Monday, January 28, 2008

குழந்தைகள் குழந்தைகள்தானே.....


கடந்த சனிக்கிழமை தில்லியிலுருந்து 50 கி மி தள்ளி இருக்கும் ஒரு காப்பகத்துக்கு சென்றிருந்தேன். வெகு நாட்களாக போக நினைத்துக் கொண்டிருந்த பயணம் அது. எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம். இந்த முறை காப்பகத்தை நடத்தி வரும் ஃபாதர் கேரமல் போவதாக சொல்லவே நானும் தொற்றிக் கொண்டேன். கேரளாவில் இருக்கும் Missioneries of St.Thomas the Apostle ஆல் நடத்தப் பட்டு வருகிறது.

அழகான,அமைதியான இயற்கை சூழலில் அமைந்திருந்தது அந்த காப்பகம். 5 டிகிரி குளிரை பொருட்படுத்தாமல் கிடைத்த பூவை கையில் வைத்து கொண்டு களங்கமில்லா சிரிப்புடன் அன்பாய் வரவேற்றார்கள்.

அங்கு இருப்பவர்களிலேயே கடைக்குட்டியின் பெயர் அலோக், 4 வயதுதான். எச்ஐவி நோயாளியான அவன் அம்மா இவன் பிறந்த உடனே இறந்து போக, அப்பா இவனை இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டு போய்விட்டார். இத்தனைக்கும் அவர் ஒரு கோவில் பூஜாரி. மனைவி எச்ஐவியால் இறந்து விட்ட போதும், தான் இந்த பரிசோதனை செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை அந்த தாய் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ, சரியான விவரம் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அலோக் பிறந்தவுடன் தாய் இறந்து விட, தந்தை மறுமணம் செய்து கொண்டார்.


ரெண்டாவது மனைவி பாதிக்கப்பட்ட குழந்தையை பார்த்துக்கொள்வாள் என்று நினைப்பது இன்றைய சுயநலம் பீடித்த சூழ்நிலையில் மிகப்பெரிய மடத்தனம்.ஆதரவில்லாத அந்த பச்சை மண் இப்பொழுது காப்பகத்தில். அலோக்கின் உடம்பில் நோய் கிறுமியின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவனுக்கு ஏஆர்டி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நிமிடம் கூட ஒரு இடத்தில் உட்கார பிடிக்காமல் ஓடி விளையாட துடித்தாலும், அதற்கு அவன் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. வீட்டில் எத்தனை மன உளைச்சலுக்கு தள்ளப் பட்டிருந்தால் இந்த 4 வயது பாலகன் வீட்டிற்கு போகவே பதறுவான். அப்பாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலே இல்லை.

ஹ்ம்ம்...கணவன் இறந்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தையுடனும்,நோயுடனும், பழிச்சொல்லுடனும் ஆதரவின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இன்று ஏராளம். ஆனால் இங்கு.....ஹ்ம்ம்ம்...

மற்றறொருவன் சுஷில். 9 வயது. அம்மா, அப்பா இரண்டு பேரும் இறந்து போக, பாட்டியால் பார்த்துக் கொள்ள முடியாததால், இங்கே இருக்கிறான். இந்த நோய்க்கே உண்டான சில அறிகுறிகளான வயிற்றுப்போக்கு, உடம்பு வலி, சோர்வு போன்றவைகளால் தற்பொழுது அவதிப்படும் இவன், தனக்கு ஏதோ பெரும் வியாதி இருப்பதை தற்பொழுது உணர்ந்து வருகிறான். நாம் எங்கு சென்றாலும் அருகில் வந்து ஒட்டி உட்கார்ந்து கொள்ளும் இந்த குழந்தையின் மனதில் என்ன என்ன இருக்கிறதோ, அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

காப்பகம், சுத்தமாகவும், பணிபுரிபவர்கள் உண்மையான அக்கறையுடனும், அன்புடன் இருந்தது திருப்தி அளிப்பதாக இருந்தது. அன்று அவர்களுடன் இருப்பதாக சொன்னதும், '' அப்போ நீங்க சமைத்து தாங்களேன்'' என்றனர் குழந்தைகள். சாம்பார், ரசம் என்று எங்கள் சமையல் செய்யவா என்று கேட்கவே, உடனே ஆளுக்கொரு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கல்யாண வீடு போல கலகலப்பாக இரண்டு மணி நேரத்தில் சமையல் வேலை முடிந்து, வெளியே, கட்டைகளை அடுக்கி, தீ மூட்டி, சுற்றி உட்கார்ந்து உணவருந்தியது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது.

அந்த குழந்தை என்ன தவறு செய்தது, ஏன் இவர்கள் மட்டும் இங்கே இப்படி காப்பகத்தில், இந்த அவல நிலைக்கும்,பழிச்சொல்லுக்கும் அந்த குழந்தைகள் எந்தவிதத்தில் காரணமாவார்கள்.உதவிகள் என்ற பெயரில் ஏதோ என்னாலானவற்றை செய்யமுடியும். ஆனால், அன்புக்கும்,அரவனைப்புக்கும் ஏங்கும் அந்த பிஞ்சுகளுக்கு சக மனுஷியாய், ஒரு தாயாய் ஏதும் செய்யமுடியாமல் வெறும் பார்வையாளனாய் இருக்க முடிவது எத்தனை கொடுமை.

இயலாமை என்னை பிடுங்கித்தின்ன கனத்த மனதுடன், மௌனத்துக்குள் என்னை புதைத்துக் கொண்டு தில்லி திரும்பினேன்...

20 comments:

காட்டாறு said...

//ஆனால், அன்புக்கும்,அரவனைப்புக்கும் ஏங்கும் அந்த பிஞ்சுகளுக்கு சக மனுஷியாய், ஒரு தாயாய் ஏதும் செய்யமுடியாமல் வெறும் பார்வையாளனாய் இருக்க முடிவது எத்தனை கொடுமை.
இயலாமை என்னை பிடுங்கித்தின்ன கனத்த மனதுடன், மௌனத்துக்குள் என்னை புதைத்துக் கொண்டு தில்லி திரும்பினேன்...//

இந்த ஆதங்கம் ஏற்படுவது தடுக்க முடியாதே மங்கை. என்ன செய்ய? நீங்கள் அங்கே போய் அவர்களுடன் சேர்ந்து சமைத்து உணவருந்தியதே அவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாய் இருந்திருக்கும்.

PAISAPOWER said...

ம்ம்ம்ம்ம்ம்ம்.....

Thekkikattan|தெகா said...

அந்த குழந்தை என்ன தவறு செய்தது, ஏன் இவர்கள் மட்டும் இங்கே இப்படி காப்பகத்தில், இந்த அவல நிலைக்கும்,பழிச்சொல்லுக்கும் அந்த குழந்தைகள் எந்தவிதத்தில் காரணமாவார்கள்.//

மங்கை,

ஆழமான கேள்வி. இந்தச் சிறார்கள் படும் துன்பத்திற்கு இந்த முற்பிறவி, கர்மாதான் காரணமாக இருக்குமோ? இல்லை இவர்கள் இப்படித்தான் வாழ வேண்டுமென்று அந்தக் கடவுளே பணித்து விட்டாரா? :( .

உங்கள் மன உறுதியை நினைத்தால் வியப்பாக இருக்கிறது...

காட்டாறு said...

//காப்பகம், சுத்தமாகவும், பணிபுரிபவர்கள் உண்மையான அக்கறையுடனும், அன்புடன் இருந்தது திருப்தி அளிப்பதாக இருந்தது. //

இது மனசுக்கு நிறைவா இருக்குது மங்கை. இவ்வுலகில் மனிதாபிமானம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்த அன்பும், அக்கறையும் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை எண்ணிப்பார்க்க செய்கிறது இந்த வரிகள்.

இலவசக்கொத்தனார் said...

ரொம்பவே பதறச் செய்த பதிவு. அந்த குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக்க ஆட்கள் இருக்காங்களேன்னு ஒரு சின்ன சந்தோஷம். அவ்வளவுதான்.

கோபிநாத் said...

;((

\\அப்போ நீங்க சமைத்து தாங்களேன்'' என்றனர் குழந்தைகள். சாம்பார், ரசம் என்று எங்கள் சமையல் செய்யவா என்று கேட்கவே, உடனே ஆளுக்கொரு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கல்யாண வீடு போல கலகலப்பாக இரண்டு மணி நேரத்தில் சமையல் வேலை முடிந்து, வெளியே, கட்டைகளை அடுக்கி, தீ மூட்டி, சுற்றி உட்கார்ந்து உணவருந்தியது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது\\

எத்தனை பேருக்கு இப்படி ஒரு அருமையான அனுபவம் கிடைச்சிருக்கு. அந்த சில மணிநேரத்தில் அந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேத்திட்டிங்க.

கொடுத்துவச்சவுங்க அக்கா நீங்க! :)

துளசி கோபால் said...

இந்த மாதிரி இடங்களுக்குப்போய் வந்தா மனசு எப்படிக் கனத்துப்போயிருதுன்னு நல்லாவே புரியுது மங்கை.

ஆனால்.........நம்மால் செய்யக்கூடியது, வெறுப்பில்லாத அன்பைத் தருவதுதான். அது அந்த நிமிஷத்துக்கு பெரிய பொக்கிஷம்.

இது சம்பந்தமான என் பதிவுகள் சில வந்துருக்கு.

http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_19.html

http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_114275383557688922.html

http://thulasidhalam.blogspot.com/2007/02/2.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சமைச்சீங்களா பரவாயில்லையே... ம்.. நீங்க அவங்களோட சிரிச்சிபேசி கூட இருந்தீங்களே கொஞ்ச நேரமேஆனாலும் அது அந்த குழந்தைகளுக்கு எத்தனை சந்தோஷமா இருந்திருக்கும்ன்னு யோசிச்சுப்பாக்குறேன்..
அந்த குழந்தையின் முகம் பார்த்து சங்கடமா இருக்கு. நீங்க நேரில் பார்த்திருக்கீங்க கூட இருந்திருக்கீங்க இன்னும் கஷ்டமா இருந்திருக்கும் உங்களுக்கு..

பாச மலர் / Paasa Malar said...

மங்கை..உங்கள் உணர்வுகள் புரிகிரது..படிக்கும்போதே இப்படி இருக்கிறதே..ஒரு வித இயலாமை உணர்வு தோன்றத்தான் செய்ய்ம்..ஆனாலும் உங்களால் முடிந்த அளவு அவர்களைச் சந்தோஷமாக வைத்ததை எண்ணி திருப்திப்படுங்கள்..

மங்கை said...

பின்னூட்டம் இட்ட..காட்டாறு, சொக்கர், டாக்டரம்மா, தெகா,இகொ, கோபி, லட்சுமி, துளசி, பாசமலர் உங்கள் உணர்வுகளை பகிர்ந்திமைக்கு நன்றி...

ம்ம் மறக்க முடியாத அனுபவம் தான்.. இதை அடிக்கடி செய்யலாம் என்று நினைக்கிறேன்...

டாக்டரம்மா..இயலாமைனு சொன்னது இன்னும் அவர்களுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுது...ம்ம்ம்

மங்கை said...

தெகா

முன் ஜென்ப பாவம்/பின் ஜென்ம பாவம் எல்லாம் ஒன்னும் இல்லைங்க...

மற்ற நோய்களைப்போல இது தானா நம்ப உடம்பில் ஏற்படுவதில்லையே..
எச்ஐவி பரவ காரணமா இருக்குற நான்கு வழிகளும் தடுக்க கூடியவை தானே... இந்த நான்கு வழிகளில் பரவும் போதும் யாரோ ஒருவரின் பொறுப்பற்ற செயலால் தான் பரவுகிறது..

அதாவது டிஸ்போசபில் அல்லது சுத்தகரிக்கப்படாத ஊசிகளை உபயோகப் படுத்தாத பொறுப்பில்லாத மருத்துவ ஊழியரின் செயல்...

ஆணுறை உபயோகிக்காமல் கொள்ளும் உடலுறவு..தன் குடும்பம் என்ன ஆகும் என்ற உணர்வில்லாமல் செய்யும் மற்றொரு பொறுப்பற்ற செயல்
(இதில் ஆணா பெண்ணானு நான் சொல்லலை).. இவர்களுக்கு பிறக்கும் குழந்தையை இந்த நோய் தாக்காமல் இருக்க மருந்துகள் இருந்தாலும் அதை ஏன் இவர்கள் நாடுவதில்லை? பாதிக்கப்பட்டவர் என்ற முத்திரையுடன் போகும் போது இவர்களுக்கு ஏற்படும் அவமானம்...பழிச்சொல்..Judgemental attitude...

இன்னும் பலருக்கு இப்படி ஒரு மருந்து இருப்பதே தெரியாது.. நம் விழிப்புணர்ச்சி திட்டங்கள் எது வரைக்கு செல்கிறது என்பதை சரியாக மானிட்டர் செய்ய இப்போதைய நம் திட்டம் பத்தாது..

இது எல்லாமே நம்மால் முடிந்தவை தான்.. பணக்கார நாடுகள் கொடுக்கும் பணம்...ம்ம்ம்ம் வேண்டாம் நானே இதை பற்றி பேசக் கூடாது...

இந்த குழந்தைகள் இப்படி அவதிப்பட காரணம் இது போல பல இருக்கு...

வேண்டியது எல்லாம் இது போல பாதிக்கப்பட்டவர்களின் தளத்திலிருந்து நாம் திட்டம் தீட்ட வேண்டும்...

மங்கை said...

இ.கொ, கோபி

நான் தான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.. இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்ல விரும்பலை..ஹ்ம்ம்

துளசி..நான் இந்தப் பதிவுகளை ஏற்கனெவே படிச்சிருக்கேன்..நன்றி

லட்சுமி.. பாசமலர்... இன்னும் செய்யனும்.ஆனால்..இயலாமை
நன்றி

இரண்டாம் சொக்கன்...! said...

மங்கை...

அந்த குழந்தைகளின் புகைப்படங்களை அகற்றிவிடலாமே...

காரணங்கள்.....

1.மனதை பிசைகிறது.

2.அந்த குழந்தைகளின் அடையாளங்கள் ஊடகத்தில் உலவவிடுவது அத்தனை சரியாக படவில்லை.

நீங்க என்ன நினைக்கறீங்க...ம்ம்ம்ம்

மங்கை said...

சொக்கரே

குழந்தைகளின் நலன் கருதி படங்களை அகற்றி விட்டேன்...நன்றி

Thekkikattan|தெகா said...

//*பெற்றொர்களில் பொறுப்பற்றவர்,
*ஊசிகளை உபயோகப் படுத்தாத பொறுப்பில்லாத மருத்துவ ஊழியர்,
*பணக்கார நாடுகள் கொடுக்கும் பணம்...ம்ம்ம்ம் வேண்டாம் நானே இதை பற்றி பேசக் கூடாது...(இப்படி லபக் போடும் நம்மூர் ஆட்கள்)
*ஒட்டு மொத்த சமூகம் "விதி"மேல போட்டுட்டு சும்மா வேடிக்கைப் பார்க்கிறது...//

அப்போ உலகத்தில் நடக்கும் எல்லா செயல்களுக்கும் நாம பொத்தாம் பொதுவா "அவர்"மேல பாரத்தை தூக்கிப் போட்டுவிட்டு தப்பிக் நினைக்கக் கூடாதுங்கிறீங்க.

அப்படி சொல்லிட்டு உஷ் யப்பாடான்னு இருந்தா, இந்த பொறுப்பில்லா செயலுக்கு யாரெல்லாம் காரணமோ அவங்களுக்கும் இதில பொறுப்பு இருக்குன்னுதானே பொருள் கொள்ளணும்... அப்ப அவங்களுக்கு எண்ணை கொப்பரை உண்டுன்னு தெரியுது (அதாவது அதெல்லாம் தலையெழுத்துடாப்பான்னு சொல்லிட்டு இருக்கிறவங்களுக்கு...).

Rama said...

மற்றொரு விளம்பரப் பதிவு..ம்ம்ம்ம்
திருந்துங்கம்மா

காட்டாறு said...

ரமா/ராமா, நிகழ்வுகள் எழுதுவதற்கு பெயர் விளம்பரம் என்றால் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லையே? திருந்த அவர் ஒன்றும் தவறு செய்யவில்லையே. மேலும் ஒருவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போது, அவரை எள்ளி நகையாடுவது போல் உள்ளது உங்களின் பதில்.

அவரவர் வலைப்பதிவில் அவரவர் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப எழுதுவதில் குற்றம் குறை கண்டுபிடிக்க நாம் யார்?

Thekkikattan|தெகா said...

ராமா,

இப்படி மொக்கையாக வந்து, தன் நெஞ்சில் கொஞ்சம் ஈரமிருக்கிறது என்பதனை இப்படி களப் பணியீல் இருப்பவர் காட்டுவதைக் கூட வலை அரசியல் பாணியில் எடுத்துக் கொண்டால், வும் அரும் பணிகளை எங்களுக்கும் எடுத்துக் கூறினால் என் போன்ற செல்வச் செழிப்பில் வாழ்பவர்களை கொஞ்சம் தரைக்கு கொண்டு வர உதவலாமில்லையா?

வும்ம கதை வந்து எப்படித் தெரியுமா இருக்கிறது... "மேயுற மாட்டை ... பழமொழிதான் ஞாபகம் வருகிறது"

ரிதன்யா said...

//நாம் எங்கு சென்றாலும் அருகில் வந்து ஒட்டி உட்கார்ந்து கொள்ளும் இந்த குழந்தையின் மனதில் என்ன என்ன இருக்கிறதோ, அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.//

இயலாமை..ஹ்ம்ம்...

Anonymous said...

My God...

unable to control the tears...

no words to say my feelings...

God has created some people like you to help these unfortunate souls..

I pray God for the well being of these children and people like you and people who support you...

Amutha
Chennai