Tuesday, February 12, 2008

வலிகளை பகிர்தலின் அவசியம்

உடன்கட்டை ஏறியவளே பதிவிரதையாகவும், அவளுக்கே மோட்சத்திற்கான டிக்கெட் என்கிற கப்ஸாவெல்லாம் இன்றைக்கு எடுபடாதுதான்.ஆனால் கணவனை இழந்த பெண்கள் மீதான சமூகத்தின் எதிர்வினைகள் இன்றைக்கும் அதிர்ச்சியளிப்பதாகவும், ஆத்திரமூட்டுவதாகவுமே இருக்கிறது.

நான் பார்த்தவரையில் தென்னிந்தியாவை விட இங்கே வடக்கில்தான் இந்த அவலம் அதிகமாய் இருக்கிறது.எல்லா மட்டங்களில் இருப்பதாக கூறமுடியாவிட்டாலும், பாமர மக்களிடையே மிகுதியாக காணமுடிகிறது

இந்துக்களின் புண்ணிய பூமியாக கருதப்படும், மதுரா, பிருந்தாவனம், வாரணாசி ஆகிய இடங்களில் மட்டும் 20,000த்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள், தங்கள் உறவுகளால் ஒதுக்கப்பட்டு இங்குள்ள கோவில்களிலும் ஆசிரமங்களிலும் அரை வயிறு சோற்றிற்காக தஞ்சமடைந்திருக்கின்றனர். தென்னிந்தியாவில் இத்தகைய நிலமை இல்லை என்று தான் நினைக்கிறேன்.

மேற்குவங்கம்,பீஹார் போன்ற மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் இருக்க வேண்டிய இடம் பிருந்தாவனம் அல்லது மதுராதான் என்று காலங்காலமாய் வேரூன்றியிருக்கும் சிந்தனை போக்கு, சமுதாய சட்டமாய் மாறி இந்த அபலை பெண்கள், வேறு வழியின்றி அவர்களாகவே இந்த சன்னியாசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.


இந்த பெண்களில் பெரும்பாலானோர் கோவில்களில் பஜனை பாட்டுக்கள் பாடி அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்கள் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சுய சார்பில்லாத பெண்களே பெரிதும் இத்தகைய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பஜனைப் பாடல்கள் பாட கூடியிருக்கும் பெண்கள்

பெரும்பாலான இல்லங்கள் சில உள்ளூர் தொழில் அதிபர்களின் சொற்ப ஆதரவில் நடத்தப் பட்டு வருகிறது. ஆதரவற்றோர் இல்லங்களில் தஞ்சமடைந்திருக்கும் இப் பெண்கள், இங்கு வந்த பிறகாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்றால், ம்ம்ம்ம்..அதுவும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் பெண்களின் எண்ணிக்கையால் அத்தனை பேருக்கும் இருக்க இல்லங்களிலும் இடம் இல்லை.

பிருந்தாவனத்திலும், மதுராவிலும் உள்ள இது போன்ற இல்லங்களிலும், கோவில்களிலும் வாழும் பெண்களுக்கு (17 வயது இளம் பெண் முதல் 80 வயது பாட்டி வரை) ஏற்படும் பாலியல் ரீதியான கொடுமைகள்... ஹ்ம்ம்.. என்ன சொல்ல... இல்லத்தை நடத்த பணம் தேவை படுவதால் இந்தப் பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். மேலும், மேலிடத்து 'ஆதரவு' வேண்டும் என்றால், கோவில் பண்டிதர், லோக்கல் போலீஸ், அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல் வாதிகளையும் திருப்திப் படுத்த வேண்டும்.

ஒரு வேளை இந்தப் பெண்கள் கர்ப்பம் அடைந்து விட்டால் பாதுகாப்பான முறையில் கருவை கலைக்க இவர்களிடம் வசதியில்லை. மருத்துவச்சி யிடமோ, நாட்டு மருத்துவரிடமோ தான் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், கைனகாலஜிகல் பிரச்சனைகள் மற்றும் பால்வினை நோய் போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம், இவர்களில் பலர் எச்ஐவி ஆல் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

கில்ட் ஆஃப் சர்வீஸ் நடத்தி வரும் இல்லத்தைப் போல ஒரு சில இல்லங்களே மனித நேயத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் வழி வழியாக வரும் 'வெள்ளை சேலை' கலாச்சாரம் இங்கு இல்லை. இங்கு பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமாணத்தில் இந்த இல்லம் நடந்தப் படுகிறது. பெரும்பாலும் வயதானவர்களே இருப்பத்தால், இவர்களைப் பார்த்துக்கொள்ள, இவர்களில் படித்தவர்களுக்கு, செவிலியர் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகிறது. இவர்கள் மற்ற இல்லங்களில் இருக்கும் வயதான பெண்மணிகளுக்கு முடியாத போது கவனித்துக் கொள்கிறார்கள்.இந்த ஆசிரமத்தை நிர்வாகித்து வரும் மோகினி கிரி ஆசரமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன்.

இங்கு நடக்கும் அவலங்களை படமாக தீபா மேத்தா 'வாட்டர்' என்ற படத்தின் மூலம் எடுத்துக் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம். படப்பிடிப்பு எடுக்க விடாமல் அவரைத் துரத்தி அடித்தனர் அங்கு இருந்த அதிகாரிகளும், மத வாதிகளும். அதனால் படப்பிடிப்பு இலங்கையில் தான் நடந்தது.

நடிகர் திலகத்தின் சகோதாரரின் மகன் தரன் தயாரித்த படமும் (White Rainbow) இந்த கொடுமைகளை எடுத்துக்காட்டுகிறது. அவரையும் படம் எடுக்க விடாமல் விரட்டி விட்டனர். பிறகு பிருந்தாவனம் போலவே சென்னையில் செட் போட்டு எடுத்தாராம்.

White Rainbow படத்தில் இருந்து ஒரு காட்சி

பெண்ணின் மகத்துவத்தை பற்றி வாய்கிழிய பேசும் மதவாதிகளோ அல்லது ஓட்டு வாங்கும் அரசியல் வாதிகளுக்கோ இவர்கள் மீது எந்த அக்கறையோ, கருணையோ இல்லையென்பதுதான் உண்மை.

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்....தாயாய், தமக்கையாய்,மகளாய் சீராட்டி பாராட்டப்பட்ட இவர்கள் கணவனை இழந்த ஒரே காரணத்திற்காக இப்படி ஓரங்கட்டப்படுவது எத்தனை கொடுமை. இதை படிக்கும் நீங்கள் யாராவது உங்கள் வீட்டு பெண்களுக்கு இத்தகைய கொடுமையை செய்ய முன் வருவீர்களா?

இத்தகைய சமூக அவலத்திற்கு நிச்சயமாக குறைவான கல்வியறிவும், சக மனிதனின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத மனப்போக்குகளே காரணமாயிருக்க முடியும்.

தன் துனையை இழந்த ஆனோ பெண்ணோ ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை, அவர்களின் இழப்பின் வலியினை நிச்சயமாய் மற்றவர்களால் தீர்த்துவிட முடியாது, ஆனால் பகிர்ந்து கொள்வதன் மூலம் சக மனிதனாய் நமது இருப்பினை அவர்களுக்கு உணர்த்தலாம். இந்த வலி என்றேனும் ஒரு நாள் நம் எல்லோருக்கும் வரலாம்....இதை மறந்துவிடக் கூடாது.

27 comments:

Thamiz Priyan said...

வலிகளை பகிர்தலின் அவசியம் என்பதை விட கட்டாயம் என்றும் சொல்லலாம். அந்தவலியை நீக்க முயற்சிப்பது நமது கட்டாயக் கடமைகளில் ஒன்று.

PAISAPOWER said...

இந்த மாதிரி சப்ஜெக்ட் எல்லாம் உங்களுக்குத்தான் தோணுது...யாரும் இதுவரை தொடாத தலைப்பு இது.

சொன்ன மாதிரி நமது ஊர்களில் இத்தனை தீவிரம் இல்லைதான்...ஆனால் அதற்காக எதுவுமே இல்லையென சொல்லிவிட முடியாது.

இதன் தீர்வினை ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் இருந்து உடனடியாய் தொடங்கிட வேண்டும்.....அதுவே நாளைய நமது தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாய் இருக்கும்.

கோபிநாத் said...

\\இந்த வலி என்றேனும் ஒரு நாள் நம் எல்லோருக்கும் வரலாம்....இதை மறந்துவிடக் கூடாது.\\

உண்மை..;(

பத்மா அர்விந்த் said...

மங்கை
இந்த மாதிரி இல்லங்கல் என்றில்லை, பொதுவாகவே தமிழ்நாட்டிலும் விதவை பெண்கள் வன்முறைக்கு ஆளாவது உண்டு. இது குறித்து பேசினால் கூட பெண்கள் தங்கள் உணர்வ்வை கட்டு படுத்தத்தான் அந்த நாளில் நிறைய விதிகள் இருந்தன என்று ஆரம்பித்தூவிடுவார்கள்.

சம்பந்தம் இல்லா ஒரு கேள்வி: மெர்க் தன் புதிய AIDsகான மருந்தை இந்தியாவில் வீற்க அனுமதி பெற்றதாகவும் அதன் மூல ஏற்பாடுகளைச் செய்ய அந்த திட்ட குழு தலைவர் சென்றதாகவும் அறிந்தேன். பக்க விளைவுகள் அதிகம் தெரியாத ஒரு மருந்தை உடனே இந்தியாவில் சந்தைப்படுத்துவது குறித்து AIDS இல் அதிக பணியார்றும் நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்?

Unknown said...

//அந்தவலியை நீக்க முயற்சிப்பது நமது கட்டாயக் கடமைகளில் ஒன்ற//I second that.

This is really sad:-((((((

காட்டாறு said...

//பெண்ணின் மகத்துவத்தை பற்றி வாய்கிழிய பேசும் மதவாதிகளோ அல்லது ஓட்டு வாங்கும் அரசியல் வாதிகளுக்கோ இவர்கள் மீது எந்த அக்கறையோ, கருணையோ இல்லையென்பதுதான் உண்மை.//

இது புதிய செய்தி இல்லையே மங்கை. அக்கறையாக செய்பவர்கள் சப்தமில்லாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவற்றை அம்பலப் படுத்த முனைபவர்களை எதிர்க்காமல் இருந்தாலே பல இன்னல்களை களைந்துவிடலாம் என்பது என் எண்ணம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

உண்மை மங்கை, சுய வருமானமும் , கல்வி அறிவு இல்லமையும் இதற்கான காரணமாய் இருக்கலாம். தென்னிந்தியாவில் இந்த அளவு கடுமையாக இல்லை ஒரளவு எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது ஆனாலும் செய்ய வேண்டியது இன்னும் எவ்வளவோ உல்ளது, மிகவும் அர்த்தமுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

தென்னிந்தியாவில் இவ்வளவு கடுமை இல்லைதான்..எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இவர்களுக்கு விடிவுகாலம் என்று வரும்? இவர்கள் வாழ்வில் மாற்றம் என்று வரும்?

மீண்டும் உங்களிடமிருந்து புதிய தகவல்களுடன் சிந்திக்க வைக்கும் பதிவு...

Thekkikattan|தெகா said...

மங்கை,

கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் எழுத்தின் நடையும், எடுத்துக் கொள்ளும் விசயங்களின் பரிணமிப்பும் மெருகேறிக் கொண்டே வருவதாக எண்ணத் தோன்றுகிறது. வர வரச் சூடு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

எழுத எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு விசயமும், நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. "ரோசி போர்வைக்குள்" எப்படிப் பட்ட கசப்பான உண்மைகளை நாம் மூடி வைக்க முற்படுகிறோமென்பது தெளிவாக தெரிய வருகிறது.

பாலியல் தொழிலிள் இது போன்ற அடைக்கலமற்ற பெண்களை ஈடுபடுத்துவதென்பதனை எப்படி பார்த்துக் கொண்டுள்ளான் அந்தக் கடவுள் அதுவும் தனது புனித வீட்டினுள்ளேயே - மதுரா,பிருந்தாவனம், வாரணாசி இவைகள் எல்லாம் அப்படிப்பட்ட இடங்கள் அல்லவா?

அப்ப கடவுள் எப்படி பார்த்துக் கொண்டு சும்மாவே இருக்கார்?

Divya said...

சிந்திக்க வைத்தது கடமையை உணரச்செய்தது, பல தகவல்களுடன் உங்கள் பதிவு!!

யாத்ரீகன் said...

இது போன்ற நிகழ்வுகள் இங்கொன்றும், அங்கோமென்றும் தான் நிகழ்கின்றது என்று நம்பிக்கையை தகர்க்கிறது நீங்க கொடுத்த தகவல் .. :-( .. கண்களை மூடிக்கொண்டால் உலகம் இல்லாமல் போவதில்லை...

இதை அந்த அரசாங்கத்துக்கு எடுத்துச்செல்வதில் நமது மீடிஆக்களின் பார்வை செல்லாமல் , நடிகையர் திருமணங்களில் பார்வை மறைந்து கிடக்கிறதே .. மேலும், இதெல்லாம் தெரியாமல் நாடு முன்நேறிக்கொன்டிருக்கின்றது என்று நம்பிக்கொண்டு இருக்கும் மக்களை என்ன சொல்வது..

கலை said...

Water படம் பார்க்கும்போது உண்மையிலேயே தற்பொழுதும் இப்படி நடை முறைகள் உள்ளனவா என்று யோசித்தேன். ஆனால் உண்மைதான் என்று சொல்லி இருக்கிறீர்கள். :(

Anonymous said...

//பொருளாதார ரீதியாக சுய சார்பில்லாத பெண்களே பெரிதும் இத்தகைய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.//
ச‌ரியாத்தான் ப‌டுது. ஆனா சுய‌மா ச‌ம்பாதிக்கும் பெண்க‌ள்ல‌ எத்த‌னை பேருக்கு அதை த‌ன் விருப்ப‌த்துக்கு செல‌வு ப‌ண்ணும் உரிமை இருக்கு. வாங்க‌ற‌ ச‌ம்ப‌ள‌த்தை அப்ப‌டியே மாமியார் கிட்ட‌ குடுத்துட்டு ப‌ஸ் காசுல‌ இருந்து எல்லாத்துக்கும் மாமியார் கைய‌ எதிர்பாக்கும் ம‌ரும‌க‌ளை நான் பாத்துருக்கேன்.
போராடி தனிக்குடித்தனம் போற வரைக்கும் அவங்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை. சமுதாயம் இன்னும் நிறைய மாறணும்

பாரி.அரசு said...

முதலில் நன்றி! நாம் வாழ்கிற சமகாலத்தில் மதக்கொடுமைகள் எவ்வளவு கொடூரமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்பதை வெளிக்கொணர முயன்றமைக்கு :(

தமிழகத்தில் கைம்பெண்கள் நிலை மேம்பட்டதற்க்கு மிக முக்கிய காரணம் பெரியாரின் புரட்சிக்கர கலகமே காரணம்!

கைம்பெண்கள் மறுமணம் என்பதை மிக முக்கிய பிரச்சாரமாக திராவிட இயக்கங்கள் முன்வைத்து... விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியதே ஓரளவுக்கு முன்னேற்றேம் கண்டுள்ளோம்... இன்னும் தமிழகத்தில் பல இடங்களில் நாங்களெல்லாம் அறுத்துக்கட்ட மாட்டோம் அப்படின்னு பெறுமை பேசுகிற பிற்போக்குதனமான ஆட்கள் இருக்கிறார்கள்...

நிற்க, "கைம்பெண்கள்(விதவைகள்) களர் நிலம்" அப்படின்னு காஞ்சி காமகேடி அறிக்கை விட்டப்போது... அதை எத்தனை பேர் எதிர்த்தார்கள்...:( இன்றைக்கும் காலில் விழுவதற்க்கு போட்டிப்போட்டுக்கொண்டு வரிசையில் நிற்பதில் பெண்கள் எண்ணிக்கை தான் அதிகம்...

கைம்பெண்கள் மட்டுமல்ல பெண்களையே கேவலமான ஒரு பொருளாக மட்டுமே பார்க்கிற இ(ஐ)ந்து என்கிற மதத்தையே கேள்விக்குட்ப்படுத்த எத்தனை பெண்கள் இங்கே தயாராக இருக்கிறீர்கள்?

அச்சோ! அய்யோ..அய்யய்யோ.. என்று இரங்குதலை தவிர்த்து... என்றைக்கு நாம் இந்த வெள்ளையுடை பெண்களை உருவாக்கும் இந்து மதத்தை தகர்த்தெறிய நினைக்கிறோமோ அன்றைக்கு தான் மாற்றங்கள் வரும்...

Unknown said...

இத்தனை பெண்களை அபலைகளாக ஒரு சேர பார்க்கும் போது மனது குமைகிறது.
மிக நல்ல பதிவு.
'கோரிக்ககையற்கு கிடக்குதண்ணே - இது வேரில் பழுத்த பலா'
என்று பாவேந்தர் பாடினார்

சிறப்பான மாற்று வழிகள் விதவை மறுமணம் என்கிற சிந்தனையில் இருக்கின்றது. அதைச் சிந்திக்கிற மனத்திறன் மக்களிடம் சென்று சேர வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.

மங்கை said...

நன்றி தமிழ் பிரியன்..

மங்கை said...

சொக்கரே..

சரியா சொன்னீங்க அடுத்த தலைமுறைக்கு இதை எடுத்து சொல்ல வேண்டியது நம் உடனடி கடமை.

நன்றி கோபி, கெ.பிகுணி

மங்கை said...

பத்மா நீங்க சொல்றது Isentress மருந்து தானே...நானும் கேள்விப் பட்டேன், Human DNA க்குள் நுழையும் வைரஸ்களை கட்டுப்படுத்த தரப்படும் integrase inhibitors வகையைச் சார்ந்தது. ஆனா பத்மா ஒரு நாள் பருந்து $27 னா... இங்க நம்ம மக்களுக்கு என்ன விலையில் குடுக்கப் போறாங்களோ தெரியலையே.. நம்ம நாட்டுல பாதிக்கப் பட்டவங்க பெரும்பாலும் உழைக்கும் வர்க்கமாகவே இருப்பதால்..விலை அதிகம் தான். இப்ப ஏஆர்டி (ART) மருந்துகள் அரசே இலவசமாக தந்து வருகிறது. அதே போல இந்த மருத்தும் விலை குறைவாக ஐக்கிய நாடுகள் சபை மூலமாக கிடைத்தால், கண்டிப்பாக வரப்பிராசதம் தான்...

மங்கை said...

காட்டாறு, கிருத்திகா, திவ்யா, தெகா, சின்ன அம்மணி, பாரி அரசு, கலை, சுல்தான், கருத்துக்கு நன்றி..

அரசு முதலில் நம்ம கண் முன்னால நடக்கும் அநியாத்தை உடனடியா நிறுத்த, நாம செய்ய முடிந்தவற்றை, ஒரு சாமான்யனா செய்ய முடிந்தவற்றை செய்வோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Mangai..Adhu eppadi ungalukku ippadi marupatta,samoooga avalangalai ezhum gunam vandhadhu?
Paaraattugal

delphine said...

மனித நேயம் என்றால் என்ன என்று கேட்கும் நாட்டில் நாம் வாழ்கின்றோம். இதில் வடக்கு என்ன தெற்கு என்ன? எல்லா இடத்திலும் இந்த பிரச்னைகள்...கணவன் இருக்கும் வரை பெண்களை நெருங்க தயங்கும் ஆண்கள், கணவன் இல்லை என்று தெரிந்ததும் தாராளமாகவே உரிமை கொண்டாட முற்படுகிறார்கள்...எந்த அரசியல்வாதிக்கும், மதவாதிக்கும் இவர்களை பற்றி என்ன கவலை?
மங்கை, வலியை உணர்ந்து கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் வேதனை தெரியும். மற்றவர்கள் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.(பெண்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்)

மங்கை said...

ராதாகிருஷ்னன்...

ஐயா..நமக்கு தெரிந்ததைப் பற்றி தானே எழுத முடியும்..


டாக்டரம்மா...

கண்டிப்பா வலியை அனுபவிப்பர்களுக்குத்தான் தெரியும்...
கரையில் இருப்பவர்களுக்கு தண்ணீரில் தத்தளிப்பவர்களின் கஷ்டத்தைப் பற்றி தெரிந்திருக்க நியாயம் இல்லை..

மனிதப் பிறவிகள் குறைந்த பட்சம் மேலும் புண்படுத்தாமல் இருக்கலாம்..ம்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிருந்தாவன் மதுராவில்ல்.. மாடுகளை கொண்டுவந்து கட்டுவதற்கு கொட்டாரங்களும்.. அதனை வளர்க்க நிதியுதவியும் பெறப்படுகிறது. அதுபோலவே பெண்களும்.. கொண்டுவந்து கொட்டாரத்தில் அடைப்பது போல போடுகிறார்கள்.. அவர்களுக்கு பின்னால் இருக்கும் கதைகள் சோகம் தான் மங்கை..

மங்கை said...

ஹ்ம்ம்..நீங்க நேர்ல பார்த்து இருப்பீங்க இல்ல.. காற்று வசதி கூட இல்லாத கட்டிடங்கள்னு கேள்விப் பட்டேன்..ம்ம்ம் கொடுமை

பத்மா அர்விந்த் said...

Merck is trying to enter in to India market. They also have a program to give free drugs to poor patients. May be as a organization, or NGo some one can approch them to distribute mediciane at lower rate.

மங்கை said...

சிலரிடம் சொல்லியிருக்கேன் பத்மா..நன்றி

Anonymous said...

Well written Ms.Mangai...

the severity of the problem is evident from your post....

a very good awareness raising essay....

Best wishes for your efforts

Amudha
Chennai