Thursday, July 19, 2007

Memory Triggers


நம் மனதில் தோன்றும் பெரும்பாலான நினைவுகள் தானாகவோ ஏதேச்சையாகவோ ஏற்படுவதில்லை. No memory, however perfect, operates in a vacuum என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. அந்த நினைவுகள் எழ நமக்கு தூண்டுகோளாக இருப்பது நாம் பார்க்கும் பொருளாகவோ, கேட்கும் சப்தமாகவோ, ஏதாவது சுவையோகவோ இருக்கலாம்.

நம் அன்றாட வாழ்வில் நாம் காணும் சில பொருட்கள், கேட்கும் பாடல்கள், குறிப்பிட்ட சத்தம், நறுமணம், நிகழ்வுகள் போன்றவை, நாம் மறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும், நம் ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும், சில பல உணர்வுகளை வெளிக்கொணர்வது உண்டு. நம்மை அதிகமாக பாதித்த அல்லது சந்தோஷத்தை கொடுத்த சில நிகழ்வுகளுக்கு தொடர்புடைய விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதை நாம் மீண்டும் எதிர்கொண்டால் நம்மையே அறியாமல் நாம் பழைய நினைவுகளுக்கு சென்றுவிடுவோம்.

நம் மூளையில் இருக்கும் Amygdala என்னும் ஒரு விசஷே பகுதி, நமக்குள் எழும் உணர்ச்சிகளை பதித்து வைத்து அவற்றை கட்டுப்படுத்துகிறது. நாம் சுவாசிக்கும்போது, நறுமன நுண்அணுக்கள் Amygdala வுக்கு நேரடியாக செல்வதால், நறுமணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள், மற்ற புலன்களை விட அதிக சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. Memory Triggers எனப்படும் இந்த நினவு தூண்டல்களிலேயே, நறுமணத்தினால் ஏற்படும் உணர்வே அதிக தெளிவான, உணர்ச்சி பூர்வமான நினைவை உண்டு செய்பவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இது நம் எல்லோருக்கும் ஏற்படும் ஒரு அனுபவம்.

அது போலத்தான் எனக்கு இந்த ரோஜா பூவின் நறுமணம். ரோஜாமணம். ஹ்ஹ்ம்..எனக்கு அப்பாவோட மரணத்தை நினைவு படுத்தும். அவர் மரணம் பம்பாயில் ஏற்பட்டதால் உடலை கோவைக்கு எடுத்து வர 24 மணி நேரம் ஆனது. இந்த 24 மணி நேரமும் அவர் படத்திற்கு போட்ட ரோஜா மாலை மற்றும் மலர் வளையங்களின் ஊடே உட்கார்ந்து கொண்டு இருந்ததால், அந்த ரோஜா மணம் என் துக்கத்துடன் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது. அத்ற்கு பின் எனக்கு ரோஜா வாசனை வந்தாலே மனம் பட பட என்று அடித்துக் கொள்ளும்.

பெங்களூர் NIMHANS இல் முதுநிலை பட்டப் படிப்பு பயிற்சியின் போது, ஒரு பெண் சிகிச்சைகாக வந்திருந்தாள். திருமணம் ஆகி 3 மாதம் ஆகியும் அந்த பெண் தாம்பத்திய உறவிற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இது உளவியல் சம்பத்தபட்ட ஒன்றாக கருதியும், அவள் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டாள்.

நாள் முழுக்க கணவனிடம் அன்பாக பேசி பழக முடிந்த அவளுக்கு இரவு நேரத்தில் மட்டும் அவரிடம் ஒரு வித வெறுப்புடனே நடந்து கொண்டிருக்கிறாள். உடல் ரீதியாக ஆரோக்கியமாகவே இருந்தாள் அவள். பத்து நாள் கலந்துரையாடலுக்கு பிறகு தான் தெரிய வந்தது அவளின் உண்மையான பிரச்சனை.

அவளுக்கு ஏதாவது கசப்பான அனுபவம் நடந்து இருக்கும் என்ற கோணத்தில் கேள்விகள் கேட்ட போது சில உண்மைகள் தெரிய வந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது பெண்களிடம் அத்து மீறி பேசி தவறாக நடக்க முயன்ற அவளின் ஆசிரியர் உபயோகித்ததை போல ஒரு வாசனை திரவியத்தை கணவனும் உபயோகப் படுத்துகிறான். இதனால் அவன் அருகில் வரும் போதெல்லாம் அவளுக்கு அந்த ஆசிரியரும் அவர் நடந்து கொண்ட விதமும் நினைவிற்கு வர, அவளால் தாம்பத்திய உறவில் ஈடு பட முடியவில்லை. இதை அவளே உணர்ந்த பின்னர் அந்த நினைவுகளில் இருந்து வெளியே வர அவளுக்கு எளிதாக இருந்தது.

நறுமண நுண் அணுக்களின் சமிக்ஞையால் ஏற்படும் இது போல உணர்வுகள் 'Proustian Phenomenon' என்று அழைக்கப்படுகிறது.

சரி இப்போ உங்களுக்கு இது மாதிரி "Memory Triggers" ஏதாவது இருந்தா அத இங்க எழுதுங்க மக்களே. இல்லைன்னா தனிப் பதிவா போடுங்களேன்.

உதாரணத்துக்கு சில Memory triggrs..
பாப் கார்ன் வாசனை வந்தா, நமக்கு சின்ன வயசுல தியேட்டர்ல படம் பார்த்தது நினைவிற்கு வருதில்ல?....

பசும் புல்லின் மணம்.
புதுத் துணியின் மணம்.
ஏதாவது பாடல் வரிகள்/இசை/குறிப்பிட்ட சத்தம்.

குறிப்பிட்ட பொம்மை.

தமிழ் தாய் வாழ்த்து.

Tuesday, July 17, 2007

புதிர் மனிதர்கள்

நேற்று காலையில கேபின் கதவ படார்னு திறந்துட்டு ஒரு அம்மா உள்ள வந்தாங்க. உள்ள வந்த அப்புறம் மீண்டும் வெளியே போய், உள்ள உக்கார்ந்துட்டு இருக்குறது நான் தானான்னு பெயர் பலகையை பார்த்து உறுதி பண்ணீட்டு, சுனிதா சிங் அனுப்பிச்சாங்க....உங்க கிட்ட பேசனும்னு சொல்லீட்டு அவங்களே சேர் இழுத்து போட்டு உக்கார்ந்துட்டு...எனக்கு ஒரு உதவி வேனும், செய்வீங்களான்னு ஒரே பதட்டம்.

நான் முதல்ல உட்கார சொல்லி குடிக்க தண்ணி குடுத்து ஆசுவாசப்படுத்தினேன். நான் தண்ணி கேக்கவேயில்லியே அப்படீன்னு ஆரம்பிச்சாங்க.'' என் பையனுக்கு எதிலெயும் ஆர்வம் இல்லை. படிக்க மாட்டேங்குறான், யாரு கிட்டேயும் பேச மாட்டேங்குறான், எத பார்த்தாலும் பயம், கோவம், எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை, அவன் ரொம்ப ப்ரில்லியன்ட், நல்ல மனசு, ஆனா என்னமோ இப்படி ஆயிட்டான், அவன எப்படியாவது சரி பண்ணனும்னு அழுக ஆரம்பிச்சுட்டாங்க

நானும் என் அலுவலக நண்பர்களும் அந்த அம்மாவ சமாதனப் படுத்தி, முதல்ல பதட்டப் படாம இருங்க, கண்டிப்பா நாங்க உதவி செய்யறோம்னு சொல்லி அமைதி படுத்தினோம். ஆனா அந்த அம்மா ஹிந்தியிலேயும், பஞ்சாபியிலேயும் மாறி மாறி பேசறத நிறுத்தவேயில்லை.

பையன் என்ன படிச்சு இருக்கான்னு கேக்கவே, +2 ன்னு சொன்னாங்க. ஓ சின்ன பையன் தானே கவுன்சலிங்க் குடுத்தா சரி ஆயுடும்னு சொன்னா, அந்த அம்மா ''என்ன சின்ன பையனா..? 26 வயசு பையன் சின்ன பையனா?" ன்னு கேட்டு கோவப்பட்டாங்க. எங்களுக்கு எப்படி தெரியும் 26 வயசுன்னு? சரி எதோ மனக் கஷ்டத்துலே இருக்காங்கன்னு நாங்களும் பேசாம இருந்தோம்.

சரி சின்ன வயசுல அவன பாதிக்கற மாதிரி ஏதாவது நடந்ததான்னு கேட்டா. அப்புறம் சொல்றாங்க மெதுவா. அவன் பிறந்தது ஈரான்ல, அதுக்கு அப்புறம் கனடாவுல இருந்தோம், அப்ப சில குடும்ப பிரச்சனைகள், எனக்கும் என் கணவருக்கும் எப்பவும் பிரச்சனை னு சொல்லி அவங்க கணவர் பத்தி புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க.

கொஞ்ச நேரம் கேட்டுட்டு நான் சொன்னேன், ''மேடம், உங்களுக்கு கண்டிப்பா நாங்க உதவி செய்யறோம், ஆனா இதுக்குன்னு தனி டிபார்ட்மென்ட் இருக்கு, நானே உங்களை அங்க கூப்டுட்டு போறேன், Clinical Psychologist இருக்காங்க அங்க போலாம்னு சொன்னா,

''என்ன நீ என்ன தட்டி கழிக்க பார்க்குறே,அங்க எல்லாம் போக என் பையன் ஒன்னும் பைத்தியம் இல்லை, நான் மனசு விட்டு பேசனும் அப்பதான் உங்களுக்கு புரியும், கேக்க முடியுமா முடியாதா'' ன்னு பேப்பர் வெயிட்ட டமால்னு கீழே போட, சரி சரி சொல்லுங்கன்னு சொன்னேன். பாரு என் பையன் வெளியே நின்னுட்டு இருக்கான். அவனுக்கு உள்ள வர பயம். முதல்ல நான் பேசீட்டு அப்புறம் அவன கூப்பிடலாம்னு தான் அவனை வெளியவே விட்டுட்டேன். இது தான் பிரச்சனைனு மீண்டும் அவங்க முதல்ல சொன்ன விஷயத்த சொல்ல ஆரம்பிச்சாங்க.

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்னு கேட்டேன். அதுக்கு அவங்க எனக்கு ரெண்டு பசங்க, இரட்டை குழ்ந்தைகள்னு சொன்னாங்க. என் அலுவலக நண்பர் ராகுல், '' அப்ப இன்னொரு பையன் என்ன பண்றார். அவர் நல்லா இருக்காரா? 26 வயசுன்னா அவரு இப்ப ஏதாவது வேலையில இருக்கனுமே'' ன்னு கேட்டார், அவன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்னு அடுத்த குண்ட தூக்கி போட்டாங்க.

எங்களுக்கு ஒன்னும் புரியலை. ஆனா ஏதோ பிரச்சனைல இருக்காங்கன்னு மட்டும் புரிஞ்சது. ஆர்வக் கோளாறுல ராகுல் 'அது எப்படி' ன்னு கேக்கவே அந்த அம்மா, " இங்க பார்..நான் பெரிய பையன பத்தி பேசத்தான் வந்து இருக்கேன், அவன பத்தி மட்டும் பேசுங்க, ஏன் தேவை இல்லாத கேள்விகள் கேக்கறீங்க"....இதக் கேட்டுட்டு ராகுல் கப்சிப்.

நான் ''சரி சரி...சாரி மேடம்...சொல்லுங்க...உங்க வீடு எங்க இருக்கு'' ன்னு கேட்டேன், கிரேட்டர் கைலாஷ்ல இருக்குன்னாங்க.

இதக் கேட்டுட்டு நான் பேசாம இருந்து இருக்கலாம்.....''கிரேட்டர் கைலாஷ் பார்ட் ஒன்னா, பார்ட் டூவா ன்னு கேட்டேன் ( GK- 1 & GK-2 ன்னு ரெண்டு இடம் இருக்கு). இத்தன டீடெய்லா கேட்டு நான் என்ன பண்ணப் போறேன்..அதான் விதி வலியது...பிரச்சனைய தேடி போய் வாங்குறது தான் நம்ம வழக்கம்

வந்ததே கோபம் அந்த அம்மாக்கு. ''அதான் GK-1 னு தானே சொன்னேன், எதுக்கு நீ மறுபடியும் கேக்குறே, பாரு இப்படித்தான், என் பையனையும் முட்டாள் தனமா கேள்வி கேக்குறதுனால அவனுக்கு கோவம் வருது, ஏன் நீங்க எல்லாம் இப்படி இருக்கீங்க?..ன்னு கேட்டாங்களே பார்க்கலாம்.

ராகுல் அவங்ககிட்ட...''மேடம் நீங்க GKனு தானே சொன்னீங்க...அதான் கேட்டோம்''...அந்த அம்மா....''அப்ப நான் பொய் சொல்றனா...நீங்கள்ளாம் படிச்சவங்களா...be professional''.

ஆஹா இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லை போல இருக்குன்னு நினச்சுட்டேன். ராகுல் வேற என்னை பார்த்து முறச்சுட்டு உட்கார்ந்து இருக்கான்...பிரச்சனை யாருக்கு பையனுக்கா, அம்மாக்கான்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு.

அப்புறம் பக்கத்துல வந்து தோள் மேல கை போட்டு " பாருங்க மேடம், உங்களுக்கு உதவறதுக்கு தான் நாங்க இங்க இருக்கோம். ஆனா கவுன்சலிங்க் டிபார்ட்மென்ட் இன்னொரு இடத்துல இருக்கு.

நாங்க எய்ட்ஸால பாதிக்கப் பட்டவுங்களுக்காகவும், ஊனமுற்றோர்க்காகவும் சில களப்பணிகள் செய்யறோம்..அவ்வளவு தான்னு சொன்னேன் மேலும் " Our Psychologist sits in another room, i will take you there" ன்னு சொன்னா அந்த அம்மா.." so if I want your help, I should have HIV is it?...otherwise I should be a handicap?. you people want to escape when you really meet live cases. you are hippocrates, good for nothing னு சகட்டு மேனிக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க.

அது வரைக்கும் ஆர்வக் கோளார்ல இருந்த ராகுலும், அபிஷேக்கும் எழுந்து வெளியே ஒடியே போய்ட்டாங்க.

நான் தொலைஞ்சேன்னு நினச்சுட்டு மீண்டும் பக்கத்துல உக்காந்து எடுத்து சொன்னேன். எதுக்காக உளவியல் நிபுனர பார்க்கனும்னு. ஒரு வழியா அவங்களுக்கு புரிய வச்சு உளவியல் நிபுனர பார்க்கிறதுக்கு ஒத்துக்க வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயுடுச்சு.

எனக்கு ''இன்னைக்கு நேரம் ஆயுடுச்சு, நாளைக்கு வந்து பார்க்குறே''ன்னு சொல்லிட்டு வேகமா போய்ட்டாங்க.

எங்க கிட்ட பேச்சீட்டு இருக்கப்பவே ஃபோன் வந்துட்டே இருந்துச்சு... பையனும், கணவரும் ஃபோன் பண்றாங்கன்னு சொன்னாங்க. அவங்க கிட்ட நான் ஆபீஸ்ல இருக்கேன்...இதோ வந்துடறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க. உண்மையான பிரச்சனை என்ன, யாருக்குன்னு தெரியலை?.

ஆனா குடும்பத்தில ஏதோ பிரச்சனை இருக்கு....ஹ்ம்ம். மறுபடியும் அந்த அம்மாவ சந்திச்சு பேசனும். நிஜமாவே அப்படி பிரெச்சனையோட ஒரு பையன் இருக்கானா.. இல்லை... இந்த அம்மா கிட்ட தான் பிரச்சனையான்னு பார்க்கனும்.

Tuesday, July 03, 2007

எட்டுனதும் எட்டாததும்

மீண்டும் நான் தானுங்கோவ்....தலை எழுத்து தான்...என்ன பண்ண...இந்த செயின் ஆட்டத்த கொஞ்ச நாளைக்கு நிறுத்து சொல்லுங்கப்பா...நமக்கே மேல் மாடி காலி.

நாலு பேர் நம்மள கூப்டுட்டாங்க, அந்த மரியாதைக்காக இந்த பதிவு.. நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் பத்மா, கவிதா, உஷா, சந்தோஷ் :-))

1) பரதநாட்டியம்.

ஸ்கூல்ல படிக்கும் போது பரத நாட்டியம் கத்துக்கனும்னு ஆசை. எங்க ஸ்கூல்லேயே கத்துக்கலாம்னு டான்ஸ் மாஸ்டர் கிட்ட போய் கேட்டா, பொண்ணு ஒல்லியா இருக்குன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார். ஆனா அழுது, புரண்டு எப்படியோ சேர்ந்துட்டேன் . டான்ஸ் டிராமால நிறைய நகை எல்லாம் போட்டு ராணி வேஷம், சாமி வேஷம் போடனும்னு ஆசை. ஸ்கூல் டேல கலந்துக்கலாம்னா நாம Don Quixsot மாதிரி இருந்ததுனால எந்த வேஷமும் ஒத்து வரலை. இருந்தாலும் பாவம்னு ஒரு வேஷத்த குடுத்தாங்க. என்ன வேஷம்?... தெரிஞ்சக்கனும்னு ரொம்ப ஆவலா இருக்கீங்க இல்ல.. இருங்க இருங்க...

இந்திய வரலாற்றில் தனக்குன்னு ஒரு 'தனி இடத்த' பிடிச்சு இருக்குற ஒரே கதாபாத்திரம். அதாங்க 'சாமரம்' வீசுர பொண்ணு. அதுவும் ராணி யாரு தெரியுங்களா, நம்ம எனிமி. வந்ததே எனக்கு கோபம். என்ன ஆனாலும் சரி நான் சாமரம் வீச மாட்டேன்னு சொல்லிட்டேன். டேன்ஸ் மாஸ்டர் இவ கூட பெரிய வம்பா போச்சேன்னு , ''சரி சரி வள்ளித் திருமணத்துல முருகர் கிழவனா வருவாரே அந்த வேஷம் தான் குடுக்க முடியும். வேனும்னா பண்ணு , இல்லன்னா ஓடிப் போ'' ன்னு சொல்லிட்டார். எனிமிக்கு சாமரம் வீசரதுக்கு இது எவ்வளவோ பெட்டர்னு கிழவன் வேஷம் போட்டேன். எப்படியோ மேடை ஏறி எனிமிய விட ஒசத்தியான பாத்திரத்துல நடிச்சு சாதனை புரிஞ்சுட்டேன்.

2) சைக்கிள் யாத்திரை.
NCCல சேர்ந்து கோவைல இருந்து திருமூர்த்தி மலைக்கு சைக்கிள் யாத்திரை போனது சுவாரஸ்யமான விஷயம். எல்லா காலேஜ் பொண்ணுகளும் சேர்ந்து போனோம். ஜூலை மாசம் வேற, பொள்ளாச்சி தாண்டின பிறகு ஒரே மழை. எங்க க்ரூப் ஒரு 6 பேர் மட்டும் பின்னாடி மாட்டிக்கிட்டோம். எங்க கூடவே ஒரு ட்ரக் வந்துட்டு இருந்துச்சு. அதுல இருந்த NCC ஆபீஸர், ''இதுக்கு தான் கிருஷ்னம்மாள் காலேஜ் பொண்ணுகளே வேண்டாம்னு சொல்றது, இனி அரை மணி நேரத்துல உடுமைலைல இருக்கனும்'' னு மிரட்டீட்டு போயிட்டார். . நாங்க கோவத்துல 'சார் அரை மணி நேரத்துல இருக்கோம் பாருங்க' ன்னு சவால் விட்டுட்டோம். ஆனா எப்படி போறதுன்னு தெரியலை.. இன்னும் ரொம்ப தூரம் இருக்கு. கால் வலியில சைக்கிள் மிதிக்கவே முடியலை. ஆனாலும் போயிட்டோம். எப்படி?.எத்தன லாரி போகுது அந்த ரோட்ல.. :-)) ..எங்கள பார்த்த அபீஸர், எப்படிம்மா இவ்வளோ சீக்கிரம் வந்தீங்க, நிஜமாவே சாதனை தான்னு ஒரே பாராட்டு மழை.


3) நம்ம தமிழ் புலமை.

தமிழ்ல எழுதறப்போ இந்த ழ ல எப்பவும் நமக்கு பிரச்சனை தான். வல்லினமா, மெல்லினமா இடையினமான்னு கேக்க தெரியாது. ஸ்கூல படிக்கும் போது அண்ணா கிட்ட, "எந்த ள/ல?... School க்கு வர்ர ள வா இல்ல lizard க்கு வர்ர ல வான்னு கேட்டு, அவர டென்ஷன் படுத்திய புத்திசாலி. நீங்க எல்லாம் என்ன பாவம் பண்ணீங்களோ, நானும் தமிழ்ல எழுதி, அத நீங்க எல்லாம் படிச்சி, 2006 ஆம் ஆண்டு Indi blogs லிஸ்ட்ல வேற நம்ம பிளாக் வந்ததும் எனக்கு ஹார்ட் ஆட்டாக் வந்துடுச்சு. எனக்கு சாதனை..உங்களுக்கு வேதனை.

4) எழுத வந்ததே பெரிய விஷயம் இதுல போன வாரம் நட்சத்திரம் வேற. எழுத வந்த புதுசுல நாம் எல்லாம் எந்த காலத்துல நட்சத்திரம் ஆகப் போறோம்னு நினச்சதுண்டு.

இப்ப நம்ம மேட்டர்

5) பிரதீபா திட்டம்- ஆசியாவிலேயெ முதல் முறையா பெண் மதத் தலைவர்களுக்கு பயிற்சி கொடுத்து எய்ட்ஸ் விழிப்புணர்வுல ஈடுபடுத்துற ஒரு திட்டத்த ஆரம்பிச்சு இருக்கேன். பொது மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் 250 பெண்களை அடையாளம் கண்டு, பயிற்சி குடுத்து இருக்கேன். இந்த வருஷ கடைசிக்குள்ள இன்னும் 250 பெண்களை அடையாளம் கண்டு பயிற்சி கொடுக்கனும்.

6) எச்ஐவி/ எய்ட்ஸ் பற்றிய குறும்படம்- சமீபத்துல சந்தோஷத்தை கொடுத்தது, நான் ரொம்ப நாளா எதிர் பார்த்திருந்த ஒரு திட்டம், UNICEF மூலமா கிடைச்சு இருக்கு. எச்ஐவியால பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு குறும்படம் தயாரிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சு இருக்கு. அதற்கான பணியும் துவங்கியாச்சு.

7) எட்டாத ஆசை ஒன்னு இருக்குங்க. பாடனும்னு எனக்கு ஆசை....அட இருங்க இருங்க..ஓடாதீங்க...ரிலேக்ஸ். முதல்ல என் கினி பிக் லட்சுமி கிட்ட பாடி காமிச்சுட்டு அப்புறம் தான் உங்க கிட்ட வருவேன். அதுனால யாரும் ஓட வேண்டாம்.

இன்னும் என்னத்த சேர்த்தறது..டான்ஸ்ல இருந்து உடான்ஸ் வரைக்கும் எல்லாத்தையும் சேர்த்தாச்சு.....அவ்ளோ தாங்க...பொழச்சு போங்க.

Sunday, July 01, 2007

நன்றி நண்பர்களே

நட்சத்திர வாரத்திற்கான அழைப்பு வந்ததும் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன். நட்சத்திரமா இருக்குறப்பவாவது உறுப்படியா எழுதனும்னு தான். ஒரு மாசத்திற்கு முன்னாடியே மடல் வந்து இருந்தாலும்..என்ன எழுதறது..என்ன எழுதறதுன்னு ஒரே கன்ப்யூஷன் ஆஃப் இந்தியா. ஒரு வழியா ஒரு வாரத்த தள்ளிட்டேன். முதல் நாள் இருந்த படபடப்பு அன்னைக்கு சாயந்திரமே போயிந்தி...:-))

ஆனா மனசுக்கு நிறைவான பதிவுகள் எழுதுனதுனால ரிலேக்ஸ்டா இருந்த மாதிரி தான் இருக்கு. நான் விளையாட்டா ஒரு வாரத்த தள்ளிட்டேன் உங்களுக்கு எப்படி இருந்துச்சோ....

என்னையும் நட்சத்திரமாக்கிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.

பின்னூட்டங்கள் மூலமா என்னை திக்கு முக்காட வைத்த அன்புள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.

வித்தியாசமான அனுபவம் இந்த ஒரு வாரம்....

நன்றி நண்பர்களே.