குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள், அரசாங்கத்தின் உறுதி மொழிகள் இருந்தும் பிஞ்சுகள் நாளும் ஏதோ ஒரு முறையில் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டும் தானிருக்கிறார்கள். காலங்காலமாக நம் சமூகத்தில் நடந்தேறிக் கொண்டிருந்த சில மன்னிக்க முடியாத குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளியே வர தொடங்கியிருக்கின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் மட்டும் 3 சம்பவங்கள். தந்தை என்று சொல்லி கொண்டிருந்த ஜென்மமே சொந்த மகளை கற்பழித்த கொடூரம். இதில் தாயும் உடந்தை. நினைத்துப் பார்க்கவே பதைக்கிறது. இதைத் தொடர்ந்து பஞ்சாபிலும், இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அல்லும் பகலும் காத்தருளும் ஒரு கட்சிப் பிரமுகரின் மகள், தன் தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறி இருக்கிறார்.
பாலியல் கல்வியின் அவசியத்தை ஆராய்ச்சிகள் மூலமும், எடுத்துகாட்டுகள் மூலமும் எடுத்துக் கூறியும், தங்களின் வக்கிர மனதுக்கு தீனி போடவே, அரசியல் கட்சிகள் பாலியல் கல்வியை வேண்டாமென்று ஒதுக்கி வருகிறார்கள் என்று தான் நான் கூறுவேன். பண்பாடு, கலாச்சாரம், வெங்காயம் என்று கூவி, கூவி இளைய தலைமுறையினருக்கும் இடையூறு விளைவித்து கொண்டிருக்கிறார்கள். வக்கிர மனங்கொண்ட அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறை அவர்களது சுதந்திரத்தையும், உரிமையையும் வன்முறைக்குள்ளாக்கி, அவர்களின் இருப்பை முடக்கி நிர்மூலமாக்குகின்றது.இது பெரும்பாலும் குடும்பத்துக்கு வேண்டியவர்களாலும், உறவினர்களாலுமே ஏற்படுகிறது என்பது தான் கொடுமை. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இரண்டு பாலாரும் வன்முறைக்கு உள்ளாகிக்கொண்டு தானிருக்கிறார்கள்.
ஆராய்ச்சிகள் மூலமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நேர்காணல் மூலமும் இது போன்ற உண்மைகள் தெரிய வருகிறது. அதை வைத்து தான் பாலியல் கல்வியில் பாடங்களை வகுத்து இருக்கிறார்கள். இந்த வன்முறைகளிலிருந்து எவ்வாறு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கூறுவதே பாலியல் கல்வி. மற்றபடி பாலியல் கல்வி என்பது உடலுறவைப் பற்றி சொல்லிக் கொடுப்பது அல்ல. குழந்தைகளுக்கு யாரிடமிருந்து, எவ்வாறு இது போன்ற தொல்லைகள் வருகிறது, அதை எவ்வாறு அடையாளம் காண்பது, அதிலிருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது, போன்ற பயிற்சிகள் அடங்கிய ஒரு கல்வி முறை தான் பாலியல் கல்வி.
நடைமுறையில் இல்லாத ஒரு நிகழ்வு ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால் அதை உணர்ந்து, முன்கூட்டியே மற்றவர்களிடம் எடுத்துக் கூற ஒரு நம்பிக்கையை ஊட்டவே இந்த பயிற்சி. 'பாலியல் கல்வி' என்றால் தகாத ஒன்றாக பார்ப்பதால், சிலர் அதை 'வாழ்வியல் கல்வி' என்றும் கூறுவர். பெற்றொர்களும் ஆசிரியர்களும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசினால் யாராவது ஒருவரிடமாது அக்குழந்தை புகார் கூற வாய்பிருக்கிறது. ஒருவர் தவறு செய்தால், மற்றவரிடம் நாம் கூறலாம் என்ற நம்பிக்கை வரும்
பாலியல் கல்வியை முதலில் மகாராஷ்ட்ரா மாநிலம் அரசு தான் தடை செய்தது. அந்த தடைக்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் பேராதரவு அளித்தன. அதைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களும் தடை செய்தன.
இந்திய அரசு தரப்பில் நடந்த ஒரு ஆராய்ச்சியில், மகாராஷ்டிர மாநிலத்தில், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், 49.43 % சதவீத ஆண் குழந்தைகளும் 50.57 % சதவீத பெண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக அவ்வறிக்கை சுட்டுகிறது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் 61.73% பேர் குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்களாம். 5 வயதில் ஆரம்பித்து, 10 வயதில் வேகம் கூடி, 12-15 வயதில் வன்முறை உச்சத்தை அடைகிறதாம். (இதை டைப் செய்யக் கூட எனக்கு கை வரலை).
தங்களுக்கு நேரும் அவலங்களை தைரியமாக சொல்ல இந்தப் பிஞ்சுகளுக்கு தெரிவதில்லை. ஏதாவது ஒன்றை சொல்லி அவர்களை அடக்கி விடுவது எளிதான ஒன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறது. வெளியே சொல்லுவதற்கான ஏதுவான சூழ்நிலை எப்பொழுதும் அமைவதில்லை. சொன்னால் அவர்கள் மீதே பழி விழும் என்று பயந்து வெளியே சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும், குடும்ப கவுரவத்தை காரணம் காட்டி பெற்றோர்களும் உறவினர்களும் அதை மூடி மறைத்து விடுவார்கள். மாமாக்களும், சித்தப்பாக்களும் இது போன்ற விளையாட்டுக்கள் விளையாடாமல் இல்லை. பள்ளியில் வாத்தியாரின் தொடுதல் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இதை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து தான் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எதையும் தங்களிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு பெற்றோர்களே இப்படி அயோக்கியர்களாக இருந்தால் என்ன செய்வது.இது மாதிரியான சூழ்நிலையில் தான் ஆசிரியர்களும், நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். இந்த உதவியை நாடுவதற்கான தைரியத்தை வாழ்வியல் கல்வி ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இந்த மௌனங்கள் கலைக்கப்படவேண்டியவை...நண்பர்களாக, ஆசிரியர்களாக, பக்கத்துவீட்டுகாரர்களாக, தாயாக, தந்தையாக நாமும் இந்த மௌனத்தை கலைப்போம்