Friday, April 11, 2008

தலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்


திரைப்படங்களில் மட்டுமே துப்பாக்கி சத்தத்தை கேட்ட காலம் போய்,தில்லி வாழ் மக்கள் தற்பொழுது அதை தங்களின் வீட்டின் அருகிலேயே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நகரமயமாக்கல் இன்று எப்பேற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு நோய்டாவிலும், குர்கானிலும் நடக்கும் குற்றங்களே எடுத்துக்காட்டு.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எங்கள் கல்லூரிக்கு எதிரே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை வழி மறித்து அவர் ஓட்டி வந்த காரை பறிக்க முயற்சி செய்து, பின்பு முடியாமல் போகவே அவரை அடிவயிற்றில் சுட்டு விட்டு ஓடி விட்டனர். இது நடந்து அரைமணியில் இந்தப் பகுதிக்கு வெகு அருகிலேயே, 27 வயது பெண் ஒருவரிடம் எதற்காகவோ வாக்குவாதம் செய்து பின் அவரை சுட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவங்கள் நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன் மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்து இருக்கிறார்கள். இதை காவல் துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் சம்பவம் நடந்த உடனேயே காவல் துறையினர் எச்சரிக்கையாக இருந்து இருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாம்.

இதைவிட கொடுமை சுடப்பட்ட ராணுவ அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட வழியில் சென்றவர்களிடன் உதவி கேட்டு இருக்கிறார். ஆனால் எந்த மனிதப் பிறவியும் அவருக்கு உதவிக் கரம் நீட்டவில்லை. பிறகு அந்த நிலையிலேயே அவர் காரை ஓட்டிக் கொண்டு போய் வீட்டை அடைந்து, வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அடிவயிற்றில் குண்டு பாய்ந்தும், உடல் பருமனாக இருந்ததால் அவர் பிழைத்துக் கொண்டார். இதை அவரே சர்தார்ஜிகளுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு " என் தொப்பை என்னை காப்பாற்றி விட்டது " என்று சொல்லி இருக்கிறார்.

குண்டுகாயம் பட்ட சர்தார்ஜியும், கொல்லப்பட்ட பெண்ணும் வழி மறித்தவர்களிடம் போராடியதால் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் ரோந்தில் இருக்க வேண்டிய காவல் துறை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.


அதிக பலன்களைத் தராத விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்த இந்த பகுதி மக்களிடம், இன்று கோடி கோடியாய் பணம். அதி வேக தொழில் வளர்ச்சிக்கும், விண்ணுயர்ந்த கோபுரங்களாய் நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்களுக்கும் இந்த விவசாய நிலங்கள் இன்று விலை போய், இவர்களை திடீர் கோடீஸ்வரர்களாக்கியுள்ளது.

இதில் இவர்களே சிலர் நில தரகர்களாகவும் இருப்பதால், தரகு தொழிலில் இருக்கும் பலத்த போட்டியினால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று, துப்பாக்கியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ள ஒருவரிடம் இருக்க வேண்டிய உரிமம் இன்று இங்கு சர்வ சாதாரணமாக கிடைத்து விடுகிறது. இதனால் தில்லியை சுற்றி உள்ள பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் இன்று வேகமாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் குர்கான் பள்ளியில் தங்களுடன் படித்த மாணவனை ஒரு சின்ன பிரச்சனைக்காக சுட்டுக் கொன்றது குர்கான் தரகர்களின் குழந்தைகள் தான்.

Thursday, February 21, 2008

காதலுக்கு காணிக்கை-மயக்கமென்ன

படம்: வசந்த மாளிகை
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.

வாணிஸ்ரீ என்றாலே நினனவுக்கு வரும் இரு படங்கள், வாணி ராணி மற்றும் வசந்தமாளிகை. மிக அழகாக இருப்பார் இந்தப் படத்தில். இந்தப் பாடலில் மாளிகையும், அவரது உடையும், முகத்தில் காட்டும் உணர்வுகளும், ம்ம்ம்..ரசியுங்கள்

ஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன, அன்பு காணிக்கைதான் கண்ணே


பெண்:கற்பனையில் வரும் கதைகளிலேநான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே, நினைத்ததில்லை கண்ணா

ஆண்:தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்தேவதை போலே நீயாட

பெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட

பெண்:கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)

ஆண்: ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூசை செய்து வர

பெண்:ஓடி வரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

ஆண்:மல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட

பெண்:வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்தவண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்துமது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)



Monday, February 18, 2008

ஆலோலம் பாடும் பச்சைக் கிளிகள்..

படம்: பிராப்தம்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி

நாயகனுக்கும் நாயகிக்கும் நட்பும் இல்லாத காதலும் இல்லாமல், ஒருவரின் மேல் ஒருவருக்கு மரியாதை. நாயகி பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஓடக்காரனான நாயகன் பேச்சு வழக்கில் சொல்லித்தரும் பாட்டு.

நடிகர் திலத்திற்கும் நடிகையர் திலத்திற்குமே உண்டான பிசிரில்லாத நடிப்புடன் கூடிய பாடல் .
எனக்கு பிடித்த வரிகள்....

//தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக //
//பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில் பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக //

பாடலைக் கேட்டால், நாமும் ஓடத்தில் போவதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் கவிதை வரிகளும் இசையும்.

டி.எம்.எஸ்:ம்ம்ம் ஹம் சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து,
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
டி.எம்.எஸ்:ம்ஹம், காற்று இல்லே காத்து
சுசீலா :தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
சுசீலா :அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
டி.எம்.எஸ் & சுசீலா: சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:செவ்வாழைத் தோட்டமும், தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சுசீலா :தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
டி.எம்.எஸ் & சுசீலா: ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு.
எம்.எஸ்: ஓஓஓஓஓஓ
சுசீலா : ஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்:பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
சுசீலா : பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக
டி.எம்.எஸ் & சுசீலா:சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு.
எம்.எஸ்:நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
டி.எம்.எஸ் & சுசீலா:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும், பூவாச்சும் வருமென்று, மீனாட்சி சொன்னதும் நமக்காக மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்தும்

Tuesday, February 12, 2008

வலிகளை பகிர்தலின் அவசியம்

உடன்கட்டை ஏறியவளே பதிவிரதையாகவும், அவளுக்கே மோட்சத்திற்கான டிக்கெட் என்கிற கப்ஸாவெல்லாம் இன்றைக்கு எடுபடாதுதான்.ஆனால் கணவனை இழந்த பெண்கள் மீதான சமூகத்தின் எதிர்வினைகள் இன்றைக்கும் அதிர்ச்சியளிப்பதாகவும், ஆத்திரமூட்டுவதாகவுமே இருக்கிறது.

நான் பார்த்தவரையில் தென்னிந்தியாவை விட இங்கே வடக்கில்தான் இந்த அவலம் அதிகமாய் இருக்கிறது.எல்லா மட்டங்களில் இருப்பதாக கூறமுடியாவிட்டாலும், பாமர மக்களிடையே மிகுதியாக காணமுடிகிறது

இந்துக்களின் புண்ணிய பூமியாக கருதப்படும், மதுரா, பிருந்தாவனம், வாரணாசி ஆகிய இடங்களில் மட்டும் 20,000த்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள், தங்கள் உறவுகளால் ஒதுக்கப்பட்டு இங்குள்ள கோவில்களிலும் ஆசிரமங்களிலும் அரை வயிறு சோற்றிற்காக தஞ்சமடைந்திருக்கின்றனர். தென்னிந்தியாவில் இத்தகைய நிலமை இல்லை என்று தான் நினைக்கிறேன்.

மேற்குவங்கம்,பீஹார் போன்ற மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் இருக்க வேண்டிய இடம் பிருந்தாவனம் அல்லது மதுராதான் என்று காலங்காலமாய் வேரூன்றியிருக்கும் சிந்தனை போக்கு, சமுதாய சட்டமாய் மாறி இந்த அபலை பெண்கள், வேறு வழியின்றி அவர்களாகவே இந்த சன்னியாசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.


இந்த பெண்களில் பெரும்பாலானோர் கோவில்களில் பஜனை பாட்டுக்கள் பாடி அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்கள் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சுய சார்பில்லாத பெண்களே பெரிதும் இத்தகைய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பஜனைப் பாடல்கள் பாட கூடியிருக்கும் பெண்கள்

பெரும்பாலான இல்லங்கள் சில உள்ளூர் தொழில் அதிபர்களின் சொற்ப ஆதரவில் நடத்தப் பட்டு வருகிறது. ஆதரவற்றோர் இல்லங்களில் தஞ்சமடைந்திருக்கும் இப் பெண்கள், இங்கு வந்த பிறகாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்றால், ம்ம்ம்ம்..அதுவும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் பெண்களின் எண்ணிக்கையால் அத்தனை பேருக்கும் இருக்க இல்லங்களிலும் இடம் இல்லை.

பிருந்தாவனத்திலும், மதுராவிலும் உள்ள இது போன்ற இல்லங்களிலும், கோவில்களிலும் வாழும் பெண்களுக்கு (17 வயது இளம் பெண் முதல் 80 வயது பாட்டி வரை) ஏற்படும் பாலியல் ரீதியான கொடுமைகள்... ஹ்ம்ம்.. என்ன சொல்ல... இல்லத்தை நடத்த பணம் தேவை படுவதால் இந்தப் பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். மேலும், மேலிடத்து 'ஆதரவு' வேண்டும் என்றால், கோவில் பண்டிதர், லோக்கல் போலீஸ், அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல் வாதிகளையும் திருப்திப் படுத்த வேண்டும்.

ஒரு வேளை இந்தப் பெண்கள் கர்ப்பம் அடைந்து விட்டால் பாதுகாப்பான முறையில் கருவை கலைக்க இவர்களிடம் வசதியில்லை. மருத்துவச்சி யிடமோ, நாட்டு மருத்துவரிடமோ தான் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், கைனகாலஜிகல் பிரச்சனைகள் மற்றும் பால்வினை நோய் போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம், இவர்களில் பலர் எச்ஐவி ஆல் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

கில்ட் ஆஃப் சர்வீஸ் நடத்தி வரும் இல்லத்தைப் போல ஒரு சில இல்லங்களே மனித நேயத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் வழி வழியாக வரும் 'வெள்ளை சேலை' கலாச்சாரம் இங்கு இல்லை. இங்கு பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமாணத்தில் இந்த இல்லம் நடந்தப் படுகிறது. பெரும்பாலும் வயதானவர்களே இருப்பத்தால், இவர்களைப் பார்த்துக்கொள்ள, இவர்களில் படித்தவர்களுக்கு, செவிலியர் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகிறது. இவர்கள் மற்ற இல்லங்களில் இருக்கும் வயதான பெண்மணிகளுக்கு முடியாத போது கவனித்துக் கொள்கிறார்கள்.



இந்த ஆசிரமத்தை நிர்வாகித்து வரும் மோகினி கிரி ஆசரமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன்.

இங்கு நடக்கும் அவலங்களை படமாக தீபா மேத்தா 'வாட்டர்' என்ற படத்தின் மூலம் எடுத்துக் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம். படப்பிடிப்பு எடுக்க விடாமல் அவரைத் துரத்தி அடித்தனர் அங்கு இருந்த அதிகாரிகளும், மத வாதிகளும். அதனால் படப்பிடிப்பு இலங்கையில் தான் நடந்தது.

நடிகர் திலகத்தின் சகோதாரரின் மகன் தரன் தயாரித்த படமும் (White Rainbow) இந்த கொடுமைகளை எடுத்துக்காட்டுகிறது. அவரையும் படம் எடுக்க விடாமல் விரட்டி விட்டனர். பிறகு பிருந்தாவனம் போலவே சென்னையில் செட் போட்டு எடுத்தாராம்.

White Rainbow படத்தில் இருந்து ஒரு காட்சி

பெண்ணின் மகத்துவத்தை பற்றி வாய்கிழிய பேசும் மதவாதிகளோ அல்லது ஓட்டு வாங்கும் அரசியல் வாதிகளுக்கோ இவர்கள் மீது எந்த அக்கறையோ, கருணையோ இல்லையென்பதுதான் உண்மை.

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்....தாயாய், தமக்கையாய்,மகளாய் சீராட்டி பாராட்டப்பட்ட இவர்கள் கணவனை இழந்த ஒரே காரணத்திற்காக இப்படி ஓரங்கட்டப்படுவது எத்தனை கொடுமை. இதை படிக்கும் நீங்கள் யாராவது உங்கள் வீட்டு பெண்களுக்கு இத்தகைய கொடுமையை செய்ய முன் வருவீர்களா?

இத்தகைய சமூக அவலத்திற்கு நிச்சயமாக குறைவான கல்வியறிவும், சக மனிதனின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத மனப்போக்குகளே காரணமாயிருக்க முடியும்.

தன் துனையை இழந்த ஆனோ பெண்ணோ ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை, அவர்களின் இழப்பின் வலியினை நிச்சயமாய் மற்றவர்களால் தீர்த்துவிட முடியாது, ஆனால் பகிர்ந்து கொள்வதன் மூலம் சக மனிதனாய் நமது இருப்பினை அவர்களுக்கு உணர்த்தலாம். இந்த வலி என்றேனும் ஒரு நாள் நம் எல்லோருக்கும் வரலாம்....இதை மறந்துவிடக் கூடாது.

Saturday, February 09, 2008

கலைந்திடும் கனவுகள்

இசைஞானியையும், கவி அரசரையும் இனைத்த பாடல்.

கண்ணதாசனைத் தவிற வேறு யாரால் இந்த வரிகளை எழுத முடியும்

படம்: தியாகம்
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர் : ஜானகி


வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும்

கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்(வசந்த)


அலையில் ஆடும் காகிதம்

அதிலும் என்ன காவியம்

நிலையில்லாத மனிதர்கள்

அவர்க்குள் என்ன உறவுகள்

உள்ளம்

என்றும்

ஒன்று

அதில் இரண்டும் உண்டல்லவா

கலைந்திடும்

கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)



தேரில் ஏறும் முன்னரே

தேவன் உள்ளம் தெரிந்தது

நல்ல வேளை திருவுளம்

நடக்கவில்லை திருமணம்

நன்றி நன்றி தேவா

உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)

Friday, February 01, 2008

முதல் முறையா நான் ஓடிப்போன கதை

என்ன கொடுமை..ஓடிப்போனது இல்லாம முதல் முறையா வேறயா.. அப்ப எத்தனை முறை இது நடந்ததுன்னு தோனுமே?...அது இப்பவே சொல்லிட்டா எப்படி. பதிவ படிங்க.

ஆறு வருஷம் முன்னால லக்னோவுல ஒரு கருத்தரங்குக்கு போலாம்னு அலுவலக தோழிகள் 4 பேர் ஆசைப்பட்டோம். கருத்தரங்குல ஆசை இருக்கோ இல்லையோ ஊர விட்டு தூரமா போய், ஒரு வாரத்துக்கு சுத்தலாம்னு ஆசை தானுங்க. எப்படியோ வீட்ல நச்சி ட்ரெயின் டிக்கட் 25 நாட்களுக்கு முன்னாடியே வாங்கியாச்சு. லக்னோ போறோம், லக்னோ போறோம்னு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டாதது தான் பாக்கி.

ஆனா பாருங்க சென்னைல இருந்த எங்க பிராஜக்ட் ஹெட்டுக்கு மூக்குல வேர்த்துடுச்சு. நாங்க என்னைக்கு புறப்படனுமோ அதுக்கு அடுத்த நாள் வரைக்கும் 8 நாட்களுக்கு மதுரையில ஒரு கலந்துரையாடல், எல்லாரும் கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டார். நாங்களும் இல்லாத ஸ்டன்ட் எல்லாம் பண்ணி பார்த்தோம். ஹூம்..ஒன்னும் நடக்கலை.

நாங்களும் விடுவதா இல்லை. ஒரு நாள் லேட்டானாலும் பரவாயில்லை மதுரையில் இருந்து சென்னை போய் அங்க இருந்து லக்னோ ட்ரெயின் பிடிச்சுக்கலாம்னு ப்ளான். இது இன்னும் த்ரில்லிங்க. அப்ப வீட்டுக்கு 15 நாளுக்கு மட்டம்னு ஒரே சந்தோஷம். மதுரைல இருந்தும் 3 பசங்க அதே கருத்தரங்குக்கு வர்ரதா இருந்துச்சு.

மதுரையில கடைசி நாள் அன்னைக்கு கொஞ்சம் சீக்கிறமே புரப்படறோம்னு எங்க ப்ரொபசர் கிட்ட சொல்லிட்டோம். மதுரையில் இருந்து எங்களோட வர்ர பசங்களை சென்னைக்கு பஸ் டிக்கெட் எடுக்க சொல்லி கவுன்டவுன் ஆரம்பம் ஆச்சு. இந்த பசங்க காலையிலேயே போறவுங்க. ஆனா நாங்க விடுவமா.. மவனே போனீங்கன்னா பாருங்கன்னு மிரட்டி எங்களோட இருக்க வச்சுட்டோம்ல.

6 மணிக்கு பஸ்...ஆனா 5.30 ஆகியும் எங்களை விடற மாதிரி தெரியலை. கேக்கவும் பயம். அப்படி கேட்டாலும் ஏன் முதலிலேயே சொல்லலைன்னு திட்டுவிழும். விதியை நொந்துட்டு பேசாம உக்கார்ந்துட்டு இருந்தோம். 5.50 க்கு ட்ராவல் ஏஜென்சியில இருந்து ஃபோன். ''பதினைஞ்சு நிமிஷம் லேட்டாகும். ப்ளீஸ் இருங்க''ன்னு கெஞ்சி ஆறு மணிக்கு ஓட்டமா ஓடினோம். 6.20 க்கு போய் சேர்ந்து, பஸ்ல இருந்தவுங்க முறைச்ச முறைப்ப கண்டுக்காம உக்கார்ந்தோம்.

பஸ் போகுது, போகுது, போகுது போயிட்டே இருக்கு, வழியில போற மாட்டு வண்டி மாடெல்லாம் எங்களை திரும்பி பார்த்து சைடு சிரிப்பு சிரிச்சுட்டு போகுது. காலையில 5.55 க்கு சென்னை சென்ட்ரல்ல இருந்து ட்ரெயின். இப்படி ஓரு ஓட்டை பஸ்ல டிக்கெட் எடுத்துட்டாங்களேன்னு பசங்களை திட்டுன திட்டுல அவங்களுக்கு திருச்சி வந்ததும் இறங்கி ஓடீறலாம்னு ஆயிருச்சு.

சென்னை சென்ட்ரல் போய் சேரும் போது 6 மணி. 8 ஆவது பிளாட்பாரத்துல இருந்து ரப்தி சாகர் எக்ஸ்ப்ரெஸ் புறப்படத்தயாராக இருக்கிறதுன்னு அறிவிப்ப கேக்குது...ஓட்டமா ஓடினோம்...ஓடினோம்...வாழ்க்கையில அப்படி ஒரு ஓட்டம் ஓடி இருக்க மட்டோம். பிளாட்பாரதுக்குள்ள நுழையறோம், கண்ணு முன்னாடியே ட்ரெயின் போயிட்டு இருக்கு. பி.டி.உஷா ரேஞ்சுக்கு ஓடிப்பார்த்தோம். ஆனா ட்ரெயின் ஜெயிச்சுடுச்சு.

2 மாசமா பந்தா விட்டு, கடைசியில ட்ரெயின கோட்டை விட்டுட்டோம்னு ஊர்ல போய் சொன்னா எப்படி இருக்கும். இனி என்ன பண்ண? நடங்க அடுத்த ப்ளாட்பார்ம்ல கோவை எக்ஸ்ப்ரெஸ் நிக்குது ஏறி ஊர் போய் சேரலாம்னு சொன்னா, அதுல ஒருத்தி அதெல்லாம் முடியாது, நான் இன்னைக்கு லக்னோ போயே தான் ஆகனும்னு கீழ விழுந்து புரண்டு அழாத குறையா ஆட்டம்.

என்னமோ பண்ணுங்கன்னு அக்கடான்னு நான் உக்கார்ந்துட்டேன். இந்த டென்ஷன், அழைச்சல், ஓட்டத்துல பயங்கர வீசிங் நமக்கு. போய் தகவல் மையத்துல விசாரிச்சு சாயந்திரம் 7 மணிக்கு ஜான்சிக்கு ஒரு ட்ரெயின் இருக்குன்னு, இந்த டிக்கெட்ட கேன்சல் பண்ணி (ஏதோ கொஞ்ச பணமாவது வருமே) அந்த ட்ரெயினுக்கு டிக்கெட் எடுத்தாங்க. அதுக்கு அப்புறம் தான் அந்த ஆட்டக்காரி ஆட்டத்தை நிறுத்தினா.

ஜான்சிக்கு போய் அங்க இருந்து வேற ட்ரெயின் லக்னோக்கு. இந்த ட்ரெயினுக்கும் அந்த ட்ரெயினுக்கும் 45 நிமிஷம் தான் வித்தியாசம். இது சரியான நேரத்துல போய் சேரலைன்னா என்ன பண்ண?... ''ஜான்சி போயிட்டா அப்புறம் லக்னோ போறது சுலபம்'' னு ஆட்டக்காரி ரொம்ப தெம்பா சொல்ல, நான் கேட்டேன்..''ஓ உணக்கு அந்த அளவுக்கு பரிச்சியமான ஊரா'' அதுக்கு அவ, ''யாருக்கு தெரியும், சும்மா ஒரு அனுமானம் தான்".. தேவையா எனக்கு....ம்ம்ம்

மேல போய் ரெஸ்ட் ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தோம். வீட்டுக்கும் ஃபோன் பண்ண முடியாது( பண்ண விடலை). சொன்னா 'மவளே மரியாதையா கோயமுத்தூர்க்கு வந்து சேர்'னு சொல்வாங்க.

சாயந்திரம் 7 மணிக்கு ஒரு வழியா ட்ரெயின்ல உக்கார்ந்தாச்சு. அடுத்த நாள் ராத்திரி 9 மணிக்கு ஜான்சி போய் சேரும். 9.45 மணிக்கு லக்னோ ட்ரெயின். எல்லாரும் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். எனக்கு எப்பவும் போல டென்ஷன். ட்ரெயின் போய் சேருமான்னு. ''ஏதாவது பேசுனேனா கீழ தள்ளி விட்ருவோம்'னு மிரட்டுனதுல, திருவிழாவுல காணாம போனவ மாதிரி முழிச்சுட்டு உக்கார்ந்துட்டு இருந்தேன்.

9 மணி ஆயிருச்சு. ஆனா ட்ரெயின் இன்னும் எங்கேயோ நடுக்காட்டுல போயிட்டு இருக்கு. ட்ரெயின் போற மாதிரி என் மனசும் பட படன்னு அடிக்குது. இனி வாட்ச பார்க்க கூடாதுன்னு என்னை கட்டுப் படுத்தீட்டூ உக்கார்ந்துட்டு இருந்தேன். என்னை தவிர யாருக்கும் பதட்டம் இல்லை. உலகம் உருண்டை தானே, எங்க சுத்துனாலும் ஊர் போய் சேர்ந்துறலாம்னு தத்துவம் வேற.

ஜான்ஸி ஸ்டேஷன் வந்து சேர்ந்ததும் தான் வாட்ச பார்த்தேன். மணி பத்து. அடப்பாவிகளா அந்த ட்ரெயின் போயிருக்குமே...குளிர்ல என்னை இந்த பாடு படுத்தறீங்களேன்னு திட்டீட்டே ப்ளாட்பாரத்துல இறங்குனா... 'ஹேய் எங்க அந்தப்பக்கம் இறங்குறே..இந்தப்பக்கம் வான்னு, எதிர்ப்பக்கம் இருக்குற கதவு வழியா ஒவ்வொன்னும் ஜங்கு ஜங்குன்னு குதிக்குதுக. ஏன்னு கேட்டா அந்த ட்ரெயினும் லேட்டா தான் வந்துருக்கு..ப்ளாட்பாரம் பாலத்துமேல ஏறிப்போனா லேட் ஆயிடும், வா இப்படியே போயிடலாம்னு என்னோட லக்கேஜ் எல்லாம் அவங்களே எடுத்துட்டு தண்டவாளத்தை தாண்டி ஓடறாங்க. லாங்க ஜம்ப், ஹை ஜம்ப் வீராங்கனைகள் எல்லாம் தோத்துப் போகனும்.

ஒரு வழியா லக்னோ ட்ரெயின்ல ஏறி உக்கார்ந்தாச்சு. அப்புறம் பாருங்க இவ்வளவு ஓடி வந்து, ட்ரெயின் அதுக்கு அப்புறமும் 30 நிமிஷம் கழிச்சு தான் போச்சு.

இதுல முக்கியமான விஷயம், நான் லக்னோ ட்ரெயின கோட்டை விட்டதும், இப்படி ஓடுனதும் இது வரைக்கும் வூட்ல யாருக்கும் தெரியாது..:-))

Monday, January 28, 2008

குழந்தைகள் குழந்தைகள்தானே.....


கடந்த சனிக்கிழமை தில்லியிலுருந்து 50 கி மி தள்ளி இருக்கும் ஒரு காப்பகத்துக்கு சென்றிருந்தேன். வெகு நாட்களாக போக நினைத்துக் கொண்டிருந்த பயணம் அது. எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம். இந்த முறை காப்பகத்தை நடத்தி வரும் ஃபாதர் கேரமல் போவதாக சொல்லவே நானும் தொற்றிக் கொண்டேன். கேரளாவில் இருக்கும் Missioneries of St.Thomas the Apostle ஆல் நடத்தப் பட்டு வருகிறது.

அழகான,அமைதியான இயற்கை சூழலில் அமைந்திருந்தது அந்த காப்பகம். 5 டிகிரி குளிரை பொருட்படுத்தாமல் கிடைத்த பூவை கையில் வைத்து கொண்டு களங்கமில்லா சிரிப்புடன் அன்பாய் வரவேற்றார்கள்.

அங்கு இருப்பவர்களிலேயே கடைக்குட்டியின் பெயர் அலோக், 4 வயதுதான். எச்ஐவி நோயாளியான அவன் அம்மா இவன் பிறந்த உடனே இறந்து போக, அப்பா இவனை இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டு போய்விட்டார். இத்தனைக்கும் அவர் ஒரு கோவில் பூஜாரி. மனைவி எச்ஐவியால் இறந்து விட்ட போதும், தான் இந்த பரிசோதனை செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை அந்த தாய் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ, சரியான விவரம் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அலோக் பிறந்தவுடன் தாய் இறந்து விட, தந்தை மறுமணம் செய்து கொண்டார்.


ரெண்டாவது மனைவி பாதிக்கப்பட்ட குழந்தையை பார்த்துக்கொள்வாள் என்று நினைப்பது இன்றைய சுயநலம் பீடித்த சூழ்நிலையில் மிகப்பெரிய மடத்தனம்.ஆதரவில்லாத அந்த பச்சை மண் இப்பொழுது காப்பகத்தில். அலோக்கின் உடம்பில் நோய் கிறுமியின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவனுக்கு ஏஆர்டி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நிமிடம் கூட ஒரு இடத்தில் உட்கார பிடிக்காமல் ஓடி விளையாட துடித்தாலும், அதற்கு அவன் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. வீட்டில் எத்தனை மன உளைச்சலுக்கு தள்ளப் பட்டிருந்தால் இந்த 4 வயது பாலகன் வீட்டிற்கு போகவே பதறுவான். அப்பாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலே இல்லை.

ஹ்ம்ம்...கணவன் இறந்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தையுடனும்,நோயுடனும், பழிச்சொல்லுடனும் ஆதரவின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இன்று ஏராளம். ஆனால் இங்கு.....ஹ்ம்ம்ம்...

மற்றறொருவன் சுஷில். 9 வயது. அம்மா, அப்பா இரண்டு பேரும் இறந்து போக, பாட்டியால் பார்த்துக் கொள்ள முடியாததால், இங்கே இருக்கிறான். இந்த நோய்க்கே உண்டான சில அறிகுறிகளான வயிற்றுப்போக்கு, உடம்பு வலி, சோர்வு போன்றவைகளால் தற்பொழுது அவதிப்படும் இவன், தனக்கு ஏதோ பெரும் வியாதி இருப்பதை தற்பொழுது உணர்ந்து வருகிறான். நாம் எங்கு சென்றாலும் அருகில் வந்து ஒட்டி உட்கார்ந்து கொள்ளும் இந்த குழந்தையின் மனதில் என்ன என்ன இருக்கிறதோ, அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

காப்பகம், சுத்தமாகவும், பணிபுரிபவர்கள் உண்மையான அக்கறையுடனும், அன்புடன் இருந்தது திருப்தி அளிப்பதாக இருந்தது. அன்று அவர்களுடன் இருப்பதாக சொன்னதும், '' அப்போ நீங்க சமைத்து தாங்களேன்'' என்றனர் குழந்தைகள். சாம்பார், ரசம் என்று எங்கள் சமையல் செய்யவா என்று கேட்கவே, உடனே ஆளுக்கொரு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கல்யாண வீடு போல கலகலப்பாக இரண்டு மணி நேரத்தில் சமையல் வேலை முடிந்து, வெளியே, கட்டைகளை அடுக்கி, தீ மூட்டி, சுற்றி உட்கார்ந்து உணவருந்தியது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது.

அந்த குழந்தை என்ன தவறு செய்தது, ஏன் இவர்கள் மட்டும் இங்கே இப்படி காப்பகத்தில், இந்த அவல நிலைக்கும்,பழிச்சொல்லுக்கும் அந்த குழந்தைகள் எந்தவிதத்தில் காரணமாவார்கள்.உதவிகள் என்ற பெயரில் ஏதோ என்னாலானவற்றை செய்யமுடியும். ஆனால், அன்புக்கும்,அரவனைப்புக்கும் ஏங்கும் அந்த பிஞ்சுகளுக்கு சக மனுஷியாய், ஒரு தாயாய் ஏதும் செய்யமுடியாமல் வெறும் பார்வையாளனாய் இருக்க முடிவது எத்தனை கொடுமை.

இயலாமை என்னை பிடுங்கித்தின்ன கனத்த மனதுடன், மௌனத்துக்குள் என்னை புதைத்துக் கொண்டு தில்லி திரும்பினேன்...

Wednesday, January 16, 2008

பிடித்த பதிவுகள்-கண்மணியின் அழைப்புக்காக

நான் எழுதறதும், அதை நீங்க படிச்சு கருத்து சொல்றதே பெரிய விஷயம்னு நினச்சுட்டு இருக்கேன்...ஒன்றரை வருஷமா எழுதினாலும் மொத்தமே 67 பதிவுகள் தான் எழுதியிருக்கேன்...

அதுல பிடித்த பதிவுகளை சொல்ல அழைப்பு விடுத்த கண்மணிக்கு நன்றி.

சில பதிவுகள் ரொம்ப ஆர்வமா,ஈடுபாட்டோட எழுதுவோம்..... அப்படி திருப்தி அளித்த (எனக்கு) பதிவுகள்


1) Growing Old... - எப்பவும் பெரியவங்க கூட இருக்கனும்னு நினைப்பேன்.. கூட்டுக்குடும்பம்...மாமியார்...அம்மா...நாத்தனார்..ம்ம்ம்... உறவுகள் விட்டு தூரமா..(மனசளவுல இல்லை) இருக்கறப்போ... இன்னும் நிறைய ஒட்டுதல் வருது....ஒரு நாள் அம்மாவும் மாமியாரும் அடுத்தடுத்து கூப்டு தங்கள் தனிமையை சொல்லாம சொல்ல...அன்னைக்கு முதியோர்கள் தினமும்...இந்த பதிவ எழுதினேன்...

2) திருநெல்வேலி குசும்பு - எப்பவும் சீரியஸா எழுதறதுனால, லைட்டான பதிவுகளே நமக்கு வராதான்னு தோனும். பதிவுல சொன்ன சம்பவத்தை அப்படியே எழுத ஆரம்பிக்க...நல்லா இருந்த மாதிரி இருந்துச்சு....முதல் முறையா லைட்டான பதிவு எழுதுனதால இந்தப் பதிவும் பிடிச்சுப் போச்சு

3) அப்பா.. - அப்பாகிட்ட தான் ரொம்ப நெருக்கமா உணர்ந்திருக்கிறேன்.. அவர் இவ்வளோ சீக்கிறமா என்னை விட்டு போவார்னு எதிர்பார்க்கலை... என்னோட இன்றைய வளர்ச்சியை பார்த்தா அவரின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.....அவர் எனக்கு குடுத்த படிப்பும், அனுபவமும், நல்ல விதத்துல உபயோகப்படறதே அவருக்கு நான் செய்யும் மரியாதை.. அவரைப்பற்றி எழுத வாய்ப்பு கிடச்சதுனால இந்த பதிவும் பிடிக்கும்.

பின்னூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.

நான் அழைப்பவர்கள்...

மலர்வனம் லக்ஷ்மி

டாக்டரம்மா....

சின்ன அம்மனி

Thursday, January 10, 2008

கண்டுபிடிச்சுட்டேன்...

மொக்கை போஸ்ட் எழுதனுமாம். லட்சுமி இத சொன்னப்போ நான் என்ன எழுதறதுன்னு கேட்டா, "அது தான் நேத்து போட்டீங்களே அது மாதிரி தான். சும்மா போடுங்க" னு சொல்ல.. ஓ அப்ப நாம நேத்து எழுதுனது மொக்கையா. அப்ப இதுக்கு முன்னாடி நாம எழுதனதுல எது இல்லாம் இதுல சேத்தின்னு நினச்சுட்டேன்.

யோசிக்காம எழுதுனா மொக்கை பதிவாம். ஒழுங்கா எழுதினாலே நாலு வரியில நாப்பது எழுத்துப்பிழை. இதுக்கு பெரிய மனசோட நம்ம கன் ஃபைட் காஞ்சனா பிழையே உன் பெயர் மங்கையானு ஒரு கேள்வி எல்லாம் கேட்டுட்டு போயிட்டாங்க. இதுக்கும் பதிவ நாலு தடவை படிச்சுட்டு பப்ளிஷ் பண்றப்பவே நம்ம அழகு இப்படி.

நாம என்னைக்கு யோசிச்சு பதிவு எழுதுனோம்னு நானும் யோசிச்சேன். ஹூம்...அப்படி ஒன்னு எழுதுனதா நியாபகத்துக்கு வரலை.

சரி. இந்த மொக்கை விளையாட்ட யாருங்க ஆரம்பிச்சது?

இதன் நோக்கம் என்னன்னு இந்த ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுட்டேன்... :-)))

நீங்க எழுதினது எல்லாமே இது வரைக்கும் மொக்கை தான்னு நம்ம ஒவ்வொருவரையும் நம்ம வாயாலேயே ஒத்துக்க வச்ச புண்ணியவான் வாழ்க. நாம எந்த அளவுக்கு நேர்மையானவங்கன்னு அவருக்கு புரிஞ்சிருக்கும்.:-)))

பி-கு- இது நாள் வரைக்கும் கிடைக்காத முதல் பரிசு இப்ப எனக்குத்தான்.. என்ன சொல்றீங்க??..மொக்கை பதிவுல எழுத்துப் பிழை எல்லாம் கண்டுக்க கூடாது ஆமா...

Wednesday, January 09, 2008

நான் யார்?..யார்?..யார்?

தலைப்பு பார்த்துட்டு இவ என்ன பிலாசப்பி (கவுண்ட மனி ஸ்டைல் Philosophy ன் உச்சரிப்பு) பேச வந்துட்டானு திட்ட வந்துட்டீங்க இல்ல?. ..நோ டென்ஷன் ப்ளீஸ். நாம அந்த தப்பெல்லாம் பண்ண மாட்டோம். இது வேறு. நான் யாருன்னு தெரிஞ்சுக்க இமையமலையா போகனும்? நீங்க சொல்ல மாட்டீங்களாக்கும்.

சூப்பர் ஸ்டார் சில நாட்களுக்கு முன்னால தன்னை மராத்தின்னும் ஒத்துக மாட்டேங்குறாங்க, கன்னடக்காரர்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க, தமிழன் அப்படின்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்கன்னு ஒரே பீலிங்கஸ் விட்டார். நியாபகம் இருக்கா.?.. அது மாதிரி தானுங்க நானும் இப்ப ஒரெ ஃபீலிங்கஸ்ல இருக்கேன்.

இன்னைக்கு எங்க கல்லூரியில ஒரு கருத்தரங்கு நடந்தது. அதுக்கு வந்து இருந்த அசாம் காரர் ஒருத்தர்க்கு என்னை அறிமுகப் படுத்தினார் நம்ம குசும்பு சீதாராமன். அவர் பேர் டோர்ஜீ (Dorjee) . இவர் அறிமுகப் படுத்தினாலே ஏதாவது வில்லங்க புடிச்ச கேசா தான் இருக்கும்னு எனக்கு தெரியும். அதே மாதிரி தான் ஆச்சு.

சில கேள்விகளுக்கு ஒரு பதில் குடுக்க முடியாது. அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம்னு சொல்ல தோனும். ஆனா அப்படிப்பட்ட கேள்விகள் ஒரே சமயத்துலயா வரனும்.

பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின்னர் என் நெற்றியில் இருந்த விபூதிய காமிச்சு, "நீங்க தமிழா'' னார். தலைய ஆட்டி ஆமான்னு சொல்ல வாய திறக்குறதுக்கு முன்னால அவர் "இல்ல தெலுங்கா" னார். அதுக்கும் சிரிச்சுட்டே தலைய ஆட்டினேன். தமிழ்நாடா ஆந்திராவான்னு கேட்டிருந்தா தமிழ்நாடுன்னு சொல்லி இருப்பேன்.

தமிழா, தெலுங்கானு கேட்டதுனால, (என்னமோ ஹரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடுன்னு நினப்பு) ரெண்டுத்துக்கும் தலைய ஆட்டிட்டேன்

ஆனா அதுக்கு மேல ஒன்னும் சொல்லலை. அவர் எப்படி புரிஞ்சுட்டாரோ அப்படி இருக்கட்டும்னு சும்மா இருந்தேன். ஆனா மனுஷன் விடாம "அப்படின்னா" னார்.

நான் "அது அப்படித்தான்" அப்படின்னேன். அவர் உடனே "ஓ உங்க பெற்றோர்கள்ல ஒருத்தர் தெலுங்கு, இன்னொருத்தர் தமிழா'' னு ஒரு மகா கண்டு பிடிப்ப கண்டு பிடிச்சு கேட்டார்.

இதுக்கு மேல நாம வாய மூடீட்டி இருந்தா நல்லா இருக்காதுன்னு "நான் மற தமிழச்சி தான்.ஆனா என் தாய்மொழி தெலுங்கு. தமிழ்நாட்டுல தெலுங்கு பேசறவங்க நிறைய பேர் இருக்காங்க" ன்னு சொன்னா, மனுஷனுக்கு பதில்ல திருப்தி இல்லை. சரி போகட்டும்னு விட்டார்.

இதோடு அவரோட கேள்விக்கனைகள் நிக்கலை. இதற்குள்ள இன்னொரு தமிழ் பெண்ணும் வந்து சேர்ந்தாள். ரெண்டு பேர்கிட்டேயும், 'நீங்க எந்த ஊர்' னார். சொன்னோம்.

நாங்க சொன்னதைக் கேட்டு குசும்பர் வந்து, '' ஏன்டீம்மா, புக்காத்த சொல்லப்படாதோ, ரெண்டு பேரும் பொறந்த ஊரையே சொல்றேளே '' -
கேட்டவர்க்கு தமிழகத்துல சென்னைய தவிர வேற எந்த ஊரும் தெரியாது. அப்புறம் எது சொன்னா என்ன. பிறகு சீதாராமனே "அவங்க ஊர் அது இல்லை" அப்படீன்னு எங்களோட 'புக்காத்த' சொல்ல, டோர்ஜீ என்னை ஒரு மாதிரி பார்த்தார்.

அடுத்து "எய்ட்ஸ்ல நீங்க திட்டப்பணியில இருக்கீங்களா இல்லை களப்பணியில இருக்கீங்களா' னார். இரண்டும் செய்ய வேண்டி இருப்பதால "ரெண்டும் தான்" னேன். இவ கிட்ட எதுக்கும் 'ஒரு' பதில் கிடைக்காது போலன்னு டோர்ஜீ இடத்தை காலி பண்ணிட்டார்.

அப்புறம் மதியம், நானும் என்னோடு இருந்த தமிழ் பெண்ணும் சாப்டுட்டு இருந்தோம். கையில தட்டை எடுத்துட்டு அன்புத்தொல்லை மீண்டும் பக்கத்துல வந்தார், "நீங்க சைவமா அசைவமா?" னு கேட்டார்.

தோழி வேனும்னே ' ரெண்டும் தான். நான் சைவமும் சாப்பிடுவேன் அசைவமும் சாப்பிடுவேன்" னு சொல்ல, டோர்ஜீ " You guys are too naughty" னு சிரிச்சுட்டே தப்பிச்சா போதும்னு ஒரே ஓட்டமா ஓடிட்டார்.

Monday, December 31, 2007

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...


கபடமில்லா இந்தச் சிரிப்பை போல் வரும் புத்தாண்டை தூய்மையான நெஞ்சோடு எதிர்கொள்வோம்

மனதில் அமைதியும், உடலில் வலிமையும், சிந்தனையில் தெளிவும் பெற்று, வாழ்வில் இன்னும் உயரங்களை அடைய எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்திக்குறேன்.

அனைவருக்கும் எதிர்வரும் புத்தாண்டு இனிமையாகவும் வளமையாகவும் அமைய, இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 28, 2007

பரீக்ஷித் - குறும்படம்

ரொம்ப நாளா குறும்படத்தை பற்றி பதிவு எழுதனும்னு நினச்சுட்டு இருந்தேன். படத்தை யூ ட்யூப்ல போட முயற்சி செய்தேன். முடியலை. அதனால படத்தில் இருந்து சில காட்சிகளை மட்டும் இங்கே குடுத்து இருக்கேன்.

கணவன் மூலமாக எச்ஐவி நோய்க்கு ஆளாகும் ஒரு பெண், கணவனின் வீட்டாரால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் அந்தப் பெண் கட்டிட வேலை செய்து குழந்தையை காப்பாற்றுகிறாள். மேலும் அவளுடன் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு எச்ஐவி பற்றி எடுத்து கூறி, கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கண்டிப்பாக எச்ஐவி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கூறுகிறாள்.

விழிப்புணர்வு கூட்டங்களில் போட்டு காட்டவேண்டிய படமானதால் பெரும்பாலும் எச்ஐவி பற்றிய அடிப்படைத் தகவல்கள், பாதிக்கப்பட்டவர்கள் படும் கஷடங்கள் போன்றவை எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது.

முப்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்ல எடுத்த படம். நான் எதிர் பார்த்த அளவிற்கு வரலைன்னாலும், படத்திற்கான குறிக்கோள் நிறைவேறியாச்சு.

நாமும் ஏதோ செய்திருக்கோம்னு ஒரு திருப்தி.


எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அம்பாவாக நடித்த சாகரீக்கா- நிறைவான நடிப்பு

தம்லியாக நடித்த கீதா, அசத்தீட்டார்

தான் கர்ப்பமாக இருப்பதை கணவனிடம் சொல்லும் அம்பா
அடிக்கடி நோய்வாய்ப்படும் கணவனாக நடித்த ஜீத்து.


டாக்கடராக நடித்த சந்தீப் ஆர்யா



வில்லி மாமியார்.. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய பெண் வராததால், மேக்அப் வுமன் பிரியா, மாமியாராக ஒரே காட்சியில் வந்தாலும் அசல் வில்லி தோற்றும் போகனும். அப்படி ஒரு லுக்கு.



வீட்டை விட்டு விரட்டப்பட்ட அம்பா, தெருவில் குழந்தையுடன்



டாக்டரம்மாவாக நடித்த ரிது ஆர்யா



உண்மையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பத்மாவதி


பகவதி

நல்ல படியாக குழந்தையை பெற்றெடுத்த சந்தோஷதத்தை அம்பாவிடம் பகிர்ந்து கொள்ளும் தம்லி.


Tuesday, December 11, 2007

என் அருகே நீ இருந்தால்!


தானாய் வந்த அன்பு
தாராளமாய் வந்த அன்பு
தவிக்க விடாத அன்பு
தெவிட்டா அன்பு

தவித்திருந்தேன் விழித்திருந்தாய்
தோல்வியில் உறைந்திருந்தேன் தோளானாய்
தோள் கொடுப்பதில் தனையனானாய்
தேற்றி அரவணைத்து தந்தையானாய்

பொறுமையில் என் தாயானாய்
மறுக்காமல் என்னை வழி நடத்தும் வழித்துணையானாய்

இந்த அன்பிடம் தஞ்சமடைந்தேன் என் நட்பே....

காணாது கண்ட உன் அன்புடனே, என் அருகே நீயுமிருந்தால்.....!

பி. கு- இங்க பாருங்க எல்லாரும், படிச்சிதும் நல்ல பிள்ளைக்கு அழகா ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க...இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை....

Friday, November 30, 2007

ஆதரவுக்கரம் நீட்டுவோம்- உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்


நாளை உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்

ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவை கண்டறிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும்.

முதல் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது கூறப்பட்டது. 1982ல் தான் இது சி.டி.சியால் எய்ட்ஸ் என பெயரிடப்பட்டது. இதன் பின், 3 ஆண்டுகளில், அதாவது 1984ல் எச்.ஐ.வி. எனப்படும் ஹியூமன் இம்யூனோ டெபிசியன்சி வைரஸ் பிரித்தறியப்பட்டது.

இந்தியாவில் எச்.ஐ.வி. பரவல்

எச்.ஐ.வியை தடுக்கும் நடவடிக்கைகளை எச்.ஐ.வியின் தொடக்கத்திலேயே முடுக்கிவிட்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமைப் பட வேண்டிய விஷயம். தொடர்ந்து எச்.ஐ.வி. தடுப்பு முயற்சிகளை முனைப்புடன் செயல்படுத்தினாலும் உலக எச்.ஐ.வி/எய்ட்ஸ் தலைமையகமாக இந்தியா விளங்குகிறது. இந்தியரில் பெரும்பான்மையினருக்கு எச்.ஐ.வி. விழிப்புணர்வு மிகக்குறைவாகவே உள்ளது. இந்தியாவின் சமூக பொருளாதாரநிலை, சமூக கலாச்சார நம்பிக்கைகள்,செக்ஸ் மற்றும் பால் வேறுபாடுகள் குறித்த கருத்துக்கள், பெரிய அளவில் நிகழும் இடம் பெயரல்கள் (migration), சமூகத்தால் கீழே தள்ளப்பட்டிருக்கும் மக்களில் பெரும் பகுதியினர் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பெறும் சூழ்நிலையில் உள்ளனர்.

இந்தியாவில் உள்ள எச்.ஐ.வியின் பொதுவான அம்சங்கள் என இவற்றைக் கூறலாம்.

எய்ட்ஸ் இளவயதினரையும் பாலுறவில் அதிகம் ஈடுபடும் வயதினரையுமே அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில்எச்.ஐ.வி. உள்ளவரில் 88.7 சதவீதத்தினர் 15முதல் 49 வயதுக்குட்பட்டவரே.


போதை ஊசி மூலமாக பெரும்பாலும் எச்.வி.ஐயைப் பெறும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர, இந்தியாவில் பலருடன் உடலுறவு கொள்வதன்மூலமாகவே 85 சதவீதத்தினர் எச்.ஐ.வியைப் பெற்றுள்ளனர்.


எய்ட்ஸினால் உருவாகும் சந்தர்ப்பவாத நோய்களில் காசநோயே அதிகமாக எச்.ஐ.வி. இருப்பவரைத் தொற்றுகிறது. இதனால் எச்.ஐ.வியும் காசநோயும் சேர்ந்து பரவும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.


உலகெங்கும் பெரும்பாலும் நகர்ப்புறமக்களே எச்.ஐ.வியைப் பெறுகையில், இந்தியாவில் மட்டும் எச்.ஐ.வி.தொற்றியவரில் 60 சதவீதத்தினர் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


தமக்கு எச்.ஐ.வி. வரவே வராது என்னும் மூட நம்பிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் கொண்டிருக்கிறார்கள்.


எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதித்திருப்போருக்கான மனித உரிமைகள் அதிக அளவில்மக்களிடையே கொண்டு செல்லப்பட்டாலும் எச்.ஐ.வி. பாதித்திருப்போரை சமூகம் பார்க்கும் பார்வையிலும் நடத்தும் விதத்திலும் பெரிய மாறுபாடு ஏற்படவில்லை.


ஆண் பெண் பாகுபாடு, சமூகத்தில் பெண்களை சமமாக நடத்தாமலிருப்பது, பாதுகாப்பான செக்ஸ் என்பதில் பெண்கள் உரிமையின்றி இருப்பது ஆகியவை எச்.ஐ.வி. தடுப்பு நடவடிக் கைகளை பெரிதும் பாதிக்கிறது.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கிடை யேயும் மக்கள் சென்று வருவது பல்வேறு பிரிவுகளுக்கிடையே எச்.ஐ.வி. பரவகாரணமாக உள்ளது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மாளான உதவிகள் செய்து, அன்புக் கரம் நீட்டி மனித காப்போம்

Wednesday, November 07, 2007

பிரபலமடைந்து வரும் எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகள்

சிப்லா கம்பெனியின் புதிய அறிமுகமான ' ஐ-பில்' - கருத்தடை மாத்திரை இளம்பெண்களிடம் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. தில்லியில் உள்ள மருந்துகடைகளில் இந்த மாத்திரயை வாங்குபவர்களில் 20% சதவீதம் இளம்பெண்கள் தானாம். அதுவும் 16ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆகாத பெண்கள். இது நாள் வரையில் வெளிநாடுகளில் மட்டுமே இது போல 'எமர்ஜென்ஸி' மருந்துகள் உபயோகத்தில் இருந்தன. அதென்ன 'எமர்ஜென்ஸி' மருந்துகள்னு பார்க்குறீங்களா. அதாங்க உடலுறவுக்குப் பின் 72 மணி நேரத்துக்குள்ள இந்த மருந்து எடுத்துக்கோனும்.

இந்த மருந்துகள் எப்படி வேலை செய்கிறது
  1. உடலறுவுக்கு பின் ஓவரியில் இருந்து முதிர்ச்சி அடைந்த முட்டை வெளியே வராமல் தடுக்கிறது.

  2. ஒரு வெளியே வந்து விட்டால் அது ஆண் உயிரணுக்களை சேர விடாமல் தடுக்கிறது.

  3. முதிர்ச்சியடைந்த கரு முட்டைகள் கருப்பையின் உட்சுவர்களை ஒட்டாமல் பார்த்துக் கொள்கிறது.
சரி. திருமணம் ஆன தம்பதியருக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியா இருக்கலாம். ஆனால் திருமணமாகாத பெண்களுக்கு சில மனரீதியான பிரச்சனைகள் வரும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இந்த மருந்து சாப்பிடறதுனால வரும் பிரச்சனைகள் என்ன என்னன்னு இவங்களுக்கு தெரியாது. எப்படியோ அந்த நேரத்துல உதவுனா போதும்னு இளைய சமுதாயம் இந்த வழியை தேர்ந்தெடுப்பது வேதனை அளிக்கிறது. முறையில்லாத கருக்கலைப்பினால் ஏற்படும் ஆபத்துகளை வெகுவாக குறைக்கலாம் என்பது சிப்லா கம்பெனியின் வாதம்.

இந்த மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே எல்லா மருந்துகடைகளிலுன் கிடைக்கும். ஒரு மாத்திரை ரூபாய் 75 ரூபாய்.

இந்த மாத்திரைகள் ஹார்மோன் மாத்திரைகளானதால், முறையில்லாத மாதவிடாய், அல்லது மாதவிடாய் வராமலே இருத்தல், குழந்தை பேறு பெறுவதில் தாமதம் போன்ற சிக்கல்கள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம், நம் நாட்டில் இன்னும் பலருக்கு கருத்தடை மாத்திரைகள் எந்த விதத்திலும் அவர்களை எச்ஐவி கிருமியிடமிருந்தோ
பால்வினை நோய்களிருந்தோ காப்பாற்றாது என்ற அடிப்படை உண்மை தெரியாது.

இதைப்பற்றி எந்த கருத்தையும் சொல்ல சிப்லா கம்பெனி தயாராக இல்லை.

இந்த மருந்தின் விற்பனையை பார்த்து மற்ற கம்பெனிகளும் இந்த ஆராய்ச்சியில இறங்க தயாராகிவிட்டார்கள்

மேலும் நவம்பர் மாதத்தின் மூனாவது வாரத்தில் சிப்லா கம்பெனி இன்னொரு மருந்தை அறிமுகப் படுத்தவுள்ளது. ' கிரசென்டா'' எந்த வித பக்க விளைவுகள் இல்லாமல் வருகிறதாம்.

இது போல எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகளுக்கு அனுமதி அளித்து வரும் அரசு, இதைப் பற்றிய போதிய அறிவில்லாத நம் இளைய தலைமுறையை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது?....

Saturday, October 27, 2007

மாமியார்(கள்) வாழ்க..வாழ்க


எப்பவுமே ரொம்ப விமர்சனத்துக்கு ஆளாகுற கதாபாத்திரங்கள் யாருன்னு யோசிச்சு பார்த்தா, மாமியார்கள் தான். இணையத்திலேயும் சரி, தொலைக்காட்சியிலேயும், திரைப்படங்கள்ளேயும், ஏன், நாலு பேர் சேர்ந்து பேசினா கூட நகைச்சுவைக்காகவும் கிண்டலுக்காகவும் மாமியார் மருமகள் சண்டைகள் தான் வரிசையில முதல்ல நிக்கும். தொலைக்காட்சிகள்ல காலங்காலத்துக்கு தீனி போடும் கதாபாத்திரங்கள் இவங்க ரெண்டு பேரும். சரி விஷயத்துக்கு போகலாம்.

இதுல யார் மேல தப்புன்னு நான் பேச வர்லீங்க. நமக்கு அந்த அனுபவமும் இல்லீங்க. இங்க இருக்குற மருமகன், மருமகள் எல்லாரும் என்னோட சேர்ந்து நம்ம மாமியார் நல்லா இருக்குனும்னு வேண்டிக்கலாம் வாங்க.

இன்னைக்கு மாமியார்கள் தினமாம்

இது என்ன ஃபேஷனான்னு கேட்க வேண்டாம். யாஹூ முகப்புல பார்த்தேன். அதுனால இந்த பதிவு. இங்க வலைப்பதியும் மாமியார்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். டிப்ஸ் குடுத்தா பிற்காலத்துல, பேர் சொல்லும் மாமியார்களா நாங்க இருப்போம்...:-))

எல்லாரும் நோய் நொடி இல்லாம, சந்தோஷமா, பல்லாண்டு பல்லாண்டு வாழ உங்கள் பிள்ளைகளின் பிரார்த்தனைகள்.

Thursday, October 25, 2007

ஈமெயில் மோசடி..

என் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.

Dr. Zubair என்பவர் ஜாமியா பல்கலைகழகத்துல பேராசிரியர். கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள்ல அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அவரோட ஜீமெயில் அக்கவுன்ட்ல இருந்து எனக்கு வந்த ஈமெயில்.

தான் ஆப்ரிக்காவுல இருப்பதாகவும், அவசரத்துல புறப்படும் போது சொல்ல முடியலைனும் எழுதி இருந்தது. மேலும், தன் பாஸ்போர்ட், பணம், பேக் முதலியன திருடு போய்விட்டதாகவும், செலவுக்கு காசு இல்லை அதனால் உடனே $2600 அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தது. நானும் எல்லாம் செக் பண்ணி பார்த்தேன். அதே ஈமெயில் ஐடி, கீழ அவர் எழுதற மாதிரியே அவரோட அலுவலக முகவரி எல்லாம் சரியா இருந்துச்சு.

அதுவும் HIV/AIDS கருத்தரங்குன்னும் எனக்காக சில புத்தங்கள் கிடைச்சதுன்னும் எழுதியிருந்துச்சு. எனக்கு அத படிச்ச பின்ன, நிஜமாவே எங்காவது மாட்டி இருப்பாரோன்னு இருந்துச்சு. ஏன்னா இவரும் அடிக்கடி வெளிநாடு செல்பவர் தான்.

ஜாமியாவுல அவரின் துறையில இருக்கும் மற்ற பேராசிரியர்களை கேட்கலாம்னா வெள்ளி விடுமுறையானதால கல்லூரியில யாரும் இல்லை. சரி அவரோட கைப்பேசிக்கே போன் பண்ணலாம்னு பண்ணேன், அதுவோ switched off.

மீண்டும் அந்த மின்னஞ்சலை படிச்சு பார்த்தேன்.. மேல மட்டும் எப்பவும் அவர் எழுதற மாதிரி இல்லை. எப்பவும் என் பெயரை மட்டுமே அவர் எழுதுவது வழக்கம். ஆனா இந்த மெயில்ல ' ஹலோ' அப்படீன்னு போட்டிருந்தது. அப்புறம் தான் இது அவர் அனுப்பலைன்னு நினைக்க தோனுச்சு. அந்த ஈமெயில் பாருங்க

Hello,

I am sorry I din't email you about my traveling to Africa for a program on HIV/AIDS that is taking place in three major countries in Africa. Ghana, SouthAfrica and Nigeria. In fact I have collected a lots of materials for you, which would be very useful to you.

It as been a very sad news and bad moment for me, thepresent condition that I found myself is very hard for me to explain.I am really stranded in Nigeria because I forgot my little bag in a Taxi where mymoney and passport documents were kept on my way to a Hotel that am staying,I have no more money left with me.

I am now owning a hotel bill of $1400and they wanted me to pay the bills soon else they will have to seize mybag and hand me over to the Hotel Management,please I need some help fromyou urgently to help me back home,and I need you to help me with the hotelbill and i will also need $1200 to feed and help myself back home so pleasecan you help me with a sum of $2600 ? to sort out this problems here

I needthis help so much and on time because i am in a terrible and tightsituation here,please understand how urgent i need your help.I am sending you this e-mail from the city of lagos.

I will appreciate what so ever you can afford to send me for now and I promise to pay back yourmoney as soon as i return home, you need to transfer the money throughWestern Union

Regards

Dr Zubair
........................................................................
Professor, Department of Social Work,
Jamia Millia Islamia [CentralUniversity],
New Delhi-110025

அப்புறம் மீண்டும் இன்னைக்கு அவர கூப்டேன். எதுக்கும் கேட்கலாம்னு. எடுத்த உடனே எங்க இருக்கீங்கன்னு கேட்டேன். அவர் '' என்ன?.. உங்களுக்கும் அந்த ஈமெயில் வந்துருச்சா, நான் எங்கேயும் போகலை, நான் நல்லா இருக்கேன். பணம் ஒன்னும் அனுப்பிடலையே'' ன்னு கேட்டார்.

ஏன்னா அவரோட பணி புரியும் பெண் ஒருவர் பணம் அனுப்பலாம்னு நினச்சுட்டு இருந்தப்போ கரெக்டா இவர் கூப்டு விஷயத்தை சொல்லிட்டாராம். இதுல முக்கியமான விஷயம் இவரோட ஈமெயில் லிஸ்ட்ல இருக்கும் பெண்களுக்கு தான் அதிகமா இந்த மின்னஞ்சல் வந்து இருக்கு.

இதே செய்தி NDTV லயும் வந்துச்சு. மும்பையில இதே மாதிரி வந்த ஈமெயில்னால ஒருவர் 6 லட்ச ரூபாய் நண்பருக்காக அனுப்பிட்டாராம்.
நண்பர்களே, இப்ப இது அதிகமா நடக்கறதா செய்திகள் வருது. ஹாக் செய்த ஈமெயில் ஐடியில இருந்து பழைய மெயில் எல்லாம் படிச்சு அதுல இருக்குற செய்திகளுக்கு தொடர்பு இருக்கும் செய்திகள் எழுதி நம்பிக்கை வர வைப்பது தான் இவங்க கையாளும் யுத்தி.

தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க எல்லாருக்கும் சொல்லி வைங்க மக்களே. முக்கியமா வெளிநாடுகள்ல இருக்கும் நண்பர்கள் கவனமா இருங்க.

Saturday, October 13, 2007

முதுமையில் நீளும் நாட்கள்


என் தோழி ஒருத்தியின் அம்மா, 60 அல்லது 65 வயது இருக்கும். படுத்த படுக்கையாய் இருப்பதால் ஒரு முறை வீட்டுக்கு வந்து விட்டு போன்னு சொன்னதுனால, தெரியாத இடம்னாலும் எப்படியோ தேடிக் கண்டு பிடிச்சுட்டு போய் சேர்ந்தேன். அம்மா பிறந்த குழந்தையைப் போல் படுக்கையில். என் தோழி பக்கத்துல போனதும் அவ கைய உறுதியா பிடிச்சுட்டு, 6 மாத குழந்தை போல அவளைப் பார்த்து கள்ளமில்லா சிரிப்பு. பேத்தி அருகில் போனதும் இவ யார்னு மிரள மிரள பார்த்து, என்னையும் ஒரு முறை திரும்பி பார்த்துட்டு, இன்னொரு பக்கம் உக்கார்த்துட்டு இருந்த தோழியின் அப்பாவைப் பார்த்து அதே குழந்தை சிரிப்பு. தன் மகளையும் கணவனையும் தவிர வேறு யாரும், எதுவும் அம்மாவின் நினைவில் இல்லை.

அல்சைமர்ஸ் (Alhziemer's disease) என்கிற மறதி நோயால் கடந்த ஒரு வருட காலமாக இவர் படுக்கையில். இந்த நோயைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மூளையின் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, மறதி அதிகமாகி, மொழி மறந்து, எந்த ஒரு புரிதலும் அற்ற ஒரு நிலை.
நாலு வரி சேர்ந்தாற் போல் பேச முடியாமல் பேசும் வார்த்தைகளிலும் ஒரு தெளிவில்லாமல் இருக்கும். எப்பொழுதும் எதையாவது தொலைத்துவிட்டு அது பற்றியே நினச்சுட்டு இருப்பாங்க. இது போல சின்ன சின்ன பிரச்சனைகளில் ஆரம்பிக்கறப்போ தான் நாம் கவனமா இருக்கனும். நம்ம கிட்ட மீண்டும், மீண்டும் ஒன்றையே சொல்லிட்டு இருக்கும் போது அதை பொறுமையா கேக்கனும். தொலைக்காத ஒன்றை தேடும் போது நம்ம கிட்டதான் கேப்பாங்க. ஒரு முறை இல்லை, நாலு அஞ்சு முறை கூட கேப்பாங்க. அப்ப தான் நாம பொருமையா பதில் சொல்லனும்.

ஆரம்பகால நிலை இப்படி என்றால், நோய் முற்றிய பின்,பாதிக்கப்பட்டவர்கள் படுத்த படுக்கையாகி, தான் வாழும் சுற்றுப் புற சூழ்நிலை புரியாமல், எல்லாவற்றிற்கும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். உணவு கூட சில சமயத்துல குழாய் மூலம் குடுக்க வேண்டியிருக்கும். மேலை நாடுகள்ல சிலர் ஒருவர் இது போல நிலைக்கு தள்ளப் பட்ட பின், மருத்துவர்களின் ஆலோசனையுடன் இந்த உணவுக் குழாய்களை அகற்றி விடுகிறார்களாம். தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் இருக்கும் ஒருவரை கஷ்டப் படுத்துவது சரியல்ல என்பது இவர்களது வாதம். நினைச்சும் பார்த்தா பயங்கரமா இருக்கு.... ம்ம்ம்

விசித்திரமான எண்ணங்கள், குணங்கள், செயல்கள்... இதையே ஒரு குழந்தையிடம் ரசிக்க முடிந்த மனிதனுக்கு, ஏன் வயசானவங்ககிட்ட ரசிக்க முடியறதில்லை?.எல்லாருக்கும் முதுமை என்பது இளமையைப் போன்ற உற்சாகம் நிறைந்த பருவம் இல்லை. ...ம்ம்ம்

1906 ஆம் ஆண்டு, அலாய்ஸ் அல்சைமர் (Dr. Alois Alzheimer) என்ற மருத்துவரால் கண்டரியப்பட்டது. அகஸ்தா என்னும் 51 வயது பெண்மணிக்கு நியாபக மறதியும், தன் கணவன் மேல் சந்தேகமும் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போய், பின்னர் படுத்த படுக்கையாகி நிமோனியா நோயால் இறந்து போனார். அவர் இறந்த பின், குடும்பத்தாரின் அனுமதியுடன் அவரின்
மூளையை பரிசோதனை செய்து பார்த்ததில், மூளையில் சில பகுதிகள் வழக்கத்துக்கு மாறாக சுறுங்கி இருந்ததைப் கண்டறிந்தார். மேலும் சில படிவுப்பொருட்களும், இறந்த செல்களும் இருப்பதையும் பார்த்தார். 1910ல் இது போல அறிகுறிகளுடன் தோன்றும் மூளைக் கோளாறுகளுக்கு இவருடைய பேரே வைக்கபட்டது

தோழி, அவள் அம்மாவைப் பார்த்துக்குறதுக்காக வேலையை விட்டுட்டு, ஹைதராபாத்தில தனியாக இருந்த அவங்கள இங்கே அழைச்சுட்டு வந்துட்டா. வீட்டுக்கு போனப்போ அவள் அப்பா சொன்னது, '' மகன் இல்லையே என்ற நினைப்பே எங்களை அனுக விடாத மருமகன், எங்களை குழந்தையை போல பார்த்துக்குற மகளும், பேத்தியும், சந்தோஷமா தான் இருக்கேன். ஆனா பார்க்க வர்ரவுங்க தான் சீக்கிரம் போய் சேர்ந்துட்டா பரவாயில்லைன்னு சொல்றப்போ நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு... சுத்தியும் இவளை பத்தின இத்தன எண்ணங்கள், அபிப்ராயங்கள் இருக்குறது தெரியாம, குழந்தையாட்டம் எப்பவும் இதே சிரிப்பு'' . அவர் அம்மாவின் கையை பிடிச்சுட்டு, நெற்றியை தடவிக் குடுக்க...மன நிறைவும், அதே சமையத்தில ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வுடனே நான் கிளம்பினேன்.ஹ்ம்ம்...

சாவின் விளிம்பில் இருப்பவரைப் பற்றிய ரவீந்திரநாத் தாகூரின் கவிதை ஒன்றில் இருந்து சில வரிகள்...

''வீணாய் என்னைத் தேடிக்காண வந்தவர்

அனைவரும் திரும்பிச் சென்றனர் சினத்துடன்!

ஆயினும் நானோ

இறுதியாய் என்னை அவன் கைவசம்

ஒப்படைக்கப் பொறுத்திருக்கிறேன்,

அவனது
அன்பு வரவேற்புக்கு!''

Wednesday, September 12, 2007

தில்லி- Crime Capital


இன்று மதியம் எங்கள் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சொன்ன சேதியை கேட்ட பின்னால் சிறிது நேரம் எங்களால் ஒன்றும் பேச முடியவில்லை.
தில்லியில் நடக்காத குற்றங்கள் இல்லை, இதை விட பாதுகாப்ப இல்லாத ஒரு இடம் இருக்க முடியாது என்பதற்கு இதை விட ஒரு உதாரணம் வேண்டியது இல்லை. மனிதர்கள் இதை விட தரம் கெட்டு போக முடியுமா?

இந்த இரண்டு மாணவர்களும் நேற்று ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு திறும்பிக்கொண்டிருந்த போது ரோட்டோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணை ஒருவன் பலாத்காரம் செய்துகொண்டிருந்திருக்கின்றான். ஒரு மரத்தினடியில்..லைட் வெளிச்சத்தில், இந்த கொடுமை நடந்திருக்கிறது. பைக்கில் சென்று கொண்டிருந்த இந்த மாணவர்கள் ஒரு பெண்ணின் அவலக் குரல் கேட்கவே வாகனத்தை நிறுத்தி பார்த்திருக்கிறார்கள். சிறு வயதானதால் அருகில் செல்ல பயந்து கொண்டு தூரத்தில இருந்து அவனை திட்டி விரட்ட பார்க்க அவன் எதையும் காதில் வாங்காமல் முன்னேரிக் கொண்டிருந்திருக்கின்றான்.

ஆடை அலங்கோலமாக இருக்கவே மாணவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையாம். பின்னர் இரண்டு போலீஸ்காரர்கள் வருவது தெரியவே அவர்களை அழைத்து விஷயத்தை சொல்ல, அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர். பின்னர் அருகில் இருக்கும் ஒரு குடியிறுப்பு பகுதியில் ட்யூட்டியில் இருந்த செக்யூரிட்டி ஆட்களுடனும், மற்ற ஜனங்களுடனும் வந்து அவனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

குற்றவாளியை அடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள் சாட்சி கை எழுத்து மட்டும் போட மறுத்து விட்டனராம். ஆனால் இந்த இரண்டு மாணவர்களும் நாங்கள் போடுகிறோம் என்று கூறி அவர்கள் கையாலேயே எழுதி கொடுத்துவிட்டு, இன்று காலை கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவரிடம் விஷயத்தை கூற, இவர்களுக்கு பயம். ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று. ஆனால் மாணவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை. நாங்க குடுத்த புகாரை திறும்ப வாங்க மாட்டோம் என்று உறுதியாக கூறி விட்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமையை மருத்துவர்களின் சான்றிதழ்களுடன் இன்று எல்லா ஊடகங்களுக்கும் தெரிவித்து விட்டனர். மேலும், அந்த பெண்மணி இன்னும் காவல் நிலையத்தில் இருப்பதால் அதற்கும் ஆட்சேபனை தெரிவித்து மகளிர் ஆணையத்திடம் முறையிட வேண்டும் என்று எங்களிடம் வந்தார்கள். மகளிர் ஆணையத்திடம் சொல்லியாகி விட்டது.

இதோடு நிக்காமல் இந்த மாணவர்கள் இந்த வாரத்திற்குள் அனைத்து மாணவர்களையும் ஒரு பாதயாத்திரைக்கு தயார் படுத்தி வருகின்றனர். அவர்கள் முகத்தில் நேற்று பார்த்த காட்சியின் அதிர்ச்சி இன்னும் இருந்தது.

மாணவர்கள் சம்பவத்தை விவரிக்கும் போது, அந்தப் பெண் கத்தியது கூட வலியானாலே ஒழிய அவளுக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கின்றது என்று தெரியவில்லை. காவல் நிலையத்திலும் தனக்கு நேர்ந்த கொடுமையின் தீவிரத்தை உணராமல் தான் இருந்து இருக்கிறாள்.

சராசரியாக இந்தியா முழுவதும் நடக்கும் குற்றங்களைப் போல் இரண்டு மடங்கு குற்றங்கள் தில்லியில் மட்டும் நடக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரம் என்றால் அது தில்லியாகத்தான் இருக்க வேண்டும்.
இதை விட கேவலமாக ஒரு மனிதன் நடந்து கொள்ள முடியுமா. பணமும் அதிகாரமும் தில்லியை இன்று எந்த அளவிற்கு ஒரு நரகமாக ஆக்கியிருக்கிறது என்பதற்கு இங்கு தினமும் நடக்கும் குற்றங்களே சாட்சி.

மனிதர்களைக் குறித்த நம்பிக்கை அருகிக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில்
இந்த மாணவர்களின் உறுதியும் எண்ணமும் ஆறுதல் அளிக்கிறது.

Tuesday, August 28, 2007

உணர்வுகள் அற்ற நம் மக்கள்


NDTV மற்றும் Times Now சானலில் பார்த்த ஒரு செய்தியினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியாமல் இதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதை யார், எப்படி படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை.

மக்கள் சிலரின் மிருகத்தன்மையும், சக மனிதனின் பாதுக்காப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர் இரண்டு பேர் ஏவிய மனித உரிமை மீரலின் கொடுமையையும் படம் பிடித்து வேற காண்பித்தார்கள்.

காலையில் கையில் உணவை வைத்து கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த செய்தியை பார்த்த பின் என்னால் உணவருந்த முடியவில்லை. எழுந்து விட்டேன். பீஹாரில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துவிட்டு ஓட பார்த்தவனை பிடித்து உதைத்த காட்சியை கல் மணம் கொண்டவர்கள் கூட பார்க்க முடியாது.

அவர் கை பின்னால் கட்டப்பட்டிருந்தது, சுத்தியும் நின்று கொண்டிருந்தவர்கள் காலாலேயே அவரின் முகத்தில் உதைத்து சித்தரவதைப் படுத்தி, ஓட விட்டு பெல்ட்டால் உதைத்து, ஹ்ம்ம்ம்...என்னால் பார்க்க முடியவில்லை.

இதை எல்லாம் கேள்விப்பட்டு அங்கு வந்த காவல் தெய்வங்கள், கடமை உணர்வோடு தண்டனை கொடுக்க தயாரானார்கள். ஒரு பைக்கில் அந்த ஆளின் காலை கட்டி இழுத்து செல்ல...பின்னால் அந்த ஊர் மக்கள் அவரை உதைத்துக் கொண்டே செல்கிறார்கள்.

இதற்கும் பறித்த சங்கிலி மீட்கப்பட்டு விட்டது. இதற்கு பிறகும் அவருக்கு இவ்வளவு கொடுமை. மனித உரிமை மீறல் என்ற ஒன்று நம் காவல் தெய்வங்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே.

இப்பொழுது அவர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த பணி நீக்கம் என்ன பெரிதாக செய்துவிடப் போகிறது.

இதுவே நம்ம சன்ஜய் தத் சிறைய விட்டு வெளியே வந்தப்ப வெட்கம் கெட்டுப் போய் அவரை அனைத்து, கை கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொண்டார்கள் இதே காவல் தெய்வங்கள்.

இவர்களை திட்டக் கூட நா கூசுகிறது.