பரபரப்பான வாழ்வியல் சூழலில் சிக்கிக்கொண்ட பின்னர் குடும்பம் என்பது ஆத்மார்த்தமான பினைப்பு என்பதெல்லாம் போய் ஒரு வர்த்தககட்டமைப்பாய் மாறிவிட்ட அவலத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இலக்குகளை நோக்கி ஓடும் விற்பனை பிரதிநிதிகளாய் தம்பதியர் ஆலாய்பறந்தால்தான் குடும்ப தேவைகளை ஓரளவிற்காவது பூர்த்தி செய்ய முடிகிறது. திறமையான விற்பனை பிரதிநிதிக்கு கிடைக்கும் ஊக்கத்தொகை போல திறமையானவர்களின் குடும்பத்தில் போலியான நிறைவும்,மற்ற குடும்பங்களில் நம்பிக்கையின்மையும், சலிப்பும் சச்சரவுகளும் தொடர்கின்றன.
குடும்பத்தின் வெற்றிக்கு இருவரின் பங்கும் சமமானது என்றாலும் புரிந்துணர்வு என்பது ஒத்த அலைவரிசையில் இல்லாவிடில் எத்தனை நிறையிருந்தும் விழலுக்கிறைத்த நிரே...புரிந்துணர்வினை இரு வகையில் உருவாக்க இயலுமென நம்புகிறேன், ஒன்று ஆத்மார்த்தமான பினைப்பினால் வருவது அல்லது ஆடுகிற மாட்டை ஆடியும்,பாடுகிற மாட்டை பாடியும் கறக்கிற வழி....இந்த பதிவில் இரண்டாவது வகை பற்றி எனக்கு தெரிந்ததை அல்லது நான் புரிந்துகொண்டதை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இவை இரு பாலாருக்கும் பொருந்தும்.
1.ஒத்துழைப்பு, இது மிக முக்கியமான மந்திரச்சொல்...இதை எப்படி உங்கள் இனனயிடமிருந்து பெறுவது. ஒரு எளிய வழி சொல்கிறேன் முயற்சித்துப் பாருங்கள்.உங்களுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ அவர்கள் அறியாமல் அவர்களின் உலகத்தில் நுழைந்து பாருங்கள்.அவர்களின் செயல்கள், எண்ணங்கள், நடவடிக்கைகள், பிரச்சினையை அணுகும்விதம், பலம்,பலவீனம் போன்றவைகளை விருப்பு வெறுப்பின்றி கவனியுங்கள், மிக முக்கியம் நீங்கள் மோப்பம் பிடிப்பதை அவர்கள் அறியக்கூடாது. இதில்தான் உங்களின் வெற்றி இருக்கிறது.
ஒரு கட்டத்தில் நீங்கள் மிக எதார்த்தமாக நீங்கள் அவரைப் போலவே செயல்பட ஆரம்பியுங்கள், அதாவது கண்ணாடி பிரதிபலிப்பதைப் போல,அவருக்கு அது ஆச்சர்யமாகவும் அதே நேரத்தில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது(ஈகோதான்) ரசிக்க துவங்கியிருப்பார். சந்தர்ப்பங்களில் அவர் சொல்ல வருவதை முந்திக்கொண்டு நீங்களே சொல்லுங்கள், மனிதர் ஒரு கட்டத்தில் அசந்து போய்,நீங்கள் அவரைப் போல செயல்படுவதாக நம்பி அவரையறியாமலே உங்களுக்கு தேவையான அதீத ஒத்துழைப்பினை தரத்துவங்குவார்.இது வெறும் முதல்படிதான் இங்கேயே சந்தோஷப்படாதீர்கள்.
2.பொதுவில் மனிதர்கள் அனைவரும் சுயநலமும், தான் என்கிற ஈகோவும் பிசைந்த கலவைதான்.எதிலும் முதலில் தங்களின் நிலைப்பாடும், பாதுகாப்பும்தான் முக்கியம் என கருதுவர்.அதை உறுதி செய்யும் பதட்டத்தில்தான் பாதிக்கு மேலான பிரச்சினனகள் தோன்றுகின்றன. சரி, முதல் கட்டத்தில் அவரின் ஈகோவை கரைத்திருப்பீர்கள், இப்போது அவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்.அதாவது நீங்கள் நினைப்பதை அல்லது விரும்பியதை அவரின் மீது பட்டவர்த்தனமாய் திணிக்காதீர்கள்.
நீங்கள் விரும்பியதை பொதுவான கருத்து மாதிரி சொல்லுங்கள், சொல்லும் போதே எங்கெல்லாம் அவர் இடக்கு பண்ணுவாரோ அங்கெல்லாம் 'ஆனால்'னு ஒரு வார்த்தையை சேர்த்து இது நமக்கு ஒத்துவராது என அவருடைய நிலைப்பாட்டினை உங்கள் இருவரின் நிலைப்பாடாக சொல்லி விட்டு அதற்கான தீர்வினை, அதாவது உங்களின் சமாதானத்தை பட்டும் படாமல் கோடி காட்டுங்கள். நிச்சயமாக மேஜிக் நிகழும், 'நீ சொல்றதும் சரிதான்' என புத்திசாலித்தனமாய் முடிவெடுப்பதாய் உங்கள் தீர்மானங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். உங்கள் பங்குக்கு 'நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், நீங்களே சொன்னப்புறம் நான் என்ன சொல்றதுக்கு இருக்கு, உங்க விருப்பப்படியே செஞ்சிரலாம்'னு அடிச்சி ஆடுங்க.
3.இப்போது அவர் முறை, உங்களுக்கு பிடிக்காத ஒன்றை உங்களிடம் சொல்கிறார், அதாவது இந்த கட்டத்தில் அவர் உங்களின் இரண்டாவது கருத்தினை கேட்கும் அளவுக்கு வந்திருப்பார்.உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஆர்வமாய் கேளுங்கள், தொடர்ந்து,அவர் சொல்லும் கருத்தின் நேர்மையை பாராட்டுங்கள்,மனிதர் புகழ்ச்சியில் தடுமாறும் நேரத்தில் பொறுமையாக உங்கள் மறுப்பினை சந்தேகக் கேள்விகளாக தூவுங்கள்.
விவாதத்தை மென்மையாக அதே நேரத்தில் அவரின் போக்கிலேயே வளர்த்து கொண்டு போங்கள், எந்த இடத்திலும் உங்கள் கருத்தென ஊன்றிப்பேசாதீர்கள்,"இப்படி ஆய்ட்டா நாம என்ன பண்றது","அதுக்கு நாம என்ன செய்யலாம்" என பன்மையிலேயே விவாதம் போகவேண்டும். உங்கள் பக்கம் நியாமிருந்தால் நிச்சயமாக ஆனால் மெதுவாக அவர் தன் நிலைப்பாட்டில் தளர ஆரம்பித்திருப்பார் அல்லது அவர் பக்கம் நியாயமிருக்கும் பட்சத்தில் ஆர்வமாய் உங்களுக்கு விளக்க ஆரம்பித்திருப்பார்.அவர் சொலவது சரியாய் இருந்தால் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் பாவம் எத்தனை நாளைக்குத்தான் அவரை நாமே
ஆட்டுவிப்பது.
4.முதல் மூன்று கட்டங்கள் தொடர வேண்டுமானால் இந்த நாலாவது விஷயம் ரொம்ப முக்கியம், அதாவது உங்களின் இனையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டுங்கள், அதேநேரத்தில்
பாராட்டுகிறேன் பேர்வழியென ஓவராக்ட் கொடுத்து சொதப்பிவிடக்கூடாது. முடிந்தவரை இனிமையாக பேசுங்கள், அவரின் நிறைகளை அடிக்கடி சுட்டிக்காட்டுங்கள், அதே நேரத்தில் அவரின் குறைகளை நேரடியாக கடுமையாய் தடித்த வார்த்தைகளில் விமர்சிக்காமல், "நான் சொல்றத கேளுங்க" என அதிரடியாய் ஆரம்பிக்காது மென்மையான தொனியில் 'எனக்கொன்னு தோணுது சொல்லவா?' என அனுமதி கேட்பது போல ஆரம்பித்து உங்களின் அதிருப்தியை சொல்லிப்பாருங்கள். அந்த கணத்தில் அவர் மறுத்தாலும் அடுத்தடுத்து அந்த குறைகள் காணாமலோ அல்லது உங்களின் பார்வைக்கு வராமலோ போய்விட வாய்ப்புண்டு.
5.நிறைவாக...ஏற்றுக்கொள்ளுங்கள், காது கொடுங்கள், நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்காக உண்மையாய் கவலைப்படுங்கள், உற்சாகப்படுத்துங்கள், அவர்களின் போக்கில் உங்கள் கருத்தினை இனைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் தனித்தன்மையை உறுதி செய்யுங்கள்.நிலமையை புரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் நீங்கள் மட்டுமே முக்கியமானவர் இல்லை, குடும்ப நலமே முக்கியமென்பதை உணரத்தலைப்படுங்கள்.
இந்த ஐந்து நிலைகளுக்கு பின்னால் திரும்பி பாருங்கள்.இந்நேரத்திற்கு நீங்கள் இருவரும் ஆத்மார்த்தமாய் பின்னி பினைந்திருப்பீர்கள்.
வாழ்க வளமுடன்.