Thursday, April 19, 2007
வெகுஜன ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை
Wednesday, April 18, 2007
மேடையேறும் நிதாரி
நிதாரியில் இருக்கும் 50 குழந்தைகள், இதில் சிலர் சாவின் வாயில் வரை சென்று தப்பித்தவர்கள். இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டில் புதறுக்குள் மறைந்து உட்கார சென்ற சிலர், பின் வெளியெ வராமலே போன ஜீரனிக்க முடியாத உண்மையை நடித்து காட்ட இருக்கின்றனர். தங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போதே காணாமல் போன இவர்களின் நட்பு வட்டத்தின் சாவின் பின்னாலும் சாகாத வடுக்கள் இவர்களிடம் மட்டுமே அல்லவா?.
இதில் ஒரு பெண் அவளின் அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு இந்த வீட்டின் வழியே வந்து கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு கை இவளை உள்ளே இழுத்து போட பார்க்க, கையில் வைத்து இருந்த இரும்பு கம்பி கொண்டு இழுத்தவனை அடித்ததினால், பிடி தளரவே ஓடி வந்து விட்டாள். இதற்கு பின் பல குழந்தைகள் காணாமல் போன போது, இந்த சம்பவத்தை காவல் துறையிடம் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நம் சமுதாயத்தில் புறையேறிப்போன அரசு அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கையும் மேடையேற்ற உள்ளனர்.
இவர்களே இதில் நடித்து, சில காட்சிகளை எழுதி, இயக்கவும் செய்கிறார்கள். பாந்தருக்கும் அவன் நண்பர்களுக்கும், கோலி பெண்களை சப்ளை செய்த முறை, நடந்த கொலைகளில் வீட்டில் வேலை செய்த பெண்ணின் பங்கு (ரத்தக் கறை படிந்த தரையை கழுவி விடுவது உட்பட), கொலை செய்த உடலை கோலி சாக்கடையில் வெட்டி போட்டது ஆகிய அனைத்து செயல்கலையும் நடித்து காட்ட இருக்கிறார்கள்.
இந்த நாடகத்தை அரங்கேற்ற இக்குழந்தைகள் காட்டும் ஆர்வம், வெளிப்படுத்தும் உணர்வு நம்மை மனம் நெகிழச்செய்கிறது. இந்த நாடகத்தில் கடைசி கட்டம் மட்டும் வசனம் ஏதும் இல்லாமல், மொளனமாக நடித்துக் காட்ட இருக்கிறார்கள். கண்ணீரை வர வைக்கும் ஒரு நடிப்பு. எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தால், இது நாள் வரையில் கிரிகெட்டும், பட்டமும், விட்டு விளையாடி கொண்டிருந்த இந்தச் செல்வங்கள், இன்று உணர்ச்சி பெருக்குடன் நடிக்க முன் வருவார்கள்?.படத்தில் குழந்தைகளின் முகத்தை பாருங்கள். எவ்வளவு கலக்கம், அதிர்ச்சி..
Tuesday, April 17, 2007
ஆஹா எத்தனை அழகு....
மழலை உலகம்

பிஞ்சுக் குழந்தைகள், அதாவது பிறந்த குழந்தைலிருந்து 3 மாத குழந்தை வரை, பார்த்தீங்கன்னா, தூக்கத்தில சில சமயம் சிரிக்கும், அழுகற மாதிரி உதட்டை பிதுக்கும். பெரியவங்க சொல்லுவாங்க, அது கடவுள் கிட்ட பேசி சிரிக்குதுன்னு. ஆனா இது வரைக்கு அது ஒரு புரியாத புதிர், அதிசியம், அழகு, கொள்ளை அழகு இது. அப்படி எந்த உலகத்துல தான் இருப்பாங்களோ.. எவ்வளவு நேரம் வேனா பார்த்துட்டே இருக்கலாம். என் பெண் பிறந்தப்போ இப்படி தூக்கத்தில சிரிக்கும் போது அவள எடுத்து கசக்கி கொஞ்சுனா, உடனே அழுக ஆரம்பிச்சுடுவா.. அம்மா சொல்லு வாங்க, குழந்தைய சமாளிக்கிறத விட உன்ன சமாளிக்கிறது தான் எனக்கு பெரும்பாடா இருக்கு.. நீ முதல்ல ஆஃபீஸ்க்கு போன்னு விரட்டி விடுவாங்க.
முதல் நாலு, அஞ்சு மாசம் எங்கேயும் நகர மனசு வராது, முகத்தில் பல சேஷ்டைகள் பண்ணும். இதோ இதோ இது என் சொத்து அப்படீன்னு ஒரு கர்வம் அப்போ. ஆஃபீஸ்ல இருந்து வந்த பின்னால சில சமயம் அழுதுட்டு இருந்தா, நம்ம எடுத்த அப்புறம் அழுகைய நிறுத்தும்...அப்ப மனசுல ஒரு பெருமிதம் வரும் பாருங்க..அது எல்லாம் அனுபவிச்சு பார்க்க வேண்டிய அழகு. இப்ப நினச்சாலும் கண்ணு ஈரம் ஆகுது.ம்ம்ம்ம்
கருப்பு
கருப்பாக இருப்பவர்களுக்கு ஒரு வசீகரம், கம்பீரம், அதீத அழகு. கருப்பு அழகற்றதுன்னு எப்படியோ ஒரு கருத்து நமக்குள்ள வந்துருச்சு. குழந்தை பிறந்தா, நல்லா இருக்கான்னு கேக்குறதுக்கு முன்னாடி, குழந்தை 'சிவப்பா, அழகா இருக்கா' ன்னு கேப்பாங்க. அப்படீன்னா, கருப்பு அழகற்றதுன்னு முடிவு. வெள்ளைத் தோலுக்கான ஏக்கம் இல்லாத மக்கள் நம்மிடையே மிக சொற்பம். வெள்ளைத் தோலுக்கு கிடைக்கும் தனி மரியாதை, அந்தஸ்து தான் இதற்கு காரணம். தோலின் நிறத்த பார்த்து அறிவையும், நட்புக்கான தகுதியையும் எடை போடுற உலகம் தானே இது.
என்னதான் சொல்லுங்க கருப்பாக இருக்கும் ஆண்,பெண்களின் அழகே தனி தான்.
தாய்மையும் நட்பும்.
என்ன மன உலைச்சல் இருந்தாலும் அம்மாவ பார்த்தா, இல்ல ஃபோன்ல பேசினா கூட போதும் மனசு லேசாயிடிது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சகிப்புத்தன்மையோட, அன்பு காட்டறது தான தாய்மை?. நம்மள பார்த்து சந்தோஷ படற ஒரு நிஜம். அது மாதிரி 'நான் இருக்கேன்னு' பல சமயங்கள்ல நம்ம நண்பர்கள் கிட்ட இருந்து வெளிப்படற 'இந்த தாய்மை' ஒரு தனி அழகு.
பாவடை தாவனி
பாவாடை தாவனி, லோலாக்கு, ஒத்தை சடை, சைட்ல ஒரு ரோஸ், விபூதி கீரல் அதுல லேசா குங்குமப்பொட்டு..இந்த அழகு வேற எதுலங்க இருக்கு...அதுவும் தாவனி போட ஆரம்பிச்ச புதுசுல, இடுப்பும், முதுகும் தெரியுதேன்னு நெளிஞ்சு நெளிஞ்சு நடக்குற அழகு. எங்க ஸ்கூல்ல 9 ஆம் வகுப்பில இருந்து கண்டிப்பா தாவனி போடனும். அந்த முதல் நாள் அனுபவம் இன்னும் பசுமையா இருக்கு மனசுல. தாவனி போடுட்டு பசங்களுக்கு முன்னாடி போறதுக்கு வெட்கம். எங்களை பார்த்து அவங்களுக்கு அதுக்கு மேல வெட்கம். தாவனி நல்லா நிக்கிறதுக்கு ஒரு டஜன் பின்னூசிகள குத்தி... எதுக்கு எடுத்தாலும் சிரிப்பு, தான் தான் அழகி என்ற ஒரு மமதை, ஓயாத பேச்சு... லட்சுமி சொன்ன மாதிரி இந்த வயது தான் அழகு. இப்பெல்லாம் கிராமத்துல கூட இந்த அழகு மிஸ்ஸிங்.
அடுத்து
ஒவ்வொருவரிடமும் நான் ரொம்ப ரசிக்கும் அழகு.
அக்கா பேசும் போது ஒவ்வொரு முறையும் 'ப்பா' போட்டு பேசறது.
எங்க அம்மணி, படித்து, உணர்ந்து போடற பின்னூட்டங்களும், வரும் பின்னூட்டங்களைப் பார்த்து வெளிப்படுத்தும் மகிழ்ச்சியும் அழகு.
அழகப்பன் எங்களை எல்லாம் நேசமுடனும் 'தாயீ' என்று அழைப்பது அழகு.
நகைச்சுவை நாயகரின் சமீபத்திய விசேஷம் அழகு.
தங்கம்மாவின் இயல்பான, வெளிப்படையான பேச்சு அழகு.
மிஸ் கன்ஃப்யூஸியஸ் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை எல்லாம் பார்த்து அம்மணியே குழம்பிப் போய் , அப்புறம் அதிலேயே இன்ஸ்பயர் ஆகி, அடுத்த புரியாத பதிவை தயார் செய்வது அழகு. (ஆமா... என்ன ஆச்சு ஆளக் கானோம்.)
இவங்க மனசுக்குள்ள இன்னும் எத்தனை விஷயங்கள் தான் இருக்கோ. இவங்க எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடறது இல்லை. ஒவ்வொரு முறையும் நல்லா இருக்குன்னு மட்டும் சொல்றதுக்கு எனக்கே கஷ்டமா இருக்கும். வேற எதுவும் எழுத தெரியாது. ஆனா சில வரிகள் படிச்சா அன்னைக்கு பூரா மனசு அதிலேயே இருக்கும். உதாரணத்துக்கு
//வாழ்வோடு பிணைத்து வைத்திருந்த கயிறுகள் ஒவ்வொன்றாக அறுந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கை என்பது, இப்போது காண்பதுபோல வித்தைக்காரனின் கூடாரமாக, சர்க்கஸ் காட்டுபவன் நடக்கும் கயிறாக, மகாநடிகர்களின் மேடையாகத்தான் எப்போதும் இருந்ததா…? //
இதோ இப்போ புதுவெள்ளமா வந்து அசத்தும் இவளின் பட படப் பேச்சு அழகு.
இன்னும் இருக்கு. ஆனா என் பதிவ படிச்சா சிலருக்கு கொட்டாவி வருதாம்:-)
அதுனால மத்தவங்கள பத்தி எல்லாம் தனிப் பதிவா போடுக்கலாம்.
எதோ எனக்கு தெரிஞ்சத தெரிஞ்ச விதத்தில எழுதி இருக்கேன்.
சரி.. இப்ப யாரையும் கூப்பிடலைன்னா கொத்தனார் வூடு கட்டி அடிப்பார்.
இவங்க மூனு பேர கூப்பிடறேன்
Wednesday, April 04, 2007
நடமாடும் கடவுள்- (சாதனை பெண்கள்)

பேராசிரியராக பணிபுரிந்துகொண்டே பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் மாதாமாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அது பெண்கள் கல்லூரியானாலும் பாதிக்கப்பட்ட ஆண்களும் கல்லூரி வளாகத்தினுள் சென்று இவரை பார்க்க முடியும். அளுகையும் விரக்தியுமாக வரும் பாதிக்கப்பட்டவர்கள் , பின்னர் இவரின் அன்பும் உறுதியும் நிறைந்த வார்தைகளால் புத்துணர்வு பெறுகின்றனர்.
இவரிடன் வருபவர்கள் அனைவரும் ஏழைகளானதால் இவருக்கு வேண்டிய பண உதவி, பொருள் உதவி செய்ய மற்றவர்களை கேட்க தயன்குவதில்லை.
பாதிக்கப்பட்டபின் இவர்களை அரவனைக்கும் இவர், பள்ளி பள்ளியாய் சென்று விடலைப் பருவத்தினை நேர்த்தியாய் சமாளிக்குக் விதத்தையும் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறார். இந்த வயது குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறுகிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவமனையும், மயானமும் கொண்டு வரத் திட்டமிடிருக்கிறார். மறுமணம், குழந்தைகளின் படிப்பு, மருந்து என்று அதையும் விடாமல் கூர்மையாய் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மதம் கடந்து நிற்கும் இவரின் மனிதாபிமானமும், மனிதநேயமும் மனம் நெகிழ செய்கிறது. இவருடன் சேர்ந்து பணி புரிவதையே நாங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.
எந்தவித ஆதரவும் இல்லாமல் சேவைமனப்பான்மையே மூலதனமாக வைத்துக்கொண்டு பம்பரமாய் சுத்தி வரும் சதோதரி. லயோலா நம் கண் முன்னே சிரித்த முகத்துடன் நடமாடும் கடவுள்.
Monday, March 26, 2007
வியர்ட்(டே) உருவமானவள்.
ஹம்ம்ம் சரி.. கவிதா கூப்பிட்டது எனக்கு லேட்டா தான் தெரிய வந்தது. தனி மடல்ல கவிதா சொல்லியும் நாம இவ்வளவு சுறுசுறுப்பு.. இதுலேயே தெரிஞ்சு இருக்குமே, நான் ஒரு மாதிரின்னு...:-))...
கிருக்கல்- புது நோட் புக் பார்த்தா சும்மா என் பேர எழுதி எழுதி பார்த்துப்பேன். எங்காவது ஒரு புது நோட் புக் பார்த்தா என்னை அடக்கறது எனக்கே கஷ்டம். என் பேரு எழுதுவேன், ரெண்டு கண்ணு வரவேன், ஒரு தெண்ண மரமும் வீடும் வரஞ்சாதான் என் கை நடுக்கம் நிற்கும். இது இன்னைக்கு நேத்து பழக்கம் இல்ல..பல காலமா நல்லா உரம் போட்டு இந்த பழக்கத்த வளர்த்துட்டு வரேன்.
நான் அடிச்ச அரை சதம்- இந்த படத்த நான் எத்தன தடவை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. இங்க தில்லி வந்த அப்புறம் கணக்கு வைக்க ஆரம்பிச்சேன். இந்த ரெண்டு வருஷத்தில மட்டும் 51 தடவை பார்த்துடேங்க. என்ன படம்னு பார்க்கரீங்களா. தில்லானா மோனாம்பாள் தான். இன்னும் எத்தனை தடவை வேனா பார்ப்பேன். போனவாரம் சன் டீவில போட்டப்ப 51 ஆவது முறையா பார்த்தேன். முக்கியமா முதல் பாடலும், நலந்தானா பாட்டுல, நாட்டியப் பேரொளி பாடும் இந்த வரிகளுக்கு நடிகர் திலகத்தின் அசத்தல்.......நடிப்புன்னு ஒரே வார்த்தைல சொல்றதுக்கு மனசு வரலை...
''கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் -
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார் ''
இது மாதிரி காதலையும் உணர்ச்சிகளையும் வெளிக்கொணர்ந்த காட்சி வேற எந்த படத்திலும் வரலைனு நினைக்குறேன்..நாதஸ்வரம் வாசிச்சுட்டெ கண்களில் நீர் தளும்ப..ம்ம்ம்ம்..ஒவ்வொரு முறையும் என்னுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வரிகள்... யாரும் இல்லாத அமைதியான இடத்துல எனக்கு இந்த படமும், காதலிக்க நேரமில்லை, படமும் இருந்தா போதும்.
சண்டை போடுவது, ஆர்க்யூ பண்றது இது எல்லாம் சுட்டு போட்டாலும் வராதுங்க. ஆனா என்ன மாதிரியே என் கிட்ட பழகறவுங்களும் இருக்கனும் எதிர் பார்க்கும் கெட்ட பழக்கம். மத்தவங்க சண்டை போட்டாலும் நானா போய் பேசீடுவேன். அந்த பக்கம் எப்பவும் அதே மாதிரி இருக்காதில்லையா ?
ஆனா நான் ரொம்ப லேட் போல இருக்கு.....நான் 5 பேருக்கு எங்க போக.. இருந்தாலும் இன்னைக்கு, இந்த பாவம் புண்ணியம் பாக்குற மூட்ல எல்லாம் நான் இல்லை
அதனால நான் கண்டுபிடிச்ச 5 பேரு
1) பங்காளி- http://pangaali.blogspot.com/ - தப்பிக்க எல்லாம் பாக்காதீக, ஆமா சொல்லிபுட்டேன்.
அடுத்து புதுசா வந்தவங்கள கூப்பிடலாம். வித்தியாசமான ஒரு அறிமுகமா இருக்கட்டும். இதுல ரெண்டு பேர தவிர மத்தவங்களோட பதிவுகளை நான் படிச்சதில்லை. நேத்து முகப்புல இருந்தவுங்க இவங்க எல்லாம்.
2) யாழினி அத்தன் - http://peelamedu.blogspot.com//
4) காட்டாறு-http://kaattaaru.blogspot.com/
5) முரளி -http://adhvaithi.blogspot.com/
Saturday, March 24, 2007
நிதாரி - வெளிவந்த நிஜங்கள்
நேற்று, CBI இயக்குனர், திரு. அருன்குமார் சொன்ன விளக்கங்கள், ஒரு மனிதன் இந்த அளவிற்கு குரூரமாக நடக்க முடியுமா என்று நினைக்க வைக்கிறது. சினிமாவிலும், க்ரைம் நாவல்களிலும் மட்டுமே இதையெல்லாம் படித்துக் கொண்டிருந்த நாம், இன்று நம்மிடையே நடக்கப் பார்க்கிறோம். திரு.அருன்குமார், கோலி(Kohli) செய்ததாக சொன்ன பல செயல்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
கோலி, ஒரு 'நெக்ரோஃபீலிக் (necrophilic) (பிரேதத்துடன் உடலுறவு கொள்ளபவன்). ஒரு Psychopath. 18 பெண்களை பலாத்காரம் செய்து கொன்று, அதற்கு பின் , அந்த உடலுடன் அவன் செய்த செயல்கள் இங்கே சொல்ல முடியாதவை. மேலும் அவன் cannibalistic tendencies (மனிதனை மனிதன் உன்னும் செயல்) உடையவன் என்றும் உளவியல் நிபுனர்கள் கூறுகின்றனர். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.
ஒரு நெக்ரோஃபீலிக்கு இருக்க வேண்டிய அத்தனை குணாதிசியங்களும் இவனுக்கு கச்சிதமாக அமைந்திருக்கிறது. கழுத்து, மற்றும் மார்பக பகுதியை கடிப்பது, ஆசன வாய் பகுதியை சேதப்படுத்துவது, கழுத்தை நெரிப்பது, கொடூரமான முறையில் துன்புருத்தி கொலை செய்வது, கொலை செய்த பின் உடல் பாகங்களை தனி தனியாக வெட்டுவது. இது எல்லாம் இவர்களிடம் பொதுவாக காணப்படும் குணாதிசியங்கள். இவை அனைத்தையும் இவனும் செய்திருகிறான்.
தனிமையில் ஒரு ஆணும் பெண்ணும் எவ்வளவு அன்பாக பேசிக்கொள்வார்களோ, அதே அன்பான வார்த்தைகளை இவர்களும் பிணத்துடன் பேசுவார்கள். இவர்களைப் பொருத்தவரை இவர்கள் என்ன செய்தாலும், பேசினாலும், அதை ரசிக்கும் 'பார்ட்னர்' தான் அந்த பிணம்.
இந்தியாவையே நிலை குலைய வைத்து இருக்கும் இத்தனை பெரிய குற்றம் நடந்தது, அவன் முதலாளியான மொனீந்தர் சிங் பேந்தருக்கு தெரியாது என்று CBI கூறுகிறது. கொலை நடந்த நாட்களில் எல்லாம் மொனீந்தர் ஊரில் இல்லையாம் . இருந்தாலும் தெரிந்த பின் குற்றத்தையும் சாட்சியங்களையும் மறைத்ததற்காக இவனுக்கும் அதே அளவு தண்டனை கிடைக்கலாம் என்கின்றனர். தன் மனைவி இறந்த பின்னர் தன்னை நன்றாக கவனித்துக் கொண்டபடியால், அவனை காப்பாற்ற நினைத்ததாக மொனீந்தர் கூறியிருக்கிறான். மேலும் உலகத்தில் இதுவரை இரண்டு சைக்கோபாத்துகள் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்ததாகவோ, ஒன்றாக ஒரு குற்றத்தை செய்ததாகவோ எங்கும் குறிப்பில்லையாம். அதனால் மொனீந்தருக்கு கொலை குற்றங்களில் நேரடி தொடர்பு இல்லை என்கின்றனர்.
இதற்கிடையே, நான்கு நாட்களுக்கு முன் ஒரு பெண் போலீஸ் அதிகாரி இவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சில சாட்சியங்களை மறைத்ததற்காக கைது செய்யப்படுள்ளார்.
என்ன கண்டு பிடித்து என்ன பயன், இந்த பெண்களையும், குழந்தைகளையும் இழந்தவர்கள் இதை எல்லாம் கேள்விப்பட்டால்..... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கடவுள் தான் அவர்களுக்கு அமைதி அளிக்க வேண்டும்.
Friday, March 09, 2007
தலை நகரிலிருந்து தலை நகருக்கு - சுடர்..
இல்லை...ஒரு போதும் வருத்தப் பட்டது இல்லை. ஒரு பெண்ணாக பிறந்ததுனால நான் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மாறா சில சலுகைகள் தான் அனுபவிச்சுசிறுக்கேன்...:-)).. பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, நான் ராணி தான். என் கணவரை விட அவரின் சொந்தங்களிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். அதே போலத்தான் அவர்களும். அம்மா, அப்பா, அண்ணன், தோழிகள், நன்பர்கள்னு எனக்கு அமைந்த உறவுகள் தான் இதற்கு காரணம். எதிர்பாராத நிகழ்வுகள், ஏற்ற தாழ்வுகள், ஏமாற்றங்கள், தோல்விகள், வருத்தம் னு எல்லாம் பார்த்திருக்கேன். ஆனா அது எல்லாம் நான் பெண்ணா பிறந்ததுனால தான் நடந்துன்னு நினைக்க முடியலை. நான் படிக்கனும்னு ஆசப்பட்ட படிப்பு படிக்க முடிஞ்சது. திருமணத்திற்கு முன், வெளியூர்ல வேலை கிடைச்சப்போ, மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், அப்பா சம்மதம் தெரிவிச்சு அனுப்பி வ்ச்சார். திருமணத்திற்கு பின் இப்ப தில்லியில வேலை கிடைச்சதும் கணவர் சம்மத்தோட இங்க வாழ்கைய ஆரம்பிச்சிருக்கேன். ஆமாம், இது புனர் ஜென்மம் தான். இப்படி நான் ஆசப்பட்டது எல்லாம் நடந்திருப்பதே ஒரு பெண்ணா நான் எடுத்த முயற்சிகளுக்கு கிடைச்ச அங்கீகாரம் தான் அப்படீங்கிறத நான் இங்க வந்த பின் தான் உணர முடிஞ்சது.
அட சாமி....ஹ்ம்ம்ம்..
நாட்டின் முதுகெலும்பாய் இருக்கும் விவசாயம் செழிக்க சிறந்த வல்லுனர்கள் கொண்டு புதிய உத்திகளை/தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கச்செய்வேன்.
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வேன். அது இனி நடக்காமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அதை அனைத்தும் செய்ய தயங்கமாட்டேன்.
சில அமைச்சரவைகள் பிரத்தியேகமா பெண்கள் தலைமையில இயங்கச் செய்வேன்.
அரசியல்னா என்ன, ஒரு சிறந்த அரசியல்வாதி தன் செயல்பாட்டினாலும், நோக்கத்தினாலும் எப்படி எல்லாம் சமுதாயத்தில ஒரு மாற்றத்தை உண்டு பண்ண முடியும், அதற்கான தகுதிகள் என்ன- இது எல்லாம் பாடதிட்டத்திலயே சேர்த்து ஆரோக்கியமான விதத்தில இளைஞர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்க வழிவகுப்பேன். ஒரு சிறந்த அரசால் சமுதாயத்தில வேகமான மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தகுதி வாய்ந்த இளைஞர்கள் அரசியலில் நுழைய ஊக்கப்படுத்துவேன். (கொஞ்சம் ஓவரா இருக்கோ...)
3)சமூக முன்னேற்றத்திற்கு நீங்க என்ன எல்லாம் முயற்சி செய்யறீங்க? மத்தவங்க என்ன எல்லாம் செய்யணும் ? எதாச்சும் ஐடியா...
அவ்வளவு பெரிய வேலை எல்லாம் நான் செய்யலைங்க. இப்ப நான் ஈடுபட்டிருப்பது எச்ஐவி எய்ட்ஸ் தடுப்புப் பணியில் மட்டும். நம் நாட்டில எச்ஐவியால பாதிக்கப்பட்டவர்களில் 14ல் இருந்து 45 வயதிக்கு உட்பட்டவங்க தான் அதிகம். இந்த வயசுல உள்ளவங்க பாதிக்கப்பட்டா, நாட்டின் உற்பத்திறன் குறைந்து, பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவுகள் கூடிட்டே போகும். இன்று ஆப்பிரிக்காவில் குழந்தைகளை கவனிப்பதற்கு அவர்களின் பெற்றோர்கள் உயிருடன் இல்லை. தாத்தா பாட்டியிடம் சிலர், சர்ச்களில் சிலர் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கல்விக்கும் மற்ற செலவுகளுக்கும் பணம் இல்லாமல் பெண் குழந்தைகள் தங்கள் உடலை விற்கும் அவலத்திற்கு ஆளாகி, பின், அவர்களும் எச்ஐவியால் பாதிக்கப்படுவது அங்கு சகஜமான ஒரு விஷயம். இந்த நிலை இந்தியாவிற்கு ஏற்படாமல் இருக்க நம் அரசும், தொண்டு நிறுவணங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருகிறேன். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் மேலும் பணியாற்ற விருப்பம்.
சமுதாய முன்னேற்றத்தில் மற்றவர்கள், தங்களால் முடிந்ததை செய்யலாம். சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்காமல் இருப்பதே பெரிய உதவிதான். உங்க வழிவழியாய் பதிவில் சொன்னது போல், ஒரு தாய் தரமான சந்ததியை உருவாக்க முடியும். அதற்கு பெண்கல்வி மிகவும் அவசியம். கல்விக் கடவுளாய் சரஸ்வதிய கும்பிடும் நம்ம நாட்டில தான பெண்கல்வி என்பது இன்றும் ஒரு பலருக்கு எட்டா கனியாவே இருக்குது.
Give a man a fish and he will eat for a day. Teach him how to fish and he will eat for a lifetime. இது நம்ம எல்லாரும் கேள்வி பட்டிருக்கோம். ஒருவருக்கு உதவித்தொகை வழங்குவதோடு மட்டும் நிற்காமல், உதவி வேண்டி வருபவர்கள் தன்மானத்துடன் வாழ வழி செய்யலாம். வெறும் பணம் உதவி மட்டும் செய்யாம, அவங்க எப்படி படிக்கிறாங்கன்னு தொடர்ந்து கவனிச்சுட்டு வரலாம். இதனால அவங்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், உணர்வும் வரும். இது நினைச்ச பார்த்தா கடினமான ஒன்றாத்தான் இருக்கும். ஆனா செயல் படுத்தும் போது அதனால் கிடைக்கும் திருப்தியும், பலனும், மன நிறைவும் செய்து பார்த்தால் தான் தெரியும். வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு செய்தால் கூட போதும். முயன்று பாருங்களேன்.
4. சமையல் கத்துக்கிட்ட அனுபவம் சொல்லுங்க[.நல்ல சிரிப்பான கதை அது}
(லட்சுமி... இருங்க உங்களை அப்புறம் கவனிச்சுக்குறேன். ..)
நீங்களாவது நான் சமையல் 'கத்துட்டேன்னு' சொல்லிர்ரீங்களே.. அதுவே பெரிய விஷயம்.. டேங்ஸ்.. கல்யாணத்திற்கு முன்னால சமையலைறை பக்கம் போனது இல்லை. கணவரின் வீட்டார் யாரும் கோவைல இல்லாததுனால, தனிக்குடித்தனம் தான். தனிக்குடித்தனம் போன முதல் நாள், காலையில் உப்புமா செய்யனும். தெரியாதுனு சொல்றதுக்கு பிரஸ்டிஜ். வெங்காயம் எல்லாம் கட் பண்ணி வச்ச அப்புறம், மெதுவா அம்மாக்கு போன் பண்ணி கேட்டேன். நான் போன் பண்ணுவேனு தெரிஞ்சோ என்னமோ அம்மா ஒரே ரிங்ல போன் எடுத்துட்டாங்க. என்ன என்ன செய்யனும்னு அம்மா சொல்ல நான் குறிச்சு வச்சுட்டேன். ஆனா அம்மா சேமியா அளவு சொல்லையே. அது என் தப்பா என்ன. எங்க வீட்ல நிறைய பேர் இருப்போம். ஒரு பேக்கட் முழுசா போட்டு தான் நான் பார்த்திருக்கேன். ஆனா இங்க ரெண்டு பேருக்கு எத்தன போடனும்னு யோசிக்க எல்லாம் அறிவு இல்லை. அதே ஒரு பேக்கட் போட்டு செஞ்சு, பாத்திரம் நிறஞ்சப்புறம் தான் மண்டைக்கு ஏறுச்சு, நம்ம மடத்தனம். அப்புறம் மதியம் சாம்பார் வைக்கனும். பருப்பை எடுத்தேன். எது துவரம் பருப்பு, எது கடலை பருப்புனு தெரியாது. மறுபடியும் போன். இந்த தடவை போன் போட்டா அம்மா சம்பந்தம் இல்லாம எதோ பேச, அப்புறம் தான் தெரிஞ்சது,ஊர்ல இருந்து வந்த எங்க நாத்தனார் பக்கத்தில உட்கார்ந்திருந்ததுனால என்ன guide பண்ண முடியலை. இது வேலைக்கு ஆவாதுன்னு, எங்க வீட்ல ரொம்ப நாளா வேலைக்கு இருந்த ஒரு அம்மாவ என்னோட 'சீதனமா' அனுப்பி வச்சு, கத்துக் கொடுத்தாங்க. இத்தன கூத்து பண்ணியும் இவர் ஒன்னுமே சொல்லாதது வேற நமக்கு மண்டை குடையுதா, கேட்டேன் இவர் கிட்ட. "அது தான் உங்க அண்ணன் பொண்ணு பார்க்க வந்தன்னைக்கே சொல்லிட்டாரே, என் தங்கச்சி ஒன்னு மட்டும் நல்லா சமைப்பா.....சுடு தண்ணி நல்லா கொதிக்க வைப்பானு, அதனால, நான் எதுக்கும் தயாராதான் இருந்தேன்னு" சொல்லி மேட்டர சப்புனு ஆக்கிட்டார். இது தான் நாம 'நளபாகினி' ஆன கதை.
5) நீங்கள் கல்லூரியில் எடுத்த பாடத்தைப் பற்றியும் அதை ஏன் எடுத்தீர்கள் அதன் அனுபவங்கள் பற்றி....
BA Economics படிச்சுட்டு இருந்த போது கல்லூரியில, NSS, NCC அது இதுனு ஒன்னு விட்டது இல்லை. அப்படி ஒரு முறை மனநலம் குன்றியவர்களுக்கான ஒரு காப்பகத்துக்கு போன போது தான் BA முடிச்ச அப்புறம் மேல முதுநிலை பட்டப்படிப்பா Social Work படிக்கனும்னு தோனுச்சு. அப்ப தமிழ்நாட்டில 5 கல்லூரியில தான் இந்த பாடம் இருந்துச்சு. கோவை, மதுரை மற்றும் சென்னை. கோவைல PSG Arts ல சேர்ந்து படிச்சேன். நான் எடுத்த பாடம் MSW (Medical and Psychiatric Social Work) அருமையான பாடதிட்டங்கள். வாரத்திற்கு மூன்று நாட்கள் களப்பணி. இந்த இரண்டு வருட முதுநிலை படிப்பில நிறைய கத்துட்டேன். படிப்பின் ஒரு பகுதியா பெங்களூர் NIMHANS ல மூனு மாசம் இருந்து வேலை பார்த்தது மறக்க முடியாது. அப்ப அங்க தங்கி வைத்தியம் பார்த்த ஒரு காபரே நடனப் பெண்ணும், மற்றொரு பேராசிரியரும் மறக்க முடியாதவர்கள்.
மக்களுடன் மக்களா வேலை செய்ய முடியுது, கடைநிலை மக்கள் வரை போய் பிரச்சனைகளை அலசி ஆராய முடியுது. விளிம்பு நிலை மக்களின் துயரங்களின் காரணங்களை உணர முடியுது. அதே சமயம் இந்தக் களப்பணி அனுபவத்த வச்சு மேல கொள்கை முடிவுகளிலும் எங்கள் கருத்தை சொல்ல முடியுது. முழுமனதோட, ஆர்வமாதான் இதுல வேலை செய்யறேன்.
நம்ம அண்ணன்மார்கள்/தம்பிமார்கள் எல்லாம் சுடர பெண்களே கொஞ்ச நாளைக்கு வச்சுக்கோங்கன்னு தாராள மனசோட சொன்னதுனால அடுத்து இந்த சுடர நம்ம பொன்ஸ் கிட்ட கொடுக்கிறேன்..
1) உங்க அனுபவத்தில, பணி புரியும் பெண்களுக்கு 'Glass cieling' இருக்கிறத நீங்க உணர்ந்து இருக்கீங்களா?... அப்படி இருந்தா அத தாண்டி வர பெண்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள்.
2) மென்பொருள் நிறுவனங்களில் பணி புரிய பெண்களுக்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஆண்களுக்கே சில சமயம் சவாலா இருக்கும் போது, வேலைப் பளு, மன அளுத்தம், இவற்றை சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
3) சமூக விழிப்புணர்வோட சில நல்ல காரியங்களை செய்துட்டு வரீங்க- வாழ்த்துக்கள்.. அதை இன்னும் நல்லா, அனைவரையும் ஈடுபடுத்தி செய்யறதுக்கு ஏதேனும் திட்டம் வச்சுட்டு இருக்கீங்களா?
4)கணினி தவிர உங்களை ஓரிடத்தில் உட்கார வைக்கும் வேறு விஷயங்கள்
5) வலைப்பதிவு உலகில என்ன புதுமை செய்ய முடியும்...இப்ப நிறைய பேர் புதுசா வர ஆரம்பிச்சு இருக்காங்க... இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினக்குறீங்க..
அப்பாடா....பொன்ஸ் இனி உங்க பாடு....
கேள்விகளும் பதிலும் அரைவேக்காட்டுததனமா இருந்தா பொறுத்துக்குங்க மக்களே...
Thursday, March 08, 2007
தேவைகள்....ஆசைகள்
பகற்கனவுகளை மீறி
உலகம் அழகானதுதான்
அவலங்களை கடைவிரித்து நியாயம் கேட்பதாய், பிச்சைபாத்திர பதிவாய் இதை இட எனக்கு விருப்பமில்லை. படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அலசப்பட்ட ஒரு விஷயம் தான் இது. மனித குலத்தின் சரிபாதி, ஆகக்கூடிய அத்தனை வகையான அடக்குமுறைகளுக்கும் ஆளாகி, அதை நிலைநிறுத்த மேற்கொள்ளும் வன்முறைகளை காலங்காலமாய் அனுபவித்து வருகையில், மனிதகுலம் நாகரீகத்தின் உச்சானிக்கொம்பில் ஆடிக் கொண்டிருப்பதாய் தம்பட்டம் அடிப்பது கேலிக்கூத்து என்பதை என்று தான் உணரப் போகிறோம்?
சமுதாயத்தில் சரி பாதியினர் துன்பங்களுக்கும் வன் முறைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் போது, அச்சமுதாய வளர்ச்சிகான முயற்சிகளில் ஒரு இலக்கை அடைவது சாத்தியமில்லை
இன்றுவரை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்த கொடுமைகள், அதன் சுபாவம், இவை எல்லாம் நேர்மையாக பதியப் பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம். இதைபற்றி எல்லாம் விரிவாக சிந்திக்கவும், காரணகாரியங்களை பற்றி அலசவும் இன்று இரு பாலாறும் தொடர்ந்து செயல்பட்டு வருவது ஆறுதல் அளிக்கும் ஒரு விசயம். இந்த போராட்டங்கள் கூர்மை அடைந்து பல வெற்றிகளை பார்த்து இன்று பெண்களின் நிலையில் மாற்றம் வந்திறுப்பதையும் யாரும் மறுக்க முடியாது. சமீப காலங்களில் இதன் வலியை உணர்ந்தவர்கள், போராடவும், செயல்படவும் ஆரம்பித்திருப்பது காலத்தின் கட்டாயம் மற்றும் தேவை என்றே நினைக்கிறேன்.
இவர்களின் ஒருமுகப்பட்ட உழைப்பின் விளைவும் வெற்றியும் நகர்புற சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கான சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. நகரங்களைத் தாண்டினால் பெண்களின் நிலமை........வேண்டாம் எனக்கு கோவம்தான் வருக்கிறது.

அதற்காக நகரங்களைத் தாண்டி முயற்சிகளோ, அதை செயல்படுத்தும் போராளிகளோ இல்லையென்று அர்த்தமில்லை. சாதிக்கவும் முன்னேறவும் ஆசையும் உத்வேகமும் உள்ள பெண்கள் இல்லை என்று சொல்ல முடியாது படிக்காத பாமர 'சின்ன பிள்ளை' யால் ஒரு களஞ்சியத்தை உருவாக்கிக் காட்ட முடிந்தது. நாட்டு நலனை முன்னிறுத்தி ஒரு 'துர்காபாய்'யால் போர்முனையில் 35 ஆண்டுகளாக மருத்துவராய் பணிசெய்ய முடிந்தது. ஆனால் இவர்கள் மிகச்சொற்பமே, இன்றைய தேவை இவர்களை போன்ற ஆயிரமாயிரம் சரித்திர நாயகிகள்.
இலங்கையாய் இருந்தாலும்,ஈராக்காய் இருந்தாலும் உலகலாளவிய அளவில் பெண்கள் மீது ஏவப்படும் எளிமையான அடக்குமுறை, பாலியல் வல்லுறவு. இலங்கையில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், மனித உரிமை அத்து மூறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை நாம் அறிவோம். வீடுகளையும் உறவுகளையும் இழந்து, மற்றவரின் ஆதரவில் வாழும்போது, வயது வித்தியாசமில்லாமல், பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுமைகளை படிக்கிற பொழுதில் துடித்துப்போகிற நாம் பின் அதை ஒரு செய்தியாக ஜீரணித்து மறந்துபோவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்.
இது போல நடக்கும் பாலியல் வன்முறைகளே, பெண்ணை வீட்டோடு முடக்கக் காரணமாக இருந்து வருகிறது. பெண்ணை உடல்சார்ந்து காக்கும் பெரிய பொறுப்பை மனதில் வைத்தே பெற்றோர்கள், (ஆசை இருந்தாலும்), வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க தயங்குகின்றனர். இதை சொல்லி சொல்லி வளர்க்கும் இந்த சமூகம், அவளை, தன்னை தானே காக்க முடியாதவளாய், பிறரை சார்ந்து இருக்கும் ஒரு சூழ்நிலையில் தள்ளிவிடுவது நாம் பார்ப்பது தானே.
இப்பொழுது மருத்துவத் துறைக்கு சவாலாக இருக்கும் ஒரு பிரச்சனை எய்ட்ஸ். இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருப்பது வேதனையான விஷயம். குறிப்பாக ஆப்ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பாதிக்கப்பட்ட பெண்களில், திருமணமாகி தன் கணவனிடம் மட்டுமே உடலுறவு வைத்து இருக்கும் பெண்கள் தான் அதிகம். தன் கணவன் தவறான வழியில் செல்கிறான் என்று தெரிந்திருந்தும், தங்களை பாதுகாத்துக் கொள்ள, இந்தப் பெண்களுக்கு வாய்ப்புகள்/ உரிமை குறைவு. இவர்களும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் கணவனையும் இழந்து, சில சமயங்களில் குழந்தையையும் இழந்து, கணவர் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு வேண்டா விருந்தாளியாக தாய் வீட்டில் உட்கார்ந்திருப்பது கொடுமை. இதையும் தாண்டி எதிர்நீச்சல் போட்டு சிரித்த முகத்துடன் நம்மிடையே வலம் வரும் எண்ணற்ற சகோதரிகளைப் பார்த்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்...ஹ்ம்ம்ம்...
- உடலியல் வன்முறை, பாலியல் வன்முறை மனரீதியிலான கொடுமைகள், சொல் வன்முறை, பொருளாதார வன்முறை ஆகிய அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. (முன்பு அவ்வாறு இல்லை)
- வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள், நீதி வழங்கப்படும்.
- பாதிக்கப்பட்ட பெண், தனக்கு எது பாதுப்பான இடம் என்று நினைக்கிறாளோ அங்கு தங்க கோர்ட் அவளுக்கு அனுமதி அளிக்கிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டுள்ள "Protection Ofiicers" ன் பொறுப்பு.
- வழக்கு முடியும் வரை சம்பத்தப்பட்ட குடும்பத்தாரின் வீட்டில் இருக்கலாம் என்றும், அவளின் உணவு மற்ற செலவுகளை அந்த குடும்பமே எற்றுக் கொள்ளவேண்டும் என்றும் இந்த புதிய சட்டம் கூறுகிறது.
முயற்சிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், பிரச்சனைகளை எதிர்த்து வாழ நம்முள் திறமையை வளர்த்துக் கொள்வது ஒரு நிலையான தீர்வை கொடுக்கும். நம்மை பலவீனப் படுத்தும் புலம்பல் எந்த விதத்திலும் நமக்கு உதவாது என்பது என் தனிப்பட்ட எண்ணம். நம் உரிமையை உரிய களத்தில், நேர்மையாக, உரிய விதத்தில் தெரிவிக்க நாம் தயங்க வேண்டியது இல்லை.
Sunday, February 25, 2007
நம்பிக்கை வளையம்.
ஒளி தரும் வெளிச்சம் சூரியன் கிட்ட மட்டுமா இருக்கு, இருட்டு இருக்குற இடத்தில எல்லாம் சின்ன வெளிச்சங்கள் வந்துட்டு தான இருக்கு.மனித குலத்தின் மகத்தான வெற்றிகளெல்லாம் பெரிய பெரிய யுத்த பூமியில் மட்டும் விளையவில்லை...எதிர் கொள்ள முடியாத சூழ்நிலையில், போராடி வென்ற எனக்கு தெரிந்த சில எளிய மனிதர்களை பற்றி எழுதலாம் என்று இந்த தொடரை தொடங்குகிறேன்.
முதலில் பெண்களில் இருந்து தொடங்குகிறேன்
மீனாட்சி
அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
இவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில எழுதி இருக்கேன். இருந்தாலும் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கு.
ஏமாற்றங்கள் எல்லோறது வாழ்விலும் வருவது தான். இந்த ஏமாற்றங்களை எவ்விததில் அனுகுகிறோம் என்பது தான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசபடுது.
தனக்கு கிடைத்த இந்த அரவனைப்பும் ஆதரவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். மேலும், மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும், எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறெல்லாம் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள் என்பதை பார்த்த இவர், மருத்துவமனையில் பணியாற்ற முடிவு செய்தார். அதற்காக கவுன்சலிங்க துறையில் டிப்ளமா படித்து தேர்ச்சி பெற்றார். கவுன்சலிங் திறமையை வளர்த்துக் கொண்டதோடு, எச்ஐவி கிருமியை பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டார். இன்று கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண்கள் மருத்துவத் துறையில், கவுன்சலராக பணியாற்றுகிறார். ஒரு நாளும் இவர் அழுதோ, அல்லது தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று வறுத்தப்பட்டதை பார்த்ததில்லை. சமீபத்தில் கோவயில், நானும் மீனாட்சியும் எச்ஐவி பற்றியும், இருவரின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதை போல ஒரு குரும் படம் தயாரிக்க ஒரு தோழி ஆசைபடவே, மருத்துவமனை வளாகத்திலேயே இந்த படம் ஷூட் செய்யப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக எடுக்கப்பட்ட 15 நிமிட படம். அவரின் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்த போது, எச் ஐவியால் பாதிக்கப்படாத தன் மகளைப் பற்றி பேசுகையில் உடைந்தே போய்விட்டார். இந்த விஷ்யத்தில் அவரை சமாதானம் செய்ய எங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இது ஒரு 5 நிமிடம் தான், மீண்டும் சுதாரித்துக் கொண்டு, எங்களுக்கு ஆறுதல் கூறி, தொடர்ந்து படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
சமீபத்தில் மீனாட்சிக்கு Spirit of Assisi National Awardம் வளங்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனம் இவருக்கு Life time achivement award ம் வழங்கியுள்ளது.
இந்தப் பெண்கள் உருவாக்கியுள்ள இந்த நம்பிக்கை வளையம், உணர்வுகளால் ஆன உறுதி வளையம்.
இவர்களுக்கு உறுதினையாக இருக்கும் டாக்டர். மகாதேவன் அவர்களை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
Saturday, February 24, 2007
சுயநலம்......

//நான் முழுமையான சுயநலவாதி. நான் அடுத்தவருக்கு உதவுவது என்றாவது நான் கஷ்டப்படும்போது யாரேனும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை வருவதற்கே//
இது தான் மதுரா சொன்னது.
நாம ஆதரவு இழந்தவங்களுக்கு உதவி செய்யறோம். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள்னு எல்லாருக்கும். திடீர்னு ஒரு நாள் போய் செய்யறமா?. செய்யறவங்க இருக்காங்க. இல்லைனு சொல்லலை. நம்மில் நிறைய பேர் நம்ம பிறந்த நாளுக்கு, திருமண நாளுக்குன்னு போய் உதவி பண்ணி புண்ணியத்த தேடிக்குறோம். இதுல நிஜமாவே உதவி மனப்பான்மை இருக்காங்க?...உடனே கேக்கலாம்..உதவி செய்யலாம்னு தோன்றதுனால ஏதாவது ஒரு நாள தேர்ந்தெடுக்கனும். அது ஏன் நமக்கு திருப்தி தர்ர நாளா இருக்க கூடாதுன்னு..ஹ்ம்ம்ம்....அது தாங்க எந்த ஒரு செயல்லேயும் நமக்கு என்ன லாபம் இருக்குன்னு பார்க்கிறோம். சரி அது அவங்கவங்க சொந்த விஷயம்....செய்வது வெளியே தெரியாமல் செய்யறவுங்க நிறைய பேர் இருக்காங்க. நான் நிறைய இடத்துல பார்த்ததுனால சொல்றேன்.
கல்லூரியில் இருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை மானேசர்னு ஒரு கிராமத்துக்கு எதோ முக்கியமான நிகழ்ச்சி, கண்டிப்பா வரணும்னு உத்தரவு போட்டு கூட்டிட்டு போனாங்க. காலையில 7 மணிக்கெல்லாம் அங்க போயிட்டோம். கிராமத்து மக்கள் எல்லாம் ஷேமியானா எல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணி யிருந்தாங்க. என்ன விழா, எதுக்காக இந்த பதட்டம்னு ஒன்னும் சொல்லலை. 10 மணிக்கு கப்பல் மாதிரி ஒரு கார்ல ஒரு அம்மிணியும், அய்யாவும் வந்தாங்க. சேர்மனின் ஒன்னு விட்ட சித்தப்பாவோட, தம்பியோட மனைவிக்கு..... இப்படி எதோ சொன்னாங்க. காரில் இருந்து இனிப்பு பொட்டலங்களும், வேட்டி, சேலையும் இறங்கிச்சு. அன்னைக்கு அம்மையாருக்கு பிறந்தநாளாம். கூட்டத்தில முதல்லேயே ஒரு 5 பேர செலக்ட் பண்ணி தனியா நிக்க வச்சிருந்தாங்க. அவங்களும் ரொம்ப அழகா அழங்கரிச்சுட்டு ரெடியா நின்னுட்டு இருந்தாங்க. அம்மையார் சேலையயும் இனிப்பு பொட்டலங்களையும் இந்த அஞ்சு பேருக்கு மட்டும் குடுத்து நமஸ்தம் பண்ணீட்டு, பத்து நிமிஷத்தில ச்சலேகய். மத்தவங்களுக்கு எங்கள குடுக்க சொல்றதுக்குதான் கூட்டிட்டு போயிருக்காங்க. முதல்லேயே சொன்னா வரமாட்டோம்னு, சஸ்பன்ஸ் எல்லாம் வச்சு..ஹ்ம்ம்ம்.... சண்டை போட்டோம். ஆனா இதுக்காக அங்க வந்திருந்த ஏழை மக்களை மனசில வச்சுட்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்தோம். அதில பாருங்க ஒரு 6 பேருக்கு கடைசியில எதுவும் இல்லை. மனசு ரொம்ப கஷ்டம் ஆயுடுச்சு. இதுல என்ன பிரயோஜனம். இவங்க 6 பேரும் ஏமாற்றம் அடைஞ்சு திரும்பி போறத நாங்க விரும்பலை. விழா ஏற்பாடு செய்த புண்ணியவான்கள் கண்டுக்கறமாதிரி தெரியலை. சரின்னு நாங்க 7, 8 பேர் இருந்தோம். எல்லாரும் சேர்ந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு போய் இனிப்பு பொட்டலங்கள் மட்டும் வாங்கீட்டு வந்து குடுத்தோம். இப்படி தான் பல இடங்களில நடக்குது.
நான் சொல்ல வந்த விஷயம். சோனிபட் போற வழியில சின்னதா ஒரு முதியோர் இல்லம். அங்க இருக்கும் முதியோர்கள் எல்லாரும் ஏழைகள், ஆதரவு இல்லாதவர்கள். ஒவ்வொரு முறையும் நினைப்பதுண்டு ஒரு நாளைக்கு அங்க இறங்கி அவர்களோடு கொஞ்சநேரம் இருக்க வேண்டும் என்று. ஆனா நேரமும், குளிரும் ஒத்து வரவில்லை. (இப்படி ஒரு சாக்கு) . கொஞ்ச நாளைக்கு முன்னால வேண்டியவரின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அவரோட மன உளைச்சலை உணர்ந்திருந்தேன். கடவுள் கிட்டே வேண்டீட்டேன். ஆனா இந்த விரதம் இருந்து பேரம் பேசுறது நண்பருக்கு பிடிக்காதுங்கறதுனால அவருக்கு தெரியாம கூட நான் அத செய்ய விரும்பலை. அன்னைக்கு கார்ல இத நினச்சுட்டே போய்ட்டு இருந்தேன்.. அந்த முதியோர் இல்லம் பக்கத்தில போனதும், கார கொஞ்ச நேரம் நிறுத்த சொல்லி, அந்த இல்லதுக்கு போய் அவர்களோடு கொஞ்ச நேரம் பேசீட்டு வந்தேன். முதிலிலேயே அங்க போற திட்டம் இல்லாததால் ஒன்னும் வாங்கீட்டு போகலை. பக்கதிலேயும் ஒன்னும் கிடைக்கல. அப்புறம் அடுத்த நாள் போன போது அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து குடுத்தோம். என்னோட தோழியும் நானும் சேர்ந்து. உங்க ஆசீர்வாதம் வேனும்னு சொன்னதும் புறப்படும் போது எதோ ஒரு பிரார்தனை பாடல் பாடினாங்க.... மனசுக்கு நிறைவா இருந்துச்சு, உச்சி முகர்ந்து ஒவ்வொருத்தரும் முத்தம் குடுத்து எங்கள நெகிழ வச்சுட்டாங்க. கண் கலங்கி நின்னோம். ஒரு பாட்டி கிட்ட சொன்னேன் எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்க ஆசீர்வாதமும் பிரார்தனையும் ஒருத்தருக்கு உதவும்னு நம்பிக்கை இருக்குன்னு சொன்னேன். நான் சார்ந்திருக்கும் துறையில இது போல இடத்துக்கு அடிக்கடி போயிருக்கேன்.. ஆனா அப்ப எல்லாம் இல்லாத ஒரு உணர்வு, அன்னைக்கு.
அதுக்கு அப்புறம் அங்க போக முடியலை. நான்கு நாட்களுக்கு முன்னால அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு தகவல் வந்தது. அருகில் இருந்தாலாவது ஆறுதலா இருக்கும். இத்தனை தொலைவுல இருக்குறுதுனால பயம், பதட்டம், பக்கத்தில இருக்க முடியலைனு ஒரு ஆதங்கம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததுனால மறுபடியும் அந்த முதியோர் இல்லம் நியாபகம் வந்துச்சு.
எத்தனை சுயநலம்!!..
ஆனா இந்த முறை நான் போகவில்லை. போக மனம் வரவில்லை. உண்மையாகவே அவங்களுக்கு உதவனும்னு நோக்கம் இருக்கானு தெரியலை.. தெரியலை என்ன...இல்லை.
இத தெரிஞ்சு செய்யற தப்புன்னு சொல்ல வரலை. மனதுக்கு நிறைவா இருக்குன்னு சில காரியங்கள் செய்யறோம். ஆனா அதற்கான பின்னனி, நோக்கம் என்னன்னு நாம யோசிக்கிறமானு தெரியலை.
நம்ம துளசி, சென்னைல இருக்குற ஹோப் பவுன்டேசன்கு உதவி பண்றாங்க. இங்க வரும்போதெல்லாம் அங்க போயிட்டு வர்ரதாவும் சொன்னாங்க. எந்த வித நோக்கமும் இல்லாம உதவி செய்யனும்னு செய்யறவுங்க நம்மிடையே ரொம்ப ரொம்ப குறைச்சல்.
நான் உங்களில் யாரையும் இதுல சேர்க்கலை....என்னோட நேற்றைய பதிவில மதுராவின் பின்னூட்டத்த படிச்சுட்டு, ஏற்கனவே இந்த எண்ணங்கள் எனக்குள்ள இருந்ததுனால, குறைந்தபட்சம் அத நேர்மையா ஒத்துகனும்னு தான் இந்த பதிவு.
Friday, February 23, 2007
அறமா?.. சட்டமா?

இரண்டு நன்பர்கள் கூட்டு சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பிச்சாங்களாம். நல்லா ஒப்பந்தம் எல்லாம் போட்டு கடைசி வரை பிரியக் கூடாதுனு ஒற்றுமையா தான் நடந்துச்சு எல்லாம். சில நாட்களிலேயே, ஒரு நண்பனுக்கு உடல் நிலை சரி இல்லாம மரணப் படுக்கையில விழுந்துட்டான். அப்போ இரண்டாவது நண்பன் சோகமே உறுவாகி பக்கத்தில உக்காந்து அழுதுட்டு இருக்கான். மரணப் படுக்கையில இருக்கும் நண்பன் சொல்றானாம்
என்னை மன்னிச்சுடு, நான் உனக்கு துரோகம் செஞ்சுட்டேன்.
எனக்கு துரோகமா?..என்ன செஞ்ச அப்பிடி?
உனக்கு தெரியாம நான் நிறைய சொத்த ஒதுக்கீட்டேன்..இப்பவாது உன்கிட்ட சொல்லிட்டேனே..மனசுக்கு நிம்மதியா இருக்குன்னு சொன்னாம்...
அப்ப இன்னொரு கூட்டாளி சொன்னானாம்... இதுக்கு எதுக்கு போய் கவலை படற, நீ மரணப்படுக்கையில இருக்கிறதுக்கே நான் தான் காரணம்..நான் கொடுத்த Slow Poisonனால தான் இன்னைக்கு நீ மரணப்படுக்கையில இருக்கேனு சொன்னானாம்.
நட்பின் ஆழத்தையும் அன்பின் ஆழத்தையும் பல சமயங்களிலே பணமே நிர்ணயிக்கிது.
சமுதாயத்தில நான் என்ன வேனா பண்ண எனக்கு உரிமை இருக்கு. எனகுள்ள இருக்குற id அது பண்ணு இத பண்ணுன்னு ஆசைய தூண்டி விட்டுடுது....ஆனா Super ego, வேண்டாம்மா, இது எல்லாம் தப்பு, நம்ம பெரியவங்க இது எல்லாம் சொல்லி இருக்காங்கனு எனக்குள்ள ஒரு லைட் அடிக்குது... கூடவே வளர்ந்த Super ego சொல்றத ஒதுக்கவும் முடியலை, ஆசையும் அடங்க மாட்டேங்குது, அதுனால மனசுல தோனின ஆசையை நிறவேத்திக்கறதுக்கு சில defence mechanisms வச்சுட்டு என்னோட செயல் பாடுகளுக்கு நியாயம் கண்டுபிடிச்சு வச்சுக்குறேன்.
பங்காளி மனசில இப்ப - எழுத சொல்வானேன், இந்த கொடுமைய அனுபவிப்பானேன், இதெல்லாம் நமக்கு தேவையா, வம்ப விலை குடுத்து வாங்கீட்டமேனு நினைக்குறார். என்ன பண்ண உங்க தலை எழுத்து....
எல்லாம் P6 புரட்சி னால வந்த கொடுமை.
Tuesday, February 06, 2007
நெஞ்சு பொறுக்குதில்லையே-நிதாரியின் நிஜங்கள்

இந்தப் பகுதியில் பெரும்பாலானோர் வங்க தேசத்திலிருந்து வேலை தேடி இங்கு வந்தவர்கள். மொனீந்தர் சிங் என்பவனும் அவனது பணியாளனான கோலியும் வெறித்தனமாக இந்த காரியத்தை செய்து வந்திருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான இந்த செயலை செய்து விட்டு, சமூகத்தில் நம்மிடையே எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், வெற்றிகரமாக ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருந்திருக்கின்றான். இத்தனைக்கும் இந்த இடத்திற்கு வெகு அருகில் தான் காவல் நிலையமும் இருக்கிறது. இங்கு வீடுகள் ஒன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை.நெருக்கமான குடியிருப்பு பகுதியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இத்தனை எளிதாக குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்திறுக்கின்றான், அருகில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. நகர (நரக!?) வாழ்க்கை பல குற்றங்களுக்கு துணை போகிறது. அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் ஓடி ஓடி அலைந்து களைத்து வீட்டில் ஒடுங்கிக் கொள்கிறோம்.


இதே நோய்டாவில் 'அடோப்' நிறுவன அதிபரின் மூன்று வயது மகன் ஆனந்த் குப்தா காணாமல் போன போது எடுத்த துரித நடவடிக்கைகளில் பாதி கூட இரண்டு வருடங்களில் இந்த ஏழைகளுக்காக காவல் துறை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறையும், தொலைக்காட்சி துறையும் இந்த தொழில் அதிபரின் வீட்டு வாசலிலேயே தவம் இருந்தனர். குழந்தையை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகளை மணிக்கொரு தரம் மக்களுக்கு அள்ளி வீசி கொண்டிருந்தனர். ஆனால் நிதாரியின், இந்த பாவப்பட்ட அத்மாக்கள் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க அத்தனை புண்ணியம் செய்யவில்லை. சட்டமும் நீதியும் அதிகாரவர்கத்திற்கும், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை தவிர வேறு எந்த காரணத்தையும் இதற்கு நினைக்க தோன்றவில்லை.
Monday, February 05, 2007
புற்று நோய் விழிப்புணர்வு நாள்
ஒவ்வொறு வருடமும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருவை மையமாக வைத்து வருடம் முழுவதும் விளிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் குழந்தைகளுக்காக நடத்தப்படும்.
"இன்றைய குழந்தைகள், நாளைய உலகம்"
புற்று நோயின் 4 முக்கிய காரணிகளை வலியுருத்தி இந்த பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
புகை பிடித்தல், அளவுக்கு அதிகமான கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை தொற்று நோய்கள் மற்றும் சில உணவு பழக்க வழக்கங்கள் புற்று நோயின சில காரணிகள்.
இந்த வருடத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார செய்திகள்- பெற்றோர்கள், மருத்துவ துறையில் இருப்பவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்காக

- Provide a smoke-free environment for children ("no smoking in homes")
Adopt an energy-balanced lifestyle, be physically active, exercise regularly, avid obesity, eat well

- Learn the facts about vaccines that can prevent certain forms of cancer
- Be sun-smart – avoid over-exposure to the sun and sunburn
Tuesday, January 30, 2007
நீங்களும் சாப்பிடுங்க...

மன இருக்கம் அகல இதோ ஒரு நகைச்சுவை அனுபவம்...
சென்ற வாரம் சோனிபட்ல 40 அங்கன்வாடி பணியாளர்களுக்கு நடந்த பயிற்சி முகாம்ல, ஒரு பெண்மணி மட்டும் ஒரு மணிக்கொருதரம் எழுந்து எழுந்து வெளியே போய்ட்டு இருந்தாங்க. அனுமதி கேட்டுட்டு தான் போகனும்ங்குற ஒரு விதி இருக்கிறதுனால, நான்காவது முறை போறப்போ நான், என்ன பிரச்சனை உடம்பு ஏதாவது சரியில்லையான்னு கேட்டேன். ஒன்னும் இல்ல இப்ப வந்தர்ரேன்னு சொல்லீட்டு போய்ட்டாங்க...மதியம் அதே மாதிரி..இந்த தடவை இன்னொரு பெண்ணும் சேர்ந்து போக, சக பயிற்சியாளர்கள் கிட்ட சொன்னேன், இது என்ன கிளாசுல நடுவுல இத்தன தடவை எழுந்து போறாங்க , மத்தவங்க கவனமும் கெடுதுன்னு சொன்னேன். எனக்கு இது கண்டிப்பா கண்டுபிடிச்சே ஆகனும்னு சொல்ல, அதுக்கு அவங்க சரி போய் பார்த்துட்டுவான்னு சொன்னாங்க. அந்த பெண்கள் போனப்புறம், ஒரு நிமடம் கழிச்சு போய்ப்பார்த்தா, ரெண்டு பேரும் முதுகு மட்டும் தெரிஞ்சது...ஒரு மரத்தடியில உக்கார்ந்துட்டு இருந்தாங்க..நான் வருவதை பார்த்துட்டு ஒரு பெண் திரும்பி..வாங்க மேடம்..உங்களுக்கு வேணுமான்னு கேட்க, சரி எதோ பசிக்கு சாப்பிடறாங்க போல, குடுங்கன்னு கேட்டேன்...அப்படி என்னதான் சாப்பிடறாங்கன்னு பார்க்க ஆர்வம் எனக்கு...ஹி..ஹி..அப்புறம் வச்சாங்க பாருங்க என் கையில...என்ன தெரியுமா பீடி.... அடப்பாவிங்களா..இதுக்குத்தான் வந்தீங்களான்னு அத வீசி எரிஞ்சுட்டு பேசாம வந்துட்டேன்... ஒரு வேளை எனக்கும் அந்த பழக்கம் இருக்கும் போலன்னு நினச்சுட்டாங்க....:-)))).....
கூட வந்த பயிற்சாளர்கள கேட்டா, அவங்க ஸ்மோக் பன்ணதான் போறாங்கன்னு தெரியாதா?..கேட்டுருந்தா சொல்லியிருப்போம்லனு சொல்லி என்ன வச்சு காமடி பண்ணிட்டாங்க.....
அன்னைக்கு பூரா சர்ப்ரைஸ்..சர்ப்ரைஸ்
Monday, January 29, 2007
நெஞ்சு பொறுக்குதில்லையே
CNN-IBN ன் உதவியுடன் இந்த குற்றத்தை கண்டு பிடித்திருக்கிறது போலீஸ்.இந்தப் பெண்களின் பெற்றோர்களே இவர்களை புரோக்கர்கள் உதவியுடன். கோவா, சென்னை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 10,000 ல் இருந்து 12,000 வரை விலை போகும் இவர்கள் அனைவரும் 18 வயதை தாண்டாதவர்கள். எச்ஐவியின் தாக்கத்திற்கு பயந்து, இப்பொழுது இது போல இளம்பெண்களுக்கு என்ன விலை ஆனாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் சிலர். இது போல அதிக விலை கொடுக்க முன்வருபவர்கள், பாதுகாப்பான உடல் உறவில் (ஆனுறையை உபயோகித்தல்) அக்கறை காட்ட மாட்டார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக இந்தப் பெண்களை நாடுகிறார்கள்..ஆனால் இந்த அப்பாவிப் பெண்களின் பாதுகாப்பை பற்றி அவர்களின் பெற்றோர்களே கவலை படுவதில்லை. இவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, இரக்கமில்லாத பாலியல் கொடுமைகளுக்கு துணை போகிறார்கள். மனதளவில் கொஞ்சமா பாதிக்கப்படுவார்கள் இந்த பிஞ்சுகள்..ம்ம்ம்ம்.. நினைத்துப் பார்க்கவே நெஞ்சு பதைக்கிறது. இது போன்ற வன்செயல்களுக்கு பெற்றோர்களே காரணமாய் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.
இதில் தவறு செய்தது யார்?..
குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பற்றி மேலும் சில தகவல்கள் அடுத்த பதிவில்.....
Wednesday, January 10, 2007
டாக்கிங்...டாக்கிங்...டாக்கிங்

என் அருமை நண்பிகளே, பெண்கள் ரொம்ம்ம்ம்ம்ம்பபபபப பேசறதா பலர் பலகாலமா சொல்லீட்டே தான் இருக்காங்க. இந்த அதிகமா பேசற பழக்கத்த ஒரு பெண் ஆராய்ச்சி செய்து நிரூபிச்சு இருக்காங்க...
சரி விஷயத்துக்கு வரேன்.....சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு இந்த ஆராய்ச்சியில...
ஆண்கள விட பெண்கள் மூன்று மடங்கு அதிகமா பேசறாங்களாம். ஆண்கள் 7000 வார்த்தைகள் ஒரு நாளைக்கு பேசினா, பெண்கள் 20,000 வார்த்தைகள் பேசறாங்களாம்...(அது சரி....ஒரு விஷயத்த ஒரு தடவ சொன்னா புரிறதில்லை..) இன்னொன்னு, ஆண்களை விட பெண்கள் வேகமாகவும் பேசறதா அந்த ஆராய்ச்சி சொல்லுது.......... இதற்கான காரணத்தையும் அவங்க சொல்லி இருக்காங்க...
ஆண்களின் உடம்பில் சுரக்கும் testosterone ஹார்மோன்கள், அவங்க மூளையில வார்த்தை பரிமாற்றத்தையும் நினைவாற்றலையும் கட்டுபடுத்தற முக்கியமான ஒரு பகுதியை சுருங்கச் செய்துடுதாம். இதுனால ஆண்கள் ரொம்ப நேரம் பேசினா சோர்ந்து போயிடறாங்களாம்.. பெண்களால ஆண்கள் அளவுக்கு வேகமா நடக்க முடியாம போற மாதிரி....பேச்சு திறமையில ஆண்களால பெண்களோட paceக்கு ஈடு கொடுக்க முடியறதில்லையாம்.. இந்த காரணத்தினால அவங்க பெண்கள் அளவிற்கு உணர்சிகளை வெளிக்காட்ட முடியறதில்லைனு அந்த பெண்மணி சொல்லியிருக்காங்க.. அதே சமயத்தில பெண்களுக்கு இப்படி communicate பண்றதுக்கான செல்கள் மூளையில அதிகமா இருக்காம்...
இத்தனை காரணத்த சொல்லிட்டு இந்த ஆராய்ச்சியாளர் ஒரு சிக்ஸர் அடிச்சிருக்கார்.... பெண்கள் அதிகமா, அவங்க திருப்திக்கு பேசும் போது, அவங்க உடம்பில சுரக்கும் ஒரு வித அமிலத்துனால, ஹெராயின் சாப்பிட்டவுங்க அடையும் உச்ச கட்ட போதை நிலைய போல ஒரு நிலைய அடையறாங்களாம்... ஹம்ம்ம்ம்...இது கொஞ்சம் ஓவரா இல்ல..?
"Female Mind" - இது தான் அந்த புத்தகத்தின் பெயர்....இன்னொரு விஷயம்....
மற்றவர்கள், முன் வைக்கும் வாதங்களை கேட்கும் திறனை கட்டுப்படுத்தும் பகுதியையும் இந்த testosterone ஹார்மோன்கள் சுருங்கச் செய்துடுதாம்.. இதனால நியாயமான (பெண்களின்..?) வாதங்களை கூட அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லையாம். இது எல்லாம் நான் சொல்லலை....அந்த ஆராய்ச்சியாளர் தான் சொல்லி இருக்காங்க...
So carry on Girls......
(ச்ச்ச்சும்மா சுவாரஸ்யமா இருந்துச்சுன்னு பதிர்ந்துகிட்டேன்.... அவ்வளவே...)
Sunday, December 10, 2006
மனித உரிமை நாள்

வறுமையால் செத்துக்கொண்டிருக்கும் சக மனிதனை காப்பாற்ற செலவு செய்யும் பணத்தைவிட எதிராளி நாட்டின் படைவீரனை கொல்ல அதிக பணத்தை செலவு செய்யும் உலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
மனித வளத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக இருக்கும் முக்கிய காரணி
வறுமை.

வறுமையின் கொடுமையால் பாலியல் தொழிலில் குழந்தைகள்...கொடுமையின் உச்சம்
இன்று மனித உரிமை நாள்.
எல்லா வகையான மனித உரிமை மீறலுக்கும் அடிப்படை காரணி வறுமை.
1996 ஐ முதற்கொண்டு 2015 ஐ இலக்காக நிர்னயித்து, தலை விரித்து ஆடும் வறுமையை பாதியாக குறைக்க உலக நாடுகள் உறுதி எடுத்திருக்கின்றன. இதற்கான முயற்சிகளும் திட்டங்களும் நடந்து கொண்டிருந்தாலும், இது எந்த அளவுக்கு போதுமானதாக இருக்கிறதென்று நம் கண் முன்னே நடக்கும் மனித உரிமை மீறல்களை பார்த்தாலே நமக்கு புரியும்..
Saturday, December 09, 2006
Tuesday, December 05, 2006
வாழ்க்கை இதோ இதோ.....
Email Forward ல வந்தது
How to Live Life
Be Calm...Quiet...Tranquil

Bloom Often as often as you Can 
Stay close to your Family 
Explore the family around you 
Enjoy the rlaxing rhythm of Waves 
Watch the Moon rise 
Spread the Wings and Take Off of Your Own 
Then enjoy the comfort of comming home again 
Life is Short
Enjoy these Little Pleasures
Friday, December 01, 2006
Stop AIDS, Keep the promise
உடம்பில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மனிதனை பல் வேறு இன்னல்களுக்கு ஆளாக்கும் உயிர்கொல்லி நோய் இவ்வுலகில் பிறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. பின்னாளில் எய்ட்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த நோய், மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, ஒரு நாட்டின் வளர்ச்சித்திட்டத்தில் பங்கு பெறும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சவாலாக இருந்து வருகிறது. இன்று உலகில் 39.5 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் 95% பேர் வளரும் நாடுகளில் இருப்பவர்கள். இவர்களில் சரி பாதிபேர் 25 வயதிலேயே எச்ஐவி பாதிப்பிக்கு ஆளாகி.. பிறகு எய்ட்ஸ் என்னும் பல வித சந்தர்ப்ப வாத நோய்களின் பாதிப்பால் 35 வயதில் இறந்து போகிறார்கள்.
1988 முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் ஒன்றாம் தேதி எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாக வைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்ற வருடம் முதற்கொண்டு 2010 வரை ' Stop AIDS, Keep the promise' என்னும் கருப்பொருளே அனைத்து நடவடிக்கைகளுக்கும் மையமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டள்ளது.சமுதாயத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எச்ஐவி தடுப்பு பணியில் இருக்கும் கடமையை நினைவு கூறும் விதமாக இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய சில கடமைகள்...
எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களையும், ஆதாரமான செய்திகளையும் தெரிந்துகொள்ளுதல்.
எச்ஐவி தாக்கிய சக மனிதர்கள் குறித்து இந்த சமூகம் ஏற்படுத்தும் கறைகளயும் ஒதுக்குதலையும் மாற்ற நம்மால் இயன்றதை செய்தல்.
உரிமைகள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளுதல்
எய்ட்ஸ் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள சமுதாயத்தையும் சமூக கருத்துக்களையும் அறவே அகற்ற நம்மால் இயன்ற வரை பாடுதல்.
எச்ஐவி தடுப்புப் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளல்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை விட ஆதரவு தேவை. அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்து அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியானதொரு வாழ்வை அளித்தல்.


