டார்.

அப்புறம் மதியம், நானும் என்னோடு இருந்த தமிழ் பெண்ணும் சாப்டுட்டு இருந்தோம். கையில தட்டை எடுத்துட்டு அன்புத்தொல்லை மீண்டும் பக்கத்துல வந்தார், "நீங்க சைவமா அசைவமா?" னு கேட்டார்.

தோழி வேனும்னே ' ரெண்டும் தான். நான் சைவமும் சாப்பிடுவேன் அசைவமும் சாப்பிடுவேன்" னு சொல்ல, டோர்ஜீ " You guys are too naughty" னு சிரிச்சுட்டே தப்பிச்சா போதும்னு ஒரே ஓட்டமா ஓடிட்டார்.