
ஐக்கிய நாடுகள் சபைகளின் ஆய்வுகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 5000 பெண்கள், கெளரவக் கொலைகள் என்ற பெயரில் உறவினர்களால் கொல்லப் பட்டு வருகிறார்கள். இது போன்ற கொலைகள் இஸ்லாமிய நாடுகளில் தான் நடத்தப் பட்டு வருவதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வட இந்திய கிராமங்களில் இன்றும் இது நடந்து கொண்டு தானிருக்கிறது.
பரம்பரையாக கட்டி காத்து வரும் மானத்திற்கு, மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தினால் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'கெளரவக் கொலையை' செய்து அந்த 'கலங்கத்தை' சரி செய்ய இது போல செயல்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆணை ஒரு பெண் திருமணம் செய்துவிட்டாலோ, அல்லது ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டாலோ அந்தப் பெண் உறவினர்களாலேயே கொலை செய்யப்படுவது தான் 'ஹானர் கில்லிங்'.தாங்கள் சேர்ந்த இனத்திற்கு அவமானத்தை உண்டு பண்ணிய பெண்ணை கொல்வது அவளுக்கும், இனத்திற்கும் கெளரவம் என்பது இவர்கள் வாதம்.
இது போல மனித உரிமை அத்து மீறல்கள், ஜாதி மத கோட்பாடுகளை காரணம் காட்டி இன்றும் வட இந்திய கிராமங்களில் வெகுசாதாரணமாக நடந்து வருகிறது. நம் சமூகம் தொடர்ந்து பரிணமித்து வந்தாலும் இன்றும் காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களை தக்க வைத்துக்கொண்டு, கெளரவத்தை கலாச்சாரத்தை நிலை நாட்டுகிறோம் பேர்வழி என காட்டு மிராண்டிதனமாக நடந்து கொள்கிறார்கள்.
இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே. இது போன்ற ஜாதி வெறி பிடித்த கலாச்சார காவலர்கள் சிலரின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் இருக்குமெனில் அவள் வாழ இந்த சமூகம் அவளுக்கு உரிமை அளிக்கிறது. அப்படி அவள் நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில் அவளைக் கொலை செய்ய இந்த சமூகத்திற்கு அதிகாரம் உண்டு போன்ற ஒரு எண்ணத்தை இந்தக் கொலைகள் நம்முள்ளே எற்படுத்துகிறது.

இவர்கள் பார்வையில் இப்படி ' முறை தவறிய' பெண்ணிற்கு, தண்டனையாக அவளை அந்த கிராமத்து 'பெரியவர்கள்' வன்புணர்வதும் உண்டு. அதுவும் அங்கீகாரத்துடன். பல பெண்ணுரிமை போராளிகள் கேட்டுக்கொண்டும் இதுவரை அதனைத் தடுக்கும் சட்டம் வரவில்லை.
இதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்பட்டாலும், சம்பந்தப் பட்ட ஆணும் பல சமயங்களில் தண்டனையிலிருந்து தப்ப முடிவதில்லை. நோய்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில் காதலித்த ஆணும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வடக்கில், ஹரியானா, உத்திரபிரதேசம், பஞ்சாப், பீஹார் போன்ற மாநிலங்கலில் இது போன்ற கொலைகள் நடந்து வருகிறது. பீஹார் மாநிலத்தில் பகல்பூர் கிராமம் தான் இதில் முன்னோடி. இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாவட்டமான பகல்பூரில் எல்லாவிதமான மனித உரிமை அத்துமீறல்களும் சாதாரணமாக நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு என்ற பேச்சுக்கே இடமில்லாத ஒரு மாவட்டம்.
சமீபத்தில், கூலித்தொழிலாளியான ரத்தன் மண்டலுக்கும், கஞ்சன்குமாரி என்ற 18 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கஞ்சன் குமாரி பணக்காரப் பெண். அந்தக் கிராமத்தின் இரு வேறு கோஷ்டியை சேர்ந்த இவர்கள் ஊரை விட்டு ஓடி விட்டதால் பெண் வீட்டார், பையனின் குடும்பத்தை சேர்ந்த 8 பேரின் தலையை வெட்டி ஆற்றில் வீசி விட்டனர். இதில் காதலித்தவர்கள் தப்பித்துவிட்டார்கள்.
இந்தக் கொலைகளை சட்டத்தால் கூட தண்டிக்க முடிவதில்லை. பெரும்பாலும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, இந்தக் கொலைகள் தற்கொலைகளாக காட்டப் பட்டு வருகிறது. இதை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகளுக்குள்ளும் அதே வெறி இருப்பதால், இந்தக் கொலைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. சிலர் வெளியே வந்து தைரியமாக தாங்கள் இந்தக் காரணத்திற்காகத்தான் இதை செய்தோம் என்று சரண் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளின் உதவியுடன் வெகு சுலபமாக குறைந்தபட்ச தண்டனையுடனோ, அல்லது அதுவும் இல்லாமலோ தப்பித்து விடுகிறார்கள். இந்தக் கொலைகளைத் தடுக்க இதுவரை எந்த சட்டத்தையும் உருவாக்க முடியவில்லை.
ஜூலை 2006 ல் நடந்த ஒரு வழக்கில், உச்ச நீதி மன்றம் இது போன்ற கெளரவக் கொலைகள் கண்டனத்துக்கு உரியவை என்றும் நாடு முழுதும் இருக்கும் காவல் துறை அதிகாரிகள், இது போன்ற கொலைகள் தெரிய வந்தால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் இது எந்த வித பாதிப்பையும் இது வரை ஏற்படுத்த வில்லை என்பது தான் உண்மை.
மதத்தையும் கலாச்சாரத்தையும் காரணம் காட்டி பெண்களை கெளரவக் கொலைகள் என்ற பெயரில் தண்டிப்பது காட்டுமிராண்டித்தனம். கலாச்சாரம் என்பதை இருக்கமான ஒரு கட்டமைப்பாகக் கொள்ளாமல், அதையே கொஞ்சம் தளர்த்திக் கொண்டு சகிப்புத்தன்மை, சகோரத்துவம் போன்ற நன்னெறிகளை வளர்க்க பயன்படுத்தவேண்டும். கலப்புத்திருமணங்கள் இதற்கு வழி வகுக்கும். காலத்திற்கு ஏற்ப, தேவைகளுக்கு ஏற்ப கலாச்சார மாற்றங்கள் நிகழத்தான் செய்யும். மற்றவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாத வரை, தன் எல்லையை நிர்ணயித்து போகும் வரை அது தவறில்லை.
இந்த கொலைகளினூடாக, இந்த உலகில் பிறந்த ஒரு மனிதனின் வாழ்வுரிமை மறுக்கப்படுவதாகிறது. தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. வன்முறைக்கு எதிரான சட்டம் எதுவும் இவர்கள் துணைக்கு வருவதில்லை. வன்முறைக்கு எதிரான சட்டத்திலுருந்து இவர்களை தப்பிக்க வைக்கும் வரை, கலாச்சாரத்தையும் மதக்கோட்பாடுகளையும் காரணம் காட்டி நடத்தப்படும் வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கும்.