Saturday, January 31, 2009

சாதர் தாக்னா- ஹரியானா மாநிலத்தின் ஒரு சமுதாய வழக்கம்


வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களின் அவல நிலையை முந்தைய எனது பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். கணவனை இழந்து, குடும்பத்தாராலும் கைவிடப்பட்டு, அன்றாட தேவைகளுக்கே கஷ்டப் பட்டு கொண்டிருப்பது ஒரு வகையான கொடுமை என்றால், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கணவனை இழந்த சில பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேறொரு வகையான வதை.

ஒரு முறை சென்னை லயோலா கல்லூரியில் CNN IBN தொலைகாட்சியின், ராஜ்தீப் சர்தேசாய், நடத்திய ஒரு கலந்துரையாடலின் போது, "South India is more a conservative society than North India" என்ற தன் கருத்தை முன்வைத்து துவக்கினார். இந்த மனப்பான்மைதான் பெரும்பாலான வட இந்தியர்களுக்கு (வட இந்தியாவில் வாழும் அநேக தென் இந்தியர்களும் இதில் அடக்கம்) இருக்கிறதென்றால் அது மிகையில்லை. இந்த மக்களோடு மக்களாய் அன்றாடம் பழகி (பேருந்தில், கடைகன்னியில், அலுவலகங்களில்) வாழ்ந்து பார்த்தால் , ராஜ்தீப்பின் கருத்து சற்றும் உண்மையில்லை என்பது புரியும்.

தென்னிந்தியாவில், அதி முக்கியமாக தமிழ்நாட்டில் பெண்கள் நிச்சயமாக மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப் படுகிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. அது இளம் பெண்களாக இருந்தாலு்ம் சரி, முதியவர்கள் என்றாலும் சரி. தமிழ்நாட்டிலும் சில பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, ஆனால் அது சில இடங்களில் மட்டுமே என்று சொல்லலாம். சரி நான் இதை விவாதம் செய்ய வரவில்லை. அது இந்த பதிவின் நோக்கமும் இல்லை.

காலங்காலமாய் ஹரியானா மாநிலத்து கிராமங்களில் கணவனை இழந்த பெண்களின் மீது திணிக்கப்பட்டு வரும் சமுதாய பழக்கமான ‘சாதர் தாக்னா’ பற்றி நான் நேரில் பார்த்து தெரிந்து கொண்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், இதன் பின்னராவது ராஜ்தீப் போன்றோரின் கண் மூடித்தனமான கருத்துக்கள் சரியா என்பதை நீங்களே சொல்லுங்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்

சில மாதங்களுக்கு முன்னால் வட இந்திய பெண்கள் சிலரை ( பெண் பத்திரிகையாளர், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள், அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள்) கோவையில் நடந்த ஒரு கருந்தரங்கிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அரசு துறையில் பணி புரியும் ஒரு பெண் கணவனை இழந்தவர். முதலில் வருகிறேன் என்றவர், புறப்படுவதற்கு முந்தைய நாள் தன்னால் வரமுடியாது என்றும், அதற்கான காரணத்தை நேரில் சந்தித்து கூற விரும்புவதாகவும் கூறினார்.

இந்த இடத்தில் ‘சாதர் தாக்னா’ என்கிற பழக்கத்தை பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.' சாதர் தாக்னா' என்பது, ஹரியானா கிராமங்களில், இளம் வயதில் பெண்கள் கணவனை இழந்து விட்டால், கணவனின் சகோதரருடன் அந்தப் பெண்ணை வாழவைக்க செய்வது அந்த சமுதாயத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழக்கம். அந்த நபர் பெரும்பாலும் திருமணம் ஆனவராகத்தான் இருப்பார். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரிவித்தாக வேண்டும். 'சாதர் தாக்னா " என்ற சடங்கை செய்து இப்படி வலுக்கட்டாயமாக கணவரின் சகோதரனுடன் சேர்ந்து வாழவைக்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட பெண் என் அலுவலகத்திற்கு வந்தார்.பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார். உடனே காரணத்தை பட படவென்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். நானும் ' சாதர் தாக்னாவில்' மாட்டிக் கொண்டேன். அதில் இருந்து தப்பிக்க என் பிறந்த வீட்டாரோடு சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

கணவனை இழந்த பெண்கள் மறு திருமணம் செய்து கொள்வது வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும், இந்த வகை கட்டாயப்படுத்துதலை, அந்த வகை திருமணமாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.இதில் அந்த நபருக்கு ஆண் வாரிசு இல்லாமல், கணவனை இழந்த பெண்ணுக்கு ஆண் வாரிசு இருந்து விட்டால்,இந்த கட்டாயப்படுத்தல் மேலும் அதிகமாகிறது. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை...ம்ம்ம்

கணவனை இழந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க, சமுதாயாத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பழக்கம் என்று இவர்கள் இதனை நியாயப்படுத்திகிறார்கள். இந்த வழக்கம் எப்படி தொடங்கியது என்று பார்த்தால், அந்தக்காலத்தில் கணவனை இழந்த, குழந்தை செல்வமில்லாமல் இருக்கும் பெண்களை, கணவனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் 'Levirate marriage' என்று கூறுவார்கள். இதை தென்னிந்தியாவிலும் சில இடங்களில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பெண் வீட்டாரும், கணவனின் வீட்டாரும் சேர்ந்து பேசி எடுக்கப்படும் ஒரு முடிவு. பெரும்பாலும் பெண் வீட்டாரும், அந்தப் பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல விரும்புவதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். ம்ம்ம்ம் இதில் பெண்ணின் விருப்பம் இருந்து விட்டால் இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் பெரும்பாலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை யாரும் மதிப்பதில்லை. பெண்ணிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பழக்கம், இன்று உருமாறி பெண்களை அடிமை படுத்தவும், தன் பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே சில ஆண்கள் பயன் படுத்திக் கொள்ளும் ஒரு பழக்கமாகி இருக்கிறது என்பது தான் உண்மை.

கணவனை இழந்த பெண்ணும் அவளுக்கு சேர வேண்டிய சொத்தும் எப்பொழுதும் அந்த வீட்டின் ஆண் மகனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை தவிர இதற்கு வேறு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.நான் மேலே குறிப்பிட்ட பெண் படித்து நல்ல வேலையில் இருப்பதால், தன் சொந்தக் காலில் நிற்க துணிவும் இருப்பதால், தன் விருப்பமின்மையை தெரிவித்து, வெளியே வந்துவிட்டார். இதனால் புகுந்த வீட்டாரின் வெறுப்பிற்கு ஆளான போதும், கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது. ஆனால் பெரும்பாலான ஹரியானா கிராம புறத்துப் பெண்கள் படிப்பறிவும், உலக அறிவும், சுய சிந்தனையும் அற்றவர்களாகவே, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். எனது அனுபத்தில் நான் பார்த்த பெரும்பாலான வட இந்திய கிராம பெண்கள் சுய சிந்தனை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் பிரதான தேவை பணம்,அது தரும் ஆடம்பரமான வாழ்க்கை முறை, அலங்கார சாதனங்கள், விலை உயர்ந்த உடைகள், காலனி முதற்கொண்டு எல்லாவற்றிலும் படோபகாரம் தெரியவேண்டும். இதை வஞ்சனை இல்லாமல் இந்த ஆண்கள் கொடுத்து விடுகிறார்கள். என் நான்காண்டு வட இந்திய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும் இதுதான்.

ஒரு வகையில் இவர்களின் இந்த நிலைக்கு இவர்களே காரணம் என்று பல சமயம் நினைக்கத்தோன்றுகிறது. கணவனுக்கென ஒரு விரதம் (கர்வா சவுத்), அண்ணன் தம்பிகளுக்கென ஒரு விரதம் (பாய் தூஜ், ராக்கி) இது போக மருமகன் நன்றாக இருக்க வேண்டுமென்று சில சமுதாயத்தாரின் விரதம். இது கட்டாயமாக எல்லாப் பெண்களும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள். இல்லையென்றால் அவள் குடும்பத்திற்கே லாயக்கற்றவள் என்கிற முத்திரை குத்தப்படுவாள்.இந்த பூஜைகளையும், விரதங்களையும், ஆடம்பரத்தையும் தாண்டி இவர்களின் சிந்தனை செல்வதில்லை. அதற்கான சூழலும் கிராம புறங்களில் இல்லை.

இன்றும் பெண் கல்வியென்பது வட மாநில கிராமங்களில் அதிசயமான ஒன்றாகவே இருந்து வருவது அதிர்ச்சியளிக்கும் நிஜம். இந்தப் பகுதி மக்களின் கண்ணோட்டமும் சுயநல போக்கும் பல சமயங்களில் எனக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் இன்னும் இவர்கள் அடைபட்டு கிடைக்கிறார்கள் என்பதே உண்மை..

நம் எளிமையும், சகிப்புத்தன்மையும் ராஜ்தீப் போன்றோருக்கு நம்மை conservative ஆக காட்டுகிறது. உண்மையான பெண் அடிமைத்தனம் என்ன என்பதை வட மாநிலங்களில் வந்து வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.ம்ம்ம்ம்... தென்மாநிலங்கள் இந்த விஷயத்தில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.இதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு சொல்லாமல் விடுவதில்லை. இது குறித்து இன்னும் விரிவாக எழுதிட முயல்கிறேன்.

இப்படி ஒரு முற்போக்கு சமுதாயத்தை ஏற்படுத்தி கொடுத்த பாரதி, பெரியார், போன்ற சமூக புரட்சியாளர்களுக்கு இந்த சமயத்தில் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதை களங்கமில்லாமல் வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

32 comments:

யட்சன்... said...

மீ த ஃபர்ஸ்ட்... :)

யட்சன்... said...

மீ த செகண்ட்

:)

யட்சன்... said...

மீ த தேர்ட்...

:))

யட்சன்... said...

ஆஹா....வலையுலக சரித்திரத்துலயே, மொத மூனு இடத்தையும் புடிச்சது நாந்தானா ....

ஹி..ஹி...இருங்க பதிவை படிச்சிட்டு வந்து கும்மி கண்ட்டியூயிங்....

ஓக்கே...ஸ்டார்ர்ட் ம்மீசிக்....

அபி அப்பா said...

அடப்பாவமே:-)) யட்சன் மாதிரி இப்புடி எல்லாம் முதல் 3 இடம் வாங்க முடியுமா? அது தெரியாம தமிழ்மணம் ஓட்டு அது இதுன்னு போகுதே! நல்லா இருங்க மக்கா! அது போகட்டும் அப்ப நான் 5! (ஹூம்)

இருங்க பதிவை படிச்சுட்டு வரேன்!

அபி அப்பா said...

ஆகா மாடு கட்டி போடல! ஆனா கும்மி அடிக்க மனசு வரலியே! பதிவு நல்லா இருக்கும் போல இருக்கே, ஆண்டவா என்ன இது கும்மிக்கு வந்த சோதனை!

யட்சன்... said...

எத்தனை நாளைக்குத்தான் இப்படி சீரியஸா எழுதிட்டு இருக்க போறீங்க...நான் பாட்டுக்கு கும்மியடிச்சிட்டு பதிவ படிக்க போனா...சீரியஸ் மேட்டர்!

நம்ம ஊர் கிராமங்கள்ல பெண்கள் நிலமை ரொம்ப முன்னேறியிருக்கறதா நான் நினைக்கலை....ம்ம்ம்ம்

யட்சன்... said...

வட இந்திய கிராமபுற பெண்களின் அவல நிலையை எழுதிய நீங்கள், தென்னிந்திய நகர்புற ஆண்களின் பரிதாபகரமான நிலையினை பற்றியும் எழுதினால் மெத்த மகிழ்ச்சியடைவோம்...

ஹி..ஹி...ம்ம்ம்ம்

மங்கை said...

யட்சரே..

இது எல்லாம் ஓவராக்கும்.. நான் தமிழ்நாட்டி தங்கமணிகளை தலையில தூக்க்க்க்க்கி வச்சு ஆடு ஆடுன்னு ஆடி இருக்கேன்...அதுக்கு ஒரு டேங்க்ஸ் இல்லை...

என்ன கொடுமை இது சரவணா...

மங்கை said...

அபி அப்பா...

அதான் சின்ன பசங்க வந்துட்டாங்க இல்ல... அவங்களுக்கு இடம் குடுங்கப்ப்பா

யட்சருக்கும் உங்களுக்கும் எதுக்கு கும்மி...கை காலு பத்திரம்...:-))

யட்சன்... said...

//தமிழ்நாட்டி தங்கமணிகளை தலையில தூக்க்க்க்க்கி வச்சு ஆடு ஆடுன்னு ஆடி இருக்கேன்...//

அதேதான்..அதேதான்....அந்த பரிதாப நிலையத்தான் எழுதச்சொல்றேன்...இவய்ங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவய்ங்கடான்ன்ன்னு சொல்லி சொல்லியே போட்டுத்தாக்குற அந்த பரிதாபத்தைதான் எழுதச்சொல்றேன்...ஹி..ஹி...

ramachandranusha(உஷா) said...

Ek Chadar Maili Si , மங்கை, ஹேமா மாலினி உருப்படியாய் நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று. கதை பஞ்சாப் கிராமத்தில், கணவன் இறக்க, வலுக்காட்டாயமாய் , மகனைப் போன்ற
மைத்துனனை, ரிஷிகபூரை மறுவிவாகம் செய்ய வைப்பது. 86ல் வந்த படம், டிடியில் 87ல்
பார்த்தது. ஆனாலும் ரிஷி, ஹேமாவின் நடிப்பு, கதை, டைரக்ஷன் இன்னும் நினைவில் இருக்கு.

தமிழ்நாடு என்றாலும் நாம் பழகுவது மத்தியமர் வட்டம். நம்மில் பெண்ணுரிமை இருக்கிறது.
ஆனால் இன்னும் பாவப்பட்ட மக்கள் வர்க்கத்திலும், கிராமங்களிலும் கேள்விகுறியாய் உள்ளது
என்பதே என் கருத்து.

மங்கை said...

உஷா...

இந்தப் பிரச்சனைல இருந்து தமிழ்நாடு என்ன..கண்டிப்பா இந்த உலகமே இன்னும் வெளியே வரலை...ஆனால் தென் இந்தியாவில் இவ்வளவு கொடுமை இல்லை...

பொதுவா நீங்க பஸ்ல போகும் போதோ, பொது இடத்துல வாக்கு வாதம் பண்ணும்போதோ வித்தியாசம் தெரியும்.. சில சின்ன பசங்க கூட பெரியவங்களை ரொம்ப கேவலமா பேசறதும்..காசுக்கு கூட மதிக்காத மனபான்மையும் இருக்கு..இது நகரத்துல இன்னும் ஜாஸ்தி... எனக்கே அனுபவம் இருக்கு...

எனக்கு என்னமோ.. ஒத்துப் பார்கும் போது நம்ம ஊர் பரவாயில்லைனு தோனுது...நம்ம ஊர் கிராமத்துலயோ, கீழ் தட்டு பெண்களுக்கோ நிலமை இவ்வளவு மோசம் இல்லை.. ஹரியானாவுல சோனிபேட் ங்குற கிராமத்துல இரண்டு வருடங்கள் பணியாற்றிய அனுபவத்துல சொல்றேன்...

நாகை சிவா said...

உங்க கருத்தை ஒத்துக்குறேனுங்க...

நாம் எவ்வளவோ தேவலை. அதுக்கு மிக முக்கிய காரணமாக நான் நினைப்பது தென் இந்தியாவில் கல்வியறிவு அதிகமாகி வருவது தான் (இருபாலினம்)

நல்ல பதிவுங்க (எப்போதும் போல) :))

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் கருத்தில் நானும் உடன்படுகிறேன் மங்கை.

சதவிகிதப்படி பார்த்தால் நம் நிலைமை சற்றுத் தேவலாம்தான்..

தனிப்பட்ட கொடுமைகள் உண்டே தவிர, இதுபோன்ற சமுதாயக் கொடுமைகள் குறைவுதான்.

பாவம் அந்தப் பெண்கள்..

மங்கை said...

நன்றி சிவா..

//தியாவில் கல்வியறிவு அதிகமாகி வருவது தான் //

அதே தான்..கல்வி ஒரு முக்கியமான காரணம்..

மங்கை said...

நன்றி பாசமலர்...

// சமுதாயக் கொடுமைகள் குறைவுதான்.//


அதே தான் நானும் சொல்றேன்

சென்ஷி said...

//மங்கை said...
அபி அப்பா...

அதான் சின்ன பசங்க வந்துட்டாங்க இல்ல... அவங்களுக்கு இடம் குடுங்கப்ப்பா
//

கூப்பிட்டு விட்டதற்கு நன்றி...

சென்ஷி said...

மீ த 19

சென்ஷி said...

மீ த 20 :-)

Poornima Saravana kumar said...

என்ன கொடுமைங்க இது.. இந்தக் காலத்தில் இப்படி கூட செய்யறாங்களா??

Poornima Saravana kumar said...

ஹரியான கிராமப்புற பெண்களை நினைக்கையில் நம்ம ஊர் கிராமம் எவ்வளவோ தேவலை..

கோபிநாத் said...

கொடுமை...வேற என்னாத்த சொல்ல..;(

நல்ல பதிவு.

butterfly Surya said...

நல்ல பதிவு மங்கை.

வட இந்தியாவில் மட்டுமல்ல மங்கை.சென்னையிலேயே மிக அதிக வசதி கொண்ட வட இந்திய குடும்ப பெண்கள் படிப்பதிலும் அதிக அறிவை வளர்பதிலும் நாட்டம் இல்லை. எந்த பிரச்சனையும் இன்றி வாழ்க்கை அமைக்கவும், இஷ்டம் போல சுற்றவுமே விரும்புகின்றனர். அதனால் தான் டில்லி, மும்பையிலிருந்து சிறிய வியாபாரிகள் இங்கு வந்து Wholesale வியாபாரிகளாக செட்டில் ஆகிவிடுகின்றனர்.. Retail வியாபாரத்தை அண்ணாச்சிகள் அபகரித்துவிட்டதால் சவுக்கார்பேட்டையிலிருந்து ஊடுருவி கன்யாகுமரி வரை சென்று விட்டார்கள்.

இந்த குடும்ப பெண்களில் மிகச்சிலரை தவிர ஷாருக், ரித்திக் தவிர வேறு அறியாதவர்கள்.

சென்னையில் வாழும் வட இந்திய மிகப்பெரிய செல்வந்தர் குடும்ப்பத்திலும் அதிக பட்சம் படிப்பு கல்லூரி வரை மட்டுமே.. உடனே திருமணம்.. குழந்தைகள்..

எங்கு சென்றாலும் தென்னிந்திய " மங்கைகள்" சிறப்பு வாய்ந்தவர்களே..

இதற்கு மங்கையே சாட்சி...

மங்கை said...

சென்ஷி...இங்க தான இருந்தே??... படிச்சு கருத்து சொல்லாம... இது என்ன கும்மி அடிச்சுட்டு...

கோபி கொடுமைன்னு சொல்லிட்டார்.. அடேங்கப்பா..

மங்கை said...

நன்றி பூர்ணிமா..

வண்ணத்துபூச்சியார்...

தமிழ்நாட்டு மங்கைகள் எல்லாருமே கலக்கல்ஸ் தான்...நன்றி

கவிதா | Kavitha said...

//நம் எளிமையும், சகிப்புத்தன்மையும் ராஜ்தீப் போன்றோருக்கு நம்மை conservative ஆக காட்டுகிறது.//

உண்மை..! அதே போல் தான் பஞ்சாலி கதையும் கூட வட இந்தியாவின் கலாசாரத்தை ஒத்தது என்று எங்கள் வீட்டில் பெரியவரகள் விவாதித்து கேட்டு இருக்கிறேன். ஒரு பெண்ணை அண்ணன் தம்பி என்று அனைவரும் திருமணம் செய்து கொள்வது.

இதற்கு காரணம் சொத்து பிரிந்து போயிவிட கூடாது என்று சொல்லுவார்கள்..

நல்ல பதிவு மங்கை..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிகக்கொடுமையான விசயம்.. இப்படி எல்லாம் தான் கம்பேரிசன் செய்து நம்ம ஊருபெண்கள் நிலையை பேசிக்கொள்ளவேண்டி இருக்கே.. ஹ்ம்..

இவர்களின் அந்த ஜிகுஜிகு கலாச்சாரம் எனக்கும் வேடிக்கையாக இருந்திருகிறது. உச்சியில் இருந்து கால் வரை ஜிகு ஜிகு தான்.. :(

Thekkikattan|தெகா said...

ஒப்பீட்டளவில் பார்க்கும் பொழுது மங்கை கூறியதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாதுதென நினைக்கிறேன் வட இந்தியாவிற்கும் - தமிழகத்திற்கும்.

நம்மூரில் இது போன்ற திருமணங்களை காண்பதே அறிது என்று நினைக்கிறேன். அன்மையில் எனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் இது போன்ற திருமணம் தமிழகத்தில் நடந்தேறியது, எல்லாரின் எதிர்ப்புனூடாக (அண்ணன் ஒரு விபத்தில் மரணிக்க, தம்பி அவரின் மனைவியை குழந்தைகளுடன் மணக்க நேரிட்டது அவர்களிருவரின் முழுச் சம்மதத்துடன்).

இதுவே நம்மூரின் நிலை இது போன்ற திருமணங்களில் என்பது என் கணிப்பு, குறைந்த பட்சம் கொஞ்சமேனும் முகம் சுழிப்பார்கள் கண்டிப்பாக இந்த பொருளாதார விசயங்களை முன்னிருத்தி செய்தால்...

மங்கை said...

நன்றி கவிதா...லட்சுமி..தெகா

தமிழ் அமுதன் said...

//பெரும்பாலும் பெண் வீட்டாரும், அந்தப் பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல விரும்புவதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.///


இதுதான் பிரச்சினைக்கு முதல் முக்கிய காரணமாக தோன்றுகிறது!!

மங்கை said...

நன்றி அமுதன்