துர்கா பூசையை முன்னிட்டு பிரம்மாண்ட பந்தlல்களில் தற்காலிக வழிபாட்டு கூடங்கள் அமைக்கப் பட்டிருந்ததாக கூறியிருந்தேன். அவை ஒவ்வொன்றும் தனித்துவமான கருத்தியல் ஒன்றின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்தன.இன்று அந்த பந்தல்கள் சிலவற்றின் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
கொல்கத்தா அரசியலில் முக்கியமானவரான சுப்ரத்தோ முகர்ஜி என்பவரின் பந்தல் இது . உள்ளே தேவியின் பெரிய சிலையுடன், லஷ்மி, சரஸ்வதி, விநாயகர் மற்றும் முருகனின் சிலைகள், பகட்டான அலங்காரத்துடன் பளபளப்புடன் காட்சியளித்தது.
சுவற்றிலும், மேற்கூரைகளிலும், நுன்னிய கலைநயத்துடன் அழகிய வேலைப் பாடுகள்,வரைபடங்கள், பெரிய பெரிய விளக்குகள். எதோ ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் நுழைந்ததைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது.
இந்தப் பந்தலுக்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறக்கேட்டோம். முக்கிய பிரமுகர்கள், அரசியவாதிகள், துர்கா பூஜையின் போது, இது போல பணத்தைக் கொட்டி பகட்டான பெரிய பெரிய பந்தல்களை அவர்கள் பேரில் அமைக்கிறார்கள். வருடா வருடம் இவர்கள் அமைக்கும் பந்தல்களை வேடிக்கை பார்க்க திரளான கூட்டம் வருகிறதாம்.
மேலே சொன்ன பந்தலுக்கு பக்கத்தில்தான் கீழே நீங்கள் பார்க்கும் இந்தப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதிக பணம் செலவு செய்யப்படா விடினும், நுணுக்கமான கைவேலைப் பாட்டிலும், கலைநயத்திலும் சிறந்த தரத்துடன் அமைக்கபட்டிருந்தது. உள்ளே மரவேலைபாடுகளுடன், அளவிலே சின்னதாக இருந்தாலும் பளிச்சென்றிருந்தது.
தாகூரின் சிலையை முன்னால் நிறுத்தி அவரின் படைப்புகளை ஓவியமாக தீட்டி அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல். தாகூர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மற்ற கலைஞர்களின் ஓவியங்களும் இங்கே இடம் பெற்றிருந்தது.
பாரம்பர்ய கட்டிடகலையை அடிப்படையாக கொண்டு அத்தனை ஆடம்பரமில்லாத எளிமையான தோற்றத்துடன் கூடிய ஒரு பந்தல்
மேலே படத்தில் இருப்பது போலத்தான் முந்தைய காலத்தில் துர்கா பூசையின் போது சிலைகள் இது போலவே வடிவமைக்கப்பட்டனவாம்.
வங்க மொழியின் புகழ்பெற்ற எழுத்தார்கள், கவிஞ்சர்களின் படைப்புகள், வங்க இலக்கியம் ஆகியவைகளை பெருமையாக எடுத்துக்காட்டுகிறது இந்தப்பந்தல் அற்புதமான ஒரு வடிவமைப்பு.
கீழே நீங்கள் பார்ப்பது இரயில்வே அமைச்சர் செல்வி. மம்தா பேனர்ஜியின் யோசனையில் வடிவமைக்கப்ப்ட பந்தலாம் இது. மாடர் ஆர்ட் போல் இருக்கும் இந்த தேவியின் சிலையைப் பாருங்கள்.
நான்கு பக்கமும் வண்ணமயமாக காட்சியளித்த இந்த பந்தலில் மற்ற பந்தல்களில் காணப்பட்ட மக்கள் கூட்டம் இல்லை. என்ன காரணமோ தெரியவில்லை.
இந்த பந்தல்கள் ஒரு வகையில் நமது திருவிழா பொருட்காட்சி அரங்கங்களையே நினைவு படுத்தியது. உண்மையைச் சொல்வதானால் இந்த பந்தல்களில் பணமும், பகட்டுமே மிஞ்சியிருந்தது. பக்தி இரண்டாம் பட்சமாகவே இருந்தது நெருடலாய் இருந்தது. மேலே ஒரு படத்தில் பூசாரி ஒருவரைப் பார்க்கலாம்...பார்க்கவவே பாவமாக இருந்தார்..இவ்வளவு பகட்டாக நடக்கும் ஒரு நிகழ்வில், வருமையில் வாடும் இவரை கண்டு கொள்பவர்கள் யாரும் இல்லை
கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம். பெரியாரை ஒரு சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலைவர் என்கிற வகையில் ரொம்பவே பிடிக்கும். தமிழகத்தில் பெண்கள் சமூக மேம்பாடு கண்டதற்கு அவர் மட்டுமே காரணம் என தீவிரமாய் நம்புகிறவள் நான்.ஆனால் அவரது கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் நான் உடன் படுவதில்லை....கொல்கொத்தா அனுபவம் ஒன்றிற்கு பிறகு பெரியார் கடவுள் மறுப்பில் உறைந்திருந்த உண்மை உறைத்தது.
அந்த அனுபவம்...அடுத்த பதிவில்
அந்த அனுபவம்...அடுத்த பதிவில்