Tuesday, January 05, 2010

கருணைக் கொலை-ஒரு உணர்வுப் போராட்டம்


கருணைக் கொலை பற்றி யோசிக்கவோ பேசவோ சந்தர்ப்பங்கள் எழும் போதெல்லாம், நமக்கு தோன்றும் எண்ணங்கள் யாவும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காதவைகளாகவே இருந்திருக்கின்றன. அது கருணை கொலைக்கு ஆதரவாக இருந்தாலும் சரி, எதிராக இருந்தாலும் சரி, சம்பந்தப் பட்ட உயிர் பிரிவதாலோ, வாழ்வதாலோ நமக்கு நேரடியாக எந்த விதமான இழப்போ லாபமோ இருந்ததில்லை. (எனக்கு இருந்ததில்லை என்று வைத்துக் கொள்வோம்). அதனாலேயே அதைப்பற்றி பேசும்போதெல்லாம் சுலபமாக கருத்தை சொல்ல முடிந்திருக்கிறது. அதுவே நாம் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என்பதை சமீபத்தில் உணர முடிந்தது.

நான் பேசுவது என் 10 வயது ஜூலியை பற்றியது. 15 நாட்களுக்கு முன்பு உடல் நிலை குன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளானது. நடக்க முடியவில்லை, உணவு உட்கொள்ளவில்லை, சிறுநீர் கழியவில்லை, மூச்சு விடுவதில் சிரமம், இப்படி பல பிரச்சனைகள். அழைத்தால் அன்புடன் வால் மட்டும் லேசாக ஆடும். தினமும் மருத்துவமனைக்கு சென்று 250மி.லி. க்ளூகோஸ் ஏற்றி வந்தோம்.அது மட்டுமே அதுக்கு உணவாக இருந்தது. 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்பும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையில் குடும்பத்தில் இந்த 10 நாட்களில் வெவ்வேறு விஷேசங்கள். ஜூலியை இந்நிலையில் விட்டு விட்டு போக மனம் வரவில்லை. இது வரை நம்மை சுற்றி சுற்றி வந்து நட்பு பாராட்டிய அந்த உணர்வுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதனால் ஓரிரண்டு இடத்திற்கு போக முடியாததன் காரணத்தை சொன்ன போது, ஒரு 'நாய்க்கு' நான் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "எத்தன நாள் தான் இதே காரணத்தை சொல்லீட்டு இருப்பே, பேசாம மெர்சி கில்லிங்க் பண்ணீட்டு அடுத்த வேலையை பார்" என்று அறிவுரைகள். இவ்வளவு வதைப்படும் ஒரு உயிரை கருணைக் கொலை செய்வது தவறில்லை என்பது அவர்கள் வாதம். ஐந்து ஆறு மணி நேரம் ஜூலி பட்ட கஷ்டத்தை பார்த்த போது. ஒரு வேளை அவர்கள் சொல்வது சரியோ என்றுகூட பட்டது. எது நடந்தாலும் சரி, அது சீக்கிரம் நடக்கட்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டேன்.

16 ஆம் தேதி மதியம் நிலைமை மிகவும் மோசமானது. இனி சிகிச்சை கொடுத்து பலன் இல்லை என்று தெரிந்து விட்டது. அந்த முடியாத நிலையிலும், 4 முறை அழைத்தால், ஐந்தாவது முறை வாலை ஆட்டும். உயிருடனும் உணர்வுகளுடனும் கிடக்கும் அந்த ஜீவனை, ஜீவன் இல்லாமல் ஆக்க என்னால் முடியவில்லை. மனதில் ஏதோ ஒரு சிறிய நம்பிக்கை. வாலை ஆட்டும் போதெல்லாம், இதோ நம் அழைத்தால் வாலை ஆட்டுகிறது, நாளை எழுந்து விடும் என்ற நம்பிக்கை. ஆனால் நேரம் ஆக ஆக அதுவும் நின்று போனது. சுமார் 10 மணிக்கு மகள் சிறிது தண்ணீர் விட்டதும், அடுத்த நிமிடம் உயிர் பிரிந்தது.

சிக்கலை மட்டுமே சந்தித்து வந்த நாட்களில் இதே ஜூலி தான் எங்களுக்கு ஆதரவாக இருந்ததென்றால் மிகையில்லை. உறவுகள் ஒதுக்கிய அந்த கால கட்டத்தில், நம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு தோழியாகத் தான் இருந்தாள். நாளெல்லாம் அலைந்து திரிந்து களைத்துப்போய் வீடு வந்து சேர்ந்தால், ஓடி வந்து, சின்ன சின்ன முனகலுடன் காலைச் சுற்றும் அந்த அன்பை வாழ்நாளில் மறக்க முடியாது.