Wednesday, September 12, 2007

தில்லி- Crime Capital


இன்று மதியம் எங்கள் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சொன்ன சேதியை கேட்ட பின்னால் சிறிது நேரம் எங்களால் ஒன்றும் பேச முடியவில்லை.
தில்லியில் நடக்காத குற்றங்கள் இல்லை, இதை விட பாதுகாப்ப இல்லாத ஒரு இடம் இருக்க முடியாது என்பதற்கு இதை விட ஒரு உதாரணம் வேண்டியது இல்லை. மனிதர்கள் இதை விட தரம் கெட்டு போக முடியுமா?

இந்த இரண்டு மாணவர்களும் நேற்று ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு திறும்பிக்கொண்டிருந்த போது ரோட்டோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணை ஒருவன் பலாத்காரம் செய்துகொண்டிருந்திருக்கின்றான். ஒரு மரத்தினடியில்..லைட் வெளிச்சத்தில், இந்த கொடுமை நடந்திருக்கிறது. பைக்கில் சென்று கொண்டிருந்த இந்த மாணவர்கள் ஒரு பெண்ணின் அவலக் குரல் கேட்கவே வாகனத்தை நிறுத்தி பார்த்திருக்கிறார்கள். சிறு வயதானதால் அருகில் செல்ல பயந்து கொண்டு தூரத்தில இருந்து அவனை திட்டி விரட்ட பார்க்க அவன் எதையும் காதில் வாங்காமல் முன்னேரிக் கொண்டிருந்திருக்கின்றான்.

ஆடை அலங்கோலமாக இருக்கவே மாணவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையாம். பின்னர் இரண்டு போலீஸ்காரர்கள் வருவது தெரியவே அவர்களை அழைத்து விஷயத்தை சொல்ல, அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர். பின்னர் அருகில் இருக்கும் ஒரு குடியிறுப்பு பகுதியில் ட்யூட்டியில் இருந்த செக்யூரிட்டி ஆட்களுடனும், மற்ற ஜனங்களுடனும் வந்து அவனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

குற்றவாளியை அடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள் சாட்சி கை எழுத்து மட்டும் போட மறுத்து விட்டனராம். ஆனால் இந்த இரண்டு மாணவர்களும் நாங்கள் போடுகிறோம் என்று கூறி அவர்கள் கையாலேயே எழுதி கொடுத்துவிட்டு, இன்று காலை கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவரிடம் விஷயத்தை கூற, இவர்களுக்கு பயம். ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று. ஆனால் மாணவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை. நாங்க குடுத்த புகாரை திறும்ப வாங்க மாட்டோம் என்று உறுதியாக கூறி விட்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமையை மருத்துவர்களின் சான்றிதழ்களுடன் இன்று எல்லா ஊடகங்களுக்கும் தெரிவித்து விட்டனர். மேலும், அந்த பெண்மணி இன்னும் காவல் நிலையத்தில் இருப்பதால் அதற்கும் ஆட்சேபனை தெரிவித்து மகளிர் ஆணையத்திடம் முறையிட வேண்டும் என்று எங்களிடம் வந்தார்கள். மகளிர் ஆணையத்திடம் சொல்லியாகி விட்டது.

இதோடு நிக்காமல் இந்த மாணவர்கள் இந்த வாரத்திற்குள் அனைத்து மாணவர்களையும் ஒரு பாதயாத்திரைக்கு தயார் படுத்தி வருகின்றனர். அவர்கள் முகத்தில் நேற்று பார்த்த காட்சியின் அதிர்ச்சி இன்னும் இருந்தது.

மாணவர்கள் சம்பவத்தை விவரிக்கும் போது, அந்தப் பெண் கத்தியது கூட வலியானாலே ஒழிய அவளுக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கின்றது என்று தெரியவில்லை. காவல் நிலையத்திலும் தனக்கு நேர்ந்த கொடுமையின் தீவிரத்தை உணராமல் தான் இருந்து இருக்கிறாள்.

சராசரியாக இந்தியா முழுவதும் நடக்கும் குற்றங்களைப் போல் இரண்டு மடங்கு குற்றங்கள் தில்லியில் மட்டும் நடக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரம் என்றால் அது தில்லியாகத்தான் இருக்க வேண்டும்.
இதை விட கேவலமாக ஒரு மனிதன் நடந்து கொள்ள முடியுமா. பணமும் அதிகாரமும் தில்லியை இன்று எந்த அளவிற்கு ஒரு நரகமாக ஆக்கியிருக்கிறது என்பதற்கு இங்கு தினமும் நடக்கும் குற்றங்களே சாட்சி.

மனிதர்களைக் குறித்த நம்பிக்கை அருகிக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில்
இந்த மாணவர்களின் உறுதியும் எண்ணமும் ஆறுதல் அளிக்கிறது.