Tuesday, March 31, 2009

மௌனங்கள்...Childhood Interrupted


குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள், அரசாங்கத்தின் உறுதி மொழிகள் இருந்தும் பிஞ்சுகள் நாளும் ஏதோ ஒரு முறையில் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டும் தானிருக்கிறார்கள். காலங்காலமாக நம் சமூகத்தில் நடந்தேறிக் கொண்டிருந்த சில மன்னிக்க முடியாத குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளியே வர தொடங்கியிருக்கின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் மட்டும் 3 சம்பவங்கள். தந்தை என்று சொல்லி கொண்டிருந்த ஜென்மமே சொந்த மகளை கற்பழித்த கொடூரம். இதில் தாயும் உடந்தை. நினைத்துப் பார்க்கவே பதைக்கிறது. இதைத் தொடர்ந்து பஞ்சாபிலும், இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அல்லும் பகலும் காத்தருளும் ஒரு கட்சிப் பிரமுகரின் மகள், தன் தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறி இருக்கிறார்.

பாலியல் கல்வியின் அவசியத்தை ஆராய்ச்சிகள் மூலமும், எடுத்துகாட்டுகள் மூலமும் எடுத்துக் கூறியும், தங்களின் வக்கிர மனதுக்கு தீனி போடவே, அரசியல் கட்சிகள் பாலியல் கல்வியை வேண்டாமென்று ஒதுக்கி வருகிறார்கள் என்று தான் நான் கூறுவேன். பண்பாடு, கலாச்சாரம், வெங்காயம் என்று கூவி, கூவி இளைய தலைமுறையினருக்கும் இடையூறு விளைவித்து கொண்டிருக்கிறார்கள். வக்கிர மனங்கொண்ட அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.


குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறை அவர்களது சுதந்திரத்தையும், உரிமையையும் வன்முறைக்குள்ளாக்கி, அவர்களின் இருப்பை முடக்கி நிர்மூலமாக்குகின்றது.இது பெரும்பாலும் குடும்பத்துக்கு வேண்டியவர்களாலும், உறவினர்களாலுமே ஏற்படுகிறது என்பது தான் கொடுமை. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இரண்டு பாலாரும் வன்முறைக்கு உள்ளாகிக்கொண்டு தானிருக்கிறார்கள்.


ஆராய்ச்சிகள் மூலமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நேர்காணல் மூலமும் இது போன்ற உண்மைகள் தெரிய வருகிறது. அதை வைத்து தான் பாலியல் கல்வியில் பாடங்களை வகுத்து இருக்கிறார்கள். இந்த வன்முறைகளிலிருந்து எவ்வாறு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கூறுவதே பாலியல் கல்வி. மற்றபடி பாலியல் கல்வி என்பது உடலுறவைப் பற்றி சொல்லிக் கொடுப்பது அல்ல. குழந்தைகளுக்கு யாரிடமிருந்து, எவ்வாறு இது போன்ற தொல்லைகள் வருகிறது, அதை எவ்வாறு அடையாளம் காண்பது, அதிலிருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது, போன்ற பயிற்சிகள் அடங்கிய ஒரு கல்வி முறை தான் பாலியல் கல்வி.

நடைமுறையில் இல்லாத ஒரு நிகழ்வு ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால் அதை உணர்ந்து, முன்கூட்டியே மற்றவர்களிடம் எடுத்துக் கூற ஒரு நம்பிக்கையை ஊட்டவே இந்த பயிற்சி. 'பாலியல் கல்வி' என்றால் தகாத ஒன்றாக பார்ப்பதால், சிலர் அதை 'வாழ்வியல் கல்வி' என்றும் கூறுவர். பெற்றொர்களும் ஆசிரியர்களும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசினால் யாராவது ஒருவரிடமாது அக்குழந்தை புகார் கூற வாய்பிருக்கிறது. ஒருவர் தவறு செய்தால், மற்றவரிடம் நாம் கூறலாம் என்ற நம்பிக்கை வரும்


பாலியல் கல்வியை முதலில் மகாராஷ்ட்ரா மாநிலம் அரசு தான் தடை செய்தது. அந்த தடைக்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் பேராதரவு அளித்தன. அதைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களும் தடை செய்தன.



இந்திய அரசு தரப்பில் நடந்த ஒரு ஆராய்ச்சியில், மகாராஷ்டிர மாநிலத்தில், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், 49.43 % சதவீத ஆண் குழந்தைகளும் 50.57 % சதவீத பெண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக அவ்வறிக்கை சுட்டுகிறது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் 61.73% பேர் குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்களாம். 5 வயதில் ஆரம்பித்து, 10 வயதில் வேகம் கூடி, 12-15 வயதில் வன்முறை உச்சத்தை அடைகிறதாம். (இதை டைப் செய்யக் கூட எனக்கு கை வரலை)
.

தங்களுக்கு நேரும் அவலங்களை தைரியமாக சொல்ல இந்தப் பிஞ்சுகளுக்கு தெரிவதில்லை. ஏதாவது ஒன்றை சொல்லி அவர்களை அடக்கி விடுவது எளிதான ஒன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறது. வெளியே சொல்லுவதற்கான ஏதுவான சூழ்நிலை எப்பொழுதும் அமைவதில்லை. சொன்னால் அவர்கள் மீதே பழி விழும் என்று பயந்து வெளியே சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும், குடும்ப கவுரவத்தை காரணம் காட்டி பெற்றோர்களும் உறவினர்களும் அதை மூடி மறைத்து விடுவார்கள். மாமாக்களும், சித்தப்பாக்களும் இது போன்ற விளையாட்டுக்கள் விளையாடாமல் இல்லை. பள்ளியில் வாத்தியாரின் தொடுதல் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இதை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து தான் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எதையும் தங்களிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு பெற்றோர்களே இப்படி அயோக்கியர்களாக இருந்தால் என்ன செய்வது.இது மாதிரியான சூழ்நிலையில் தான் ஆசிரியர்களும், நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். இந்த உதவியை நாடுவதற்கான தைரியத்தை வாழ்வியல் கல்வி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்த மௌனங்கள் கலைக்கப்படவேண்டியவை...நண்பர்களாக, ஆசிரியர்களாக, பக்கத்துவீட்டுகாரர்களாக, தாயாக, தந்தையாக நாமும் இந்த மௌனத்தை கலைப்போம்

Friday, March 27, 2009

மரப்பயிர்- ஒர்- பணப் பயிர்

தரிசு நிலங்கள் இருந்தும் பயன்படுத்தாதவர்களுக்கும், நிலம் நீர் வசதி இருந்தும் சரியாக பயன் அடைய முடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கும், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கும், நல்ல முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காகவும் அரசு தரப்பில் இருந்து ஒரு நல்ல வாய்ப்பு.

"தனியார் நிலங்களில் காடு வளர்ப்பு" என்ற திட்டத்தில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் வரை, ஒரு கோடி மரங்கள் நடப்பட்டு சாதனை படைக்கப்படுள்ளது. வரும் ஆண்டு 3 கோடி மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம்,
வனத்துறையின் கீழ் எல்லா மாவட்டத்திலும் செயல் படுத்தப்படுகிறது. தேக்கு, நாட்டு வேம்பு,மலை வேம்பு, சவுக்கு, தீக்குச்சி மரம், குமிழ், வாகை, முல்லில்லா மூங்கில் போன்ற மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப் படவுள்ளது. அடுத்த ஆண்டு மழைப்பருவத்தில் (செப்டெம்பர்- அக்டோபர்) நடவு செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வனத்துறை அலவலகத்தில் தங்கள் நிலம் சமபந்தப்பட்ட 10(1) அடங்கள் சமர்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். முன் பதிவின் அடிப்படையில் மட்டுமே செடிகள் வளர்க்கப்படுதால், இந்த முன் பதிவு அவசியமாகிறது.

இதற்கு நம்மிடம் குறைந்தது ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) நிலம் இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது ( சவுக்கு மட்டும் 2000 நாத்துகள் வழங்கப்படுகிறது.). மேலும் பராமரிப்பு செலவில் ஒரு பகுதி மானியமாக வழங்கப்படுகிறது.


தங்களின் நிலத்தின் மண்ணை ஆய்வு செய்து, கார அமிலத்தன்மையை பொருத்தும், நீரின் வகையை பொருத்தும், அருகில் மரங்களின் தேவை (Demand) மற்றும் விற்பனை (Marketing) வசதியை பொருத்தும், காலத்தின் அளவைப்
பொருத்தும் (மரங்களின் கால அளவு) தாங்கள் பயிர் செய்ய விரும்பும் மர வகைகளை முடிவு செய்யவும். (பொதுவாக சவுக்கு 3 அல்லது 4 ஆண்டுகளிலும் மற்ற வகைகள் 7 முதல் 20 ஆண்டுகளிலும் வெட்டலாம்).

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் வர்த்தகம் பதிவின் மூலம் தீக்குச்சி மரத்தை பற்றி தெரிந்து கொண்டேன். பிறகு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் போகும் பாதையில் இருக்கும் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று இந்த மரத்தை பற்றிய விபரங்களை அறிந்தேன். அங்கு இருந்த வனத்துறை அதிகாரி மிகப் பொறுமையுடன் மகிழ்ச்சியுடன் விவரங்களை அளித்தார். அதன் படி கடந்த 5 மாதங்களின் செயல்பாட்டில் கீழே படத்தில் உள்ள மரங்கள் கோவில்பட்டி அருகே பயிரிட்டிருக்கிறேன்.
இந்த மரத்தின் பெயர் பெருமரம் அல்லது பீமாட்டி(ailanthus). பொதுவாக தீக்குச்சி மரம் என்று அழைக்கபடுகிறது. இந்த மரத்தை நான் தேர்ந்தெடுத்தற்கு முக்கியமான சில காரணங்கள்

1) மார்கெட்டிங்க் - கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி போன்ற இடங்களில் அதிகமாக தீக்குச்சி ஆலைகள் இருப்பதால்.

2) 7 ஆண்டுகளில் வெட்டலாம்.

3) இந்த வகை மரங்களுக்கு எப்பொழுதும் நல்ல demand' இருப்பதால் நல்ல விலை கிடைக்கிறது.


ஒரு ஏக்கருக்கு 200 மரங்கள் வளர்க்கலாம்.
இடைவெளி - 14 x 14 அடி இந்த வகை மரத்துக்கு நீர் தேங்காத செம்மண் நிலமாக இருப்பது அவசியம். முதல் மூன்று ஆண்டுகளில் ஊடு பயிர் செய்யலாம்.( பாசிப்பயிர், உளுந்து, எள்..)

இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மரங்களை பயிர் செய்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன் சேர்ப்போம்.

மேலும் விபரங்களை பெற- 9942456605

Friday, February 27, 2009

நாட்டுப் பற்று என்றால்?????

வாக்கு வாதம் எனக்கு பிடிக்காத ஒன்னு தான்...அதுவும் அலுவலகத்துல, அலுவல்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை யென்றாலும், இன்னைக்கு அது தவிர்க்க முடியாததாயிடிச்சு....

மதியம் ஒரு அலுவலக நண்பர், இரண்டு பேரை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ஆண், ஒரு பெண், 23 அல்லது 24 வயது இருக்கும். ஒரு ஆன்மீக அமைப்புல இருந்து வந்திருந்தாங்க. அலுவலக நண்பர்கள் 6 பேரை உட்கார வைத்து, அந்தப் பெண் பேச ஆரம்பித்தார்.

"வரும் ஞாயிறு நாங்க ஒரு பீஸ் மார்ச்சுக்கு ஏற்பாடு செய்திருக்கோம்..Peace march is against the terrorism and corruption.. Please..please..please...you should all join' அப்பிடீன்னு பல ப்ளீஸ்களை போட்டு பேச ஆரம்பித்தார். கூட வந்த பையன் "எதுக்கு நீ ப்ளீஸ் இவ்வளோ போடுறே..வரவேண்டியது அவங்க கடமை' னு ஆரம்பிச்சான்..அப்பவே நாங்க நெளிய ஆரம்பிச்சோம்.

பிறகு நாங்கள் எல்லோரும் "நல்ல விஷயம் தான்... நாங்களும் வர்ரதுக்கு முயற்சி செய்யறோம்" னு சொன்னோம். வந்த அம்மணி, "இல்லை நீங்க கண்டிப்பா வர்ரேன்னு சொன்னா மேற்கொண்டு பேசலாம்' னு சொல்ல...நாங்க ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்தோம்.


அலுவலக தோழி ஒருத்தி ரொம்ப யதார்த்தமா.. "நாங்க ஃபேமிலியோட வெளியே போறோம்...ஏற்கனவே பிளான் பண்ணிட்டோம்....இன்னைக்கு இரவே கிளம்பறோம்" னு சொல்ல.... வந்த பையன்...."நீங்க ஏன் அதை ஒரு வாரத்துக்கு தள்ளி போடக் கூடாது" னு கேட்டான். சரி நல்ல விஷயத்துக்காக இதை ஆர்வம் மிகுதியால சொல்றான்னு நினைத்து யாரும் ஒன்னும் பேசலை.

அவர் அதோட நிற்கலை...."நீங்க இந்த பீஸ் மார்ச்சுக்கு வராம, I am a true Indian...I love my India...I love peace னு சொன்னா... 'THAT MEANS YOU ARE A FRAUD' னு ஒரு அறிக்கை விட்டான்... எனக்கு வராத கோபம் வந்தே விட்டது.... நாங்களும் சின்ன பையன்...போகட்டும்னு அடக்கி வாசிச்சோம்...ஆனா இந்த வார்த்தை என்னை ரொம்பவே ட்ரிக்கர் பண்ணீடுச்சு.

"Who are you to give an endorsement for my patriotism?" னு கேட்டேன்... அவங்க குடும்ப சூழ்நிலை தெரியாம அவங்களை ஃபிராடுனு சொல்ல நீ யார்னு கேட்டேன்.... உதாரணத்திற்கு... நான் இங்க தனியா இருக்கேன்....நான் இருக்கும் இடத்திற்கும் பீஸ் மார்ச்சு துவங்கும் இடத்திற்கும் 35 கி மீ. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தனியா வந்துட்டு போக எனக்கு தைரியம் இல்லை....தில்லி அவ்வளவு பாதுகாப்பான இடமும் இல்லை....அப்படி நான் வராத பட்சத்தில், உடனே எனக்கு நாட்டுப்பற்று இல்லை...நான் ஒரு ஃபிராடுனு சொல்ல நீ யார் னு கேட்டேன்... அவர் உடனே...அப்போ உங்களுக்கு உங்க பாதுகாப்பு தான் முக்கியம்....நாட்டின் பாதுகாப்பு முக்கியம் இல்லையானு கேள்வி எழுப்பினார். மேலும் பஸ் ரூட் தெரியலை, அதுனால வரலைன்னு சொல்ற நீங்க எல்லாம் ஹிப்போக்ரெட்ஸ். You people dont have the responsiblity....Wont you go miles if you get a job for 50,000..there you wont see safety...because you are paid.

நான் கேட்டேன்..do you want me to compromise my personal safety and join your peace march...னு கேட்டேன்...அவர்.".again and again you are talking about your personal safety and proving how selfish you people" are னு வசனமா வசனம் பேசினார். கூட வந்த பெண் இதுக்கு மேல பேச விட்டா நிறுவனத்திற்கு கெட்ட பெயர் வந்திடும்னு பையனை இழுத்துட்டு போயிட்டார்.

நோக்கம் சரியானதாய் இருந்தாலும் அதை அணுகும் முறையை நல்ல படியாக கையால வேண்டாமா?. ஒரு நல்ல விஷயத்திற்காக பாடுபடும் இவர்கள், வார்த்தைகளை இப்படி மானாவாரியா விடலாமா?... நல்ல உணர்வுகளை, நல்ல எண்ணங்களை இங்கே கற்றுக் கொள்ளும் இவர்கள், அதை செயலில் காட்டவேண்டாமா?. எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு வார்த்தையை விட்டால், கேட்ப்பவர்களுக்கு இந்த நோக்கத்தின் மேல் நம்பிக்கை வருமா?.

குறிப்பு: ஒரு தனிமனிதன் ஒரு சக மனிதனின் மேல், அதுவும் அவரைப் பற்றி அறியாத பொழுது, சுமத்தும் குற்றச்சாட்டின் பொருட்டு வெளிப்பட்ட கோபத்தின் விளைவாக இந்தப் பதிவு....மற்றபடி பீஸ் மார்ச் போவதைப் பற்றியதில்லை

Saturday, February 07, 2009

விக்கி ராய் - குப்பையில் கிடைத்த மாணிக்கம்


தெருவோர நிஜங்களில், கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைஞனை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அவர் பெயர் விக்கி. வீட்டை விட்டு ஓடி வந்து, தெருவில் வாழ்ந்து இன்று ஒரு தொண்டு நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்.

கொல்கத்தா மாநிலத்தின் புரூலியா என்ற இடத்தில் பிறந்த விக்கியின் வீட்டில் 6 குழந்தைகள். 6 பேருக்கான இடமோ, உணவோ இல்லாத சூழ்நிலை. தையல் வேலை பார்த்து வந்த தந்தைக்கு, அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற கவலை எப்பொழுதும். ரொட்டியும், ஊறுகாயுமே அன்றாட உணவாக இருந்து வந்தது. சில சமயம் அதுவும் இருக்காது.

7 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த விக்கிக்கு பள்ளியும் அலுத்து போனது. சதா அடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியரால் படிப்பின் மேல் வெறுப்பு வந்தது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும், தானும் வசதியாக வாழவேண்டும் என்ற வெறி மட்டும் மனதில். ஆனால் படிப்பு ஏறவில்லை. வீட்டை விட்டு ஓட திட்டமிட்டு, அம்மா சிமென்ட் வாங்க கொடுத்த 800 ரூபாயை கொண்டு தில்லிக்கு ரயிலேரிவிட்டார். விக்கியின் அனுபவங்களை அவரே சொல்கிறார்.

" தில்லிக்கு டிக்கெட் வாங்கி உட்கார்ந்த பின் அளவில்லா ஆனந்த மடைந்தேன். ரயில் புறப்பட்டவுடன் முகத்தில் அடித்த சிலு சிலு காற்று எனக்கு புத்துணர்சியை கொடுத்தது.



ஆனால் அந்த உணர்வுகள் மட்டுமே ஆனந்தமான ஒன்று என்ற உண்மை தில்லியில் இறங்கின அடுத்த நிமிடம் உணர்ந்து கொண்டேன். பாஷை தெரியாத ஊர், ஏன் என்று கேட்க ஆள் இல்லை, அம்மாவின் பாசத்திற்கும், அப்பாவின் பரிவிற்கும், அடுத்த வேலை உணவிற்கு வழி இல்லாவிடினும் என் உறவுகள் எனக்கு கொடுத்த பாதுகாப்பிற்கும் மனம் ஏங்கியது. என்னை நானே தேற்றிக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என்னைப் போன்ற சிறுவர்களுடன் சேர்ந்து தெருவோரத்தில் கிடக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, நாளொன்றிற்கு 100ல் இருந்து 150 ரூபாய் வரை சம்பாதித்தேன்.



ஆனால் அதுவும் அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை. ஏரியா தாதாக்கள் அடித்து துன்புறுத்தி பணத்தை பரித்துக் கொண்டார்கள். என் மேல் பரிதாபப்பட்டு அங்கு இருந்த ஒரு ஹோட்டல் முதலாளி் பாத்திரம் கழுவும் வேலையை கொடுத்தார். 50 ரூபாய் கொடுத்து, நாள் முழுக்க மலைபோல் குவிந்து கிடக்கும் பாத்திரங்கள் கழுவ சொன்னார். உணவோ, ஓய்வோ இல்லாமல் என் கைகள் புண்ணாகும் வரை வேலை செய்தேன். அந்த சமையத்தில் அங்கு உணவு அருந்த வந்த பெண்மணி ஒருவர், சலாம் பாலக் ட்ரஸ்ட் என்ற அமைப்பை பற்றி சொன்னார். கடவுள் கிருபையால் அங்கே என்னை ஏற்றுக் கொண்டார்கள். சின்ன சின்ன கைவேலைப் பாடுகள் செய்ய கற்றுக் கொண்டேன்.



அப்பொழுது தான் எனக்கு வாழ்க்கையில் முன்னேற முதல் வாய்ப்பு அமைந்தது. அதை என் இரண்டு கைகளாலும் இருக்க பிடித்து கொண்டேன். ட்ரஸ்டில் இருக்கும் குழந்தைகளை புகைப்படம் எடுக்க பிரிட்டிஷ்காரர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ட்ரஸ்டை சுத்திக் காட்டும் பொறுப்பு எனக்கு ஒதுக்கப்பட்டது. அது எனக்கு மிகவும் பெறுமையாக இருந்தது. ட்ரஸ்டில் மட்டுமில்லாமல் வெளியே தெருவில் வாழும் குழந்தைகளையும் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார். என்னுடன் தெருவில் வாழ்ந்த சிறுவர்களிடம் அழைத்து சென்றேன். எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் சிறுவர்கள் எதிரில் பேசியது எனக்கு பெருமையாக இருந்தது. அவரிடம் புகைப்படக்கலை பற்றி பேசி பேசி எனக்கும் அதில் ஆர்வம் வந்தது. இதற்கிடையில் நான் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களில் தேறினேன். எனக்கு18 வயதானபடியால் ட்ரஸ்டை விட்டு வெளியே வந்தாக வேண்டிய சூழ்நிலை. அங்கு 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை தான் வைத்துக் கொள்வார்கள்.



வெளியே வந்தால் எனக்காக ஒரு வேலை தேடவேண்டும். பிரிட்டிஷ்காரர் அவரின் நண்பர் ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் ஒரு பேஷன் போட்டோகிராபர். எனக்கிருக்கும் ஆர்வத்தை உணர்ந்து அவர் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்து சென்றார். நிறைய கற்றுக் கொண்டேன். சென்னை, பங்களூர், மும்பை, கொல்கத்தா, லடக், கேஷ்மீர் என பல ஊர்களுக்கு சென்றேன். நான் சென்ற ஊர்களுக்கான பயணச்சீட்டுகளையும், விமானமானால் 'போர்டிங்க் பாஸும்' இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.மறக்க முடியாத நினைவுகள், அனுபவங்கள் அவை.

ஒரு பழைய கேமராவை வைத்து தெருக்குழந்தைளை படம் பிடித்தேன்.



நான் எடுத்த புகைப்படங்கள் பிரிட்டிஷ் ஹைகமிஷனின் ஆதரவில் ஒரு கண்காட்சியாக வைக்கப்பட்டது. நான் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்கள், குழந்தைகள் மீதான வன்முறையை எடுத்து காட்டியது. குழந்தைகள் மீதான உரிமை மீறல்களை கருத்தாக கொண்டு படங்கள் எடுத்தேன். என் இந்த வளர்ச்சியை என் தாய் தந்தையர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர்களும் வந்தார்கள். அவர்களின் முகத்தில் நான் பார்த்த பெருமிதமும்,

ஆனந்தக் கண்ணீரும் நான் கடந்து வந்த பாதையை எனக்கு நினைவு கூறியது. அந்த புகைப்படக்கண்காட்சி மூலம் எனக்கு கிடைத்த 10,000 ரூபாயில் ஒரு கேமரா வாங்கினேன், என்னை வளர்த்த ட்ரஸ்டிற்கு உதவித்தொகை வழங்கினேன்.

எனக்கும் ஒரு் கனவு இருக்கிறது. ஒரு ஆப்பில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும், 12.5 megapixel கேமரா வாங்கவேண்டும். கண்டிப்பாக வாங்குவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது".

விக்கிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம், அமெரிக்காவில் இருக்கும் World Trade Centre" ன் கட்டுமானப்பணிகளை புகைப்படம் எடுக்க தேந்தெடுக்கப்படிருக்கிறார்.

முனைப்பும், ஆர்வமும் இருந்தால் இந்த உலகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த இடத்தையும் அடையலாம் என்பதற்கு விக்கி தான் சாட்சி. தனக்கு கிடைத்த முதல் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தன்னை ஆளாக்கிய நிறுவனத்திற்கு கொடுத்த அந்த மனித நேயம் இன்னும் பல வெற்றிகளை காண வேண்டும்.

மேலே உள்ள படங்கள் அனைத்தும் விக்கி எடுத்தது ...

Saturday, January 31, 2009

சாதர் தாக்னா- ஹரியானா மாநிலத்தின் ஒரு சமுதாய வழக்கம்


வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களின் அவல நிலையை முந்தைய எனது பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். கணவனை இழந்து, குடும்பத்தாராலும் கைவிடப்பட்டு, அன்றாட தேவைகளுக்கே கஷ்டப் பட்டு கொண்டிருப்பது ஒரு வகையான கொடுமை என்றால், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கணவனை இழந்த சில பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேறொரு வகையான வதை.

ஒரு முறை சென்னை லயோலா கல்லூரியில் CNN IBN தொலைகாட்சியின், ராஜ்தீப் சர்தேசாய், நடத்திய ஒரு கலந்துரையாடலின் போது, "South India is more a conservative society than North India" என்ற தன் கருத்தை முன்வைத்து துவக்கினார். இந்த மனப்பான்மைதான் பெரும்பாலான வட இந்தியர்களுக்கு (வட இந்தியாவில் வாழும் அநேக தென் இந்தியர்களும் இதில் அடக்கம்) இருக்கிறதென்றால் அது மிகையில்லை. இந்த மக்களோடு மக்களாய் அன்றாடம் பழகி (பேருந்தில், கடைகன்னியில், அலுவலகங்களில்) வாழ்ந்து பார்த்தால் , ராஜ்தீப்பின் கருத்து சற்றும் உண்மையில்லை என்பது புரியும்.

தென்னிந்தியாவில், அதி முக்கியமாக தமிழ்நாட்டில் பெண்கள் நிச்சயமாக மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப் படுகிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. அது இளம் பெண்களாக இருந்தாலு்ம் சரி, முதியவர்கள் என்றாலும் சரி. தமிழ்நாட்டிலும் சில பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, ஆனால் அது சில இடங்களில் மட்டுமே என்று சொல்லலாம். சரி நான் இதை விவாதம் செய்ய வரவில்லை. அது இந்த பதிவின் நோக்கமும் இல்லை.

காலங்காலமாய் ஹரியானா மாநிலத்து கிராமங்களில் கணவனை இழந்த பெண்களின் மீது திணிக்கப்பட்டு வரும் சமுதாய பழக்கமான ‘சாதர் தாக்னா’ பற்றி நான் நேரில் பார்த்து தெரிந்து கொண்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், இதன் பின்னராவது ராஜ்தீப் போன்றோரின் கண் மூடித்தனமான கருத்துக்கள் சரியா என்பதை நீங்களே சொல்லுங்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்

சில மாதங்களுக்கு முன்னால் வட இந்திய பெண்கள் சிலரை ( பெண் பத்திரிகையாளர், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள், அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள்) கோவையில் நடந்த ஒரு கருந்தரங்கிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அரசு துறையில் பணி புரியும் ஒரு பெண் கணவனை இழந்தவர். முதலில் வருகிறேன் என்றவர், புறப்படுவதற்கு முந்தைய நாள் தன்னால் வரமுடியாது என்றும், அதற்கான காரணத்தை நேரில் சந்தித்து கூற விரும்புவதாகவும் கூறினார்.

இந்த இடத்தில் ‘சாதர் தாக்னா’ என்கிற பழக்கத்தை பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.' சாதர் தாக்னா' என்பது, ஹரியானா கிராமங்களில், இளம் வயதில் பெண்கள் கணவனை இழந்து விட்டால், கணவனின் சகோதரருடன் அந்தப் பெண்ணை வாழவைக்க செய்வது அந்த சமுதாயத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழக்கம். அந்த நபர் பெரும்பாலும் திருமணம் ஆனவராகத்தான் இருப்பார். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரிவித்தாக வேண்டும். 'சாதர் தாக்னா " என்ற சடங்கை செய்து இப்படி வலுக்கட்டாயமாக கணவரின் சகோதரனுடன் சேர்ந்து வாழவைக்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட பெண் என் அலுவலகத்திற்கு வந்தார்.பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார். உடனே காரணத்தை பட படவென்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். நானும் ' சாதர் தாக்னாவில்' மாட்டிக் கொண்டேன். அதில் இருந்து தப்பிக்க என் பிறந்த வீட்டாரோடு சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

கணவனை இழந்த பெண்கள் மறு திருமணம் செய்து கொள்வது வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும், இந்த வகை கட்டாயப்படுத்துதலை, அந்த வகை திருமணமாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.இதில் அந்த நபருக்கு ஆண் வாரிசு இல்லாமல், கணவனை இழந்த பெண்ணுக்கு ஆண் வாரிசு இருந்து விட்டால்,இந்த கட்டாயப்படுத்தல் மேலும் அதிகமாகிறது. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை...ம்ம்ம்

கணவனை இழந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க, சமுதாயாத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பழக்கம் என்று இவர்கள் இதனை நியாயப்படுத்திகிறார்கள். இந்த வழக்கம் எப்படி தொடங்கியது என்று பார்த்தால், அந்தக்காலத்தில் கணவனை இழந்த, குழந்தை செல்வமில்லாமல் இருக்கும் பெண்களை, கணவனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் 'Levirate marriage' என்று கூறுவார்கள். இதை தென்னிந்தியாவிலும் சில இடங்களில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பெண் வீட்டாரும், கணவனின் வீட்டாரும் சேர்ந்து பேசி எடுக்கப்படும் ஒரு முடிவு. பெரும்பாலும் பெண் வீட்டாரும், அந்தப் பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல விரும்புவதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். ம்ம்ம்ம் இதில் பெண்ணின் விருப்பம் இருந்து விட்டால் இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் பெரும்பாலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை யாரும் மதிப்பதில்லை. பெண்ணிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பழக்கம், இன்று உருமாறி பெண்களை அடிமை படுத்தவும், தன் பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே சில ஆண்கள் பயன் படுத்திக் கொள்ளும் ஒரு பழக்கமாகி இருக்கிறது என்பது தான் உண்மை.

கணவனை இழந்த பெண்ணும் அவளுக்கு சேர வேண்டிய சொத்தும் எப்பொழுதும் அந்த வீட்டின் ஆண் மகனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை தவிர இதற்கு வேறு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.நான் மேலே குறிப்பிட்ட பெண் படித்து நல்ல வேலையில் இருப்பதால், தன் சொந்தக் காலில் நிற்க துணிவும் இருப்பதால், தன் விருப்பமின்மையை தெரிவித்து, வெளியே வந்துவிட்டார். இதனால் புகுந்த வீட்டாரின் வெறுப்பிற்கு ஆளான போதும், கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது. ஆனால் பெரும்பாலான ஹரியானா கிராம புறத்துப் பெண்கள் படிப்பறிவும், உலக அறிவும், சுய சிந்தனையும் அற்றவர்களாகவே, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். எனது அனுபத்தில் நான் பார்த்த பெரும்பாலான வட இந்திய கிராம பெண்கள் சுய சிந்தனை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் பிரதான தேவை பணம்,அது தரும் ஆடம்பரமான வாழ்க்கை முறை, அலங்கார சாதனங்கள், விலை உயர்ந்த உடைகள், காலனி முதற்கொண்டு எல்லாவற்றிலும் படோபகாரம் தெரியவேண்டும். இதை வஞ்சனை இல்லாமல் இந்த ஆண்கள் கொடுத்து விடுகிறார்கள். என் நான்காண்டு வட இந்திய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும் இதுதான்.

ஒரு வகையில் இவர்களின் இந்த நிலைக்கு இவர்களே காரணம் என்று பல சமயம் நினைக்கத்தோன்றுகிறது. கணவனுக்கென ஒரு விரதம் (கர்வா சவுத்), அண்ணன் தம்பிகளுக்கென ஒரு விரதம் (பாய் தூஜ், ராக்கி) இது போக மருமகன் நன்றாக இருக்க வேண்டுமென்று சில சமுதாயத்தாரின் விரதம். இது கட்டாயமாக எல்லாப் பெண்களும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள். இல்லையென்றால் அவள் குடும்பத்திற்கே லாயக்கற்றவள் என்கிற முத்திரை குத்தப்படுவாள்.இந்த பூஜைகளையும், விரதங்களையும், ஆடம்பரத்தையும் தாண்டி இவர்களின் சிந்தனை செல்வதில்லை. அதற்கான சூழலும் கிராம புறங்களில் இல்லை.

இன்றும் பெண் கல்வியென்பது வட மாநில கிராமங்களில் அதிசயமான ஒன்றாகவே இருந்து வருவது அதிர்ச்சியளிக்கும் நிஜம். இந்தப் பகுதி மக்களின் கண்ணோட்டமும் சுயநல போக்கும் பல சமயங்களில் எனக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் இன்னும் இவர்கள் அடைபட்டு கிடைக்கிறார்கள் என்பதே உண்மை..

நம் எளிமையும், சகிப்புத்தன்மையும் ராஜ்தீப் போன்றோருக்கு நம்மை conservative ஆக காட்டுகிறது. உண்மையான பெண் அடிமைத்தனம் என்ன என்பதை வட மாநிலங்களில் வந்து வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.ம்ம்ம்ம்... தென்மாநிலங்கள் இந்த விஷயத்தில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.இதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு சொல்லாமல் விடுவதில்லை. இது குறித்து இன்னும் விரிவாக எழுதிட முயல்கிறேன்.

இப்படி ஒரு முற்போக்கு சமுதாயத்தை ஏற்படுத்தி கொடுத்த பாரதி, பெரியார், போன்ற சமூக புரட்சியாளர்களுக்கு இந்த சமயத்தில் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதை களங்கமில்லாமல் வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

Monday, January 26, 2009

தெருவோர நிஜங்கள்......

முன் குறிப்பு- Slum Dog Millionaire னு ஒரு படம்... எல்லாரும் கேள்விபட்டிருப்பீங்க.. உலக அளவில் சிறப்பான விருதுகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு படம்... பத்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படிருக்கிறது...இந்திய மண்ணில் இருக்கும் சேரிகளின் உண்மை நிலைமையை எடுத்து சொல்லும் ஒரு நல்ல முயற்சி..

ஆனால் நம்மில் சிலர், தாங்கள் மட்டுமே
இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில ஜென்மங்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஏதோ இல்லாத ஒன்றை சொல்லியிருப்பதாக குதிக்கிறார்கள். இந்திய நிலைமையை சொல்லி காசாக்கும் முயற்சி இது என்று நினைப்பவர்கள் சிலர்....ஒரு பிரிடிஷ்காரன் வந்து நம் நாட்டின் நிலைமையை சொல்ல அனுமதிக்க கூடாது என்றெல்லாம் பிரச்சினையை கிளப்புகின்றனர்.

சேரிகளில் இந்த நிலைமை இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா இவர்களால்??.. இல்லை அப்படி இருந்தால் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு வாய் கிழிய பேசும் இவர்கள் ஏதாவது செய்யப் போகிறார்காளா???... கோவமும் ஆதங்கமும் தலைக்கு ஏறுகிறது.... இதில் தில்லி வாழ் மக்களை சொல்லவே வேண்டாம்.... கெட்டு குட்டிச்சுவரான கலாச்சாரம், உணர்வுகளை ஒதுக்கி படோபகார வாழ்க்கையில் லயித்துப்போயிருக்கும் திமிர் பிடித்த அயோக்கியர்கள்....

இந்த பதிவு இந்தப் படத்தை பற்றியதில்லை... ஆனால் இந்தப் படத்தில் வரும் சிறார்களைப் போல தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாபாத்திரங்கள் பற்றியது.


ஒவ்வொரு முறை தில்லி ரயில் நிறுத்தத்தில் ரயில் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்களை உறுத்தும் சில காட்சிகள். அங்கு குப்பை பொறுக்கும் குழந்தைகள், நாம் அசுத்தம் செய்த ரயில் பெட்டியை சுத்தம் செய்து அதற்கு காசு கேட்கும் பாலகர்கள், சுத்தம் செய்ய வரும் போது குப்பையை கால்களால் இந்தக் குழந்தைகளின் மீதே தள்ளிவிட்டு, அவர்கள் காசு கேட்டால் விரட்டி அடிக்கும் இறக்கமில்லா பெண் ஜென்மங்கள்....பிச்சை எடுக்கும் வயது வந்த பெண்களின் கிழிந்த ஆடைகளினூடே பார்த்து கண்களால் கற்பழிக்கும் காமப் பார்வைகள், ....ம்ம்ம்ம்... இதில் எதுவுமே பாதிக்காமல் கர்மமே கண்ணாயிரமாய் பழைய பாட்டில்களை சேகரித்துக் கொண்டும், பாக்கு பாக்கெட் சரங்களை விற்றுக் கொண்டும், பிச்சை எடுத்துக் கொண்டும் இருக்கும் என்னற்ற குழந்தைகளை பார்க்கும் போது மனது சில நிமிடங்களேனும் நொறுங்காமல் போகாது.


இவ்வாறு தெருவில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் தான் அதிகம். ஒரு வேளை உணவிற்காக செய்யக் கூடாத வேலைகளை செய்து, குழந்தை பருவம் என்ற ஒன்றை நினைவில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் வயதிற்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாத பெரியவர்களின் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இல்லை... வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களின் உலகத்தில் போட்டி போட்டு வாழ பழகிக்கொள்ளும் இவர்களுக்கு, குழந்தை பருவத்திற்கே உண்டான பிரத்யேக குணாதிசியங்கள் அறவே இல்லாமல் போய்விடுகிறது என்பது தான் கொடுமை.

இந்தக் குழந்தைகள் ஏரியா தாதாக்களாலும், ரவுடிகளாலும் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப் படுகிறார்கள். இதில் ஆண் குழந்தைகளும் விதிவிலக்கில்லை. ஓரினச்சேர்க்கை இளைஞர்களால் இந்தச் சிறுவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். இவர்களுக்கு ஓரினச்சேர்க்கை உணர்வுகள் பெரும்பாலும் இருப்பதில்லையென்றாலும், பணத்திற்காக அதையும் செய்ய தயங்குவதில்லை. நாளடைவில் இவர்களுக்கும் இதுவே பிடித்து விடுகிறது. முடிந்தால் இதைப் பற்றி இன்னொரு தனிப்பதிவு போடுகிறேன்.

தில்லியில் மட்டும் 1,00,000 தெருக் குழந்தைகள் இருக்கிறார்களாம். ராஜஸ்தான், பீஹார், கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து பிழைக்க வந்த ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம். இவர்களில், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருப்பார்கள். குழந்தைகள் பிச்சை எடுப்பது, ரோட்டோரத்தில் இருக்கும் பழைய பாட்டில் பேப்பர் போன்றவற்றை சேகரிப்பது, சிக்னலில் பொருட்களை விற்பது போன்ற வேலைகளை செய்து நாளொன்றுக்கு 100ல் இருந்து 150 வரை சம்பாதிக்கிறார்கள்.

தெருவில் வாழந்தாலும் இவர்களுக்கும் லட்சியங்கள், ஆசைகள், கனவுகள் உண்டு. ஒரு சின்ன மூலதனத்தை போட்டு, அதை சில நிமிடங்களுக்கே தெருவில் சந்திக்கும் மக்களிடம் விற்று காசாக்கும் திறமை கொண்ட இவர்களுக்கு கல்வியறிவும், நல்வழிகாட்டுதலும் அமைந்துவிட்டால்??... ம்ம்ம் இதை உணர்ந்த சில தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கென்று மாலை நேர வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதை சரியான முறையில் பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேறி இருக்கும் குழந்தைகளும் உண்டு.

ரோஹித் என்னும் 13 வயது அழகான பாலகன். பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவன், 2 வருடம் முன்பு அப்பா அடித்தற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவன். இன்று தில்லி ரயில்வே நிறுத்ததில் தேங்காய் கீற்றுகளை விற்று நாளொன்றிற்கு 150 ல் இருந்து 200 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறான்.ரோஹித்துக்கு டாக்டர் ஆகி இவனைப் போன்ற ஆதரவில்லா குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவற்றகர்களே ஆதரவு இல்லையா?... ம்ம்ம்ம்.. மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த தொண்டு நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த குழந்தைகளுக்கென்று துவங்கி இருக்கும் வங்கி. பட்டர்ஃப்ளை என்ற தொண்டு நிறுவனத்தின் கண்கானிப்பில் இருக்கும் இந்த வங்கிக்கு தில்லியில் 12 கிளைகளும், சுமார் 2000 குழந்தைகள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த வங்கிகள் இந்தக் குழந்தைகளாலேயே பராமரிக்கப் படுகிறது. 6 மாதத்திற்கொரு முறை இவர்களே ஒரு மேளாளரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம், ஃபோர்னோகிராபியின் மூலம் ஈட்டிய பணம், திருட்டு வழியில் ஈட்டிய பணம், போதை பொருட்கள் விற்று ஈட்டிய பணம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பல குழந்தைகள் இது போல தீய வழியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். தங்கள் நண்பர்களை நல்வழிப் படுத்த இவர்களே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று.

தினமும் மாலையில் வங்கியில் இருக்கும் பணம், அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கியில் தொண்டு நிறுவன கண்கானிப்பாளரால் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த சேமிப்பு பழக்கத்தினால், புகைபிடித்தல், அடிக்கடி சினிமாவுக்கு செலவு செய்தல், குடிப்பழக்கம் போன்ற வேண்டாத பழக்கவழக்கங்கள் குறைந்திருப்பதாக இக்குழந்தைகளே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள்.

படிப்பு பிடிக்காமல் விட்டை விட்டு ஓடிவந்த அஜய்க்கு மேனேஜர் வேலை மிகவும் பிடித்தமான வேலை. உடையை அழகாக 'டக்கின்' செய்து, சர்டில் மேல் பட்டனை போட்டு, தலையை கோதி, ஒரு எக்ஸக்யூடிவ் ரேஞ்சுக்கு ஸ்டைலாக "கவுண்டரில்" அவன் உட்கார்ந்து இருக்கும் அழகே தனி. ..:-)))...புதியதாக வரும் கஸ்டமர்களின் பெயரை கேட்பதும், அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்து சொல்வதும், கறாராக நடந்து கொள்வதும்....பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.

இந்தக் குழந்தைகளுக்குத்தான் எத்தனை பொறுப்புணர்ச்சி. தினமும் பணத்தை சரியாக கணக்கு பார்த்து வாங்கி, 'கஸ்டமர்களின்' பாஸ் புத்தகத்தில் வரவு வைத்து, அதை தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் கொடுத்து, தங்களைப் போன்று கஷ்டப்பட்டு பணம் ஈட்டும் நண்பர்களுக்கு உண்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

கிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற இவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக மாற நாம் உளமாற வாழ்த்துவோம்.

இவர்களைப் போல தெருவில் வாழ்ந்து் 'சலாம்பாலக் ட்ரஸ்டால்' வழிகாட்டப்பட்டு, இன்று ஒரு பெரிய போட்டோகிராபர் ஆகியிறுக்கும் விக்கி என்ற இளைஞனைப் பற்றி அடுத்த பதிவில் போர்போம்.

Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்



மீண்டும் ஒரு புதிய ஆண்டு

நாம் சோர்ந்தாலும் எதுவும் நமக்காக நிற்கப் போவதில்லை

என்பதை உணர்த்தும் காலப் பாதையின் மற்றொரு மைல்கல்

புதிய கனவுகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய பொறுப்புகள்

தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக,

இந்நாட்டின் ஒரு குடிமகனாக

நம் பொறுப்பை மனதில் கொண்டு

புதிய உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும்

புத்தாண்டை எதிர் கொள்வோம்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tuesday, December 09, 2008

மனித உரிமை நாள் - பெனாசீர் கவுரவிக்கப் படுகிறார்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப் பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த ஆண்டு முழுவதும் அது தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள், சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகள், மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனித நாகரீகத்தின் பயனத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். அந்த பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நடைமுறையாக்க இந்த மனித உரிமை நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.


இந்த ஆண்டிற்கான கருப்பொருள் " கெளவுரவமும், நீதியும் நம் அனைவருக்கும் ". உலகமிருக்கும் நிலவரத்திற்கு மிக பொருத்தமான கருப்பொருள்.

இந்நாளில் மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரப்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் 6 பேரை (5 தனி நபர், ஒரு நிறுவணம்) ஐநா சபை தேர்வு செய்திருக்கிறது. இதில் இறந்த பிறகு கொடுக்கும் பாஸ்துமஸ் (Posthumous) பரிசிற்காக இரண்டு பேர் தேர்ந்தெடுத்தப் பட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தை நிலைநாட்ட ஏற்றுக் கொண்ட முயற்சியில் கொடூரமாக கொள்ளப்பட்ட பெனாசீர் பூட்டோ,
மற்றும் பிரேசில் நாட்டில் நிலபுலன்கள் இல்லாத பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடிய கன்னியாஸ்திரி சிஸ்டர். டோரதி ஸ்டாங்க் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. டோரதி ஸ்டாங்க் பல கொலை மிரட்டல்களுக்கு மத்தியுலும் தளராது தைரியமாக தான் ஏற்றுக் கொண்ட பணியை செய்து வந்தவர். இவர் கொல்லப்பட்ட போது நடந்த சம்பவத்தை கேட்டால், நாம் எல்லாம் எவ்வளவு சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என எண்ணத் தோன்றுகிறது. முன்று வருடங்களுக்கு முன்பு, அமேசான் காட்டுக்குள், அங்கு வாழும் பழங்குடியினருக்காக போராடிக் கொண்டிருந்த போது, இரண்டு பேர் துப்பாக்கியுடன் இவரை வழி மறித்தனர். அவர்கள் யாரால் எதற்காக அனுப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்த இந்த மூதாட்டி, அவர்களை அன்புடன் வரவேற்று, அமைதியாக 15 நிமிடங்கள் பேசி இருக்கிறார். அவரின் போராட்டத்திற்கு பின்னால் இருக்கும் நியாயத்தை விளக்கி இருக்கிறார். கையில் இருந்த ஒரு வரை படத்தை வைத்து பழங்குடியனருக்கு சொந்தமான நிலத்தை சுட்டி காட்டி இருக்கிறார். எந்த நியாயத்தையும் கேட்கிற மன நிலையில் வந்தவர்கள் இல்லை என்று தெரிந்ததும், கடைசியில் தன் கைப்பையில் இருந்த பைபிலை எடுத்து, " எனக்கு இருக்கும் ஒரே ஆயுதம் இது தான்" என்று கூறி ' "Blessed are the peacemakers, they shall be called children of God, Blessed are they who hunger and thirst for justice, for they shall be satisfied" என்ற வாசகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதே கொல்ல வந்தவர்கள் ஸ்டாங்கை 5 முறை சுட்டு விட்டு ஓடி விட்டனர். 79 வயதில் இப்படி ஒரு மன வலிமையா..ம்ம்ம்

இந்த பரிசை வாங்கப் போகும் மற்றவர்கள்...

ராம்சே க்ளார்க்: முதல்ல நம்ம ஹீரோ....:-))...யூ எஸ் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியவர். அமெரிக்க னித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலும் மரண தண்டனை முறை ஒழிக்கப்படுவதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், சதாம் மீதான வழக்கில் சதாமிற்கு ஆதரவாக வாதாடியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்தவர். உலகமயமாக்கல் என்பது சாதாரன மனிதனுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் ஊடுருவல் என்ற கருத்தை உடையவர். கொல்கத்தாவின் நந்திகிராமில் நடந்த கொடுமையின் போது அங்கு சென்று மக்களை நேரில் சந்தித்து நடந்ததை தெரிந்து கொண்டவர்.

மற்றொரு முக்கிய நபர் காங்கோ நாட்டை சேர்ந்த டாக்டர். டெனிஸ் முக்வெஜ். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களின் நலத்திற்காக ஒரு மருத்துவமனை நிறுவி தொண்டாற்றி வருபவர். இவரின் மருத்துவமனைக்கு இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் நாளொன்றிற்கு 10 பேர் வந்து போகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்து இலவசமாக சிகிச்சையும் அளித்து வருகிறார்.


ஜமாய்க்கா நாட்டில் மனித உரிமைக்காக போராடும் டாக்டர். கேரொலின் கோம்ஸ் க்கும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இவர் Jamaicans for Justice என்ற அமைப்பின் மூலம் ஜமாய்க்கா நாட்டில் நடக்கும் மனித உரிமை அத்து மீறல்களுக்கு எதிராக அரும்பணியாற்றி வருகிறார்.


ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற நிறுவனமும் இந்த ஆண்டு கவுரவிக்கப் படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்நிறுவனம் உலகம் முழுதும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை பதிவு செய்து, சில ஆக்கப்பூர்வமான பரிந்துறைகளை செய்து வருகிறது. மேலும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தை நிறுவ காரணமாக இருந்ததும் இந்நிறுவனம் தான்.

எல்லாம் சரி. உலக அளவில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை மறுப்பதிற்கில்லை என்றாலும் நாளுக்கு நாள் இந்த மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். வருடா வருடம் பெரிய அளவில், உலகம் முழுவதும் இந்த நாள் வெகு விமர்சையாக அனுசரிக்கப்படுவ தென்னமோ உண்மை. வாய் கிழிய பேசும் தலைவர்கள், அரசியல் ஆலோசகர்கள், சட்ட நிபுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என இந்நாளில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை சொல்பவர்கள் ஏராளம். ஆனால் இந்த கருத்து பரிமாற்றங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்தியாவைப் பொறுத்தவரை, (காவல் துறையை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்) ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சிறைக் காவலில் ஒவ்வொரு நாளும் நான்கு பேர் இறக்கின்றனர் என கூறியிருக்கிறது. ரவுடிகள் என்கெளவுன்ட்ரில் கொல்லப்படுவது சாதாரணமாகி வரும் இந்நாளில் அவர்களை உருவாக்குபவர்களை என்ன செய்ய முடிந்திருக்கிறது நம்மால். கொல்லப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள், தாதாக்கள் என்ற காரணத்தால் அவர்களின் மரணமும், அவர்கள் கொல்லப்பட்ட விதமும் நம்முள்ளே எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் உண்மைதானே. இது போல செயல்பாடுகளில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், வீர பதக்கமும் கொடுத்து, மறுநாளே பெரிய வெற்றி விழாக்கள் கொண்டாடும் ஆட்சிகளையும் நாம் பார்த்துவிட்டோமே.

அதிகாரத்தை பயன் படுத்தி அவர்களை விசாரணையின்றி கொல்லுவது மற்றறொரு முக்கிய குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கை என்பது என் எண்ணம். திறைமறைவில் இருக்கும் சில பெரும்புள்ளிகளும் காவல் துறையும் சேர்ந்து அரங்கேற்றும் ஒரு நாடகம்.


இந்தச் சாவுகளில் எங்கே இருக்கிறது நீதியும் கெளரவுமும்.....ம்ம்ம்ம்

வாழ்க ஜனநாயகம்..!

Monday, December 01, 2008

உலக எய்ட்ஸ் தினம் 2008

Support World AIDS Day

சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் முதலிய வேறுபாடுகளை அறவே தவிர்த்திடுவோம்.... உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை

தெரிந்து தெளிவடைவோம்

தெளிவடைந்து கைகொடுப்போம்

நாம் கோரும் உரிமைகளை அனைவருக்கும் அளிப்போம்..

கோவையில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் தங்களுக்கென ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

Sunday, October 19, 2008

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர முடியவில்லை. அப்படி அவர்களின் நிலையில் என்னை வைத்து பார்க்க, நிஜத்தில் அனுபவிக்க ஒரு வாய்ப்பை சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டேன். வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத தருணங்கள், அனுபவங்கள். இந்த அனுபவம் மூலம் என் பணி சார்ந்த எண்ணங்களை இன்னும் பட்டைத் தீட்டிகொள்ள முடிந்தது.

இன்று வரை இந்நோயை ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமாகத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் சமுதாய, பொருளாதார, உளவியல் கூறுகள் சம்பந்தப் பட்டிருப்பதை உணர மறுக்கிறோம். மருத்துவமனைகளில், சமுதாயத்தில், தொழில் செய்யும் இடங்களில் பல அவமானங்களை பாதிக்கப்பட்டவர்கள் எதிர் கொள்கிறார்கள். இதை பற்றி பேசுவதும், அச்சச்சோ என்று உச்சு கொட்டுவதும் எவ்வளவு சுலபமாக வேலை என்பதை இப்பொழுது உணர்கிறேன். (அதாவது என்னைப் போல இந்தத் துறையில் இருப்பவர்களை மட்டுமே சொல்கிறேன்). இந்த பரிதாபம் காட்டுதல் எந்த வகையில் அவர்களுக்கு இது நாள் வரையில் உபயோகமாக இருந்திருக்கிறது, என்றால், இங்கு எழுதுவதால், சில வலை நண்பர்கள் நேராக சென்று
மீனாட்சி போன்றவர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.

இது தவிர கொள்கையளவிலும் சில மாற்றங்கள் தேவை. அதை தொடர்ந்து சம்பந்தப் பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கண்ணோட்டத்திலும் மாற்றம் வரவேண்டும். அவ்வாறு சில மாற்றங்களை கொண்டு வர சமீபத்திய அனுபவம் எனக்கும் என் உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வாய்ப்பாக கிடைத்தது. இந்த அனுபவம் என் சொந்த முயற்சியால் கிடைத்த ஒன்று என்று சொல்லிக் கொள்வதில் உண்மையிலே பெருமை அடைகிறேன். ஏனென்றால் எடுத்துக் கொண்ட முயற்சியும் கிடைத்த அனுபவமும் அப்படி.

தில்லியில் உள்ள அரசு மருத்துவனைகளில் இயங்கி வரும் ஒருங்கினைந்த எச்ஐவி சோதனை மற்றும் ஆலோசனை மையங்கள், (Integrated Counselling and Testing Centres) எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்களை மிக மோசமாக நடத்துவதாக சில பத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டன. அதனால் தில்லியில் உள்ள அனைத்து தன்னார்வ சோதனை மையங்களுக்கும் ஒரே நாளில் எந்த முன்னறிவுப்புமின்றி சென்று பார்த்து வர அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் படி குழுவிற்கு 5 பேர் என 7 குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை மேற்கொள்ளப் பட்டது. நான் இருந்த குழுவிற்கு தென் தில்லி பக்கம் உள்ள 7 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டது.

முதலில் சென்ற மருத்துவமனையில் நாங்கள் இருப்பதுனாலோ என்னமோ எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆலோசனைக்காக ஒதுக்கப்பட்ட நேரம் மட்டும் மிகவும் குறைவாக இருந்தது. அதை சரி செய்ய சொல்லி விட்டு அடுத்த மருத்துவமனைக்கு சென்றோம்

அடுத்த மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னால், உண்மையை கண்டுபிடிக்க வேறு என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசித்தோம். நான் ஒரு யோசனை கூறினேன். நம்மில் யாராவது இரண்டு பேர் எச்ஐவி ஆலோசனைக்காக செல்வதைப் போல சென்று பார்க்கலாம் என்றேன் (Mock patient). சொன்னது தான் தாமதம் எல்லாரும் என்னை ஒரு எதிரியை பார்ப்பதைப் போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதே சமயம் யாரும் அவ்வாறு செல்ல முன்வரவும் இல்லை. ஏனென்றால் ஆலோசனைக்காக சென்றால் முதலில் காத்திருக்கவேண்டும். காத்திருக்கும் போது வேறு யாராவது நம்மை பார்க்க வாய்பிருக்கிறது. இது அவர்கள் 'ஊராம்'. அதனால் அவர்கள் பெயர் கெட்டு விடுமாம். இது தானா பிரச்சனை, சரி, நான் தானே யோசனை கூறினேன் நானே செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல் காரை விட்டு இறங்கினேன்.

முதலில் ஆலோசனை மையம் எங்கிருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும். இதற்கும் ஒரு மருத்துவமனை விதி இருக்கிறது. எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்கள் மற்றவர்களை கேட்க சங்கடப்படுவார்கள். அதனால் மருத்துவமனை நிர்வாகம் தகுந்த வழிகாட்டி பலகைகளை வைத்திருக்க வேண்டும். ஆனால் அங்கே எந்த வழிகாட்டி பலகையும் இல்லாததால் விசாரித்தே செல்ல வேண்டியிருந்தது. ஒரு வழியாக கண்டுபிடித்து ஆலோசனை மையத்தினுள் நுழைந்தேன். நான் சென்ற போது எனக்கு முன்னால் 8 பேர் இருந்தார்கள். ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இருக்கட்டும் என்று 'பெஞ்சில்' அமர்ந்து கொண்டேன்.

முதல் 10 / 15 நிமிடங்கள் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. நண்பர்களே, அதற்குப் பிறகு காத்திருந்த ஒரு மணி நேரம் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது. மிகப்பெரிய அனுபவம். வெராண்டாவில் சென்றவர்கள் என்னை பார்த்த பார்வை,பொது மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் ஒரு பார்வை திரும்பி பார்க்காமல் போகவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அப்படி சந்தேகப்பட்டு ஆலோசனைக்காக வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர முடிந்தது. பாதிக்கப்பட்டவராக நடித்துக் கொண்டிருக்கும் நமக்கு, டெஸ்ட் ரிசல்ட் பற்றிய கவலையில்லை. ஆனால் அவர்களுக்கு???...ம்ம்ம்ம்ம்.

இதனிடையே காரில் காத்துக் கொண்டிருந்த என் அலுவலக சகாக்கள், சமோசா வாங்கிட்டு வரவா, மிராண்டா வாங்கிட்டு வரவா என்று கைபேசியில் அழைத்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் பதட்டம் தான். இப்பவும் ஒன்றும் கெட்டு விடவில்லை, நாங்கள் வருகிறோம், ஆலோசகரிடம் பேசலாம் என்று மீண்டும் ஆரம்பித்தனர். ஒன்றும் வேண்டாம் நேரம் ஆகும் காத்திருங்கள் என்று கூறிவிட்டு அமர்ந்திருந்தேன்.

அருகில் ஒரு பெண் கலவர முகத்துடன் அமர்ந்திருந்தாள். என்னாலும் முகத்தை சகஜமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. உண்மையிலேயே எனக்கும் அடி வயிற்றில் ஏதோ பிரட்டிக் கொண்டுதானிருந்தது. மெதுவாக அருகில் வந்து 'நீங்களும் டெஸ்ட் செய்யத்தான் வந்தீங்களா". நான் எற்றுக்கொண்டிருக்கும் பாத்திரத்தின் உண்மை நிலையை உணர ஆரம்பித்தேன். "ஆமா, நானும் டெஸ்டுக்காகத் தான் வந்திருக்கேன்' என்றேன். என் உடையையும் என்னையும் மேலும் கீழும் பார்த்தாள். " ஏன்?, எப்படி?" என்றாள்.. அதாவது நான் எதற்காக டெஸ்டு செய்ய விரும்புகிறேன், எப்படி இந்த நோய்க்கு ஆளானேன் என்பதை விசாரித்தாள். எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் வந்துவிட்டேன். ஆனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள இயலவில்லை. கொஞ்சம் மெளனமாக இருந்தேன். அந்தப் பெண், தன் கணவர் ஒரு லாரி ஓட்டுனர் என்றும், கணவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்த பின்னர், நேற்று வந்து டெஸ்டுக்காக இரத்தம் கொடுத்துவிட்டு சென்றதாகவும், இன்று ரிசல்ட் கிடைக்கும் என்றும் கூறினாள். அவளின் மனநிலையை உணர முடிந்தது.

என் மெளனத்தை பார்த்து" பரவாயில்லை, சொல்லுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்றாள்'. நான் சொன்னேன், " எப்படி என்று தெரியவில்லை, மருத்துவர் இங்கு அனுப்பினார்" என்றேன். ரொம்ப புத்திசாலி என்று எனக்குள் நினைப்பு. உடனே அந்தப் பெண், " உங்கள் கணவர் அடிக்கடி வெளியூர் செல்பவரா" என்றார். ஆஹா இது என்னடா வம்பு, நாம் மேற்கொள்ளும் நடிப்பில் பாவம் கணவரை ஏன் இழுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பெண் மேல் தவறில்லை. நியாயமான கேள்வி தான் கேட்டாள். நான் 'இல்லை' என்றேன். காரணத்தை சொல்ல விரும்பாதவள் போல முகத்தை திருப்பிக் கொண்டேன். நடிப்பதற்கே இப்படியென்றால்... ம்ம்ம்
என் முறை வந்ததும் உள்ளே சென்றேன். ஆலோசகரும் அவரின் சகாக்களும் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தனர். என்னைப் பார்த்ததும் அந்த அறையே அமைதியானது. நான் தனியாக பேச விரும்பவதாக கூறினேன்.

அதற்கான வசதி இங்கில்லை, இப்படியே பேசுங்க என்றார். நான் "டெஸ்ட் செய்ய வந்தேன்" என்றேன்.

"உங்களைப் பார்த்தா படித்து ஏதோ நல்ல வேலையில் இருப்பவர் மாதிரி இருக்கு?" என்றார். நான் 'ஆமாம்" என்றேன்.

"சரி ஏன் டெஸ்ட் எடுக்க விரும்பறீங்க" என்றார். 'சந்தேகம் தான்' என்றேன். உண்மையில் காலுக்கடியில் பூமி என்னை விழுங்கவதைப் போல இருந்தது.

"எச்ஐவி பற்றி தெரியுமா" என்றார்.நான் "தெரியாது சொல்லுங்கள்" என்றேன்.-எச்ஐவி பற்றிய அனைத்து தகவல்களையும் அவர் கொடுக்க வேண்டும். அவரோ எச்ஐவி ஏதோ தகாத உறவின் மூலமாக மட்டுமே வருவதைப் போல தகவல்களை அடுக்கிக் கொண்டு போனார். "தகாத உறவு" என்ற வார்த்தையை ஆலோசகர் உபயோகப்படுத்தக் கூடாது. பாதுகாப்பில்லாத உறவல்லாமல் வேறு வழியுலும் ஒருவர் பாதிக்கப்படலாம் என்பதை கூற ஆலோசகர் மறந்துவிட்டார்.

என் பெயர், முகவரி, வயது, திருமண உறவு போன்ற தகவல்களை எழுத முற்பட்டார். நான் அதெல்லாம் பிறகு தருகிறேன், முதலில் டெஸ்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். "வந்தது எச்ஐவி டெஸ்டுக்கு, இதுல என்ன இரகசியம் வேண்டி இருக்கு". இதை சொன்னது ஆலோசகர் அல்லாத வேறொருவர்.

பிறகு இரத்தம் எடுக்கப்பட்டது. அவ்வளவு தான் ஆலோசனை. டெஸ்ட் பாஸிடிவ் என்றால் என்ன, நெகடிவ் என்றால் என்ன என்பதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.எந்த வித ஆதரவான ஆலோசனையும் வழங்கப்படவில்லை.
"அவ்வளவு தானா வேறு ஏதாவது நீங்க சொல்லணுமா" என்று கேட்டேன். "வேற என்ன போய்ட்டு நாளைக்கு வாங்க...உங்க 'லக்' எப்படி இருக்குன்னு பார்க்கலாம்" என்றார். எத்தனை பொறுப்பில்லாத பேச்சு!!!. அருகில் இருந்தவர்.."க்யா ஆப் மதராசி ஹே கயா" என்றார். நான் ' ஆமாம்" என்று சொன்னதும், " தமிழ்நாட் மே எச்ஐவி ஜாதா பட்தா ஜாராஹாஹே" (தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது) . நான் ஒன்றும் பேசவில்லை.

இதற்குள் என் அலுவலக நண்பர்கள் பொறுமை இழந்து அங்கு வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். ஆலோசகர் அசடு வழிந்து " மேடத்தை பார்த்ததும் நினச்சேன், அப்படி இருக்காதுன்னு" என்று அந்தர் பல்டி அடித்தார்.

"எப்படி" இருக்காதுன்னு நினச்சீங்க? படிச்சவங்க படிக்காதவங்கன்னு இந்த நோய்க்கு பேதம் வேற இருக்கா?. ஆலோசகர், "இல்லை மேடம் இருந்தாலும்...பார்த்தா தெரியும் இல்லை?"

"இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்க கூடாதுங்குறது தானே நாம் முதலில் மனதில் வைத்துக் கொள்ளவேண்டியது. எப்படி இருந்தாலும் நீங்க நடந்துட்ட முறை சரியில்லையே. படித்தவர்களிடமே இப்படி நடந்துட்டா, படிக்காத பாமரர்களிடம் உங்களின் நடத்தை எப்படி இருக்கும்!! "

இல்ல மேடம்...தினமும் 100 பேர் வராங்க...அதுனால சில சமயம் இது மாதிரி ஆயிடுது. இப்படி பல நியாயங்களை சொல்லி தன் தரப்பு வாதங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

'Unconditional Postive Regard" என்று உளவியலில் சொல்வார்கள். இது தான் எந்த ஒரு ஆலோசகருக்கும் தாரக மந்திரம். அவரிடம் உதவி கேட்டு வருபவர்களின் மேல் நிபந்தனை இல்லாத மரியாதையும் non-judgemental ஆட்டிட்யூடும் தேவை. ஆலோசகர் மட்டுமல்ல மற்ற மருத்துவ ஊழியர்களும் இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏன், நாமே இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.


இந்த இடத்தில் நான் மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.
அலோசகர்கள் தரப்பு வாதங்களையும் நாம் ஒரேயடியாக ஒதுக்க முடியாது. முதுகலை பட்டதாரிகளான இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் 6 அல்லது 7 ஆயிரம் ரூபாய். அவர்களின் சமுதாய, குடும்ப பொறுப்புகளையும் அதிகாரிகள் நினைவில் கொள்ளவேண்டும். எச்ஐவி குறித்த எந்த ஒரு திட்டத்தையும் வகுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அடிப்படை. அதை சரிவர தொகுத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆலோசகர்களிடம் இருக்கிறது. அவர்கள் பணி புரியும் சூழல், அன்றாடம் சந்திக்க வேண்டிய மக்கள், தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய ரெஜிஸ்டர்கள் (அதுவே ஒரு பெரிய வேலை..அத்தனை ரெஜிஸ்டர்கள் இருக்கிறது), என பல பொறுப்புகள். பொறுப்புகள் அதிகமாகும் போது அதற்கேற்ற சன்மானத்தை எதிர்பார்ப்பது நியாயம் தானே. எது எப்படி இருந்தாலும் அவர்களின் செயலை இங்கு நியாயப்படுத்த முடியாது.

பாதிக்கப்பட்டவளாக நான் நடித்த அந்த 1 மணி நேரம் எனக்குள் ஓடின எண்ணங்களை இங்கு சொல்லி புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இது போல எதிர்கொள்ள வேண்டிய தருணங்கள் ஏராளம். ஆலோசனைக்காக வருவது முதல் தொடர்ந்து சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஒரு அனுபவம் காத்திருக்கும். வீட்டில், தொழில் புரியும் இடத்தில், பொதுவாழ்வில், நண்பர்கள் மத்தியில் என அவர்கள் பல எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வேறு எந்த நோய்க்கும் இல்லாத ஒன்றாக, இந்நோய் வாய்ப்பட்டவர்கள் சமுதாய, பொருளாதார, உளவியல் மற்றும் மருத்துவ பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் ஓரளவிற்காவது மாற்றம் வரவேண்டுமென்றால் கொள்கை மாற்றங்களுடன் எண்ணமாற்றங்களும் வரவேண்டும். சகமனிதன் சுதந்திரம் இவர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.


பாதிக்கப்பட்டவர்களின் சமுதாய வாழ்க்கையில், அவர்களின் ஒழுக்கம் மீதான பொறுப்பில்லா விமர்சனங்கள், கருத்துக்களாக கண்ணோட்டங்களாக இவர்கள் மீது விழுந்து, அவமரியாதையையும், தாழ்மையுணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 'பண்பு ', 'பண்பாடு' போன்ற வார்த்தைகளை பாலியல் தொடர்பான செயல்களுக்கு மட்டுமே உபயோகிக்காமல், சக மனிதனின் பால் காட்டும் மரியாதையிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கே தயங்கும் நாம் அதற்கான நியாயமான காரணங்களை மனதில் நிறுத்தியே அவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளலாம் அல்லவா?. ...ம்ம்ம்..

Friday, October 03, 2008

போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)

என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில் இந்த சமயத்தில் ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் சிலருக்கு சில மருத்துவ காரணங்களினாலும் (estrogen and progesteron குறைவினால்) உளவியல் காரணங்களினாலும் அதுவே மிகப் பெரிய மன அழுத்ததை கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் உண்மை. இந்த மன அழுத்தம் சில பெண்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டி விடும் என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

'போஸ்ட்பார்டம் ஸைக்கோசிஸ்' (Postpartum Psychosis) என்று அழைக்கப்படும் இந்த வகையான மன அழுத்தம் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?. பேறுகாலத்திற்குப் பின் சில பெண்களுக்கு சில பல காரணங்களினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது இரண்டு வகைப்படும்.

ஒன்று சாதாரண மன உளைச்சலுடன் ( postpartum depression) கூடிய மன அழுத்தம். மற்றொன்று, இந்த சாதாரண மன உளைச்சல் அதிகமாகி, அதன் விளைவாக ஏற்படும் போஸ்ட்பார்டம் ஸைக்காசிஸ் என்கிற மன நோய். இந்நோய் மகப்பேற்றிற்குப் பின், ஆயிரம் பெண்களில் ஒரு பெண்ணிற்கு ஏற்படுகிறது. இந்த மன நோயால் பாதிக்கப்படும் பெண்களில் ஐந்து சதவீதம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தலாவது சம்பவம் நடந்தது 1989ல். எங்கள் வீட்டு கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலை பார்த்த பெண், கட்டிட மேஸ்திரியின் ஆசை வார்த்தையில் மயங்கி, கர்பமாகி பின் கருவை கலைத்து விட்டார். இது நடந்த சில நாட்களிலேயே அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தது. கணவன் இந்தப் பெண்ணை தினக்கூலிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட, அது வரை அவள் பட்ட கஷ்டம் எல்லாம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சில நாட்களிலேயே கணவருக்கு இவரின் கடந்த கால வாழ்க்கை தெரிய வர, கர்பமாக இருந்தவள் மீது சந்தேகம் வந்து வயிற்றில் வளரும் குழந்தை தனது இல்லை என்று கூறி விட்டு அந்தப் பெண்ணை விட்டு விலகி விட்டார்.

குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், கணவனையும் எந்த விதத்திலும் சமாதானம் செய்ய முடியவில்லை என்ற கவலை எல்லாம் சேர்ந்து அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. குழந்தை பிறந்தவுடன் அவரால் குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தையை கவனிக்காமல் வெறுக்கத் தொடங்கிவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், உறவுக்காரர்களும் அவமானப் படுத்தும் படியாக பேச ஆரம்பித்தவுடன் மிகுந்த மன அழுத்திற்கு ஆளாகி 'போஸ்ட்பார்டம் சைக்காசிஸ்' என்ற மன நோயால் பாதிக்கப்பட்டார்.

கணவரின் அன்போ பிறந்த வீட்டின் போதுமான ஆதரவோ இல்லை. வீட்டில் உள்ளவர்களோ இவளுக்கு பேய் பிடித்து விட்டது, சூனியம் வைத்து விட்டார்கள் என்று கூறி மாயாஜால வித்தைகள் தான் செய்தார்களே ஒழிய அவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை கொடுக்கவில்லை. மன நோய் தீவிரமாகி, ஆறு மாதம் கழித்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்ற வாரம் நடந்த மற்றொரு சம்பவம். உறவுக்காரப் பெண் ஒருவர் சொந்த மாமனையே திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்ததும், பெற்றோர்கள் உட்பட பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். முன்னோர்களில் பெரும்பாலானோர் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொண்டதால், பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி தடுத்துப் பார்த்தார்கள், ஆனால் முடியவில்லை.

முதல் குழந்தை ஆரோக்கியமாகவே பிறந்தது. நான்கு மாதத்திற்கு முன்னர் அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை அரோக்கியமாக இல்லை. குழந்தையின் உடலில் பல கோளாறுகள். உறவில் திருமணம் செய்து கொண்டது (Inbreeding) குழந்தையின் உடல் நிலைக்கு ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவர்கள் கூறியதும் இந்தப் பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

வீட்டில் இருந்தவர்கள் அதே தாயத்தும், மந்திரிப்பதும் என இருந்திருக்கிறார்களே தவிர ஒரு மனநல நிபுனரிடம் ஆலோசனை கேட்கவில்லை. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப் பட வேண்டிய நிலையிலும், நோயின் தீவிரம் தெரியவில்லை. சரியான ஆலோசனை இல்லாமல், மன உளைச்சலை பகிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப ஒரே எண்ணங்களை மனதில் வளர்த்து, சென்ற வாரம் அந்த பெண், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததும் ஆடிப்போய் விட்டேன். தில்லியில் இருந்து ஒரு வருடம் முன்பு தான் கோவைக்கு இடம் மாறினார்.

இந்நோய்க்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் சில காரணங்கள்:
1)முதன்மை காரணம் பேறு காலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம்.
2)குழந்தைப் பிறப்பிற்கு பின் பெண்களுக்கு தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படும் மன அழுத்தம்.
3) தான் தாயாக இருக்க தகுதியானவரா என்ற பயம்.
4) குழந்தை பிறந்த பின் ஏற்படும் செலவுகளை நினைத்து பயம்.
5) குழந்தையை பார்த்துக் கொள்வதினால் ஏற்படும் சலிப்பு, உடல் சோர்வு.

இந்த நோயினால் பாதிக்கப் பட்ட பெண்கள் பலர் மேலே கூறிய எண்ணங்களை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது.

கர்ப்பிணி / பிரசவித்த பெண்களின் மன அழுத்தம் என்பது இன்றும் உணரப்படாத ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வு படித்தவர்களிடையே கூட மிகக் குறைவு தான். கர்பகாலத்தில் சாதாரண மன அழுத்தம் 16%ல் இருந்து 20% பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பிருந்தாலும் அதற்கு தேவையான ஆலோசனை வழங்கப் படுவதில்லை. பெண்களும் தங்களுக்குள் ஏற்படும் மன உளைச்சலை பகிர்ந்து கொள்வதில்லை.

மன நல நிபுணரை ஆலோசனைக்காக அணுகுவது என்பது இன்றும் நம்மிடையே ஒரு வித தயக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தின் பார்வை என்கிற போலியான கட்டமைப்புக்காய் தாங்களே தங்களின் மீது தேவையற்ற சுய தடைகளை விதித்துக் கொண்டு அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் சரியான தீர்வுகாணாமல், பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் மூட நம்பிக்கைகளை கட்டி அழுது கொண்டு இருக்கிறோம். இந்த கொடுமையை எங்கே போய் சொல்லி அழுவது.....

இதைப்படிக்கும் உங்களில் சிலரேனும் உங்களின் தங்கையோ, தமக்கையோ, தாரமோ இல்லை ஏன் உங்களின் சுற்றத்தில் ஒரு சக பெண்ணுக்கு இத்தகைய ஒரு நிலை வருமாயின் அங்கே தேவைப்படும் விழிப்புணர்வினை உருவாக்கிட உதவுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோளும், இந்த பதிவின் நோக்கமும்.

டாக்டரம்மாவுக்கு ஒரு வேண்டுகோள் - நான் சொல்லி இருக்கிற தகவல்கள் எந்த காலத்துலயோ பாடத்துல படிச்சது.... ஏதாவது தப்பு இருந்தாலோ, சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்கள் விட்டுப் போயிருந்தாலோ நீங்க சொல்லுங்க டாக்டரம்மா... நீங்க இன்னும் தெளிவா சொல்லலாம்..
மேலும் படிக்க...

Tuesday, September 30, 2008

டாக்டரம்மாவின் பதிவுக்கு லிங்க் குடுக்க இந்த பதிவு....

தமிழ்மணம் நமக்கு வேண்டிய நேரத்துல தகராறு பண்ணும்.... இருக்குற வேலைகளுக்கு நடுவுல அவசியமான ஒரு விழிப்புணர்வு பதிவு போட்ட டாக்டரம்மாவால அதை தமிழ்மணத்துல இணைக்க முடியலை...:-(

சரி இப்பவாவது நாம உறுப்படியான ஒரு காரியம் பண்ணலாம்னு அவங்க பதிவுக்கு லிங்க் குடுக்க இந்த பதிவு..

உடலுறுப்புகள் தானம் பற்றிய தெகிக்காட்டானின் பதிவுல எழுந்த கேள்விகளுக்கு அருமையா, எளிமையா ஒரு பதிவு போட்டிருக்காங்க...

டாக்டரம்மாவின் பதிவு இதோ
http://delphine-victoria.blogspot.com/2008/09/blog-post.html

Monday, August 11, 2008

பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)

தாய்மை எந்த ரூபத்திலும் எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இதோ கீழே இருக்கும் ஒரு கலந்துரையாடலே சான்று.

தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .

கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மரணப்படுக்கையில்.. அவரைப் பார்த்துக் கொள்வது அவருடைய பத்து வயது மகள்.


சம்பந்தப் பட்ட குழந்தையின் நலன் கருதி, பெயரோ, அடையாளமோ கொடுக்கப்படவில்லை.


எத்தன நாளா அம்மா இப்படி இருக்காங்க?
ஒரு வருஷமா அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவங்க ஒரு ஹோட்டல்ல வேலை செய்துட்டு இருந்தாங்க. அங்க யாருடனோ ஏற்பட்ட தொடர்பால் தங்கச்சி பாப்பா பிறந்தா. அப்ப இருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லை. அம்மாக்கு எய்ட்ஸ் வியாதின்னு சொன்னாங்க. அம்மா ரொம்ப நாளா எங்க கிட்ட சொல்லலை...லேட்டா தான் வெளியே சொன்னாங்க.. முதல்ல எல்லாம் ரொம்ப அழுவேன். இப்ப எனக்கு தைரியம் வந்துடுச்சு. சொந்தக்காரர் ஒருத்தர் தைரியமா இருக்க சொன்னதுனால அம்மாவ நல்லா பார்த்துக்குறேன்.

அம்மாக்கு என்ன எல்லாம் நீ செய்வே.. எப்படி பார்த்துப்பே?
அம்மா உடம்ப தொடச்சி விடனும். வாயில் நீர் வழிஞ்சுட்டே இருக்கும். அதை தொடர்ந்து தொடைக்கனும். துணி மாத்தி விடனும். தினமும் படுக்கை மாற்றனும். பவுடர் போடனும். அவங்க டாய்லெட் போனா கழுவி விடனும்.

உனக்கு இது எல்லாம் செய்ய கஷ்டமா இல்லையா?
( நம் கண்களுக்குள் ஊடுறுவிப் பார்த்துட்டு)

என் அம்மாதானே, நான் தானே செய்யனும்...

அம்மாவ மட்டும் இல்லை.... தங்கச்சி பாப்பாவையும் நான் தான் பார்த்துப்பேன். அவ ரொம்ப குறும்பு ( சிரித்துக் கொண்டே).. சில சமயம் அம்மாவ கவனிச்சுட்டு இருக்கும் போது அவளை கவனிக்கலைன்னு அழுவா... கோவம் வந்துடும் அவளுக்கு..(ஹா ஹா என்று சிரிப்பு)

அப்பா?

அவர் எங்கள விட்டுட்டு போய் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார்

அம்மா இப்படி பண்ணிட்டாங்களேன்னு உனக்கு கோவம் வந்திருக்கா?
இல்லை..ஆனா ரொம்ப வருத்தமா இருக்கு... அம்மாவ முழுவதும் குணப்படுத்த முடியலைன்னு.. எத்தன நாளைக்கு அம்மா இப்படியே இருப்பாங்கன்னு தெரியலையே..ஆனா அம்மா தான் எனக்கு விஷம் குடு விஷம் குடுன்னு கேட்டுட்டே இருப்பாங்க....நான் எப்படி குடுப்பேன்..நான் அம்மாவ நல்லா பார்த்துப்பேன்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே தங்கச்சிப்பாப்பா துறு துறு என்று இவள் பக்கம் தவழ்ந்து வர..அவளை அள்ளிக் கொள்கிறாள்..

குட்டிப்பாப்பாவ தூக்கணும், பார்த்துக்கணும், அதுனால உனக்கு களைப்பா இல்லையா?

(சிரித்துக்கொண்டே வெகுளியாக)..
கைவலிச்சா அவள அடுத்த கைக்கு மாத்திக்குவேன்.. ஆனா அவ ரொம்ப சேட்டை..பாருங்க என் முடிய பிடிச்சு இழுக்கறா. என் கன்னத்தை கிள்ளி வச்சுட்டே இருப்பா..நேத்து என்னை பளார்னு அறஞ்சுட்டா.. ஆனா குட்டிப்பாப்பாதானே அவளுக்கு தெரியாதில்ல.. ரொம்ப குறும்பு பண்ணா, " பேசாம இரு..இல்லன்னா பேச மாட்டேன்னு சொல்லுவேனா..அப்புறம் சிரிப்பா..பேசாம இருப்பா". (குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே)

பாப்பாவ கீழ போட்டற மாட்டியே..?..நல்லா பிடிச்சுக்கோ
அதெல்லாம் போடமாட்டேன்..கெட்டியா பிடிச்சுப்பேன்..இப்படி (கெட்டியாக நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்).

(குட்டிப்பாப்பா இந்த பத்து வயது சிறுமியை அம்மா என்று தான் அழைக்கிறாள்).

குட்டிப்பாப்பா உன்னை அம்மான்னு கூப்பிடறாளே?.. உங்க வீட்ல உங்க அம்மா, பாட்டி எல்லாம் இருக்காங்க..அவங்களையும் அம்மான்னு தான் கூப்பிடுவாளா?
இல்லை...என்னை மட்டும் தான் அம்மான்னு கூப்பிடிவா...ஏன்னு தெரியலை.. ஆனா அவ அப்படி கூப்பிடும் போது எனக்கு நல்லா இருக்கும் ... என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவா என் குட்டி (என்று மீண்டும் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கிறாள்)

நீ ஸ்கூலுக்கு போறதில்லையா?
நான் ஸ்கூலுக்கு போனா அம்மாவையும், குட்டிப் பாப்பாவையும் யாரு பார்த்துப்பா?

தங்கச்சி பாப்பாவ யாராவது எடுத்து வளர்க்க முன் வந்தா நீ சரி சொல்லுவியா?
அவ நல்லா படிக்கனும்.. எனக்கு அவள நல்லா பார்த்துக்கனும்னு ஆசை.. ஆனா நான் என்ன வேலை பார்க்குறதுன்னு தெரியலை... அவ வசதியான இடத்துக்கு போனா சந்தோஷம் தான்.. ஆனா நான் எப்படி அவள விட்டுட்டு இருப்பேன்...(மிகுந்த சோகத்துடன்)

உனக்கு எய்ட்ஸ் பத்தி என்ன தெரியும்?
(கைகள் இரண்டையும் இருக்கமாக கட்டிக் கொண்டு)

ஐயோ யாருக்கும் அது வரக்கூடாது.

எய்ட்ஸ் எப்படி வருதுன்னு உனக்கு தெரியுமா?
ஆணுறை உபயோகிச்சா வராதாம்.

உனக்கு யாரு சொன்னா ?
ஒரு விளம்பரத்துல படிச்சேன்.. எச்ஐவி ல் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுறை உபயோகிங்கள் என்று. (ம்ம்ம்.. என்ன சொல்ல)

அம்மா மாதிரி எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க கிட்ட நீ என்ன சொல்லுவே?
அம்மா மாதிரி லேட்டா சொன்னா, என் மாதிரி குழந்தைங்க என்ன பண்ணுவாங்க...அதுனால தெரிஞ்ச உடனே டாக்டர் கிட்ட போனா கஷ்டப்பட வேண்டியது இல்லை...லேட்டா சொல்லி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளால தாங்க முடியுமா?..வீட்ல இருக்குறவுங்களும் அவங்கள நல்லா பார்த்துக்கனும் ( இதை விட ஒரு சிறந்த விழிப்புணர்வு செய்தி இருக்க முடியுமா..ம்ம்ம்)

நீ ஏதாவது கேட்க விரும்பறியா?
அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எங்க இருப்பேன்?...என்ன பண்ண? ( மனதை பிழியவில்லை?..ம்ம்ம்)

நீ எங்க போக விரும்பறே?
தெரியலை....என்ன என்னமோ சொல்றாங்க... தனியா இருந்தா யாராவது தப்பா நடந்துப்பாங்களாம்...கடத்திட்டுப் போய் வித்துடுவாங்களாம்...ரேப் பண்ணிடுவாங்களாம். (கடவுளே!!!)

நீ சாமிய பார்த்தா என்ன கேட்பே?
எல்லாரும் எந்த நோயும் இல்லாம ஆரோக்கியமா இருக்கனும்.

உனக்காக ஒன்னும் கேட்க மாட்டியா?
கண்டிப்பா கேட்பேன்..என் அம்மாக்கு சீக்கிறம் நல்லாகனும்.. குட்டிப்பாப்பா நல்லா இருக்கனும்...( சுயநலம் இல்லாத இந்த அன்பான மனதை வணங்கத் தோன்றுகிறதல்லவா?ம்ம்)

தற்பொழுது அம்மா மருத்துவமனையில்..
அம்மாவ பார்க்க போறியா? ..
நான் கூப்டுட்டு போறேன்..
அம்மாவ பார்க்கனும் போல இருக்கு.. ஆனா நான் போன அப்புறம் ஏதாவது.......................................... (குட்டிப்பாப்பாவை அனைத்துக் கொண்டு அழுகிறாள்..)

இது போல எத்தனையோ குழந்தைகள் படித்து, விளையாடி மகிழ வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.


இயலாமையை நினைத்து நினைத்துத் துவண்டு விடுகிறது என் மனம்.


எத்தனையோ திட்டங்கள், கோடி கோடியாய் பணம் எச்ஐவி தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இத்திட்டங்களினால் பயன் அடைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களின் எண்ணிகையை விட திட்டம் தீட்டுபவர்களுக்கும், அதை செயல் படுத்துவர்களுக்கும் செலவு செய்யும் பணம் அதைவிட அதிகம்.


மறுபடியும் மறுபடியும் மரணத்தைப் பார்க்கும்போது வேதனையின் கடுமை குறைவதைப்போல, சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவருக்கு எல்லாமே பழகிப் போவதைப் போலத்தான் இந்தச் சிறுமியின் கதையும். அதிகாரிகளுக்கு இது மற்றொரு 'கேஸ்'.


இந்தப் பதிவினை எழுதி முடித்த அடுத்த நாள் என் தோழி ஒருத்தி கோவையில் இருந்து தொலைபேசினாள். ஒரே பெண்...நல்ல வசதியான குடும்பம்...அந்த உரையாடலையும் படியுங்கள்.


நான் - ரொம்ப நாளா பேச முடியலை .. எப்படி இருக்கே?


தோழி- நல்லா இருக்கேன்...நானும் கட்டட வேலைய பார்த்துகறதுனால பேச முடியலை.


நான் - ஓ மறுபடியும் வீடு கட்டறியா?


தோழி- இல்லை.... அப்பா படுத்த படுக்கை ஆகிட்டார். எல்லாமே பெட்ல தான். வீட்டுக்குள்ள ஸ்மெல் வருது. இன்பெக்ஷன் ஆயிட்டா என்ன பண்ண. அதுனால தான் ஒரு அவுட் ஹவுஸ் கட்டினேன். அப்பா அங்க தான் இருக்கார்.


பெரிய வீடு, நான்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி தந்தையை பார்த்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வசதி...அவர் சேர்த்த சொத்துதானே.... இயற்கையாக இருக்க வேண்டிய பாசமும், கடமை உணர்வும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது. எந்த சூழ்நிலை மனிதர்களை இப்படி மாற்றுகிறது? நடைமுறைக்கு ஒத்துவராத உணர்வுகளா இவை..?...என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.


நாம் செய்யும் செயல்களுக்கு மனதிற்குள்ளேயே நியாயம் கற்பித்து நம்மையே சமாதானம் செய்து கொள்வதை தவிர நாம் வேறு என்ன செய்கிறோம்.


இந்தக் குழந்தை நீடுழி வாழ வாழத்தி வணங்குவோம்

Sunday, August 03, 2008

எனக்கு A ன்னா AIDS தான்...:-))

வணக்கம் நண்பர்களே....நல்லா இருக்கீங்களா...


நானே என் பிளாக்குள்ள போய் பல மாதங்கள் ஆச்சு...:-)).

''ஏ ஃபார்'' டேக் எழுத சொல்லி லட்சுமி ஆர்டர் போட்டுறுக்காங்க... இதுக்கு முன்னால இது போல பல டேக்குகள் சுத்தி வந்தப்போ அதையும் இதையும் சொல்லி தப்பிச்சுட்டு இருந்தேன்... இந்த தடவை முத்தம்மணி இழுத்து விட்டுட்டாங்க...

சரி நாம அப்பப்ப மேய்ஞ்சுட்டு இருக்குற நில வலைத்தளங்களை சொல்லலாம்னு வந்திருக்கேன்...இதுல உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச வலைத்தளங்கள் இருக்கலாம்...கண்டுக்காதீங்க..நமக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்...

முதல்ல நம்ம துறைல இருந்தே ஆரம்பிக்கலாம்.

A - http://www.aidsinfo.nih.gov/ -எச்ஐவி பற்றிய தகவல்களை பெற
www.naco.nic.in - இந்தியாவில் எச்ஐவி தகவல் மையங்கள், பரிசோதனை மையங்கள் பற்றிய தகவல்களை அறிய.

B- http://buydominica.com/diabetes/diabeticfood.php -சக்கரை சத்து அதிகமாக உள்ளவர்களுக்கு சில இயற்கை மருத்துவம்.

http://www.betterphoto.com/gallery/dynoGall2.asp?catID=296- அழகான குழந்தைகள்/ பூக்கள் படங்கள்... மனசை லேசாக்க நான் அடிக்கடி போகும் தளம்... என் ஃபேவரிட் தளம்..:-))

C - http://www.chandamama.com/ - குழந்தைகளுக்கான கதைகள், பொது அறிவு, பயிற்சி போன்றவை. இதில் படங்களுடன் இராமாயணம் தமிழில்.


http://currentvacancy.blogspot.com/ - அரசு பணிகளில் காலி இடங்கள்/ walk-interview - தெரிந்தவர்களுக்கு சொல்லலாம். மிகவும் உபயோகமான தளம்

D-http://www.diethealthclub.com/- சத்தான உணவு வகைகள். ஒவ்வொரு நோய்க்கும் பிரத்தேயேக உணவு முறை.

E- http://www.englishpage.com/- ஆங்கில இலக்கணம். இந்த தளத்தில் இலக்கணப் பயிற்சியுடன் கூடிய சில பாடங்களைக் காணலாம்.

F- http://www.fatfreekitchen.com/ - அவசர சமையல் மற்றும் Fat free receipies

G - http://goidirectory.nic.in/ - ஒவ்வொரு துறையிலும் அரசு சார்ந்த நிறுவணங்கள், மற்றும் அரசு இனையதளங்கள்.

H-http://www.health.harvard.edu/press_releases/importance_of_sleep_and_health.htm
தூக்கம் எவ்வளவு தேவைங்கிறதும், சரியான தூக்கம் இல்லைன்னா என்ன பிரச்சனைகள் வரும்னு பாருங்க.

I - http://idioms.thefreedictionary.com/ - இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் அதிகமாக இந்த இடியம்ஸ் உபயோகிப்பதை பார்க்கலாம். இது ஒரு பேஷன். சிலர் பேசும் போது என்ன சொல்ல வராங்கன்னு தெரியாம முழிக்க வேண்டியிருக்கிறது . இதில பாருங்க அந்த சொற்றொடர்களும் அதற்கான விளக்கமும் இருக்கும். ஆங்கிலத்தில் அதிகமாக பேச வேண்டியவர்களுக்கு இது உபயோமாக இருக்கும்.

I - http://indiacollegefinder.com/ - இந்தியாவில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் பற்றிய தகவல்கள், நுழைவுத்தேர்வு பற்றிய தகவல்கள். மிகவும் உபயோகமான தளம்.

J - http://www.jazzles.com/html/freempd.html - குட்டீஸ்க்கு ரைம்ஸ் போட்டு காட்டுங்க - அடியோ/வீடியோ - இதில் முக்கியமாக மீன் பாடல்கள்..அருமை

K- http://www.kidsknowit.com/educational-songs/index.php - கணக்கு, உயிரியல், வேதியல் மற்றும் வாழ்வியல் பாடங்கள் பாடல்கள் வடிவில்.

L: http://www.learnenglish.org.uk/ - ஆங்கிலம் பேசவும் எழுதவும் எளிதான பயிற்சிகள்.

M - http://www.medindia.net/medicalwebsite/index.asp : மருத்துவம் சார்ந்த அனைத்து தகவல்களும், வெவ்வேறு வலைத்தளங்கள் பற்றிய தகவல்கள்.

N- http://www.nlm.nih.gov/medlineplus/menshealth.html - ஆண்ளுக்கான சில மருத்துவ தகவல்கள், மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள்.

O - http://onlinebooks.library.upenn.edu/ - சில நல்ல புத்தங்கள் இலவசமாக.

P- http://www.2dplay.com/cricket/cricket-play.htm - பொழுது போக்கிற்கு கிரிக்கெட்.

Q-http://www.quickiqtest.net/ - உங்க IQ டெஸ்ட் பண்ணுங்களேன்.

R - http://ricedish.hosuronline.com/ - சாத வகைகள்

S - http://shyamradio.com/ - ஆன் லைன் ரேடியோ - தடையில்லாமல் பாட்டு கேட்க.

T - http://tourism.nic.in/ - சுற்றுலா பற்றிய தகவல்கள்..இதில் மற்ற மாநில சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை பெறலாம். தங்கும் இடங்களுக்கு ஆன்லைன் புக்கிங்கும் உண்டு.

U - http://www.usefultrivia.com/ - பொது அறிவு கேள்விகள்/ பயிற்சிகள்.

V - http://www.vidyapatha.com/distance_edu/websitelist.php - அஞ்சல் வழி கல்வி பற்றிய தகவல்கள்.

W - http://www.womenshealthguide.net/indian-diet/ - பெண்களின் உடல்நலம்

http://www.weather.com/ - தட்ப வெட்ப நிலையை அறிய.

X-Y - Z - என்னைக்கும் நாங்க கேள்வித்தாள்ல முழுசா முடிச்சதா சரித்திரம் இல்லை...இதுக்கு மேல நமக்கு மூளை இல்லை....அம்புட்டுதான் யோசிச்சு யோசிச்சு பார்த்து ஒன்னும் நியாகம் வரலை. சோம்பேறித்தனும் தான்.

நம்ம Y for Yatchan னுக்கு இந்த வேலை ரொம்ப சுலபம்... ஐயா வாங்க உங்க லிஸ்ட போடுங்க.

Friday, April 11, 2008

தலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்


திரைப்படங்களில் மட்டுமே துப்பாக்கி சத்தத்தை கேட்ட காலம் போய்,தில்லி வாழ் மக்கள் தற்பொழுது அதை தங்களின் வீட்டின் அருகிலேயே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நகரமயமாக்கல் இன்று எப்பேற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு நோய்டாவிலும், குர்கானிலும் நடக்கும் குற்றங்களே எடுத்துக்காட்டு.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எங்கள் கல்லூரிக்கு எதிரே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை வழி மறித்து அவர் ஓட்டி வந்த காரை பறிக்க முயற்சி செய்து, பின்பு முடியாமல் போகவே அவரை அடிவயிற்றில் சுட்டு விட்டு ஓடி விட்டனர். இது நடந்து அரைமணியில் இந்தப் பகுதிக்கு வெகு அருகிலேயே, 27 வயது பெண் ஒருவரிடம் எதற்காகவோ வாக்குவாதம் செய்து பின் அவரை சுட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவங்கள் நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன் மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்து இருக்கிறார்கள். இதை காவல் துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் சம்பவம் நடந்த உடனேயே காவல் துறையினர் எச்சரிக்கையாக இருந்து இருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாம்.

இதைவிட கொடுமை சுடப்பட்ட ராணுவ அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட வழியில் சென்றவர்களிடன் உதவி கேட்டு இருக்கிறார். ஆனால் எந்த மனிதப் பிறவியும் அவருக்கு உதவிக் கரம் நீட்டவில்லை. பிறகு அந்த நிலையிலேயே அவர் காரை ஓட்டிக் கொண்டு போய் வீட்டை அடைந்து, வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அடிவயிற்றில் குண்டு பாய்ந்தும், உடல் பருமனாக இருந்ததால் அவர் பிழைத்துக் கொண்டார். இதை அவரே சர்தார்ஜிகளுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு " என் தொப்பை என்னை காப்பாற்றி விட்டது " என்று சொல்லி இருக்கிறார்.

குண்டுகாயம் பட்ட சர்தார்ஜியும், கொல்லப்பட்ட பெண்ணும் வழி மறித்தவர்களிடம் போராடியதால் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் ரோந்தில் இருக்க வேண்டிய காவல் துறை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.


அதிக பலன்களைத் தராத விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்த இந்த பகுதி மக்களிடம், இன்று கோடி கோடியாய் பணம். அதி வேக தொழில் வளர்ச்சிக்கும், விண்ணுயர்ந்த கோபுரங்களாய் நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்களுக்கும் இந்த விவசாய நிலங்கள் இன்று விலை போய், இவர்களை திடீர் கோடீஸ்வரர்களாக்கியுள்ளது.

இதில் இவர்களே சிலர் நில தரகர்களாகவும் இருப்பதால், தரகு தொழிலில் இருக்கும் பலத்த போட்டியினால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று, துப்பாக்கியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ள ஒருவரிடம் இருக்க வேண்டிய உரிமம் இன்று இங்கு சர்வ சாதாரணமாக கிடைத்து விடுகிறது. இதனால் தில்லியை சுற்றி உள்ள பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் இன்று வேகமாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் குர்கான் பள்ளியில் தங்களுடன் படித்த மாணவனை ஒரு சின்ன பிரச்சனைக்காக சுட்டுக் கொன்றது குர்கான் தரகர்களின் குழந்தைகள் தான்.