உடன்கட்டை ஏறியவளே பதிவிரதையாகவும், அவளுக்கே மோட்சத்திற்கான டிக்கெட் என்கிற கப்ஸாவெல்லாம் இன்றைக்கு எடுபடாதுதான்.ஆனால் கணவனை இழந்த பெண்கள் மீதான சமூகத்தின் எதிர்வினைகள் இன்றைக்கும் அதிர்ச்சியளிப்பதாகவும், ஆத்திரமூட்டுவதாகவுமே இருக்கிறது.நான் பார்த்தவரையில் தென்னிந்தியாவை விட இங்கே வடக்கில்தான் இந்த அவலம் அதிகமாய் இருக்கிறது.எல்லா மட்டங்களில் இருப்பதாக கூறமுடியாவிட்டாலும், பாமர மக்களிடையே மிகுதியாக காணமுடிகிறதுஇந்துக்களின் புண்ணிய பூமியாக கருதப்படும், மதுரா, பிருந்தாவனம், வாரணாசி ஆகிய இடங்களில் மட்டும் 20,000த்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள், தங்கள் உறவுகளால் ஒதுக்கப்பட்டு இங்குள்ள கோவில்களிலும் ஆசிரமங்களிலும் அரை வயிறு சோற்றிற்காக தஞ்சமடைந்திருக்கின்றனர். தென்னிந்தியாவில் இத்தகைய நிலமை இல்லை என்று தான் நினைக்கிறேன்.
மேற்குவங்கம்,பீஹார் போன்ற மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் இருக்க வேண்டிய இடம் பிருந்தாவனம் அல்லது மதுராதான் என்று காலங்காலமாய் வேரூன்றியிருக்கும் சிந்தனை போக்கு, சமுதாய சட்டமாய் மாறி இந்த அபலை பெண்கள், வேறு வழியின்றி அவர்களாகவே இந்த சன்னியாசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகிறார்கள். இந்த பெண்களில் பெரும்பாலானோர் கோவில்களில் பஜனை பாட்டுக்கள் பாடி அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்கள் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சுய சார்பில்லாத பெண்களே பெரிதும் இத்தகைய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பஜனைப் பாடல்கள் பாட கூடியிருக்கும் பெண்கள்
பெரும்பாலான இல்லங்கள் சில உள்ளூர் தொழில் அதிபர்களின் சொற்ப ஆதரவில் நடத்தப் பட்டு வருகிறது. ஆதரவற்றோர் இல்லங்களில் தஞ்சமடைந்திருக்கும் இப் பெண்கள், இங்கு வந்த பிறகாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்றால், ம்ம்ம்ம்..அதுவும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் பெண்களின் எண்ணிக்கையால் அத்தனை பேருக்கும் இருக்க இல்லங்களிலும் இடம் இல்லை.
பிருந்தாவனத்திலும், மதுராவிலும் உள்ள இது போன்ற இல்லங்களிலும், கோவில்களிலும் வாழும் பெண்களுக்கு (17 வயது இளம் பெண் முதல் 80 வயது பாட்டி வரை) ஏற்படும் பாலியல் ரீதியான கொடுமைகள்... ஹ்ம்ம்.. என்ன சொல்ல... இல்லத்தை நடத்த பணம் தேவை படுவதால் இந்தப் பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். மேலும், மேலிடத்து 'ஆதரவு' வேண்டும் என்றால், கோவில் பண்டிதர், லோக்கல் போலீஸ், அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல் வாதிகளையும் திருப்திப் படுத்த வேண்டும்.
ஒரு வேளை இந்தப் பெண்கள் கர்ப்பம் அடைந்து விட்டால் பாதுகாப்பான முறையில் கருவை கலைக்க இவர்களிடம் வசதியில்லை. மருத்துவச்சி யிடமோ, நாட்டு மருத்துவரிடமோ தான் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், கைனகாலஜிகல் பிரச்சனைகள் மற்றும் பால்வினை நோய் போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம், இவர்களில் பலர் எச்ஐவி ஆல் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
கில்ட் ஆஃப் சர்வீஸ் நடத்தி வரும் இல்லத்தைப் போல ஒரு சில இல்லங்களே மனித நேயத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் வழி வழியாக வரும் 'வெள்ளை சேலை' கலாச்சாரம் இங்கு இல்லை. இங்கு பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமாணத்தில் இந்த இல்லம் நடந்தப் படுகிறது. பெரும்பாலும் வயதானவர்களே இருப்பத்தால், இவர்களைப் பார்த்துக்கொள்ள, இவர்களில் படித்தவர்களுக்கு, செவிலியர் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகிறது. இவர்கள் மற்ற இல்லங்களில் இருக்கும் வயதான பெண்மணிகளுக்கு முடியாத போது கவனித்துக் கொள்கிறார்கள்.
இந்த ஆசிரமத்தை நிர்வாகித்து வரும் மோகினி கிரி ஆசரமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன்.
இங்கு நடக்கும் அவலங்களை படமாக தீபா மேத்தா 'வாட்டர்' என்ற படத்தின் மூலம் எடுத்துக் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம். படப்பிடிப்பு எடுக்க விடாமல் அவரைத் துரத்தி அடித்தனர் அங்கு இருந்த அதிகாரிகளும், மத வாதிகளும். அதனால் படப்பிடிப்பு இலங்கையில் தான் நடந்தது.
நடிகர் திலகத்தின் சகோதாரரின் மகன் தரன் தயாரித்த படமும் (White Rainbow) இந்த கொடுமைகளை எடுத்துக்காட்டுகிறது. அவரையும் படம் எடுக்க விடாமல் விரட்டி விட்டனர். பிறகு பிருந்தாவனம் போலவே சென்னையில் செட் போட்டு எடுத்தாராம்.
White Rainbow படத்தில் இருந்து ஒரு காட்சி

பெண்ணின் மகத்துவத்தை பற்றி வாய்கிழிய பேசும் மதவாதிகளோ அல்லது ஓட்டு வாங்கும் அரசியல் வாதிகளுக்கோ இவர்கள் மீது எந்த அக்கறையோ, கருணையோ இல்லையென்பதுதான் உண்மை.
ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்....தாயாய், தமக்கையாய்,மகளாய் சீராட்டி பாராட்டப்பட்ட இவர்கள் கணவனை இழந்த ஒரே காரணத்திற்காக இப்படி ஓரங்கட்டப்படுவது எத்தனை கொடுமை. இதை படிக்கும் நீங்கள் யாராவது உங்கள் வீட்டு பெண்களுக்கு இத்தகைய கொடுமையை செய்ய முன் வருவீர்களா?
இத்தகைய சமூக அவலத்திற்கு நிச்சயமாக குறைவான கல்வியறிவும், சக மனிதனின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத மனப்போக்குகளே காரணமாயிருக்க முடியும்.
தன் துனையை இழந்த ஆனோ பெண்ணோ ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை, அவர்களின் இழப்பின் வலியினை நிச்சயமாய் மற்றவர்களால் தீர்த்துவிட முடியாது, ஆனால் பகிர்ந்து கொள்வதன் மூலம் சக மனிதனாய் நமது இருப்பினை அவர்களுக்கு உணர்த்தலாம். இந்த வலி என்றேனும் ஒரு நாள் நம் எல்லோருக்கும் வரலாம்....இதை மறந்துவிடக் கூடாது.